மொழிபெயர்ப்பு 1
வனப்புடன் வளைய வருகிறாள் அவள்
முகிலற்ற காலம் போலும், விண்மீன்கள் மலர்ந்த வான் போலவும்
உன்னத இருளும் ஒளியும் ஒருங்கே சந்திக்கும்
அவளின் தோற்றமும், கண்மலர்களும்;
சுவர்க்கம் பகட்டான நாளுக்கு மறுத்த
மென்மை ஒளி கனிகிறது இவ்விதம்
- லார்ட் பைரன் ( 18 -ம் நூற்றாண்டு ஆங்கிலக்கவிஞர் ) -
She walks in beauty, like the night
Of cloudless climes and starry skies,
And all that's best of dark and bright
Meets in her aspect and her eyes;
Thus mellow'd to that tender light
Which Heaven to gaudy day denies.
- Lord Byron -
மொழிபெயர்ப்பு 2
வடிவற்ற பூரண முத்துக்களை அடையப்பற்றுக்கொண்டு,
வடிவான பெருங்கடலின் ஆழத்தில் மூழ்குகிறேன்.
இயலாது இனி, இயல்வளியில் தாக்குண்டபாய்மரக்கலத்துடன்
துறைமுகம் தாண்டி துறைமுகம் நோக்கிய
கடல் பயணம்.
இறவா நிலை வேண்டி இறக்க விழைகிறேன் இக்கணமே.
பார்வையாளர் அரங்கினுள், ஆழங்காண இயலா பிளவினூடே,
தொனியற்ற சரவரிசைகளின் இசை, எழுச்சியுடன் பிரவகிக்கும் வேளை,
என் வாழ்வின் இந்த மகரயாழை நான் ஏற்பேன்
நித்திய சுரங்கள் நீடிக்க அதில் நான் பண்ணிசை கூட்டுவேன், அதனினும் கூட,
அதன் இறுதி இசைப்பாட்டை அது விம்மலுடன் இசைக்கையில்,
என் மோன யாழை மௌனத்தின் பாதார விந்தத்தில் சரண் செய்வேன்.
-தாகூரின் கீதாஞ்சலியில் இருந்து நூறாவது கவிதை -
மொழிபெயர்ப்பு 3
உன்னில் உருகி இழையும் யாழாய் மாற்று என்னை, வனம் முழுதுமே உனக்கான யாழாகினும்,
என் மனோ இலைகளின் சருகுகள் முழுதும் உதிர்ந்தால்தான் என்ன?
உன் ஆக்கம் நிறைந்த ஆரவாரத்தில் அவை மீண்டும் உயிர்தெழும்பாதா?
உதிர்வது சோகம் என்றாலும் கிளைத்து உயிர்த்து மலர்வது சதானந்தமே!
என் ஆன்மா நீ! உன் மூர்க்கமே நான்! என்றும் நீ நானாயிரு!
மேற்கு திசை சுழல் சூறாவளியே!
Make me thy lyre, even as the forest is:
What if my leaves are falling like its own!
The tumult of thy mighty harmonies
Will take from both a deep, autumnal tone,
Sweet though in sadness. Be thou, Spirit fierce,
My spirit! Be thou me, impetuous one!
- ode to the West Wind - P.B. Shelley! -
4.
வரைந்த வானவில்லின் வண்ணம் கூடுமா?
வானத்து விளிம்பில் வாழ்க்கை அமையுமா?
வான் உயர வளர வாசகம் வழிகாட்டுமா?
வாடகை வாசல் வாழும்வரை வாய்க்குமா?
வாளை வீழ்த்தும் வீரம் விளையுமா?
வேனிலின் வீணை வீதியெங்கும் வியாபிக்குமா?
வான வசந்த மழை மானுடம் மலர்த்துமா?
வாடிய பூவினம் பூக்குமா?
வாழ்வென்னும் வழிச்சாலையில் வான்மனைகள் வாழ்த்திட
வான்முகிலில் இருந்து வையகம் வழியும் பாகீரதி
பிரவாகம் பிரளயம் ஆகுமா?
ஆடி பெருக்கில் ஆனந்தக் கூத்திட காத்திருக்கிறோம்!
கண்ணுக்கெட்டா தூர கானல் நீர் நீ
கனாவில் கண் பொத்தக்கண்டாலும்
மனம் மட்டுமே கொத்தும் நான்
மனம் கொத்திப்பறவை!
உன் மனம் பொத்தும் அரிவை!
5.
காவேரி நதி தீரத்தில் காற்றாலைகளின் காதோரக்கவிதைகளில்
கானம் இசைக்கும் கீதக்குயில்களுடன் கோலம் இழைத்து கால் வருடும்
கமண்டல நீர் கதகதப்பில் காதல் கசிந்துருக்கும் கமல மலர்நாதனின்
கடம்ப வனக்காடுகளில் கால்கடுக்கக்காத்திருக்கும் காலமகள்
கடிதத்தின் கேடிலுவகை களிப்பில் கற்றவை காலாவதியாக
காணும் காட்சிகள் கண்ணாடியாகி
காணாதவை கடக்க இயலா கற்பனையாகி
கேளாமல் கிடைத்த கனவுகளை நான் வாழாதிருப்பேனோ என் வையமே!
6.
மாடத்து மானாக மாலையில் மலரும் மல்லிகையாய் நீ
மானுடம் தழைக்க வரும் மாமேக மழைமுகில் நீ.
மாந்தர்தம் மனம் புகுந்த விந்தை நீ.
என் மனம் கனிந்த காதல்வில்லின் இலக்கு நீ
மனம் மலர்த்தும் மலைமகளின் அம்சம் நீ
காரிகையின் வடிவம் காட்டி கார்முகிலாய்
கடுந் தெறுமொழி கூறும் நீ
யார் நீ?
7.
பெண்குழந்தையின் உச்சிதனை முகர்ந்த கர்வச்செருக்கு
மஹாகவி பாரதிக்கு எனில்,
உச்சிதனை முகரமுடியா உயரம் கொண்ட
ஆண்குழந்தையின் தோள் அழுத்தி
அவன் உயரம் குறைத்து
கன்னத்தில் முத்தமிடும்
கர்வம் என் போன்ற அம்மாக்களுக்கு!
8.
ஆரவாரம் இல்லா அன்பினால் அரவணைக்கும் ஆனந்தமே!
ஆர்ப்பரிக்கும் ஆசைகளில் ஆடிக்களிக்கும் அகப்பொருளே!
ஆழிக்குள்ளும் அடிபிறழா ஆபத்பாந்தவனே!
ஆணவம் அழித்து ஆட்கொள்ளும் ஆலகால ஆதியே
ஆடவனோ ஆண்மகனோ ஆருயிரோ ஆர் அறிவார்?
அகம் அறுத்து சிரம் பணிந்தேன்!
சிவனே! சிவா!
9.
மகிமை நிறை மரங்களினூடே மலர்கிறேன்'
மனம் மரத்த மனிதர்களை மறுக்கிறேன்
மங்கல மலர்களை மணக்கிறேன்
மஹாநதியின் தீரத்தில் களிக்கிறேன்
மகோன்னத சூழலில் மதி மயங்குகிறேன்
இயற்கையின் இனிமையை வெல்ல மாற்று வேறு உண்டோ மானிடனுக்கு?
மனிதப்பெருங்கடலில் நானும் ஒரு சிறுதுளி!
-
நேற்று இளங்காலை நேரம் ஆலப்புழா மழைச்சாரலில்
இதமாக நனைந்தபடி காலாற நடந்தபோது
என் மனதில் தோன்றிய எண்ணங்கள் இவை
* முனைவர் ஆர்.தாரணி- இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.