என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக மார்க் ட்வைனின் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்', ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் 'புதையல் தீவு' என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி 'பதிவுகள்' இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்' நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் 'பதிவுகள்' சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள். - வ.ந.கிரிதரன், ஆசிரியர் 'பதிவுகள்'
அத்தியாயம் இருபத்தி எட்டு
வெகு சீக்கிரமே நான் விழித்தெழும் காலைவேளை வந்து விட்டது. ஏணியில் இறங்கி கீழ்தளத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தேன். அவ்வாறு செல்லும் போது அந்த பெண்களின் அறைக் கதவு திறந்திருப்பதை எதேச்சையாக நான் காண நேர்ந்தது. அறையினுள் திறந்திருந்த பழைய ட்ரங்க் பெட்டியருகே மேரிஜேன் அமர்ந்திருப்பதைக் கண்டேன். அந்தப் பெட்டியில் தன் பொருட்களை அடுக்கி வைத்துக் கொண்டு இங்கிலாந்து செல்ல தயாராகிக் கொண்டிருந்தாள். அந்த வேலையைப் பாதியில் நிறுத்தி விட்டு, தன் மடியில் ஒரு நீண்ட மேலங்கியை மடித்து வைத்துக் கொண்டு, தனது இரு கரங்களையும் கொண்டு முகத்தை மூடிக்கொண்டு அழுது கொண்டிருந்தாள். அது என் மனதைக் கரைத்தது. யாருக்குமே அதைப் பார்த்தால் மனம் இளகத்தான் செய்யும். எனவே, உள்ளே நான் சென்றேன்.
"மிஸ். மேரிஜேன்! சக மனிதர்களின் துன்பத்தை நீ பொறுத்துக் கொள்ளக் கூடியவள் அல்ல. நானும் அப்படிதான். என்னிடம் உன் துன்பத்தைப் பற்றிக் கூறு." அன்புடன் நான் வினவினேன்.
எனவே, அவள் கூற ஆரம்பித்தாள். நான் சந்தேகித்தது போலவே அவள் அந்த நீக்ரோக்களைப் பிரிந்த வேதனையிலேயே அழுது கொண்டிருந்திருக்கிறாள். அவள் செல்லவிருக்கும் இனிமையான இங்கிலாந்து பயணத்தையே இந்த வேதனை குலைத்து விடும் என்று அழுது கொண்டே கூறினாள். அந்த நீக்ரோ குழந்தைகளும் அவர்களின் அம்மாவும் இனி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவே முடியாது என்று தெரிந்த கொண்டபின் அவளால் எப்படி அவளது வாழ்வில் சந்தோசத்துடன் இருக்க முடியும் என்று கேட்டாள். பின்னர் முன்பை விட அதிக தீவிரத்துடன் கண்ணீர் வடிக்க ஆரம்பித்தாள்.
"ஓ! அன்புக்குரியவனே! அவர்கள் ஒருபோதும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவே மாட்டார்கள் என்பதை எண்ணும்போது." கைகளை வேகமாக அசைத்துக்கொண்டே கூறினாள்.
"ஆனால் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்- அதுவும் இன்னும் இரண்டு வாரங்களுக்குளாகவே. எனக்குத் தெரியும்." நான் கூறினேன்.
அடக்கடவுளே! யோசிக்காமல் உளறிவிட்டேனே! அங்கிருந்து அசைந்து வேகமாக நகர்வதற்குள், அவள் தனது கரங்களை என் கழுத்தைச் சுற்றி வளைத்து, நான் கூறியதைத மீண்டும் மீண்டும் திருப்பிக் கூறும்படி கேட்டாள். திரும்பத்திரும்பக் கேட்டாள்.
வெகு வேகமாக வேண்டாததைப் பேசி விட்டதை நான் உணர்ந்தேன். இப்போது ஒரு மோசமான சூழ்நிலையில் நான் இருந்தேன். ஒரு நிமிடம் என்னைச் சிந்திக்க அனுமதிக்கும்படி அவளிடம் நான் கேட்டுக் கொண்டேன். அவளும் அங்கே பொறுமையாக அமர்ந்தாள். ஆயினும் மிகுந்த பரபரப்புடனும், அதே சமயம், சொத்தைப்பல்லை பிடுங்கியபின் நிம்மதியாக உணரும் ஒரு மனிதனைப் போல நிம்மதியும், சந்தோஷமும் நிரம்பிய அழகுத் தோற்றத்துடனும், அவள் காணப்பட்டாள்.
ஒரு நிமிடம் நான் நன்கு யோசித்தேன். இது போன்ற சூழ்நிலையில் ஒருவன் தங்களைப் பற்றிய உண்மையைச் சொல்வது மிகுந்த ஆபத்து விளைவிக்கும் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். பெரிதாக எனக்கு இவ்வாறான அனுபவங்கள் அதிகம் இல்லை என்றாலும், இதுதான் சரி என்று ஒத்துக் கொள்ளாது போனாலும், அப்படிதான் எனக்கு எப்போதுமே தோன்றியிருந்திருக்கிறது. எனினும், இந்த மாதிரி சூழ்நிலையில் பொய் சொல்லி இன்னும் சிக்கல் விளைவிப்பதை விட உண்மையைக் கூறுவது சிறந்தது மற்றும் பாதுகாப்பானது என்று தோன்றியது. இந்தத் தீர்மானம் மிகுந்த அசாதாரணமாகவும், வித்தியாசமாகவும் எனக்குத் தோன்றியது. எனவே இந்த விஷயத்தை இன்னுமொருமுறை பரிசீலனை செய்து பார்ப்பது அவசியம் என்று என் மனதிற்குப் பட்டது.
கொஞ்சம் கவனமாக இருந்திருந்தால், இப்படி ஒரு சூழ்நிலையை என் வாழ்வில் நான் எதிர்கொள்ள நேர்ந்திருக்காது. இறுதியாக, இந்த முறை உண்மையைச் சொல்லி அதற்காக எந்த ஆபத்து வந்தாலும் எதிர்கொள்ளலாம் என்று முடிவெடுத்தேன். பீரங்கியின் வாய் பகுதியில் அமர்ந்துகொண்டு அதை வெடிக்க வைத்து நீ எந்தப் பக்கம் பறந்து சென்று விழப்போகிறாய் என்பது போன்றதொரு நிலைதான்.
"மிஸ். மேரிஜேன்! இந்த ஊரில் ஒரு நல்ல இடம் எங்கேனும் ஒரு மூன்று அல்லது நான்கு நாட்கள் நீங்கள் சென்று தங்குமாறு இருக்குமா?" பின்னர் நான் கூறினேன்.
"ஆமாம். மிஸ்டர்.லாத்ராப்ஸ் வீடு இருக்கிறது. ஏன்?"
"அது பற்றி ஏன் என்று கேட்காதீர்கள். இன்னும் இரு வாரங்களுக்குள் அந்த நீக்ரோக்கள் ஒருவரை ஒருவர் எப்படிப் பார்த்துக் கொள்வார்கள் அதுவும் இங்கே, இந்த வீட்டிலேயே என்று நான் கூறி நிரூபித்த பிறகு நீங்கள் அங்கே மிஸ்டர்.லாத்ராப்ஸ் வீட்டுக்குச் சென்று நான்கு நாட்கள் தங்க முடியுமா?"
"நான்கு நாட்கள் என்ன? ஒரு வருடம் கூட அங்கே நான் தங்கலாம்." அவள் கூறினாள்.
"அப்படியானால் சரி" நான் கூறினேன் "நீ இதைப் பற்றி யாரிடமும் சொல்லப் போவதில்லை என்று எனக்கு சத்தியம் செய்து கொடு. பைபிளின் மீது முத்தமிட்டுச் சத்தியம் செய்வதை விட நீ கூறுவதை நான் நம்புவேன்."
மிகவும் இனிமையான வெட்கம் கலந்த புன்னகையை என் மீது வீசினாள்.
"உனக்கு ஆட்சேபணை இல்லையெனில் கதவை மூடி தாளிட்டுக் கொள்ளட்டுமா?" நான் கேட்டேன்.
பின்னர் அவ்வாறு செய்து விட்டு, திரும்ப வந்து நான் அமர்ந்தேன்.
நான் கூற ஆரம்பித்தேன்.
"தயவு செய்து சத்தம் போட்டுவிடாதீர்கள். அமைதியாக அமர்ந்து ஓர் ஆண்மகனைப் போல் நான் சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள். நான் இப்போது சொல்லப்போகும் நிஜத்தைக் கேட்க உங்கள் மனதைத் திடப்படுத்திக் கொள்ளுங்கள். மிஸ். மேரி! ஏனெனில் அது மிகவும் கோரமானது. அதை ஜீரணிப்பது மிகவும் கடினமான ஒன்று. ஆனால் இதில் என் தவறு ஏதும் இல்லை. நானும் எதுவும் செய்வதற்கில்லை. உங்களின் சித்தப்பாக்கள் இருக்கிறார்களே ......... நல்லது, அவர்கள் உங்கள் சித்தப்பாக்களே உண்மையில் அல்ல. அவர்கள் உண்மையில் பழி பாதகத்திற்கு அஞ்சாத மோசடிப் பேர்வழிகள். இதோ! மோசமான ஒரு நிஜத்தை இப்போது சொல்லி முடித்து விட்டேன். மற்றதெல்லாம் இந்த அளவு மோசமாக இருக்கப் போவதில்லை."
இந்தச் செய்தி உண்மையிலும் அவளை அளவுக்கதிகமாகவே திடுக்கிடச் செய்தது. ஆயினும் நான் இப்போது ஆழமற்ற நீரில் இறங்கியாகி விட்டது. தொடரத்தானே வேண்டும். எனவே, தொடர்ந்தேன். நீராவிப் படகு நோக்கிச் சென்று கொண்டிருந்த வாலிப மடையனை நதியில் நாங்கள் சந்தித்ததிலிருந்து கடைசியாக முன் வாசலில் நின்ற மேரி தன் சித்தப்பாவின் கரங்களில் தஞ்சம் அடைந்து, அவர் அவளை பதினாறு அல்லது பதினேழு முறை முத்தம் கொடுத்த வரை நடந்த ஒவ்வொரு விஷயங்களையும் அவளுக்குப் புரியும்படி விளக்கினேன். ஒவ்வொரு நிகழ்வையும் விளக்கிச் சொல்லும் வேளை அவள் கண்களின் பளபளப்பு அதிகமாகிக் கொண்டே சென்றது. இறுதியாக அவளின் முகம் சூரிய ஒளியின் பிரகாசம் போன்று வெளிச்சம் பெற்று அவள் குதித்தாள்.
"அந்த திருட்டு நயவஞ்சகர்கள். ஒரு நொடி கூட இனி தாமதிக்கக் கூடாது. அவர்களை நார் நாராகக் கிழித்து பறக்கவிட்டு நதியில் வீசுவோம்." எழுந்து நின்று சீற்றத்துடன் உரைத்தாள்.
"உறுதியாக அப்படிச் செய்வோம். ஆனால் அதை நீ மிஸ்டர் லாத்ராப்ஸ் வீட்டுக்குப் போகும் முன்பா அல்லது ....."
"ஓ! நான் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறேன்!" அவ்வாறு கூறியவாறே மீண்டும் அமர்ந்து கொண்டாள்.
"நான் கோபத்தில் கூறியதை மனதில் வைத்துக் கொள்ளாதே. தயவு கூர்ந்து மனதில் ஏற்றிக் கொள்ளாதே. நீ அப்படிச் செய்யமாட்டாய். அப்படித்தானே!"
பட்டுப் போன்று மிருதுவான அவளின் கையை எனது கரத்தின் மேல் வைத்தாள். பின்னர் அவள் அப்படிச் செய்தால் முதலில் நான் இறந்து விடுவேன் என்று அவளிடம் நான் கூறினேன்.
"நான் இந்த அளவு கொதித்துப் போவேன் என்று எனக்கே தெரியவில்லை." என்றாள். "இப்போது, தயவு செய்து தொடர்ந்து மேலே கூறு. முன்பு செய்தது போல குறுக்கிட்டு உன்னைத் தடுக்க மாட்டேன். நீ என்ன செய்யச் சொல்கிறாயோ, அதை நான் கண்டிப்பாகச் செய்வேன்." என்றாள்.
"நல்லது" நான் கூறினேன் "அந்தக் கயவர்கள் இருவரும் முரட்டு ஆசாமிகள். நான் இப்போதிருக்கும் நிலையில் எனக்குப் பிடித்தோ, பிடிக்காமலேயோ, நான் இன்னும் சில காலம் அவர்களுடன் பயணம் செய்ய வேண்டியுள்ளது. அது ஏன் என்று உங்களிடம் நான் கூற முடியாத நிலையில் உள்ளேன். நீங்கள் அவர்களைக் காட்டிக் கொடுக்க நினைத்தால், இந்த ஊர் மக்கள் அவர்களை என் குடுமியிலிருந்து அகற்றி விடுவார்கள். நான் நிம்மதியாகிவிடுவேன். ஆனால் நீங்கள் பார்த்திராத இன்னொரு மனிதன் ஆபத்தில் சிக்கி விடுவான். நல்லது. அவனை நாம் காப்பாற்றியே ஆகவேண்டும். இல்லையா! கண்டிப்பாக நாம் அவனைக் காப்பாற்றுவோம். நல்லது. அதன் பின் நாம் இந்த கயவர்களைக் காட்டிக் கொடுப்போம்.”
இவ்வாறு நான் சொல்லிக் கொண்டிருக்கும் சமயத்தில், ஒரு நல்ல யோசனை என் மனதில் உதித்தது. இவர்களை சிறையில் அடைப்பது மூலமாக, ஏய்த்துப் பிழைக்கும் இந்த போலிகளின் பிடியிலிருந்து நானும், ஜிம்மும் தப்பலாம் அல்லவா! பிறகு நாங்கள் நிம்மதியாக எங்களின் வழியில் செல்லலாம். ஆனால், பகலில் தோணியில் நான் மட்டும் வெளியே தெரியும்படி மிதந்து கொண்டு நதியின் கீழ்த்திசைப்பாதையில் செல்வது தேவையற்ற கேள்விகளுக்கு பதில் சொல்லும்படியான தர்மசங்கடத்தை ஏற்படுத்தும். எனவே அன்று நள்ளிரவு வரைக் காத்திருந்து எங்கள் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று முடிவு கட்டினேன்.
எனவே, "மிஸ் மேரிஜேன்! நீங்கள் என்ன செய்யவேண்டுமென்று நான் இப்போது கூறுகிறேன். நீங்கள் நீண்ட நேரம் அங்கே மிஸ்டர் லாத்ராப்ஸ் வீட்டிலும் இருக்க வேண்டிய அவசியமிருக்காது. எவ்வளவு தொலைவில் இருக்கிறது அவர்கள் வீடு?" நான் கூறினேன்.
"கொஞ்ச தூரம்தான். இங்கிருந்து ஒரு நாலு மைல் தொலைவில் கிராமத்தை விட்டு கொஞ்சம் தள்ளி இருக்கிறது."
"ரொம்ப நல்லது. இப்போது நீங்கள் அதை நோக்கிச் சென்று இன்று இரவு ஒன்பது அல்லது ஒன்பதரை வரை அங்கேயே இருங்கள். பிறகு ஏதோ மறந்து வைத்து விட்டதாக அவர்களிடம் கூறி, அவர்களைக் கூட்டிக் கொண்டு இங்கே வாருங்கள். நீங்கள் இங்கே பதினோரு மணிக்குள் வந்து சேர்ந்து விட்டால், இந்த சன்னலில் ஒரு மெழுகுவர்த்தி ஏற்றி வையுங்கள். நான் அப்போது வரவில்லையென்றால், மணி பதினொன்று அடிக்கும் வரை காத்திருங்கள். அப்புறமும் நான் வரவில்லையென்றால், நான் இந்த கெடுதலிலிருந்து தப்பிச் சென்று விட்டேன் என்று அர்த்தம். பிறகு மோசடி விஷயத்தை நீங்கள் அனைவருக்கும் பரப்பி, இந்த நயவஞ்சகர்களை சிறைக்கு அனுப்புங்கள்."
"ரொம்ப நல்லது." அவள் சொன்னாள் "அப்படியே செய்கிறேன்."
"நம் திட்டத்திற்கு மாறாக ஏதேனும் நடந்து விட்டால், அங்கிருந்து போய்விடாதீர்கள். என்னை அவர்களுடன் பிடித்து வைத்துக் கொண்டால், அதன் பின் மொத்த உண்மையையும் நான் உங்களுக்கு முன்னதாகவே தெரியப்படுத்தி எச்சரித்த விஷயத்தை ஊர் மக்களுக்கு நீங்கள்தான் சொல்லிப் புரிய வைக்க வேண்டும். உங்களால் முடிந்த அளவு எனக்குத் துணையாக நீங்கள் நின்று என்னை ஆதரிக்க வேண்டும்."
"உன்னை ஆதரிப்பது என் பொறுப்பு. அவர்கள் உன் முடிக்கற்றையைக் கூட தொட முடியாது." அவள் கூறினாள்.
அவ்வாறு கூறும் போது அவளின் மூக்குகள் விடைத்துக் கொண்டு கண்கள் படபடவென அடித்துக் கொள்வதை நான் கண்டேன்.
"நான் இங்கிருந்து சென்றுவிட்டால், உங்களின் சித்தப்பாக்களின் குறும்புத்தனத்தை நிரூபிக்க நான் இருக்க மாட்டேன்." நான் கூறினேன் :இங்கே இருந்தாலும் என்னால் அதைச் செய்ய முடியாது. அவர்கள் தனக்கு ஆதாயம் தேடும் ஏமாற்றுப் பேர்வழிகள் என்பதை மட்டும் என்னால் அடித்துக் கூற முடியும். அதை நிரூபிக்க இங்கிருக்கும் ஒரு சிலர் என்னை விட நன்கு நிரூபிக்கலாம். அதே சமயம் அவர்கள் என்னைச் சந்தேகிப்பது போல வேறு யாரையும் அதிகம் சந்தேகிக்க மாட்டார்கள் என்று எனக்குத் தெரியும். அவர்களை எப்படி தோலுரித்துக் காட்டுவது என்று நான் உங்களுக்குக் கூறுகிறேன். ஒரு வெள்ளைத்தாளும், பென்சிலும் கொடுங்கள்.
இதோ "பிரிக்ஸ்வில் ராஜா விளையாட்டு" என்று எழுதியிருக்கிறேன். இதை வைத்துக் கொள்ளுங்கள். தொலைத்து விடாதீர்கள். நீதிமன்றம் இந்த இருவரைப் பற்றி அதிக ஆதாரம் கேட்கும்போது, பிரிக்ஸ்வில் ஊருக்கு இவர்களை அழைத்துச் சென்று அங்கே அந்த ஊர் மக்களிடம் ராஜா விளையாட்டு என்று கூறி பணம் பறித்தவர்கள் என்று இவர்களைக் காட்டச் சொல்லுங்கள், போதும். சில சாட்சிகள் அங்கிருந்து வேண்டும் என்று கேட்கச் சொல்லுங்கள். நீங்கள் கண் சிமிட்டுவதற்குள் மொத்த ஊரும் இவர்களுக்கு எதிராக சாட்சியை கூறும், மிஸ். மேரி! அந்த அளவு கோபத்தில் அவர்கள் இருக்கிறார்கள்."
இவ்வாறாக எங்கள் திட்டம் சரிவர இருப்பதை உணர்ந்த நான் கூறினேன்:
"அந்த ஏலம் நடந்து முடிந்தது பற்றிக் கவலைப் படாதீர்கள். குறுகிய காலத்துக்குள் அது நடந்ததால் யாரும் அப்போதே பணம் செலுத்தத் தேவையில்லை. அடுத்த நாள் வரை காலம் இருக்கிறது. அந்தப் பணம் கிடைக்கும் வரை அவர்கள் இருவரும் இந்த ஊரை விட்டுப் போக மாட்டார்கள். இப்போது நாம் அவர்களை வலை விரித்துப் பிடித்த பிறகு, அந்த ஏலம் செல்லுபடி ஆகாது போய் விடும். அந்த கயவர்களுக்கும் எந்தப் பணமும் கிட்டாது போய்விடும். எனவே வணிகர்கள் தங்கள் பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டு அந்த நீக்ரோக்களை இங்கே விரைவிலேயே அனுப்பி விடுவார்கள். நீக்ரோ விற்ற பணம் கூடப் பெற முடியாத நிலையில் அந்த மோசக்காரர்கள் இப்போது இருக்கிறார்கள். மிகவும் கேவலமான நிலையில் அவர்கள் இருக்கிறார்கள் மிஸ். மேரி!"
"நல்லது" அவள் கூறினாள் " இப்போது கீழே சென்று காலை உணவு அருந்தி விட்டு, உடனடியாக மிஸ்டர் லாத்ராப்ஸ் வீட்டை நோக்கிச் செல்ல ஆரம்பிக்கிறேன்."
"இல்லை, மிஸ். மேரி! அது சரியான செயல் அல்ல. கண்டிப்பாக அல்ல. காலை உணவுக்கு முன்பே அங்கே சென்று விடுங்கள்."
"ஏன்?"
“உங்களை எதற்காக நான் போகச் சொன்னேன் என்று நீங்கள் நினைக்கிறீர்கள், மிஸ் மேரி?"
"நல்லது. அது பற்றி நான் இதுவரை எதுவுமே சிந்திக்கவே இல்லை. இப்போது, நான் நினைத்துப் பார்க்கும் போது, எனக்கு ஒன்றும் புரிபடவில்லை. ஏன்?"
"ஏன், ஏனெனில் நீங்கள் மனதில் உள்ளதை ஒளித்து நடிக்கும் வகையான பெண் கிடையாது. உங்கள் முகம் ஒரு திறந்த புத்தகம் போன்றது. மற்றவர்கள் உங்கள் முகத்தை எளிதில் படித்து மனதிலுள்ளதைத் தெரிந்து ஏதோ தப்பு உள்ளது என்று புரிந்து கொள்வார்கள். உங்கள் சித்தப்பாக்கள் காலை எழுந்து வந்து முத்தமிட்டு வணக்கம் சொல்லும்போது உங்களால் அவர்களைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியும் என்று நினைக்கிறீர்களா அத்துடன் ஒன்றுமே ................"
"நிறுத்து, நிறுத்து! ஆம்! நான் காலை உணவுக்கு முன்பே செல்கிறேன். அது எனக்கு மகிழ்ச்சியும் கூட. எனது சகோதரிகளையும் அழைத்துக் கொண்டு செல்லட்டுமா?"
"ஆம்! சகோதரிகளைப் பற்றி கவலை கொள்ளாதீர்கள். அவர்கள் இன்னும் கொஞ்சம் பொறுத்துக் கொண்டு இங்கேயே இருக்கட்டும். நீங்கள் அனைவரும் சென்று விட்டால் இந்தப் பொறுக்கிகள் ஏதேனும் சந்தேகப்பட ஆரம்பிக்கலாம். உங்கள் சகோதரிகளையோ, அந்த இரு வஞ்சகர்களையோ அல்லது ஊர் மக்கள் யாரையும் கூட நீங்கள் சந்திப்பதை நான் விரும்பவில்லை. பக்கத்துக்கு வீட்டுக்காரர் உங்கள் சித்தப்பாக்களைப் பற்றி உங்களிடம் விசாரித்தால், உங்கள் முகம் அனைத்தையும் உடனே வெளிகாட்டிவிடும். வேண்டாம். இப்போது நேராக நீங்கள் மிஸ்டர் லாத்ராப்ஸ் வீட்டுக்குச் செல்லுங்கள் மிஸ் .மேரிஜேன்! நான் அவர்களை எல்லாம் சமாளித்துக் கொள்கிறேன். சிலமணி நேரம் இடம் மாறி இருந்தால் உங்கள் மனதுக்கு நன்றாக இருக்கும் என்பதால் நீங்கள் உங்கள் தோழிகளைப் பார்க்கச் சென்றதாக சூசனிடம் நான் கூறிக் கொள்கிறேன். சூசன் உங்கள் சார்பாக தனது சித்தப்பாக்களுக்கு அன்பைத் தெரிவிப்பாள். இன்று இரவு அல்லது நாளை அதிகாலை வந்து விடுவீர்கள் என்று கூறிவிடுகிறேன்."
"எனது தோழியை பார்க்க நான் சென்றுள்ளேன் என்று வேண்டுமானால் அவர்களிடம் நீ சொல்லிக் கொள். ஆனால் அந்த மோசடிப் பேர்வழிகளிடம் என் அன்பை நான் தெரிவிப்பதாக கூறச் சொல்லி நீ சொல்லுவது எனக்கு வேண்டாம்."
"சரி. அப்படியே ஆகட்டும். அதை நான் சொல்லவில்லை."
நான் சூசனிடம் அப்படித்தான் கூறப்போகிறேன். அது மேரிக்குத் தெரிந்தால் வருத்தப் படுவாள். யாரையும் பாதிக்காத பொய் சொல்லுவது தவறு அல்ல. சிறு சிறு பொய்கள்தான் அதிக அளவில் மக்களின் மனதை அமைதியாகும் வல்லமை கொண்டவை. ஜேனுக்கு அது கொஞ்சம் நிம்மதியைக் கொடுக்கும். வேறு எந்த மாற்றமும் தரப்போவதில்லை. அதன் பின்னர். "இன்னொரு விஷயம் - அந்தப் பணமூட்டை." நான் கூறினேன்
"நல்லது. அதைத்தான் அவர்கள் பிடுங்கிக் கொண்டார்களே. அவர்கள் அதை என்னிடமிருந்து எப்படி நாடகமாடி வாங்கினார்கள் என்று நினைத்தால் எனக்கு படு கேவலமாக இருக்கிறது."
"இல்லை. நீங்கள் தவறாக எண்ணியுள்ளீர்கள். அந்தப் பை தற்போது அவர்களிடம் இல்லை."
"என்னது? ஓ! பிறகு யாரிடமிருக்கிறது அது?"
"எனக்குத் தெரிந்திருந்தால் நன்றாகத்தானிருக்கும். ஆனால் தெரியாது. அதை அவர்களிடமிருந்து திருடி உங்களுக்குக் கொடுக்க நான்தான் வைத்திருந்தேன். அதை ஒளித்து வைத்த இடமும் எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால் அது அந்த இடத்தில் தற்போது இருக்க வாய்ப்பில்லை. நான் மிகவும் வருந்தி மன்னிப்புக் கேட்கிறேன், மிஸ். மேரி ஜேன்! எத்தனை அதிகம் வருத்தப்பட முடியுமோ அத்தனை வருத்தத்தில் நான் இருக்கிறேன். என்னால் இயன்ற அளவு நேர்மையாக நான் செய்ய முயன்றேன். செய்யவும் செய்தேன். ஒரு கட்டத்தில் நான் மாட்டிக் கொள்வது போன்ற நிலை வந்தவுடன் எனக்கு முன்பாகத் தெரிந்த ஒரு இடத்தில் செருகி விட்டு ஓடி விட்டேன். ஆனால் ஒளித்து வைக்க நல்லதொரு இடம் அதுவல்ல."
"ஓ! உன்னை நீயே நிந்தித்துக் கொள்வதை நிறுத்து. அது உனக்கு நல்லதல்ல. அதை நான் அனுமதிக்க மாட்டேன். அத்தோடு, உனக்கு வேறு வழி தெரியாது அவ்வாறு செய்திருக்கிறாய். அது உன் தவறில்லையே. அதை எங்கே வைத்தாய்?"
திரும்பவும் அனைத்தையும் சொல்லி அவளைத் துன்பக் கடலில் ஆழ்த்த எனக்கு விருப்பமில்லை. அது மட்டுமல்லாது, அந்தப் பண மூட்டை அவளின் அப்பாவின் சவப்பெட்டியில் அந்தப் பிணத்தின் வயிற்றுப் பகுதியில் உள்ளது என்று எப்படிச் சொல்வது எனக் குழம்பினேன். எனவே ஒரு நிமிடம் நான் ஏதும் கூறவில்லை. பிறகு கூறினேன்:
"உங்களிடம் அதைச் சொல்லுவதை விட, உங்களுக்கு மறுப்பு இல்லையெனில்,அதை நான் எழுதிக் கொடுத்துவிடவா, மிஸ் மேரிஜேன்? ஆனால் அதை இங்கே படிக்காது, மிஸ்டர் லாத்ராப்ஸ் வீட்டுக்குச் செல்லும் வழியில் படித்துப் பாருங்கள். சரிதானே?"
"ஓ சரிதான்."
எனவே அதை ஒரு தாளில் எழுதினேன்.
"அந்த சவபெட்டியில் வைத்துள்ளேன். அன்றிரவு நீங்கள் சவப்பெட்டி முன்பு அழுது கொண்டிருந்த சமயம் நான் கதவின் பின் மறைந்திருந்தேன். உங்களுக்காக நான் அன்று மிகவும் வருத்தப்பட்டேன், மிஸ் மேரிஜேன்!"
அந்தக் கடிதத்தை எழுதும்போது அந்த இரவில் அவள் தனியாக இருந்து அழுததை நினைத்து எனக்கு இன்னமும் கண்கள் கலங்கியது. அதுவும், அவளின் வீட்டுக் கூரைக்குக் கீழே அவளை ஏமாற்றி கொள்ளையடிக்க வந்த சாத்தான்கள் படுத்துறங்குவது அறியாமல் அவள் தனித்து கண்ணீர் வடித்திருக்கிறாள். இவ்வாறு எண்ணிக் கொண்டே கடிதத்தை எழுதி முடித்து அந்தத் தாளை நன்கு மடித்து அவளிடம் கொடுத்தேன். அவளின் கண்களும் கலங்கியிருந்ததை நான் காண முடிந்தது. அவள் கரங்களால் என் கரத்தைப் பிடித்து குலுக்கியபடியே அவள் என்னிடம் கூறினாள்:
"போய் வருகிறேன். நீ சொல்லியது போலவே நான் அனைத்தையும் செய்யப் போகிறேன். திரும்ப உன்னை நான் பார்க்க முடியாது போய் விட்டாலும், என் வாழ்வில் என்றுமே உன்னை நான் மறக்கவே போவதில்லை. உன்னை பலப்பல முறைகள் எண்ணிப் பார்த்துக் கொண்டு உனக்காக நான் பிரார்த்திப்பேன்."
இவ்வாறு கூறிய பின் அவள் அங்கிருந்து சென்றாள்.
எனக்காக அவள் பிரார்த்தனை செய்வாள்! அவளுக்கு மட்டும் என்னை நன்றாகக் புரிந்திருந்தால், அவளின் பிரார்த்தனைகள் எனக்கு மிகவும் அதிகமாகத் தேவைப்படுகிறது என்பதும் அவளுக்கு அதிகமாகத் தெரிந்திருக்கும். அவள் எனக்காக கண்டிப்பாக கடவுளிடம் வேண்டிக் கொள்வாள் என்பதில் எனக்கு நிறைய நம்பிக்கை உள்ளது. அவளின் இருதயம் அன்பினாலும், கருணையாலும் நிறைந்தது. அவள் மனதில் நினைத்தால் யூதர்களுக்காகவும் கூட பிரார்த்தனை செய்வாள்.
கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் ஒரு பெண் என்பதை நான் புரிந்து கொண்டேன். நீங்கள் என்ன வேண்டுமானாலும் அவளைப் பற்றிக் கூறிக் கொள்ளலாம். ஆனால் எனது பார்வையில் அவள் மாதிரி ஒரு தைரியம் மிக்க ஒருத்தி ஊரிலேயே இருக்க மாட்டாள். இது முகஸ்துதி போன்று தோன்றலாம். ஆனால் நான் அவளை புகழ்வதற்காக முயற்சி செய்யவில்லை. அழகு என்று பேசும்போது அவளிடம் இருக்கும் நற்குணங்களுடன் கூடிய உண்மை அளவில்லாத அழகு. அப்படியானால் மற்ற எல்லாரையும்விட அவள் மிக மிக அழகு.
அந்தக் கதவைத் தாண்டி அவள் வெளியே சென்ற அந்த நொடியிலிருந்து இன்று வரை நான் அவளைப் பார்க்கவில்லை. கிடையாது. என் வாழ்வில் இன்று வரை பார்க்கவில்லை. ஆனால் பல கோடி முறைகளாவது நான் அவளைப் பற்றி நினைத்துப் பார்த்ததுண்டு. எனக்காகப் பிரார்த்திக்கிறேன் என்று கூறிய அவளை நான் கணக்கிலடங்காத அளவு ஞாபகப்படுத்திப் பார்த்திருக்கிறேன். என்றாவது நான் அவளுக்காக பிரார்த்தனை செய்ய வேண்டி வருமானால், என் உயிரைக் கொடுத்தாவது நிச்சயம் அதை நான் செய்ய முயற்சிப்பேன்.
நல்லது. மேரிஜேன் பின்பக்கக் கதவு வழியாக வெளியே சென்றதை யாரும் காணவில்லை என்று நான் யூகித்தேன். அவள் சென்றதை யாரும் பார்க்காததால், சூசனையும், உதடு பிளவுற்ற பெண்ணையும் நான் பார்த்தபோது, இவ்வாறு கூறினேன்:
"நீங்கள் எல்லாரும் அவ்வப்போது செல்வீர்களே ஒரு வீடு, அதுதான் நதியின் அந்தக் கரையில் வசிக்கிறார்களே, யார் அவர்கள்?"
"நிறையப் பேர் உள்ளார்கள். முக்கியமாக ப்ரோக்டர்ஸ் குடும்பம்." அவர்கள் கூறினார்கள்.
"ஆஹ்! அதுதான்." நான் சொன்னேன் "அந்தப் பெயரை நான் மறந்து விட்டேன். நல்லது. அந்தக் குடும்பத்தில் யாரோ ஒருவர் உடல் நலமின்றி இருப்பதால் அவர்களைப் பார்க்க மேரிஜேன் விரைந்து சென்றுவிட்டார் என்று உங்களிடம் கூறச் சொன்னார்."
"யார் அது?"
"எனக்குத் தெரியவில்லை. நல்லது. பெயரை நான் மறந்திருக்கக் கூடும், ஆனால் நான் நினைக்கிறேன் அது ........."
"ஷேக்ஸ் நன்றாக இருக்கிறார். அது ஹான்னா அல்ல என்று நான் நம்புகிறேன்."
"நான் இப்படிச் சொல்வதற்கு மன்னிக்கவும்" நான் கூறினேன் "ஆனால் அது ஹான்னா தான்."
"அடப் பாவமே! அவள் போன வாரம் பார்க்கும் போது நன்றாகத்தானே இருந்தாள். உண்மையில் அவளுக்கு உடல்நலம் குன்றிவிட்டதா?"
"கெட்டது நியாய அநியாயம் பார்க்காது. நேற்று இரவு முழுதும் அவள் பக்கத்திலேயே இருந்தார்களாம். மேரிஜேன் சொன்னார்கள். இன்னும் சில மணி நேரம் மட்டுமே அவள் உயிர் பிழைப்பாள் என்று அவர்கள் கூறினார்களாம்."
"ஐயோ! நினைக்கவே கொடுமையாக உள்ளதே. என்ன நோய் அவளுக்கு?"
டக்கென்று என் மண்டையில் எந்த வியாதியின் பெயரும் தோன்றவில்லை. எனவே "பொன்னுக்கு வீங்கி" என்று கூறினேன்.
"பொன்னுக்கு வீங்கி, ஐயோ கொடுமையே! ஆனால் இந்த நோய் வந்தவர்களுடன் இரவு முழுதும் கண் விழித்து யாருமே அமர்ந்திருக்க மாட்டார்கள்."
"ஓ! அப்படி இருக்க மாட்டார்களா? ஆனால் இந்த பொன்னுக்கு வீங்கி கொஞ்சம் மோசம் என்று அடித்துச் சொல்கிறேன். இது ரொம்ப வித்தியாசமாக இருக்கிறது போலும். இது ஒரு புது வகை என்று மேரி ஜேன் சொன்னார்கள்."
"அது எப்படியாம்?
"ஏனெனில் இது மேலும் பல மற்ற வியாதிகளுடன் இணைந்துள்ளது."
"மற்றது என்ன?"
"நல்லது. கக்குவான் இருமல், தட்டம்மை, அக்கி, ஆஸ்துமா, மஞ்சள் காமாலை, மூளைக் காய்ச்சல் இன்னும் எனக்குத் தெரியாத என்னென்னவோ கலந்துள்ளது."
"அடேங்கப்பா! இதை பொன்னுக்கு வீங்கி என்று அழைக்கிறார்களா?"
"அப்படிதான் மேரி ஜேன் சொன்னார்கள்."
"நல்லது. ஏன் இந்த வியாதியை பொன்னுக்கு வீங்கி என்று அவர்கள் அழைக்கிறார்கள்?"
"நல்லது. ஏனென்றால் அது பொன்னுக்கு வீங்கியாக இருப்பதால்தான். அப்படிதான் அது தொடங்கியதாம்."
"இது என்ன மடத்தனமாக இருக்கிறது. ஒரு மனிதன் தாடையில் பலத்த அடி வாங்கலாம், விஷம் குடிக்கலாம், கிணற்றில் விழுந்து விடலாம். தன் கழுத்தை நெரித்துக் கொள்ளலாம், மண்டையில் இருக்கும் மூளை வெளியே வந்து விழும் அளவு அதை இரண்டாகப் பிளக்கலாம். இப்படி ஏதேனும் நடந்தால், அது அவசரமான விசயம். அதை விடுத்து, யாரேனும் வந்து எது அந்த மனிதரைக் கொன்றது என்று கேட்டால், ஒரு அடிமுட்டாள் போல "ஏன், அவன் குதிகால் உடைந்தது." என்று சொல்வது போன்று அல்லவா நீ சொல்வது இருக்கிறது. ஏதேனும் இதில் அர்த்தம் இருக்கிறதா என்ன? இல்லை. எந்த ஒரு சரியான அர்த்தமும் இதில் இல்லவே இல்லை. அது என்ன தொற்று நோயா?"
"தொற்று நோயா? ஏன் இப்படிப் பேசுகிறாய்? முள் கம்பிகளால் ஆன மண்வெட்டி இருட்டில் தொற்றுநோயாகிவிடுமா? ஒரு முள்கம்பி தப்பினால் இன்னொன்றில் நீ காலைக் கிழித்துக் கொள்வாயல்லவா? அப்படி ஒரு முள்ளால் உன் காலில் காயம் ஏற்பட்டால் கூட, அந்த முழு மண்வெட்டியையும் பிடுங்கி எறியாமல் நீ நடந்து போக முடியாது, அல்லவா? நல்லது. பொன்னுக்கு வீங்கியும் இந்த முள்கம்பியுடன் கூடிய மண்வெட்டி மாதிரிதான். என்ன கொஞ்சம் பலமிழந்த மண்வெட்டி என்று கூறலாம். உனக்கு உடல் வலிமை குறைவு என்றால் அது உனக்கும் வரும். அவ்வளவுதான்."
"ஐயோ! இது கொஞ்சம் கொடுமைதான்" உதடு பிளவுற்றவள் சொன்னாள் "நான் சென்று சித்தப்பா ஹார்வியிடம் அப்புறம் ......"
"ஓ! கண்டிப்பாக" நான் கூறினேன் "இதைத்தான் நானும் செய்திருப்பேன். கண்டிப்பாகச் செய்திருப்பேன். ஓடு. நேரத்தை வீணடிக்காதே."
"ஏன், நீ சென்று கூற மாட்டாயா?"
"ஒரு நிமிடம் யோசித்துப் பார். உனக்கே புரியும். உங்கள் சித்தப்பாக்கள் வெகு சீக்கிரம் இங்கிலாந்து சென்று சேரவேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கவில்லையா? அவர்களைப் பின்தொடந்து சிறிது காலம் கழித்து தனித்து நீங்கள் அனைவரும் புறப்பட்டு வர உங்களை அனுமதித்து விட்டு, முன்பே புறப்பட்டுச் செல்ல அவர்கள் என்ன அவ்வளவு மோசமானவர்களா? உங்களுக்காக கண்டிப்பாக அவர்கள் காத்திருப்பார்கள். இதுவரை எல்லாம் நன்றாகவே நடந்தது. உங்கள் சித்தப்பா ஹார்வி ஒரு மதபோதகர். இல்லையா?”
“நல்லது. அப்படியானால், ஒரு நீராவிப் படகின் குமாஸ்தாவிடம் அவர் பொய் சொல்ல வேண்டுமா? அவர் சென்று ஒரு படகின் குமாஸ்தாவிடம், மிஸ் மேரிஜேன் கப்பலில் பயணம் செய்வதற்காக பொய் சொல்லுவாரா? உனக்கே தெரியும் அவர் அப்படிச் செய்ய மாட்டார் என்று. எனவே அதற்கு பதிலாக அவர் என்ன செய்வார்?. ஏன், "மிகவும் பரிதாபமான விஷயம். ஆனாலும் நான் இல்லாமல் அவர்கள் தேவாலயம் செல்ல வேண்டி இருக்கும். ஏனெனில் கொடுமையான, ஒருவருக்கு வந்தால் அனைவருக்கும் பரவக்கூடிய பொன்னுக்கு வீங்கி நோயுள்ளவர்களிடம் எனது அண்ணன் மகள் நெருங்கிப் பழகி வந்துள்ளாள். எனவே நான் இங்கேயே மூன்று மாதம் சும்மா உட்காந்திருக்க வேண்டியது என் தலையாய கடமை. மூன்று மாதத்திற்குப் பிறகுதான் அவளுக்கு அது பீடித்திருக்கிறதா இல்லையா என்று தெரிய வரும்." இவ்வாறு கூறுவார் ஆனால் நீ அது பற்றிக் கவலைப் படாதே. உனக்கு உனது சித்தப்பா ஹார்வியிடம் சொல்வது நல்லது என்று தோன்றினால் ............."
"ஷ் ஷ் ஷ்! மேரிஜேனுக்கு பொன்னுக்கு வீங்கி வந்துள்ளதா என்று பார்க்க இங்கே மூன்று மாதம் தங்கி, இங்கிலாந்தில் வாழப்போகும் களிப்பு நிறைந்த வாழ்க்கையை இழப்பதா? முட்டாள் மாதிரி நீ பேசுகிறாய்."
"நல்லது. எப்படி இருந்தாலும், உங்கள் பக்கத்து வீட்டுக்காரர்கள் யாரிடமாவது இதைக் கூறத்தான் போகிறீர்கள்."
"பக்கத்து வீட்டுக்காரர்களிடம் சொல்வதா? நன்றாகக் கூறினாய். நான் பார்த்ததிலேயே உலகத்திலேயே கடைந்தெடுத்த மடையன் நீ மட்டும் தான். அவர்கள் போய் மற்றவர்களிடம் சொல்ல மாட்டார்கள் என்று உனக்குத் தெரியாதா? நீ செய்ய வேண்டியதெல்லாம் நீ யாரிடமும் சென்று கூறாமல் இருப்பதுதான்."
"நல்லது. நீ சொல்வது சரியாக இருக்கலாம். ஆம். நீ சொல்வது சரிதான் என்று நான் நினைக்கிறேன்."
"நல்லது. நமது சித்தப்பா ஹார்வியிடம் இங்கே கொஞ்சம் காத்து வாங்க மேரிஜேன் வெளியே போயிருக்கிறாள் என்று சொல்வதுதான் உத்தமம் என்று நான் நினைக்கிறேன். அப்படிச் சொன்னால் அவள் எங்கே என்று அவர்கள் கவலைப் பட மாட்டார்கள்."
"ஆம். இதுதான் மேரி ஜேன் உங்களின் சித்தப்பாவிடம் உங்களைக் கூறச் சொன்னார்கள். அத்துடன் உங்கள் சித்தப்பா ஹார்விக்கும் மற்றும் வில்லியம்முக்கும் அவளது அன்பையும், அவள் சார்பாக அவளது அன்பு முத்தங்களையும் அவர்களுக்குக் கொடுக்க உங்களிடம் கூறச் சொன்னார்கள். மேலும் அவர்கள் பார்க்கப் போவதாகச் சொல்லச் சொன்னது நதியின் அக்கரையில் உள்ள மிஸ்டர் .... மிஸ்டர் ..... அவர் பெயர் என்ன? உங்கள் பெரியப்பா பீட்டர் அடிக்கடி நினைவு கொள்ளும் அந்த பணக்காரக் குடும்பம்? நான் யாரைக் குறிப்பிடுகிறேன் என்றால் அந்த ..........."
"என்ன, நீ குறிப்பிடுவது அந்த ஆப்தார்ப்ஸ் தானே?"
"ஆமாம். பாழாய்ப்போன இந்தப் பெயர்கள் வாயிலேயே நுழைவதில்லை. பாதிநேரம் என் போன்ற பயல்களுக்கு மறந்து தொலைக்கிறது. ஆம். அந்த ஆப்தார்ப்ஸ் வீட்டுக்கு ஓடிச் சென்று ஏலத்தில் இந்த வீட்டை வாங்கச் சொல்லப் போவதாக சென்றிருக்கிறாள் என்று உங்கள் சித்தப்பாக்களிடம் கூறும்படி மேரி ஜேன் சொல்லியுள்ளார்கள். வேறு யாரும் இந்த வீட்டை வாங்குவதை விட, அவள் பெரியப்பா பீட்டரின் வீட்டை அவர்கள் வாங்குவது நல்லது என்று மிஸ். மேரி கருதுகிறார்கள். அத்துடன் அவர்களைக் கட்டாயப்படுத்தி இங்கே அவர்கள் வரும்வரை அவர்களுடன் இருக்கப் போவதாகக் கூறியுள்ளார்கள். மிஸ். மேரிக்கு களைப்பாக இல்லாது இருந்தால், இன்றே வீட்டுக்கு வந்து விடுவார்களாம். இல்லையெனில் நாளைக் காலை வருவார்களாம். இந்த ப்ராக்டர்ஸ் பற்றி எதுவும் நீங்கள் கூற வேண்டாம் என்று அவர்கள் கூறினார்கள். ஆப்தார்ப்ஸ் பற்றி மட்டுமே பேசுங்கள். அதுவும் ஒருவகையில் உண்மைதான். ஏனெனில், அவர்களிடம் வீடு விஷயமாகப் பேசப் போவதாக சொல்லிக் கொண்டிருந்தார்கள். என்னிடம் இது பற்றி அவர்கள் பேசிக் கொண்டிருந்ததால், இது எனக்கு நன்றாகத் தெரியும்."
"நல்லது" அவர்கள் சொன்னார்கள். பின்னர் அங்கிருந்து நகர்ந்து இந்தத் தகவலையும், அன்பு முத்தங்களையும் அவர்களின் சித்தப்பாக்களுக்குத் கொடுப்பதற்காக அங்கே காத்துக் கொண்டிருந்தார்கள்.
எல்லாமே இப்போது சரியாகி விட்டது. இந்தப் பெண்கள் இங்கிலாந்து போகும் குஷியில் இருப்பதால், யாரிடமும் எதுவும் கூற மாட்டார்கள். இங்கே டாக்டர் ராபின்சன் வந்து கெடுப்பதற்குள், ஏலத்தை முடிக்க மேரிஜேன் தயார் செய்துகொண்டிருக்கிறாள் என்று ராஜாவும், பிரபுவும் நம்புவார்கள். நான் மிகவும் நிம்மதியாக உணர்ந்தேன். மிகவும் நல்ல காரியம் செய்த திருப்தி எனக்கு. உண்மையில் டாம் சாயர் கூட இப்படி ஒரு நல்ல காரியம் செய்திருக்க மாட்டான் என்று நான் யோசித்துப் பெருமையடைந்தேன். அவன் அவனுடைய நாகரிக பாணியில் வேறு மாதிரிகூட செய்திருப்பானோ என்னவோ! ஆனால் அவன் மாதிரி ஸ்டைல் எனக்கு வராது. அவ்வாறு ஒரு ஸ்டைல் பின்னணியில் நான் வளர்க்கப்படவில்லை.
நல்லது. அன்று மதியம் அந்த ஊரின் சதுக்கத்தில் வெகுநேரம் வரை அவர்கள் ஏலத்தை நடத்தினார்கள். ராஜா அங்கே வெகு கம்பீரமாய் ஏலம் அறிவிப்பவர் பக்கத்தில் நின்று கொண்டு அவ்வப்போது வேத நூல்களிலிருந்து எடுத்த வசனங்களையும், அர்த்தம் புரியாத சில தத்துவங்களையும் அள்ளி வீசிக் கொண்டிருந்தார். அந்த சதுக்கம் மொத்தமும் கூ கூ எனக் கூவிக்கொண்டு, பொருள் வாங்க வந்திருக்கும் பணக்காரர்களிடம் வேண்டிய அளவு அனுதாபத்தைப் பெற்றுக் கொண்டு பிரபு வலம் வந்து கொண்டிருந்தார்.
இறுதியாக, ஏலம் முடிவுற்று, கல்லறைக்கான ஒரு இடம் தவிர அனைத்து பொருட்களும், ஒரு பொருள் கூட மிச்சம் இல்லாது, அனைத்தும் ஏலத்தில் விடப்பட்டுவிட்டன. எனவே எல்லாமே விற்று முடியும்வரை ஏலத்தை இழுத்துக்கொண்டே சென்றார்கள். இந்த ராஜா மாதிரி ஒரு பேராசைக்காரனை நான் எங்குமே கண்டதில்லை. அவர்கள் ஏலத்தை முடித்து கடையைக் கட்டிக் கொண்டிருக்கும் வேளை, அங்கே ஒரு நீராவிப் படகு கரை வந்து சேர்ந்தது. அடுத்த இரண்டு நிமிடங்களுக்குள், ஒரு கூட்டம் ஊளையிட்டுக் கொண்டும், கூச்சலிட்டுக் கொண்டும் எங்களை நோக்கி ஓட்டமும், நடையுமாக வந்து கொண்டிருந்தது.
பின்வருமாறு அவர்கள் கூவினார்கள்:
"இதோ உங்களுக்கு ஒரு போட்டியாளர்கள். இப்போது பீட்டர் வில்க்ஸ்ஸின் சொத்துக்கு வாரிசாக இரண்டு ஜோடிகள் நம்மிடம் உள்ளனர். பணத்தை அப்படியே கீழே போடுங்கள். யார் உண்மையான வாரிசுகள் என்று முதலில் முடிவு கூறுங்கள்!"
[தொடரும்]
- முனைவர் ர. தாரணி M.A., M.Phil., M.Ed., PGDCA., Ph.D. தமிழ்நாட்டில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தேவாரப்பாடல் பெற்ற சிவஸ்தலமான, திருப்புக்கொளியூர் என்று முன்பு திருநாமம் பெற்ற அவிநாசி என்ற ஊரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத்துறையின் தலைவராக பணியாற்றி வருகிறார். ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றது கல்வித்துறையில் அவர் தேர்வு செய்த விஷயம் என்றாலும் அவரின் பேரார்வம் மொழிபெயர்ப்பின் மீதும்தான். -
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.