அத்தியாயம் 2009 - 9
கொழும்பிலிருந்தும் புதுடெல்லியிலிருந்தும் நியூயோர்க்கிலிருந்தும் திட்டமிடப்பட்ட யுத்தம் வன்னியில் நடந்ததெனில், யுத்த நிலைமைகள் வந்து குவியும் செய்திக் களமாக வவுனியா ஆகியிருந்தது. சர்வதேச மனித உரிமை இயக்கத்தினரும், சர்வதேச உள்ஊர் ஊடகவியலாளரும், தொண்டு நிறுவன அதிகாரிகளும் அங்கே குவிந்துபோயிருந்தனர். பல ஊடகவியலாளர் அரசாங்க தடையை மீறியும் இறுதி யுத்தம் நடந்துகொண்டிருந்த குறுகிய எல்லையின் விளிம்பை அடைந்திருந்தனர்.
பெரும்பாலும் யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டிருந்தது. முடிவும் தெரிந்துவிட்டது. அது பிரகடனப்படுத்தப்படுவதற்கான நேரம்தான் இனி வரவிருந்தது.
ஆனாலும் வேலுப்பிள்ளை பிரபாகரன் எங்கேயென்ற கேள்வி பெரும்பாலானவர் மனங்களில் ஒலித்துக்கொண்டிருந்தது. சிலர்மட்டும் பொட்டம்மானோடு அவர் தொப்பிகல காட்டுக்குள் தப்பிவிட்டாரென நம்பிக்கொண்டிருந்தார்கள்.
ராணுவத்தின் குண்டு வீச்சுக்களையும், சில விடுதலைப் புலிகளின் துப்பாக்கிகளையும் தப்பிய தமிழ் மக்கள் சிலர் வனங்களுக்குள்ளிருந்து வெளியேறி வவுனியாவை வந்தடைந்துகொண்டிருந்தார்கள். அவர்களிடம் தவல்களும் கதைகளும் இருந்தன. அவை அவர்களிடத்தில் மட்டுமே இருக்கப் பணிக்கப்பட்டன.
வனம் தன் மௌனமுடைத்து அழுகையையும், ஓலத்தையும், ஒப்பாரியையும் வெளியிட்டுக்கொண்டிருந்தது. ஒரு காலத்தில் வனத்தின் ரகசியம் அதன் அடர்த்தியாய், பாதைகளற்ற இறுக்கங்களாய், கானாறுகளின் பாய்ச்சல் வேகங்களாய், மிருகங்களின் அபாயங்களாய் இருந்தது. அப்போது மனிதச் சுவடுகள் பதிந்து பதிந்து தடம் விழுந்திருந்ததில் அதன் ரகசியத்தின் கூறுகள் பல அழிந்திருந்தன. ஆனால் அந்தத் தடங்களில் விதைக்கப்பெற்றிருந்த மிதிவெடிகள் இன்னும் மீதமாய் இருந்தன. அவை முளைத்து தளிர்க்காவிட்டாலும், உயிர்கொண்டிருந்தன. பிறர் உயிர் வௌவும் திறன்கொண்டவையாயும் இருந்தன. அது இன்னொரு இரகசியமாய் வனத்துள் இருந்தது. அதிலிருந்து மீண்ட சிலர் கரைசேர்ந்ததும் குலுங்கி அழுதனர். கூடவந்த உறவுகளை அவை காவுகொண்ட கதையைச் சொல்லி கதறிப் புலம்பினர்.
அனைவரும் சோதனைகளும், பதிவுகளும் முடிய முகாம்களில் கொண்டுபோய்ச் சேர்க்கப்பட்டார்கள்.
நகரத்தில் இரவின் பரபரப்பும் ஓய்வுகொள்ள ஒரு நேரம் இருக்கிறது. அப்போது அது வவுனியாவில் விழித்திருந்தது. அது அவசரத்தினாலானதாய்த் தோன்றவில்லை. எதனாலென்று தெரியாத மர்மத்தின் பரபரப்பாக விரிந்திருந்தது.
பகலிலும் இயல்பான அதன் இரைச்சல் மிகுந்திருந்தது. அது தன் மொழிச் சிதறல்களால், வாகன இரைச்சல்களால் அதைக் கிளர்த்தியதாய்க் கொள்ள முடியவில்லை. அது வேறொன்றாகத் தென்பட்டது.
நகரமக்களின் மனங்கள் துக்கமும், மகிழ்ச்சியுமாய்க் கலந்து கிடந்தன.
யுத்தத்தில் ஜெயம் ஒரு குறியாக இருந்ததென்பது மெய்யே. ஆனால் அதற்காக இழக்கவேண்டியுமிருந்தது. இழப்பு வடக்குப்போல் கிழக்கிலும் தெற்கிலும் மேற்கிலும் மத்தியிலும் எங்கெங்கும் இருந்தது. அதனால் துக்கத்தைப்போல் மகிழ்ச்சியும், மகிழ்ச்சியைப்போல் துக்கமும் எங்கும் கலந்திருந்தன.
மத்தியின் இழப்பில் ஒரு வித்தியாசமிருந்தது. எதையும் இழந்திருக்கத் தேவையற்ற இடத்தில் அது இருந்திருந்தது. இழக்கப்பட்டவர்கள் வாழ்ந்த சுவடுகளை அந்த மண் இன்னும் கொண்டிருந்தது. உறவினராய், உற்றாராய், நண்பராய் அவர்களை நினைந்தழ அங்கே மனிதர்கள் இருந்திருந்தார்கள். போராளிகள் தரப்பாயும், படையினர் தரப்பாயும் இல்லாமல் நிர்ப்பந்தத்தில் போராடியும் போருக்குள் ஓடியும் அழிவது எவருக்குமே பெரும் சோகம். அந்தச் சோகமெழுந்த மண்ணாய் அப்போது மலையகம் இருந்திருந்தது.
மகிழ்ச்சியாய் இழக்க கற்பிக்கப்பட்ட புனிதம் எந்த இலட்சியத்திலும் இருக்கும். புனிதமென எதையாவது சொல்கிறபோது அதில் தீவிரம் சேர்ந்துவிடுகிறது. தீவிரம் வளர்ந்து பயங்கரமாகின்றது. தீவிரத்தை வளராமலிருக்க யாரும் கற்றுக்கொள்ளாதவராய் இருந்தார்கள். ஒரு பூமியில் அது நிறைந்த அழிவுகளையும் சோகங்களையுமே விதைக்கிறது. ஆசையைத் துறக்கக் கட்டளையிடப்பட்டவர்கள், ஆசையைத் துறக்காததினால் எல்லாம் நடந்து முடிந்ததென சிலராவது எண்ணியிருந்தனர்.
அன்றைய நாள் போரின் எதிர்நிலை எடுத்திருந்த மனிதர்களுக்கானதல்ல. ஆனாலும் ஐந்து வெள்ளிக்கிழமைகள் கொண்ட 2009இன் வைகாசி மாதத்து மூன்றாம் வெள்ளியில் சந்திப்பதென போன ஆண்டின் இறுதியில் சந்தித்தபோது திட்டமொன்றை அவர்கள் இட்டிருந்தார்கள். போரின் கெடுபிடி இருந்திருந்தபோதும் யாருக்கும் அந்தச் சந்திப்பின் திட்டத்தை மாற்றுவது உவப்பாக இருக்கவில்லை. சொல்லியிருந்தபடி வைகாசியின் மூன்றாம் வெள்ளி பதினைந்தாம் தேதி மதியத்திலே உக்கு பண்டாரவும் அவன் மனைவி லெட்சுமையும் பிள்ளையுடன் கொழும்பிலிருந்து குசுமவதியின் வீட்டுக்கு வந்துவிட்டிருந்தார்கள்.
சுதுவும், சரத் முனசிங்கவும் வருவதாகவே சொல்லியிருந்தனர். சுது அனுராதபுரத்தில் தங்கியிருந்ததில் சுலபமாக அங்கே வந்திருக்கமுடியும். ஆனாலும் இன்னும் வராதிருந்தான். வருவானென்று உக்கு, குசுமவதி இருவருக்கும் நம்பிக்கையிருந்தது. சரத்திடமிருந்து நீண்ட நாட்களாய் தகவல் இல்லாததில் வந்தால் நல்லதென நினைத்தார்கள்.
அவர்கள் நம்பிக்கை வீண்போகவில்லை. இரவு எட்டு மணியளவில் வாசலில் ஒரு பிக்குவின் தோற்றத்தில் வந்து தோன்றினார் சுது. சங்கத்தைவிட்டு நீங்கி, சொந்த ஊரையும் நீங்கி, வனமும் கிராமங்களுமென அலைந்து திரியும் பாதங்களாயிருந்தன அவரது. தன்னை ஒழித்துத் திரிந்தவர் அன்று தன்னை வெளியிலே கொண்டுவந்தபோது துவராடைக்குள் மறைந்தவராயிருந்தார். ஒரு இஞ்சி நீள முடி தலையிலிருந்தது. வெண்தலையாக ஆகிக்கொண்டிருந்ததில் பெரிய வெள்ளை கறுப்பாக அது தலையிலே கவிந்திருக்கவில்லை.
சுது வாசலில் நின்றபடி உள்ளேயிருந்த அனைவரையும் பார்த்துச் சிரித்தார்.
ஒரு நிமிஷமாகிற்று குசுமவதிக்கு அவரை அடையாளம் காண. “உள்ளே வாருங்கள், சுவாமி” என்று பின் சிரித்தாள்.
“நான் ஹாமத்துருவாக வரவில்லை.”
“இருக்கலாம். ஆனால் நீங்கள் ஒரு தேரரையும்தான் கூட்டிவந்திருக்கிறீர்கள். சுதுவாக நினைத்தாலும், தேரராய் நாம் மதிக்கவேண்டியிருக்கிறது.”
வனத்தின் தோற்றம் லெட்சுமையில் மாறியிருந்தது. நகரத்தின் கலாச்சாரம் வளர்ந்துகொண்டிருந்தாள். ஆனாலும் ஒதுக்கமாக நின்று, யயானிக்கு சமையலில் உதவுபவளாக பெரும்பொழுதும் இருந்துகொண்டிருந்தாள். தோற்றத்திலேயே அவளை உக்குவின் மனைவியென்பதை சுது புரிந்துகொண்டார். அங்கு நின்றிருந்த பெண்பிள்ளை அவர்களது மகளாயிருக்கும். வேறு புதியவர்கள் அங்கேயில்லை.
“இது ஒரு நல்ல அலங்காரம்தான், ஒரு மனிதாபிமானியை அழகு பண்ண” என்று கூறிச் சிரித்து, “உட்காருங்கள், சுவாமி” என்று உக்குவும் வரவேற்றான்.
சுது சிரித்தபடி அமர்ந்தார்.
உக்கு குசுமவதி பக்கம் “ம்...” என்றபடி திரும்பினான். நாம் இனி நமது பேச்சை தொடரலாமென்பது அதன் சமிக்ஞையாக இருந்தது. “ஜனதா விமுக்தியென்று பெயரில் கொண்டிருந்தபோதும், உண்மையில் அது சிங்கள மக்களின் விமோசனத்துக்காகக்கூட எந்தத் திட்டத்தையும் வைத்திருக்கவில்லை. இதை உன்னுடைய கணவர் பந்துலவாவது உன்னிடம் சொல்லியிருப்பாரே? அறிவார்த்தமாக இயங்கியவர் அவர். அவருக்கு இயக்கத்திலிருந்த எவரோடும்விட ரோகணவோடுதான் நெருக்கம் அதிகமாக இருந்தது.”
“மெய்தான். அவர்கள் ஒரே பள்ளியில் படித்தவர்கள். ரோகண லுமும்பா பல்கலைக் கழகம் போக, பந்துல பேராதனை சென்றார்” என்றாள் குசுமவதி.
“லங்காவுக்கு மிகவும் தேவையாயிருந்த காலத்தில் பரவிவந்த ஒரு அரசியல் நோக்கு, இன்று பெயரோடு மட்டும் அடங்கி மற்றெல்லா வகையிலும் அழிந்துபோய்த்தானே இருக்கிறது? அது துவேஷத்தை வெளியே சொல்லவில்லையென்றாலும் பெரும்பான்மையென்கிற தளத்திலிருந்தே பிரச்சினைகளைப் பார்த்தது. அதனிடம் சிறுபான்மையினரின் பிரச்சினைக்கு சரியான தீர்வு இல்லாதேயிருந்தது. அது துர்பாக்கியமானது. வித்தியாசங்களுடனுமான ஒற்றுமையை அவர்கள் அறியாதே இருந்தார்கள்.”
“மக்களும், அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்களும்கூட, அதனால் கெடுதலைத்தவிர ஆக்கமெதனையும் அடையவில்லைதான்.”
“தங்கள் கொள்கையை அவர்கள் கோபத்தில் நடைமுறைப்படுத்த நின்றார்கள். எல்லார் மனத்திலும் ஒரு கோபமே இருந்துகொண்டிருந்தது. வர்க்க சார்பான கோபம்தான் அது. அந்தக் கோபத்தை அவர்கள் தங்கள் கொள்கையைத் தெரிவிப்பதிலும் காட்டாதிருந்தால், அவர்களது கதையையும் நாட்டின் கதையையும் மாற்றும் விதியாக அது அமைந்திருக்க முடியும்.”
“தமிழ்ச் சண்டையிலும் இருந்தது அந்தக் கோபம்தானே, உக்கு?” என்றார் சுது.
“நிச்சயமாக” என்றான் உக்கு. “சிங்கள சண்டைக் கதைபோலவேதான் தமிழ்ச் சண்டைக் கதையும். கோபமே அவர்களிடத்திலும் இருந்திருந்தது. ராஜீவ் சாந்தியைக் கொன்றது, சந்திரிகாவையும் சரத் பொன்சேகவையும் கொல்ல முயன்றது எல்லாவற்றிற்குமே கோபம்தான் காரணம். ஜனதா விமுக்தி பெரமுனவினர் தனிநபர் அழிப்பில் இறங்கியதற்கும் காரணம் கோபம்தான். அவர்கள் அதில்கூட வெற்றிபெறவில்லை என்பது வேறு. ஆனால் அவர்களிடம் திட்டமிருந்தது. கோபத்தின் திட்டம். பிரதமர் சிறிமாவோகூட தன்னை எங்கேயென்று தெரியாதபடி அந்தக் கொலை அச்சுறுத்தலில் ஒழித்துத் வாழவேண்டியிருந்தது எழுபத்தொன்றின் அந்த ஆரம்ப நாட்களில். அதனால் சிங்கள சண்டைக் கதை முடிந்ததுபோலவே, தமிழர் கதையும் முடியும். அதற்கு வேறு முடிவு இல்லை.”
“இரண்டு சண்டைகளுமே அறிவார்த்தமாய் வழிப்படுத்தப்படவில்லை என்று கருதுகிறாய்...?” என்ற சுதுவிற்கு உக்கு மறுமொழி சொன்னான்: “ அவற்றின் முடிவே அதைச் சொல்லவில்லையா? தமிழ் சண்டைக் கதை இப்பொழுது முள்ளிவாய்க்காலில் முடிந்துகொண்டிருக்கிறது. எவ்வளவு சோகமான முடிவு இது! கால் நூற்றாண்டுப் போராட்டத்தில் எதுவுமே மிஞ்சவில்லையென்பது வரலாற்றுச் சோகமல்லவா? சகல தேசிய இனப் போராட்டங்களின் வரலாற்றிலும் இது ஒரு அழுந்தப் படிந்த கறை. இவ்வாறாக ஒரு யுத்தம் எங்குமே தோற்கக் கொடுக்கப்பட்டதில்லை.”
“அது தோற்காமல் கொடுக்கப்பட்டதென்கிறாய்…?”
“ஆம். அவர்கள் ஒரு வெற்றியை… ஓரளவு வெற்றியை… அடைந்தே இருந்தார்கள். அரசியலில் சரியான தந்திரமின்மையால் அதை தோல்விக்குக் கொடுத்தார்கள்.”
அது அவர்கள் பேசிக்கொண்டிருந்த விஷயத்தின் முடிவுரை.
குசுமவதிக்கோ, சுதுவுக்கோ மாற்று அபிப்பிராயங்கள் இல்லாததால் மௌனமே தொடர்ந்தது. அந்தக் கருத்தில் மிகுந்த பாதிப்படைந்தது குசுமவதியாகவே தென்பட்டாள். அந்த இருவரையும்விட சிங்கள சண்டையோடு மிகுந்த நெருக்கத்திலிருந்தவள் அவள். அதனால்தான் அவளால் அவ்வளவு பாதிக்கப்பட நேர்ந்ததோ?
யயானியும், சிரானியும், லெட்சுமையும் கலகலத்ததுகூட அந்த மௌனத்துள் அழுந்திப்போனது. சப்தங்களைப் பிடித்து அமுக்கிக் கொல்லும் மௌனமாயிருந்தது அது.
வெளியே மஞ்சணத்தி காற்றில் அசைந்துகொண்டிருந்தது.
அதில் புகல்கொள்ளும் குருவிகளின் கிளுகிளுப்பு கேட்டது.
அப்பால் ஒளிவெள்ளத்துள் மூழ்கி பன்சால.
அது ஆரவாரப்படும் கணத்தை யுத்தம் பெரும்பாலும் அடைந்துகொண்டிருந்தது. அதுவரை அந்த ஆரவாரம் அங்கே அடங்கியிருக்கும்.
அது இரவாகியதால் மட்டுமில்லை அது.
அதுவும் இழந்திருக்கிறது. அதுவேயல்ல, தனக்காக அது யுத்தத்தில் இறக்கிவிடப்பட்ட சிங்கள மக்கள் இழந்திருக்கிறார்கள். இழந்துகொண்டும் இருக்கிறார்கள். இறந்த படைவீரரின் சடலங்கள் தென்னிலங்கை நோக்கி அப்போதும் அனுப்பப்பட்டுக்கொண்டு இருந்தன. மிகுந்த மரியாதையோடும், உறுதியளிக்கப்பட்ட நஷ்டஈட்டின் மகிழ்ச்சியோடும். அம்மெ அப்பச்சிக்கள்போலவே நங்கிகளும் அக்கெகளும்கூட பிரிவின் துயராற்றாது துடித்துக் கதறுவார்கள். அவர்களுக்காவும்தான் அந்த கிராமத்து சிங்கள இளைஞர்கள் படையிலே சேர்ந்திருந்தார்கள். துக்கத்தின் வடிவமாகவே இழப்பின் வடிவம் எங்கேயும் இருக்கிறது. ஆனாலும் அந்த மரியாதையும், மகிழ்ச்சியும் அதனுள்ளே மறைவாய் இருந்திருக்கும்.
உண்மையில் அப்போது நடப்பது யுத்தமேயல்ல. தேடி எதிரிகளை அழிக்கும் படையினருக்கு, ஜெயத்தின் இறுதி நோக்கிய நகர்வுதான் அது.
“அது சரி, அமெரிக்க போர்க் கப்பலொன்று கிழக்குக் கரையில் காணப்பட்டதான கதை என்ன?” சுது உக்குவைக் கேட்டார்.
“கதைதான். ஶ்ரீலங்காவின் கடலெல்லைக்கு வெளியே பயணித்துக்கொண்டிருந்த ஒரு யுத்தக் கப்பல் காணப்பட்டது உண்மையெனவே திருகோணமலை கடற்படைத் தளத்திலுள்ள ஒரு நண்பன் சொன்னான். அது தென்சீனக் கடலிலிருந்து மியன்மாருக்கு அல்லது இந்தியாவின் கல்கத்தா துறைமுகத்துக்கு போயிருக்கலாமென்றான்.”
“ம்!”
அது அவ்வளவுதான். ஒரு கதை மட்டும்தான். ஆனால் அந்தக் கதைக்கு ஒரு வால்முளைத்திருந்தது. தமிழ் சிங்கள பொதுஜனங்கள் அந்த வாலை வைத்திருந்தார்கள். ‘பிரபாகரன் புலிகளின் முக்கியமான கடற்படை விமானப்படைத் தளபதிகளுடன் அந்தக் கப்பலில் ஏறி தப்பிச்சென்று விட்டார்!’
அவ்வளவுதான். பெரிய நீளமில்லாத கதை.
அரசியலை நன்குணர்ந்தவர்களுக்கு அந்த வால் தெரியாது. வெகுஜனம் கண்டது.
சாப்பிட்டுக்கொண்டிருக்கையில் குசுமவதி கேட்டாள்: “என் மனத்திலே எப்போதுமாய் ஒரு வினா இருந்துகொண்டிருக்கிறது. யாராவது இதற்கு உத்தரம் தாருங்களேன். சிங்கள சண்டைக் கதையையும், தமிழ் சண்டைக் கதையையும் அழித்தொழித்த சக்தி எது?”
“அதிலென்ன சந்தேகம்? சிங்கள அரசியலேதான். விரிவாய்ச் சொல்வதென்றால் சிங்கள பேரினவாத அரசியல்.”
உக்குவின் பதிலைக் கேட்டு சுது சிரித்தார். அது ‘நான் உன்னை என்னவோவென்று நினைத்திருந்தேன். இப்படி அரைகுறையாக இருக்கிறாயே’ என்று உக்குவைக் கேலிசெய்யும் சிரிப்பாய்த் தோன்றியது.
உக்குவால் அந்த கேலியைப் புரிந்துகொள்ள முடிந்தது. “சிங்கள பேரினவாத அரசியல்… அனகாரிக தர்மபாலவும், எஸ்.டி.சேனநாயக்கவும், கே.எம்.பி.ராஜரத்தினவும் வளர்த்த அந்த பேரினவாத அரசியல் இல்லையா, சுவாமி?”
சுவாமி என்றதில் ஒரு அழுத்தம் இருந்தது. அது சுவாமியின் சிரிப்பில் தொனித்ததற்கான பதில் கேலி. அத்துடன் அதில் உக்குவின் கொஞ்சக் கோபமும் இருந்தது.
சுது சொன்னார்: “நல்லது. என்னைக் கேட்டால், அரசியலென்பது ஒரு மகாசக்தியின் ஏவல் பேய்போலத்தான் செயற்பட்டுக்கொண்டு இருக்கிறதென்பேன்.”
“அப்போ… அந்த மகாசக்திதான் எது?”
சுதுவின் முகத்தில் தெளிவின் பிரகாசமிருந்தது. கற்றலினால், வாசிப்பால், அனுபவத்தால் அடைந்தது அது. “எல்லாவற்றிற்கும்… கடந்த கால நிகழ்கால லங்காவின் எல்லாப் பிரச்சினைகளுக்கும்… காரணமான ஒரு மூலசக்தி இருக்கிறது, உக்கு. அவ்வப்போது அது சிங்கள பேரினவாத, பௌத்த அரசியலென்று இடதுசாரிகளால் குறிப்பிடப்பட்டதுதான். ஆனாலும் மேலோட்டமான பதிலே அது.”
“அப்படியானால் உங்களுடைய ஆழமாக பதிலென்ன, சுவாமி?”
அவர்களுக்குள் காரசாரமான உரையாடலாக அது மாறிவிடுமோவென்று குசுமவதிக்கு பயமாக இருந்தது. கேண்மை அதில் பாதிக்கப்படக்கூடும். அல்லது சத்தமான உரையாடலாகி கருத்து வெளியே அந்த வீட்டைத் தாண்டி செல்லக்கூடும். இரண்டு பிரதிகூலங்கள் அதில் இருந்திருந்தன. அதற்கு தேவையிருக்கவில்லை. உக்குவை நிதானமடையச் செய்யும்படியாகவே சுதுவின் பதில் இருந்தது.
“உக்கு, நான் இது குறித்து எந்த தீவிர இடதுசாரி வலதுசாரி மதவாதியுடனும்கூட ஒரு விவாதத்திற்கு தயாராகவிருக்கிறேன். மார்க்சீயத்தின் வழி பார்ப்பவருக்கு அரசியலிலுள்ள வர்க்க நிலைப்பாடும், அதன் காரணமான கருத்து செயல்களின் வெளிப்பாடுமே பிரச்சினைகள் உருவாவதற்கான மூலங்களாய்த் தெரியக்கூடும். ஆனால் லங்காவின் பிரத்தியேக நிலைமை தன்னை வித்தியாசமாக வைத்துப் பார்க்க கோருகிறது.”
உக்கு ஏதோ சொல்ல உன்னியதுபோல் இருந்தது. குசுமவதி அதைத் தடுத்தாள்: “உக்கு, நீ எதுவும் சொல்லவேண்டாம். சுவாமி இதற்கு என்ன கூறப்போகிறாரென்பதை நான் அறியவேண்டும். ஒரு தெளிவான பதிலுக்காக நான் நீண்டகாலமாகக் காத்திருக்கிறேன்.”
“தெளிவானதுபோலவே, சரியானதாகவும் அது இருக்கவேண்டும். எதற்கும் சுவாமி அதைச் சொல்லவேண்டுமே!” என்றான் உக்கு.
சுதுவின் குரலில் சலனமில்லை. தடுமாற்றமில்லை. தீர சிந்தித்து அறிந்த பதில் தயாராக அவரிடமிருந்தது. “சொல்லத்தானே போகிறேன். என்னுடைய பதிலுக்கு இந்தமாதிரி ஒரு வெளி அவசியம். ஏற்கனவே ஒரு பதிலோடு என்னுடைய பதிலை நீங்கள் விளங்கிக்கொள்ள முடியாது. அப்படி ஒரு பதில் உங்களிடம் இருக்கிறபட்சத்தில், என் பதிலை நீங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள். லங்காவின் எல்லா அழிவுகளுக்கும் அதன் அரசியலே காரணமென்று, ஒருவிதமான இடதுசாரிப் பார்வையுள்ள பதிலால் நீங்கள் நம்பவைக்கப் பட்டிருக்கிறீர்கள். பொதுப்புத்தி ஏற்றுக்கொள்ளும் பதிலாகவும் அது இருக்கிறது. ஆனால் லங்காவின் வரலாற்றுப் பின்னணியில் இதுவரை பயிற்சியிலிருந்த எந்தப் பார்வையும் ஒத்துப்போவதில்லை. அரசியல் ஒரு எடுபிடியாக… ஏவல்நாயாக… ஏவல் பேயாகத்தான் அந்த மகாசக்திக்காக செயற்பட்டுக்கொண்டு இருப்பதே நிஜத்தில் நடப்பது.”
“சுவாமி, யாரின் அல்லது எதனின் எடுபிடியாக?” குசுமவதி கேட்டாள்.
“அரசியலை தனக்கு ஏவல்செய்யவைத்த அந்த மூலசக்தி… பௌத்தம்... பௌத்தம் தவிர வேறில்லை.”
“மதமா?” ஆச்சரியப்பட்டனர் உக்கு, குசுமவதி இருவரும்.
“மதமேதான். இங்கே மதம்கூட இல்லை. பௌத்த மடங்கள். அபயகிரி, ஜேத்தவன ஆகிய இரண்டு மத நிறுவனங்களின் ஒற்றை அமைப்பு. அதுவே ஶ்ரீலங்காவின் அதிகார மய்யம். வரலாற்றினை மாற்றி இயக்கிக்கொண்டிருக்கின்ற மகாசக்தி அதுவேதான்.”
“அப்போ… மதமென்று ஒற்றை வார்த்தையில் சொல்லிவிடலாமே!” உக்குவின் அபிப்பிராயத்தை சுது மறுத்தார். “மதம்தான். ஆனாலும் மதத்திற்கும் மடத்திற்கும் ஒரு சிறிய பிரிநிலை இருக்கின்றது, உக்கு. மதமென்ற ஒற்றை வார்த்தையில் வருகிறபோது அதற்கு தம்மங்கள் காப்பதற்காய் உண்டென்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். ஆனால் அந்த மதத்தையே கட்டுக்குள் வைத்திருக்கிற மடத்துக்கு அந்தப் பொறுப்பில்லை. அது அதிகாரத்தை இன்னுமின்னுமாய்ப் பெருக்கி சகலதையும், மனிதரையும்கூட, தன் கீழ் கோலெடுத்த குரங்கைப்போல் ஆடவைத்துக்கொண்டு இருக்கிறது.”
சிறிதுநேரம் யாரும் பேசவில்லை.
அது மதமாக இருந்தாலும், மடமாக இருந்தாலும் பதில் அவர்களை அதிரவைத்தது.
“சுவாமி…”
குசுமவதியைக் கவனியாது தொடர்ந்தார் சுது. “கெமுனுவின் கதை துவேஷம் மிக்கது. தென்னிந்தியத் தமிழ் அரசனுக்கு எதிரானதாய் அமைந்து இனத் துவேஷத்தை இன்றுவரை கக்கிக்கொண்டிருக்கிற ஒரு கதை. அது கதையாகவே இருந்தபோதும் உலகத்திலுள்ள கதைகளிலெல்லாம் மிக வன்மையானதாக, ஒரு பூர்வ குடி இனத்தை இரண்டாயிரம் ஆண்டுக் காலமாக துவேஷிக்க மட்டுமில்லை, அழித்தொழிக்கவும் செய்துகொண்டிருக்கிற கதை. அதிலிருக்கிற விசேஷம் என்னவெனில், அந்த துவேஷக் கதையை எழுதியது ஒரு பௌத்த பிக்கு என்பதுதான். அவரே மகாநாம என்ற தேரர். இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? கெமுனு காலத்தின் பின்னால் வரலாற்றுணர்வோடிருந்த ஒரு கல்வியாளனோ, கெமுனுவின் அரசவையிலிருந்த ஒரு அறிஞனோ மகாவம்சத்தை எழுதவில்லை. மகாநாம என்ற தேரர் எழுதினார். சம்பவம் நடந்து ஏறக்குறைய நான்கு ஐந்து நூற்றாண்டுகள் கழித்து ஒரு தேரர் அந்தக் கதையைச் செய்தார். அது அவ்வாறே நடந்திராமலும் இருக்கலாமல்லவா? ஆனால் ஒரு தேரர் அவ்வாறு நடந்ததாக எழுதி வைத்தார். ஏன்?”
சுது நிறுத்தினார். அவரது கண்கள் பளீரிட்டுக்கொண்டு இருந்தன. உண்மையின் ஒளியா அவற்றில் பிரகாசிப்பது? உக்கு, குசுமவதி யாருக்கும் பேச இருக்கவில்லை. சுது தொடர்ந்தார்: “ஏனென்றால்…”
அவர் தன் முன்னாலிருந்த இருவரையும் தீர்க்கமாய்ப் பார்த்தார். அவர்களும் அந்தப் பதிலைத் தொடரலாம் என்பதுபோல் உற்றுப் பார்த்தபடி இருந்தார். பதில் அவர்களிடமிருந்து பிறக்கவில்லை.
“ஏனென்றால்… அந்த மகாநாமவின் ஒரே நோக்கம் பௌத்த ஸ்தாபிதமே. அதை ஸ்திரமாய் நிலைநாட்டுவதே அவரின் ஒரே குறி. அவர் பௌத்தத்தின் ஊழியராகவிருந்தே வரலாற்றைச் செய்தார். சிங்கள அரசு வரும், போகும். அவ்வாறுதான் அது வந்தும், போயும் கொண்டிருந்தது. அதுபற்றி அவர் பெரிதான அக்கறை பட்டதேயில்லை. சிங்கள நாட்டுக்கெனில், அதற்கு மொழிகூட நன்கு அமைவு கொண்டிருக்கவில்லை அப்போது. அதனால்தான் தன் கதையை அவர் பாளி மொழியில் எழுதினார். அந்த பௌத்தம்தான் சிங்கள அரசை வளர்த்தெடுத்தது, அதைத் தன் பாதுகாப்பு அரணாகக் கொண்டது. இன்றுவரை அதுவே அதன் பாதுகாப்பு அரணாகவும் இருந்துவருகிறது. ஒருவேளை… ஒருவேளைதான்… ஆதிகாலத்தில்போல் தமிழ்ப் பௌத்தர்கள் இருந்திருந்தாலும், அது சிங்கள அரசியலின் மூலம் அவர்களை ஒழிக்கவே செய்திருக்கும். ஏனெனில் அவர்கள் அண்டைத் தமிழ்நாட்டுடன் மொழித் தொடர்புடையவர்கள். அண்டைநாட்டார் இந்துக்களாகவும் இருக்கிறார்கள். இந்துமதம் அந்த மண்ணில் பௌத்தத்தை அழித்த மதம். அதனால் இங்குள்ள பௌத்த தமிழர்கள் நம்புதற்குரியரல்லர். அதுதான் அதன் தீர்மானம். இலங்கையில் பிரதமர்களாக இருந்த அனைவருமே புத்தசமயத்தவர்களாயிருந்தார்கள் என்பதை நீங்கள் எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்? கிறித்தவ குடும்பத்திலிருந்து வந்தவர்களும் பௌத்தத்திற்கு மாறியே பிரதமராக பதவிப் பிரமாணம் செய்தார்கள். இப்போது சொல்லுங்கள், லங்காவில் பௌத்தம் இருக்குமிடம் அரசியலுக்கு கீழேயா, மேலேயா?”
சிங்கள மனச்சாட்சியின் குரலாய் சுது தொடர்ந்தார். “ஜேவிபியை எடுத்துக் கொள்ளுங்கள். மூன்று கட்டங்களாய் அதன் அழிப்பு நிகழ்ந்தது. 1971இல், 1987-89இல், 2000இல் என அவை இருந்தன. அந்த இயக்கத்திலிருந்த அத்தனைபேருமே சிங்கள இளைஞர்களும் யுவதிகளும்தான். சிங்கள அரசியலே பிரச்சினைகளின் மூலமெனில் அவ்வளவு தீவிரமாய்… அவ்வளவு கொடூரமாய்… அவ்வளவு தொகையை அது அப்போது அழித்திருக்கவே மாட்டாது. அறுபதினாயிரம் பேர் அவ்வாறு அழிந்ததாக கணக்கு இருக்கிறது. 1989இல் ரோகண விஜேவீர கொல்லப்பட்டது தெரியுமல்லவா? எவ்வாறு கொல்லப்பட்டாரென நினைக்கிறீர்கள்? மிகக் கொடூரமாக அவர் கொலைசெய்யப்பட்டார். ஒரு ழீன் டி ஆர்க்கோ, எராஸ்மஸ்ஸோ மத்திய காலத்தில் எவ்வாறு கொல்லப்பட்டார்களோ, அதற்கு நிகராகவே ரோகணவின் கொலையும் இருந்தது. ஏனெனில் அவர் பௌத்தத்தின் காப்பரணை அழிக்க முனைந்தவர்.”
சுது நிறுத்திவிட்டு அனைவர்மீதான ஒரு சுற்றுப் பார்வையின் பின் தொடர்ந்தார்: “பிரதமர் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டார நாயக்கவின் கொலைபற்றி தெரிந்திருப்பீர்கள். அவரைக் கொல்ல திட்டமிட்டது, கொலை செய்தது எல்லாமே அதுவரை சிங்கள சமூகத்தில் உயர்ந்த ஸ்தானம் பெற்றிருந்த தேரர்கள்தான். களனி ராஜமஹா விகாரையின் மகாதேரர் மாப்பிட்டிகம புத்தரகித்தவும், தல்துவெ சோமராம தேரரும். இந்த கொலைகள் எல்லாவற்றிற்கும் வேறுவேறு காரணங்களே சொல்லப்பட்டன. அரசியலே அவற்றைச் செய்ததாகவும் சொல்லப்பட்டது. அவ்வாறு சொல்லப்படுவது நல்லதென மடம் பார்த்துக்கொண்டு இருந்தது. அது வெளிப்படையாக எதிலும் தலையிடுவதுமில்லை, செய்வதுமில்லை. அது அதனின் உபாயம்.”
“அதுதான் நீங்கள் மடத்தைவிட்டு ஓடியதற்கும் காரணமா, சுவாமி?” தன்னிலிருந்து தெளிந்த குசுமவதி கேட்டாள்.
“அதுபோன்ற காரணங்களின் அறிகையே நான் மடத்தைவிட்டு விலகுவதற்கான மனநிலையை உருவாக்கியிருந்தது. நீங்கியதற்கு உடனடிக் காரணமொன்று இருந்தது. புத்த மடம் படையின் ஆட்சேர்ப்பை பிக்குகளுக்கு கட்டாயமாக்கியபோது, யுத்தமே கூடாதென்றிருந்த எனக்கு வேறு செய்ய இருக்கவில்லை. அதனால்… உன்னுடைய பாஷையில்… நான் ஓடிவிட்டேன்.”
“நான் விகற்பமில்லாமல் அதைச் சொன்னேன்.”
சுது சிரித்தார்.
லெட்சுமை கண்கலங்கிப் போயிருந்தாள். யயானி அவளுக்கும் பின்னால் மேசையில் சாய்ந்து இன்னுமே அவரைப் பார்த்தபடி நின்றுகொண்டிருந்தாள். ‘ஆயிரத்தில் ஒரு பிக்குவாவது அவ்வண்ணம் இருக்கவேண்டும். பகவானின் கருணை அப்படியாவது… அவ்வளவிலாவது... வெளிப்பட வேண்டும்.’ அவ்வாறான எண்ணமே அவளில் ஓடிக்கொண்டிருந்தது. திரும்பி அவளைக் கண்ட குசுமவதிக்கு கண்கலங்கியது.
மறந்துபோனது எதுவோ ஞாபகம் வந்ததுபோல் சுது சொன்னார்: “இன்னுமொன்றுண்டு. ராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசமான யாழ்ப்பாணத்தில் தூண்கள் நிறுத்தி அவற்றின் உச்சியிலே சிங்கக் கொடிகள் பறக்கவிடப்படுவதாக நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? அப்படி நடந்திருந்தால் நாட்டின் போக்கினை நிர்ணயிக்கும் அதிகார மய்யமாக சிங்கள அரசியலிருப்பதை ஒப்புக்கொள்ள கொஞ்சமாவது சாத்தியமிருக்கும். ஆனால் புத்த சிலைகளல்லவா அங்கே அமைக்கப்படுகின்றன! ஏனெனில் நாட்டின் அதிகார மய்யத்தின் அடையாளம் அதுவாகவே இருக்கிறது. இதுகூட அந்தத் தமிழ்க் கோபத்திற்குத் தெரிந்திருக்கவில்லை. அவர்கள் வில்லோடும் அம்போடும் தங்கள் யுத்தத்தைத் தொடங்கினார்கள். இல்லாவிட்டால் அவர்கள் பௌத்தத்தோடு ஒரு கருத்து யுத்தத்தையே நடத்தியிருக்கவேண்டும். யுத்தமும் சிங்கள – தமிழ் யுத்தமாகவன்றி, பௌத்த – இந்து யுத்தமாக நடந்திருக்கும். அது பௌத்தத்திற்கு கேடும், தமிழ் இளைஞர்களிற்கு வலுவும் சேர்த்திருக்கக்கூடிய அடையாளமாக இருந்திருக்கும். தமிழ் இளைஞர்கள் அதையும் கோபத்தோடு செய்திருந்தால் அப்போதும் தவறாமல் அவர்கள் தோல்வியையே சந்தித்திருப்பார்கள். இன்றைக்கு அவர்களில் தோல்வியின் வடுவை ஆழமாக ஏற்படுத்தும் வகையில் யுத்தம் தொடர்ந்துகொண்டிருக்கிறது. அது முற்றுப்புள்ளியை இடுகின்ற இடம் மிகப் பயங்கரமாக இருக்கும். இருந்து பாருங்கள். அதற்கு நீண்ட நாட்களில்லை.”
சுதுவின் முகம் துயரத்தில் காய்ந்து வந்தது.
இனி அவர் சொல்ல எதுவுமில்லைப்போன்ற மௌனம் சூழ்ந்தது.
மறுநாள் காலையில், சரத் வரும்பொழுது தாங்கள் விசாரித்ததாய் சொல்லவேண்டமென உக்குவும், சுதுவும் குசுமவதியிடம் கேட்டுக்கொண்டனர்.
சுது முதலில் புறப்பட்டுச் சென்றார். கொழும்பு ரயிலெடுக்க உக்குவுக்கு சிறிது நேரமிருந்தது. “நீ ஆஸ்பத்திரியில் ஏதோ வேலைக்குப் போவதாய்ச் சொன்னாயே..!” உக்கு குசுமவதியைக் கேட்டான்.
“பணியாள் வேலைதான். தற்காலிகமாகமானதா, நிரந்தரமானதா எதுவும் தெரியாது. அவசரமாக அங்கே பணியாட்கள் தேவைப்பட்டனர். இங்கே தெரிந்த ஒரு தமிழ்ப் நர்ஸ்மூலமாக வேலைசெய்ய போய்க்கொண்டிருக்கிறேன். நிரந்தரமாகினால் பழைய வேலையை விட்டுவிடுவேன்.”
“இனியாவது உனக்கு கொஞ்சம் நல்லது நடக்கவேண்டும், குசுமவதி.”
உக்குவும், லெட்சுமையும் விடைபெற்றுச் சென்றனர்.
அடக்கப்பட்ட குறுநிலத்தில் புலிப் பயங்கரவாதிகளை முற்றாக அழிக்கும் இறுதிக் கட்ட யுத்தத்தை படைகள் மேற்கொண்டிருப்பதாகவும், உகண்டாவில் நடைபெறவிருக்கும் ஜி11 மகாநாட்டிற்கு செல்லும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தன் நாட்டில் புலிப் பயங்கரவாதம் வெற்றிகொள்ளப்பட்ட செய்தியை மாநாட்டில் அறிவிப்பாரென்றும் வானொலிச் செய்தி சொல்லிக்கொண்டிருந்தது.
அத்தியாயம் 2009 -10
ஒரு பெரும் புலப்பெயர்வு நடந்தது, இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால். யாவேயின் கொடுங்கோலாட்சிக்கு அஞ்சி ஆறு லட்சம் இஸ்ரேலியர்கள் மோசஸின் தலைமையில் எகிப்தை நீங்கி கனான்வரை பரந்து சென்றனர். அந்த மாபெரும் புலப் பெயர்வு 150 கிமீ நீளமிருந்ததென சொல்லப்படுகிறது.
பழைய விவிலிய காலத்தின் மகா துயரம் அது.
அதற்கு நிகரானதொன்று இருபத்தோராம் நூற்றாண்டின் முதலாம் பத்தில் இலங்கையில் நடந்தது.
நவீன வரலாற்றின் அணிகலன்களெல்லாம் குலுங்கிச் சிதறின.
நான்கு புறமும் சூழ்ந்த யுத்தத்தின் மத்தியில் அகப்படுத்தப்பட்ட இனக்குழுவொன்று, தன் முன்னோர் கடல் கோள்களிலும் கண்டிராத மகா அழிவுகளை சந்தித்தது. மரணம், வேதனை, துன்பம், பசி, குளிர், பிரிவு, இழப்பு, அங்கஹீனம், வலி… காலம் கண்மூடி இட்ட சாபம் அது.
பதிவாக்கிய சம்பவங்கள் தொலைக்காட்சியில் காட்டப்பட்டுக்கொண்டு இருந்தன. அவை முழு அவலத்தின் துண்டுகள் மட்டுமே. அவற்றைக் கண்டு கூடத்துள் விறைத்திருந்தாள் குசுமவதி. அவ்வளவுமட்டுமே அல்ல அம் மக்களின் துயரமென்பது அவளுக்கும் தெரிந்திருந்தது.
அப்போது அவளுக்கு ஞாபகமாயிற்று, மூன்று நாட்களுக்கு முன்னர் அவளின் வீட்டில் வைத்தே சுது சொன்னவை. ‘அவர்களில் தோல்வியின் வடுவை ஆழமாக ஏற்படுத்தும் வகையில் யுத்தம் நடந்துகொண்டிருக்கிறது. அது முற்றுப் புள்ளியை இடுகின்ற தருணம் மிகப் பயங்கரமானதாக இருக்கும்’ என்று திண்ணமாய் அவன் உரைத்திருந்தான்.
அதுதான் நடந்திருந்தது. ‘வடுவை ஆழமாக…’
இன்னும் அவன் சொல்லியிருந்தான், ‘ரோகணவின் இறுதி நிமிஷங்கள் மிகப் பயங்கரமானவையாக இருந்தன. தமிழ்ச் சண்டையின் முடிவிலும் அவ்வாறே நிகழும்’ என.
அவ்வாறே அது நிகழும்.
ரோகண விஜேவீர அவளின் வரலாற்று நாயகன். பௌத்தம் கெமுனுவை கொண்டாடியதைவிடவும், உழைக்கும் மக்களின் வரலாற்றை மாற்றும் அவனது கருத்துரை செயற்பாடுகளில் தீவிர ஆதர்ஷம் பெற்றிருந்தவள் அவள். அது அவளது இருபது வயதுக் காலம்.
அவனது வழியின் போதாமைகளையும் தவறுகளையும் பந்துலவும் பின்னால் சொல்லியிருந்தான். தீவிரத்துக்காகவே தீவிரமாயிக்கிறானென்று குற்றமும் சாட்டியிருந்தான். ஆனாலும் ஒரு காலகட்டத்து சிங்கள இளைய தலைமுறையின் கதாநாயகன் அவன்.
அன்றைக்கு இல்லாவிட்டாலும் அவ்வாறு அவன் இருந்திருந்தான். அவனது மரணத்தை ஒவ்வொரு தடவையும் கண்ணீரோடேயே அவள் நினைத்திருக்கிறாள்.
ஒருமுறை, ‘அவனை உன்னால் மறக்கவே முடியாதல்லவா?’ என சிரித்துக்கொண்டே கேட்டான் பந்துல. அதற்கு, ‘நீ என் அரசியலை சொல்லிக்கொண்டு எனக்குள் வந்திருக்கிறவன். அந்த அரசியலை வெளியிலிருந்து சொல்லிக்கொண்டிருந்தவன் அவன். மறக்கிறதெங்ஙனம்?’ என்றிருந்தாள் குசுமவதி.
அந்தளவுக்கு அவனின் ஆதர்ஷம் அவளிடத்தில் இருந்தது. அவன் இறந்தவனாக இருந்தபோதும்.
பின்னால் அவனது மரணம் கொலையென்று சொல்லப்பட்டது.
மிகமிகப் பின்னால் ரோகணவின் இறுதி நிமிஷங்களின் ரகசியத்தை லான்ஸ் கோர்ப்ரல் இந்ரநந்தா டி சில்வா பொதுவெளியில் ஒப்புக் கொடுத்தான்.
வரலாறு இனிமேல்தான் அதை எழுதவிருந்தது.
அவளின் நினைவு திரண்டெழுந்தது.
அன்று நவம்பர் 12, 1989.
மாரி காலமாயினும், மழை பெய்யாத நேரம் அது.
கொழும்பு மாநகரமே உறங்கிக்கொண்டிருந்தது.
உறங்க விரைந்தவர்களின் வாகன இரைச்சல்களை மேவி சக்கரங்கள் தண்ணீர் தீற்றிய சத்தங்கள் எழுந்தெழுந்து மடிந்து கொண்டிருந்தன. அவை விழுத்திய இடைவெளியில் நிசப்தத்தின் அதிகாரம் கொடிகட்டி ஏறியது.
நேரம் அப்போது அதிகாலை 01.30.
திம்பிரிகஸ்ஸாயவிலுள்ள ராணுவ பொலிஸ் இணைச் செயற்பாட்டகம். அதன் முதல் தளத்திலுள்ள மாநாட்டுக் கூடத்துள் பெரும் சந்தடியற்ற சஞ்சாரங்கள் காணப்பட்டன.
பதினைந்தளவான ராணுவ பொலிஸ் மேலதிகாரிகள் சூழ இருந்துகொண்டிருக்கிறார் ரோகண. அது ரோகணதானென்பதை மட்டிடவே முடியாதிருந்தது. அவர் தாடி மீசைகளை மழித்திருந்தார். இன்னும் மெலிந்ததுபோலும் தோன்றினார்.
தன்னை அங்கே கொண்டுவந்திருக்கும் நேரமும், தன்னை விசாரணை செய்த அதிகாரிகளின் குரல் இறுக்கமும், முகங்களின் அசைவுகளிலிருந்த மர்மமும்கொண்டு தன்னுடைய முடிவை ரோகண அனுமானித்தவராயிருக்கும். கலங்கி… தெளிந்து... கொண்டிருந்தது அவரது முகம். பதறி, அடங்கிக்கொண்டிருந்தது உடம்பு. எதையும் எதிர்கொள்ளும் உறுதி விருத்தியாகிக்கொண்டு இருந்தது.
சுற்றிவரவிருந்த மேலதிகாரிகளின் கேள்விகளுக்கு திடமான பதில் பிறந்துகொண்டிருந்தது அவரிடமிருந்து.
அவர் கெரில்லா போர்ப் பயிற்சி பெற்றவராவெனக் கேட்கிறார்கள்.
இல்லையென்கிறார் ரோகண. தான் மக்களோடேயே கலந்துறைந்து இருந்ததாகக் கூறுகிறார்.
விஜய குமாரதுங்கவின் கொலைபற்றிக் கேட்டபோது, தமது இயக்கத்துக்கும் அதற்கும் எதுவித சம்பந்தமும் இல்லையென்கிறார். ‘எங்களுக்குள் கருத்துரீதியான மாறுபாடு இருந்தது. அதனை விமர்சனபூர்வமாகவே கட்சி அணுகியது. அவரைக் கொலைசெய்யும் திட்டமேதும் ஜேவிபியிடம் இருந்திருக்கவில்லை.’
பிரேமதாச அரசாங்கத்தை தமது கட்சி விரும்பாததற்கும் அதற்கெதிரான பிரச்சாரத்தைச் செய்ததற்கும், விடுதலைப் புலிகளுக்கான அதன் ஆதரவும், ஆயுத மற்றும் பாரிய அளவிலான பண உதவியுமே காரணமென ஒரு கேள்விக்குப் பதிலளிக்கிறார் ரோகண. ‘வன்னிப் புலிகளை ஆயுததாரிகளாக்கும் அரசாங்கம், எம்மை நிராயுதபாணிகள் ஆக்கியிருப்தையே சுட்டிக்காட்டினோம்.’
தொடர்ந்து அவர்களது அரசியல் நிலைப்பாடுபற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு, ‘ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்ட பின்னரும் அரசியலைவிட்டே எம்மை நீக்கிவிடுகிற அளவுக்கு சகல தரப்புகளிலிருந்தும் எம்மைச் சுற்றி விழுத்தப்பட்ட நெருக்குதல்கள் உக்கிரமாக இருந்தன. ஆயினும் அந்த நெருக்குதல்களைத் தாங்கிக்கொண்டு ஜனநாயக அரசியலில் தொடரவே ஜேவிபி முடிவுசெய்திருந்தது.’
விசாரணை முடிந்தது.
அவரை புகைப் படங்கள் எடுத்தார்கள்.
ராணுவ கட்டளை அதிகாரி சிசில் வைத்யரட்ன தனது அறைக்குள் சென்றார். பல்வேறு சிந்தனைகள் அவரது முகத்தை மூடியிருந்தமை தெரிந்தது. சிறிதுநேரத்தில் மேலதிகாரிகள் சிலரை பெயர் குறிப்பிட்டு உள்ளே அழைத்தார்.
கட்டளைத் தளபதியால் அவர்கள் செய்யவேண்டிய காரியங்கள் பணிக்கப்பட்டன.
வெளியே வந்த அதிகாரிகள் ரோகணவை கீழ்த் தளத்துக்குக் கூட்டிச் சென்றனர்.
தொடர்ந்து இரண்டு பஜிரோ வாகனங்கள் கொண்டுவரப்பட்டு அதிலொன்றில் ரோகண ஏற்றப்பட்டார். கூட, மேஜர் தொரதெனிய மற்றும் ரொனி குணசிங்க போன்றவர்களும் ஏறினர். மேஜர் முதலிஃப், மேஜர் உடுகம்பொல அடுத்த வாகனத்தில் ஏறினர். இன்னும் சில ராணுவத்தாரும்.
அப்போது விடிகாலை 02.30.
சூழலின் நிசப்தத்தை கிழிக்காமல் வாகனங்கள் கொழும்பு கோல்ஃப் மைதானத்தைச் சென்று சேர்ந்தன.
அந்த இரவில் ரோகணவின் மேல் விதியால் எழுதப்பெற்ற தண்டனையை நிறைவேற்றுமிடம் அதுவாக இருந்தது. ஒரு ராணுவ மேஜராலும், ஒரு பொலிஸ் சுப்ரின்டென்ராலும் ரோகண அங்கேதான் சுடப்பட்டார்.
ரோகணவை எவ்வாறு சுட்டிருப்பார்கள்? அவ்வாறான கொலைக்கும் ஒரு ஒழுங்கு இருப்பதை சினிமாக்கள் காட்டுகின்றன. ரோகணவை மண்டியிட வைத்தோ, சுவரோரம் நிற்கவைத்தோ சுட்டிருக்கலாமோ?
அது மேலுமொரு ரகசியத்தில் நடந்திருந்தது.
பிறகு அவரது சடலம் மின் தகன மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
துவக்கு முனையில் மயானப் பணியாளிடமிருந்து திறப்பை வாங்கிக்கொண்டு மின் தகன மேடைக்கு சடலத்தை எடுத்துச் செல்கிறார்கள்.
மயானப் பணியாளிடமே எவ்வாறு சடலத்தை எரியூட்டுவதென அறிந்துகொண்டதும், தகன அறையுள் தீ எழுப்பப்படுகிறது.
போதையிலிருந்த இருவர் ரோகணவின் சடலத்தை தூக்கி உள்ளே வீச, அது பக்கச் சுவர்களில் இடறுப்பட்டு வந்து வெளியே விழுகிறது.
அப்போது உக்கிரமானவொரு தீனக்குரல் எழுகிறது ரோகணவிடமிருந்து.
அதுபோன்ற ஒன்றாய்த்தானே இருந்திருக்கும், சிலுவையில் அறையப்பட்ட உடலிலிருந்து ஜீவன் பிரிந்த கணத்தில் உலகின் அந்த முதல் புரட்சியாளன் வெளியிட்ட அவலக் குரல்?
மயானத்தில் ஒரே களேபரம்.
ஒருவர் ஒருவரின் மாதாவையென அங்கிருந்த எல்லாரது மாதாக்களும் அந்த மயானத்தில் அந்த விடிகாலையில் அரூப ஒலியால் மானபங்கம் செய்யப்பட்டார்கள்.
மறுபடி தகனப் பொறி முடுக்கிவிடப்படுகிறது.
மறுபடி ரோகணவின் உடல் தகன அறைக்குள் வீசப்படுகிறது.
உடல் சடசடத்து உயிரோடு எரிந்தது.
எராஸ்மஸ்… ழீன் டி ஆர்க்… இன்னும் யார் யார்? அவர்களுடன் ரோகண விஜேவீரவும்.
அப்போதும் குசுமவதி அதற்காக ஒருமுறை அழுதாள்.
மறுநாள் காலையில் குசுமவதி துப்புரவு வேலைக்குப் போனாள். பத்து மணியளவில் ஆஸ்பத்திரி வேலையிருந்தது. மாலையில் வீடு வரும்போது அவளது வீட்டுக்கு அண்மையிலிருந்த விமலா கூடவந்தாள்.
அவளது முகம் வழக்கமான சோகத்தின் ரேகைகள் அற்றிருந்தது. ஒரு மெல்லிய மலர்ச்சியும் கொண்டிருந்தது.
திரும்பிக் கண்ட குசுமவதி திடுக்குற்றாள்.
தன் ராணுவ மகனை இழந்த சோகத்தின் ஒரு கூறை எந்நேரமும் அவளது முகம் கொண்டிருந்தது. அதற்குக் காரணமான ஒரு இயக்கத்தின் அழிவில் அடைகிற ஒரு வஞ்சத் திருப்தியா அப்போது அவள் முகத்தில் படிந்திருப்பது? எல்லோரும் வீரத் தாயராய் இருக்கவில்லை. வறுமையின் நிர்ப்பந்தத்திலும், பிக்குமாரின் வற்புறுத்தலிலுமே தங்கள் மகன்களை அவர்கள் படைக்கு அனுப்பியிருந்தார்கள். அவர்களால் தம் மகன்களின் மரணங்களை இலகுவில் தாங்கிவிட முடிவதில்லை. அதற்குக் காரணமானவர்களில் அவர்கள் கோபமும் படுகிறார்கள். அக் கொலையாளிகளின் அழிவில் ஒரு சாதாரண தாய் நிறைவடையவே செய்கிறாள். அவர்களில் சிலர் விமலாபோல் வெளிவெளியாய் சந்தோஷமும் படக்கூடும்.
குசுமவதி அதுபற்றி அவளிடம் கேட்கவில்லை.
ஒரு துன்பத்தை வலிந்து கேட்டுப் பெறவேண்டியதில்லை.
மறுநாள் காலையில் துப்புரவுப் பணி முடித்துவந்து வீட்டில் நின்றிருந்தாள் குசுமவதி.
ரூபவாகினி தொலைக்காட்சியில் செய்தி தொடங்கியிருந்தது.
விடுதலைப் புலிப் போராளியின் சீருடையில் ஒரு சடலம் காட்சிப் படுத்தப்பட்டுக்கொண்டு இருந்தது.
அன்று அதிகாலையில் நந்திகடலில் நடந்த சமரில் சுட்டுக் கொல்லப்பட்ட பத்து பன்னிரண்டு சடலங்கள் கூடக்கிடந்தன.
அடிக்கடி காட்டப்பட்ட அந்தச் சடலத்தின் முகம் மிகப் பயங்கரமாயிருந்தது. அதன் கண்கள் விழித்தபடியிருந்தன. திசைமாறி பார்த்துக் கிடந்தன.
அதன் நெற்றியின் மேலே தலையில் ஒரு கைக்குட்டை போட்டு மூடப்பட்டிருந்தது. ஒருமுறை கைக்குட்டை அகன்றபோது குசுமவதி அதைக் கண்டாள். கோடரியால் கொத்தி பிளக்கப்பட்டதுபோல் பிரிந்திருந்தது அந்த இடம்.
‘ஆ…!’ அவலத்தின் ஒரு துளி சொல்லாய் வந்து விழுந்தது.
படத்திலிருந்தது யாரென்பதை தொலைக்காட்சி தெரிவித்தது. அது… வேலுப்பிள்ளை பிரபாகரன். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்.
அப்போது வெளியே பன்சாலவையும் தாண்டி நகரத்திலிருந்து பெரும் ஆரவாரமெழுந்தது. வெடிகளின் வேட்டுகளுடன், சிரிப்பு வேட்டுக்களும். தென்னிலங்கையிலிருந்தும் இன்னும் இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் எழுந்த சிரிப்பு அது.
அன்றைய தினம் மே 19, 2009 செவ்வாய்க் கிழமை.
[ தொடரும் ]
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
வடலி' பதிப்பக வெளியீடாக வெளியான எழுத்தாளர் தேவகாந்தனின் நாவல் 'கலிங்கு'. தற்போது 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளியாகின்றது. இதற்காக தேவகாந்தனுக்கும், வடலி பதிப்பகத்துக்கும் நன்றி. உலகளாவியரீதியில் 'கலிங்கு' நாவலையெடுத்துச் செல்வதில் 'பதிவுகள்' மகிழ்ச்சியடைகின்றது. 'கலிங்கு' நாவலை வாங்க விரும்பினால் வடலியுடன் தொடர்பு கொள்ளுங்கள். வடலியின் இணையத்தள முகவரி: http://vadaly.com