ஒரு துருவம் மனுஷி. இளம் பெண். புதுவை பல்கலைக் கழகத்தில் முதுகலைப் படிப்பு முடிந்து இப்போது ஆராய்ச்சி மாணவி என்று நினைக்கிறேன். குட்டி இளவரசியின் ஒளிச்சொற்கள் என்னும் தன் முதல் கவிதைத் தொகுப்புடன் நம் முன் அறிமுகம் ஆகிறார். தன் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் காலத்தில், ஒரு நாள் கவிதை எழுதத் தொடங்கியதாகச் சொல்கிறார். கவிதை அன்றிலிருந்து அவரது பிரக்ஞையை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது. அந்தக் கவிதை, பேருந்து ஒன்றில் பயணம் செய்யும் சக பயணிகள் அனைவரையும் கவர்ந்த, ஒரு ஆறுமாதக் குழந்தையின் சிரிப்பு எழுதத் தூண் டியது. ஆனால் தன் வார்த்தைகளால் அந்த அனுபவம் முழுதையும் சொல்ல முடியவில்லை என்கிறார் மனுஷி. புரிகிறது. அந்தத் தொடக்கத்திலிருந்து பின் எழுதிய கவிதைகளை தோழிகள், நண்பர்கள் கவிதை நன்றாக இருப்பதாகவும் ஆனால் ”ஏன் விரக்தி, வெறுமை, கண்ணீர் பற்றியதாகவே இருக்கிறது?” என்று கருத்து சொன்னதாகச் சொல்கிறார் மனுஷி. முன்னுரை எழுதி வரவேற்றுள்ள அவரது ஆசிரியரும் துயரங்களின் அழகியல் என்றே மனுஷியின் கவிதைத் தொகுப்பு பற்றி கருத்து தெரிவித்திருக்கிறார். ஒர் இளம் வயதுப் பெண், குழந்தையின் சிரிப்பை கவிதையாகத் தந்த ஒரு பெண்ணின் கவிதை துயரங்களின் தொகுப்பாகவா இருக்கும்?. அந்த வயதின் ஏக்கங்களும், அவ்வப்போதைய தனிமையும் இருக்கும் தான். ஆனால் அவையே எல்லாமுமல்ல. வேர்த்துக் கொட்டிய வானம் என்று ஒரு கவிதையைத் தொடங்க விரும்பினாலும் அது என்னை நனைத்து போனது என்று தான் அடுத்த வரி எழுத வருகிறது. ஏன்? வேர்த்துக் கொட்டியது வானத்திற்கு. அதுக்கு என்ன பயமோ, கஷ்டமோ?. ஆனால் மனுஷி நனையத்தான் செய்கிறார். ஏன்? இருவர் மனங்களும் ஆட்பட்டிருப்பது வெவ்வேறு உணர்வுகளில். திரும்பவும்
உன்னைச் சந்தித்த வேலையில்
காந்தம் போல் ஒட்டிக்கொண்டது
விரல்கள் பத்தும்
கதகதப்பைத் தேடி
வார்த்தைகள் சிக்கித் தவித்த தருணத்தில்
உதடுகள் பேசிவிட்டுச் சென்றன
கன்னத்துடன்,
என்று எழுதினால். அது எப்படி துயரங்களின் அழகியல் ஆகும்? இடையில் சின்னச் சின்ன தாபங்கள், ஏமாற்றங்கள் வந்து போகும் தான். “கன்னத்துடன் பேசிவிட்டுச்” சென்ற பிறகு. குழந்தைக்குக் கூட சாக்லெட் கிடைக்காவிட்டால் உலகமே தன்னை வஞ்சித்துவிட்டது போல் தெருப்பூராவும் கேட்க கதறத் தொடங்கும். மறுபடியும் அதன் முகத்தில் சிரிப்பை வரவழைக்க அதிக நேரம் ஆகாது. இப்படித்தான் இளம் வயது துக்கங்களும். ஆனால் தன் துக்கங்களைத்தான் அதிகம் சொல்லிப் புலம்பத் தோன்றும். ”கன்னத்துடன் திரும்பப் பேசும்” வாய்ப்பு வரும். சரி, இதெல்லாம் ஒரு புறம் இருக்க, எதானால் என்ன? கவித்வம் என்னும் உள்ளுறை உயிர் இருக்கிறதா, கவிதை என்று தரப்பட்டதில்? என்று தான் பார்க்க வேண்டும். இருந்தால் அது சொல்லும் எதுவும் உயிர் பெற்றுவிடும்.
எங்கள் இருவரின்
பேச்சுக்களும் சுவாசங்களும்
அழுகைகளும் சிரிப்புகளும்
தூக்கங்களும் விழிப்புகளும்
சோம்பல்களும் சுறுசுறுப்புகளும்,
ஆங்காங்கே சிதறுண்டிருந்தன
எவரின் குறுக்கீடுகளும்
ஆதிக்கமுமின்றி இயல்பாய் பயணித்தது
எங்கள் வாழ்க்கை
நேற்று வரை.
இன்று
என் வீட்டின் கதவு திறந்த சப்தம்
கேட்கவே இல்லை
என் படுக்கையில்
நீ உறங்கிக் கொண்டிருக்கிறாய்?
என்று ஒரு கவிதை முடிகிறது கொஞ்சம் வார்த்தைகள் அதிகம் தான். இங்கு துயரமே அழகியலாகி விடவில்லை.
மனுஷியின் கவிதைகள் வெற்று வார்த்தைச் சேர்க்கைகள் அல்ல. சந்தம் பார்த்து, அழகு எனக்கருதப்படும் சொல்லாடல் கொண்டு. அவருடைய கவிதைகள் சோகம், எதிர்பார்ப்பு ஆனந்தம் போன்ற உணர்வுகளோடு அவை காட்சி அனுபவமாகவும் நம்மை வந்தடைகின்றன. ஒளிச் சொற்கள் போன்ற சொற்றொடர்கள் அபூர்வம் தான். ஆனால் என்னைக் கவர்வது, மனுஷியின் கவித்வத்துக்கு ஒரு தனித்தன்மை கொடுப்பது, அது அவருக்கு இயல்பாக வந்து சேர்ந்துள்ளது என்று, சொல்வது அவரது சொற்கள் தாங்கி வரும் உணர்வுகளும் காட்சி அனுபவங்களும் தான். இதை யோசித்து உருவாக்க முடியாது. சொல் விளையாட்டிலும் வருவதல்ல
ஒரு சின்ன கவிதையை முழுதும் தந்து விட வேண்டும்.
எனக்குப் பின்னாலிருந்து
பட்சி ஒன்று
உரத்து ஒலியெழுப்புகிறது
அதன் சிறகசைப்பின் தாத்பர்யத்தையும்
அது சொல்ல விழையும் செய்தியையும்
யூகிக்க முடிகிறது
இப்போது அது அசரீரியாகி
என்னை எச்சரிக்கிறது
என்னைப் பின் தொடரும்
பார்வைகளையும்
சமிக்ஞைகளையும்
விழுங்கிச் செரித்து
எனக்கு முன்னால் துப்புகிறது
நான் ஆமையாகி
என்னை உள்ளிழுத்துக் கொள்கிறேன்
என் ஓட்டின் மீது அமர்ந்து
வான் அதிரக் கீச்சிடுகிறது
அந்தப் பட்சி.
மனுஷியின் கவிதை என்று எதிர்ப்படுவனவற்றை இனி ஆவலுடன் படிக்க விரும்புவேன். ஒளிச்சொற்கள், மனுஷி என்னும் புனைபெயர், ஆராய்ச்சி மாணவி, தமிழ் ஆராய்ச்சிக் கருத்தரங்கு பங்கேற்புகள் போன்ற முன் அறிமுகங்கள் எல்லாம் என்னில் முதலில் தயக்கத்தைத் தான் தந்தன. இந்த அறிமுகங்களையெல்லாம் மறுத்த வேறொரு மனுஷியை என் முன் அவரது கவிதைகள் நிறுத்தியுள்ளன.
இரு துருவங்களென்று சொன்னேன். மனுஷி ஒரு முனை. இன்னொரு முனையில் பச்சை நாயகி என்ற தன் கவிதைத் தொகுப்பைச் தந்திருக்கும் நாஞ்சில் நாடன். எல்லாவற்றிலும் மனுஷிக்கு எதிர்முனையில் இருப்பவர். அறுபது சொச்சம் வயதுக்காரர். தன் நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைக்ள் என தம் உரைநடை எழுத்துக்கள் மூலமே இது காறும் தெரிய வந்தவர். ஒரு உயர் தள அங்கீகாரம் பெற்றவர். தன்னை இலக்கிய உலகில் வலுவாக ஸ்தாபித்துக்கொண்டவர். பண்டிதர் அல்லர். ஆனால் தனிப்பட்ட விருப்பில் கம்ப ராமாயணம் முழுதும் பாடம் கேட்டவர். சங்கப் பாடல்கள் தொட்டு, சுந்தர ராமசாமி வரை இலக்கிய உலகில் ரசனையோடு ஆழ்பவர். மனுஷிக்கு எதிர் முனை தானா?
அவர் இப்போது தன் அறுபதுகளின் காலத்தில் ஒரு கவிதைத் தொகுப்பைத் தருகிறார். தேவியின் முலைப்பால் உண்டு ,”தோடுடைய செவியன்” என்று ஒரு குழந்தை பாடிய சரித்திரம் உண்டு. “குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்” என்று ஒரு பதிமூன்று வயதுச் சிறுமி பாடிய சரித்திரமும் கொண்டது தமிழ். ஒரு வேளை அவளுக்கு ஒன்றிரண்டு வயது கூடியிருக்குமோ என்னவோ? சுந்தரருக்கும் வயது பதினாறு தான், ஆனால் தமிழ் வரலாற்றில் அறுபது வயதில் நானும் பாடுகிறேன் என்று கிளம்பியவர்கள் தமிழ் பண்டிதர் தான். அவர்கள் எழுதியது உள்ளூர் பிரமுகருக்கு வாழ்த்துப் பா, இல்லையெனில் திருமணப் பத்திரிகையில் அன்பரகள் உறவினர்கள் கேட்க ஒரு பா எழுதிக் கொடுப்பதும் தமிழ் மரபு தான்.
அந்த ஆசைகள் எல்லாம் நாஞ்சில் நாடனுக்கு இருந்ததில்லை. ஆனால் அவர் தன் கிராமத்து மனிதர்களைப் பற்றியோ, அல்லது ஏதாக இருக்கட்டுமே, எழுதுவது அவர் ஊர் நாஞ்சில் நாட்டுப் பேச்சு மொழியில் தான். பம்பாய் வாசியாக இருந்த முப்பது முப்பத்தைந்து வருட காலமும். அந்தக் கொச்சை மொழியே ஒரு வாழ்வு அனுபவம். இருப்பினும் அதனிடையே சங்க காலத்திலிருந்து தேசிகவிநாயகம் பிள்ளை வரையிலான தமிழ் அத்தனையும் மிக அனாயாசமாக சலசலத்து ஓடும். வார்த்தைகளைத் தேடுபவர் அல்லர். அது பாட்டுக்கு வந்து விழும். அதன் உயிரோட்டத்தில் பேசப்படும் மனிதரும் அவர் தோற்றமும், சூழலும் நம் முன் பளிச்சிடும். ஒரே பக்கத்தில், பாராவில், வாக்கியத்தில் இரண்டும், மொழியும் மனிதரும் பல நூற்றாண்டு இடைவெளியை அழித்துக்கொண்டு நம் முன் நம்மையும், நம் காலத்தையும் பரிகசித்துச் செல்லும். அந்தப் பரிகாசம் எத்தனையோ பல துறைகளில் கோலோச்சும் தலைகள் மீசை துடிக்கச் செய்திருக்க வேண்டும். துடித்திருக்கும். ஒரு வேளை துடிக்கும் மீசையின் பின் தன்னையறியாது ஆரவாரச் சிரிப்பில் மீசையைத் துளிர்த்த உடலும் குலுங்குமோ என்னவோ.
உரைநடையில் நாஞ்சில் நாடன் சாதித்துக் காட்டிய அதே பண்புகளை அவரது கவிதைகளிலும் செய்ய முடியும் என்று பச்சை நாயகி தொகுப்பில் உள்ள கவிதைகள் சொல்கின்றன. மொழியும் சைகையும் என்று ஒரு கவிதை: அதிலிருந்து….
குறிஞ்சி கருங்குவளை நீலம்
சங்கு புட்பம் நீலாம்பல் கருநொச்சி
கருந்துளசி நீல ஊமைத்தை எனக்
கபிலன் குறித்த, குறிக்க மறந்து போன
யாவும் சட்டியில் வளரும் குரோட்டன்
அருங்காட்சியகங்களில் உருவம் நட்டு
இனப்பெயர் வரையப்படும்
சங்கம் காப்பியங்கள் முப்பால் கம்பன்
யாவும் சொத்தாக இருந்து அழிந்தவை
எனவும் குறிக்கப் பெறலாம்………..
வாழத் தகுதியற்ற இனம்போலும்
அழிந்து போயிற்று
எனப் பார்வையாளர் இரக்கம்
உகுத்து நகர்வார்
எவனோ எங்கோ என்றோ பாடிவைத்தான்
தனக்கென நாடு கொடி கீதம் இல்லா
மொழி அழியும் என
இன்று நாளையைக் குறிப்புணர்த்துவது
பல்லிளித்தல் கையேந்துதல்
கூனிக் குறுகி நிற்றல்
இரத்தல் தெண்டனிடுதல் செய்வார்க்கு
மொழி எதற்கு?
சைகையே வெள்ளம் அல்லவா?
மாதிரிக்கு மக்களாட்சி வதைப்படலம் என்னும் கவிதையிலிருந்து சில
மக்களின் ஆட்சி யெனு
புன்மைத் தாய் புகலுள
இரந்தும் உயிர் வாழும்
ஏழையர் தம் வாக்குள
செம்மொழித் தமிழெனும்
கிழிந்த செருப்புள………………
என்று தொடங்குவது. முடிகிறது பின் வரும் இவ்வரிகளுடன்.
வெள்ளித்திரையின் வீரம் பலவுள
நாளை வரும் தேர்வுள
மாற்றார்க்கான தனித்த அறுவடைக்
காலம் தானுள
மக்களின் ஆட்சியெனும்
புன்மைத் தாய் புகலுள
குறையுண்டாமோ?
பருந்தெடுத்தேகி ஓடுது பார்” என்று தேரில் ஊர்வலம் வரும் பெருமாளையே கேலி செய்தான் ஒரு காலத்தில் ஒரு புலவன். அவனுக்கு இடம் இருந்தது. காளமேகம் என்றார்கள் அவனை.
ஆனால் நாஞ்சில் நாடனுக்கு அவரது கவிதைப் பேச்சும் கவித்வமும் நண்பர்களிடையே கூட ஏற்புடையனவாகத் தோன்றவில்லை. 2001 புத்தகக் கண்காட்சியில் பரபரப்பாக விற்பனையான புத்தகம் “மண்ணுள்ளிப் பாம்பு {நாஞ்சில் நாடனின் ஒரு சிறு முதல் தொகுப்பு} என்று சுந்தர ராமசாமி முன்னிலையில் பாராட்டு என்று தோரணையில் கேலி செய்கிறார் நீண்ட கால நண்பர், இந்திரன். அவரும் கவிஞர், திறனாய்வாளர். அத்தோடு “வேண்டாம் இந்த மரணவிளையாட்டு” என்றும் மன்றாடுகிறார். “உனக்கு கவிதைவராது என்றும் நண்பர்கள் பலர் எச்சரிக்கை செய்கிறார்கள். தொடர்ந்து தன் கவிதைக் கான காரணங்களைச் சொல்கிறார் கவிஞர்.
“தீங்கு தடுக்கும் திறனிலேன் “ எனும் பீஷ்மன் குரல் பேராட்சி செய்த காலம் சீனப் பெருஞ்சுவரா, சயாம் மரண ரயிலா, ஈழக் கடற்கரையா? எது வெங் கொடுமை?, வன் கொடுமை? புன் கொடுமை?...புன் செல்வம் நச்சுப் புகையெனப் பரந்து, நஞ்சுக்கும் போதைக்கும் வேறுபாடறியா மக்களை மயக்கியது. மேலும் இங்கு விவரித்துச் சொல்ல இயலாத மானசீக அவஸ்தைகளும், என் குளம் கலக்கிய போது கவிதை என்றொரு மடை திறந்தது……
தமிழ்க் கவிதை பற்றிய என் மதிப்பீடு மிக உயர்வானது. மொழியின் அதிக பட்ச சாத்தியப்பாடு கவிதை என்று நான் அறிவேன்……. என்னால் முடிந்தவை இந்தக் கவிதைகள்.கழுதை தன் காமத்தைக் கத்தித் தீர்க்கும் என்பார்கள். எனக்குத் தெரிந்த கவி மொழியில் என் கையறு நிலையைக் கரந்து உரைத்தேன்… என்று எழுதுகிறார் தன் பின்னுரையில்.
கல்லும் கவியும் ஒரு வித்தியாசமான கவிதை
மனதறிந்து குலவுகிறது காற்று
மரங்களுக்கும் மறுப்பில்லை
முன்னிரவில் சிலம்பிய புட்களெல்லாம்
பசியாறி, சிறகோய்ந்து இறகின் கதகதப்பில்
பார்ப்புகளைச் சேர்த்தனைத்து
நாளைய பறப்பின் தூரங்களைக்
காத்திருக்கும்
……………………………………..
கல்லும் உயிரினந்தான்
உண்பதில்லை. தானாய் நகர்வதில்லை. வளர்வதில்லை
ஊழிக்கும் ஒரு உட்சுவாசம் கொள்வதில்லை
எத்தனைத் துகள்களாய்ச் சிதறினாலும்
சாக மறுக்கும் சீவனது
கவி போலக் காலம் வென்று நிற்பது
மண்மீது தீராக் காதலும் கொண்டது.
கவி போலக் காலம் வென்று நிற்பது, மண்மீது தீராக் காதல் கொண்டது போன்ற வரிகள் நாஞ்சில் நாடனின் தனித்வம் காட்டுபவை. உதடுகளும் கண்களும் வெளிக்காட்டாப் பரிகாசங்கள். அவரது உரை நடை எழுத்துக்களிலும் இப்போது காணும் கவிதைகளிலும் இவை விரவிக்கிடக்கும். எதானால் என்ன, எழுதுவது நாஞ்சில் நாடனென்றால் அது எங்கு போய்விடும்? கடைசியில், எதை எழுத? என்ற கவிதையிலிருந்து சிலவரிகள்:
எழுது எழுதுன்னா எதைப் பத்தி எழுதட்டும்?
பணம் அதிகாரம் பதவி தவிர
வேறெதற்கும் அடங்க மறு என
ஆங்காரமாய் எழுதட்டுமா வே?
புரட்சி என எழுதிப் புண்ணியமில்லை
கனத்த மௌனத்துடன் கழுதைகள்
மேயும் பூமி இது
புரட்சியும் வராது புத்தகமும் விற்காது
அதிகார மையங்களின் பொய், வஞ்சம் சூது
கொலை களவு துரோகம் என
யோசித்துப் பார்க்கலாமா?
வெளங்காமப்போறதுக்கா?
வெறுவாக்கெட்ட மூதி.
தெரியாமத்தான் கேக்கேன்
நாளையொரு கலைமாமணி
சாகித்ய அகாடமி, ஞான பீடம்
பத்மஸ்ரீ கௌரவ டாக்டர்
வாரியம் துணைவேந்தர் என
இரக்கப்பட்டாவது தருவார்கள்
அதை இல்லாமல் ஆக்காதே….
என்று பல எச்சரிக்கைகளுக்குப் , எரிச்சல் பட்டு இவ்வாறு முடிகிறது.
போ மக்கா, போயி என்ன
ஈரமண்ணுன்னாலும் எழுது
உருப்படப்பட்ட
வழியைப் பாரு.
இது தமிழில் தேர்ந்த கை. தமிழ் இவருக்கு எப்படியும் கை கட்டி சேவை செய்யும். எப்படியும் தன் திறமையோடு வெளிப்படும். கேலியும், ஆங்காரமும், இயலாத் தனமும், கோபமும், தார்மீக ஆவேசமும், சமூக நடப்புகளின் மீது விமரிசனமும் பரிகாசமாகத் தான் வெளிப்படுகிறது. சிரித்து மறந்து விடுகிறோமோ என்னவோ?
பச்சை நாயகி: (கவிதைத் தொகுப்பு – நாஞ்சில் நாடன்: உயிர் எழுத்து பதிப்பகம் 9 முதல் தளம்,தீபம் வணிக வளாகம், கருமண்டபம், திருச்சி-1 (பக்கங்கள் – 92) விலை ரூ 60
குட்டி இளவரசனின் ஒளிச் சொற்கள்: (கவிதைத் தொகுப்பு – மனுஷி)
மித்ர வெளியீடு, 20/2, ஜக்கரியா காலனி,முதல் தெரு, சூளை மேடு, சென்னை-94: பக்கங்கள் – 80 விலை ரூ 85
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.