வடலி' பதிப்பக வெளியீடாக வெளியான எழுத்தாளர் தேவகாந்தனின் நாவல் 'கலிங்கு'. தற்போது 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளியாகின்றது. இதற்காக தேவகாந்தனுக்கும், வடலி பதிப்பகத்துக்கும் நன்றி. உலகளாவியரீதியில் 'கலிங்கு' நாவலையெடுத்துச் செல்வதில் 'பதிவுகள்' மகிழ்ச்சியடைகின்றது. 'கலிங்கு' நாவலை வாங்க விரும்பினால் வடலியுடன் தொடர்பு கொள்ளுங்கள். வடலியின் இணையத்தள முகவரி: http://vadaly.com
5
அன்று குணாளன் வரும்போதே திரும்புவதற்கான வேகத்தையும் அவனது நடை கொண்டிருந்ததை சங்கவி கண்டாள். சம்பூரிலே ஆகஸ்டு 28, 2006இல் புலிகளுக்கும் அரச படைகளுக்குமிடையில் பயங்கரமான சண்டை தொடங்கியிருந்தது. புலிகளின் கையிலிருந்த சம்பூர் எப்போதுமே திருகோணமலை கடற்படைத் தளத்துக்கு எறிகணை வீச்சால் ஆபத்தை விளைக்கக்கூடிய வாகுவில் அமைந்திருந்ததை அவர்கள் கண்டிருந்தார்கள். மாவிலாறு வெற்றியின் பின் சம்பூரைக் கைப்பற்ற மும்முனைத் தாக்குதலில் இறங்கியிருந்தன இலங்கை அரச படைகள். யுத்தம் தொடங்கி ஆறுநாட்களாகியும் வெற்றி தோல்வியற்ற சமச்சீரில் போர் தொடர்ந்துகொண்டிருந்தது. ஒருபோது பாச்சனூரிலுள்ள புலிகளின் காப்பரணை அரச படைகள் தகர்த்துவிட்டதாக தகவல் வந்தது. இறுதியில் சம்பூரை செப்ரெம்பர் 4இல் கைப்பற்றி இலங்கை ராணுவம் அங்கே நிறுதிட்டமாய் முகாமமைத்தது.
வன்னியில் அதனாலான நிலைகுலைவு வெளியாய்த் தெரிந்தது. மேற்கொண்டு வாகரைமேலான தாக்குதலுக்கு ராணுவம் ஆயத்தம் செய்வதான செய்தியறிந்த மக்கள் குலைந்துபோயிருந்தனர். வன்னியில் அதன் தாக்கங்கள் எல்லைகளில் இயக்க எல்லைக் காவலர்களின் மரணங்களாக விளைந்துகொண்டிருந்தன. அம்பகாமம் காட்டுக்குள்ளாக வந்துகொண்டிருந்த ஆறு விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகள் சடுதியான தாக்குதலில் பிணங்களாக வீழ்த்தப்பட்டமை, மூன்று நான்கு நாட்களின் முன்னர் போராளிகள் செல்லிடம் வந்து சேராத தகவலில் தேடுதல் நடத்தியபோது தெரிய வந்தது. முதல்நாள்தான் அவர்களது வித்துடலின் விதைப்பு முறிப்பு மாவீரர் துயிலுமில்லத்தில் சகல இயக்க மரியாதைகளுடனும் நடைபெற்றது. இவ்வாறான நேரத்தில், குணாளன் மறுபடி கிளம்புவானாகில், கிளம்புகிற நேரத்தில் எதுவும் கேட்கப்படாதென அவன் சொல்லியிருந்தானெனினும், அவளால் விட்டுவிட முடியாது. முகம் கழுவி உடுப்பை மாற்றிக்கொண்டு அவன் அவசரமாகத் திரும்ப தயாரானான்.
அவனை மெதுவாக சங்கவி அணுகினாள். “கேக்கிறனேயெண்டு கோவியாதயும், குணா. இந்தநேரத்தில எங்க, அவ்வளவு அவசரமாய்?” என்றாள்.
அவன் அவளைப் பார்த்து அவளது அவதியின் கவனமின்றியும், தன் அவசரத்தின் இறுக்கமின்றியும் மெல்லச் சிரித்தான். அவன் அந்தளவு திருப்திப்படுமொன்று விரைவில் நடக்கப்போகிறதென்பதின் அர்த்தம் அது.
வெளியே கேற்றடியில் அவனுடன் கூடவந்தவர்களினதாய் இருக்கும், உரையாடல் சத்தம் கேட்டது. ஊரில் எவரிலுமிருக்கும் அவதி, அச்சமெதுவும் அவனில் கொஞ்சங்கூட இல்லை. அவன் சொன்னான்: “யாழ்ப்பாணத்துக்கு.”
“இந்த நேரத்திலயோ?”
“ஏன், இந்த நேரத்துக்கு என்ன? பாக்கப்போனா மற்ற நேரங்களைவிட இந்த நேரந்தான் வசதி.”
“சம்பூர் விழுந்திட்டுது. அடுத்தது வாகரைதானெண்டு பேச்சிருக்கு.”
“இதெல்லாம் எனக்குத் தெரியாதெண்டு சொல்லுறிரோ?”
“அதுக்கில்லை. ஊர் நிலமை நல்லாயில்லை, குணா.”
“அது எப்ப நல்லாயிருந்தது? நான் பிறந்ததிலயிருந்து அது நல்லாய் இல்லாமல்தான இருக்கு.”
“பிரகடனம் செய்யாமலே சிறிலங்கா யுத்தத்தை துவக்கியிட்டுது எண்டுதான் எல்லாரும் கதைக்கினம். கொழும்பில தமிழாக்கள் நிக்கிறதும் கஷ்ரமெண்டு ஒரே கதையாயிருக்கு. லொச்சுகள் வீடுகள் ஒண்டிலயும் தமிழாக்களை வைச்சிருக்கப்படாதெண்டு கொழும்பில பெரிய அமளியாம். சனம் இருக்க… கிடக்க இடமில்லாமல் அங்க அலையுதெண்டு காலமை ஆரோ சந்தியில நிண்டு கதைச்சுதுகள். இந்த நிலையில இப்பவே போகவேணுமெண்டு நீர் வெளிக்கிட்டா?”
“அதுதான் அவசரப்படுறன். இப்பவேதான் போகவேணும்.”
“ராத்திரி நிண்டு காலமையெண்டான்ன போமன்.”
“காலமை நான் யாழ்ப்பாணத்திலயிருந்து கொழும்புக்கு வெளிக்கிடவேணும்.”
“ யாழ்ப்பாணத்துக்கெண்டிரே இப்ப…?”
“இப்ப யாழ்ப்பாணத்துக்குத்தான். கொழும்புக்குப் போனவுடன ரண்டு நாளில வேலையை முடிச்சிட்டு வந்திடுவன்.”
“ஏ9 பாதை பூட்டியிருக்கு.”
“நான் அந்தப் பாதையால போகேல்லை. அதுசரி, காசெதாவது உம்மிட்ட இருக்கோ?”
“ரண்டு நாளாய் சிலவுக்கே ஒரு சதமில்லாமல் இருக்கிறன்.”
“ம்.” அவன் ஏதோ காசுக்கு திட்டமிடுகிற மாதிரியான ஸ்திதியில் சிறிதுநேரம் நின்றான். பின், “யாழ்ப்பாணத்தில எனக்கு காசு கிடைக்கும். என்னோட ரமேசும், வேற ரண்டு பெடியளும் வாறாங்கள். ரமேஷை தெரியும்தான… அந்த ஒல்லியான சிவலைப் பெடியன்… அவன் நாளைக்கு திரும்பி இஞ்ச வருவான். காசு குடுத்துவிடுறன்” என்றுவிட்டு, ஏணைக்குள் கிடந்து உதைத்துக்கொண்டிருந்த பிள்ளையின் பக்கம் எட்டிப் பார்த்து, “வாறனடா, செல்லம். கொம்மாவைப் பாத்துக்கொள்” என்றான். பின், “வாறன், சங்கு” என்றுவிட்டு அங்கிருந்து விரைந்தான்.
சிறிதுநேரத்தில் வாசலிலிருந்து கிளம்பி தெருவிலோடிய சைக்கிள்களின் சத்தம் கடகடத்துக் கேட்டது.
அவள் திரும்பி மேற்றிசையைப் பார்த்தாள். இரணைமடுத் திசையில் சூரியன் கீழிறங்கியிருந்தது. இரவு தொடங்கிவிட்டது. வன்னியின் அந்த வெளியை மீறிய இருள் அது. தன்னிலிருந்த குறைந்தளவு வெளிச்சத்தையும் விழுங்கி வந்திருந்த இருளாய் அது தோன்றியது சங்கவிக்கு.
பகலினதும் இரவினதும் ஒலிகள் வேறுவேறானவை. அப்போது கேட்ட ஒலிகள் நள்ளிரவுக்கு உரியவையாய்த் தோன்றின. எங்கோ தூரத்தில் ஏ9 பாதைப் பக்கம் ஒற்றை மோட்டார் சைக்கிள் இரைந்தது மெலிவாய் காற்றில் இழைந்து கேட்டது. அந்த இருளை எது காரணமின்றியும் வேறானதாக உணர்ந்தவளுக்கு மெல்லிய நடுக்கம் பிறந்தது.
மறுநாள் விடிந்தபோதும் அந்த நடுக்கத்தின் மெல்லிய அதிர்வுகள் மனத்திலும், உடம்பிலிருக்கவே சங்கவி அறையிலிருந்து வெளியே வந்தாள்.
அம்மா அன்றைக்கு முல்லைத்தீவுக்குப் போகவேண்டுமென்று முதல்நாள் சொல்லியிருந்தாள். ‘போறதெண்டாப் போங்கோ. என்னிட்ட அஞ்சு சதமும் இல்லை’ என்று சங்கவி சொல்லியிருந்தாள். அப்போதெல்லாம் அவளது தேவைக்கு அவள் உழைக்காமலும் காசு இருந்துகொண்டிருந்தது. ஒருமுறை கேட்டபோது, ‘கல்மடு அரசரத்தினத்திட்டை கைமாத்தாய் வாங்கினன். அடுத்த மாசம் திருப்பித் தாறமெண்டிருக்கிறன். என்னமாதிரிக் குடுக்கப்போறனோ?’ என்று பரதவித்துச் சொன்னாள். ‘எந்த அரசரத்தினமம்மா, சொல்லன், நானும் கொஞ்சம் கடன் கேட்டுப் பாக்கிறன்’ என்று சங்கவி கேட்க, ‘அரசரத்தினத்தைத் தெரியாதோ, பிள்ளை? நீ முந்திக் கண்டிருக்கிறாய், மறந்திட்டாய்போல’ என்று கதையை முடித்துக்கொண்டாள்.
அரசரத்தினம் குடியும் குடித்தனமுமாக இருப்பதோடு நல்லவராகவும் இருந்தால் சரிதானென எண்ணி அவளும் அந்த விஷயத்தை அன்று அத்தோடு விட்டுவிட்டாள். ஆனால் மறுபடி அரசரத்தினம் அன்றைக்கு ஞாபகமாகியிருந்தார். அரசரத்தினம் எப்படி இருப்பாரென்று கிணற்றடியில் முகம் கழுவிக்கொண்டிருந்தபோது ஒரு எண்ணமோடியது. அரசரத்தினம் எப்படி இருப்பாரென்பதுகூடத் தெரியாமல், தனியே அந்தப் பெயர் மட்டும் இயல்பான இடம் வலமாயன்றி மேல்கீழாய் நின்றிருக்கும் ஸ்திதியொன்று மனதில் விழுந்தது. பெயர் மட்டுமே ஒரு உருவமெடுத்தது அவளுக்கு விந்தை. கனவின் உருவம்போல் அடையாளமறுத்திருந்தது. அவரது முகத்தைக் காண சங்கவி அவாவினாள். அவரது வயதை அம்மாவின் வயதிலிருந்தே கண்டடையவேண்டி இருந்தது. அந்த வயதில் சிறிய வண்டிவைத்த ஓருருவம் மனத்தில் தோன்றியது. ஆனாலும் முகமற்றிருந்ததில், அரசரத்தினம் நல்லவரா என்பதைத் தெரிய அவளால் முடியவில்லை. தேநீர் வைத்து ‘தொட்டு’ குடித்துவிட்டு குழந்தைக்குப் பால் கொடுத்தாள். அதற்கும் தன் பிரயத்தனமும் காட்டித்தான் அந்த ஒட்டிய முலைகளில் ஊறும் சொற்ப பாலையும் குடிக்கவேண்டியிருந்தது. குழந்தை பிறந்திருக்காவிட்டால் தோலைத் தவிர வேறு அவளுக்கு அந்த இடத்தில் இருந்திராது.
திருமணத்தின் பிறகான ஒரு மாதத்துள் அவளுக்கும் குணாளனுக்குமிடையே நடந்த ஒரு ராத்திரியவேளை உரையாடலொன்று அப்போது அவளுக்கு ஞாபகம் வந்தது.
‘என்னத்தைத் தேடுறிர்?’ அவள் கேட்டாள்.
‘அதைத்தான்.’
‘அதைத்தானெண்டா?’
‘எல்லாப் பொம்பிளயளுக்கும் இந்த இடத்தில இருக்குமே, அது.’
‘ஓ… அதா? அது தேடினாலும் கிடைக்காது.’
‘எங்க வைச்சனீர்?’
‘எப்பவும் இருக்காததை எங்க கொண்டுபோய் நான் வைக்கேலும்?’
‘கொம்மாவிட்ட குடுத்து வைச்சிட்டிரோவெண்டு நெச்சன்.’
‘சீ… உப்பிடிக் கதையாதயும்.’
தன்னை நினைத்தபோதா, அம்மாவை நினைத்தபோதா அந்த உரையாடல் ஞாபகம் வந்ததென்று சங்கவிக்குத் தெளிவில்லை. சிறிதுநேரத்தில் பால் குடுத்துவிட்டு வர, அம்மா வெளிக்கிட்டு நின்றிருந்தாள். தோளிலே கொளுவ ஹான்ட் பாய்க் தயாராய் திண்ணையில் இருந்தது. வயர்க்கூடையை கையில் வைத்திருந்தாள். அழகாகக் கொண்டை போட்டிருந்தாள். ‘எழுத்துகள் தெரியுதில்லை, கண்ணாடியொண்டு வாங்கவேணு’மெனச் சொல்லிக்கொண்டிருந்தாள். கண்ணாடி போட்டால் சாந்தியக்காவையே பார்த்தமாதிரி இருக்கும். அம்மாவும் ஒரு ரீச்சராகத்தான் வந்துகொண்டிருக்கிறாள் என்று நினைத்தபடி, “என்னம்மா, வெளிக்கிட்டாச்சோ?” என்றாள்.
“போகத்தான வேணும். ரூபியிட்டை இண்டைக்கு வாறனெண்டு சொல்லியிட்டன்.”
“ சரி, என்னவோ செய்யுங்கோ. காசு, அரசரத்தினம் தந்தாராக்கும்” என்றதற்கு, “வேற ஆரிட்ட நான் மாறுறது இஞ்ச? அந்தாளொண்டுதான் இருக்கு ஆத்திரம் அந்தரத்துக்கு குடுத்து வாங்க. முந்தநாள் வெளியில போட்டு வந்தனெல்லோ, அங்கதான் போயிருந்தன்” என்றாள். பிறகு ஹான்ட் பாய்க்கை எடுத்து திறந்து, பார்ஸிலிருந்து இருபது ரூபாவை எடுத்து, “அவசரத்துக்குத் தேவைப்பட்டாலும்” என்று நீட்டினாள். அதுவரை கொஞ்சம் முறுமுறுத்துக்கொண்டிருந்த சங்கவியின் மனம் தணிந்தது.
“ நீங்கள் வைச்சிருங்கோம்மா. குணாளன் காலமை ரமேஷிட்ட காசு குடுத்துவிடுறமெண்டு சொல்லியிருக்கு” என்று பதனமாய் மறுத்தாள்.
“பாத்து இருந்துகொள். நான் ரண்டு மூண்டு நாளில வந்திடுவன்” என்று விட்டு பாய்க்கை தோளில் கொளுவிக்கொண்டு நடந்தாள். பாவமாகத்தான் இருந்தது சங்கவிக்கு அவளின் அந்தக் கோலம். சாந்தியக்கா கழித்துவிட்ட ஹான்ட் பாய்க்கும் சாறியும். ரூபியக்கா வீட்டில் எடுத்த பிளாஸ்ரிக் பை. கொண்டைதான் எங்கேயிருந்தெனத் தெரியவில்லை. அம்மாவிடமே அது இருந்திருக்கலாம்.‘அம்மா பாவம்!’
மாலையில் நித்தியா வந்தாள்.
“எப்ப வந்தியள்?” கலகலப்பாய்க் கேட்டாள் சங்கவி.
“நாலு மணிபோலான்.”
“ஏ9 பாதை பூட்டியிருக்கெல்லோ?”
“ஓ. நான் வவுனியாவந்துதான் வாறன். பாதை அப்பப்ப திறக்குது. ரண்டு நாள் காத்திருந்துதான் இஞ்சால வந்து சேந்தன்.”
“ஓ,,,”
நித்தியாவின் பொட்டு பளீரென்று சிவப்பாய் இருந்துகொண்டிருந்தது நெற்றியில்.
சங்கவி சந்தோஷமாய்ச் சிரிக்க, தானுமே சந்தோஷத்தில் கிளுகிளுத்தபடி, “தப்பியிட்டன், சங்கவி. இனி ஒருதருக்குப் பயப்பிடத் தேவையில்லை. அவர் வெள்ளிக்கிழமை ராத்தரியே லண்டன் போய்ச் சேர்ந்திட்டார்” என்றாள் நித்தியா.
சொல்லி முடிந்தபோது கிளுகிளுப்பு நின்ற அவளது கண்ணிலிருந்து கண்ணீர் வடிந்துகொண்டிருந்தது.
“ஏனக்கா?”
கண்களைத் துடைத்துக்கொண்டு நித்தியா சொன்னாள்: “கொம்மாவில எனக்கு மனக்குறையொண்டும் இல்லை, சங்கவி. எண்டாலும் என்னைக் கெட்டமாதிரி நினைச்சுக்கொண்டுதான அவவும் என்னோட பேசாமல் இருந்தவ. பறவாயில்லை, அவ மட்டுமே, ஆர்தான் என்னை அப்பிடி நினைக்கேல்லை? அது வேஷம். அதாலதான் என்ர மனிசன பதினாறு வருஷமாய் காப்பாத்த முடிஞ்சுது” என்று உணர்வு மேலிட குலுங்கினாள். பிறகு தெளிந்துகொண்டு, “நினைக்கவே ஆச்சரியமாய்க் கிடக்கு. பதினாறு வருஷம்… எப்பிடி அவ்வளவும் ஒவ்வொண்டாய்... நாள் நாளாய்க் கழிஞ்சு போச்சுது? நினைக்க சந்தோஷமாயும் இருக்கு. அழுகையும் வருகுது. இந்த பதினாறு வருஷத்தை நாங்கள் அனுபவிச்சு வாழேல்லையே, சங்கவி” என்று முடித்து அவள் மறுபடி குலுங்க சங்கவி தேற்றினாள். “அழாதயுங்கோ, அக்கா. உங்களுக்கு மட்டுமே, ஆருக்கு இந்தக் காலத்தில வாழ்க்கை அவ்வளவு சுகமாய் இருந்திருக்கு, ம்…? எங்கட சனத்தின்ர தலையில ஏன்தான் கடவுள் இப்பிடி எழுதியிருக்கிறாரோ?” மேலே கொழும்பு நிலைமைபற்றி பேசினார்கள். கொழும்பு நகரப் பகுதியிலிருந்து இருபத்தினான்கு மணிநேர கெடுவில லொட்ஜ்களிலிருந்தும், வாடகை வீடுகளிலிருந்தும் தமிழாக்களை வெளியேற்றும் உத்தரவில், உலகெங்கும் பிறந்த சலனம், உள்ஊரில் பிறந்திராததைப்பற்றிய பேச்சை நித்தியா எடுத்தாள். “அதில ஞாயமில்லையெண்டு சொல்லுவியோ, சங்கவி?” “எனக்குத் தெரியேல்லையக்கா. கதிர்காமரைப் போட்டாப் பிறகும், தோல்வியெண்டாலும் பொன்சேகாவைப் போட முயற்சி பண்ணினாப் பிறகும் வடக்கு கிழக்குத் தமிழாக்களை கொழும்பில விட பொலிஸ் ஆமியெல்லாம் யோசிக்கத்தான் செய்யும். வடக்கு முஸ்லிம்களை வைச்சுப் பாத்தாலும் இது சரியெண்டுதான படுகுது. புலியள் அவையை யாழ்ப்பாணத்திலயிருந்து கலைக்கேக்க அதுக்கு ஒரு ஞாயம் இருந்துதெல்லோ, அக்கா? கேள்விப்படுறதுகளை வைச்சுப் பாத்தா, அங்க ஹெல உருமயவாலதான் இந்தப் பிரச்சினை பெரிசாக் கிளம்பியிருக்கெண்டு தெரியுது. ஜேவிபியும் இதுக்கு சப்போர்ட்டெண்டு நினைக்கிறன்.”
யுத்தத்தின் தர்மங்கள் வேறானவை. அவை ஜெயத்துக்கானவை. மகாபாரதத்தின் தர்மமே மகாபாரத காலத்து தர்மமில்லை. மிகத் தெளிவான புரிதலின்றியே ஒருத்தி காலத்தின் தர்மத்தையும், மற்றவள் யுத்தத்தின் தர்மத்தையும் பேசிக்கொண்டிருந்தாள். பிறகு கிழக்கு மாகாண யுத்தம்பற்றிப் பேசினார்கள். பாமரமான அப் பேச்சுக்கள், ஏற்கனவே வன்னியில் பரவியிருந்தவை. நித்தியா கொழும்பிலிருந்து கொண்டுவந்தவை அதினின்று பெரிதும் வித்தியாசப்பட்டுப் போகவில்லை. ஏனெனில் அது கொழும்புப் பாமரர்களுடையதாய் இருந்தது.
நித்தியா புறப்படுகையில், “நான் இஞ்ச கதைக்கிறதுக்கும் ஆளில்லாம இருந்தனான் வந்த புதிசில. என்ர மனப் பாரத்தை இறக்கிவைக்க நல்ல ஒரு சகோதரமாய் நீர் கிடைச்சீர். இல்லாட்டி நான் என்ன ஆகியிருப்பனெண்டு எனக்கே தெரியாது. எண்டைக்கும் இத மறக்கமாட்டன், சங்கவி” என்று கண் கசிந்தபடி சொன்னாள்.
“அள்ளிக் குடுக்க ஆரிட்ட இருக்கு, அக்கா? ஆறுதலைத்தான் குடுக்கேலும். அதைத்தான் நான் செய்தன். அதொண்டும் பெரிய காரியமில்லை.”
நித்தியா சென்ற பின்னால் அவளது பார்வை தெருப்பக்கம் ஓடியது. ரமேஷ் வரும் அறிகுறியேதும் தென்படவில்லை. எப்படியும் அன்றைக்கு வந்துவிடுவானென்றிருந்த எதிர்பார்ப்பு, மேற்குள் சூரியன் அழுந்திக்கொண்டிருந்த அந்தநேரத்தில் அருக ஆரம்பித்தது.
நேரமாக ஆக அன்றைய பகலை முற்றாக அழித்து இருள் விழுந்தது.
லாம்பு கொளுத்தவிருந்தது. தேவையானபோது கொளுத்துவதுதான் அப்போதைய நடைமுறை.
மின்மினிப் பூச்சிகள் முற்றத்தில் பறந்துகொண்டிருந்தன. அழகாயிருந்தது. எரி வண்டு கிளம்புகிற நேரமும் அதுதான். கண்ணைக் குருடாக்கும் இரவின் ஆயுதம் அது. ஆனால் அது கழிவு வாய்க்கால்க் கரை தாண்டி வீடுகளுக்கு வந்துவிடாது. பார்த்துக்கொண்டிருந்தாள் சிறிதுநேரம்.
அப்போது வாசலடியில் படலை அரக்குப்பட்ட சத்தம் கேட்டது. ரமேஷாய் இருக்குமென எண்ணி அவசரமாக லாம்பைக் கொளுத்தி கொளுவியில் மாட்டினாள். ரமேஷ், கூட இன்னொரு பெடியனோடு உள்ளே வந்தான்.
சொல்லவந்த எதையோ சொல்லமுடியாது இருவரும் தடுமாறிக்கொண்டிருப்பதை சங்கவியால் காணமுடிந்தது. அவளது மனம் துண்ணிட ஆரம்பித்தது. நல்ல சேதி கொண்டுவந்தவர்கள் இல்லையோவென மருண்டாள்.
மௌனத்தை இழையவிட்ட சிறுபொழுதின் பின் அவளே கேட்டாள், “என்ன, ரமேஷ், ஏனிப்பிடி வாயடைச்சுப்போய் நிக்கிறாய்? என்ன நடந்தது? குணாளன் கொழும்புக்குப் போட்டாரோ?” என.
அப்போதும் துணிவடையாமல் இருவருமே திணறினார்கள். பின் ஒருவாறு சுதாரித்துக்கொண்டு, “இல்லையக்கா… அது… நாங்கள் நினைச்சே இருக்கேல்லை… குணாளனை… நேற்று ராத்திரி…” என இழுத்தான் ரமேஷ்.
“சொல்லடா… என்ன நடந்தது…?” வெடித்தாள் அவள்.
“ஆரோ… யாழ்ப்பாணத்தில வைச்சு….”
“யாழ்ப்பாணத்தில வைச்சு…?”
“யாழ்ப்பாணத்தில வைச்சு… கடத்திக்கொண்டு போட்டாங்களக்கா.”
சங்கவி சிதறினாள் உள்ளுள்ளாய். “வேண்டாமெண்டு சொல்லச் சொல்ல நெஞ்சை நிமித்திக்கொண்டு போனானே பேப் பூனா மோன்… ஆரடா செய்தது? ஆக்களைத் தெரியுமோ?”
“தெரியாதக்கா. வெள்ளை வானில வந்தாங்கள். எங்களால ஒண்டுஞ்செய்ய ஏலாமப்போச்சு. கதவைத் துறக்க குணாளனை பாய்ஞ்சு பிடிச்சிட்டாங்கள். நாங்களோ கெடிகலங்கிப்போய் நிண்டிட்டம். அப்பிடியான நேரத்தில எங்களாலயில்லை, ஆராலதான் என்ன செய்யேலுமக்கா? அப்பிடியே பிஸ்டலை தலையில வைச்சு அமத்திப் பிடிச்சுக்கொண்டு போய் வானில ஏத்தியிட்டாங்கள்.”
“நான் இனி உவனை எங்கயெண்டு போய்த் தேட?” புலம்பியவளாய் முற்றத்திலேயே கால்கள் தளர்ந்து சக்கப்பணிய இருந்தாள். குத்திய அந்த நிலையிலிருந்து அவள் எப்போது தெளிவாளோவென்று தெரியாத இரு வாலிபர்களும், “ராவைக்கு திரும்பி யாழ்ப்பாணம் போறம். எதாவது தெரியவந்தா வந்து சொல்லுறம், அக்கா” என்றுவிட்டு தயக்கமாக அங்கிருந்து நழுவினார்கள். நெஞ்சு குமைந்துகொண்டிருந்தது அவளுக்கு. நிலத்திலறைந்து கத்தவேண்டும்போல் இருந்தது. கோபத்தின் உக்கிரம் கொளுந்து விட்டெரிந்தது.
‘பாவி! சொல்லச் சொல்ல கேளாமல் போனியே. வெளிக்கிடேக்கயே என்ர மனசு நல்லாயில்லை. என்னமோ நடக்கப்போறமாதிரி ஒரு கலக்கம் அடிவயித்தில. அதாலதான் போற வாற விஷயமொண்டும் கேக்கக்குடாதெண்டு சொல்லியிருந்தும் ஆத்தாமல் வந்து கேட்டன். ராவைக்கு நிண்டு காலமையெண்டான்ன போவெண்டும் சொல்லிப்பாத்தன். நாய்... கேக்கேல்லையே நீ. கைப்பிள்ளையையும் எடுக்கிக்கொண்டு இப்ப எங்கயெண்டு போய் நான் தேட? தலையைக் கொண்டுபோய் கவ்வு எண்டு குடுத்திட்டு, அடிவயித்தைத் தடவினாப்போல முதளை இனி விடவேபோகுது? முதளை கவ்விச்சுதோ, சிங்கம்தான் கவ்விச்சுதோ? வெளிநாட்டு ஆசையில இயக்கத்தைவிட்டு… ஆசைக்கெண்டில்லாம தேவைக்கு கலியாணத்தையும் கட்டி… குணா, இண்டைக்கு உன்ர கெதி இந்தமாதிரிப் போச்சேயடா! ஆரிட்டப் போய்ச் சொல்ல? என்ன செய்யிறதெண்டு ஆரைக் கேக்க? ஆரிருக்கினம் எனக்கு? வெளிநாடு பாக்க ஆசைப்பட்ட உனக்கு இப்ப எதைக் காட்டப் போறாங்களோ? நீதான் எல்லாம் பிளான் பண்ணினாய்… நீதான் எல்லாம் செய்தாய்… இனி நீயே உத்தரி. உனக்காக நான் அழவும்மாட்டன். அவசியமில்லாம ஓடிப்போய் நீ உன்னைத் துலைச்சிருக்கிறாய், நானேன் அழவேணும்?’
சாமம் வந்தது.
உக்கிரம் தணிந்தது.
அதிலிருந்து பிரிந்த இழைகளிலிருந்து துக்கத்தைப் பின்னியது காலம்.
வீட்டுக்குப் பின்னால் ஒரு இலுப்பை மரம் இருக்கிறது. அவளே இலுப்பைப்பூ பொறுக்கிய மரம்தான். பிள்ளை வயிற்றோடு குந்தியிருந்து ஒரு பெட்டி நிறையப் பொறுக்கி காயவைத்து புல்லி களைந்து பதப்படுத்திவைத்துச் சாப்பிட்டிருக்கிறாள். பிறகு இலுப்பைக் கொட்டையும் பொறுக்கியிருக்கிறாள். குழந்தை பிறந்த பிறகுதான் அதற்கெல்லாம் இயலாமல் போனது. அந்த மரத்தில்தான் வௌவால்கள் விழுந்துகொண்டிருந்தன. அவைக்கு ஒரு நேரமிருந்ததை சங்கவி கவனித்திருக்கிறாள். படபடவென ஹெலி பறந்து வந்த மாதிரியான சத்தமுடன் கூட்டமாய் மரத்தில் விழுந்து கத்தி தடல்புடல் பண்ணிவிட்டு, சிறிதுநேரத்திலேயே அங்கிருந்து திரும்பிப் போய்விடுகிற ஜீவராசி அது. கூட்டமாய் வரும். அதற்குமேல் இலுப்பை மரத்தில் நிசப்தம் நிறைந்துவிடும். கூட அயலிலும்.
அவற்றின் ஓசையைக்கொண்டு நடுச்சாமமாகிக்கொண்டிருப்பதை சங்கவி தெரிந்தாள்.
மேலேயும் அவளுக்கு குணாளன் பற்றிய நினைவே ஓடியது.
அவளது அம்மாகூட அப்படிப் பேசியதில்லை. அந்தப் பாஷையை அவள் எங்கே கற்றிருக்கக்கூடும்? மிக மோசமான வசவு வார்த்தைகளாக அவை இருந்தன. ஒருவரின் அவலமே அவரின் கூச்சநாச்சத்தையும் கொன்று புதைக்கிறது. அவலத்தின் மொழியது. இதயத்தின் உணர்வுகளை, உறவின் விழுமியங்களை அதுதான் கொல்கிறது. சங்கவிக்கு எவையெவை கொல்லப்பட்டிருக்கும் அதுவரை?
எல்லாமே.
அவளின் உள்ளுள்ளாய் ஓடிய பாஷையில் அது தெரிந்தது.
‘உன்ர கொம்மா கொப்பரை எனக்குத் தெரியா. தம்பி தங்கச்சியைத் தெரியா. அண்ணையும் அக்காவும் வெளிநாட்டில இருக்கிறதாய் முதல்ல சொன்னாய். பிரதீபனிட்ட விஷயமறிஞ்சு கேக்க, அவை பெரியையாவின்ர பிள்ளையளெண்டாய். பெரியையாவின்ர கொண்ணையும் கொக்காவும் வெளிநாட்டுக்குக் கூப்பிடேக்க நீ போயிருக்கலாமேயடா. நீ எதுக்காண்டியோ பறந்தடிச்சுத் திரிஞ்சாயெண்டு எனக்குத் தெரியும். இந்தப் பறந்தடிப்பில திரிஞ்சவையின்ர கதையள இயக்கத்தில இருக்கேக்கயே நான் அறிஞ்சிருக்கிறன். பொக்கிஷம் பதுக்கின கொஞ்சப்பேர் காணாமலே போயிருக்கினம். சில பொக்கிஷக் காவலாளியள் மண்டையில போட்டு செத்திருக்கினம். அப்பெல்லாம், எங்கட மண்ணில நல்லாய் உரம் விழுகிது எண்டு நான் நினைச்சன். அப்பிடி நினைக்க எனக்கு வலு சந்தோஷமாய் இருந்திது. நீயும் அந்தமாதிரி உரமாயிட்டியோ? இல்லாட்டி வதையளை அனுபவிச்சுக்கொண்டு இன்னும் உயிரோட இருக்கிறியோ? நீ என்ன ஆனாய், குணாளா? நிர்க்தியாய் நிக்கிறனே இப்ப. ஆனா ஒண்டு சொல்லுறன். நாளைக்குள்ள... இல்லை, நாளையிண்டைக்குள்ள... எங்கயாலும் குளக்கரையில, இல்லாட்டி பத்தைக்குள்ள உன்னை டம்ப் பண்ணிப் போட்டிருந்தா நீ புண்ணியஞ் செய்தவனெண்டு தயங்காமல் நான் சொல்லியிடுவன். அதுக்கு மேலயெண்டா, உன்னில பாவக் கணக்கு கனக்க இருக்ககெண்டுதான் நினைக்கவேணும்.
‘ஏன், நீ ஒண்டு செய்திருக்கலாமே, கொண்ணை கொக்காவிட்டைச் சொல்லி இயக்கத்துக்கு காசுகட்டி உன்னை மீட்கப் பண்ணியிருக்கலாமே மடையா? அப்பிடி நூறு நூறாய் இயக்கத்தாக்கள் ஆயுதத்தைப் போட்டிட்டு போனவைதான? ஏன், கொண்ணை கொக்காவிட்ட காசு இருக்கேல்லையோ? அப்பிடி போயிருந்தியெண்டா நான் தப்பியிருப்பனேயடா! ‘என்ரை வாழ்க்கை திசைமாறிப் போச்சு. இனி ஒண்டுஞ்செய்யேலாது. ஆனா வாழ்ந்திடுவன். வாழத்தான வேணும்? தோட்டம் செய்யலாம். தோட்டம் செய்தும் என்ன, அம்மா பிச்சையெடுத்துத்தான திரியுறா? இவனைத் தேடித் திரியவும் கையில காசில்லையே. நானென்ன செய்வன், கடவுளே. முத்தின ரண்டு குலையள் கிணற்றடி வாழையளில கிடக்கு. அதுகளை வெட்டி வித்தாத்தான் காசு. அந்தக் காசை வைச்சு அரிசி பருப்பு சீனியெண்டு வாங்குறதோ, உவனைத் தேட யாழ்ப்பாணம் போறதோ? போறதுக்கு வழியுமில்லையே இப்ப!’
மனம் கொஞ்சம் நிதானமடைய தாயாருக்கு அதுபற்றி சொல்லவேண்டுமென நினைத்துக்கொண்டாள். ‘அம்மா ஒண்டும் செய்யப்போறேல்ல. எப்ப வரப்போறா எண்டதும் தெரியா. எண்டாலும் சொல்லவேணும். அப்பதான் நானாச்சும் குணாவை தேடித் திரிய வசதியாயிருக்கும். இல்லாட்டி எங்கயெங்கயோ நானும் அலைஞ்சு திரியிறனெண்டு நெச்சிடப்போறா.’ எல்லாம் திட்டி, யோசித்து முடிந்து நேரத்தை யோசித்தாள். விடிய நேரமிருந்தது. இருள் இன்னும் திணிந்திருந்தது.
[தொடரும்]
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.