நினைவுகளின் சுவட்டில் – 63
இப்போது அந்த நாட்களை நினைத்துப் பார்க்கும்போது, ஹிராகுட் அணைக்கட்டுத் திட்டத்தில் வேலை பார்த்த நாட்கள், முதலில் ஹீராகுட்டில் ஒன்று அல்லது ஒன்றரை ஆண்டுகளும் பின்னர் மஹாநதிக்கு எதிர்க் கரையில் கட்டப்பட்டு வந்த புர்லா என்ற புதிய காம்பில் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டு காலமும் எனது உலகம் விரிந்து கொண்டே போனது தெரிகிறது .அந்த நாட்களின் அனுபவங்கள் ஒவ்வொன்றும் எனக்கு புதியனவாகவும் நினைத்துப் பார்க்க மிகவும் சந்தோஷம் தருவதாகவும் இருந்தது தெரிகிறது. ஒரு சில அனுபவங்கள் ஹிராகுட்டிலா அல்லது புர்லாவிலா என்பது நினைவில் இல்லை. அந்தக் குழம்பும் நாட்கள் ஹிராகுட்டின் கடைசி மாதங்கள் அல்லது புர்லாவில் குடியேறிய ஆரம்ப மாதங்களைச் சேர்ந்தனவாக இருக்க வேண்டும். என்னவாக இருந்தால் என்ன? புர்லாவிலோ அல்லது ஹிராகுட்டிலோ எதுவாக இருந்தால் என்ன தான். ஆனாலும் முடிந்த வரை நினைவுகள் இருக்கும் வரை தெளிவாகச் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். (1952 ஆரம்ப மாதங்களில் நடந்தவற்றை இப்போது 60 வருடங்களுக்குப் பிறகு நினைவு கூர்வதென்றால் இம்மாதிரி மயக்கங்கள் இருக்கத் தான் செய்யும். நாட்குறிப்புகள் பற்றிய சிந்தனை பின்னால் புர்லா போனபிரகு எழுந்தது தான். 1953-ல் என்று நினைக்கிறேன். நாட்குறிப்புகள் தினமும் எழுதுவது என்று ஆரம்பித்து அதை வீட்டில் இருந்தவர் படித்து அது ஒரு சங்கடத்தில் ஆழ்த்தியதும் (சங்கடத்தில் ஆழ்ந்தது நானா அவரா, இல்லை இருவருமா என்பதை நான் பின்னர் எழுதும் போது படிப்பவர் தீர்மானத்துக்கு விட்டு விட வேண்டிய விஷயம் அது. ஒரு சில மாதங்களுக்குப் பின் அதைக் கைவிட்டேன். அப்போது கைவிட்டது தான். பின்னர் தினக்குறிப்பு எழுதுவது என்ற எண்ணமே எழவில்லை. அது பற்றி பின்னர் அந்த சம்பவத்தை எழுதும்போது சொல்கிறேன்.
எங்கள் அலுவலகம் புர்லாவுக்கு மாறினாலும், எங்களுக்கெல்லாம் வீடு கொடுக்கப்படும் வரையில் நாங்கள் ஹிராகுட்டிலேயே இருந்தோம். தினமும் அலுவலகம் போய் வருவதற்கான போக்குவரத்துக்கான ஏற்பாடுகளை அலுவலகம் செய்திருந்தது. அதுவும் ஒரு விதத்தில் சௌகரியமாகத் தான் இருந்தது. ஹிராகுட்டில் பாலக்காடு ஐயர் மெஸ் இருந்தது. அவருக்குத் தான் என்ன செய்வதென்று தெரியவில்லை. ஹிராகுட்டில் இருந்த வாடிக்கை குறைந்தது. ஆனாலும், புதிய இடத்தில் எவ்வளவுபேர் சாப்பிட வருவார்கள் கட்டுபிடியாகுமா தெரியவில்லை. மேலும் ஊரிலிருந்து தன் மருமகனை அழைத்து வந்து அவனுக்கு வேலை வாங்கிக் கொடுத்துவிட்டால் அவன் பெயரில் ஒரு வீடும் கிடைக்கும். அதில் தன் மெஸ்ஸையும் நடத்தலாம். வீட்டு வாடகை ஐந்து ரூபாய் தான். சௌகரியமாக இருக்கும். ஆனால் அதற்குக் காத்திருக்க வேண்டும்.
ஒரு மாத காலத்தில் எனக்கும் ஒரு வீடு கிடைத்தது. நான் புர்லாவுக்கு வந்து சேர்ந்தேன். என்னோடு சிவராம கிருஷ்ணன் என்று என் வயதுப் பையனும், அவனுக்கும் எனக்குமாகத் தான் அந்த வீடு கொடுக்கப்பட்டது. ஆளுக்கு இரண்டரை ரூபாயாக வாடகையைப் பகிர்ந்து கொள்ளலாம். பின் போகப் போக, என் வீட்டிற்கு நிறைய நண்பர்கள் வந்து சேர்ந்து கொண்டார்கள். முதலில் வந்து சேர்ந்தது கற்பரக்ஷையும் அவளது கணவரும் தான். எஸ்.என்.ராஜா தான் சொல்லி அனுப்பினார். அவருக்கு வேலை ஹிராகுட்டில் தான் என்றாலும், வீடு கிடைக்கவில்லை.. என்னிடம் எந்த தொந்திரவும் இல்லாமல் அவருக்கு வீடு கிடைக்கும் வரையில் இருந்து கொள்ளலாம் என்ற அவர் நினைத்தார். கற்ப ரக்ஷையின் கணவருடன் எனக்கு முன்னரே ஹிராகுட்டில் பரிச்சயம் இருந்தது. ஏதோ ஒரு சமயம் என்னிடமிருந்து அவசரத் தேவை. சம்பளம் வந்ததும் தந்துவிடுகிறேன் என்று சொல்லி ரூபாய் ஐந்து கடன் வாங்கிச் சென்றவர். சம்பளம் கிடைத்ததும் ஏதோ தீயில் நிற்பவரைப் போல ஓடோடி வந்து சாமிநாதன், இப்போதான் சம்பளம் கிடைத்தது, முதலில் உங்களுக்குக் கொடுத்தால் தான் நிம்மதி என்று சொல்லிக் கொடுத்தபோது அவருக்கு மூச்சு இறைத்தது. ஏன் இப்படி, நான் என்ன காபூலிக்காரனா? இப்பவும் அவசரமில்லை, மெதுவாகக் கொடுங்கள், கொடுக்காவிட்டாலும் ஒன்றும் கெட்டு விடவில்லை என்று சொல்லி அவரை ஆசுவாசப் படுத்தினேன். ‘”சே அது மகா தப்பு. சொன்ன வாக்கைக் காப்பாத்தணும்” என்றார். “சரி, அதுக்காக இப்படியா காப்பாத்தணும்” என்றேன். அவர் என் வீட்டில் இருந்த வரை சந்தோஷமாகத் தான் இருந்தது. கற்பரக்ஷையும் என்னை தம்பி மாதிரி அதட்டியும், கேலி செய்தும், சில சமயம் வாத்சல்யத்துடனும் பேசிகொண்டு நாட்கள் கழிந்தன. ஒரு சின்ன குழந்தையும் ஒரு வயசிருக்குமோ என்னவோ அவர்களுக்கு.
ஒரு நாள் நான் சம்பல்பூரில் சினிமா பார்க்கவோ எதற்கோ சுற்றி அலைந்து விட்டு வீட்டுக்கு இரவு 11.30- மணிக்குத் திரும்பினால், வீடு சோக மயமாகக் கிடந்தது. ராஜா வாசலில் உட்கார்ந்திருந்தார். குழந்தை இறந்து விட்டது என்றார். காலையில் அது ஏதும் நோய்வாய்ப்பட்டிருந்ததாகக் கூட இல்லை. பின் எப்படி திடீரென்று? அதிர்ச்சியாக இருந்தது.
முதல் குழந்தை. ஒரு வயதுக் குழந்தை. அவர்களால் அந்த இழப்பைத் தாங்க முடியவில்லை. குழந்தையை அடக்கம் செய்த மறு நாளே, “கோபித்துக் கொள்ளாதீர்கள். இனி இங்கு இந்த வீட்டில் இருக்க முடியாது. குழந்தை ஞாபகமாகவே இருக்கும்” என்று சொல்லி வீட்டைக் காலி செய்து போய்விட்டார்கள். எங்கு போனார்கள் என்று தெரியவில்லை. பிறகு ஒரு நாள் ராஜாதான் “இங்கு இருக்கப் பிடிக்காமல் ஊருக்கே போய்விட்டார்கள். எங்கே இருக்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்று தகவல் ஏதும் கிடையாது என்று சொன்னார். அதன் பிறகு நான் கற்பரக்ஷை யைப் பார்க்கவில்லை. வருடங்கள் 60 உருண்டோடி விட்டன.
அதன் பின் புதிது புதிதாக வேலைக்கு வந்து சேர்பவர்கள் எனக்கு அறை நண்பர்களாகவும் ஆவார்கள். ஆபீஸிலேயே தான் அவர்களுடன் முதல் சந்திப்பு நிகழும். அவர்களுக்கு வீடு கிடைக்கும் வரை என்னுடன் தங்கலாம் என்று அழைத்து வருவேன். சிலரை ஹிராகுட்டிலிருந்து ராஜா அனுப்பி வைப்பார். ஆர். சுப்பிரமணியன் என்று ஒருவன். என்னை விட இரண்டு மூன்று வயது மூத்தவன். பின் ஜே. தேவசகாயம் என்று ஒருவர். திருநெல்வேலிக் காரர். கிறிஸ்தவர். இவரும் என்னை விட ஒன்றிரண்டு வயது மூத்தவர். அவருக்கு ஊர் நாஸரத் என்று சொன்னார். நாஸரத் திருநெல்வேலியிலும் இருப்பது எனக்களுக்கு ஆச்சரியம் அளித்த ஒரு புது விஷயம். அது போல அவருடைய திருநெல்வேலி தமிழும் எங்களுக்கு கேட்க தமாஷாக இருந்தது. அவருடைய பேச்சில் ‘எளவு, வெளங்காத,” போன்ற சொற்கள் நிறைய வந்து விழும். ஒரிஸ்ஸாவில் ஹிராகுட்டில் எங்களுக்கு திருநெல்வேலித் தமிழ் முதன் முறையாக அறிமுகமாவது வேடிக்கையாகத் தான் இருந்தது. கோபால கிருஷ்ணன் என்று ஒரு நண்பர். தான் பாட்டு எல்லாம் எழுதுவதாகச் சொன்னார். எங்கே ஒரு பாட்டு பாடுங்கள் என்று கேட்டோம். அப்போது தான் அவர் எங்கள் அறியாமையைக் கண்டு வியந்தார் என்று சொல்ல வேண்டும். “நான் சொல்வது கவிதை எழுதுவதை.” என்று ஐந்தாறு கவிதைப் புத்தகங்களை எடுத்து எங்கள் முன் போட்டு தான் எழுதிய ஒரு கவிதை ஒரு புத்தகத்தில் அச்சாகியிருப் பதைக் காட்டினார். எங்கள் ரூமில் ஒரு கவிஞரும் எங்களுக்கு நண்பராக வந்து சேர்ந்து இருக்கிறார் என்று எங்களுக்கு ரொம்பவும் பெருமையாக இருந்தது. ஒரு முறை அவருக்கு தபாலில் ஒரு புத்தகம் வந்தது. பிரித்துப் பார்த்தால் அது லா.ச.ராமாமிருதத்தின் முதல் சிறுகதைத் தொகுப்பு. பெயர் என்னவென்று நினைவில் இல்லை. லா.ச.ராமாமிதம் என்று அதில்தான் எழுதியிருந்த முன்னுரைக்கு அவரே கையெழுத்து இட்டிருந்தார் என்பதும் அந்த முதல் பதிப்பின் சிறப்பு. “எனக்குத் தெரியும்யா. நான் படிச்சிருக்கேன். எனக்கு ரொம்பப் பிடித்த ஆளுய்யா இவர்” அமுத சுரபியில் வரும். என்று அறையில் இருந்தவர்களிடம் எல்லாம் சொன்னேன். எனக்குத் தெரியாமல் போயிற்றே என்ற வருத்தம் இருந்தாலும், கோபாலகிருஷ்ணன் என்னும் கவிஞர் அந்தஸ்துக்கு நானும் அவர்கள் கண்களில் உயர்ந்து விட்டதாகத் தோன்றியது.
அப்போது நான் கலைமகள் பத்திரிகைக்கு சந்தா கட்டி தபாலில் வரவழைத்துக் கொண்டிருந்தேன். அதில் ந. பிச்சமூர்த்தி, தி. ஜானகி ராமன், சி.சு.செல்லப்பா லா.ச.ராமாமிருதமெல்லாம் எழுதிக் கொண்டிருந்தனர். இரட்டைக்கதைகள் என்ற வரிசையில் முதன் முதலாக தி.ஜானகி ராமனும், லா.ச.ராமாமிருதமும் கொட்டுமேளம் என்ற தலைப்பில் எழுதியிருந்தார்கள்.
தேவசகாயமும் பத்திரிகைகள் படிப்பதில் ஆர்வம் காட்டுவார். தான். ஆனால் அவர் விருப்பங்களே தனி ரகமாக இருக்கும். அவரது விமரிசங்களும் தனி ரகம் தான். “அட என்ன கதைங்க அது. கத எடுத்த உடனே கல்யாணமானவங்கன்னு சொல்லிப் போடடான்.. பொறவு என்ன எளவுக்கு அதைப் போட்டு படிச்சிக்கிட்டு?. வெளங்கவா செய்யும்?” என்பார் எங்களுக்கு சிரிப்பா இருக்கும். அவரும் சிரிப்பார். அவர் திருநெல்வேலித் தமிழும் குஷியாக இருக்கும். அவர் விமரிசனமும் குஷ்யாக இருக்கும்.
திருநெல்வேலியிலிருந்தே சாந்தி என்று இன்னொரு பத்திரிகை வெளிவரத்தொடங்கியது. சிதம்பர ரகுநாதன் அதன் ஆசிரியர். சின்ன பத்திரிகை. நாலணா என்று நினைவு. நான் ஒவ்வொரு மாதமும் நாலணா ஸ்டாம்பு வைத்து கடிதமும் அனுப்பி சாந்தி பத்திரிகை வரவழைக்க ஆரம்பித்தேன். புதிய பத்திரிகை, என்னவா இருக்குமோ என்ற சந்தேகம் தீர ஒன்றிரண்டு இதழ்கள் பார்த்துப் பின் வருடத்திற்குச் சந்தா அனுப்பலாம் என்ற நினைப்பில். இரண்டாவது மாதம் ரகுநாதனிடமிருந்து கடிதம் வந்தது. “எதற்கு ஒவ்வொரு மாதமும் இப்படி ஸ்டாம்ப் அனுப்புகிறீகள்? ஒரு வருட சந்தா அனுப்புவது சுலபமாக இருக்குமே என்று எழுதியிருந்தார். அதற்கும் இரண்டு இதழ்கள் பார்த்த எனக்கு மிகவும் பிடித்துப் போயிற்று. அந்த இரண்டு இதழ்களுக்குள் பல விஷயங்கள் எனக்கு அது ஒரு புதிய பார்வை கொண்ட பத்திரிகையாகத் தெரிந்து விட்டது.. கல்கியின் எழுத்துக்கள் பற்றி அதன் ஜனரஞ்சகம், பெரிது படுத்தப்பட்ட சரித்திரப் பெருமைகள், ஆங்கில நாவல்களையும் கதைகளையும் காப்பி அடிப்பது போன்ற பல விமரிசனங்களை அதில் படித்ததில் எனக்கு மிகுந்த உற்சாகம். எனக்கு கல்கி காப்பி அடிப்பது பற்றியெல்லாம் தெரியாது. தமிழ் சரித்திரத்தை வைத்துக்கொண்டு வீண் பெருமை பேசுகிற குற்றச்சாட்டு பற்றியும் எனக்கு எதுவும் குதெரியாது. இந்த மாதிரி கருத்துக்களை நான் ரகுநாதனிடம் தான் முதன் முதலாகப் படிக்கிறேன். ஆனால் கல்கி எழுத்துக்கள் எனக்கு சுவாரஸ்யமாக இருந்ததே ஒழிய தி.ஜானகிராமன், செல்லப்பா, லா.ச.ராமாமிருதம் போன்றோர் எழுத்துக்களைப் படித்துவிட்ட பிறகு, கல்கி எழுத்துக்கள் ஒரே மாதிரியாக, வெகு சாதாரண எழுத்துக்களாகத் தோன்றின. ஆனால் அதை யாரிடமும் நான் சொன்னதில்லை. ரகுநாதனைப் படித்த பிறகு இதெல்லாம் வெளீலே சொல்லலாம். இந்த மாதிரியான கருத்துக்கள் எனக்கு மாத்திரம் இல்லை. ரகுநாதனுக்கு இருப்பது எனக்கு வெளியில் சொல்லும் தைரியத்தையும் கொடுத்தது. ‘அந்த சாந்தி முதல் இரண்டு இதழ்களில் ‘தண்ணீர் என்ற தலைப்பில் சுந்தர ராமசாமி என்பவர் எழுதிய கதை வெளியாகியிருந்தது. அடுத்த இதழில் தி.ஜானகிராமனின் கடிதம் எழுதியிருந்தார். “சுந்தர ராமசாமி உங்கள் டிஸ்கவரி போலிருக்கிறது.” என்று எழுதியிருந்தது எனக்கு நல்ல நினைவு இருக்கிறது. அதற்கும் மேல தொடர்ந்து அதைப் பாராட்டி என்ன எழுதியிருந்தார் என்பது நினைவில் இல்லை. பாராட்டாக இருந்தது என்பது மாத்திரம் நிச்சயம். ஒரு புதிய நல்ல எழுத்தை இனம் கண்டு அதைப் பாராட்டவும் செய்திருக்கும் தி.ஜ.வுக்கு எவ்வளவு நல்ல மனசு, என்று பின் வரும் நாட்களில் இது பற்றி நினைத்துக் கொள்வேன். .
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.