(21) – மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம்
இதுகாறும் நான் எழுதிவருவனவற்றைப் படிப்பவர்களிடமிருந்து வரும் எதிர்மறையான கருத்துக்கள் ஒரு சில வகைகளுள் அடங்கும்.
1. தங்களுக்குப் பிடித்த, ஏதோ கலைமேதையென தமக்குள் கற்பித்துக்கொண்டு பாலாபிஷேகம்ம் செய்து பூசிக்கும் சில நடிகர்களை அவர்கள் நடித்த படங்களை, சில இயக்குனர்களையெல்லாம் குறிப்பிட்டு அவர்கள் இயக்கிய படங்களையும் பட்டியலிட்டு, ”இவையெல்லாம் நல்ல படங்கள் இல்லையா?” என்று தம்முள் பொங்கி எழும் சீற்றத்தை அல்லது தமக்குள் வதைபடும் மிகுந்த மன வேதனையைக் கொட்டிக் கேட்கிறார்கள். இவர்களுக்கு நான் முன் வைக்கும் கருத்துக்கள் பார்வைகள் எதையும் எதிர்கொள்ளும் மனமிருப்பதில்லை. அவற்றையெல்லாம் படித்தும், அது பற்றி கொஞ்சம் கூட சிந்திக்காமல், தம் கையிலிருக்கு விளக்குமாற்றால் ஒரே வீச்சில் அவ்வளவையும் துடைத்து எறிந்து விட்டு, தாம் முன் கொண்டிருந்த மனநிலைக்கே திரும்பி இதெல்லாம் நல்ல படமில்லையா, அதெல்லாம் நல்ல படமில்லையா? என்று தொண்டை அடைக்கக் கேட்கும் போது, அதை ஒரு வேதனைக் குறல் என்றே சொல்லவேண்டும், குரல் கம்மிக் கம்மி, கதற ஆரம்பித்துவிடுகிறார்கள். இதுகாறும் தம் சொப்பன சுகத்தில் ஆழ்ந்திருந்ததெல்லாம் பொய் எனச் சொல்லப்பட்டால் நிலை குலைந்து போவதைச் சகித்துக்கொள்ள முடிவதில்லை.. இல்லையெனில் திடீரென ஒரு அதிர்ச்சியும் கையாலாகாச் சீற்றமும். பத்து வயது அண்ணனுக்கு வீட்டில் அடி விழுந்தால் ஆறு வயது தம்பி தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்துவிடுவான். அண்ணன் எதற்கு அடிபடுகிறான், என்ன சொல்லி அப்பா அடிக்கிறார் என்பதெல்லாம் அவனுக்குப் புரிவதேயில்லை. அன்ணன் அடி படுவது தெரிகிறது. அது அவனால் தாங்க இயலாது. இரண்டாவது தான் தனித்து விடப்பட்ட துக்கம் வேறு. தாங்கத் தான் முடிவதில்லை. தம்பிப் பையனுக்கு
2. இரண்டாவது வகையினர் இன்னொரு வேடிக்கையும் பரிதாபமுமான கற்பனை வாதம் ஒன்றை முன் வைக்கிறார்கள். நாளெல்லாம் வெயிலில் வேர்த்து விறுவிறுத்து உழைத்துத் திரும்புகிறவன் தன் கஷ்டங்களையெல்லாம் மறந்து ஜாலியாக இருக்க விரும்புகிறவனின் எதிர்பார்ப்பதைத் தருகிறது அவனுக்கு அன்று ஒரு ஜெயமாலினி, இல்லை ஜோதி லட்சுமி,இன்று ஒரு நமீதாவாவது டான்ஸ் பண்ண வேண்டும். அதைப் பார்த்து மகிழ்ந்து நன்றாகத் தூங்கி நாளைக்கு மறுபடியும் வேர்த்து விறுவிறுக்கத் தயாராவான். இந்த மாதிரியான ஒரு சினிமா கலைத் தத்துவம் தமிழ் மன்ணுக்கே உரியது.. இது போல ஒரு பொய்யும் நேர்மையற்றதுமான ஒரு வாதம், இன்னொரு பெயரில் இளிச்சவாய்த்தனமான வாதம், இருக்குமா என்று யோசிக்கத் தோன்றுகிறது. ஆனாலும் கொள்ளையடிக்கவே வந்திருப்பவர்கள், அதற்கு ஏதாவது கவர்ச்சியான ஜனநாயகப் பூச்சு பூசி மக்களை ஆபாசத்துக்குத் தள்ளுகிறவர்கள் இன்னும் மோசமான பொருளைச் சந்தைக்கு எடுத்துச் செல்ல வேண்டி வரும்போது, இன்னமும் நேர்மை கெட்ட, இன்னமும் மோசடி நிறைந்த பொய்யை, மக்களுக்காகப்பேசுவதாக நினைத்துக்கொள்ளும் அறிவு ஜீவிகளுக்காகத் தயார் செய்ய மாட்டார்கள் என்பது நிச்சயமில்லை
முப்பது நாற்பது வருஷங்களுக்கு முன் புராணப் படங்கள் கோலோச்சிய காலத்தில் இந்திரனோ, எவனாவது மன்னனோ சபைக்கு வந்து அமர்ந்ததும் “ஏழு கன்னிகைகள் வந்து நடனமாடுவார்கள்.” பின்னர் அடுத்த தலைமுறையில் ஒரு கல்யாணமோ, இல்லை பெரிய மனிதருக்கு வரவேற்போ என்று காரணம் காட்டி ஒரு நாட்டிய நிகழ்ச்சிக்கு காண எல்லோரும் தியேட்டருக்குப் போவார்கள். அங்கு காதல் மலரும்.
இந்த மாற்றம் எந்த ஊர் தொழிலாளிகள் எல்லாம் தாம் சிந்திய வியர்வையைக் காட்டி எங்களுக்கெல்லாம் எங்கள் உடல் சிரமத்தைக் குறைத்து ஒத்தடம் கொடுத்து எங்கள் முகத்தில் சிரிப்பையும் இறைவனையும் வரவழைக்க சிலுக்கு சிமிதா நாட்டியம் காட்டுங்கள் என்று ஜாயிண்ட் பெட்டிஷன் போட்டார்களா, இல்லை ஏழு கோடி தமிழர்களிடம் கையெழுத்து வாங்கி கோடம்பாக்கம் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்துக்கு பொது மனு கொடுத்தார்களா என்பது தெரியாது. ஒரு வேளை அந்த செய்தி வந்த அன்று என் ஏரியாவில் பவர் கட் இருந்திருக்கலாம். இதற்கு அடுத்து எப்போது இந்த மாதிரி ஒரு பொது மனு, “இனி உதகை பார்க், ஏற்காடு, வைகை அணையெல்லாம் பார்த்து அலுத்து விட்டது, இனி ஸ்விட்சர்லாந்துக்கோ, அர்ஜெண்டினாவுக்கோ, டோரண்டோவுக்கோ போய் கமல ஹாசனும், சிம்புவும் நயனதாராவோடு ஒரு நாற்பது பேர் கூட்டத்தோடு டான்ஸ் பண்ணினால் தான் எங்கள் அலுப்பு தீரும்போல இருக்கு. இப்பொல்லாம் பார்ங்க உடம்புலே கொட்டுற வியர்வை நிறையவே கூடிப்போச்சு உதகை பார்க் டான்ஸெல்லாம் இந்த வியர்வைக்குப் பத்தாது என்று மறுபடியும் கொடுத்தார்கள் என்ற செய்தியும் என் பார்வையிலிருந்து தப்பி விட்டது. அடிக்கடி வரும் பவர் கட்டினால் வரும் விபத்து இது. . .
எனக்கென்னவோ இந்த ஆபாசங்கள் எல்லாம் தயாரிப்பாளர், வினியோகஸ்தர்களின் டிமாண்டு தானே ஒழிய அப்பாவி தமிழ் மக்கள் அல்ல. அந்த வியர்வை கொட்ட அதைக் காய வைக்க எந்த அப்பாவி தமிழ் உழைப்பாளியும் 300 ரூபாயும் 500 ரூபாயும் கொடுத்து டிக்கட் வாங்க மத்தியானம் ரண்டு மணி வெயிலில் க்யூவில் நிற்கமாட்டான். அந்த பைத்தியக் காரத் தனம் செய்யும் தமிழ் ரகங்களே வேறே தான். கோடிக் கணக்கில் வசூலிக்கும் படத்தின் வெற்றிக்குக் காரணம் தேடுகிற வியாபாரக் கூட்டம், ஒரு கட்டத்தில் கருணாநிதி வசனம், சிவாஜி முக அவஸ்தைகள், சிலுக்கு ஸ்மிதா நடனம், கமலஹாசனின் மேக்கப் அவதாரங்கள், ரஜனி காந்தின் அங்க சேஷடைகள் என்று தம் நுண்மாண் நுழைபுல ஆராய்ச்சியில் கண்டு பிடித்து தம் அடுத்த படத்தில் அந்தச் சரக்கை இன்னும் ஒன்றிரண்டு பெக் கூடச் சேர்த்துக் கலந்த காக்டெயிலை சந்தைக்குக் கொண்டு வரும் பேராசைக் கனவுகளுக்கு என்னமோ உழைக்கும் வர்க்கம், சொட்டும் வியர்வை, மக்கள் ரசனை என்று கோஷிப்பதை,யே தம் கண்டு பிடிப்பு போலத் திரும்பத் திரும்ப நமக்குச் சொல்கிறார்கள், இந்த ஆபாசங்களும் தரக்கேடுகளும் தமக்கும் பிடித்துப் போக அதற்கு நியாயம் கற்பிக்கும் நம் அறிவு ஜீவிகள். தமிழ் சினிமா கலா ரசிகர்கள்.
ஒரு ஆபாசத்தை நிலை நிறுத்த, தொடர்ந்து நடைமுறைப் படுத்த என்னென்ன வார்த்தை ஜாலங்கள் எல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது. “இலவச தொலைக்காட்சி தருவதற்கு என்ன உயரிய நோக்கம் சொல்லப் பட்டது? குடிசை வாசிகளும் உலக அறிவு பெற வேண்டும், கலை ரசனை பெருக வேண்டும் என்ற மகத்தான லக்ஷியம் தான் காரணம் என்று. கடைசியில் சன் டிவிக்குப் போட்டியாக அதிலிருந்தும் கீழிறங்கி “மானாட மயிலாட” கண்டு பிடிக்கப்பட்டது. எதற்கு?. உடன் பிறப்புகளும், ரத்தத்தின் ரத்தங்களும் உலக அறிவு பெற,. கலைகள் கண்டு களித்திட.
ஒவ்வொரு தரக்கேடும், ஒவ்வொரு ஆபாசமும் தனியே வருவதில்லை. உடன் அதற்கான லக்ஷிய கோஷங்களோடு தான் சந்தைக்கு வருகிறது.
3. மூன்றாவதாக, தமிழ் சினிமா முன்னேறிக்கொண்டு தான் வருகிறது. மாற்றங்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றன என்று சொல்கிறவர்கள், மிஷ்கின், பாரதி ராஜா, பாலசந்தர் மணி ரத்னம், மகேந்திரன், போன்றோரையும், வெய்யில், சுப்பிரமணியபுரம், நந்தலாலா, போன்ற படங்களையும் சுட்டிக்காட்டுகிறார்கள். இவர்களில், மகேந்திரனையும் இவர்கள் சொல்லாத பாலு மகேந்திராவையும் தான் நான் மாற்றம் கொண்டு வர முயன்றவர்களாக, ஆனால் தோற்றவர்களாக நான் ஒப்புக்கொள்வேன். தோற்றது அவர்களுக்கு இழுக்கில்லை. அவர்களை விரட்டி அடித்தது நாம் தான். மக்கள் ரசனை, உழைப்பாளி வியர்வை கொள்கைக் காரர்கள் தான். அவர்கள் நம் மதிப்புக்கு உரியவர்கள். ஆனால் அவர்களால் எந்த மாற்றத்தையும் தமிழ் சினிமாவில் கொணர முடியவில்லை. மற்றவர்கள் எல்லாம் வெறும் பாவ்லா பண்ணுகிறவர்கள். அவர்களுக்கு தமிழ் சினிமாவின் மாற்றத்தில், தர உயர்வில் எந்த அக்கறையும் கிடையாது. பாவ்லா காட்டியே பெயர் வாங்கிக் கொண்டவர்கள். இந்த பாவ்லாக்களைக் காட்டியே பெயரும் பணமும் பண்ண தமிழ் சமூகத்தில் தான் முடியும்.
இந்த இயக்குனர்களின் பாவ்லாக்களை, படங்களின் பாவ்லாக்களை நான் அங்கங்கே சொல்லியே வந்திருக்கிறேன்.
இது போன்ற, சங்கடமான நிலை வரும்போது, எதையாவது சொல்லி, எப்படியாவது தப்பித்துக்கொள்ளும் சாமர்த்தியங்களையெல்லாம் விட்டு விடுவோம். சாமர்த்தியங்கள், வார்த்தை ஜாலங்கள், லக்ஷிய கோஷங்கள் எல்லாம் மூடி மறைப்பன நம் நல்லதை யோசித்துச் செய்யப்படுவன அல்ல. என்றும், எங்கும், எக்காலத்தும். இவர்கள் எல்லாம் நம்மிடமிருந்து பணம் பிடுங்க வந்தவர்கள் என்பது பெரிய விஷயமில்லை. போன பணம் போனாலும் பின்னர் நாம் பணம் சம்பாதித்துக்கொள்ளலாம். ஆனால் இவர்கள் பணம் கொழிக்க, தமிழ் நாட்டின் பண்பாட்டை, நாகரீகத்தை, கலைப் பிரக்ஞையை நாசம் செய்து வருகிறார்கள். இவை நாசம் ஆனால் திரும்பப் பெறக்கூடியவை அல்ல. கீழ் நோக்கிய சரிவு தொடங்கிவிட்டால் அந்த சரிவு எங்கும் இடையில் நிற்கப் போகும் சரிவு அல்ல. இந்திர சபையில் அப்ஸ்ரஸ்கள் ஏழு பேர் ஆடும் நடனம் இன்று முப்பது பேர் திடீரென, ஏன், எப்படி, எதற்கு என்ற காரண காரிய விவஸ்தையே இல்லாமல் நடு ரோடில் நாற்பதுபேர் ஆடும் “ஓ போடு” ஆட்டமாக, “கட்ட மர துடுப்பு போல இடுப்பை ஆட்டுறா” வாக மாறினால் அது நிற்காது தொடரும் சரிவு. அன்று இந்திர சபை அப்ஸரஸ்களின் நடனத்தைத் தவிர்க்கும் படங்கள் இருந்தன. இந்திரன் கதையில் இருந்தால் இந்திர சபையும் அப்ஸ்ரஸுகளின் நடனமும் நிகழ்வதில் ஒரு நியாயம் இருந்தது. ஒரு நியாயம் தான். கட்டாய விதி இல்லை. அது இல்லாதே இந்திரன் வந்த படங்கள் இருந்தன. ஆனால், ”கட்ட மர துடுப்பு போல இடுப்பை ஆட்டுகிறவளை” எந்த நியாயமும் இல்லாது இழுத்துப் பிடித்து வரவேண்டியிருக்கிறது. என்ன பைத்தியக்காரத்தனம் இதெல்லாம் என்றால், வியர்வை, உழைத்துக் களைத்த உடம்பு, மக்களின் மகிழ்ச்சி, என்று என்னென்னவோ பிதற்றல்கள் வந்து விழுகின்றன. இதுக்கு சப்போட்டு எல்லா தரப்பிலிருந்தும் வந்து குவிகிறது. பத்திரிகைகள், எழுத்தாளர்கள், அறிவு ஜீவிகள், அமைச்சர்கள், முத்தமிழ்க் காவலர்கள், செம்மொழி கொண்டாந்தவர்கள் என்று ஒருத்தர் பாக்கி இல்லை. எல்லாரும்.
இந்த நேர்மையின்மை என்பது சமூகத்தின் எல்லா துறை சார்ந்தவர்களிடமும், எல்லா சமூக நிலைகளில் இருப்பவர்களிடமும் காணப்படுகிறது. சமூகம் பூராவுமா, ஒருத்தர் பாக்கி இல்லாமல் எல்லாரும் ஊமத்தம்பூவைத் தின்று கிடக்கிறார்கள், இப்படி உளறுவதற்கு. இல்லை. அவர்கள் ஒழுங்காக உடை உடுத்துகிறார்கள். மனைவியை நல்லி கடைக்கு அழைத்துச் சென்று மகிழ்விக்கிறார்கள். வரும் பணத்தை ஒழுங்காக எண்ணத் தெரிகிறது அவர்களுக்கு. கண்டதைத் தின்பதில்லை தெருநடுவில் உட்கார்ந்து கொண்டு. சரவண பவனிலிருந்து ஐந்து நடசத்திர ஹோட்டல் வரை சக்திக்கேற்ப அவ்வப்போது போய் வருகிறார்கள். தெருவில் பத்துப் பேர் சேர்ந்து விட்டால் உடனே அணிவகுத்து “வருவீய்யா, மாட்டீய்யா” என்று கைகளையும் கால்களையும் உதறிக்கொண்டு இதான்யா டான்ஸ் என்று ஆடத் தொடங்குவதில்லை. சிவாஜி கணேசன் மாதிரி யாராவது வஜனம் பேச ஆரம்பித்தால், “இந்தா, யோவ், உனக்கு என்ன ஆச்சு இப்ப \?, நேத்து வரைக்கும் நல்லாத்தானே இருந்தே?” என்று கடிந்து கொள்வார்கள் கட்டாயம். அவர்கள் மகன், “தந்தையே, நான் இந்த பிரியங்கா இல்லாமல் உயிர் வாழ்முடியாது. அவளை உயிருக்கு உயிராகக் காதலிக்கிறேன், அப்பா” என்று வஜனம் பேசட்டும்.” அவன் சொல்லி முடிப்பதற்குள், “எடு செறுப்பை, ராஸ்கல், சினிமா பாத்துப் பாத்து மரை கழண்டு போயிருக்கு உதவாக்கரைக்கு”. என்று கத்திக்கொண்டே அந்தத் தந்தையார் காலிலிருந்து செருப்பைக் கழட்டினாலும் கழட்டலாம்.
இது தான் விஷயம்.” ஒரு நல்ல சாப்பாடு எதுன்னு,ஒரு நல்ல நண்பன் யாரூன்னு, அடையாளம் காட்டிச் சொல்லுங்களேன். சாப்பிடறதுக்கு நல்ல ஐட்டமா ஒரு பத்து சொன்னா நாங்க புரிஞ்சுக்குவோம் ஒரு நல்ல நண்பன் யாரென்று தெரிந்து கொள்ள ஒரு பத்து குணங்கள் அடங்கிய பட்டியல் கொடுங்கள் என்று யாரும் கேட்பதில்லை. சிவாஜி கணேசன் மாதிரி வயிற்றை எக்கிக்கொண்டு, முழி பிதுங்க உங்கள் முன் வந்து யாராவது வஜனம் பேசினால், அவனைப் பார்த்துச் சிரிக்காமல் நீங்கள் வேறு என்ன செய்ய முடியும்?. “என்னா கலைஞன் அய்யா இவன். திடீர்னு நடிகர் திலகம் ஆயிட்டானே” என்று நீங்கள் வாயைப் பிளக்கப் போவதில்லை.. இந்த சாதாரண பொதுப் புத்தி போதும்.
நான் இது வரைக்கும் ஒரு சினிமாவில் என்ன இருக்க வேண்டும் என்று சொன்னதைப் புரிந்து கொள்ள ஏதும் நுண்மாண் நுழைபுலம் வேண்டியதில்லை. கலைக்கல்லூரியில் மாஸ்டர் ஆஃப் ஆர்ட்ஸ் படித்து செர்ட்டிபிகேட்டோடு சினிமா ஹாலுக்குப் போகவேண்டியதில்லை. பூனே ஃபில்ம் இன்ஸ்டிட்யூட்டிலோ, இல்லை, தரமணி திரைப்படக் கல்லூரியிலோ போய் பட்டம் வாங்கியிருக்க வேண்டியதில்லை. தரமணி கல்லுரிக்குள் போய் வந்தவர்கள் யாரையும் நான் பொதுப் புத்தியோடு செயல்பட்டு பார்த்ததில்லை. அவர்கள் எல்லாம் உடனே கோடம்பாக்கத்துக்குத் தான் குடிபெயர்கிறார்கள். நமக்கு சாதாரண பொதுப் புத்தி போதும். அதை என்றும் எக்காலத்தும் இழக்கக் கூடாது. எந்த மேதையானாலும் அதாவது தமிழ் நாட்டில் மேதை, சிகரம், திலகம், என்று இந்த மாதிரி பட்டம் பெற்ற யாராக இருந்தாலும் சரி, அவர்கள் சம்பந்தப் பட்ட படம் எதாக இருந்தாலும் சரி, அது என்ன வாக புகழப்பட்டாலும், வெள்ளி விழா கொண்டாடியதா, 300 கோடி வசூல் பார்த்ததா, உலகமெங்கும் 2000 தியேட்டரில் ஒரே சமயத்தில் திரையிடப்பட்டதா, கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் நடந்ததா, காவடி எடுத்தார்களா, அல்லது வந்த மறு நாளே பெட்டிக்குள் சுருட்டி வைக்கப்பட்டதா என்பதெல்லாம் பற்றி கவலைப் படாமல், திரையோடும் முதல் நிமிடத்திலேயே, நாம் காண்பது நம் பொதுப் புத்திக்கு ஏற்கிறதா, இல்லை, ஊமத்தம் பூவைத் தின்று வரக் கட்டாயப்படுத்துகிறதா, என்ற் ஒரு அளவு கோல் போதும். அது நல்ல படம் எது என்பதை நிச்சயிக்கும். வேறு யாரிடமும் பட்டியல் கேட்டுக் காத்திருக்கத் தேவையில்லை. நம் ஒவ்வொருவரும் பார்த்து நமக்குள் தீர்மானித்துக்கொள்ள வேண்டிய விஷயம் இது. ஆரம்பத்திலிருந்தே தான். சி.என். அண்ணாதுரையின் வேலைக்காரி, கருணாநிதியின் பராசக்தி யிலிருந்து ஆரம்பித்து இன்றைய தசாவதாரம், யந்திரன், வரை, யுத்தம் செய் நந்த லாலா வரை, இந்த பார்வையை, பொதுப் புத்திக்கு முதலில் இவை ஏற்கின்றனவா என்று பார்த்தால் போதும். அவ்வளவும் பொட்டு பொட்டென உதிர்ந்து போகும். அன்றிலிருந்து இன்று வரை.
ஒரு இஞ்ச் கூட நாம் அந்த இடத்தை விட்டு நகர்ந்ததாகத் தெரியவில்லை. 1960களில் ஒரு படத்தில் சிவாஜி கணேசனும், ஜெமினி கணேசனும் ஒருவரை ஒருவர் சுட்டுத் தள்ள துப்பாக்கியை நீட்டிக்கொண்டு வஜனம் பேசுவார்கள் பேசிக்கொண்டே கோப மழை பொழிவார்கள். அவ்வளவு பகைமை. கொன்று தீர்க்கும் ஆத்திரம். துப்பாக்கியும் குறிபார்த்து நீண்டிருக்கும். இருப்பினும் சுடமாட்டார்கள். வசனம் தான் பேசுவார்கள். சுட்டுத் தள்ளி விட்டால், ரசிகர்களுக்கு சப்பென்று போகுமே. 15 நிமிடமாவது காரசாரமான சொற்போர் வேண்டாமா? சமீபத்தில் தானே பராசக்தி வந்து சக்கை போடு போட்டது. அதே சிவாஜி கணேசன், அதே கனல் கக்கும் வசனம் போட்டாத் தானே நல்லாருக்கும். என்ற 1960 களின் சிந்தனை இன்னும் ஜீவித்திருக்கிறது என்பதை சமீபத்தில் தொலைக்காட்சி ஏதோ ஒன்று காட்டிய ஒரு படத் துணுக்கில், அது சன் டிவியின் டாப் டென்=ஆக இருக்கலாம். அல்லது அந்த வகையில் இன்னொரு தொலைக்காட்சி நிறுவனத்தின் இன்னொன்று. அதே துப்பாக்கி. அதே எதிரும் புதிருமாக சுட்டுத்தள்ளிவிட்டுத் தான் மறு காரியம் என்று துப்பாக்கியை குறி வைத்து நிற்கும் இருவர். இருவர் இடையே மூன்றடி தூரமே இருக்க இருவரும் ஒருவரை ஒருவர் கனல் கக்கும் இரண்டு தனித் தனி குற்றப் பத்திரிகையை ஆளுக்கொன்றாக மாறி மாறி ஒப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். சுட்டு தொலைத்து காட்சியையும் அவர்கள் எண்ணத்தையும் ஒரு முடிவுக்குக் கொண்டுவர கட்டாயமாக மறுக்கிறார்கள். இடையில் நிற்பது வசனகர்த்த கொடுத்த பத்து பக்க வசனம். தீப்பொறி பறக்கும் தமிழில். ரசிகப் பெருமக்களுக்கு தமிழ் அறிவும் புகட்டியாயிற்று. கருணாநிதி-சிவாஜி கணேசன் பின் இரண்டு கணேசர்களும் இரண்டு மூன்று தலைமுறைகளுக்கு முன் ஸ்தாபித்த கலை மரபையும் பேணிக் காத்து வளர்த்து இந்தத் தலைமுறைக்கு கொடுத்தும் ஆயிற்று. இதைத் தான் பன்முனை வளர்ச்சி என்று இன்னொரு துறையில் சொல்வார்கள்.
(22) - மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம்
திரும்பத் திரும்ப நான் வலியுறுத்துவது நம் பொதுப்புத்தியைத் தான். நாம் கல் தோன்று மண் தோன்றா காலத்துக்கும் முன் தோன்றிய மூத்த குடி என்று நினைத்த போதெல்லாம் நம் பெருமையைச் சொல்வதில் எவ்வளவு அபத்தம் இருக்கிறதோ அவ்வளவு அபத்தம் நம் பொதுப் புத்தியைப் பயன்படுத்தாத நம் எல்லா சிந்தனைகளிலும் செயல்களிலும் இருக்கிறது. முதலில் நம் பெருமையைச் சொல்ல எல்லோரும் எடுத்து வீசும் இந்த கோஷமே ஒரு அபத்தம். நம் ஒவ்வொரு மடத்தனத்துக்கும் அலங்காரமான படாடோபமான தமிழில் ஒரு கோஷம் எப்போதும் தயாரித்து ரெடியாக வைத்துக் கொள்கிறோம் எடுத்து வீச. “அப்படீங்களா, இப்ப வரைக்கும் தெரியாம போச்சுங்களே, படிச்சவங்க, விஷயம் தெரிஞ்சவங்க சொல்றீங்க, அப்ப நிசமாத்தான் இருக்கணும், கேட்டுக்க வேண்டியது தான்” என்று ஒரு மடையன் வாய் பிளந்து விட்டானானால், உடனே அது மக்கள் குரலாகிவிடுகிறது. நாமும் கொண்டு வந்த மூட்டையை அவிழ்த்து, சரக்கு இங்கு விலை போகும் என்று படவே கடையைப் பரப்பிவிடுகிறோம்.
நம்ம புத்தி அப்படி. எந்த விதமான புதிய சிந்தனையும் புதிய நடைமுறையும் கைக்கு வந்ததும், இது விலை போகுமா? என்ற சந்தேகங்கள் நம்மை அரித்துக்கொண்டே இருக்கும். செய்ய மாட்டோம் சிந்திக்க மாட்டோம். பழைய பாதை, ஆகி வந்த பாதை, “மார்க்கெட்லே நல்லா போகுதுங்க” என்று சொல்லப்படும் சரக்கு தான் எப்போதும் எங்கும் எல்லா ரூபங்களிலும் வியாபித்திருக்கும். .. தனக்குச் சொல்ல, ஒன்று இருக்கிறது அதை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தோடு என்றுமே எதையுமே செய்தறியாத, மார்க்கெட்லே விலை போகிறது, நல்ல காசு பன்ணலாம் என்று எது தோன்றுகிறதோ அதைச் செய்யும் வியாபார மனது தான் சினிமாவில் அனைத்துத் துறைகளிலும் ஆட்சி செலுத்தும் மனம். இது இன்றைய கூத்து அல்ல. என்றுமே உள்ள கூத்து தான். இப்0போது அது மிகவாக வலுவடைந்து, வேறு எப்படியும் சிந்திக்க வேண்டாதவாறு அதற்கு கொள்கை, வெற்றி, கலை என்ற ஜரிகைத் தலைப்பாகை எல்லாம் சூட்டப்பட்டு அலங்காரமாக மேடையில் வீற்றிருக்கும் ஒன்று இது. யாரும் எந்த விதமான அடிப்படைக் கேள்விகளோ, வேறுபட்ட சிந்தனைகளோ எழுப்புவதில்லை. எழுவதில்லை.
ஆரம்பம் முதலே. 1891 லோ எப்பவோ லூமியேர் சகோதரர்கள் சலனப் படம் என்ற ஒரு புதிய தொழில் நுட்ப சாதனத்தைக் கண்டுபிடித்த போது, அவர்கள் அதைக் கொண்டு படம் பிடித்தது நீராவி என்ஜின் ஒன்று புகை கக்கிக் கொண்டு விரைந்து காமிராவை நோக்கி வருகிறது. அதாவது ரயில்வே ஸ்டேஷனுக்குள் நு்ழைகிறது. அதை முதலில் பார்த்தவர்கள் பயந்து ஓடினார்கள் என்பது செய்தி. இதே புதிய சாதனம் இந்தியாவுக்கு வந்த போது பட்கே எடுத்த முதல் படம் ராஜா ஹரீஷ் சந்திரா. மேடையில் நடிக்கப்பட்ட நாடகம். இது 1911-லோ என்னவோ நடந்தது. அதே தமிழ்நாட்டுக்கு வரும்போது எடுக்கப்பட்டதும் ஒரு நாடகம் தான். எம்.கே.தியாகராஜ பாகவதரும், எஸ்.டி. சுப்பலக்ஷ்மியும் சேர்ந்து பாடி நடித்த, நடித்துக்கொண்டிருந்த சக்கை போடு போட்ட நாடகமாக பிர்பலமான, மக்கள் அபிமானததைப் பெற்று வியாபார ரீதியில் வெற்றி என்றும் பெருமை பெற்ற பவளக் கொடி என்ற நாடகம். அதிலும் அது சலனப் படமாகப் பிடிக்கப் படுவதற்காக தயாரிக்கப் பட்டதல்ல. தமிழ் நாடு பூராவும் சுற்றிப் பிரபலமாகிவிட்ட நாடக மேடைக் காட்சியையே அப்படியே படமெடுக்கப்பட்டது தான். ஒரு வம்பு தும்பு இல்லை. வெற்றிகரமாக நடந்து கொண்டிருந்த நாடகத்தையே நாடக மேடை உருவிலேயே படம் எடுத்தார்கள். இப்படித்தான் ஒரு புதிய சாதனத்தை அதன் சாத்தியங்கள் என்ன, அது புதிதாக நமக்கு அளிக்க என்ன தனக்குள் கொண்டிருக்கிறது என்பது பற்றிய சிந்தனையே இல்லாமல், அப்படி எல்லாம் ஒன்றும் புதுசா செய்யலாமா வேண்டாமா என்று யோசித்து, முதல்லே விலை போகிறதைச் செய்யலாம் என்று முடிவெடுத்தார்கள் என்றும் சொல்லமுடியாது.
காமிரா இருக்கு. போட்டோ புடிச்சா மனுஷங்க நடக்கறதை, பேசறதை, அழுவறதைப் பாக்கலாம் கேட்க முடியாது தான். அது போதும். அதுவே புதுசு தான். லூமியே வாழ்க்கையின் ஒரு புதிய நாடகப் பண்பு மிகுந்த ஒரு காட்சியை அதன் சலனத்தைப் படம் பிடித்து புதிய பாதைகளைக் காட்டுகிறான். இங்கு நாம் அது நடந்து 30-40 வருடங்களுக்குப் பிறகு நடந்து கொண்டிருக்கும் பெயர்பெற்ற நாடகத்தைப் படம் பிடிக்கிறோம். அதாவது சொல்லப்படுவது, காட்சிப் படுத்தப் படுவது மாறவில்லை. அதன் வெளி வடிவம் மாறியிருக்கிறது. அதாவது அன்றாடம் நாம் பார்க்கும் முனியம்மாவுக்குப் புதிதாக உடை உடுத்தி மல்லிகா என்று பெயர் சூட்டி முன் நிறுத்தியிருக்கிறார்கள். அதே முனியம்மா தான். அப்பப்போ உடைதான் மாறும். பேரும் மாறும்.
வம்பு தும்பு இல்லாதது, கையைக் கடிக்காது, போட்ட பணம் திரும்பி வரும் என்ற குறைந்த பட்ச எதிர்பார்ப்பிலிருந்து மகத்தான வெற்றிப்படம் என்பது வரை எதிர்பார்ப்புகள் சிகரத்தைத் தொடும். எந்த சிந்தனை, அல்லது சிந்தனையின்மை முதல் படமாக பவளக்கொடி நாடகத்தை (சினிமா பாஷையில் – ப்ரூவ்டு சப்ஜெக்ட்) முதல் சலனப்படத்துக்குத் தேர்ந்ததோ அதே சிந்தனை தான் அடுத்து ஒரு பத்து பதினைந்து வருடங்களுக்கு புராணக் கதைகளே படமாக்கப்பட்ட. காரணம் கதாகாலட்சேபங்களில், நாடகங்கங்களில், புராணக் கதைகள் ப்ரூவ்ட் சப்ஜெக்ட்.
ப்ரூவ்ட் சப்ஜெக்ட்!!! .இது போல இன்னும் சில வார்த்தைகள் அவ்வப்போது வரும் ஒரு காலத்தில் புழங்கிய இம்மாதிரி வார்த்தைகள் அடுத்த கட்டத்தில் புழங்காது. உதாரணங்கள்: செண்டிமெண்ட், நேடிவிடி, ப்ராஜெக்ட் இன்னோரன்ன, இவையெல்லாம் இப்போது வந்தவை. போகப் போக இவற்றைக் கற்றுக் கொள்வோம். ஒர் கால கட்டத்தில் ”அண்ணே” என்பது தமிழ் சினிமாவில் புழங்கிய பரிபாஷை. இப்போது சார் ஆகியிருக்கிறது. இன்றைய கால கட்டத்தில் ”அண்ணே”:க்கள் எல்லாம் வழக்கொழிந்த மொழி. அல்லது extinct species. சிம்பு கூட சார்-ஆக அந்தஸ்து உயர்ந்தாயிற்று. அந்த காலத்தில் வாலிக்கு சிவாஜி அண்ணே தான். இப்போது சிவாஜி மறைவுக்குப் பிறகு சிவாஜி கணேசனை “பெயர் சொல்லாமல், ‘நடிகர் திலகம்” என்று தான் யாரும் சொல்ல வேண்டும். கருணாநிதியை பெயர் சொல்லிக் குறிப்பிடுவது கருணாநிதியை மனம் வேதனைப் படுத்தும் பண்பாடற்ற செயல். அதை அவரே அடிக்கடி சொல்லி வேதனைப் பட்டிருக்கிறார். இங்கு கருணாநிதியை சினிமா ஆளுமையாகக் கணக்கிலெடுத்துத் தான். இங்கு அரசியல் பேசவில்லை. எப்படி சினிமா என்பதை இந்த தமிழ் சமூகம் புரிந்து கொள்ளாது, ஒரு நாடகமாக, அது கூட கலையாக பரிணமிக்கவில்லை. ஒரு தேர்ச்சியோ நயமோ அற்ற நாடகம் சினிமாவாக தொடர்கிறதோ, அப்படித்தான் இருநூறு முன்னூறு வருஷ நிலபிரபுத்துவ மதிப்புகளும் வாழ்க்கையும் தான் தமிழ்சமூகத்தில் தொடர்கிறது. அது தான் சினிமாவிலும் அரசியலிலும் பரவியிருக்கிறது. மிக மோசமான ஒரு நிலப் பிரபுத்துவ மதிப்பும் வாழ்க்கையும். அரசியல் சினிமா இரண்டின் எல்லா கூறுகளையும் பார்க்கலாம். மலர்க் கிரீடம், பொன்னாடை, பட்டங்கள் மோகம், அர்த்தம் இழந்த அலங்கார வார்த்தைகள், தர்பார் சம்பிரதாயங்கள், இவையெல்லாம் சினிமா அரசியலாக, ,அரசியல் சினிமாவாக தோற்றத்திலும் உள்ளார்ந்த அர்த்தத்திலும் மாறி மாறி அவதாரம் எடுப்பதையும், சில சமயம் இரண்டு தோற்றங்களுமே ஒரே இடத்தில் சங்கமிப்பதையும் தமிழ் வாழ்க்கையில் பார்க்கலாம்
அக்காலத்தில் சினிமாவுக்கு வந்தவர்கள் நாடக மேடையிலிருந்து வந்தவர்களாதலால் சினிமாவில் நடிப்பது வேறு, முற்றிலும் வேறு எனற எண்ணமே அவர்களுக்குத் தோன்றவில்லை. நடிகர்கள் மாத்திரமல்ல, இயக்குனர், பார்க்கும் மக்கள் எல்லோருக்குமே தான். நாடகத்தில் நடித்தது போல நடிப்பது தான் நடிப்பு என்று நினைத்தார்கள். அது போலவே கதை சொன்னார்கள். வசனங்கள் பேசினார்கள். நாடகத்தில் எழுதுவது போலவே உரத்த, அலங்கார, படாடோபமான, வசனங்கள் எழுதினார்கள். பேசினார்கள். அது கேட்கும் மக்களுக்கு அடுக்கு மொழி சுவைப்பது போல, அர்த்தமற்ற அலங்காரங்கள் சுவைப்பது போல இதுவும் சுவையாக இருந்தது. புகழ் பெற்றது. சினிமா என்ற புதிய சாதனத்தைப் புரிந்து கொண்டிருந்தால், பவளக் கொடி வசனம் மாத்திரமல்ல, பின்னர் வந்த ஆர்ய மாலா, தூக்குத் தூக்கி, எதையெடுத்தாலும் சரி, எதுவும் மாறவில்லை. உதாரணத்துக்கு மந்திரி குமாரி, பராசக்தியிலிருந்து இன்றைய பொன்னர் சங்கர் வரை கருணாநிதியின் கதைபாணியோ வசனமோ அதன் குணத்தில் மாறாதிருப்பதைக் காணலாம். பொன்னர் சங்கர் நான் பார்க்கவில்லை. பார்ப்பேன் என்றோ, பார்க்க எனக்கு ஆவல் இருக்கும் என்றோ சொல்வதற்கில்லை. ஆனால் கருணாநிதியின் குடும்பத்தினர் நடத்தும் பத்திரிகை “தினகரன்” பொன்னர் சங்கர் படத்துக்கு விமர்சனம் எழுதியிருக்கிறது. அந்த விமர்சனம் தம் குடும்பப் படத்துக்கு எப்படி இருக்கணுமோ அப்படி இருந்தது. இருந்தாலும், அதில் கருணாநிதியின் வசனத்தை எடுத்துக்காட்டோடு பாராட்டுமுகமாக ஒரு சாம்பிள் வரி தந்திருந்தது.”ஆண்டவனுக்கு படைக்கக் கொண்டு வரும் பிரசாதத்தை அர்ச்சகரே ருசி பார்ப்பதா?” இது அழகுபடுத்தியதற்கு உதாரணமாக இந்த வசனம் என்று சொல்லப்பட்டது. அவரது சமீபத்திய மூன்று நான்கு படங்கள் அவரது கதை வசனத்தில் வந்தனவே அவற்றிலிருந்து கொடுத்திருக்கலாம். நான் அவற்றின் துணுக்குகளையே பார்த்திருக்கிறேன். முழுப் படத்தையும் அல்ல. கருணாநிதியை நான் எடுத்துக்கொண்ட காரணம் அவர் தான் இந்த 60-70 கால நீட்சியில் தொடர்ந்து காணும் பெயர். ஆனால் இந்த நாடக பாணி, உயிர்த்துடிப்பில்லாத வசனம் என்பது தொடக்கத்திலிருந்தே இன்று வரை காண்பது. எனக்கு ஆர்ய மாலா வசனம் எழுதியது யார் என்று தெரியாது. சினிமா கதை வசனம் என்பது காட்சி ரூபமாக சொல்லப் படுவது, அதில் காட்சியும் பேச்சும் ஒன்றையொன்று தழுவி ஒரு முழுமை பெறுவது. வசனம் ஒரு பின்னமாகவும் காட்சி ஒரு பின்னமாகவும் ஒன்றிணைந்ததாக இருக்கவேண்டும். கருணாநிதிக்குப் புகழ் தந்த பராசக்தி வசனம் எல்லோருக்கும் தெரியும். நான் சொல்ல வேண்டியதில்லை. அது சினிமாவில் மாத்திரம் அல்ல கோர்ட்டிலும் கூட பொருந்தாதது. அது வெற்று வார்த்தை மழை. அது வாழ்க்கையுமல்ல.யாரோ அண்ணாத்துரையின் ஆற்றலைப் புகழ்வதாக எண்ணிக்கொண்டு ஒரு விவரம் சொன்னார். ஒரே ராத்திரியில் உட்கார்ந்தவர் 200 பக்கங்களுக்கு கதையும் வசனமும் எழுதிக்கொடுத்தார்.அதில் ஒரு வரியைக் கூட எடுக்கவோ மாற்றவோ முடியாது என்று. அண்ணாதுரையும் தமிழ் நாட்டில் வழங்கும் நாடகங்களை ரசித்தவர் அந்த பாணியையே அலங்கார அடுக்குத் தமிழில் கொட்டியவர். அது வேறு என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம்,. சினிமா இல்லை. ஒரு கலைஞன் எழுதும் கதையுமல்ல. அவர் தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்ட அரசியல் சமூக சீர்த்திருத்தக் கொள்கைப் பிரசாரத்தை மக்களைக் கவரும் வகையில் செய்தவராக இருக்கலாம். சினிமா இல்லை. அது போல கருணாநிதி என்ன, பெரும் புரட்சியைக் கொணர்ந்தவராக பாராட்டப்படும் இயக்குனர் சிகரம் கே. பாலசந்தர் எழுதுவதும் சினிமா இல்லை. அவருக்கும் சினிமா என்ற கலைச் சாதனத்துக்கும் ஒரு உறவும் கிடையாது. எல்லாம் வெவ்வேறு நாடக பாணிகள். , .
(23) மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம்
நான் ஒன்றைக் கவனித்து வருகிறேன். நான் என்ன எழுதினாலும் நம் சினிமா கிட்டத்தட்ட மூன்று தலைமுறைகளாக ஒரே பாதையில், சிந்தனையில், அதாவது வணிக உலகைச் சார்ந்த ஒன்றாக, தொழில் சார்ந்த ஒன்றாக, ஆகவே அதிக பட்ச மக்களைச் சென்ற்டைய அவர்களுக்கு பிடித்த அதம பொதுவான ரசனையை வளர்ப்பதாக அந்தப் பாதையில் அது தவிர வேறு சிந்தனை எதையும் அனுமதிக்காத வளர்ந்து பெருகி, அதிலேயே நாமும் ஊறித் திளைத்து வருவதன் காரணமாக வேறு எந்த சிந்தனைக்கும் இடம் தராத ,மனக் கட்டமைப்பில் இருந்து வருகிறோம். அத்தோடு அதற்கு கௌரவமும் அரசியல் பாது காப்பும் பெற்றுத் தந்துள்ளோம். அதிக மக்களின் அதம பொது ரசனைக்குத் தீனி போடுவது மக்களுக்கான கலையை வளர்ப்பது என்றும் பலத்த கோஷத்தோடு சொல்லிக்கொள்கிறோம். எம்.ஜி.ஆரும் மற்றோரும் சினிமாவுக்கு வந்த காலத்தில் அவர்கள் சினிமாவில் தம் ஈடுபாட்டை தொழில் என்றே கூறி வந்தனர். ஆனால் இப்போது எந்த ஆபாசக் குத்தாட்டம் போடும் துணை நடிகையும் தன் ஈடுபாட்டைக் கலை என்று தான் சொல்லிக்கொள்கிறாள். அவள் மட்டுமல்ல பத்திரிகைகளும் டைரக்டரிலிருந்து தொடங்கி குத்தாட்ட துணை நடிகை வரை எல்லோரும் கலைஞர்களாகத் தான் பேசப்படுகிறார்கள். திரைப்படக் கலைஞர்கள் என்று தான் அவர்கள் தம் சங்கத்துக்கு பெயரிட்டுக்கொள்கிறார்கள்
.
இந்த கள்ளுண்ட மயக்கம் தரும் சிந்தனையை விட்டு அவர்கள் வெளியே ஏன் வரவேண்டும்? பணமும் கௌரவமும் கொடுக்கும் மலினமான ஒரு ஈடுபாட்டைக் கலை என்று கௌரவித்து உலகம் போற்றும் போது அதை இந்நாளைய ரெக்கார்ட் டான்ஸ் என்று ஏன் சொல்லிக்கொள்ள வேண்டும்.? 50 வருட காலமாக இத் திரைப்படத் துறையில் ஈடுபட்டுள்ள அந்த ஈடுபாட்டில் கலைஞர் பட்டத்தையும் பெற்றுள்ளவரின் அரசும் இவர்களுக்கு கலைமாமணி என்று விருதும் கொடுத்து கௌரவிக்கத் தயாராக இருந்தால், இவர்களுக்கு அதில் என்ன ஆட்சேபமோ குறையோ இருக்க முடியும்?
சாதாரண மக்களை விட்டு விடுங்கள். அவர்களைப் பற்றியும் நான் அறிந்ததை, பார்த்ததை, இப்போது இந்த சந்தர்ப்பத்தில் நினைவு கொள்வதைச் சொன்னால் எத்தனை பேருக்கு அதை எதிர்கொள்ள மனமிருக்கும்? மூன்று வயது பிராயத்தில் ஒரு டூரிங் சினிமா கொட்டைகை எங்கள் வீட்டுக்கு எதிரே குறுக்கிடும் ரோடைத் தாண்டினால் இருந்தது .எங்கள் வீட்டுத் திண்ணயில் இரும்புக் கிராதிக்குள்ளிருந்து இரவு நேரம் பூராவும் விழித்திருக்கும் வரை சினிமாப் பாட்டுக்களையும் உரையாடல்களையும் கேட்கலாம். சினிமா பார்த்த அனுபவம் கிட்டும். சினிமா பார்த்து விட்டுத் தம் கிராமத்துக்கு வண்டியோட்டிச் செல்பவர்கள். சந்தை வியாபாரிகள் தாங்கள் கேட்ட சினிமா பாட்டுக்களைப் பாடியவாறே வண்டி ஓட்டிச் செல்வார்கள். அவர்கள் தம் ஆனந்தத்துக்கு தமக்குத் தெரிந்த குரலில் பாடுவார்கள். என்னவாக இருந்தால் என்ன? இரவு நேரம் கிராமம் போய்ச் சேரும் வரை சுகமாகக் கழியும். அவர்கள் பாட்டை அவர்களே ஆனந்தித்துக் கொண்டு செல்வார்கள். அவர்கள் பாடும் பாட்டுக்கள் என்ன தெரியுமா? சிவ கவியில், அஷோக் குமாரில் தியாகராஜ பாகவதர் பாடிய பாடல்கள். ”அப்பனைப் பாடும் வாயால் பழனியாண்டி சுப்பனைப்பாடு வேனோ….?”சின்னப்பா பாடிய பாடலகள். “மானமெல்லாம் போன பின்பே வாழ்வதும் ஓர் வாழ்வா?” கோவலன் படத்தில் பாடியது. சினிமாவின் பாடல்கள் அத்தகைய ரசனையை ஏதும் அறியாத பாமரனின் மனத்தில் விதைத்தது. வளர்த்தது. என்னமோ மக்களுக்காக படம் எடுப்பதாகச் சொல்லும் சினிமாவுக்கு வந்துவிட்ட வணிகப் பெருமக்கள் சொல்வதன் பொய்மை அவர்களின் மூத்த தலைமுறைக்குத் தெரியும். அவர்கள் பணம் பண்ண வந்தவர்கள். மக்கள் தம் அதம பொது ரசனைக்கு எதைக் கொடுக்கிறார்களோ அதை விழுங்கி ரசிக்க, பழக்கப்படுத்தப் படுத்தப்பட்டுள்ள சாதாரண மக்களை விட்டு விடலாம்.
ஆனால் உலகத்தின் தரமான சினிமாக்களையெல்லாம் ரசிப்பவரகளாக, அவற்றின் இன்ஸ்பைரேஷனில் தமிழ் மக்களுக்கு அவற்றை அளிப்பவர்களாகச் சொல்லிக்கொள்ளும் சினிமாப் பெருந்தலைகளை என்ன சொல்வது? இங்கு உள்ள இளம் தலைமுறையினர் படித்த விவரம் தெரிந்திருக்க வேண்டியவர்கள், சினிமாத் தலைகளின் வேஷதாரித்தன பேச்சின் உள்ளர்த்தங்களைத் தெரிந்திருக்க வேண்டியவர்களும் சினிமா மக்கள் கலையாக்கும், வியாபாரமாக்கும், பெரு முதலீடுகளை வேண்டுவதாக்கும், போட்ட பணம் எடுக்க வேணுமாக்கும், மக்களின் சொட்டும் வியர்வையைக் காயவைக்கணுமாக்கும் என்று திரும்பத் திரும்பச் சொல்வது, வணிகப் பெருந்தலைகளும், கலைஞர்கள் என்று சொல்லிக்கொள்ளும் வேஷாரிகளும் இயக்குவிக்க ஆடும் பேசும் பாவைகளாகத் தானே பேசுகிறார்கள். அவர்களுக்கென்று ஒரு சுய சிந்தனையோ வாழ்வோ இருப்பதாகத் தெரியவில்லையே.
ஆக எனக்கோ அல்லது தமிழகத்தின் ஆபாசமும் பாமரத்தனமும் கொண்ட சூழலுக்கு இரையாகாத யாரும் என்ன சொன்னாலும் இந்த சூழலில் மூழ்கி சுகம் கண்டவர்களுக்கும், அவாறு மூழ்கடிப்பதில் தம் புகழும் பணமும் கண்டு சுகம் காணுபவர்களுக்கும் இதை மாற்றுவதில் எந்த அக்கரையும் இருக்க முடியாது. இருக்கும் சுகத்தை, அனுபவிக்கும் சுகத்தை விட்டு விட்டுத் தெரியாத ஒன்றுக்கு யாரும் ஆசைப்படுவார்களா? கொஞ்சம் யோசித்துத் தான் பாருங்களேன், ”கட்டமரத் துடுப்புபோல இடுப்பை ஆட்டுறா”, இல்லை, என்னமோ விக்ரம் ஒரு பாட்டு பாடுவாரே, ரோட் பூராவும் பெயிண்ட் அடித்து அதில் வித விதாமான் அலங்காரத்தில் அணி வரும் லாரிகளோடு, ‘என்னமோ ”அண்டங்காக்கா கொண்டைக்காரி, , என்று, சரி இதெல்லாம் இல்லாத இது போன்ற பாட்டுக்கள், ஆட்டங்கள் இல்லாத ஒரு ஆரோக்கியமான சினிமா என்று வந்துவிட்டால் என்ன ஆகும், ஒரே போரடிக்கும் இல்லையா?. அந்த பயங்கரத்தை நமீதா, திரிஷா, மும்தாஜ் யாரும் இல்லாத பயங்கரத்தை, போரை இதற்கு பாட்டெழுதும் கவிஞர்கள், இசை அமைக்கும், இசைஅமைப்பாளர்கள், பின்னணி தரும் வாத்தியக் காரர்கள் இவற்றையே நம்பி திரை உலகத்துக்கு வரும் நடிகர்கள், இதை நம்பி பணம் போடும் வினியோகஸ்தர்கள், இயக்குனர்கள் எல்லாம் என்ன செய்வார்கள்? பாவம் தவித்துப் போய்விட மாட்டார்களா?
இவர்கள் சிந்தனையும் மனமும் இதைவிட்டு விலக கட்டாயம் மறுக்கும். அவர்கள் மட்டுமல்ல இவர்களது அன்புக்கும் பாசத்துக்கும் பாத்திரமான200 300 ரூபாய்களோடு க்யூவில் நிற்கும் ரசிகப் பெருமக்களூம் தான். வேறு எதுவும் சிந்தித்துப் பழக்கம் இல்லை இவர்களுக்கு.
ஒரு கதை ஒன்று சொல்வார்கள். புராணங்களிலிருந்து. ஒரு ரிஷியோ இல்லை மன்னனோ ஏதோ சகிக்கவொண்ணாத பாப காரியத்தைச் செய்து, சாபத்துக்கு ஆளாகிறார். “ பன்றி மாதிரி என்னிடம் நடந்து கொண்டாய். நீ பன்றியாகக் கடவது? என்று சாபத்தைக் கேட்ட பின் தானே தன் தவறு தெரியும், ரிஷியானாலும், மன்னனாலும். தேர்தல் சமயத்தில் அரசுக்கு வரும்ம் ஞானோதயம் போல, உடனே ரிஷியும் தன் தவற்றை அறிந்து உடல் நடுங்க, ”:என்னிடம் இரக்கம் கொண்டு இந்த சாபத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளுங்கள்” என்று இறைஞ்சிக் கேட்க, கடவுளும் தண்டனை ரொம்பத் தான் அதிகப் போய்விட்டது போலிருக்கே என்ற செகண்ட் தாட்டில், “சரி உன் குற்றத்துக்கு சாபத்தை அனுபவித்தே ஆகவேண்டும். நானும் கொடுத்த சாபத்தைத் திரும்பப் பெற்றுககொள்ள முடியாது. நீ ஒரு வருஷ காலமாவது பன்றியாக சேற்றிலும் சகதியிலும் உழல்வாயாக. பின்னர் நானே திரும்ப வந்து உனக்கு சாபவிமோசனம் தருகிறேன். திரும்ப நீ ரிஷியாகலாம்” என்று அவனுக்கு அருள் பாலித்தாராம். ரிஷியும் உடனே பண்றியாக மாறி சேற்றில் விழுந்து புரள ஆரம்பித்தாராம். பன்றிக்குட்டிகளும் பெண் பன்றிகளும் சூழ. அதுவும் சுகமாகத்தான் இருந்திருக்கிறது. அட இது தெரியாமப்போச்சே என்று நினைத்துக் கொண்டாராம். ஒரு வருஷம் கழித்து கடவுள் திரும்ப பன்றியாக உழலும் ரிஷி முன் தோன்றி, “உன் சாப காலம் முடிந்தது. திரும்ப ரிஷியாக மாறுவாயாக, என்று சொல்லி முடிக்கும் முன் அந்த ரிஷிப் பன்றி சேற்றில் புரண்ட வாறே சொன்னதாம். “பகவானே, இது வே எனக்கு சுகம் தருவதாக இருக்கிறது இது தண்டனை அல்ல. நீங்கள் வரமருளிய சொர்க்க வாசமாக எனக்குத் தோன்றுகிறது. இதை விட்டு வர மனமில்லை எனக்கு. யார் ரிஷியாக, காடும் மலையும் அலைந்து பட்டினி கிடந்து தவம் இயர்றி கடைசியில் சாபத்துக்கு என்றும் பயந்து கொண்டு வாழ்வது?. அந்த வாழ்க்கையும் வேண்டாம். சாப விமோசனமும் வேண்டாம். எனக்கு இந்த சொர்க்கமே மிகுந்த காலத்துக்கும் நீடிக்கட்டும் என்று வரம் தாருங்கள்”. என்று வேண்டிக்கொண்டதாம். கடவுளும் ஒரு ஏளனச் சிரிப்போடு, “அப்படியே ஆகட்டும், பக்தனே” என்று வரம் அருளிப் பின் தன் மற்ற வேலைகளைப் பார்க்கப் போனாராம்.
iஇந்தக் கதையின் சமகால, நம் வாழும் கால, தமிழக புதிய பதிப்பும் உண்டு. அது நம் எல்லோருக்கும் தேரிந்ததே. தெரிந்தது தான் என்பதை நான் சொன்னபிறகு தான் புலப்படும். அது பின்னர். {இதில் அந்தக் கால கல்கி தொடர்கதையின் சுவாரஸ்யமும் சஸ்பென்ஸும் இருக்கிறதல்லவா?.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.