இங்கு நான் எழுதிவருவதையும் தொடர்ந்து அதற்கு வரும் எதிர்வினைகளையும் பார்த்து வருபவர்க்கு இதற்கெல்லாம் அப்பால் வெளி உலகில் இந்த சினிமாக்களையும் அதன் ரசிகர் களையும் இவை பத்திரிகைகளில் பெறும் எதிர்வினைகளையும் பார்ப்பவர்களுக்கு ஒரு சில விஷயங்கள் தெளிவாகலாம். ஏற்றுக்கொள்கிறார்களோ என்னவோ. எனக்குள் ஏற்கனவே தெளிவானது இங்கு வலியுறுத்தப் படுகிறது என்றே தோன்றுகிறது. வணிகச் சூழல் அவ்வப்போது ஒரு ரசனையை மக்களிடையே திணித்து லாபம் பெறுகிறது. அதை மக்கள் தாமறியாதே தம்முள் திணிக்கப்பட்ட ரசனையை தமது ரசனையாகவே தாம் வளர்த்துக்கொண்ட ரசனையாகவே நினைத்து மாய்ந்து போகிறார்கள். திணிக்கப்பட்டதை தாமாகவே உணர்ந்து ஏற்கவோ மறுக்கவோ செய்வதில்லை.
அன்றைய ஓடாத ஒரு படத்தை தயாரிப்பாளர் தன்னிடம் வேண்ட, என்.எஸ் கிருஷ்ணன் அவரிடம் பரிதாபம் கொண்டு தான் தனியாக தயாரித்துச் சேர்த்து அந்தப் படத்தை ஓட வைத்த மிளகாய்ப் பொடி காமிக்கிலிருந்தே ஒரு சௌகரியத் தெளிவுக்காகத் தொடங்கலாம். நம் சினிமாவின் ஆரம்பமே கூட, சினிமா என்ற ஒரு புது தொழில் நுட்ப சாதனத்தைக் கையாள்வது பற்றி அல்ல, அதை ஒரு கலையாக கையாள்வது எப்படி என்பது பற்றி அல்ல, இது இன்னொரு புது கடை. இதை வைத்துக்கொண்டு தனக்குத் தெரிந்த மார்க்கெட்டை தனக்குத் தெரிந்த வகையில் எப்படிக் கொண்டுசென்று பணம் பண்ணலாம் என்ற ஒரே சிந்தனை தான். அதனால் தான் முதல் சினிமா படம் எடுக்க வந்தவர், வெற்றிகரமாக ஒடிக் கொண்டிருக்கும் நாடகம் எது? பவளக்கொடியா,? சரி அதை சினிமாவா எடுக்கலாம். அதன் வெற்றிக்குக் காரணமான எம். கே.டி. பாகவதரா?, சரி, அவரையே போட்டுக்க.. கூட நடிக்கிறது யார்?. எஸ். டி சுப்புலக்ஷ்மியா? சரி ,அந்த அம்மாவே இருக்கட்டும். அந்த நாடகத்தை அவங்க வழக்கம் போலவே நடிக்கட்டும். அதான் ஆகி வந்தது. அதையே படமாக்கிப் போடலாம். புதுசா யாரையாவது போட்டு எத்தையாவது புதுசா செய்யறேன்னு செஞ்சு பணத்தைக் கரியாக்க வேணாம்”. என்ற பிரமாதமான வியாபார யுக்தியில் பிறந்தது நாடகத்தையே படம் பிடித்துப் பிறந்தது நம் தமிழ் சினிமா? நம்ம சினிமா என்ன, ஹிந்தி சினிமாவும் தான். அவங்களாவது பின்னாலே அப்பப்போ கொஞ்சம் புத்தி வந்தவங்க ஏதாச்சும் மாறிச் செய்வானுங்க. ஆனால் நாம எத்தனையோ கல் தோன்றி மண் தோன்றா”……..ன்னு எதுக்கெடுத்தாலும் தூபம் போடுவானுங்களே (நாமல்லாம் என்ன அந்தக் காலத்து ஆப்பிரிக்க காட்டுமிராண்டிகளா?)தமிழ் மரபுகளை, தமிழ் வரலாறுகளைத் தலையில் சுமந்துகிட்டே இருக்கோம். பணம் தான் பண்ண வந்திருக்கோம். அதே சமயம் இந்த கல் தோன்றா தமிழ் சமாசாரங்களைச் சொல்லியே பணம் பண்ணனும். சந்தையில் வெற்றி கண்ட நாடகத்தைச் சினிமா படம் பிடித்ததிலிருந்து, விலை போகாத சரக்கை, மிளகாய்ப் பொடி காமிக் சேத்து சந்தையில் விற்றுப் பணம் பண்ணியதிலிருந்து குத்தாட்டம் இல்லாத தமிழ் சினிமாவா?, அதை எப்படி தமிழ் சினிமா ரசிகன் ஏற்பான்? என்ற சிந்தனையின் அதை ஏற்கும் பொது ரசனையின் கபட நாடகம் இருக்கிறதே அது கலை என்றும் தமிழ் மரபு என்றும் சொல்லியே சினிமாவும் அரசியலும் இரு தரப்பினரும் தமிழ் நாட்டில் வெற்றி கரமாக அரங்கேற்றி வரும் கூத்தை ரசனை என்றும் தமிழ்ப் பற்று என்றும் இரண்டு மூன்று தலைமுறைத் தமிழனை மூளைச் சலவை செய்தாயிற்று.
இதை மீறி ஒருத்தரும் சிந்திக்க மாட்டேன் என்கிறான். நாம் வாழும் வாழ்வு என்று ஒன்று நிதர்சனமாக நம்மை அன்றாடம் அல்லல் படுத்தி வருகிறது. அது பற்றி சிந்தனையே இல்லாமல் குத்தாட்டம் ஆடி, வசனம் பேசி, எங்கே போனாலும் எதுக்கெடுத்தாலும் பத்துப் பேரை ஸ்டண்ட் மாஸ்டர் சொல்றபடி விழுத்தாட்டி, பத்து கார்களைப் பறக்க விட்டு, “பார் பார் பட்டணம் பார் பயாஸ்கோப் மாதிரி புதுசு புதுசா நயாகராவா, மச்சு பிச்சுவா,ன்னு ஊர் சுத்திக் காமிச்சு, (அங்க தெருவிலே நாற்பது பேரோட தெருவிலே போறவன் வரவன்லாம் வேடிக்கை பாத்து நிற்க டான்ஸ் பண்ண வெக்கப் படமாட்டீங்களாடா நீங்க) இவங்க பண்றது இந்தக் கால கலை என்று காலரை தூக்கி விட்டுக் கொண்டு பாராட்டுக்கூட்டம் போடும் ரிக்கார்ட் டான்ஸ். ஒரு காலத்தில் இரவு நேரம் தலையில் துணியைப் போட்டுக் கொண்டு ரகசியமாகப் பார்த்த ரெக்கார்ட் டான்ஸ், இங்கு அரசியல் தலைவர்கள் முன் பாராட்டு விழா விஷயமாகிவிட்டது அதிலும் நம் தலைவர்கள் வாய் மலர தம் கலை அனுபவத்தை கண்டு மகிழும் சமாசாரமாகிவிட்டது. எத்தனை தரம் பார்த்தாலும் எத்தனை பாராட்டுக்குட்டங்களுக்குப் போனாலும் அலுப்பதில்லை. அதிலும் குத்தாட்டம் போடறதுக்கு முன்னாடி குத்தாட்டக் கலைஞி குட்டைப் பாவாடையோடு பக்கத்தில் உட்கார்ந்திருந்தால் இன்னும் சிறப்பு. இந்த அரசு எல்லாக் கலைகளையும் கலைஞர்களையும் போஷிக்கு அரசு.
நம் அன்றாட வாழ்க்கையை பார்க்க வேண்டும். அதைப் பரிசீலிக்க வேண்டும் என்றால், அதற்கு ஒருத்தர் கேட்டார். “அப்படியானா அடுத்த வீட்டுக்குள் ரகசியமாகக் காமிராவை எடுத்துக்கொண்டு போகவேண்டுமா? என்று. ஆமாம் அது தான் விஷயம். அடுத்த வீட்டுக்குள் மாத்திரம், அல்ல உங்கள் எங்கள் வீட்டுக்குள்ளும். வீட்டுக்குள் மாத்திரமல்ல. உங்களுக்குள்ளும் நம் ஓவ்வொருவருக்குள்ளும் காமிராவை எடுத்துச் செல்ல வேண்டும். அடுத்த வீட்டுள்ளும் நம் வீட்டுள்ளும் நம் ஒவ்வொருவருள்ளும் உள்ள உண்மையையும் சொல்லும் உண்மையையும் சொல்லாத உண்மையையும் வெளிக்கொணர வேண்டும். அடுத்த வீட்டுக்குள்ளும் உங்கள் வீட்டுக்குள்ளும் காமிரா நுழைந்து விட்ட பிரமையை நமக்கு தந்துவிட முடியுமானால் அது தான் சினிமா. அது தான் கலை. நம்மை, நம் சமூகத்தை நம் வாழ்க்கையின் உள்ளையும் வெளியையும், உண்மையையும் தோற்றத்தையும் வெளிக்கொணர முடிந்து விட்டால், எந்த பாவனையுமின்றி, எந்த சந்தையின் முன் முடிவுகளுமின்றி சொல்ல முடிந்து விட்டால் தமிழனுக்கு சினிமா என்னும் கலை தெரிந்து விட்டது. அவனும் ஒரு சினிமா கலைஞனாகி விட்டான் என்று சொல்லிக் கொள்ளலாம்.
அந்த மாதிரியான புதிய பாதையில் அவ்வப்போது எளிய முன் முயற்சிகள், ஒன்றிரண்டு அடி வைப்புக்கள் இருந்துள்ளன. முதல் உதாரணம் பாலு மகேந்திராவின் “வீடு”. ஆனால் நமக்குத் தான் நேர்மையும் உண்மையுமான மனிதர்கள் தேவையில்லையே. பத்து பக்கம் மூச்சு விடாமல் வசனம் பேசுபவர்களும் டெலிபோன் மணி போல் சிரிப்பவளே என்று பாடும் உலக நாயகர்களும், தானே வேணும்!. அந்த மனிதர் இந்த கல் தோன்றா இத்யாதி நாட்டில் வாழ விரும்பினா ஆட முடியாது பெருத்து விட்ட பழம் கதா நாயகிகளை ஒன்று ஆடவை, இல்லை ஒரு கவர்ச்சிக் கண்ணியை குளிக்க வை, இல்லையானால் எங்கள் தமிழன் யாரையும் கலைஞனாக ஒப்புக்கொள்ளமாட்டான். அப்படியும் அவரை இருக்குமிடம் தெரியாமல் செய்தாய் விட்டது. தனுஷ் மாதிரி முகவெட்டோ, ஸ்டைலோ ஒரு மண்ணும் இல்லாத ஒரு ஒல்லிப் பிச்சானை, உள்ளே விட்டதே தப்பு. உள்ளே வந்தாச்சு எப்படியோ. ஆடுகளம் போலவா எப்போதும் எல்லாத்தையும் அனுமதித்துக் கொண்டிருக்க முடியும்? மாமனாராவது கொஞ்சம் கண்டிச்சு ரெண்டு வார்த்தை சொல்லலாம். தனுஷும் டான்ஸ் பண்ணவேண்டாமா, ஸ்டண்ட் வேலையெல்லாம் செய்ய வேண்டாமா? நிலைச்சு நிக்கணுமே? தமிழ் ரசிகன் இருக்கான். டிஸ்ட்ரிபூட்டர்ஸ் இருக்காங்க, எத்தினி டான்ஸ் எத்தினி ஸ்டண்ட் இருக்குன்னு பாத்து ஓடுமா ஒடாதான்னு சொல்ல இருக்காங்களே. பின்னே தொலைக் காட்சி வேறே. சினிமாவிலேயே தோய்ந்து அதிலேயே மலர்ந்து பணம் அள்ளும் தொலைக்காட்சிகள் வேறு, அதுக்கு பிடித்து விட்டால் டாப் டென்னில் முதலாவதாக அது தானே நாலு மாசத்துக்கு விடாம தொடரும்.? பின் சாங் ரெலீஸ் கொண்டாட்டம் என்ன, படத்தின் பின்னணி என்று கொண்டாட்டம் என்ன, தயாரிப்பாளர், நடிகர், இத்யாதி எல்லாம் என்னென்ன மாயம் எப்படி யெல்லாம் செய்திருக்கோம் என்று சொல்ல வச்சு ஒரு விளம்பரம், புதுசு புதுசா வேறு எங்கும் இல்லாத காணக்கிடைக்காத கலைக் காட்சிகள் தமிழ் தொலைக் காட்சிகளில் காணலாமே. எந்த மட்ட ரகமானால் என்ன? அது கலை தான் பணம் கொட்டு மானால், முதன் மந்திரியும் கலைஞரும் ஒன்றாயிருக்கும் சமயமானால் இன்னும் கொண்டாட்டம் தான். அவருக்கும் கொண்டாட்டம் தொலைக்காட்சிக்கும். சினிமா தயாரிப்பாளருக்கும். கடைசியில் நம்ம ஏமாளிக் கூட்டம் தமிழ் சினிமா ரசிகர் பட்டாளத்துக்கும்
iஇனி நான் சமீபத்தில் பார்த்த ஒரு மலயாளப் படத்தைப் பற்றிச் சொல்ல விரும்புகிறேன். சமீபத்தில் என்றால் பார்த்து மாதங்கள் சில ஆகிவிட்டன. மலயாளப் படத்தைப் பற்றிப் பேசினால் கொஞ்சம் உரைக்கும் என நம்பிக்கை. நான் இரான், கொரியா செர்பியா என்று பேசினால், இந்த ஆளு எப்பவும் இப்படித்தான்யா. எங்கியோ இருக்கிறதையெல்லாம் பேசி தமிழனக் குறை சொல்லுவான். தமிழ்ப் பற்று கொஞ்சமும் இல்லாதவன். ஆரிய அடிவருடி, அது இல்லையா, “தோழரே. சி.ஐ.ஏ ஏஜெண்ட். அமெரிக்காவிலிருந்து இவனுக்கு மணி ஆர்டர் வருது. இப்பத்தான் மெட்ராஸிலேருந்து வாரேன். எல்லாம் நல்லா விசாரிச்சிட்டுத்தான் வாரேன் இன்னும் ஒரு வாரத்திலே அமெரிக்கா போறான் இந்த ஆள்” என்று காதோடு காதாகச் சொல்லி பதினைந்து வருஷம் ஆயிற்று. நான் இன்னும் மடிப்பாக்கத்தைத் தாண்டவில்லை. அல்லது பெரியார் திடலில் இன்னொரு செட் உரக்கவோ சொல்லக் கூடும். பெயர் சரியாக நினைவில் இல்லை (என்னைப் பற்றிய இந்த பாராட்டுரைகளூக்கு பத்திரிகையில் எழுத்து சாட்சியம் உண்டு .எல்லாம் ஒரே இடத்தில் அல்ல. பலரிடமிருந்து பல வேறுபட்ட பாராட்டுக்களை நான் ஒரே இடத்தில் தொகுத்துத் தந்திருக்கிறேன்.) நான் ஏதும் தமாஷுக்காக கதையளக்க வில்லை)
கடம்மா என்று அதன் தலைப்பு (GADAMMA) இப்படத்தின் உபதலைப்பு (A desert Journey) என்பதாகும். நெட்டில் இது கிடைக்கும். உண்மையில் நான் சொல்வதை உரிய கவனத்துடன் படிப்பவர்கள் அதற்கு மரியாதை தருபவர்கள் கட்டாயம் நெட்டில் இதைத் தேடிப்பார்ப்பார்கள். மற்றவர்கள் சிம்புவின் ஒஸ்தி படத்தை இன்னொரு தரம் பாக்கலாம்யா என்று போகக்கூடும். அவர்களை நான் ஒன்றும் செய்ய முடியாது. நம் தரம் தாழ்ந்த தமிழ் வணிக சினிமாவிலேயே ஒரு கட்டத்திய தரத் தாழ்வு ஜெமினி, எம்ஜிஆர், சிவாஜி கணேசன் என்றால், இந்த காலக் கட்டத்திய தரத் தாழ்வு சிம்பு. அந்தக் காலத்திய அலட்டலுக்கு உருவம் தந்தது சிவாஜி கணேசன் என்றால் இந்தக் காலத்திய இன்னும் தரம் தாழ்ந்த அலட்டலுக்கு உருவம் தருவது. சிம்பு.
கடம்மா என்றால் சரியாக என்ன அர்த்தம் என்று தெரியவில்லை. ஆனால் அரபிக் மொழியில் அது மிக கேவலமாக, வசைச் சொல்லாகப் பயன் படுத்தப் படும் சொல் என்று தெரிகிறது. மலயாளிகளுக்கெல்லாம் தமிழ்ர்கள் பாண்டிக்காரன் போல. ஆந்திரக்காரனுக்கு நாம் அரவ வாடு போல. தென்னாப் பிரிக்காவில் எல்லா கூலித்தொழிலாளர்களும் “:கூலி” அல்லது “சாமி” ஆவது போல.அமெரிக்காவில் Nigger போல. போதுமா, இன்னும் வேணுமா?
தன் ஏழைத் தாய் தந்தையரைக் காப்பாற்றும் வேறு வகை அறியாது கேரளாவிலிருந்து ஏஜெண்ட்டுக்கு அவன் கேட்ட பணம் கொடுத்து சௌதியில் ஒரு ஷேக்கின் குடும்பத்தின் குழந்தைகளை பார்த்துக்கொள்ளும் வேலைக்குப் போகிறாள் இருபதுகளில் இருக்கும் பெண் அஷ்வதி .ரியாத் ஏர் போர்டில் தன்னை அழைத்துச் செல்ல வருவான் என்று சொல்லப்பட்ட ஏஜெண்டுக்காகக் காத்திருக்கிறாள் என்ன செய்வதென்றறியாது பயத்தில் விழித்துக்கொண்டிருக்கும் போது இன்னொரு முகத்தைத்தவிர கருப்பு பர்தா உடல் முழுதும் அணிந்த, ஒரு மாது அவள் அருகில் உட்காருகிறாள். அங்கு சுற்றிலும் எல்லோரும் கருப்பு அங்கி அணிந்தவரகள் தான். அஷ்வதி.தான் பொட்டிட்டு அழகான கலர் சாரி அணிந்த பெண் அங்கு. பயந்திருப்பவளை பார்த்த உடனே அறிந்து கொண்டவள் மலயாளத்தில் விசாரிக்கத் தொடங்குகிறாள். வருவதாகச் சொன்ன ஏஜெண்ட்டுக்காகக் காத்திருப்பதாகச் சொன்ன அஷ்வதியிடம் “அப்படித்தான் எல்லாரும் சொல்வார்கள். வரலாம் வந்தால் அவர்கள் இஷ்டப்பட்ட போது முடிந்த போது தான் வருவார்கள்” என்று இனி அவளுக்கு வரவிருக்கும் வாழ்க்கையின் முதல் பாடத்தைச் சொல்கிறாள். பேரென்ன? என்று கேட்டதற்கு அஷ்வதி என்று சொல்ல, ”இனி அந்த பேர் என்னவானாலும் அதற்கு ஏதும் அர்த்தமில்லை. இனி எல்லோரும் உன்னை ”கடம்மா” என்று தான் அழைப்பார்கள். இனி இங்கு இருக்கும் வரை நீ கடம்மா தான் என்று தெளிவுறுத்துகிறாள். இந்த மாதிரி உடையில் நீ ஏர் போட்டைத் தாண்டிவிடவோ ரியாத் தெருக்களில் நடப்பதோ இயலாது. “ என்று சொல்லி அவளுக்கும் முகத்தைத் தவிர உடல் முழுதும் மறைக்கும் நீண்ட கருப்பு அங்கியைத் தருகிறாள். அடுத்த காட்சியில் அவளுக்கு உதவிய மாதும் அஷ்வதியும் கருப்பு அங்கியுடன் இம்மிக்ரேஷன் செக்ஷனில் உட்காரக் காண்கிறோம். முதலிலிருந்து இப்போது வரை அஷ்வதியின் கையில் பாஸ்போர்ட்டும் இன்னும் சில காகிதங்களும். முகத்தின் பயம் இன்னும் தெளியவில்லை. .
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.