மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம் (9)
இது காறும் நான் எழுதியவற்றையும் எதிர்கொண்டு அபிப்ராயம் தெரிவித்தவர்களில் பெரும்பாலோர் தமிழ் சினிமா எப்படி இவ்வளவு வருஷங்களாக செயல்பட்டு வந்துள்ளதோ, அதன் அபத்த சம்பிரதாயங்கள் அத்தனையையும் எவ்வித கேள்வியும் ஒன்றுகூட எழுப்பாமல் அவ்வளவு அபத்தங்களையெல்லாம் சினிமாவுக்கு இயல்பானவையாக ஏற்று தம் பொதுப்புத்தியைத் தொலைத்துவிட்டவர்களாக இருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் அந்த அபத்தங்களைக் கொண்டாடும் சிறப்பிக்கும் பின்னர் அவை பற்றி இறுமாந்து ஆகாயத்தை நோக்கி மூக்கை உயர்த்தும் மன நிலையில் இருப்பது தெரிகிறது. இவர்கள் மட்டுமல்ல. இவர்கள் தமிழ் சமுதாயத்தின் மாதிரிகள் தானே. இணையத்திற்கென்று சமுதாய குணத்தை மீறிய குணம் கொண்டவர்களா இங்கு வந்துவிடப் போகிறார்கள்? அது மட்டுமல்ல. அந்த அபத்தங்கள் அத்தனையையும் நியாயப்படுத்தும் ஆவேசமும் கொண்டவர்களாக இருக்கிறார்கள். “நீங்கள் சொல்றதெல்லாம் சரிதான். ஆனால் படம் எடுக்கும் சிரமங்களும், போட்ட பணத்தை எடுத்து பின் லாபம் பண்ணும் சிரமங்களும் உங்களுக்கென்ன தெரியும்?” என்ற கேள்வி அடிக்கடி முன் வைக்கப்படுகிறது. “சினிமான்னா அப்படித்தாங்க இருக்கும்? வாழ்க்கை அவதிகள் தான் எப்போதும் இருக்கே. அதை மறந்து இரண்டு மூணு மணி நேரமாவது ஜாலியா பொழுது போக்கத்தானே சினிமாவுக்கு போறோம்.” என்று ஒரு நியாப்படுத்தல். “சினிமாங்கறது மக்களுக்காகங்க. மக்களை ஒதுக்கிட்டு நாம வாழ்முடியாதுங்கறத் நாம் புரிஞ்சிக்கணும்.
படத்தை எடுத்து நாமேவா பாத்துக்க முடியும். மக்கள் பாத்து ரசிக்கணுமில்லியா?”” என்று இன்னொரு ஜனநாயக வாதம். என்னமோ இவர்கள் மக்களைத் துயரக் கடலிலிருந்து மீடகவே இவர்கள் பிறவி எடுத்துள்ளது போலத் தான் பேச்சு. அது ஜனநாயகம் இல்லை. பண நாயகம். அதுவும். பிழைப்புக்காக, பணம் சம்பாதிக்கிறதுக்காகவே வியாபாரம் செய்யும் ஒரு பலசரக்குக்கடைக்காரரின் நியாயம் இல்லை இது பச்சையாகச் சொல்வதென்றால், இது தேவடியாப் பிழைப்பின் இன்னொரு ரூபம். அதற்கு நாம் என்னனென ரூபமோ, பெயரோ கொடுத்துக்கொண்டாலும், வேஷங்களையும் கோஷங்களையும் களைந்து விட்டால் இது தேவிடியாப் பிழைப்பின் குணத்தைக் கொண்டது தான். அவளுக்காவது ஒரு கட்டத்தில் அவள் நினைத்தால், வந்தவனை “போறியா இல்லியா?” என்று விரட்டி அடிக்கும் சுதந்திரம் உண்டு. இங்கு அது இல்லை. வெற்றி என்ற கொள்ளையடிப்பு நடந்துவிட்டால், அதற்கு புனித முலாம் பூசப்பட்டு, நியாயங்கள் கற்பிக்கப்பட்டு என்னென்னவோ கோஷங்கள் எழுப்பி, கொண்டாட்டங்கள் நடத்தி, அரசு விருது பெற்று ஊர்வலம் வரலாம்.
இந்த கூத்து சினிமா தமிழ் நாட்டில் தலையெடுத்த காலத்திலிருந்தே கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து இன்று பூதா காரமாக நம்மேல் கவிந்து விட்டதால், இது இயல்புக்கும் வாழ்க்கைக்கும், உண்மைக்கும் முற்றிலும் விரோதமானது என்ற எண்ணமே நமக்கு ஏற்படுவதில்லை. வாழ்க்கை அப்படி இல்லையே என்றால், சினிமான்னா அப்படித்தான்ய இருக்கும் என்று சினிமா பார்ப்பவர்களும் சரி, சினிமா த்யாரிப்பாளர்களும் சரி ஏகோபித்த சிந்தனை கொள்ளும் வகையில் மூளைச் சலவை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
நாம் நைஜீரியாவுக்குப் போய் வாழ நேர்ந்தால் அந்த நாட்டு மக்களின் நம்மிலிருந்து வேறுபட்ட வாழ்க்கையை நாம் அது அவர்களது வாழ்க்கை என்று மன சமாதானம் கொள்கிறோம். அதே போல அவர்களும் நம் வாழ்க்கை வேறுபட்டிருப்பதை இதே சமாதானத்தோடு ஒப்புக்கொள்ளும் மன நிலை கொள்வார்கள்தான். இன்னும் வேறு பாதிரியாகச் சொல்லிப் பார்ப்பதென்றால், ஒரு பைத்தியக்காரனின் பேச்சுக்களையும் நடந்துகொள்ளும் முறையையும், இது அவனுக்கு இயல்பு என்று மனம் சமாதானம் கொண்டு நம் வழிச் செல்கிறோம். அவனை நம் வழிக்குக் கொண்டுவர நாம் அவனுக்கு புத்தி சொல்லியோ அவனுடன் வாதம் செய்தோ திருத்த முயல்வதில்லை.
எனக்குத் தோன்றுகிறது, நமது உலக நாயகர்களும், இயக்குனர் பிரம்மாண்டங்களும், இன்னும் மற்ற அவர்தம் வழிச்செல்லும் நம் தமிழ் சினிமா உலக சிற்பிகள் எல்லாம் பாட்டுப் பாடிக் கூத்தாட்டம் போடுவதற்கு ப்ரேஸில் என்ன, ப்ராங்க்பர்ட், சிங்கப்பூர், தெருக்கள் என்ன லாப்லாந்து என்ன, ஸ்விட்ஸர்லாந்து என்ன என்று அலைந்து இடம் தேடி படம் பிடிக்கும் போது இவர்கள் ஆட்டத்தைக் கண்டு அவர்கள் சிரிக்கமாட்டார்களா, இல்லை இவர்களுக்குத் தான் வெட்கமாக இருக்காதா என்று என் சாதாரண பொதுப்புத்தியின் தொந்திரவால் என்னையே கேட்டுக் கொள்வதுண்டு. அந்த நாட்டுக்காரர்கள் வேடிக்கை பார்ப்பார்கள் தான். நாங்கள் சினிமா ஷூட்டிங் நடத்துகிறோம் என்று பதில் வந்தால், ஒஹோ இவங்க ஊர்லே இப்படித்தான் வழக்கமோ, இல்லை இவர்கள் சம்பிரதாயங்களோ என்று அமைதி கொள்வார்கள் போலும். பார்ஸி திருமண சடங்குகளோ, முஸ்லீம் விழாக்களோ வித்தியாசமாக இருந்தால் நாம் அதைக் கேள்வி கேட்போமா? ஆனால் இவர்கள் வெட்கப்படாமல் கூத்தாடுவது எப்படி?. அதிலும் ஸ்விட்ஸர்லாந்தின் பனி மூடிய மலைச் சரிவுகளிலும் கூட நம் காதல் நாயகிகள் நம் ஊர் தமிழ் சினிமா ரசிகர்களை குஷிப்படுத்த எவ்வளவு குறைவாக ஆடை அணிவது சாத்தியமோ அவ்வளவுக்குக் குறைவாகவும், நம் உலக நாயகர்கள், அந்தக் குளிருக்கேற்ப முகம் தவிர உடல் முழுதும் வித விதமான வண்ணங்களில் அலங்கார உடைகளில் டான்ஸ் பண்ணுவார்கள்.
இதெல்லாம் சினிமாவுக்கோ அல்லது அவர்கள் இதுபற்றி உரிமை கொண்டாடி பெருமைப் பட்டுக்கொள்ளும் எதற்குமோ சம்பந்தமில்லை. இதைத்தான் ஒவ்வொரு விஷயத்திலும், தமிழ் சமுதாயத்தின் ஒவ்வொரு துறை பற்றிய விஷயத்திலும் சொல்ல வேண்டியிருக்கிறது. அரசியலாகட்டும், சினிமாவாகட்டும். அல்லது கலை என்றும் தமிழ் என்றும் சொல்லி மக்கள் முன் வைக்கும் எதுவுமேயாகட்டும். அது மக்களை ஏதோ சொல்லி அவர்களுக்குப் பூச்சூட்டி, அவர்கள் பணத்தை அல்லது வாக்குகளைக் கொள்ளையடிக்கமுடியும் என்ற ஒரே சிந்தனை தான் பின்னிருப்பது. அவர்களுக்குப் பூச்சூட்டும் யுத்திகள் தான் அவ்வப்போது மாறிக்கொண்டிருக்கின்றனவே தவிர அதற்கு என்ன பெயர் கொடுக்கப்படுகிறதோ அந்தப் பெயர் என்று மே மாறாது. இதை இன்று அந்நியன் படமோ சிவாஜி படமோ பார்க்கிறவர்களுக்குச் சொல்லிப் புரிய வைப்பது கஷ்டம். நாற்பதுகளிலிருந்து இன்று 2010 வரை, ஒவ்வொரு பத்து வருஷத்துக்குமான ஒரு சாம்பிள் தமிழ்ப் படத்தில் காதலைச் சொல்ல என்ன பாட்டு, என்ன டான்ஸ் எப்படி பயன்படுத்தப் பட்டுள்ளது என்பதைப் பார்த்தால் ஒரு விஷயம் தெளிவாகும். சங்கீதமும் நடனமும் என்றும் ஒன்று தான். ஆனால், எதை அன்று சங்கீதம் என்றும் நடனம் என்றும் கலைகள் என்றும் சொல்லி வந்தோம், இன்று அந்த பெயரில் தமிழ் மக்களுக்கு அதாவது தமிழ் சினிமா ரசிகனுக்கு, தரப்படுவது என்ன என்று சற்று யோசித்தால் போதும்.
நாக்க மூக்க ஒரு உதாரணம். அன்று இதை பாட்டு என்றோ அதற்கு ஆடிய ஆட்டத்தை நடனம் என்றோ ஒரு கடைத்தர சினிமாக் காரன் கூட ஒப்புக்கொண்டிருக்கமாட்டான். ஆனால் அது இன்றைய போன வருடம் வரை மக்கள் ரசனையின் உச்சமாகக் கொண்டாடப்பட்டது. அதைத் தயாரித்த தமிழ் நாட்டின் மிகப் பெரிய தனவந்தர், மிகப் பெரிய தொலைக் காட்சி ஸ்தாபனம் அதற்கு தன் பிரசார ஊடகங்கள் மூலம் பெற்றுத் தந்த மக்கள் வரவேற்பும், எதற்கும் எந்த கடைத்தரத்திற்கும் சங்கீதம் என்றும் நாட்டியம் என்றும் சந்தையில் மக்கள் ரசனையில் செலவாணீ யாக்கிவிட முடியும் என்பது நிரூபிக்கப்பட்டது. இந்த நிரூபணம் இன்று ஸ்தாபிக்கப்பட்ட ஒன்றல்ல. விளம்பரத்தால், மக்களை வாய்பிளக்கவைக்கும் தந்திரங்களால், எந்த சந்தைச் சரக்கையும் வியாபார வெற்றி மட்டுமல்ல, கலை என்றும் அதற்கு மக்களிடையே வியப்பூட்டும் மதிப்பையும் உருவாக்கிவிட முடியும் என்பதை 1949-லிருந்தே எஸ் எஸ் வாசன் சந்திரலேகா என்னும் 50 லக்ஷம் ரூபாய் செலவிலான பிரம்மாண்ட தயாரிப்பு மூலம் தொடங்கி வைத்து ஸ்தாபிக்கவும் செய்தார். அதன் தொடர்ச்சி தான் அதன் பூதாகாரமான வியாபகம் தான் இன்றைய சன் பிக்சர்ஸும் அதன் சினிமா பிரவேசமும். 2001-ல் அது 150 கோடி செலவில் ஒரே சமயத்தின் ஆயிரக்கணக்கான தியேட்டர்களில் உலகம் முழுதும் திரையிடப்பட்டு சாதனை படைத்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க திரைப்பட பிரம்மாண்டம் ஆகியுள்ளது. அதில் யானைகளும் சர்க்கஸ் சாகஸங்களும் புதியன. இங்கு ப்ரேசில் நாட்டில் தேடிக்கண்டுபிடிக்கப்பட்ட பாலவனத்திடையே ஆங்காங்கே தனித்தனி ஏரிகளைக் கொண்ட இடத்தில் நடனக்காட்சி படமாக்கப்பட்டுள்ள அதிசயம்.
ஐஸ்வர்யா ராயைக் காதலிக்கும் ரோபோ பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் புதுமைக் கற்பனையும் சாகஸமும் ஆகும். . இனி இந்த பூதலத்தில் அடுத்த படத்தின் டான்ஸ் காட்சிகளை படம் பிடிக்க அவர் செவ்வாய்க் கிரஹத்துக்கோ அல்ல்து சந்திரனுக்கோதான் போகவேண்டியிருக்கும். புதுமையாக யாரும் படமெடுக்காத இடம் அவருக்கு இங்கு கிடைக்காது என்று தோன்றுகிறது.
மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம் (10)
இவ்வளவையும் எழுதிக்கொண்டிருக்கும்போது நான் என்ன ஒரு வியர்த்தமான காரியத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறேன் என்பதை சன் குழும தொலைக்காட்சி அனைத்துக்களும் அதன் அச்சு ஊடகங்களும் மாத்திரமில்லை, ஸான்க்க்ப்ரான்ஸிஸ்கோ விலிருந்து ஜப்பான் மலேசிய வரை ஒரு அகண்ட உலகில் வாழும் அனைத்து தமிழ் மக்கள் மாத்திரமில்லை, எந்திரன் படத்தையும் அதன் விளம்பர பகாசுரத்தனத்திற்கு ஆட்பட்ட எந்த நாட்டவரும், எந்த மொழியினரும் ஒரே ஏகோபித்த குரலில் அதன் பாராட்டில், அதன் வரலாறு காணாத மகத்துவத்தில் பிரம்மாண்டத்தில் மயங்கி மது உண்ட மிதப்பில் உழல்வதி லிருந்து தெரிகிறது. இத்தகைய வரலாறு காணாத களேபர இரைச்சலில், நான் சொல்வதை யார் கேட்கப் போகிறார்கள்? யார் மதிக்கப் போகிறார்கள்? காலை ஐந்து மணிக் காட்சிக்கு மூன்று மணியிலிருந்து காத்திருப்பது என்ன, சூப்பர் ஸ்டாரின் பிரம்மாண்ட ஃப்ளெக்ஸி போர்ட் விளம்பரஙக்ளுக்கு ஏதோ நாமக்கல் ஆஞ்சனேயருக்கோ, ஸ்ரவணபேல கோலா கோமதேஸ்வரருக்கோ அபிஷேகம் செய்வது போல, பாலாபிஷேகங்கள் என்ன, சூப்பர் ஸ்டாரை பழனி ஆண்டவனாக்கி எடுக்கும் காவடிகளின் ஊர்வலங்கள் என்ன, மொட்டை அடித்துக் கொண்ட பிரார்த்தனைகள் என்ன, அதன் வெற்றிக்கா அல்லது வரவேற்கவா, செய்யப்பட்ட யாகங்கள் என்ன, இந்தியாவின் எந்த மொழிதொலைக்காட்சிச் சானலைத் தொட்டாலும் அது 24 மணி நேரமும் எந்திரன் பட பாடலையோ, விளம்பரங்களையோ அல்லது அதன் வினோத மாயா ஜாலங்களைப் பற்றிய பரவசம் அடைந்து பேசும் சங்கர் சார்,, சூப்பர் ஸ்டார் சார்,, ரஹ்மான் சார், உலக அழகி ஐஸ்வர்யா ராய். இதிலிருந்தெல்லாம் ஒரு கணம் தப்ப முடிந்ததில்லை. தொடர்ந்த விளம்பர அலைமோதல், அதற்கேற்ற இரைச்சலுடன்.
iஇவற்றுக்கிடையில் அகப்பட்டுத் தத்தளிக்கும் யார் மீளமுடியும்? இங்கு எதற்கும், கலை, இலக்கியம், சினிமா, நாடகம், பாட்டு, அரசியல், தமிழ், வரலாறு, பகுத்தறிவு, இத்யாதி எல்லாவற்றிற்கும் கடைசி அதாரிடியாகிய கலைஞர், தமிழினத் தலைவரே பார்த்து தன் பாராட்டுதலைத் தெரிவித்த பிறகு யார் என்ன சொல்லமுடியும்? சொன்னாலும் அதை மதிப்பார் யார்? இது வசூலிலும், மக்கள் வரவேற்பிலும் உலகளாவிய புகழிலும் இனி ரொம்ப காலத்துக்கு யாரும் மீறிச் சாதிக்க வியலாத ஒரு மைல் கல் சாதனையாக முதல் வாரத்திலெயே ஸ்தாபிக்கப் பட்ட பிறகு யார் என்ன மாற்று அபிப்ராயம் சொல்லமுடியும்? முணுமுணுக்கக் கூட முடியாது. யார் வாய் திறவாதிருக் கிறார்களோ அவர்களுக்கு இது அதிசயமாகப் படாதிருக்கலாம். உலகநாயகன் ஏதும் இது பற்றிச் சொல்லவில்லையோ, அல்லது என் பார்வையிலிருந்து தான் இது தப்பிவிட்டதோ? இருவருமே ஒருவருக்கொருவர் பாராட்டிக்கொள்வது தான் வழக்கம்.
சரி, இதெல்லாம் ஒரு சினிமா படம் சம்பந்தப்பட்ட சமாசாரங்களா என்பதை நாம் சிந்திக்க வேண்டும். ஒரு சி9னிமாவை, தங்களுக்குப் பிடித்த ஒரு நடிகரை தமிழ் சினிமா ரசிகர்கள், ஒரு நடிகரின் ரசிகர்கள் எப்படி வரவேற்கிறார்கள் என்பதைச் சொல்கிறது இந்த கூத்துக்களும் கொண்டாட்டங்களும். இந்த ஆரவாரக் கொண்டாட்டத்தை, ரசனை என்பதை விட, ரசனை என்பதைவிட, மகிழ்ச்சி என்பதை விட ஒரு மாதிரியான பக்தி பரவசம் என்று சொல்ல வேண்டும். இங்கு தமிழ் நாட்டில் மாத்திரமில்லை, இந்தியாவில், உலகில் தமிழர் வசிக்கும் இடங்களில் மாத்திரமில்லை, மற்ற நாட்டு மக்களும், மற்ற மொழி பேசும் மக்களிடையேயும், வேறு எந்த நடிகருக்கும் இல்லாத ஆரவார ரசனை நம் தமிழ் சூப்பர் ஸ்டார் நேரிலோ அல்லது சினிமாவிலோ காட்சி தந்தாலே போதும் என்ற எல்லை வரை சென்றுள்ளது என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக ஜப்பான் நாட்டில், அகிரா குரசவாவும், யோசிஜிரோ ஓஸூ போன்றவர்களைத் தந்த ஜப்பானிலா ரஜனி காந்த் போன்றாரின் கோமாளிக்கூத்துக்களையும் சேஷ்டைகளையும் ரசிக்கிறார்கள்? சிவாஜி கணேசனை ஒரு நடிகர், என்றும், அதிலும் நடிகர் திலகம் என்றும் மகாத்மா காந்தி சிலைக்கு எதிரே சிலை எழுப்பியும், அவர் ஒரு நடிப்புக் களஞ்சியம் என்றும் கொண்டாடும் தமிழ்நாட்டில் வேண்டுமானால், கர்நாடகாவில், கேரளாவில் செல்லுபடியாகாத கூத்தாட்டங்களுக்கு “தமிழ் நாடு தான் உங்களுக்கு ஏற்ற மண் கொண்டது, ரசிகர் பட்டாளம் கொண்டது என்று எம்.ஜி.ஆர்களையும் ரசனி காந்துகளையும் அனுப்பி விடுகிறார்கள். கிட்டத்தட்ட நம் மண் போன்ற வளம் கொண்டது ஆந்திரா தான் என்று நினைக்கிறேன். என்.டி. ராமராவைக் கிருஷ்ணபகவானாக்கி கோயில் கட்டிவிடுகிறார்கள். இங்கு குஷ்புவுக்குக் கோவில். சிவாஜி கணேசனுக்கும் எம்.ஜி.ஆருக்கும் இன்னும் ஏன் கோவில் கட்டவில்லை என்று தெரியவில்லை. நான் சொல்ல வந்தது எல்லா குப்பை கூளங்களுக்கும், கோமாளிகளுக்கும் விளை நிலமும் வளர்நிலமும் தமிழ் நாடாகத்தான் இருந்து வருகிறது. இதற்கும் சினிமாவுக்கும் ஏதும் உறவு கிடையாது. முற்றிலும் கிடையாது. இது இன்னும் ஆழத்தில் கலாசாரம் சம்பந்தப்பட்டதாகத்தான் கொள்ள வேண்டும். கலாசாரத்தின் சீரழிவு என்று கொள்ள வேண்டும்.
தமிழில் ஒரு பழமொழி உண்டு. ”எல்லோரும் நிர்வாணமாகத் திரியும் ஊரில், கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன்,” என்று அப்படித்தான் இருக்கிறது, தமிழில் சினிமா என்றால் எப்படி இருக்கவேண்டும் என்று பார்வையாளர் மாத்திரமல்ல, தயாரிப்பாளர், நடிகர், அறிவாளிகள் சமூகம் எல்லோருமே ஒரெமனத்தினராய் தமக்குச் சொல்லிக்கொள்வது, மற்றவர்ககு அறிவுரை கூறுவதும். “சினிமாலே அப்படிச் செய்ய முடியாதுங்க. மக்கள் பாக்க வேண்டாமுங்களா” என்று அவர்கள் சொல்லும்போது அவர்கள் சொல்வது, ‘இல்லிங்க கோவணம் கூட கட்டக் கூடாதுங்க. நிர்வாணமாத் தான் திரியணும். அதிலே நீங்கள் புதுமைகள் செய்யலாம். தொழில் நுட்பங்கள் கொண்டு வரலாம். அதையெல்லாம் மக்கள் வரவேற்பாங்க. ஆனால் ஒரு சின்ன துண்டு கோவணம் கட்டினாக்கூட ஒப்புத்துக்க மாட்டாங்க” என்பதைத்தான் அவர்கள் வேறு வார்த்தைகளில் சொல்கிறார்கள் இப்போது நாம் ஏதோ வெறி பிடித்தவர்கள் போல வரவேற்றுக் கொண்டாடும் ரஜனி காந்தின் சினிமா சேஷ்டைகள் கோமாளித் தனமே தவிர அது நடிப்போ, அது சினிமாவோ இல்லையென் றால், ஜப்பானிலே அவருக்கு இருக்கும் வரவேற்பைப் பாருங்கள் என்று சொல்வார்கள். எனக்கும் இது ஒரு புரியாப் புதிராகத்தான் இருக்கிறது. இந்த கோமாளித் தனங்கள் எல்லாம் எங்கு எப்படி செல்லுபடியாகிறது என்று. ஹோகனக்கல் சமாசாரமோ இல்லை காவேரி தண்ணீர் சமாசாரமோ, அல்லது இது போல ஏதோ ஒரு விஷயத்தில் இங்கு வீரா வேச முழக்கம் செய்துவிட்டு அடுத்த நாள் கட்டாயம் சென்று அவர் அடிக்கடி போய் மன்னிப்புக் கோரும் சொந்த ஊராகிய கர்நாடகத்திலேயே கூட அவரை வைத்து படம் எடுக்க யாரும் இல்லை. தமிழ் நாட்டைத் தவிர அவரை நடிகராக ஏற்று படம் தயாரிக்க யாரும் தயாரில்லை .அப்படி இருக்க ஜப்பானிலா? .ரஜனியும் சரி, நம் பத்திரிகைகளும் சரி, ரஜனி ரசிகர்களும் சரி, யாருக்கும் இது போன்ற சந்தேகங்கள் வந்ததில்லை. ரஜனி புகழ் பாடி என்ன செய்தி எங்கிருந்து வந்தாலும் அதை கேள்வியின்றி ஒப்புக்கொள்ளும் மனநிலை தான் நமக்கு. சரி, இதோ ஒரு காட்சி. ஜப்பானில் ரஜனியின் படத்திலிருந்து ஒரு பாட்டும் நடனமும் கொண்ட ஒரு காட்சி.யை ஜப்பானின் ரஜனி ரசிகர்கள் என்று இங்கு பெருமிதத்துடன் கொண்டாடப்படுபவர்கள் ரஜனி ஸ்டைலில் ஆடிப்பாடி ஆர்ப்பரித்து மகிழும் காட்சி. இவர்கள் ரஜனி ரசிகர்களா, இல்லை ரஜனியின் கோமாளிக் கூத்தாட்டத்தைக் கேலி செய்து மகிழ்கிறார்களா என்று நாம் தீர்மானித்துக்கொள்ளலாம். ரஜனி வேஷத்தில் ஆடுபவரும் சரி, அவரைச் சுற்றி நடனமாடும் மங்கையரும் சரி, அந்த தியேட்டரில் நிறைந்திருக்கும் பார்வையாளரும் சரி ரஜனியை ரசிக்கிறார்களா இல்லை கேலி செய்து மகிழ்கிறார்களா? இதில் ஏதும் கருத்து மாறு பாடு இருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை. சரி அந்த காட்சி இதோ:
http://www.youtube.com/watch?v=hI7eDWyTaRE
இந்தக் காட்சியைப் பார்க்கும் நம் ஒவ்வொருவரும் நம்மில் பெரும் புகழ் பெற்றவராகவும் மக்களின் ஏகோபித்த அபிமானத்துக்குப் பாத்திரரான ஒருவர் இப்படி கேலிக்கு ஆளாவது கண்டு வெட்கப்படவேண்டும். ஆனால் சம்பந்தப்பட்ட சூப்பர் ஸ்டாரும் சரி, நம் மக்களும் சரி, நம் மேதைகளும் சரி, எல்லோரும் நமது சூப்பர் ஸ்டாரின் லீலா விநோதங்கள் கண்டு பெருமிதம்தான் கொள்கிறார்கள். 150 கோடி ரூபாய்கள் என்று சொல்கிறார்கள். இவ்வளவு பணம், இந்தப் படத்திற்கான விளம்பரம், இப்படம் எடுக்க எடுத்துக்கொண்ட காலம் இந்தப் படத்தின் எத்தனை பிரதிகள் உலகம் முழுதும் வினியோகிக்க எடுக்கப்பட்டன போன்ற புள்ளி விவரங்கள் நம்மைத் திக்கு முக்காடச் செய்கின்றன. இவையே படம் வெளிவரும் முன்னரே படத்தின் மகோன்னத குணங்களாக மக்கள் மனத்தில் பதிய வைத்துள்ளன. இவை எதுவும் சினிமா சம்பந்தப்பட்டதல்ல.
இதுபற்றிச் சொல்லப்படுவன வெல்லாம் இந்தப் படத்தை 2010 –ன் விட்டலாசசாரியாவின் படைப்பாகத் தான் நம் முன் வைக்கின்றன. அம்புலி மாமா கதை யின் இத் தலைமுறை பதிப்பு. சூப்பர்மேன், டெர்மினேட்டர், பாட்மேன் வகையறாக்கள் பார்வையாளர்களை வாய்பிளக்க வைக்கும் சமாச்சாரங்களேதவிர சினிமா என்னும் கலை சம்பந்தப்பட்டதல்ல. ஒரு காலத்தில் நம் தமிழ்ப் படங்களிலேயே கூட அபூர்வ சகோதரர்கள், விக்கிரமாதித்தன் கதை எல்லாம் மாயா ஜாலக் காட்சிகளை முன்வைத்தன. ஆனாலும் அவை அதீத கற்பனைகளேயானாலும் மனித வாழ்க்கையின் அவசத்தைச் சொன்னவை தான். ஆனால் பாட்மேன், டெர்மினேட்டர் வகையறாக்களின் நம்மூர் காபியான யந்திரன், தன் இஷ்டத்துக்கு சம்பவங்களை அடுக்கிச் செல்லும் மனத்தைத் தான் நம் முன் வைக்கின்றன. ஒரே குறிக்கோள் என்னென்ன விசித்திர கற்பனைகள் செய்தால், பார்ப்போரின் வாய் பிளக்க வைக்க முடியும் என்பதாகத்தான் இருந்துள்ளது. உலக நாயகன் பற்பல வேஷங்களுக்கு ஏதுவாக கதையைக் கற்பனை செய்தால், நம் சூப்பர் ஸ்டார் வேஷங்களில் நம்பிக்கை வைப்பதில்லை, மாயா ஜாலங்களிலும் தன் கோமாளித்தனங்களிலும் நமபிக்கை வைத்துள்ளார்.
மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம் – (11)
கடைசியில் எந்திரன் படத்தை வைத்துக்கொண்டு நாம் பெருமைப் பட என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. என் கேள்வி, கவனிக்கவும். நான் எந்திரன் படத்தை ஒரு சினிமாவாக இல்லை, ஒரு வியாபாரப் பொருளாகவே எடுத்துக்கொண்டு தான் பேசுகிறேன். சினிமாவாகப் பேச தமிழில் படங்கள் நமது சினிமாவின் 80 வருட வரலாற்றில் ஏதோ ஒன்றிரண்டு தேரலாமோ என்னவோ. திரும்பவும் சொல்கிறேன். சினிமாவாகப் பேசத் தான். பெருமைகொள்ள அல்ல. இதை நான் முன்னரே அவசியம் நேரும் போதெல்லாம் இத் தொடரிலேயே பல முறை சொல்லியே வந்திருக்கிறேன். கலாநிதி மாறன் சார் ரஜனி ஸார், சங்கர் சார், ரஹ்மான் சார் ஆக இந்த சார்கள் எல்லாம் தவிர அலகு குத்திக்கொண்ட, பாலாபிஷேகம் செய்த, மொட்டை அடித்துக் கொண்ட, யாகம் செய்த ரசிகர் எல்லோருமே ஒத்துக்கொண்ட, “இது வியாபாரம்” “சினிமாவே எடுப்பதே 150 கோடி ரூபாய் முதல் போட்டதே மக்கள் விரும்புவதைக் கொடுத்து லாபம் சம்பாதிக்கத்தான்” போன்ற பொன்மொழிகளை நினைவில் கொண்டு அதை வைத்துக்கொண்டு சில கேள்விகளைக் கேட்கலாம் கேட்க வேண்டும். சம்பாதிப்பது என்ற ஒரே குறிக்கோள் இருப்பதன் காரணமாகத் தான், தாத்தா கொள்கை என்னவாக இருந்தாலும் மாமிகள் கதைகள் தான் தொடராகும், ஜோஸ்யம், ராசி பலன், கர்நாடக சங்கீதம், தெய்வ தரிசனம், அருணாசல கார்த்திகை தீபம் எல்லாம் விலக்கு கொடுத்தாலும், தமிழ் நாட்டில் அது சன் டிவி தான். கேடிவி தான். மற்ற இடங்களில் அது சூர்யாவாகும், உதயாவாகும், அங்கெல்லாம் சன் டிவி பெயர் செல்லுபடியாகாது தமிழினத் தலைவரும்/.தாத்தாவும் இந்த சந்தை நியாயங்களை, தர்மங்களைப் புரிந்து கொள்வார். கண்டு கொள்ளமாட்டார்.
எந்திரன் படத்தில் நாம் பார்த்து வாய்பிளந்த விஷயங்கள் எதையும் காட்டி நாம் பெருமைப்பட என்ன இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. சமீப காலத்தில் நாம் அதிகம் பெருமைப் பட்டுக் கொள்வது நம் சினிமா சம்பந்தப்பட்ட வரையிலான தொழில் நுட்ப வளர்ச்சி. எனக்கு நம்ம தமிழ் சினிமாக் காரர்கள் பெருமைப் பட்டுக்கொள்ளும், இந்த தொழில் நுட்ப சமாசாரங்கள் எதுவும் அதிகம் புரிந்ததில்லை. படிகளின் உச்சியில் சிம்மாசனத்தில் உட்கார்ந்திருக்கும் ரஜனி சார் தன் வலது காலை இடது கால் மேல் போட்டால் ரம்பம் அறுக்கற மாதிரி ஒரு சபதம் வரும். அந்த சபதம் தன் ஆள்காட்டி விரலை அசைத்தாலே கூட வரும். துண்டை உதறித் தோளில் போட்டுக்கொண்டாலும் வரும். அந்த சபதம் வந்தால், சூப்பர் ஸடார் ஏதோ எதிரியை வீழ்த்துவதற்கு தன் பட்டாக்கத்தியை உருவி விட்டார் என்று ரசிகப் பெருமக்களுக்குச் சொல்கிறார் என்று நினைக்கிறேன். அந்த ரம்பம் அறுக்கும் சப்தம் தான் வாளை உருவி காற்றில் வீசும் சபதம் என்று சொல்லப்படுகிறதோ என்னவோ. இந்த ஒலிப்பதிவு நான் வேறு எங்கும் காணாத புதுமை தான். . நம்ம தமிழ் சினிமாவில் யாரும் ரயிலேறினால் ரயில் நிலையத்தில் நம்ம காதலனையும் காதலியையும் விட்டால் வேறு யாரும் இருக்க மாட்டார்கள். நம்ம ஊர் காதலி பிரயாணம் செய்யும் 21 கோச்சுகள் கொண்ட ரயிலில் தனியாகத்தான் இருப்பாள். அந்தக் கோச்சில் இன்னும் இரண்டு பேர் ஒப்புக்கு இருப்பார்கள். மற்றபடி ரயில் நிலையம் காலியாகத் தான் இருக்கும். அப்பத்தான் கமலஹாஸன் கிளம்பிவிட்ட ரயிலில் இருக்கும் ஸ்ரீதேவியை நோக்கி கதறிக்கொண்டும் நொண்டி நொண்டி ஓடிக்கொண்டும் வர சௌகரியமாக இருக்கும். இப்படி எத்தனையோ சமாசாரங்கள் தொழில் நுட்பங்கள் எனக்குப் புரிந்ததில்லை.
ஆர்ட் டைரக்டர் என்றால் கதை நடக்கும் இடமும் நம்பகமாக தோற்றம் தர உதவுகிறவர் என்று நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். நம்ம சினிமாவில் டான்ஸ் பண்ணுவதற்கு பிரம்மாண்டமான மாயாஜாலங்கள் நிறைந்த செட் போடுகிறவர் என்று அர்த்தப் படுகிறவர். இதற்கு தோட்டா தரணியும், கிருஷ்ணமூர்த்தியும் போன்றவர்களை பயன்படுத்துவது மிகவும் கேவலப்படுத்தும் வியம். அவர்களை[ப் போன்ற ஓவியக் கலைஞர்களை மட்டுமல்ல, ஆர்ட் டைரக்ஷன் என்ற ஒரு கலைத் துறையையே கேவலப்படுத்துவதும் ஆகும். ஆனால் நம் சினிமாக் காரர்களிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? அவர்களுக்குத் தெரிந்தது வியாபாரம். கொள்ளையாகப் பணம் பண்ண வேண்டும் என்ற பேராசை. மளிகை, ஜவுளிக்கடை வியாபாரம் போல, சினிமாவும் ஒரு வியாபாரம் என்பது தான் அவர்கள் புத்தியில் பட்டிருப்பது. அது தான் அவர்கள் பேணும் மரபும். Last Emperor படம் எடுக்க வந்தவர்களுக்கு பெய்ஜிங்கில் இருக்கும் அரண்மனையை வெளிப்புறத்தில் இருந்து கூட படம் எடுக்க சீன அரசு மறுத்து விட்டது. பின்னர் அந்த மாளிகை ஒரு செட்டில் வேறு நாட்டில் உருவாக்கப்பட்டது.அந்த செட் 40 பேருடன் ரஜனி சாரோ கமல் சாரோ டான்ஸ் பண்ணுவதற்கல்ல சைனாவின் கடைசி வாரிசுவின் கதை, புரட்சியில் அல்லாடும் கதையைச் சொல்ல பெய்ஜிங் அரண்மனை தேவைப் பட்டது. யாருக்காவது படம் பார்த்தவர்களுக்கு அது உருவாக்கப்பட்ட செட் என்பது தெரிந்ததா? அதில் அதை உருவாக்கிய கலைஞனும், இப்படிச் செயல்படும் ஒரு நாட்டின் கலைஉணர்வும், பண்பாடும், பெருமைப் படத்தக்க ஒன்று. சிவாஜி படத்துக்கும் யந்திரன் படத்துக்கும் போட்ட செட் கலையும் இல்லை. அதை வேண்டிய தயாரிப்பாளரோ, இயக்குனரோ அல்லது அதைப் பார்த்து வாய்பிளக்கும் சமூகமோ,சினிமா சம்பந்தப்பட்டவர்கள் இல்லை. திமுக மாநாடுகளுக்கு பிரம்மாண்ட அரண்மனைத் தோற்றம் தரும் செட் உருவாக்குகிறவர்களுக்கும் தோட்டா தரணிக்கும் வித்தியாசம் ஏதும் இல்லை. இங்கு தோட்டா தரணி ஒரு கலைஞராக இல்லை, தச்சு வேலை, செங்கல் கட்டிட வேலை செய்யும் மேஸ்திரியாகத் தான் கீழிறங்கியிருக்கிறார். இங்கு மட்டுமல்ல தமிழ் சினிமா இந்தமாதிரியான கலைஞர்களை எங்கெல்லாம் டான்ஸ் ஆடுவதற்கு செட் போட அமர்த்தி வருகிறார்களோ அந்த வரலாறு முழுதுமே ஒரு கேவலப்பட்ட வரலாறு தான். ஆர்ட் டைரக்டருக்கு தயாரிப்பாளர் இயக்குனர் சொன்னதைச் செய்தால் பணம் கிடைக்கிறது என்பது வேறு விஷயம்.
வெற்றிகரமான வியாபாரம் என்பதும் வேறுவிஷயம்,. ஆனால் இதெல்லாம் சினிமா சம்பந்தப் பட்ட சமாசாரங்கள் இல்லை. பணக் கொழுப்பில் வளர்ந்த டம்பங்கள். இது போலத்தான் எந்திரன் படம் சம்பந்தப்பட்டவர்களும் நம் சமூகமும் பெருமைப்பட்டுக்கொள்ளும் எதுவும். சங்கருக்கு வித்தியாசமான கற்பனைகள் தோன்றுவது வழ்க்கம். அது அவர் பிராண்ட் மேதமை. சரி. தான் உருவாக்கிய ஒரு மனித யந்திரம் தன் பிரதிமை போன்ற ஒன்று தனக்கே எதிரியானால்…. சரி சுவாரஸ்யமான கற்பனை தான். இந்த சமாசாரத்தை நாம் ஏற்கனவே இந்த தொழில் நுட்ப பிரம்மாண்ட கற்பனை என்னும் டம்பங்கள் எல்லாம் தலைகாட்டாத காலத்தில் ஜெமினி ஸ்டுடியோஸின் அபூர்வ சகோதரர்கள் படத்தில் பார்த்து விட்டோம். அதுவும் ஒரு வியாபாரச் சூழலில் வள்ர்ந்த எஸ் எஸ் வாசன் என்ற மனிதர் தந்தது தான். ஏதும் கலை அது இது என்று டம்ப புண்ணாக்குகள் பண்ணாத ஆனால் பொதுப் புத்திக்கு ஏற்கும் ஒரு கதையாக, படமாக நமக்குத் தந்திருந்தார். சுவாரஸ்யமான கதை சொல்லல். அதுவே அலெக்ஸாண்டர் டூமாஸின் கார்ஸிகன் ப்ரதர்ஸ் என்ற நாவலின் தழுவல் தான். ஆனால் நம் சாதாரண பொதுப் புத்திக்கும், நடிகர்களின் திறமைக்கும் ஏற்ற ஒன்றாக இருந்தது. அதை இன்றைய தொழில் நுட்பத்தின் வளர்ச்சியில், பாட்மான், சூப்பர்மேன், டெர்மினேட்டர் எல்லாம் பார்த்து தன்னை நவீனப் படுத்திக்கொண்ட 2010-ன் சங்கர் பதிப்பாக மேம்படுத்த நினைத்தால் அதையும் ஒரு அளவிற்கு நாம் ஒத்துக்கொள்ள முயலலாம். ஆனால் சங்கர் சாதாரண மனிதர் இல்லை. அவர் கால்கள் தமிழ் மண்ணில் பதிய மறுப்பவை. தமிழ் என்ன, இந்த மண்ணிலேயே பதிய கட்டாயம் மறுப்பவை. அவருடைய ரோபோ ரஜனி மாதிரியே உருவாகும். அந்தக் காலத்தில் ரஞ்சன் இரட்டை வேடத்தில் செய்ததை, இங்கு ரஜனி ரூபம் கொண்ட ரோபோ செய்யவேண்டும். ரஜனியே இரட்டை வேடம் போடலாமே.
ரசிகர்கள் அடையும் பரவசம் சொல்லமுடியாதே. பாலாபிஷேகம் என்ன, தேனாபிஷேகமே செய்வார்களே கட் அவுட்டுக்கு. ஆனால் அது சங்கர் பிராண்ட் சிந்தனைக்கும் இயக்குனர் ஆளுமைக்கும் சரிப்பட்டு வராத சமாசாரம். . அவரது தனி ரக கற்பனை இதோடு நிற்பதில்லை. ரஜனி என்கிற விஞ்ஞானி தன் காதலியோடு மாத்திரமில்லை இன்னும் நாற்பது பேரோடு பிரபு தேவா சொல்லிக்கொடுத்த டான்ஸாக இருக்கவேண்டும். அது ஆட வேண்டும். அந்த டான்ஸ் ஆட பெருநாட்டுக்கு அதுவும் மச்சு பிச்சுக்குத் தான் போயாக வேண்டும். இல்லையானால் ப்ரேஸிலிலோ அங்கு வேறு எங்கேயோ ஒரு பாலைவனத்தில் தான் டான்ஸ் பண்ணுவார், அதுவும் அந்த விஞ்ஞானி, மேரி ஈ. வோட் என்ற பெயர் கொண்ட ஒரு அயல் நாட்டுப் பெண்மணி தயாரித்த உடை அணிந்து கொண்டால் தான் மச்சு பிச்சுவில் ஐஸ்வர்யா ராயோடு ஆட முடியும். அந்த புதிய டிஸைன் ஆடைகளும் சங்கர் மாதிரி கற்பனை கொண்ட பெண்மணியாகத் தான் இருக்க வேண்டும். நம்ம ஊரில் ஊசி விற்கிறவர்களும், பகல் வேஷக் காரர்களும், தெருவில் மாஜிக் காட்டுகிறவர்களும் பாப் ம்யூஸிக் காரர்களும், வித விதமான கோமாளி உடைகளில் வருவார்கள். அந்த மாதிரி ஏகப்பட்ட டிசைன்களில். உடைகள் அணிந்துவ் வருவார் நம்ம சூப்பர் ஸ்டார். இது நம் தமிழ் சினிமா எல்லா ஹீரோ ஹீரோயின்களுக்குமான மரபு. ஒவ்வொரு டான்ஸிலும் 10 வித உடையலங்காரங்கள். இது இன்றைய விதி. 20 வருடங்களுக்கு முன் நல்ல குரலில் ரம்மியமான பாடல்களைப் பாடிக்கொண்டிருந்த ஹரிஹரன் இப்போது மாசத்துக்கு ஒரு ஸ்டைலில் உடை உடுத்திக்கொள்கிறார். மீசை, தலை முடி, கிருதா எல்லாம் மாற்றிக்கொள்கிறார். இல்லையா? எல்லாம் நாம் வாழும் காலத்தின் கோலமோ அலங்கோலமோ. சினிமா கலாசாரம். நம் டான்ஸும் பாட்டும், உடைகளும் எல்விஸ் பெஸ்லியும் மைக்கேல் ஜாக்ஸனும் பாட்டிலும் கால் கைகளை வலித்துக் கொள்வதிலும் உடையிலும் செய்த கோமாளித்தனங்கள் அத்தனையையும் செய்தால் தான் அது பாட்டும் டான்ஸும் ஆகும் என்ற நினைப்பில் உருவாகிறவை கடந்த இருபது ஆண்டுகளாக. பெஸ்லியையும் ஜாக்ஸனையும் மீறி விட்டவர்கள் நம் சங்கர் சார் போன்ற இயக்குன மேதைகள். அவர்கள் பொது மேடைகளில், ஸ்டுடியோக்களில் தான் ஆடினார்கள் பாடினார்கள். டோரண்டோ போகிறேன், மச்சு பிச்சு போகிறேன் என்று கிளம்ப வில்லை..
Swaminathan Venkat <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.