புத்தகத்தைத் திறந்த உடனேயே சில வார்த்தைகள் மறுபடியும் என்று சொன்னால் என்ன அர்த்தம்? இந்த மறுபடியும் என்ற வார்த்தை இப்போது இந்த புத்தகத்தைத் திறந்த உடனேயே என்ற சந்தர்ப்பத்தில் அல்ல. அப்படியும் எடுத்துக்கொள்ளலாம். அது இப்போது படிக்கத் தொடங்கியவர்களுக்கு. இதன் முதல் பக்கத்தின் முதல் கட்டுரையிலேயே நான் எழுதத்தொடங்கிய 1960-ல் சொன்ன சில கருத்துக்களைத் திரும்ப நினவு படுத்தித்தான் தொடங்குகிறேன். வேறு யாருக்கும், இந்தியாவில் உள்ள எந்த மொழி பேசும் மக்களுக்கும், நம் தமிழ் மக்களுக்கு சொல்லவேண்டியிருப்பது போல, ஒரே விஷயத்தைப் பன்னிப் பன்னி சொல்ல வேண்டியிருக்கிறதா என்று தெரியவில்லை. பல விஷயங்களில், பல வாழ்க்கை அம்சங்களில். எனக்கு வயது எண்பது தாண்டியாகிவிட்டது. என் ஏழு வயதிலிருந்தோ அல்லது இன்னும் தாராளமாக பத்து வயதிலிருந்து என்று வைத்துக்கொள்ளலாம, சரி பத்து வயதிலிருந்து என்னைச் சுற்றியுள்ள உலகை, மக்களை வாழ்க்கையை ஒரு வாறாக விவரம் அறிந்து பார்த்ததை நினைவில் கொண்டிருப்பேன் என்று கொள்ளலாமா? ஒரளவுக்கு நான் அப்போது வாழ்ந்த ஒரு சிறிய 'டவுன்' மக்களையும், அவர்கள் வாழ்க்கையையும், ஊரையும் மக்கள் மனப் போக்கையும் பற்றி என் நினைவில் பதிந்தவற்றை இப்போது நினைவுக்குக் கொண்டு வந்தால், இப்போது அது ஒவ்வொன்றும் படிப்படியாகச் சீரழிந்து கொண்டு தான் வந்துள்ளது என்பது எனக்கு நிச்சயமாகத் தெரிகிறது.
முன்னைவிட படித்தவர்கள் அதிகம், வசதிகள் அதிகம். பண வருவாயும் அதிகம். ஆனால் கலாசாரம், நாகரீகம், மக்கள் பண்பு எல்லாமே சீரழிந்து வருகிறது. ஆச்சரியமாக இருக்கும். இடுப்பில் ஒரு கோவணம், தலையில் ஒரு துண்டு சுற்றியிருக்கும் இபபடி ஒரு ஏழ்மையைப் பார்த்திருக்கிறேன். அதிசயமாக அல்ல. சாதாரணமாக. அவனிடம் காணப்பட்ட பண்பு தன் ஏழ்மையிலும் பொது வாழ்வைக் கெடுக்கும் எதையும் தான் செய்யக்கூடாது என்ற குணம் அவனிடம் இயல்பாகப் படிந்த ஒன்று. இன்று பல பத்தாயிரம் கோடி சொத்தும் நாட்டையே மாற்றி அமைக்கும் அரசியல் அதிகாரம் கொண்டவர்களுக்கு மக்களைப் பற்றிய அந்த அக்கறை இல்லை. தன் சமூகம் சீரழிவதைப் பற்றிக் கவலை இல்லை. தனக்கு அதிகாரமும், செல்வமும் கிடைக்குமானால், தன் சமூகத்தை பலியாக்குவது பற்றி அந்தத் தலைவனுக்கு, பிரமுகனுக்கு கவலை இல்லை. இது படிப்படியாக சீரழிந்த சரித்திரம். இவர்கள் கொள்ளைக்காரர்களாக, சமூக விரோதிகளாக அல்ல, வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களாக, சாமர்த்திய சாலிகளாக, தலைவர்களாக, சரித்திரம் படைப்பவர்களாக, போற்றப் படுகிறார்கள். நாம் வாழும் இடமும், சுற்றுச் சூழலும், எந்த வசதியும் அற்ற அன்றைய ஏழை கிராமத்தின் சுத்தத்தை ஆரோக்கியத்தை அறவே இழந்து காணப்படுகின்றன. இவை இன்னம் சீரழிந்து கொண்டு தான் இருக்கின்றன. இது நம் வாழ்க்கையின் எல்லா அம்சங்களையும் பாதித்துவரும் ஒன்று. இதைப் பற்றிய பிரக்ஞை யாருக்கும் இல்லை. இது பற்றிக் கவலைப்படுபவர் ஒரு சிலர் சொன்னால் அது பற்றி யாருக்கும் கவலை இல்லை. “அது சரிங்க. அதுக்கு இப்போ என்ன செய்யச் சொல்றீக. இன்னிக்கு நேத்துலெர்ந்து நடக்கற சமாசாரமா இது. காலம் மாறிக்கிடக்கு. அது தெரியாம நீங்க என்னமோ கதை பேசீட்டிருக்கிஹ” என்று பதில் வந்து விடும்.
இது கண்ணுக்குத் தெரிகிற சாதாரண லௌகீக சமாசாரம். இது சரி, இது தப்பு, இது நல்லது, இது கெட்டது என்று குறளுமோ அதன் எந்த உரையுமோ படிக்காமலேயே ஒரு சாதாரண கிராமத்தானுக்கு தெரிகிற விஷயம். உரை எழுதுகிறவர்களே கண்டுக்காமல் தம் காரியத்தில் முனைந்திருக்கிற காலம் இது. அப்படியிருக்கும் ஒரு காலத்தில், நான் 1960லிருந்து சொல்லி வரும் ஒரு சில அடிப்படையான விஷயங்கள், உள்ளுணர்வினால் மாத்திரம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள், எப்படி சாதாரண, அன்றாட வாழ்வில் உழலும் மக்களுக்கு புரிய வைக்க முடியும்? வாழ்க்கையின் வசதியோ வசதியின்மையோ மாத்திரமல்ல, தர்மங்களும் மாறிவிட்டன. வாழ்க்கையின் நோக்கங்கள் மாற, அதற்கேற்ப தர்மங்களும் மாறிவிட்டன.
நமக்கு சினிமா என்ற ஒன்று தோன்றியதிலிருந்து அது நமக்கு புரியாத, அன்னியப்பட்ட ஒன்றாகவே இருந்து வந்துள்ளது. நாடகம் என்ற பெயரில் நம்மிடையே வளர்ந்துவந்த ஒன்றை புகைப்படம் பிடித்து சினிமா என்று சொல்லி வந்திருக்கிறோம். சினிமா என்ற தொழில் நுட்பத்தில் பிறந்த கலையை நாம் தொழில் நுட்பமாகவும் உள்வாங்கிக்கொள்ளவில்லை. கலையாகவும் அதை வளர்க்கவில்லை. பாரம்பரிய கலையாக இருந்து வந்த இசை நாடகத்தைத் தான் நாம் ஆரம்ப காலத்தில் நாடகமாகவும் பின்னை அதையே சலனப்படமாக்கி சினிமாவாகவும் சுமார் 70 – 80 வருடங்களாக போற்றிக்கொண்டாடி வருகிறோம். தொடக்க காலத்தில் மேடையில் பாடி, ஆடியதையே இன்றும் செய்து வருகிறோம். அன்று நாடகத்தில் பாடியதைக் கேட்க, புகழ் பெற்ற சங்கீத கலைஞர்கள் கொட்டகைக்கு வந்தார்கள். ஆனால் இன்றைய சினிமாவின் வடிவமும் அதில் நம் பார்வையும் சினிமா என்ற புதிய கலைவடிவத்தின் பெயருக்கு தகுதி அறவே அற்ற போதிலும், முன்னர் இருந்த ஆட்டமும் பாட்டமும் இன்றும் தொடர்ந்தாலும் அந்த ஆட்டம் இடையில் நாற்பதுகளில் எந்த பொருட்காட்சியிலும் திருட்டுத்தனமாக இடம் பெற்று வந்த ரிகார்ட் டான்ஸ் எனற அலங்கோலமாக சீரழிந்து விட்டது. பாட்டும் ருக்குமிணி, ருக்குமிணி…..யாக சீரழிந்து இருக்கிறது. இது மணி ரத்தினத்தின் பார்வையிலேயே. சிம்புவின், சங்கரின் பார்வையிலது என்னவாகும்?
ஒரு ஆரம்ப சூரத்தனத்தில், நண்பர்களின் உதவியில் சேர்க்கப்பட்ட முதலீட்டில் (ரூ 80,000 என்று சொல்லப்பட்டது) ஜெயகாந்தன் உன்னைப் போல் ஒருவன் வெளிவந்தது. புழுதியில் புரண்டவனை இழுத்து வந்து குளிப்பாட்டி, ஒரு நல்ல துண்டை இடுப்பில் கட்டியது போன்ற காரியம் 1964-ல் நிகழ்ந்தது இது. ஆனால் “எந்த கொம்பனுக்கும் நான் பணிந்து போகவேண்டியதில்லை” என்றோ என்னவோ இது போன்ற நிஜமான அந்தக் காலத்திய ஆரம்ப சூரத்தனம் அதிக காலம் நீடிக்கவில்லை. அந்த ஆரம்ப எளிமை கதையின் எளிமை, படமெடுக்கப்பட்ட எளிமை பின்னர் கைவிடப்பட்டது. சுற்றியிருந்த சினிமா தொழில்காரர்களின் எதிர்ப்பையும் சமாளிக்கமுடியவில்லை. காரணம் தமக்கு பழக்கப்பட்டது, தமக்கு புகழ் தருவது, பணம் அள்ளிக் கொட்டும் ஒன்று ஒரு புதிய பாதையை, தனக்கு கைவராத பாதையை அது ஏற்காது. அம்பானியின் தொழிற்சாலைக்குப் பக்கத்தில் ஒரு எளிய பெட்டிக்கடை இருப்பது சாத்தியமில்லை. அதனால் எந்த பாதிப்பும் இல்லை யென்றாலும். வெகு சுலபமாக, ஒரு ஓரப் புன்சிரிப்புடன், “ஆமாய்யா, பணம் சம்பாதிக்க இல்லாமே வெறே என்னத்துக்குய்யா? பணம் சம்பாதிக்கிறது என்ன தப்பா?” என்று ஒரு கேள்வி எதிராளியை விழுத்தாட்டி விட்டது போல நம் மேல் வீசப்படும். ஒரு ஹோட்டல் ரூமில் உடகார்ந்து என்னென்ன மசாலா, யாருடைய மசாலா சேத்தா வசூல் அந்தாலே வந்து கொட்டும்லே” என்று சொல்லி செய்யப்படும் ஒரு மசாலா படத்தை, அர்ஜெண்டினா போய் டான்ஸ் ஷூட்டிங் முடித்து விட்டு வந்தால், அந்த முதல் வார 100கோடி வசூலுக்கு கூவம் கரையில் குடிசை போட்டிருக்கும் ஜனங்களை அவர்கள் ரசனிக்கு தீனி போட்டு மயக்கி வசூலிப்பது கலை பண்ணுவதும் இல்லை. பணம் சம்பாதிபபதும் இல்லை. இந்த வித்தியாசத்தை புரிய வைப்பது, பணம் பண்றது பாபமாய்யா, மக்களை சந்தோஷப்படுத்துவது தப்பா, பின்னே என்னத்துக்கு படம் எடுக்கறது என்று கேட்கும் கலாசாரம் ஒரு அசிங்கமான, ஆபாசமான தார்மீகம் அற்ற கலாசாரம். இது இப்போதைய அலங்கோலம். இது படிப்படியாக சீரழிந்த கதை.
அதற்கு முன்னாலேயே நம் சினிமா வசனங்களின் ஆக்கிரமிப்பில் அடிமைப் பட்டுக்கிடந்தது. அந்த அலங்கார ஆவேச வசனங்களுக்கு நம்மை பழக்கியது இளங்கோவனின் வசனங்கள். காட்சி பூர்வமான வடிவம் என்பதை நாம் என்று மே புரிந்து கொண்டதில்லை. இன்று வரை. சினிமாவின் காட்சி அனுபவம் என்பது ஓடும் ரயிலின் மேல் சையான் சையான் என்று கூத்தாடுவதில்லை. ஒரு ரோடு பூராவும் சாயம் பூசி, கோலம் போட்டு, லாரிகளை அசிங்கமாக அலங்கரித்து ஊர்வலம் ஆட்ட பாட்டத்தோடு வருவதில்லை. “அண்டங் காக்கா கொண்டைக்காரி, அச்சு வெல்லம் தொண்டைக்காரி” என்று பாடி ஆடுவது, சங்கீதமும் இல்லை. நடனமும் இல்லை. இது அன்றைய ரெக்கார்ட் டான்ஸின் இன்றைய பதிப்பு தான்.
கலை, சினிமா, உணர்ச்சிப் பெருக்கு, வெற்றிப் படம், கலைப்படம் என்பதற்கெல்லாம் நாம் மிகமிக அபத்தமான, அருவருப்பு மிகுந்த அர்த்தங்களைக் கொண்டிருக்கிறோம். அசிங்கமான அலங்காரம், இரைச்சலிடும் பாட்டு, அருவருப்பான ஆட்டம், அர்த்தமும், வாழ்க்கைக்கு எந்த சம்பந்தமுமற்ற கதை நமக்கு சந்தோஷமளிக்கச் செய்யப்பட்டு விட்டன,அவற்றிற்கு கௌரவம், செல்வாக்கு தரப்பட்டு விட்டன. அரசியல் அதிக்காரம், சமூக அந்தஸ்து இவற்றின் மீதே கட்டமைக்கப்பட்டு வருகிறது. கேவலமாகக் கருதப்பட்ட, பின்னிரவு நேரத்தில் தலையில் துண்டைப் போட்டுக்கொண்டு, திருட்டுத் தனமாகப் பார்க்கப்பட்ட ரிகார்ட் டான்ஸ் இன்று அனேகமாக எல்லாத் தொலைக்காட்சிகளிலும் இன்றியமையாத எல்லோராலும் விரும்பிப் பார்க்கப்படும் நடனமாகி விட்டது. அதற்கு சிறுவர்கள் பயிற்றுவிக்கப் படுகிறார்கள். அவற்றிற்கு பரிசு வழங்க, பாராட்ட நீதிபதிகளும் மேடையில் அமர்ந்து விமர்சனம் செய்கிறார்கள். புகழ்கிறார்கள். ரிகார்ட் டான்ஸ் இன்று எல்லொரும் விரும்பி பயிலும் கலையாகிவிட்டது.
இது சமூகம் முழுதும், அதிலும் அதிகாரத்தின், செல்வத்தின், சமூகமதிப்பில்மேற்தட்டில் இருப்பவரகளும் கொண்டாடும் விரும்பி வரவேற்கும் ஒன்றாகிவிட்டது. இந்த சூழலுக்கு சமூக மதிப்புகளுக்கு கிட்டத்தட்ட இரண்டு தலைமுறை காலம் நாம் பழக்கப்பட்டு விட்டோம் அதை ரசிக்கப் பழக்கப் பட்டு விட்டோம். தப்பு. அதைத் தான் ரசிக்கப் பழக்கப் படுத்தப்பட்டிருக்கிறொம். மாயா ஜாலக் காட்சிகளோ, அல்லது அருவருப்பு மிகுந்த பாட்டும், டான்ஸும் கூத்தாட்டமும் கொண்டதோ, வெளியான முதல் வாரத்தில் 100 கோடி வசூல் ஆகிவிட்டால் அதுவே எல்லாரும் அடைய வேண்டிய லக்ஷியமாகிறது. இது ஹிந்தி பட உலகில் நடப்பது. ஆனால் அதே ஹிந்தி பட உலகில் ஒரு ஷாம் பெனிகல், வாழ முடிகிறது. அவருக்கும் ஒரு இடம் உண்டு. அந்த இடம் தன்னது, இது இந்த சமூகத்திற்கு தரப்பட வேண்டும் என்று முனைந்து தர முடிகிற இடம். மற்ற வணிக சூழலின் ஆக்கிரமத்திற்கு அப்பால் உள்ள, வாழ் உரிமை பெற்றுவிட்ட ஒரு இடம் அது. அது உண்மையும், நேர்மையும், கலையும் நிறைந்த இடம் நமது தமிழ் சினிமா உலகில் அம்மாதிரியான இடம் உருவாவதில்லை. பாலு மகேந்திரா தொடர்ந்து இயங்க முடிவதில்லை. இப்போது அவர் எங்கிருக்கிறார்? அவரை நாம் எப்படி வரவேற்றோம்?
பணம் பண்ணனும், எல்லோருக்கும் பணம் வேண்டும் தான். பிழைக்க வேண்டும் தான். ஆனால் எதைக் கொடுத்து, எதைக் கெடுத்து, நாம் பணம் பண்ணுகிறோம் என்பது ஒரு தார்மீக பிரசினை மாத்திரமில்லை. கலைசார்ந்த பிரசினையும் தான். கடந்த சனிக்கிழமை இரவு லோக் சபா தொலைக்காட்சியில் பங்கன்வாடி என்று ஒரு மராத்தி படம் பார்த்தேன். ஹிந்தி வணிக சினிமாவில், ஒரு அப்பாவியாக, அசடாக, தட்டுத் தடுமாறி காதல் என்று அசடு வழியும் இளைஞனாக அல்லது மற்றவர்களை அசடு வழியச் செய்யும் அசட்டு வேடதாரியாக, அல்லது, ஒரு சினிமா நக்ஷத்திரத்தைக் கல்யாணம் செய்து கொண்டு விழிக்கும் மாமா ப்ளஸ் கணவனாக இப்படி எத்தனையோ வித பாத்திரங்களாக நடித்த, அப்ஸ்வரம் இல்லாது, ஆபாச உணர்வு எழுப்பாது, இரைச்சலிடாது எளிய வணிகப்படங்களில் தோன்றி தானும் மகிழ்ந்து பார்வையாளரையும் மகிழ்வித்த அமோல் பலேகர் இயக்கிய படம். ஒரு சுவாரசியமான் விஷயம். பூமிகா என்ற படம் ஹம்ஸா வாடேகர் என்ற அந்தக் காலத்திய மராத்தி நடிகையின் சுய சரித்திரத்தை ஆதாரித்து எடுக்கப்பட்ட படம். நம் நடிகர்கள், நடிகைகள், அரசியல் வாதிகள் தம் சுயசரித்திரத்தை நடந்தவாறு எழுதக் கூடுமானால் நான் ஆவலோடு எதிர்பார்ப்பேன். அமோல் பாலேகர் சினிமா மாத்திரமன்றி, நாடகங்களிலும் தனக்கென தனியான கலைஞன் என்று அங்கீகரிக்கத் தக்க இடத்தை உருவாக்கிக்கொண்ட அமோல் பலேகரின் படம் ஒன்று, பங்கன்வாடி பார்க்கக் கிடைத்தது.
பங்கன் வாடி மகாராஷ்ட்ராவின் மிக வரண்ட, ஏழ்மையில் வாடும், எந்த வளமுமற்ற பகுதியின் ஒரு கிராமம். கதை நடப்பது 1939-ல். ஒரு மகாராஜாவின் ஆளுமைக்குட்பட்ட கிராமம். 7வது படித்த ஒரு இளைஞன் அந்த கிராமத்துக்கு பள்ளி ஆசிரியராக அனுப்பப்படுகிறான். அவனுடைய கிராம வாழ்க்கையைச் சொல்கிறது பங்கன்வாடி. பாலைவனம் போல் ஒரு பூண்டு பச்சை இல்லாத வரண்ட புழுதி படிந்த நிலம் கண்ணுக்கெட்டும் வரை. ஆடுமேய்த்து வாழ்க்கை நடத்தும் கிராம வாசிகள். மண் குடிசைகள். மகாராஷ்ட்ரத்தின் வரண்ட பகுதிகளின் மக்கள் வாழ்க்கையை, அவர்கள் தர்மங்களை, செய்திப் படமே போன்ற வடிவில் சொல்கிறது பங்கன் வாடி.
இது போன்ற தமிழ் வாழ்க்கையைச் சித்தரித்து ஆவணமாக்கும் கதைகள், படங்கள், ஒன்று, ஒன்றே ஒன்று, 80 வருட சினிமா வரலாற்றில்? கோடம்பாக்கத்தை கிராமத்தில் பதியன் செய்யும் பாரதி ராஜாவைச் சொல்ல வேண்டாம். பெரிய வெற்றிப் படம் என்று சொல்லிக்கொள்ளும் மகேந்திரனின் போடா பொக்கை என்று குத்தாட்டம் போடும் காட்சியைச் சொல்ல வேண்டாம். அமோல் பலேகரின் பங்கன் வாடி பல சர்வதேசிய விழாக்களில் பங்கு பெற்றுள்ளது. பரிசுகளும் பெற்றுள்ளது. 1939 கிராமம் என்று அடையாளம் சொல்லக்கூடிய கிராமத்தை அமோல் பலேகர் முன்னிறுத்தியது ஏதும் ஆர்ட் டைரக்டரின் சாதனையா அல்லது அப்படி ஒரு கிராமம் மகாராஷ்ட்ராவின் ஒரு வறண்ட மழையற்ற பகுதியில் இன்னும் காணக் கிடைக்கும் ஒன்றா என்பது தெரியவில்லை. நான் ரூ 100/’200 கொடுத்து வெயிலில் வரிசையில் நின்று டிக்கட் கிடைத்த பரவசத்தில் அமோல் பலேகரின் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் அவர் ரசிகர் மன்றம் செய்து கொண்டிருக்கும் காட்சியைப் பார்க்கும் சொர்க்க போக அதிர்ஷ்டம் எனக்கு இல்லை. சனிக்கிழமை இரவு 9 மணிக்கு டிவி முன் உடகார்ந்தால் லோக் சபா டிவி என் அறைக்கு அமோல் பலேகரைக் கொண்டு சேர்க்கிறது. கல் தோன்றி மண் தோன்றாக்காலத்துக்கு முன் தோன்றிய மூத்த குடி தமிழனிடமிருந்து இன்றுவரை ஒரு எளிய கலைஞனை தமிழ் சினிமாவில் காணமுடியவில்லை. ஒரு சினிமாவை மண் தோன்றாக் காலத்து தமிழன் தர முடிந்ததில்லை. நிறைய பாலாபிஷேகங்கள் செய்த மொட்டை அடித்து முடியிறக்கிய சந்தோஷங்கள். உலக நாயகர்கள் இயக்குனர் இயமயங்கள், நடிகர் திலகங்கள் தான் தமிழனுக்கு கிடைபபவை.
இதையெல்லாம் இவர் முன்னாலேயே சொன்னது தானே. எத்தனையோ தடவை கேட்டுக் கேட்டுச்சலித்த விஷ்யங்கள். ஏதாவது புதுசா இவர் சொல்கிறாரா என்ற புகார் தமிழ் ஸ்டுடியோவில் நான் எழுதி வந்தபோது அடிக்கடி பலரிடமிருந்து கேட்டு வந்தது. வருஷத்துக்கு வருஷம் திருக்குறள் புதிதாக எழுத முடியாது இல்லையா. பொய்யும், ஆபாசமும், அலங்கோலமும் ஆரவாரத்தோடு ஊர்வலம் வரும் வரை இதைத் தான் நான் திரும்பத் திரும்ப சொல்ல வேண்டி வரும். 1960- லிருந்து சொல்லி வருகிறேன். நான் சுட்டிக் காட்டும் பொய்மையும் அபத்த ஆரவாரமும் இன்னும் பெரிதாக வளர்ந்து வருகின்றனவே தவிர ஏதும் பாதிப்பு இருப்பதாகத் தெரியவில்லை. முதல் வார 100 கோடி வசூலில் வெற்றிப் படங்களின் கொக்கரிப்பு தான் பலமாகிக் கொண்டிருக்கிறது. எனவே மறுபடியும் மறுபடியும் அதே சில வார்த்தைகள் இன்னும் எத்தனை காலத்துக்கு நான் இதையே திருப்பித் திருப்பிச் சொல்ல விதிக்கப்பட்டிருக்கிறேனோ, தெரியவில்லை.
சினிமா என்ற பெயரில்……..(கட்டுரைத் தொகுப்பு): வெங்கட் சாமிநாதன்: பிரசுரம் வம்சி புக்ஸ், 19, டி.எம் சாரோன், திருவண்ணாமலை, 606601, தமிழ் நாடு. (பக். 408) விலை ரூ 300
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.