என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக மார்க் ட்வைனின் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்', ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் 'புதையல் தீவு' என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி 'பதிவுகள்' இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்' நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் 'பதிவுகள்' சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள். - வ.ந.கிரிதரன், ஆசிரியர் 'பதிவுகள்'
அத்தியாயம் முப்பத்தி ஆறு
அன்றிரவு அனைவரும் உறங்கி விட்டார்களா என்று உறுதி செய்துகொண்ட பிறகு, நாங்கள் அந்த இடிதாங்கிக் கம்பியைப் பிடித்து இறங்கி மேலிருந்த நிழல் சாளரத்தினுள் சுருண்டு ஒளிந்து கொண்டோம். சிறிது நேரத்திற்குப் பின்னர், அந்த நரித்தீ பூஞ்சைகளை எடுத்துக் கொண்டு எங்களின் வேலையைப் பார்க்கச் சென்றோம். சுவற்றின் கீழ்ப்பகுதியில் உள்ள மரக்கட்டையின் மத்தியில் ஒரு நான்கு அல்லது ஐந்தடி நீளம் முழுதும் இருந்த அனைத்துக் குப்பைகளையும் சுத்தம் செய்து அகற்றினோம். ஜிம்மின் படுக்கைக்கு நேர் பின்பக்கமாக நாங்கள் இருக்கிறோம் என்று டாம் கூறினான். அந்த இடத்தில் நாங்கள் பள்ளம் தோண்ட ஆரம்பித்தோம். ஜிம்மின் படுக்கையிலிருந்து கீழே தொங்கும் போர்வை தரையைத் தொட்டு அந்த பள்ளத்தை மறைத்து விடுமாதலால், அங்கே அப்படி ஒரு ஓட்டை இருப்பதே யாருக்கும் தெரியவராது என்று டாம் கூறினான். அந்தப் போர்வையை மேலே உயர்த்திப் பார்த்தால் மட்டுமே அந்த ஓட்டையைக் காண முடியும் என்றான். எனவே, நள்ளிரவு ஆகும்வரை பேனாக்கத்திகள் கொண்டு தோண்டினோம். அதன்பின், கடுமையான களைப்படைந்து, கைகள் தோல் உரிந்து காயமாக ஆரம்பித்தன. ஆயினும், எங்களை பார்த்தால் கடுமையாக உழைத்தது போல் தோன்றாது. இறுதியாக நான் சொன்னேன்:
"இது ஒன்றும் முப்பத்தியேழு வருட வேலை இல்லை. இது முப்பத்தியெட்டு வருட வேலை, டாம் சாயர்!"
அவன் எதுவும் சொல்லாமல் பெருமூச்சு விட்டான். சில நொடிகளிலேயே தோண்டுவதையும் நிறுத்தி விட்டான். சிறிது நேரத்திலேயே, அவன் என்ன நினைக்கிறான் என்பதை நான் கண்டுபிடித்துவிட்டேன். பின்னர், அவன் கூறினான்:
"இது பிரயோசனப்படாது, ஹக்! இது ஒண்ணும் வேலைக்காகாது. சிறைக் கைதிகளாக நாம் இருந்திருந்தால், நமக்கு தேவையான அளவு வருடங்கள் எடுத்துக் கொண்டு தோண்டியிருக்கலாம். இப்படி அவசரப்பட வேண்டிய அவசியம் இருந்திருக்காது. அத்தோடு, சிறைக் காவலர்கள் தங்களின் கண்காணிப்பு நேரத்தை மாற்றிகொள்ளும் சமயமாகப் பார்த்து ஒரு நாளைக்கு சில நிமிடங்கள் மட்டுமே தோண்டியிருக்கலாம் அப்படி இருந்திருந்தால், நமது கைகள் இப்படிக் காயமடைந்திருக்காது. ஒரு வருடம் உள்பக்கம், ஒரு வருடம் வெளிப்புறம் என்று மாற்றி மாற்றித் தோண்டிக் கொண்டே இருந்திருக்கலாம். எந்த முறையில் செய்ய வேண்டுமோ, அந்த முறையில் சரியாகச் செய்திருக்கலாம். ஆனால், அவ்வாறு இங்கே நாம் செய்து கொண்டிருக்க முடியாது. சீக்கிரம் நாம் வேலையை முடிக்க வேண்டும். நேரத்தை வீணடிக்க நமக்கு அவகாசம் இல்லை. மேலும், இனி ஒரு இரவு இதே போல் தோண்டினால், நம்முடைய கைகளின் காயங்கள் ஆற ஒரு வாரமாவது காத்திருக்க வேண்டும். அதற்கு முன்பாக, கத்தியைக் கையால் கூடத் தொட முடியாது."
"ஆமாம். சரிதான். இப்போது என்ன செய்யப் போகிறோம், டாம்?"
"நாம் என்ன செய்ய வேண்டுமென நான் இப்போது சொல்கிறேன். அது சரியானதோ, நியாயமானதோ அல்ல. அது பற்றி யாருக்கும் தெரியக்கூடாதென்று நான் நினைக்கிறேன். ஆனால், அது ஒன்றுதான் நமக்கு இப்போதுள்ள ஒரே வழி. அந்த மண்வெட்டிகளை பயன்படுத்தித் தோண்ட வேண்டும். எல்லோரிடமும் பேனாக் கத்தி பயன்படுத்தித் தோண்டினோம் என்று கூறவேண்டும்.
"இப்போது நீ பேசுவது உண்மையான பேச்சு" நான் கூறினேன். "இப்போதுதான் நடைமுறைக்குத் தகுந்தவாறு உன் மனது மாறிக் கொண்டிருக்கிறது, டாம் சாயர்!" நான் தொடர்ந்தேன். "நியாயமோ, அநியாயமோ, மண்வெட்டிகளை கொண்டு தோண்டுவது ஒன்றுதான் இதற்கு வழி. என்னைப் பொறுத்தவரை, இந்த விஷயத்தில் நியாயம் என்பதைப் பற்றி சட்டை செய்யப் போவதேயில்லை. ஒரு நீக்ரோ அல்லது தர்பூசணி அல்லது ஒரு ஞாயிற்றுக்கிழமை பள்ளிப்புத்தகம் இவற்றை நான் திருடும்போது, அதை எப்படித் திருடினேன் என்று கவலைப் படமாட்டேன். திருடினால் மட்டும் போதும். எனக்கு வேண்டியதெல்லாம் என்னுடைய நீக்ரோ, தர்பூசணி அல்லது அந்த ஞாயிற்றுக்கிழமை பள்ளிப்புத்தகம், அவ்வளவுதான். மண்வெட்டிதான் கைவசம் உள்ளதென்றால், அதைப் உபயோகித்து நீக்ரோவை வெளியே எடுக்க, தர்பூசணி பறிக்க அல்லது ஞாயிற்றுக்கிழமை பள்ளிப் புத்தகம் திருட என எல்லாவற்றுக்கும் அதையே பயன்படுத்துவேன். அது பற்றி சாகச வீரர்கள் என்ன நினைத்தாலும் துளிக்கூட கண்டுகொள்ளவே மாட்டேன்.”
"நல்லது" அவன் சொன்னான். "மண்வெட்டியை பேனாக் கத்திபோலப் பாவித்து உபயோகிக்க நமக்கு நிறைய சாக்குப் போக்கு உள்ளது. வேறு எந்த வகையிலும் நாம் இதைச் செய்தால் நான் அதை ஆமோதிக்க மாட்டேன். விதிகளை மீறி நீ நடப்பதை சும்மா கைகட்டி நின்றுகொண்டு நான் வேடிக்கை காண முடியாது. சரி என்றால் சரிதான். தப்பென்றால் தப்புதான். ஒரு மனிதனுக்கு சிறந்த விஷயங்கள் நன்றாகத் தெரிந்திருக்கும்போது அவன் தவறு செய்வது நடக்கவே கூடாது. நீ வேண்டுமானால் மண்வெட்டியை பேனாக் கத்தி என்று பாவித்து பள்ளம் தோண்டுவதைச் செய்யலாம். ஏனெனில், உனக்கு எதுவுமே தெளிவாகத் தெரியாது. ஆனால் எனக்கு அப்படியல்ல. நான் அனைத்தையும் அறிந்தவன். அந்தப் பேனாக்கத்தியை இப்படிக் கொடு."
அவன் பயன்படுத்திய பேனாக் கத்தி அவனருகிலேயே இருந்தது. இருந்தாலும் என்னுடையதை நான் அவனிடம் கொடுத்தேன். அதை வாங்கி வீசி எறிந்துவிட்டு மீண்டும் கேட்டான்," உன்னுடைய பேனாக் கத்தியைக் கொடு."
எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. திடீரென எனக்கு அது உறைத்தது. அங்கு இறைந்து கிடந்த பழைய உபகரணங்களுக்குள் இருந்த கோடாரி எடுத்து அவனிடம் கொடுத்தேன். ஒரு வார்த்தை கூட பேசாது அதை வாங்கிக் கொண்டு அவன் சென்றான். அவனுக்கு பிகு எப்போதுமே அதிகம். எனவேதான், அவன் புத்தி மொத்தமுமே வேண்டாத கொள்கைகள்..
நான் ஒரு மண்வெட்டியை எடுத்துக் கொண்டு மண்ணைக் கிளற ஆரம்பித்தேன். சுற்றிலுமாகக் கிளறி விட்டதும், எல்லாப் பக்கமும் குப்பை பறந்தது. இவ்வாறாக ஒரு அரை மணி நேரத்திற்கு மேலாகக் குனிந்து தோண்டிய காரணத்தால் எழுந்து நேராக நிற்பது சிரமமானது ஆனால், எங்கள் சிரமத்தைத் தாண்டி, அங்கே சுவற்றில் நல்ல பெரிய அளவிலான ஒரு துளை உருவானது. திரும்ப நான் மாடி வந்து சேர்ந்தபோது, டாம் அவனால் முடிந்த அளவு சிரமப்பட்டு இடிதாங்கிக் கம்பியைப் பிடித்து மேலே ஏறி வர முயற்சிப்பதை சன்னல் வழியாக நான் கண்டேன். அவனின் கைகள் இரண்டும் காயமாக இருப்பதால், அவனால் அதை சுலபமாகச் செய்ய முடியவில்லை. கடைசியாக அவன் கூறினான்:
"இனி இது ஒன்றும் வேலைக்காகாது. இது நடக்காது போலத் தெரிகிறது. நான் என்ன செய்ய வேண்டும் என்று நீ நினைக்கிறாய்? மேலே வர வேறு எதாவது வழி உனக்குத் தோன்றுகிறதா?"
"ஆம்." நான் கூறினேன் "ஆனால் அது விதிக்குப் புறம்பானது என்று நான் நினைக்கிறேன். படிக்கட்டுகளை இடிதாங்கிக்கம்பி போல் பாவித்து மேலே ஏறி வா!"
அவனும் அப்படியே செய்தான்.
அடுத்த நாள், ஜிம் எழுதத் தேவையான எழுதுகோல் தயாரிக்க, தகரமும், ஈயமும் கலந்த உலோகத்தால் ஆன ஒரு மேசைக்கரண்டியும், பித்தளையால் ஆன ஒரு மெழுதிவர்த்திப் பீடம் போன்றவற்றை வீட்டில் இருந்து டாம் எடுத்துக் கொண்டான். அத்தோடு, மிருகக் கொழுப்பினால் செய்யப்பட்ட கெட்டியான ஆறு மெழுகுவர்த்திகளையும் அவன் எடுத்துக் கொண்டான். நீக்ரோக்கள் தங்கியுள்ள அறை அருகே, மூன்று தகரத் தட்டுக்கள் திருடச் சந்தர்ப்பம் கிடைக்கும் வரை அங்கேயே நான் சுற்றிக் கொண்டிருந்தேன். அது போதாது என்று டாம் கருதினான். ஜிம் வெளியே வீசி எறியும் தட்டுக்கள் ஓட்டை போன்ற சன்னலின் கீழ் உள்ள வேண்டாத புதருள்ளும், ஜிம்ப்சன் களைச் செடிகளுக்கும்தான் விழுந்து கிடைக்கும் என்பதால் அதை யாரும் பார்க்க மாட்டார்கள் என்று நான் கூறினேன். அதை திரும்பவும் நாமே எடுத்து வந்து பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறினேன். அதைக் கேட்ட டாம் திருப்தியடைந்தான்.
"இப்போது இந்த பொருட்களை எப்படி ஜிம்மிடம் சேர்ப்பது என்பது பற்றி நாம் யோசிக்க வேண்டும்." என்று டாம் கூறினான்.
"அப்படியே அந்த ஓட்டைக்குள் போட்டு விட்டால் போதும்" நான் கூறினேன் "அதை நாம் முழுமையாக முடித்தபிறகு."
மிகுந்த ஏளனத்துடன் டாம் என்னை நோக்கினான். இப்படிப் பட்ட அடிமுட்டாள்தனமான யோசனையை அவன் கேள்விப் பட்டதேயில்லை என்பது போல ஏதோ கூறினான். பின்னர், ஆழ்ந்த யோசனையில் மூழ்கினான். சீக்கிரமாகவே மூன்று வழிகளை அவன் கண்டுபிடித்தான். ஆனால், அதில் எது சிறந்தது என்று தெரியாமல் நாங்கள் குழம்ப ஆரம்பித்தோம். எனவே, அது பற்றி ஒரு வார்த்தை ஜிம்மிடம் கேட்டுவிடுவது என்று டாம் சொன்னான்.
அன்றிரவு பத்து மணிக்கும் மேல் இடிதாங்கிக் கம்பியைப் பிடித்துக் கொண்டு நாங்கள் கீழே இறங்கினோம். எங்களுடன் ஒரு மெழுகுதிரியை எடுத்துக் கொண்டு சென்று, ஜிம் இருக்கும் அறையின் சன்னல் துவாரத்தின் கீழ் நின்று அவன் குறட்டை விடும் ஒலியைக் கேட்டோம். பின்னர், அந்த மெழுகுதிரியை அந்த துவாரத்தின் வழியாக உள்ளே வீசினோம். எனினும், அந்தச் சப்தம் அவனைத் தூக்கத்திலிருந்து எழுப்பவில்லை. பின்னர், மண்வெட்டி மற்றும் கோடரி கொண்டு எங்களின் பள்ளம் தோண்டும் வேலையைத் தொடர ஆரம்பித்தோம். கடைசியாக, ஒரு இரண்டரை மணி நேரத்திற்குப் பின், எங்கள் வேலையை முடித்தோம். அந்தத் துவாரத்தின் வழியாக ஜிம்மின் அறைக்குள் ஊர்ந்து சென்று அவனின் படுக்கையின் கீழ்புறம் அடைந்து, உள்ளே வீசிய மெழுகுதிரிக்காக கையை வைத்துத் துழாவினோம். அதை எடுத்து திரியை ஏற்றி ஜிம் தூங்குவதை கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டு நின்றோம். மிகுந்த நிம்மதியுடனும், ஆரோக்கியத்துடனும் . அவன் தென்பட்டான்.
அவசரப்படாமல் மென்மையாக அவனை எழுப்பினோம். எங்களைப் பார்த்த மகிழ்ச்சியில் அழுகவே ஆரம்பித்து விட்டான். என்னைத் தேனே என்றும் இன்னும் அவனால் யோசிக்க முடிந்த பல ஆசைப் பெயர்கள் கூறி அன்புடன் அழைத்தான். நேரத்தை வீணடிக்காது அங்கிருந்து உடனடியாகத் தப்பியோட, காலில் உள்ள சங்கிலியை உடைத்தெடுக்கத் தேவையான உலோக உளி ஒன்று வேண்டினான். ஆனால், டாம் அது விதிமுறைக்குப் புறம்பானது என்று உரைத்தான். அங்கே அமர்ந்து எங்களின் திட்டத்தைப் பற்றி ஜிம்முக்கு டாம் விளக்கிக் கூறினான். அத்தோடு, திடீரென ஏதேனும் இடர்ப்பாடுகளில் நாம் சிக்கியதாக உணர்ந்தால், ஒரு நிமிட அவகாசத்திற்குள் எப்படித் திட்டத்தை மாற்றியமைப்பது என்றும் கூறினான். எப்படியாகினும், நாங்கள் ஜிம்மை உறுதியாக அங்கிருந்து தப்புவித்து விடுவோம் என்பதால், ஜிம்மை இது பற்றிக் கவலை கொள்ளவேண்டாமென்று டாம் கூறினான். தானும் அதற்குச் சம்மதிப்பதாக ஜிம்மும் கூறினான்.
அங்கேயே அமர்ந்து எங்களின் பழைய காலத்தை அசை போட்டோம். அதிக அளவில் அவனை பல கேள்விகள் டாம் கேட்டான். தினமும் அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் சித்தப்பா சைலஸ் ஜிம் அறைக்கு வந்து அவனோடு சேர்ந்து பிரார்த்தனைகள் நடத்துவார் என்று ஜிம் டாமிடம் கூறினான். அவனுக்கு எல்லா வசதிகளும் சரியாக உள்ளதா, சாப்பிடப் போதுமான உணவு கிடைக்கிறதா என்று சேல்லி சித்தி வந்து அடிக்கடி சரி பார்த்து விட்டுப் போவாள் என்றான். அவர்கள் இருவரும் மிகுந்தக் கருணையுடன் தன்னிடம் இருப்பதாக ஜிம் கூறினான்.
"இப்போது இந்தக் காரியத்தை எப்படி நிறைவேற்றுவது என்று எனக்குப் புரிந்து விட்டது. அவர்கள் இருவர் மூலமாக உனக்குச் சில பொருட்கள் கிடைக்கும்படி நாங்கள் வழி செய்கிறோம்." டாம் கூறினான்.
"நான் கேட்டதிலேயே மடத்தனமான யோசனை அது. அப்படி ஏதும் செய்து விடாதே." நான் கூறினேன்.
நான் எச்சரித்ததை டாம் காதில் போட்டுகொண்ட மாதிரியே தெரியவில்லை. எப்போதும் போலவே, தான் முடிவெடுத்தால் பின்வாங்காதது போன்ற குணத்துடன் அவன் அப்போதும் இருந்தான்.
ஜிம்முக்கு உணவளிக்கும் நட் என்ற பெயருடைய நீக்ரோ மூலம் நாங்கள் எப்படி கயிற்று ஏணி மற்றும் உள்ள பெரிய பொருட்களை திருட நேர்ந்தது என்று டாம் ஜிம்மிடம் கூறினான். ஜிம்மை மிகுந்த கவனத்துடன் இருக்கும்படி டாம் எச்சரித்தான். இந்த பொருட்களை ஜிம் பிரிக்கும்போது நட் அவனைக் கையும் களவுமாகப் பிடித்துவிடாதபடி ஜாக்கிரதையாக இருக்கச் சொன்னான். அவனுக்கு நாங்கள் அனுப்பப் போகும் சிறு சிறு பொருட்களைப் பற்றியும், அவற்றின் உபயோகம் பற்றியும் நாங்கள் அவனுக்கு விளக்கிக் கூறினோம். சித்தப்பா சைலஸின் சட்டைப் பைகளில் சில சாமான்களைப் போட்டு அனுப்புவோம் என்றும் ஜிம் அவரின் பையிலிருந்து அவற்றைத் திருடிக் கொள்ளவேண்டும் என்றும் கூறினோம். சந்தர்ப்பம் கிடைக்கும்போது, சேல்லி சித்தியின் சமையல் உடையின் பின்பக்கக் கயிற்றில் ஏதேனும் முடிந்து விடுவது அல்லது அந்த உடையின் பையில் ஏதேனும் வைத்து அனுப்புவது என்பதும் நாங்கள் செய்வோம் என்று ஜிம்மிடம் கூறினோம். எப்படி தனது சட்டையில் ரத்தத்தால் குறிப்புகள் எழுதி வைப்பது போன்ற இன்ன பிற விஷயங்களையும் ஜிம்மிடம் டாம் சொல்லிக் கொடுத்தான். அவனிடம் எல்லாவற்றையும் டாம் விளக்கி விட்டான். அதில் பாதி விஷயங்கள் ஜிம்முக்கு விளங்காவிட்டாலும், நாங்கள் வெள்ளையர்கள் என்பதால் அவனை விட எங்களுக்கு அறிவு அதிகம் என்று அவன் மிகவும் நம்பினான். எனவே, மிகவும் திருப்தியுடன் டாம் எடுத்துரைத்தது போலவே நடந்து கொள்வதாக எங்களுக்கு உறுதியளித்தான்.
ஜிம்மிடம் புகைப் பிடிக்கும் நீண்ட குழாய்கள் சிலதும், நிறைய புகையிலையும் இருந்ததால், நாங்கள் புகைப் பிடித்துகொண்டே பொழுது போக்கிக் கொண்டு அரட்டை அடித்துக் கொண்டிருந்தோம். பின்னர், அந்தத் துவாரத்தின் வழியாகவே திரும்பவும் ஊர்ந்து வெளியே வந்து எங்களின் படுக்கைக்கு வந்து சேர்ந்தோம். யாரோ கடித்துத் துப்பியது போல எங்களால் இருவரின் உள்ளங்கைகளும் காணப்பட்டன. டாம் மிகுந்த உற்சாகத்திலிருந்தான். அவன் வாழ்வில் நடந்த வேடிக்கை சாகசங்களிலேயே இதுதான் தலையாயது என்றும் மிகுந்த புத்திசாலித்தனத்துடன் நடத்தப்பட்ட ஒன்று என்றும் கூறினான். இது போன்ற வீர சாகசங்களை எங்களின் வாழ்நாள் முழுதும் செய்துகொண்டே இருக்கவேண்டும் என்று ஆசைப்படுவதாக டாம் கூறினான்.
எங்களின் குழந்தைகளிடம் ஜிம்மை விட்டு, அவனை குழந்தைகள் வேடிக்கை செய்வதைக் காணவேண்டும் என்றும் கற்பனை செய்தான். நாட்கள் செல்லச் செல்ல ஜிம்முக்கும் இது பழக்கமாகி விட, அவனும் இதை ரசிக்க ஆரம்பித்து விடுவான் என்று டாம் கனவு கண்டான். இன்னுமொரு எண்பது வருடங்களுக்கு இவ்வாறே செய்து, யாருமே முறியடிக்க முடியாத சாதனையாக இதை மாற்ற வேண்டும் என்றும் குறிப்பிட்டான். இப்படிபட்ட சாதனைகளில், எங்களின் பங்கு கண்டு உலகமே எங்களைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள் என்றும் குதூகலித்தான்.
அடுத்த நாள் காலை மரக்குவியல் அருகே நாங்கள் சென்று பித்தளை பீடத்தில் உள்ள மெழுகுதிரியை பல துண்டுகளாக வெட்டிக் கொண்டோம். அவற்றையும், தகரம் மற்றும் ஈயத்தாலான மேசைக்கரண்டியையும் டாம் தனது சட்டைப் பைக்குள் வைத்துக் கொண்டான். பின்னர் நீக்ரோக்கள் தங்கியிருக்கும் அறைக்குச் சென்று நட்டின் கவனத்தைத் திசை திருப்பிவிட்டு, ஜிம்முக்கான தட்டில் இருக்கும் மக்காச்சோள ரொட்டித் துண்டங்களுக்கிடையே ஒரு துண்டு மெழுகுதிரியை திணித்து விட்டான். பின்னர், என்ன நடக்கப் போகிறது என்று பார்க்க நட் உடன் சென்றான். மிக அற்புதமாக அது வேலை செய்தது.
முதலில் மெழுகு திரியின் துண்டம் உள்ளே இருப்பது தெரியாது ஜிம் அதைக் கடித்தவுடன் அவன் பற்கள் நொறுங்கிப் போய்விடும் போல ஆனபோதும், அந்த தந்திரம் நன்றாகவே வேலை செய்தது. டாமே இதைச் சொல்லவும் செய்தான். ஜிம் உண்மையை வெளியே விடாது, ஏதோ ஒரு சிறு கல் ஒன்று ரொட்டித் துண்டங்களிடையே இருந்தது என்றும் அவ்வாறு தேவைற்ற விஷயங்கள் சில சமயங்களில் ரொட்டித் துண்டுகளிடையே இருப்பது வழக்கம்தான் என்றும் கூறி அவன் சமாளித்துவிட்டான். அந்த நிகழ்வுக்குப் பின், கையிலிருக்கும் முள் கரண்டியால் மூன்று நான்கு இடங்களில் குத்திப் பார்த்து ஆராயாமல் ஜிம் எதையும் கடிப்பது இல்லை.
அந்த சிறு வெளிச்சத்தில் உள்ளே ஜிம்மின் அறையில் நாங்கள் நின்றுகொண்டிருக்கும் வேளையில், ஒரு கூட்டமாய் வேட்டை நாய்கள் நாங்கள் தோண்டி வைத்திருந்த பெரிய துவாரத்திலிருந்து இருந்து குதித்தோடி வந்தன. ஒன்றன் பின் ஒன்றாக என பதினொன்று நாய்கள் உள்பக்கமாக எங்களுடன் வந்து சேர்ந்தன. எங்களுக்கு மூச்சு விடுவது கூடச் சிரமமாக இருந்தது. ஜிம்மின் பக்கத்து கொட்டகைக் கதவை தாளிடாது மறந்து விட்டோம் போல.
"சூனியக்காரிகள்" என்று கத்தியபடியே நட் தடாலென்று நாய்களின் நடுவே தரையில் விழுந்து, சாகப்போகும் மனிதன் போல முணுமுணுக்க ஆரம்பித்தான். உடனடியாக, ஜிம்மின் அறைக் கதவைத் தூக்கித் திறந்து ஜிம்மின் தட்டில் இருந்த மாமிசத்தை எடுத்து வெளியே தூர வீசியதும், நாய்கள் அந்த மாமிசத்தை எடுக்க வெளியே ஓடின. டாமும் வெளியே சென்று இரண்டு நிமிடங்கள் கழித்துத் திரும்பி வந்தான் உள்ளே வந்ததும் ஜிம்மின் அறைக் கதவை உள்பக்கமாக அறைந்து சாத்தினான். அவன் சென்று அந்தப்புறம் இருந்த கதவையும் சாத்தி விட்டு வந்திருக்கிறான் என்று நான் புரிந்து கொண்டேன். பின்னர், நாங்கள் நட்டின் மீது எங்களது வேலையைக் காட்ட ஆரம்பித்தோம். அவனிடம் நயமாகப் பேசி, செல்லத்துடன் கொஞ்சி, மீண்டும் அவன் இது போன்ற கெட்ட விஷயங்களை கண் முன் காண்கிறானா என்று அவனிடம் வினவினோம். அவன் எழுந்து அமர்ந்து, மலங்க மலங்க விழித்தவாறு சுற்றிலும் நோக்கினான்.
பின்னர், "மாஸ்டர் சிட்! நான் ஒரு முட்டாள் என்று நீங்கள் கண்டிப்பாகக் கூறப் போகிறீர்கள். ஆனால் ஒரு மில்லியன் நாய்கள் அல்லது பிசாசுகள் அல்லது அது போன்ற ஏதோ ஒரு கூட்டம் இங்கே பார்த்ததாக நான் நம்புகிறேன். அப்படி இல்லையென்றால், அவர்களின் இங்கிருந்து ஓடிப் போன வழியிலேயே நானும் இறந்து போகிறேன். நான் அவைகளை உறுதியாகப் பார்த்தேன், மாஸ்டர் சிட்! நான் அவைகளை உணர்ந்தேன். நான் அவைகளை உணர்ந்தேன். அவை என் மீது ஏறிச் சென்றன. நாசமாய்ப் போக! ஒரு முறை - ஒரே ஒரு முறையாவது எனது கரங்களை அவற்றின் மேல் வைத்து பிடிக்க நான் விரும்புகிறேன். அது மட்டும்தான் நான் கேட்கிறேன். ஆனால், எல்லாவற்றையும் விட, அந்தச் சைத்தான்கள் என்னை தனியாக இருக்கவிட்டால் நான் நிம்மதியாக இருப்பேன்" என்று ஏதேதோ உளறினான்.
"நல்லது. நீ என்ன நினைக்கிறாய் என்று நான் கூறுகிறேன். அது ஏன், எப்போதுமே தப்பி ஓடி வந்த நீக்ரோவுக்கு நீ காலை உணவு எடுத்து வரும்போதே இப்படி நடக்கிறது என்று நினைக்கிறாய்? அவைகள் ஏன் வருகிறது என்றால், அவைகளுக்கு மிகவும் பசியாக இருக்கக் கூடும். அதுதான் காரணம். அவர்களுக்கென்று நீ சூனியக்காரி கேக் செய்ய வேண்டிய தேவை உள்ளது. அதுதான் நீ கண்டிப்பாகச் செய்ய வேண்டும்" டாம் கூறினான்.
"ஆனால் என்னுடைய தலைவா! மாஸ்டர் சிட்! சூனியக்காரி கேக் நான் எப்படிச் செய்யப்போகிறேன்? அதை எப்படிச் செய்வதென்று எனக்குத் தெரியாதே. இது போன்றதொன்றை இதற்கு முன் நான் கேள்விப் பட்டதேயில்லையே!"
"நல்லது. அப்படியென்றால், அதை நானேதான் செய்ய வேண்டும்."
"நீங்கள் செய்வீர்களா, தேனினும் இனியவரே! நீங்கள் செய்வீர்களா? அப்படி மட்டும் நீங்கள் செய்தால், நீங்கள் நிற்கும் இடத்தை நான் தொழுது பூசை செய்து வணங்குவேன். கண்டிப்பாகச் செய்வேன்."
"எல்லாம் சரி. எங்களிடம் நீ மிகவும் நல்லவனாக நடந்து கொள்வதுடன், இந்த தப்பி ஓடிவந்த நீக்ரோவை வேறு எங்கள் கண்ணில் காட்டியிருக்கிறாய். என்பதால் உனக்காக அதை நான் செய்கிறேன். ஆனால், இனிமேல் நீ மிகவும் கவனமாக இருக்கவேண்டும். இந்த அறைக்கு வரும்போதெல்லாம், உனது பின்பக்கம் காட்டிக்கொண்டுதான் வரவேண்டும். நாங்கள் இந்த சாப்பாட்டுத் தட்டில் எதை வைத்தாலும், நீ அதைப் பார்க்காதவாறு நடித்து கொண்டு எடுத்துச் செல்லவேண்டும். அதே போல் ஜிம் சாப்பிட்டுத் தட்டைக் காலி செய்யும்வரை நீ அவன் சாப்பிடுவதைப் பார்க்கக் கூடாது. எது வேண்டுமானாலும் நடக்கலாம். என்ன என்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, அந்த சூனியக்காரியின் பொருட்களை எதுவும் நீ தொடவே கூடாது."
"அவற்றைத் தொடுவதா, மாஸ்டர் சிட்? என்ன பேசுகிறீர்கள் நீங்கள்? என்னுடைய சுண்டுவிரல் எடை கூட அதன் மீது பட விடமாட்டேன். பத்தாயிரம் பில்லியன் டாலர் எனக்குக் கொடுத்தால் கூட நான் அதைச் செய்யமாட்டேன்."
[தொடரும்]
- முனைவர் ர. தாரணி M.A., M.Phil., M.Ed., PGDCA., Ph.D. தமிழ்நாட்டில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தேவாரப்பாடல் பெற்ற சிவஸ்தலமான, திருப்புக்கொளியூர் என்று முன்பு திருநாமம் பெற்ற அவிநாசி என்ற ஊரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத்துறையின் தலைவராக பணியாற்றி வருகிறார். ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றது கல்வித்துறையில் அவர் தேர்வு செய்த விஷயம் என்றாலும் அவரின் பேரார்வம் மொழிபெயர்ப்பின் மீதும்தான்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.