அடுத்து வெகு சீக்கிரமே வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் நீரின் விசையை தடுத்து நிறுத்தும் ஏதோ தடை நீரின் உள்ளே மறைந்துள்ளது என்ற அர்த்தம் கொள்ளும் வகையில், நதியின் மீது நீண்ட கோடு ஒன்றை நீங்கள் காண முடியும். அதனுடன் நதியின் மீது மூடிய பனிமூட்டம் அப்படியே சுருண்டு நதியை விட்டு மேல் நோக்கிச் செல்வதையும் காணலாம். கிழக்கு வானின் சிவப்பு இன்னும் அதிகமாகி, நதியின் மீது ஒளி வெள்ளத்தைப் பாய்ச்சி அதன் மூலம் நதியின் அடுத்த கரையில் உள்ள மரங்களின் விளிம்பில் இருக்கும் மரவீடுகளைக் கூட நமக்குக் காண்பித்துக் கொடுக்கும். அவைகள் மர அறுவை மற்றும் விற்பனை நிலையங்களாக இருக்கக்கூடும்.
அப்போது ஒரு மெல்லிய பூங்காற்று பிறந்து வந்து உங்களைத் தழுவ முயற்சிக்கும். சுற்றிலும் மரங்களும், மலர்களும் நிறைந்து காணப்படுவதால், நறுமணம் கலந்து குளிர்ச்சியூட்டும் புத்தம்புதிய பூங்காற்றாய் அது இருக்கும். நன்று. சில சமயங்களில் யாரேனும் இறந்த மீன்கள், செதில் அதிகமாக உள்ள மீன்கள் போன்றவற்றை அங்கே போட்டு வைத்திருந்தால், காற்று நறுமணத்துடன் இருக்க வாய்ப்பே இல்லை. குடலைக் குமட்டிக் கொண்டு வரக் கூடிய கெட்ட வாடைதான் வீசும். நல்லது. சூரிய உதயத்திற்குப் பின் ஒரு முழு நாள் உங்கள் முன் நிற்கும். சூரியனின் ஒளியில் நீங்கள் புன்னகை பூக்கலாம். பாடும் புள்ளினமும் அவர்களின் தொழிலைத் தொடங்குவார்கள்.
இந்தத் தருணத்தில் யாரும் எங்களின் சிறிய புகையைப் பொருட்படுத்தப் போவதில்லை. எனவே மீன்வலையிலிருந்து மீன்களை எடுத்துச் சமைத்து சூடான காலை உணவு உண்ணுவோம். பின்னர், தனித்து ஓடும் நதியை பார்த்தவண்ணம், சோம்பலுடன் மெதுவாகத் தூங்கலாடுவோம். இறுதியாக எங்களை அப்படி எழுப்பியது எது என்ற புரியாமல் கண்களைத் திறந்து சுற்றிலும் பார்ப்போம். அங்கே ஏப்பம் விடுவது போன்ற சத்தத்துடன் தூரத்தில் நதியின் இன்னொரு பகுதியில் சென்றுகொண்டிருக்கும் நீராவிப் படகைக் காண்போம். அது வெகு தூரத்தில் செல்வதால் அதன் துடுப்புச் சக்கரங்கள் பின்பக்கம் இருக்கிறதா அல்லது பக்கவாட்டில் உள்ளதா என்று கவனித்து நீங்கள் கூறவே முடியாது. பிறகு அடுத்த ஒரு மணி நேரம் அல்லது அதற்கும் மேலான நேரத்திற்கு தனிமையில் ஓடும் நதியைத் தவிர வேறு எதுவும் இருக்காது. சில தருணங்களில், தூரத்தே ஒரு தோணி மிதந்து கொண்டே செல்வதைக் காணலாம். அதில் மரம் வெட்டிக் கொண்டே செல்லும் நாகரீகமற்ற மனிதர்களைக் காணலாம். மரம் வெட்டத்தான் அவர்கள் அவ்வாறு தோணியில் செல்வார்கள்.
சூரிய ஒளியில் கோடாரி பளபளப்பதை அந்த தோணிகள் வருகையில் நீங்கள் காணலாம். சத்தம் எதுவும் கேட்காது. மரக்கட்டையில் கோடாரியை வெட்டிவிட்டு மீண்டும் அந்தக் கோடாரியை தலைக்கு மேலே அவன் உயர்த்தும் போதுதான் - சன்க் - என்ற சப்தம் மெல்லியதாய் கேட்கும். நீரின் மீது அந்த ஒலி பயணமாகி வர சிறிது நேரம் பிடிக்கும் அல்லவா!
இவ்வாறாக, மெத்தனமாக, ஒவ்வொரு ஒலியையும் கவனித்துக் கொண்டு எங்கள் நாட்களைக் கழிப்போம். ஒருமுறை கடுமையான பனி மூட்டம் இருந்ததால் தோணிகளிலும், படகுகளிலும் பயணம் செய்தவர்கள் நீராவிப் படகு அவர்கள் மீது ஏற்றிவிடக் கூடாது என்பதற்காக தகர டின்களை தட்டி ஒலி எழுப்பிக் கொண்டே சென்றார்கள். இன்னொரு முறை ஏதோ கட்டுமரமோ அல்லது தோணியோ நாங்கள் இருக்கும் இடத்தின் மிக அருகாமையில் மிதத்து வந்ததால், அதிலிருந்த மனிதர்கள் பேசிக் கொள்வதும், வசை பாடுவதும், சிரிப்பதும் என அனைத்தும் எங்களுக்குத் தெளிவாகக் கேட்டது. அவர்களின் பேச்சு பளிச்சென்று கேட்டதே தவிர அவர்களைக் காண எங்களால் முடியவில்லை. திகிலடைந்து புல்லரிக்க வைக்கக் கூடிய பேய்கள் கடந்து செல்வது போல அது எங்களுக்குத் தோன்றியது. அவைகள் பேய்கள்தான் என்று தான் நினைப்பதாக ஜிம் கூறினான். ஆனால் "இல்லை. பேய்கள் :நாசமாய் போகிற பனிமூட்டம்" என்று கூறாது" என்று நான் சொன்னேன்.
இரவு தொடங்கியதும் நாங்கள் துடுப்பு வலிக்க ஆரம்பித்து விடுவோம். நதியின் மத்திக்கு தோணியைச் செலுத்திச் சென்றவுடன், அங்கிருந்து நதியின் விசை எந்தத்திசையில் செல்கிறதோ அதன் வழியிலேயே துடுப்பு வலிப்பதை நிறுத்திவிட்டு நாங்களும் மிதக்க ஆரம்பித்து விடுவோம். பின் எங்களின் கால்களை நதி நீரில் தொங்க விட்டுக்கொண்டு புகைப்பிடித்துக் கொண்டே எல்லா விஷயங்களைப் பற்றியும் பேசுவோம். இரவும் பகலும், எப்போதெல்லாம் கொசுக்கள் எங்களை விட்டு வைக்கிறதோ அப்போதெல்லாம் நாங்கள் ஆடை அணியாது இருந்தோம். பக் குடும்பத்தார் எனக்காக தைத்த ஆடைகள் மிகவும் அருமையாக உயர்ரகமாக இருந்ததால் எனக்கு அது வசதிப்படவில்லை. அத்தோடு உடைகள் என்பதே எனக்குப் பிடிக்கவில்லை.
சில சமயங்களில் நதி முழுதுமே எங்களுக்கு மட்டுமே நீண்ட நேரம் சொந்தமாக இருக்கும். நதியின் கரைகளும், தீவுகளும் கண்ணுக்கெட்டாத தொலைவில் இருக்கும். சில நாட்களில் தூரத்தில் எங்கோ அறையின் உள்ளே எரியும் மெழுகுவர்த்தியின் சிறு துளியான ஒளி அதன் சன்னல் வழியாகத் தெரிவதை நீங்கள் காண முடியும். அல்லது ஏதேனும் கட்டுமரம் அல்லது தோணி கடந்து செல்கையில் ஒன்று அல்லது இரண்டு தீப்பொறிகளாய் ஒளிச் சிதறல் நதிநீரின் மேல் வீழும்.
அவ்வப்போது மற்ற படகிலிருந்து பிடில் இசைக்கருவி வாசிக்கும் ஓசையோ அல்லது பாடல்களோ காற்றில் மிதந்து நீரைக் கடந்து வந்து எங்கள் காதுகளில் விழும். பின்னர் வீண்மீன்கள் பதிக்கப்பட்டு ஜொலிக்கும் அந்த வானம் கண்களில் தெரியும். அந்த விண்மீன்கள் உண்மையில் கடவுளால் படைக்கப்பட்டதா, இல்லை தானாக அவைகளே உருவாகிவிட்டனவா என்று மல்லாந்து படுத்துக் கொண்டு வானத்தைப் பார்த்தபடி நாங்கள் இருவரும் விவாதித்துக் கொள்வோம். அவைகள் படைக்கப்பட்டவை என்று ஜிம் விவாதிப்பான். நானோ அவைகள் தானாகவே வந்தவை என்பேன். அத்தனை விண்மீன் படைத்து முடிக்க நீண்ட காலம் தேவைப்பட்டிருக்கும் என்று கூறுவேன். முட்டைகள் நிறைய கோழி போடுவது போல வானமும் விண்மீன் முட்டைகளை கணக்கிலடங்காமல் போட்டிருக்கும் என்று ஜிம் கூறுவான்.
ஜிம்மின் அந்தப் பதில் நியாயமாக எனக்குத் தோன்றியதால் மேற்கொண்டு இது பற்றி நான் விவாதிக்கவில்லை. தவளை கணக்கிலடங்கா முட்டைகள் போடுவதை நான் கண்டிருக்கிறேன். எனவே அந்த மாதிரி நடக்க வாய்ப்புள்ளது என்று ஏற்றுக் கொண்டேன். ஒரு நீண்ட கோடாக வானிலிருந்து கீழ் நோக்கி வீழும் நட்சத்திரங்களையும் நாங்கள் பார்ப்பதுண்டு. வீழும் நட்சத்திரங்கள் கெட்டுப் போன முட்டைகள் என்றும் அதனால்தான் கூட்டிலிருந்து அவை தூக்கி வீசப்படுகின்றன என்றும் ஜிம் கூறுவதுண்டு. இப்படி பலதரப்பட்ட விஷயங்களையும் பேசிக் கொண்டு தோணியின் மீது வசிப்பது சுகமான ஒரு வாழ்க்கைதான்.
ஒரு சில சமயங்களில் இரவு வேளைகளில், நீராவிப்படகு இருளைக் கிழித்துக் கொண்டு பறந்து செல்வதை நாங்கள் காண்பது உண்டு. அவ்வாறு செல்கையில் ஏப்பம் விடுவது போல அந்தப் படகு சத்தமிட்டு புகைபோக்கி வழியே உமிழும் தீப்பொறிகள் நதியில் விழுந்து பார்க்க வர்ணஜாலமாக இருக்கும். பின்னர் அந்தப் படகு ஒரு வளைவில் திரும்பிய பின் அதிலிருந்த வெளிச்சமும், துடுப்புச் சக்கரத்தின் ஓசையும் மறைந்துவிட, நதி மீண்டும் அமைதியாக மாறிவிடும். அது கடந்து வெகு நேரத்திற்குப் பின்னும் அது ஏற்படுத்திய அதிர்வலைகள் எங்களின் தோணியை வந்தடைந்து தாலாட்டுவது போல சிறிது அசைக்கும். அது சென்ற பிறகு நெடு நேரத்திற்கு தவளை கத்துவதைத் தவிர வேறு ஒன்றும் நீங்கள் கேட்க முடியாது.
கரையில் இருக்கும் மனிதர்கள் இரவு வெகு நேரம் கழித்தே உறங்கச் செல்வார்கள். அச்சமயம் விளக்குகள் முழுதுமாக அணைக்கப் படுமாதலால், வீட்டின் அனைத்து அறைகளின் சன்னல்களிலும் தீப்பொறி ஒளி காணாது கரைகள் முழுதும் இரண்டு அல்லது மூன்று மணிநேரம் கருத்த நிறத்துடன் இருளடைந்திருக்கும். அந்த தீப்பொறி ஒளிகள்தான் எங்களுக்கு கடிகாரம் - இருள் முடிந்து முதல் ஒளி கரையில் நாங்கள் காணும்போது காலை வரப்போகிறது என்று உணர்ந்து கொள்வோம். பிறகு மறைந்து கொள்ளவும், தோணியை மறைத்து வைக்கவும் கரையில் நல்ல இடத்தை தேடித் செல்வோம்.
ஒருநாள் அதிகாலை ஒரு படகை நான் கண்டேன். நதியிலிருந்து கிட்டத்தட்ட இருநூறு அடிகள் மட்டுமே தள்ளியிருந்த கரைக்குச் செல்லும் சறுக்கலான சிறு பகுதியை நான் கடந்து சென்றேன். அந்தக் கழிமுகத்தில் ஒரு மைல் தூரம் துடுப்பு வலித்து அங்குள்ள சைப்ரஸ் மரக்காடுகளுக்குள் ஏதேனும் பெர்ரி பழங்கள் கிடைக்கிறதா என்று பார்த்துக் கொண்டே சென்று கொண்டிருந்தேன். நதிநீர் மட்டுப்பட்டு மாடுகள் நதியைக் கடக்கக்கூடிய சிறிய வழித்தடத்தை நான் கடக்கும் வேளையில் சில மனிதர்கள் வெகு வேகமாக அவ்வழியில் எங்களை நோக்கி ஓடி வருவதைக் கண்டேன். ஒரு நிமிடம் என் இதயம் துடிப்பதை நிறுத்தி நான் இறந்து விட்டேன் என்று நினைக்கும் அளவு பயந்துவிட்டேன். இவ்வாறு மனிதர்கள் எங்களை நோக்கி வந்தால், அவர்கள் ஒன்று என்னைப் பிடிக்க அல்லது ஜிம்மைப் பிடித்துப் போக வருகிறார்கள் என்ற அனுமானம் எங்களையும் அறியாமல் எங்கள் மனதில் தோன்றிவிடும்.
எனவே புயல் வேகத்துடன் துடுப்பை வலித்து அங்கிருந்து அகன்றுவிட முயன்றேன். ஆனால் அவர்கள் எங்களுக்கு மிக அருகில் வந்து விட்டார்கள். பின் அவர்கள் என்னை அழைத்து அவர்களின் வாழ்வைக் காப்பாற்றிக் கொடுக்குமாறு கெஞ்சினார்கள். அவர்கள் தவறு ஏதும் செய்யவில்லையென்றும், ஆனாலும் சில மனிதர்கள் மற்றும் நாய்களால் அவர்கள் துரத்தப் படுகிறார்கள் என்றும் கூறினார்கள். எங்கள் தோணிக்குள் அவர்கள் வர முயன்றார்கள் . ஆனால் நான் சொன்னேன்:
"இல்லை. நீங்கள் வராதீர்கள். எனக்கு நாய் சத்தம் அல்லது குதிரைகள் குளம்புச் சத்தம் எதுவும் கேட்கவில்லை. அந்தப் புதர்களுக்குள் நுழைந்து அந்த கழிமுகத்தில் சிறிது உள்ளே செல்ல உங்களுக்கு நேரம் இருக்கிறது. பிறகு அங்கிருந்து ஆழம் குறைந்த அந்த நீரில் நடந்து என்னை நோக்கி வந்து தோணிக்குள்ளே ஏறுங்கள். நீருக்குள் நீங்கள் நடந்து வருவதால் நாய்களுக்கு உங்களின் வாசத்தை மோப்பம் பிடிக்க இயலாது."
நான் கூறியது போலவே அவர்கள் நடந்து வந்து தோணிக்குள் ஏறியதுமே மணல் திட்டுகளை நோக்கித் தோணியை ஒரு கிறுக்கன் போன்று கண்மண் தெரியாது செலுத்த ஆரம்பித்தேன். ஒரு ஐந்து அல்லது பத்து நிமிடத்திற்குப் பின் நாய்கள் குலைப்பதையும், அந்தக் கழிமுகத்தை நோக்கி மனிதர்கள் கத்திக் கொண்டே ஓடி வருவதையும் தூரத்திலிருந்து நாங்கள் கேட்டோம். ஆயினும் அவர்களைக் காண முடியவில்லை. அவர்களும் ஒன்றுமே புரியாமல் குழம்பிப் போய் அங்கேயே நின்று விட்டது போல் தோன்றியது. இன்னும் சிறிது தூரம் வேகமாக நாங்கள் சென்றவுடன் அந்தச் சத்தம் முற்றிலுமாக எங்களுக்குக் கேட்காமல் மறைந்தது. ஒரு மைல் தொலைவில் இருந்த அகன்ற நதியை நோக்கி நாங்கள் சென்று சேர்ந்த சமயம், அனைத்துமே அமைதியாக இருந்தது. அங்கிருந்த மணல் திட்டுகளுக்குள் எங்கள் தோணியைச் செலுத்திச் சென்று அதை அங்கிருந்த பஞ்சுப் பொதி மரங்களுக்கிடையே மறைத்து வைத்தோம்.
அந்த மனிதர்களில் ஒருவர் எழுபது வயது மதிக்கத்தக்கவராக இருப்பார். இன்னும் கொஞ்சம் அதிகமான வயது கூட இருக்கலாம். வழுக்கைத் தலையுடனும், நரைத்த மீசையுடனும் இருந்தார். மிகவும் பழையதான, தொய்ந்து போன ஒரு தொப்பி, வழவழப்பான நீல நிற உல்லன் சட்டை, காலில் உள்ள பூட்ஸின் மேல்பாகத்தில் திணிக்கப்பட்டவாறு இருந்த கிழிந்து கந்தலான நீல நிற ஜீன்ஸ் வீட்டில் தைக்கப்பட்ட பெல்ட் போன்ற ஒரு ஜோடி தோள்பட்டைகள் (ஆனால் அவரின் தோளில் ஒன்றுதான் இருந்தது) போன்றவை அணிந்து இருந்தார். பின்புறம் வால் போன்று காணப்படும் நீல நிறக் கோட்டில் உள்ள சன்னமான பித்தளை பட்டன்கள் பிய்ந்து அவரின் கரத்தின் மீது தொங்கிக் கொண்டிருந்தது. மிகப் பெரிய, பருத்த, அருவருப்பூட்டுகிற கெட்டியான கம்பளத்தினால் செய்யப்பட்டிருந்த தோள்பையை அவரும், அவருடன் இருந்தவரும் வைத்திருந்தார்கள்.
இன்னொரு மனிதர் முப்பது வயது உள்ளவராக தோன்றினார். அவரும் அந்த முதல் மனிதரைப் போலவே மிகவும் மோசமாக ஆடை உடுத்திருந்தார். நாங்கள் காலை உணவை முடித்துக் கொண்டு சோம்பலுடன் உணர்ந்து பின்னர் அமர்ந்து பேச முற்பட்டோம். அந்த இருவருக்கும் ஒருவரை ஒருவர் அறிமுகம் இல்லை என்பதுதான் அப்போது நாங்கள் புரிந்துகொண்ட முதல் விஷயம்.
"எதனால் உனக்குப் பிரச்னை ஏற்பட்டது" வழுக்கைத் தலையர் இன்னொருவனைப் பார்த்துக் கேட்டார்.
"நல்லது. நான் பற்களில் படிந்துள்ள கறைகளை நீக்க உதவும் ஒரு உபகரணம் விற்றுக் கொண்டிருந்தேன். அது கறையை மட்டுமல்லாது பற்களின் மேற்புறம் உள்ள எனாமலையும் சேர்த்து எடுத்து விடக்கூடியது. பொதுவாக அந்தப்பொருளை விற்றவுடன் நான் கிளம்பி விடுவேன். ஆனால் அங்கு நான் தங்க வேண்டிய நாளுக்கு அதிகமாக ஒரு இரவு கூடச்சேர்ந்து தங்கிவிட்டேன். எனவே அங்கிருந்து மெதுவாக நழுவி நகரை விட்டு வெளியே உள்ள பாதையில் ஓடி வரும் வேளையில் உன்னைச் சந்தித்தேன். அவர்கள் உன்னைத் துரத்துவதாகவும், அவர்களிடமிருந்து தப்பிக்க உதவ வேண்டும் என்றும் என்னைக் கெஞ்சிக் கேட்டாய். எனக்கும் சில பிரச்னைகள் வரும் என்று நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். எனவே நானும் உன்னுடன் ஓடி வருகிறேன் என்று கூறினேன். இதுதான் எனது முழுக்கதை. உனக்கு என்ன கதை?"
"நல்லது. குடிப்பழக்கத்தின் கொடுமைகளை எடுத்துரைத்து அதனை எதிர்க்கத் தூண்டும் கூட்டங்களை நான் அங்கே கடந்த ஒரு வாரமாக நடத்திக் கொண்டிருந்தேன். அந்த நகரில் இருந்த அனைத்துக் குடிகாரர்களுக்கும் நான் சிம்ம சொப்பனமாக விளங்கியதால், வயது வித்தியாசமில்லாமல், வயது முதிர்ந்த அல்லது இளம் பெண்கள் அனைவருக்கும் கண்ணின் மணி போல் நான் இருந்தேன். இந்தக் கூட்டத்தின் மூலம் ஒரு மனிதருக்கு பத்து சென்ட் வீதம், குழந்தைகளுக்கும் நீக்ரோக்களுக்கும் கட்டணம் இல்லை என்ற வகையில் ஒரு இரவுக்கு ஐந்து அல்லது ஆறு டாலர்கள்,நான் பெற்றுக் கொண்டிருந்தேன்.”
“என்னுடைய இந்தத் தொழில் அபாரமாக ஒவ்வொரு நாளும் வளர்ந்தது. ஆனால் நான் ரகசியமாக மது அருந்துகிறேன் என்ற வதந்தி நேற்றிரவு எப்படியோ காட்டுத் தீ போலப் பரவியது. இன்று அதிகாலையில் யாருக்கும் தெரியாமல் ஒரு நீக்ரோ என்னை எழுப்பி மக்கள் அவர்களின் நாய்களையும், குதிரைகளையும் எடுத்துக் கொண்டு இன்னும் அரைமணி நேரத்திற்குள் என்னைப் பிடிக்க வருகிறார்கள் என்ற செய்தி கூறினான். என்னை மட்டும் பிடித்துவிட்டால் நார் நாராக உரித்து உப்புக் கண்டம் போட்டு விடுவார்கள் என்றும் ஒரு இரும்பிக் கம்பி மேல் என்னை தாண்டுகால் போட்டு அமரச் செய்து அதைத் தோளில் தூக்கி ஊருக்குள் சுத்திவருவார்கள் என்பதும் கண்டிப்பாக நடக்கும் என்று புரிந்தது. அதன்பின் காலை உணவுக்குக் கூட நான் இருக்கவில்லை. எனக்கு பசிக்கவும் இல்லை."
"முதியவரே!" இளைய மனிதர் சொன்னார் "நாம் இருவரும் கைகோர்த்து ஒரு குழுவாக வேலை செய்யவேண்டும். என்ன நினைக்கிறாய்?"
"அதற்கு எதிராக நான் இருக்க மாட்டேன். உன்னுடைய தொழில் எந்தவகையைச் சார்ந்தது?"
"தொழில் ரீதியாக பயணம் செய்து அச்சடிப்பவன் நான். ஆனால் காப்புரிமை பெற்ற மருந்துகள் விற்பது, நாடகத்தில் நடிப்பது, அதிலும் சோகநாடகங்களில் நடிப்பது போன்றவையும் நான் செய்து வருகிறேன். அத்துடன் மனோவசியக் கலை மற்றும் தலையின் வடிவமைப்பை வைத்து குணாதிசயத்தைக் கணிப்பது போன்றவையும் எனக்கு அத்துப்படி. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பாடுவது பற்றியும் பூகோளம் பற்றியும் பள்ளிகளில் பாடம் எடுப்பேன். ஓ! எத்தனையோ விதமான விஷயங்களை, எதெல்லாம் தேவைப்படுமோ அதெல்லாம் நான் செய்வேன். தொழில் என்று அதை நான் சொல்லிக் கொள்வதில்லை. நீ எப்படி?"
“மருத்துவத் துறையில் நான் நிறைய வேலை செய்திருக்கிறேன். கான்சர், பக்கவாதம் மற்றும் அது போன்ற நோய்களைக் எனது கரங்களை நோயாளியின் மீது வைத்து குணப்படுத்தும் செயலில் நான் மிகச் சிறந்தவன். அதே போன்று எனக்கு ஒரு உதவியாளர் இருந்து ஒருவனைப் பற்றிய அனைத்து உண்மைகளையும் முதலில் தெரிந்து வந்து சொன்னால் நான் அந்த மனிதனின் எதிர்காலம் பற்றி நன்கு குறி சொல்வதில் தேர்ச்சி பெற்றவன். பிரசங்கம் செய்வதே என் தலையாய தொழில். அடிக்கடி கூட்டங்களில் கலந்து கொண்டு மதப்பிரசாரம் செய்வது வழக்கம்."
சிறிது நேரம் யாரும் எதுவும் பேசவில்லை. பிறகு பெருமூச்சு விட்டவாறே அந்த இளைய மனிதர் கூறினார் "ரொம்ப மோசம்."
"எது ரொம்ப மோசம்?" வினவினார் அந்த வழுக்கைத் தலையர்.
"இப்படி ஒரு வாழ்க்கை இதுவரை வாழ்ந்ததும், இப்போது இப்படி ஒரு குழுவில் என்னை இணைத்துக் கொண்டு என் தரத்தை நானே குறைத்துக் கொள்வதும்தான் மிகவும் மோசம்." கண்ணின் ஓரத்தில் எட்டிப் பார்த்த கண்ணீரை ஒரு கந்தலால் துடைத்துக் கொண்டே சொன்னார்.
"அடப் பாவமே! நாங்கள் என்ன தரங்குறைந்தவர்களா?" கொஞ்சம் சூடாகவும் எரிச்சலுடனும் அந்த வழுக்கைத் தலையர் கேட்டார்.
"ஆம். இது எனக்குத் தேவைதான். இதற்குத்தான் நான் அருகதையானவன். மிகவும் உயரத்தில் இருந்த என்னை யார் கீழ் தள்ளியது? நான். நானேதான். உங்களைக் குறை சொல்லவில்லை, அன்பர்களே! அதையும் தாண்டி, நான் யாரையும் குறை கூற விரும்பவில்லை. இத்தனை அவமானங்களுக்கும் நான் தகுதியானவன்தான். இந்தக் கொடுமையான, இரக்கமற்ற உலகம் இன்னும் எத்தனை மோசமான கஷ்டங்களை வேண்டுமானாலும் எனக்குக் கொடுக்கட்டும். எனக்கு ஒன்று மட்டும் நன்றாகத் தெரியும். எனக்காக ஒரு கல்லறை எங்கோ காத்துக்கொண்டிருக்கிறது.”
“இந்த உலகம் எப்போதும் செய்வது போலவே என்னிடமிருந்து என் அன்பிற்குரியவர்கள், என் சொத்து இன்னும் இருக்கும் அனைத்தையும் பறித்துக் கொள்ளட்டும். ஆனால் என்னுடைய கல்லறையை மட்டும் அது என்னிடமிருந்து எடுத்துக் கொள்ளவே முடியாது. ஒரு நாள் நான் அதில் அமைதியாக படுத்துறங்கி அனைத்தையும் மறந்து விடுவேன். உடைந்த எனது பாவப்பட்ட இருதயம் அங்கேயாவது நிம்மதியாக இருக்கட்டும்." கண்களைத் துடைத்துக் கொண்டே கூறினார்.
"போய் தொலையட்டும் உனது உடைந்த இருதயம்," அந்த வழுக்கைத்தலையர் சொன்னார் " ஏன் எங்களிடம் வந்து உன்னுடைய பாவப்பட்ட உடைந்த இருதயத்தைப் பற்றி அழுதுகொண்டிருக்கிறாய்? நாங்கள் உனக்கு எந்தக் கெடுதலும் செய்யவில்லையே."
"இல்லை. நீங்கள் செய்யவில்லை என்று எனக்குத் தெரியும். உங்களைக் குறை கூறவில்லை, கனவான்களே! எனக்கு நானே தீங்கிழைத்துக் கொண்டேன். ஆம். நானேதான் எனக்குக் கெடுதல் செய்தேன். அதனால் நான் அனுபவித்துத்தான் ஆகவேண்டும். அது மிகவும் சரியான விஷயம்தான். இனி அதுபற்றி நான் குறை கூறுவதாயில்லை."
"எதிலிருந்து நீ கீழ் வந்தாய்? எந்த இடத்திலிருந்து நீ கீழ் இறங்கினாய்?"
"ஆஹ்! நான் சொன்னால் நீங்கள் நம்பப் போவதில்லை. ஏன், மொத்த உலகமும் நம்பாது. அதை அப்படியே விட்டுவிடுங்கள். பரவாயில்லை. என் பிறப்பின் ரகசியம் ........."
"உன் பிறப்பின் ரகசியம்? நீ என்னிடம் சொல்ல வருவது ........."
"அன்பர்களே!" மிகுந்த மதிப்புடன் அந்த இளையவன் கூற ஆரம்பித்தான், "உங்களை நான் நம்பலாம் என்று என் இதயம் சொல்வதால், எனது பிறப்பின் ரகசியத்தை உங்களிடம் வெளிப்படுத்துகிறேன். பிறப்பினால் நான் உயர்குடியைச் சேர்ந்த பிரபு."
அதைக் கேட்டதும் ஜிம்மின் கண்கள் மண்டையோட்டிலிருந்து பிதுங்கி வெளிவந்துவிடும் போல இருந்தது. என்னுடைய கண்களும் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும் என நானும் நினைத்தேன். பின்னர் அந்த வழுக்கைத் தலையர் அதிர்ச்சியுடன் கூறினார், " இல்லை. உண்மையாகவா?"
"ஆம். என்னுடய கொள்ளுத் தாத்தா பிரிட்ஜ்வாட்டர் கோமானின் மூத்த புதல்வர். கடந்த நூற்றாண்டின் இறுதியில் சுதந்திரக் காற்றை சுவாசிக்க இந்த நாட்டை விட்டு வெளியேறிவிட்டார். அவர் இங்கே இருந்தபோது திருமணம் ஆகி அவருக்கு ஒரு மகன் இருந்தான். அந்த சமயத்தில் அவரின் அப்பாவும் இறந்து விட, அவரின் இரண்டாம் மகன் அனைத்துப் பட்டங்களையும் பதவிகளையும், நிலங்களையும் எடுத்துக் கொண்டு, இங்கே அமெரிக்காவில் பிறந்த உண்மையான வாரிசான அந்த சின்னக் குழந்தையை நிராகரித்து விட்டான். அந்த சிறு குழந்தையின் வழியில் வந்தவன்தான் நான். நான்தான் பிரிட்ஜ் வாட்டரின் உண்மையான வாரிசு. ஆனால், நானோ இங்கு அலங்கோலமாக, எனது உயர்குடியிலிருந்து தூக்கி எறியப்பட்டு, மற்ற மனிதர்களால் துரத்தப்பட்டு, இந்த குரூர உலகத்தால் வெறுக்கப் பட்டு, உடைந்த இருதயத்துடன், தரமற்ற குற்றவாளிகளுடன் தோணியில் இருக்கிறேன்.”
ஜிம் அவனுக்காக மிகுந்த அனுதாபம் கொண்டான். நானும் அப்படியே. அவனைத் தேற்ற நாங்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் அவன் சமாதானமாகவில்லை. நாங்கள் அவனை உண்மையான பிரபுவாக ஏற்றுக் கொண்டால் அதுவே அவனுக்கு சிறந்த மருந்து என்று கூறினான். நாங்களும் அதை எவ்வாறு செய்வது என்று அவன் கூறினால் அதன்படியே நடந்து அவனை ஏற்றுக் கொள்வதெனச் சம்மதித்தோம். நாங்கள் அவனிடம் பேசும்போதெல்லாம், மிகவும் பவ்யமாகத் தலைகுனிந்து, "கருணை மிக்கவரே, என் கடவுளே, இறைமை பொருந்திய தாங்கள் என்றெல்லாம் அழைக்கவேண்டும் என்று கூறினான். அவனது பட்டம் பிரிட்ஜ்வாட்டர் என்பதால் அவ்வாறு அழைத்தாலும் அவனுக்கு பிரச்னை இல்லை என்றான். ஒருவர் அவனுக்குப் பணி புரிந்து சேவகம் செய்து அவன் சாப்பிடும் போது அவனருகே இருந்து பரிமாற வேண்டும் என்றான்.
இது ஒன்றும் எங்களுக்குச் சிரமமான காரியம் இல்லையே. எனவே நாங்களும் சம்மதித்தோம். ஜிம் அவன் உணவருந்தும்போது அவனருகே கைகட்டி நின்று, "கருணை மிக்க தாங்கள், இது கொஞ்சம் சாப்பிட்டுப் பாருங்கள், அது சாப்பிடுங்கள்" என்றெல்லாம் சேவை செய்தான். அந்தச்சேவகம் அவனை மிகவும் இன்பத்திலாழ்த்தியது என்று கூறவும் வேண்டுமோ?
வெகு விரைவில் அந்த முதியவர் அமைதியாகி விட்டார். சொல்வதற்கு அவரிடம் ஏதும் இல்லை என்பதும் நாங்கள் இவ்வாறு அந்த பிரபுவுக்கு அடிமை வேலை பார்ப்பதில் அவருக்கு விருப்பம் இல்லை என்பதும் அவர் முகத்தில் தெரிந்தது. அவர் மனதில் ஏதோ ஒரு எண்ணம் உதித்தது போலத் தென்பட்டது. எனவே, அந்த மதியம் ஒரு சமயத்தில் அவர் கூறினார்
"இங்கே பாரு, பிரிட்ஜ்வாட்டர். உனக்கு நேர்ந்தது எனக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது. ஆனால் நீ ஒருவன் மட்டும்தான் இவ்வாறான கஷ்டங்களை அனுபவிப்பவன் என்று எண்ணாதே."
"இல்லையா?"
"இல்லை. உயர்குடிப் பட்டங்களிலிருந்து கீழே தள்ளப்பட்டவன் என்று நீ ஒருவன் மட்டும் அல்ல."
"ஓ. இல்லை."
"இல்லை, நீ ஒருவன் மட்டும் உனது பிறப்பின் ரகசியம் அறிந்தவன் அல்ல." பிறகு ,கடவுளே! அந்த வழுக்கைத் தலையர் அழ ஆரம்பித்தார்.
"ஒரு நிமிஷம் இரு, நீ என்ன சொல்ல வருகிறாய்?"
"பில்ஜ்வாட்டர்! உன்னை நான் நம்பலாமா?" தேம்பிக்கொண்டே அந்த முதியவர் கேட்டார்.
"வாழ்வின் எல்லை வரை நீங்கள் என்னை நம்பலாம்." அந்தப் பிரபு முதியவரின் கையை ஆதரவாக தன் கையில் எடுத்து மெல்லியதாக அழுத்தியவாறே கூறினான் "உங்கள் ரகசியத்தைக் கூறுங்கள்."
"பில்ஜ்வாட்டர் ! நான் ஒரு முன்னாள் பிரெஞ்சு இளவரசன்."
நானும் ஜிம்மும் எந்த அளவு ஒருவரை ஒருவர் வெறித்துப் பார்த்திருப்போம் என்று உங்களுக்கே தெரியும்.
அந்தப் பிரபு சொன்னான் " நீங்கள் ஒரு ....... ஒரு என்னது?"
"ஆம் தோழரே! அது உண்மைதான். நீங்கள் இப்போது பார்ப்பது பாவப்பட்ட ஒரு பழைய இளவரசனை. பதினாறாம் லூயிக்கும் அவரது மனைவி மேரி அண்டோனெட் இருவருக்கும் பிறந்து பல ஆண்டுகளுக்கு முன்பே காணாமல் போய்விட்ட பதினேழாம் லூயி
"இல்லை. உங்க வயசுக்கு? இல்லை. நீங்கள்தான் இறந்த போன சார்லமைன் என்பாரா? அப்படி என்றால் உங்களுக்கு இந்நேரம் அறுநூறு அல்லது எழுநூறு வயது ஆகி இருக்க வேண்டுமே!"
"கஷ்டம் இப்படிச் செய்துவிட்டது, பில்ஜ்வாட்டர்! கஷ்டம் இப்படிச் செய்துவிட்டது. வாழ்வின் சுமைகள் எனக்கு இப்படி நரையும், இளவயது வழுக்கையும் கொடுத்துவிட்டது. ஆம், அன்பர்களே! உங்கள் முன் நீங்கள் காண்பது பரிதாபத்திற்குரிய வகையில் நாடு கடத்தப்பட்டு, அனைவராலும் மிதிக்கப்பட்டு, கடும் கஷ்டங்களை அனுபவித்த நீல ஜீன்ஸ் உடையில் உள்ள பிரெஞ்சு நாட்டின் நியாமான வாரிசான தற்போதைய ராஜா."
நல்லது. அவர் அழுது புலம்பியதைக் கண்ட ஜிம்முக்கும் எனக்கும் என்ன செய்வதென்றே புரியவில்லை. அவருக்காக நாங்கள் மிகவும் வருத்தப்பட்டாலும், தற்போது அவர் எங்களுடன் இருப்பது எங்களுக்குப் பெருமையாக இருந்தது. எனவே அதே பிரபு கோமானுக்கு முன்பு செய்த பணிவிடைகள் அவருக்கும் செய்து அவரை ஆறுதல்படுத்தினோம். ஆனால் அவை எல்லாம் அவருக்கு ஆறுதல் அளிக்காது என்றும் அவர் இறந்து போனால்தான் அவர் நிம்மதியடைவார் என்றும் கூறினார். அவர் அப்படி அடிக்கடி சொல்வதால் அவருக்கு வேண்டிய அனைத்தும் மிகவும் சுலபமாகக் கிடைத்தது.
குனிந்து அவரை வணங்குவது, அவர் பேசும்போது முட்டியிட்டு அமர்வது, அவரை எப்போதுமே "மேன்மை பொருத்திய ராஜா" என்றழைப்பது, அவர் உணவருந்தும்போது அவரின் அருகில் காத்திருந்து பணிவுடன் பரிமாறுவது, அவரின் முன்னிலையில் அவர் அமரச் சொல்லும்வரை அமராமல் நிற்பது என்று அனைத்தும் செய்வது அவருக்கு கொஞ்சம் அமைதியைக் கொடுத்தது. எனவே ஜிம்மும், நானும் இவை அனைத்தையும் குறை வைக்காமல் செய்து, அவரை ஒரு ராஜாவாகவே மதித்து, அவர் அமரச் சொல்லும்வரை அமராது நின்று கொண்டிருந்தோம். இதனால் ஆனந்தமடைந்த அவர் முகமலர்ச்சியுடனும், வசதியுடனும் தென்பட ஆரம்பித்தார்.
ஆனால் அந்த பிரபுவோ மிகவும் கடுப்புடன் காணப்பட்டார். அவ்வாறான விஷயங்கள் நடப்பதை அவர் பெரிதும் விரும்பவில்லை. ஆயினும், ராஜா அந்த பிரபுவிடம் மிகவும் சிநேகிதமாகவே இருந்தார். ராஜாவின் அப்பாவுக்கு பிரிட்ஜ்வாட்டர் பிரபுவின் கொள்ளுத் தாத்தாவைப் பற்றி நல்ல அபிப்ராயம் என்றும் அவருடன் சேர்ந்து மற்ற நிலப்பிரபுக்களும் அடிக்கடி பிரெஞ்சு மாளிகைக்கு விருந்துக்காக அழைக்கப்படுவார்கள் என்றும் அந்த பிரெஞ்சு ராஜா கூறினார். இருந்தாலும், அந்த பிரபு மிகுந்த எரிச்சலுடன் கொஞ்ச நேரம் காணப்பட்டார்.
இறுதியாக ராஜா இவ்வாறு கூறினார் "கூட்டிக் கழித்துப் பார்க்கையில், நாம் இருவரும் இந்தத் தோணியில் எத்தனை நேரம் ஒன்றாக கூடி இருக்கப் போகிறோம் என்று தெரியாது, பில்ஜ்வாட்டர். அதற்குள் எதற்காக இந்தப் பாராமுகம்? இப்படி இருந்தால் விஷயங்கள் மிகவும் மோசமாகத்தான் மாறும். நன் ஒரு நிலப்பிரபுவாகப் பிறக்காதது என் தவறு அல்ல. அதே போல் நீ ஒரு ராஜாவாகப் பிறக்காதது உன் தவறு அல்ல. பிறகு ஏன் இந்த வருத்தம்? எப்படி விஷயங்கள் உன் வழியில் வந்தாலும் அதிலிருந்து சிறந்தது மட்டுமே எடுத்துக் கொள் என்பதே எனது கொள்கை. நாம் ஒன்றும் இங்கு கெட்ட சூழ்நிலையில் இல்லை. வேண்டிய அளவு உணவு உள்ளது மட்டுமல்லாமல் மிகவும் லகுவான வாழ்க்கை. உனது கரத்தைக் கொடு, பிரபுவே! நாம் அனைவரும் நண்பர்களாக இருப்போம்."
நிலப்பிரபு பிரெஞ்சு ராஜாவுடன் கைகோர்த்துக் கொள்வதைக் கண்ட ஜிம்மும், நானும் மிகுந்த சந்தோசம் அடைந்தோம். அந்தச்செயல் அனைத்துத் தடுமாற்றத்தையும் சரி செய்து விட்டது. தோணியின் மீது சிநேகமற்ற உறவுகள் இருப்பது எங்களுக்கு பிடிக்கவில்லையாதலால், அவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்தது எங்களுக்கு மிகுந்த பிரியமளித்தது. எல்லாவற்றையும் விட, தோணியின்மேல் அனைவரும் நிறைவுற்று, கூட பயணம் செய்யும் மற்ற அனைவருடனும் களிப்புற்று இருப்பதையே நாங்களும் விரும்பினோம்.
அவர்கள் இருவரும் ராஜாவும் அல்ல நிலப் பிரபுவும் அல்ல பித்தலாட்டம் செய்யும் வெறும் கபட வேடதாரிகள் என்று நான் அறிந்துகொள்ள வெகுகாலம் எடுக்கவில்லை. ஆனால் நான் எதுவும் சொல்லவில்லை. எனக்குத் தெரிந்ததை நான் வெளியே காட்டிக் கொள்ளவும் இல்லை. எனக்குள்ளேயே வைத்துக் கொண்டேன். அதுதான் சிறந்த வழி. என்ன சொல்கிறீர்கள்? பெரிதாக சண்டை இல்லாது, யாருக்கும் எந்தத் தொந்தரவும் இல்லாது அவர்களை ராஜா என்றும் பிரபு என்றும் நாங்கள் அழைப்பதில் எனக்குப் பெரிதாக எந்த ஆட்சேபணையும் இல்லை. தோணியின் மீது அவர்கள் எந்த ரகளையும் செய்யாதிருந்தால் மட்டும் போதும். ஜிம்மிடம் இதைச் சொல்வதில் எந்த பயனும் இல்லை. எனவே நான் சொல்லவில்லை. மனிதர்களுடன் நன்கு ஒத்துப் போய் ஒன்றாக வாழவேண்டுமென்றால், அவர்கள் வழியிலேயே அவர்களை விடுவது மட்டும்தான் சரியாக வரும் என்பது என் அப்பாவின் கொள்கை. அவரிடமிருந்து நான் ஏதேனும் கற்றிருந்தேனானால், அது இந்தக் கொள்கையாகத்தான் இருக்கும்.
[தொடரும்]
- முனைவர் ர. தாரணி M.A., M.Phil., M.Ed., PGDCA., Ph.D. தமிழ்நாட்டில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தேவாரப்பாடல் பெற்ற சிவஸ்தலமான, திருப்புக்கொளியூர் என்று முன்பு திருநாமம் பெற்ற அவிநாசி என்ற ஊரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத்துறையின் தலைவராக பணியாற்றி வருகிறார். ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றது கல்வித்துறையில் அவர் தேர்வு செய்த விஷயம் என்றாலும் அவரின் பேரார்வம் மொழிபெயர்ப்பின் மீதும்தான். -
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.