காடும், காட்டை அண்மித்த பிரதேசமும் கொண்ட அந்தச்சிங்களக் கிராமத்தில் ஒரு முதிய விவசாயியின் சிறிய குடும்பம். மனைவி இல்லை. இரண்டு மகள், ஒரு மகன். வானம்பார்த்த பூமி. குடிதண்ணீருக்கும் குளத்தை தேடிச்செல்லவேண்டும். குடும்பத்தின் ஏழ்மையை போக்குவதற்காக மகன் பண்டார இலங்கை இராணுவத்தில் சேர்ந்து உள்நாட்டுப் போர்க்களம் சென்றுவிடுகிறான். விடுதலைப்புலிகளின் ஈழப்போராட்டத்தில் ஒரு கண்ணிவெடித்தாக்குதலில் அவன் உடல் சிதறிச்செத்துவிட்டான் என்ற செய்தியுடன், அவனது உடல் மூடிய சவப்பெட்டியில் சீலிடப்பட்டு வருகிறது. அவனது தந்தையான முதியவர் வின்னிஹாமி க்கு கண்பார்வையும் மங்கல். தட்டுத்தடுமாறி, ஊன்றுகோலுடன் நடமாடும் அவருக்கு செவிப்புலன் கூர்மையானது. பறவைகளின் குரலும், குளத்தில் கும்மாளமிட்டு குளிக்கும் சிறுவர்களின் சிரிப்பொலியும் கேட்டு பரவசமடைபவர். ஒரு வாகனத்தில் சவப்பெட்டியை எடுத்துவந்து அந்த குடிசையில் ஒப்படைத்துவிட்டு விடைபெறும் இராணுவத்தினர், உடல் மிகவும் மோசமாக சிதறியிருக்கிறது. அதனால் திறக்கவேண்டாம் என்றும் வலியுறுத்துகின்றனர். இலங்கையின் தேசியக்கொடி போர்த்தப்பட்ட அந்த சவப்பெட்டியை பார்த்து சகோதரன் பண்டாரவை நினைத்து கதறி அழுகின்றனர் சகோதரிகள். தேசத்தை காக்கச்சென்றவன், சிதறுண்டு வருகிறானே என்ற சோகம் அக்கிராமத்தை சூழ்ந்துவிடுகிறது. குடும்பத்தலைவர் வின்னிஹாமி கண்ணீரே சிந்தாமல் திக்பிரமை பிடித்திருக்கிறார். அந்த சவப்பெட்டியை தடுமாற்றத்துடன் தடவிப்பார்க்கிறார். தேசியக்கொடிதான் அவரது மங்கிய கண்களுக்குத் தெரிகிறது. கிராமத்தின் பௌத்த பிக்கு மற்றும் கிராமத்துப்பாடசாலை ஆசிரியர், கிராம சேவகர் உட்பட பலரும் வந்து முதியவருக்கு ஆறுதல் சொல்கின்றனர்.
அந்தக் குடிசை அமைந்த நிலமும் கிராமசேவகரிடத்தில் ஈடுசெய்யப்பட்டு வட்டிக்கு கடன் பெறப்பட்டுள்ளது. கடனையும் அடைத்து தனது குடும்பத்திற்கென ஒரு கல்வீட்டையும் கட்டவேண்டும், தனது தங்கைக்கும் திருமணம் செய்துவைக்கவேண்டும் முதலான கனவுகளுடன் இராணுவப்பணிக்குச்சென்ற ஒரே மகன், போரிலே மடிந்து, சடலமாக – அதுவும் எவராலும் அவனது முகத்தைக்கூட பார்க்கமுடியாத நிலையில் திரும்பியிருக்கிறதா…? முதியவரான தந்தை வின்னிஹாமியால் ஜீரணித்துக்கொள்ளமுடியவில்லை! மழைவருகிறது. அந்தக்குடிசையின் கூரை ஒழுக்கிலிருந்து வடியும் மழைத்துளிகளும் சவப்பெட்டியை நனைப்பது கண்டு, அதனை சற்று நகர்த்தி நனையாத இடமாக பார்த்துவைக்கிறார்கள். இறுதி ஊர்வலத்தையடுத்து அந்தக்கிராமத்தில் அடக்கம் நடைபெறுகிறது. முதியவர் கைத்தடியுடன் தட்டுத்தடுமாறி அந்த புதைகுழியருகே சென்று மங்கிய பார்வையுடன் பார்த்துவருகிறார்.
ஒரு நாள் தபால் சேவகர் கொண்டுவந்து தரும் கடிதத்தை பண்டாரவின் தங்கை பெற்று வாசிக்கிறாள். அது அவன் அனுப்பிய கடிதம். அவனது பூதவுடல் எடுத்துவரப்பட்ட சவப்பெட்டி வந்தபின்னர் அது வந்து சேர்ந்திருப்பதும், அதில் அவனது கனவுகள் சொல்லப்பட்டிருப்பதும் கண்டு அவள் கதறி அழுகிறாள். அப்போதும் முதியவர் வெறித்த பார்வையுடன் திக்பிரமையுடன்தான் நிற்கிறார். ஒருநாள் கிராமசேவகர் வந்து, ஒரு படிவத்தை முதியவரிடம் கொடுத்து, போர்க்களத்தில் மடிந்த மகன் பண்டாரவின் குடும்பத்திற்கு அரசாங்கம் ஒரு இலட்சம் ரூபா உயிர் இழப்பீட்டு உதவித்தொகை வழங்கவிருப்பதாகவும், அதற்காக அந்தப்படிவத்தை பூரணப்படுத்தி ஒப்பமிட்டுத்தரவேண்டும் எனச்சொல்கிறார். முதியவருக்கு கண்பார்வை மங்கல். அத்துடன் கையெப்பமும் வைக்கத்தெரியாத கைநாட்டு. யாரிடமாவது சொல்லி படிவத்தை பூரணப்படுத்துமாறு கிராமசேவகர் வலியுறுத்துவதுடன், குறிப்பிட்ட ஒரு இலட்சம் ரூபா கிடைத்தால், தன்னிடம் அடவு வைத்திருக்கும் காணியுறுதியை வட்டியுடன் முதலும் செலுத்தி மீளப்பெறமுடியும் என்றும் ஆலோசனை சொல்லிச்செல்கிறார். ஆனால், முதியவர் வின்னிஹாமி அந்தப் படிவத்தை ஒரு ரங்குப்பெட்டியில் வைத்து மூடுகிறார். மகனுடைய சடலத்தை பார்க்காமல், அவரால் மகன் இறந்துவிட்டான் என்பதை ஊர்ஜிதப்படுத்த முடியவில்லை. மகன் பண்டார விடுமுறைகிடைத்ததும் வருவேன் என்று எழுதிய கடிதமும் நம்பிக்கையூட்டியமையால், அந்தப்படிவத்தின் மீது அவருக்கு அக்கறையில்லை.
அந்த ஒரு இலட்சம் ரூபா, அவரது மௌனமான தீர்மானத்தினால் கிடைப்பதில் தாமதம் நீடிப்பதனால், வீட்டில் இளைய மகளது திருமணம் தாமதிக்கிறது என்று அவளை திருமணம் செய்யவிருப்பவனும் நெருக்குதல் கொடுக்கிறான். அத்துடன் பாதியில் நிற்கும் வீட்டின் கட்டிட வேலைகளை தொடரமுடியவில்லை என்றும் வீட்டுக்குள்ளே முதியவர் மீது அதிருப்தி வருகிறது. கிராமசேவகருக்கோ, முதியவரின் பிடிவாதத்தால் தனக்கு வந்து சேரவேண்டிய முதலும் வட்டியும் தாமதிக்கிறதே என்ற கோபம்.
ஒரு நாள் மூத்த மகளின் கணவன் அந்த படிவத்தை பூரணப்படுத்தி முதியவரான மாமனாரிடம் கைநாட்டு வைக்குமாறு கேட்கின்றான். அவர் அதற்கும் மறுப்புத் தெரிவிக்கிறார். மகன் பண்டார நிச்சயம் திரும்பி வருவான் என்ற நம்பிக்கையில் தன்னிடமிருந்த சிறிய சேமிப்பில் சந்தைக்குச்சென்று அவனுக்காக ஒரு அழகிய ரீசேர்ட்டும் வாங்கி வந்து அந்த ரங்குப்பெட்டியில் வைக்கிறார். எனினும் அந்தக் குடிசை வீட்டில் முதியவரின் பிடிவாதத்தினால் அவர் மீது வெறுப்புத்தான் வளர்கிறது. மூன்று மாதங்கள் நகருகின்றன. இறந்த மகன் பண்டாரவின் ஞாபகார்த்தமாக தானம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. ஒருநாள் இரண்டு இராணுவ சிப்பாய்கள் வந்து, தங்களுக்குள் சேகரித்த பணத்தை குறிப்பிட்ட தானத்தின் செலவுகளுக்காக கொடுத்துச்செல்கின்றனர். அனைத்தையும் தனது கூர்மையான செவிப்புலனால் அவதானிக்கும் முதியவர் வின்னிஹாமி, தொடர்ந்தும் திக்பிரமையுடன் நடமாடுகிறார்.
ஒரு நாள் இரவு அவர் காணாமல்போகிறார். குடும்பத்தினரும் கிராமவாசிகளும் அந்த இரவில் தீப்பந்தங்களுடன் அவரைத்தேடிச்செல்கின்றனர். அவர் காட்டிலே மயங்கிச்சரிந்து கிடக்கிறார். அவரைத் தூக்கிவந்து மாந்திரீகரையும் அழைத்து வந்து, மந்திரம் ஓதி கழுத்தில் மந்திரித்த நூலும் கட்டப்படுகிறது. அவரும் ஒருநாள் அதிகாலை பொறுமை இழந்து மண்வெட்டியையும் எடுத்துக்கொண்டு தட்டுத்தடுமாறி மகன் பண்டார புதைக்கப்பட்ட இடத்திற்குச் சென்று, புதைகுழியை தோண்டுகிறார்.
சிலரால் வெட்டப்பட்ட அந்தப்புதைகுழியை தன்னந்தனியனாக தோண்டுகிறார். அருகிலிருக்கும் குளத்திற்கு தண்ணீர் எடுக்கவந்த ஒரு பெண் இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்து, தண்ணீர்க்குடத்தையும் தரையில் போட்டுவிட்டு கிராமத்துக்குள் தகவல் சொல்ல ஓடுகிறாள். முதியவரின் மகள்மார், மருமகன், குழந்தை உட்பட பலரும் அங்கே ஓடிவருகின்றனர். அதற்குள் முதியவர் புதைகுழியை முற்றாகத்தோண்டிவிடுகிறார். “ என்ன காரியம் செய்கிறீர்கள்…. “ எனச்சொல்லும் மக்களில் ஒரு சிலர் குழியிலிருந்து அந்த சவப்பெட்டியை வெளியே எடுக்க உதவுகின்றனர். குழந்தைகளை அங்கிருந்து அப்புறப்படுத்தவும் முயற்சிக்கின்றனர். சவப்பெட்டி திறக்கப்படும்போது, போரிலே கொல்லப்பட்ட பண்டாரவின் சகோதரிமார் கதறி அழுகின்றனர்.
சவப்பெட்டி திறக்கப்படுகிறது. அனைவரும் உள்ளே இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைகின்றனர். முதியவர் வின்னிஹாமி, சவப்பெட்டியினுள்ளே கைகளால் துலாவுகிறார். அங்கே இரண்டு நீளமான வாழைக்குற்றிகளும் பருமனான கருங்கற்களும் கிடக்கின்றன. அவர் அவற்றை நன்கு தடவிப்பார்த்துவிட்டு, வீட்டிலிருந்து எடுத்து வந்த மண்வெட்டியுடன் திரும்பியும் பார்க்காமல் செல்கிறார். கிராமவாசிகள் மீண்டும் அந்த சவப்பெட்டியை புதைகுழியில் வைத்து மண்போட்டு மூடுகின்றனர்.
பண்டாரவின் மரணத்திற்காக அரசாங்கம் வழங்கவிருக்கும் ஒரு இலட்சம் ரூபாவுக்கான விண்ணப்ப படிவத்தை கொடுத்துவிட்டு அதனை பூரணப்படுத்தி முதியவரின் கைநாட்டுடன் பெறுவதற்காக பல தடவை அலைந்த அந்த கிராமசேவகர் தனது ஸ்கூட்டரில் வந்து இக்காட்சியை பார்த்துவிட்டு, தன்னைக்கடந்து செல்லும் முதியவர் வின்னிஹாமியையும் பார்க்கிறார். வின்னிஹாமி, குளத்திற்கு தனது தண்ணீர் குடுவை சகிதம் சென்று தண்ணீர் நிரப்புகிறார். பறவைகளின் ஒலி அவருக்கு ரீங்காரம் இசைக்கிறது. குளத்தில் சிறுவர்கள் கும்மாளமிட்டு சிரித்து விளையாடுவதும் அவருக்கு கேட்கிறது. மேகங்கள் சூழ்கொண்டு வானமும் இருண்டு மழை பொழிகிறது. முதியவரின் முகம் புன்னகையுடன் பிரகாசிக்கிறது.
இலங்கை சிங்கள சினிமாவின் முன்னணி இயக்குநர் பிரசன்ன விதானகேயின் புரஹந்த களுவர ( Pura Handa Kaluwar ) - Death On A Full Moon Day என்ற திரைப்படத்தின் கதையைதான் இதுவரையில் படித்தீர்கள்.
இந்தத் திரைப்படம் 1997 ஆம் ஆண்டு இலங்கையில் திரைக்கு வந்து சில நாட்களில் அன்றைய இலங்கை அரசின் – குறிப்பாக பாதுகாப்பு அமைச்சின் அழுத்தத்தினால், திரையரங்குகளிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டது.அப்பொழுது நாட்டின் அதிபராக இருந்தவர் சந்திரிக்கா விஜயகுமாரணதுங்க. இவரது கணவர் விஜயகுமாரணதுங்கவும் இலங்கையில் புகழ்பெற்ற சிங்கள சினிமா கலைஞர். இவரது முன்னாள் காதலி மாலினி பொன்சேக்காவின் தங்கை தமயந்தி பொன்சேக்காவின் கணவர்தான் இயக்குநர் பிரசன்ன விதானகே. உறவுகள் எப்படி இருந்தாலும், நாட்டின் அதிபர் என்ற முறையிலும் பாதுகாப்பு அமைச்சினையும் தனது வசம் வைத்திருந்தவர் என்பதனாலும் புரஹந்த களுவர ( Pura Handa Kaluwar ) - Death On A Full Moon Day அவரது உத்தரவுக்கு அமைய திரையரங்குகளிலிருந்து ஏன் அகற்றப்பட்டது என்பது புரிந்துகொள்ளத்தக்கதே!
பிரசன்ன விதானகே 1962 ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் இலங்கை சினிமா உலகின் மூன்றாவது தலைமுறையைச்சேர்ந்தவர். August Sun (2003), Flowers of the Sky (2008) With You, Without You (2012) முதலான குறிப்பிடத்தகுந்த திரைப்படங்களையும் இயக்கியிருப்பவர். மாலினிபொன்சேக்கா நடித்த ஆகாச குசும் ( ஆகாயத்தாமரை ) திரைப்படத்தையும் இயக்கியவர். இதுவும் ஒரு தரமான திரைப்படம். அத்துடன் மேலைத்தேய நாடகங்களையும் மொழிபெயர்த்திருக்கிறார். திரைத்துறையில் உள்நாட்டின் விருதுகள் பலவற்றையும் சர்வதேச விருதுகளையும் பெற்றவர்.
இலங்கையில் நீடித்திருக்கும் இனப்பிரச்சினையால் சுமார் முப்பது ஆண்டுகாலம் தொடர்ந்த ( 1979 – 2009 ) உள்நாட்டுப்போரினால் மூவின மக்களும் பாதிக்கப்பட்டார்கள். “ தேசத்தை காப்பாற்ற முன்வாருங்கள் “ என்று சிங்கள ஆட்சியாளர்களும் பௌத்த பிக்குகளும் கிராமப்புற சிங்கள இளைஞர்களை இராணுவத்திற்கு அழைத்தபோது, வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் விடுதலை இயக்கங்கள், “ தமிழ் ஈழத்தை வென்றெடுக்க வீட்டுக்கு ஒரு இளைஞர் - யுவதியை தாருங்கள் “ என்று ஆளணிப்பலத்தை சேகரித்தன. கிராமப்புற சிங்கள இளைஞர்கள் தங்கள் குடும்பத்தின் வறுமையை போக்குவதற்காக இராணுவத்தில் சேர்ந்தனர். தமிழ் இளைஞர் - யுவதிகள் சம்பளம், சன்மானம் எதிர்பார்க்காமலேயே வித்தாயினர். இந்தப்பின்னணியில் பெரும்பான்மை சிங்கள மக்கள் மத்தியில் திரைமொழியால் விழிப்புணர்வை உருவாக்க முயன்ற இயக்குநர் பிரசன்ன விதானகே, பேசாப்பொருளை பேசத்துணிந்தவராகவே கருதப்படுகிறார்.
புரஹந்த களுவர திரைப்படத்தில் பிரதான பாத்திரம் வின்னிஹாமியாக நடித்த கலைஞர் ஜோ அபேவிக்கிரம ( 1927 – 2011 ) இலங்கை சிங்கள சினிமாவில் புகழ்பெற்ற தேர்ந்த நடிகர். இதில் அவரது இயல்பான நடிப்பு அபாரம். பார்வையாளரை நெகிழச்செய்கிறது. ஆரம்பத்தில் நகைச்சுவை நடிகராகவே பிரபல்யம் அடைந்திருந்த ஜோ அபேவிக்கிரம, பின்னர் சிறந்த குணச்சித்திர நடிகராக மிளிர்ந்தவர். பல தடவை சரசவிய விருதுகளும் சர்வதேச விருதுகளும் பெற்றவர். 1957 ஆம் ஆண்டு சிங்கள சினிமா உலகில் பிரவேசித்த ஜோ அபேவிக்கிரம மறையும் வரையில் ஏராளமான படங்களில் நடித்திருப்பவர். சில சிங்களப்படங்களில் தமிழ் பாத்திரம் ஏற்றிருந்தவர். இவர் 2011 இல் மறைந்த பின்னரும் ஏற்கனவே இவர் நடித்திருந்த சில சிங்களப் படங்கள் திரைக்கு வந்தன. புரஹந்த களுவர திரைப்படத்தில் ஜோ அபேவிக்கிரம பேசும் வசனங்கள், எழுத்தில் இரண்டு பக்கங்களையும் தாண்டாது. இத்திரைப்படத்தின் முழு வசனப்பிரதியையும் விரல்விட்டு எண்ணிவிடமுடியும். சினிமாவின் மொழி எப்படி இருக்கவேண்டும் என்பதை இலங்கையில் உணர்த்திய மற்றும் ஒரு குறிப்பிடத்தகுந்த இயக்குநர்தான் பிரசன்ன விதானகே.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.