இது காறும் நான் முழுவதுமாகப் பார்த்த படங்களைப் பற்றியே பேசி வந்திருக்கிறேன். சில பழைய படங்கள், நினைவிலிருப்பவை. அனேகமாக புதியவை மிகக் குறைவாகவே பார்த்திருக்கிறேன். தியேட்டருக்குப் போய்ப் படம் பார்ப்பது என்ற பழக்கம் விட்டு நாற்பது வருடங்களுக்கு மேலாயிருக்கும். ஃபில்ம் சொஸைடி திரையிடும் படங்களையோ அல்லது உலகத் திரைப்பட விழாக்களிலோ கிடைப்பது அவ்வளவையும் ஒரு வெறி பிடித்துப் பார்ப்பதில் தான் பின் வந்த வருடங்கள் கழிந்தன. ஒரு விபத்தில் கால் எலும்பு முறிவு ஏற்பட்டதிலி ருந்து தமிழ்ப் படங்கள் அவ்வப்போது என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ளவேண்டும் என்ற காரணத்திற்காக தொலைக் காட்சியில் வருவனவற்றை மாதிரிக்கு அவ்வப்போது பார்ப்பதுண்டு. அப்படிப் பார்த்த அனுபவத்தில் தான் எண்பதுக்களுக்குப் பிறகு வெகுவாகப் பேசப்பட்ட நக்ஷத்திரங்கள், சூப்பர் ஸ்டார்கள், வெற்றிப் படங்கள், கலைத்தரம் மிக்கவை என்று சொல்லப்பட்டவை எல்லாம் பார்த்தது. வெகு சமீபத்தில் வந்த, புதிய பாதையில் செல்வனவாகச் சொல்லப்படும் படங்கள் பெரும்பாலானவற்றை நான் அவ்வப்போது தொலைக்காட்சியில் உதிரியாகக் காட்டப்படும் காட்சிகளைப் பார்த்த்தோடு சரி. ஒரு சிலவற்றை முழுதுமாகப் பார்த்திருக்கிறேன். அவை சந்தர்ப்பத்தைப் பொறுத்து என்று சொல்ல வேண்டும். ஆதலால் முழுதுமாகப் பார்த்த சிலவற்றை வைத்தும், மற்றவற்றை படத் துணுக்குகளாகப் பார்த்ததையும் வைத்துத் தான் நான் பேசுகிறேன்.
பத்து வருடங்களுக்கு முன் நடந்த ஒரு கருத்தரங்கில் நான் தமிழ்ப் படங்களைப் பற்றிப் பேசிய போது, தமிழ்த் திரைப்பட ரசிகர்களாக, தமிழ்ப் பற்றாளர்களாக, குறும்படத் தயாரிப்பாளர்களாக அல்லது இவை எல்லாமே தம் ஆளுமையில் கலக்கப் பெற்றிருந்த தகைமையாளர்களும், "நீ எல்லா தமிழ்ப் சொல்லிவிடவில்லை. எல்லாத்தையும் பார்க்காமல் எப்படி கருத்து சொல்லலாம் என்பதையே வலியுறுத்திக் படங்களையும் பார்த்திருக்கிறீர்களா? இல்லையே, பின் எப்படி இப்படி ஒட்டு மொத்தமாகப் பேசலாம்? உங்களுக்கு இது பற்றிப் பேச எண்ண தகுதி இருக்கிறது?" என்று கூச்சல் போட்டார்கள். இது என்னமோ மிக நியாய மான கேள்வி போலத் தோற்றம் அளித்தாலும் எந்த மனித ஜ“வனும் எல்லாவற்றையும் பார்த்திருக்க முடியாது. இரண்டாவது ஏதும் மிகச் சிறப்பாக, சினிமா என்று சொல்லத் தகுதி பெற்ற எதுவும் வந்திருப்பதாக எனக்குத் தகவல் வந்தால் அதைக் கட்டாயம் பார்த்திருப்பேன். அப்படி ஏதும் இல்லை என்று சொன்னது அவர்களுக்கு சம்மதமாயில்லை. வித்தியாசமானது என்று அவர்கள் எதையும் கூச்சலிட்டார்கள். அப்போது அவர்கள் கூச்சல் தான் ஹாலை நிறைத்தது.
இதே போல ஒரு சந்தர்ப்பத்தில் ஜெயகாந்தனும், சுந்தர ராமசாமியும் சொன்ன பதில்கள் சுவாரஸ்யமானவை. ஜெயகாந்தன் பதில் சொன்னது தமிழ் சினிமாவைப் பற்றி அவர் சொன்ன கருத்துக்கு என்னைக் கருத்தரங்கில் மடக்க வீசிய கேள்விகளே தான் அவர் மீதும் வீசப்பட்டது. அது ஜெயகாந்தன் ஸ்டைலிலேயே பதிலும் தரப்பட்டது. அவர் என்னைப் போல வாதம் செய்தெல்லாம் தன்னை அதிகம் சிரமப் படுத்திக்கொள்ளமாட்டார். "இத்தனை நாளா நானும் தமிழ் சினிமா பார்த்துக்கொண்டு வருகிறேன். நான் பார்க்காத படங்களும் இருக்கும். எல்லோரும் எல்லாவற்றையும் பார்த்துவிட முடியாது. நான் பார்த்த தமிழ்னெல்லாம் எவ்வளவு அடி உயரம் என்று எனக்குத் தெரியும். திடீரென்று எட்டடி உயரத்தில் தமிழர் கொஞ்சப் பேர் இருக்கிறார்கள் என்று நீங்கள் சொல்கிறீர்கள். அது எப்படிய்யா தமிழன் திடீரென்று எட்டடி உயர்ந்து விடுவான்? என்று அகிலனின் 'சித்திரப் பாவை' என்னும் நாவல் ஞானபீடப் பரிசு பெற்றபோது, அதைக் கிண்டல் செய்திருந்தார். “சுந்தர ராமசாமி அகிலனின் எழுத்து முழுதையும் படித்திருக்கவில்லை. ஞான பீடப் பரிசு ஒரு எழுத்தாளனின் மொத்தப் படைப்புக்குமாகக் கொடுக்கப்படுவது. சுந்தர ராமசாமி அகிலனின் எழுத்து அத்தனையையும் எங்கே படித்திருக்கிறார்? அப்படி இருக்க அவர் எப்படி அகிலனைக் கண்டனம் செய்ய முடியும்?" என்று கேட்டார். "ஆளை விழுத்தாட்டியாச்சு." என்ற நினைப்பில் தி.க.சிவசங்கரன் ஆழ்ந்திருக்கக் கூடும். சுந்தர ராம சாமியின் பதில் தி.க.சி. எதிர்பாராத விதத்தில் இருந்தது. "ஏதோ ஒரிரு கழிப்பறைகளைப் பார்த்ததுமே போதும் போதும் என்றாகிவிட்டது. எல்லா கழிப்பறைகளையும் பார்த்து பின் மலக்கிடங்கையும் பார்த்திருக்கவேண்டும், அதன் பின் தான் நான் அபிப்ராயம் சொல்லும் தகுதி எனக்கு வரும் என்று தி.க.சி. சொல்கிறார்" என்று சுந்தர ராமசாமியின் பதிலாக இருந்தது. இதே வார்த்தைகளில் அல்ல. ஞாபகத்தில் இருந்ததைச் சொல் கிறேன். கழிப்பறை, மலக்கிடங்கு வார்த்தைகள் அவரது பதிலில் இருந்தன.
இதெல்லாம் பதில் எதிர்பார்த்து, பதிலை வேண்டி எழுப்பப்படும் கேள்விகள் அல்ல. தனக்குப் பிடிக்காததைக் கேட்கும் போது பதில் தெரியாது ஏதாவது கேட்டு சொல்லப்படும் கருத்துக்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்பது தான் நோக்கம். கருத்தரங்கில் நான் நேரில் அகப்பட்டுக்கொண்டதால், "நீங்க எல்லாப் படங்களையும் பாத்திருக்கீங்களா, பாக்காம எப்படி ஒட்டு மொத்தமா இப்படி பேசலாம்?" என்பதையே திருப்பித் திருப்பிக் கேட்டுக் கொண்டே இருந்தால். ஆங்காங்கே பல திசைகளிலிருந்தும் இதே கேள்விகள் எழும்புமானால், அது பேச்சடைக்கும் காரியம் தானே. அதைத் தான் ஃபாசிஸம் என்பார்கள்.
இது ஏதும் சுந்தர ராமசாமி அல்லது ஜெயகாந்தன் போன்ற பேச்சு சாமர்த்தியம் கொண்டவர்களிடம் எதிர்கொள்ளும் பிரசினை என்பதல்ல. நமது அன்றாட நடப்புகள், அனுபவங்கள் என்ன சொல்லும்? அறை ஜன்னலைத் திறந்தால் வெயில் எவ்வளவு சுட்டெரிக்கும் கடுமை என்பதை அறிந்து கொள்கிறோம். ஜன்னலின் மூன்றுக்கு நான்கு என்ற நீள் சதுரம் காட்டும் காட்சி போதும், ஊர் முழுதும், அதன் சுற்றுப்புறமும் எந்த நிலையில் இருக்கிறது என்று அறிய. மழை பெய்கிறதா, கொளுத்தும் வெயிலா, குளிர்ந்த காற்று அடிக்கிறதா? என்று அறிய. இதற்காக திருவான்மியூரிலிருந்து தண்டையார் பேட்டை வரை ஒவ்வொரு தெருவாக, ஒவ்வொரு பேட்டையாகப் பார்த்தபின் தான் வெயில் கொளுத்துகிறது என்று சொல்லமுடியுமா என்ன?. வீட்டிலே மின்விசிறியின் அடியில் உடகார்ந்தவன் எழுந்து சென்று ஜன்னல் கதவைத் திறந்து பார்த்து ஊர் நிலவரத்தை எப்படி சொல்வே. சைதாப்பேட்டையில் வெயில் அடிக்கிறதா என்று பாத்தியா என்று யாரும் கேட்பதில்லை. அப்படிக் கேட்பவனைப் பற்றி நாம் என்ன சொல்வோம்?
எல்லாப் புதிய படங்களையும் நான் பார்த்ததில்லை. பார்ப்பதாக எண்ணமும் இல்லை. காரணம், தெரிய வந்த புதிய படங்கள், அவற்றை நான் பார்த்த அளவில் எதுவும் ஒரு அடிப்படையான மாற்றத்தை, தமிழ்பட உலகில் நிகழ்த்தி விடவில்லை. என்பதைப் பார்க்க முடிகிறது. இதையே எவராவது மலயாளத்தில், அல்லது கன்னடத்தில் ஒரு மகத்தான படம் வந்திருக்கிறது என்றால் அதை நான் சந்தேகிகக மாட்டேன். ஒடியாவில், மராத்தியில் வந்திருக்கிறது என்றால் கூட நான் நம்பத்தயாராயிருப்பேன். ஆனால் தமிழில், தெலுங்கில்? நிச்சயமாக அந்த வாய்ப்பு இன்னும் வெகுகாலத்துக்கு இல்லை என்பது தான் என் எண்ணம். அங்கெல்லாம் ஏதும் ஒரு புதிய படைப்பு, உண்மையிலேயே ஒரு புதிய படைப்பு வந்திருக்கக் கூடும். அதிக தம்பட்டம் இல்லாது, அமைதியாக அது அந்த சூழலைப் பாதித்துக்கொண்டிருக்கும். ஆனால், தமிழில் ஒரு வித்தியாசமான படம் என்ற பாவனைக்கே நம்மவர் அடிக்கும் தம்பட்டம் வெகு நாராசமாக இந்தியா முழுதும் ஒலிக்கும். இத்தகைய பாவனை தான் மணிரத்னமும் சிவாஜி கணேசனும், கமல ஹாஸனும். அந்த பாவனைக்கே இவர்கள் அடிக்கும் தம்பட்டமும் நாராசமாகத் தான் இருக்கிறது.
வெயில் படம் பார்த்தேன். முழுதுமாக. என்ன வித்த்தில் அது வித்தியாசமான, யதார்த்தமான படம் என்கிறார்கள் என்று புரியவில்லை. என்னமோ அவங்க ஊரையே பின்னணியாகக் கொண்டதாகச் சொல்கிறார்கள். அந்த ஊர் எவ்வளவுக்கு படத்தின் அங்கமாயிற்று? எந்த ஊர் சினிமா ப்ரொஜெக்ஸன் ரூமில் காதல் பாட்டு பாடிக்கொண்டு ஆட முடியும்? எந்த ப்ரொஜெக்ஸன் ரூமில் ஆபரேட்டர் நிற்பதுக்கு மேல் இடம் இருக்கும்? அடி தடி, பழிவாங்கல், வ்ழக்கமான ஸ்டண்ட் வேலை, சின்ன பையனை வெயிலில் போட்டு கதறக் கதற வாட்டும் வன்முறை, அந்த வன்முறை தான் எத்தனை ரூபங்களில், எத்த்னை முறை? ஒவ்வொன்றிலும் ஒரு பாவனையைத் தான் நாம் பார்க்கிறோமே ஒழிய், காட்சி அமைப்பிலும், பின்ன்ணையிலும், பின் நடிப்பிலும், நடிப்பில் பழைய நமக்குப் பிரியமான், மிகைப் படுத்தப் பட்ட நாடகம் தான் நம் முன் விரிகிறதே ஒழிய, என்ன வித்தியாசமான அழ்கியல் இந்தப் படங்களை நம்க்கு தெரியப்படுத்துகிறது? பருத்தி வீரன் படத்தைத் தொட்ர்ந்து முழுதும் பார்க்கமுடியவிலை. பார்த்தே ஆகவேண்டும் என்ற முனைப்பில் அவ்வப்போது கிடைக்கும் அளவு, பொறுமை இருக்கும் அளவு பார்த்தேன் என்றுதான் சொல்லவேண்டும். தொடைக்கு மேல் உள் நிஜார் தெரிய கைலியைத் தூக்கிக் கட்டிக்கொண்டு விட்டால் அது கிராமத்தானைச் சொல்லி விடாது. நம் சினிமாககாரர்களுக்கு எது எதற்கு என்ன தோற்றம் என்று ஒரு பட்டியல் தயாராக இருப்பதாகத் தோன்றுகிறது. இப்போதெல்லாம் அரை நிஜார் தெரிய கைலியைத் தூக்கிக் கட்டாத கிராமத்தானையே பார்க்க முடியாது தமிழ் சினிமாவில். அங்கும் நம் ஹீரோவை பத்துப் பேர் சூழ்ந்து கொள்கிறார்கள். ஸ்டண்ட் காமிக்காமல் முடிய்மா? பத்துப் பேர் சூழ்ந்தாலும் அவர்கள் ஒவ்வொருத்தராகத் தான் கார்த்திக்கை அடிக்கும் பாவனையில் விரைப்பாகக் கையை நீட்டுவார்கள். கார்த்திக் அடிக்கவேண்டாமா சௌகரியமாக? பின் என்ன கார்த்திக் அடித்தால் சுருண்டு விழுவான். அவன். அவன் விழுந்து விட்டது நிச்ச்யமான பின் இன்னொருத்தன் வருவான் கையை விரைப்பாக நீட்ட. இப்படி பத்துப் பேரும் சுருண்டு விழுந்தாலும் அவர்களுக்கு ஒரு சிராய்ப்பு கூட பட்டிராது. என்னமோ தூசியைத் தட்டிக்கொண்டு போவது போல் ஓடுவார்கள். நம்ம ஹீரோவுக்கு தலை கிராப் கூட் வாரியது கலைந்திராது.
இதை படத்தின் டைரக்டரே சொல்கிறார். “ஜெயா டிவியில் அபிலாஷுடனான பேட்டியில் சொல்கிறார்: “ ஆமாம், ஆளை அடிக்கிறதுக்குன்ணு பத்துப் பேர் சேர்ந்துட்டானுங்கண்ணா எல்லாரும் சேர்ந்து ஒரு மொத்து மொத்துவானுகளா, இல்லை ஒத்தனா க்யூவிலே நின்னு அடி வாங்கிட்டு வருவானுகளா? “ என்று. தானே சொல்கிறார். அவ்ருக்கே இந்தப் பைத்தியக்காரந்தனம் தெரிகிறது. இருந்தாலும் தமிழ் சினிமா, விலை போகணும், சன்ங்க வந்து பாக்கணும், அவங்களுக்கும் ஒரு விருவிருப்பு வேணும்.
என்ன புதிதாகச் சொல்லப்பட்டு விட்டது? எல்லா கிராமத்துக் கதைகளிலும் வரும் ப்ழி வாங்கல், கற்பழிப்பு, தாயாதி பகைமை, இத்யாதி. இத்யாதி. அதுக்கு ஒரு தமிழ் சினிமா கதையமைப்பு, வசனம், குத்துச் சண்டை, கோஷ்டி ஆட்ட்ம். மெட்ராஸ் தெருவில் நாற்பது பேர் குத்தாட்டம் போடவில்லை. குத்தாட்டம் சூட்டிங்குக்கு ஃப்ராங்பர்ட் போகவில்லை. கிராமத்து வயலிலேயே ஆடுகிறார்கள். அது தான் வித்தியாசமான பட்மாக இதை ஆக்குகிறது போலும்.
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். மிகவும் பேசப்படும் பாலாவையே எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு வித்தியாசமான ஒரு காரக்டரைச் சுற்றி கதை பின்னப் படுகிறது. அந்த வித்தியாசமான காரக்டர், வித்தியாசமாகக் காட்டப்படவேண்டுமென்றால், வித்தியாச்மான கோணங்கித்தனமெல்லாம் செய்யவேண்டும். விக்ரம் தன்க்குத் தெரிந்த கோணங்கித் தனத்தையெல்லாம் காட்டுகிறார். பேசமுடியாத ஊமை என்றால், அவன் தலையை ஒரு ப்க்கமாகச் சாய்த்து மூக்கை ஆகாயத்துக்குத் தூக்கவேண்டும். அவன் கடைசியில் அச்காய வீரனாகவும் ஆவான். தன் எதிரியை என்னமாக துவம்சம் செய்கிறான்.? ஆக சண்டைக்காட்சியையும் காட்டியாயிற்று. ஹீரோவை ஹீரோவாகவும் காட்டியாயிற்று. பெரிதும் பேசப்பட்ட நான் கடவுள் படம் இந்த எதிர்பார்ப்பு யாரை முன்னிட்டு. ஜெயமோகனா, இல்லை பாலாவா, யார் காரனம்? சின்ன வயசில் ஓடிப்போனவன், இருபது வருடங்கள் கழித்து காசியில் கங்கைக் கரையில் ஹரிச்சந்திரா காட்டில் ஏழ்டி உயரமும் தாடியும் மீசையும், ஆஜானுபாவனான சரீரமும் கொண்டவனாக தவக்கோலத்தில் நின்றிருப்பவன் தான் அவன் என்று கண்டு பிடித்துவிடுகிறார்கள். தமிழ் சினிமாவாயிற்றே. இதெல்லாம் நடக்கும். கடைசியில் அவன் பிச்சையெடுக்கும் ஊனமுற்றோர்களை காப்பாற்றும் வீரனாகவும் ஆகிறான். அந்தப்பிச்சைக் காரர்களுக்கு ஒரு குத்தகைக் காரன். அவர்களைப் பேரம் பேசும் இன்னும் ஒரு குத்தகைக் காரன். எம் ஜி ஆர் வேஷம் போட்டு நாடகம் போடும் பிச்சைக்காரர்கள். எதற்காக இதெல்லாம்? காவல் துறை ஆட்களுக்கு முன்? ஆர்யாவின் தாடியைப் பார்த்து எல்லோருக்கும் ஒரு மயக்கம். காவல் துறையும் பயப்படுகிறது. இது ஜெயமோகனின் கைவண்ணம் இல்லை. தமிழ் சினிமாவுக்கான முத்திரைகள். ஆச்சா! நமப முடியாத கதைத் திருப்பங்கள், கதையளப்புகள், இடையில் மசாலாவாக ஸ்டண்ட் காட்சிகள். ஆர்யா இந்த மாதிரி உடலை வளர்த்து வைத்திருப்பது வீணாகக் கூடாகதல்லவா? அவர் தான் குத்தகைக் கார மலயாள வில்லன்களிடமிருந்து அந்த ஏழைப் பிச்சைக்காரக் கூட்டத்தைக் காப்பாற்றுகிறார். ஜெயமோகனின் ஏழாம் உலகம் வேறு ஒரு உலகை, அனுபவத்தைச் சார்ந்தது. அதைத் தமிழ் சினிமா சந்தைக்கு ஏற்ற பொருளாக பாக்கிங் செய்யும் போது அதில் சேரவேண்டிய மசாலாவெல்லாம் சேர்த்துத் தானே ஆகவேண்டும்.? டிவி இருக்கும் அறையை விட்டு வெளியே வந்தால் அந்தப் படத்திலிருந்து ஒரு இனிமையான பாட்டு கேட்கும். “பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன், ஐயனே....” என்று. எத்தனை தலைமுறைகளாயிற்று, இந்த மாதிரி ஒரு பாட்டைக் கேட்டு! ஆனால் இந்தப் படத்துடன் சம்பந்தப் படாமலேயே இந்தப் பாட்டை மாத்திரம் கேட்டு அனுபவிக்கலாம். படம் பார்க்கும் அவசியமில்லை. “மறைவாய்ப் புதைத்த ஓடு மறைந்த மாயம் அறியேன்” என்று காற்றில் மிதந்து வரும் பாட்டு கேட்க இனிககாதா என்ன? பட்ம் பார்த்தால் தானா? ஒரு நீண்ட காலத்துக்குப் பிறகு சங்கீதம் என்கிற ஒரு சமாசாரம் த்மிழ் சினிமாவில் நுழைந்திருக்கிறது. ஆனால் இது தமிழ் சினிமா ரசிகனைக் கிளுகிளுக்க வைக்காது. அவனுக்கு அது தான் தேவை. அதை ரஹ்மான் சார் தான் தரவேண்டும்.
அந்தப் பாட்டை எழுதியவரும், இசை அமைத்தவரும், பாடியவரும், ஏழாம் உலகம் எழுதிய ஜெய்மோகனும் தான் இந்தப் படத்துக்கு கௌரவம் சேர்த்திருக்கிறார்கள். (தொடரும்)