”கிழக்கு வானில் சூரியன் தங்கப்பாளமாக ஜொலித்தபடி உதயமாகிக்கொண்டிருந்தான். சூரியோதயத்தை நான் முன்னர் கடற்கரையோரங்களில் நின்று பார்த்துக் களித்திருக்கிறேன். ஆனால், உயரத்தில், பறந்துகொண்டிருக்கும் விமானத்திலிருந்து, புதிய கோணத்தில் வெண்பஞ்சுக் கூட்டங்களாக மிதந்துகொண்டிருக்கும் மேகங்களினூடாக அந்த அழகிய காட்சியைப்பார்த்தபோது நான் மெய்மறந்துபோனேன். ஆதவனின் ஒளிப்பிழம்புகள் கணத்துக்குக்கணம் புதிது புதிதாய் கொள்ளை அழகை அள்ளித் தெளித்துக்கொண்டிருந்தன.”

இலங்கையிலிருந்து சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் வானத்தில் பறந்து வரும்பொழுது அவுஸ்திரேலியா சிட்னியில் இறங்கும் தருணத்தில் விமானம் தரைதட்டுவதற்கு முன்னர் அந்த அதிகாலைப்பொழுதின் உள்ளங்கவர் காட்சியை தரிசித்த இலக்கியப்படைப்பாளி ஞானசேகரனின் அன்றைய வர்ணிப்புத்தான் அந்த சூரிய உதயக்காட்சி. அன்று காலை அவருக்கு அவுஸ்திரேலியாவில் விடிந்தது. அன்றைய அவரது வருகையே பின்னாளில் இலக்கியவானில் ஞானம் கலை, இலக்கிய மாத இதழின் பரிமாணத்துடன் அவருக்கு பேருதயமாகியது என்பதற்கு ஒரு நேரடி சாட்சியாகி, இன்று ஏப்ரில் 15 ஆம் திகதி தமது எண்பது வயது பிறந்த தினத்தை கொண்டாடும் ஞானம் ஆசிரியர் தி. ஞானசேகரன் அவர்களை வாழ்த்துகின்றேன்.

இலங்கையில் 1999 வரையில் நான் இவரை சந்தித்திருக்கவில்லை. 1999 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் சிட்னியில் வதியும் தமது புதல்வரிடம் இவர் தமது துணைவியாருடன் புறப்படுவதற்கு முன்னர் மல்லிகை ஜீவாவிடம் எனது தொடர்பிலக்கம் பெற்றுள்ளார். ஒருநாள் சிட்னியிலிருந்து ஞானசேகரன் தொலைபேசியில் அழைத்தபோது, மெல்பனுக்கு அழைத்தேன். எமது இல்லத்தில் ஒரு மாலைவேளையில் இலக்கியச்சந்திப்பும் இரவு இராப்போசன விருந்தும் ஒழுங்குசெய்தபொழுது , மெல்பன் இலக்கிய ஆர்வலர்கள் செல்வத்துரை ரவீந்திரன் , டாக்டர் சத்தியநாதன், நடேசன், புவனா ராஜரட்ணம், அருண். விஜயராணி, பாடும்மீன் சிறிகந்தராசா ஆகியோர் கலந்துகொண்டனர். மெல்பனில் பாலம் லக்ஷ்மணன் அவர்களின் இல்லத்திற்கும் மாவை நித்தியானந்தனின் பாரதி பள்ளிக்கும் வேறு சில இடங்களுக்கும் அழைத்துச்சென்றேன். காரில் அமர்ந்தவாறே குறிப்புகள் எடுத்துக்கொண்டார். பயணக்கதைக்கு அவர் தயாராகிவிட்டார். இலங்கை திரும்பியதும் தினக்குரல் வார இதழில் அவுஸ்திரேலியப்பயணக்கதையை சில வாரங்கள் தொடர்ந்து எழுதி – இறுதியில் அந்தத்தொடரையே நூலாக்கினார். பேராசிரியர் சி. தில்லைநாதனின் அணிந்துரையுடனும் எனது முன்னுரையுடனும் அந்த நூல் வெளியாகியது. அவ்வேளையில் ஞானசேகரன் தமது மருத்துவப்பணி நிமித்தம் கண்டியில் வசித்தார். கண்டி முகவரியிலிருந்து ஞானம் பதிப்பகத்தினால் 1999 மார்கழியில் அந்த நூல் வெளியானது. அவுஸ்திரேலியா வந்தவர், இந்தக்கங்காரு நாட்டைப்பற்றி மாத்திரம் தகவல் சேகரிக்கவில்லை. இங்கிருந்த எஸ்.பொ, மாத்தளை சோமு, முருகபூபதி, அருண் . விஜயராணி முதலான படைப்பாளிகள், நாடகக்கலைஞர் சி. மனோகரன் ஆகியோருடனான நேர்காணலையும் பதிவுசெய்துகொண்டு, சிட்னியில் 24 மணிநேரமும் ஒலிபரப்பாகும் இன்பத்தமிழ் வானொலி இயக்குநர் பாலசிங்கம் பிரபாகரனுக்கும் நேர்காணல் வழங்கிவிட்டு தாயகம் திரும்பினார்.

ஞானசேகரன் சந்தித்தவர்களுடனான நேர்காணல் தொகுப்பும், வானொலிக்கு அவர் வழங்கிய பேட்டியும் இணைந்த புரிதலும் பகிர்தலும் என்ற நுலையும் அதே 1999 ஆம் ஆண்டு மார்கழியில் வெளியிட்டார். மீண்டும் 2000 ஆம் ஆண்டு மெல்பனுக்கு ஞானசேகரன் தம்பதியர் வரும்பொழுது குறிப்பிட்ட இரண்டு நூல்களுடனும் திருமதி ஞானம் ஞானசேகரன் எழுதிய இந்துமதம் என்ன சொல்கிறது ? என்ற நூலுடனும் வந்தனர். மெல்பனில் மாவை நித்தியானந்தன் தலைமையில் அறிமுக நிகழ்வு நடந்தபொழுது, நித்தியகீர்த்தி, சிவசம்பு, பாலம்லக்ஷ்மணன், அருண். விஜயராணி ஆகியோர் உரையாற்றினர். இந்நிகழ்வில் இவர்களுடைய நூல் விற்பனையில் கிடைத்த நிதி யாவற்றையும் எமது இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் வளர்ச்சிக்கே தந்துவிட்டு விடைபெற்றனர். அன்று அந்த நிகழ்ச்சியில் பங்குபற்றிய நித்தியகீர்த்தியும் அருண். விஜயராணியும் இன்று எம்மத்தியில் இல்லை. அத்துடன் மூத்த எழுத்தாளர் எஸ்.பொ.வும் தமிழ் ஆர்வலர் மருத்துவர் பொன். சத்தியநாதனும் இல்லை.  காலம் அவர்களை அழைத்துக்கொண்டது. அவுஸ்திரேலியாவில் ஞானசேகரனின் வருகை இலக்கியப்புத்துணர்ச்சிக்கும் வழிகோலியது.

1999 இல் முதல் முறை பயணத்தில் விமானத்தில் அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்த ஞானசேகரனுக்கு சூரிய உதயத்தின் ரம்மியத்தை காண்பிக்க தட்டி எழுப்பிய துணைவியார் திருமதி ஞானம் ஞானசேகரன், தொடர்ந்தும் பக்கத்துணையாக இருந்து இன்று ஞானம் என்ற இலக்கிய இதழ் உதயமாகி உலகை வலம்வருவதற்கு உற்றதுணையாக விளங்குகிறார். அத்துடன் இவர்களின் செல்வப்புதல்வன் பாலச்சந்திரனும் ஞானம் வெளியீட்டில் முக்கிய பங்காற்றுகிறார். தமிழ்நாடு சுபமங்களா இதழ், அதன் ஆசிரியர் கோமல்சாமிநாதனின் மறைவுடன் நின்றது. இலங்கையில் சிற்பி சரவணபவனின் கலைச்செல்வியும் செல்வராஜாவின் அஞ்சலியும், ஈழவாணனின் அக்னியும், வரதரின் சில இதழ்களும், ரகுமானின் இளம்பிறையும், இளங்கீரனின் மரகதமும், டொமினிக்ஜீவாவின் மல்லிகையும் ஆயுளை நிறுத்திக்கொண்டன. ஆனால், ஞானம் இதழுக்கு அத்தகைய துர்ப்பாக்கியம் நேர்ந்துவிடாது என்பதற்கு ஞானசேகரனின் அருமைப்புதல்வன் பாலச்சந்திரன், ஞானம் இதழை முன்னின்று நடத்துவார் என்ற நம்பிக்கை ஒளிக்கீற்று தென்படுகிறது!

2001 ஆம் ஆண்டு மெல்பனில் ஜனவரி மாதம் முதலாவது அவுஸ்திரேலியா தமிழ் எழுத்தாளர் விழாவை இரண்டு நாட்கள் நாம் நடத்தியபொழுது மல்லிகை அவுஸ்திரேலியா சிறப்பு மலரும் வெளியிட்டோம். 1999 இல் மல்லிகைஜீவாவிடம் தொடர்பிலக்கம் பெற்று வந்த ஞானசேகரன் தம்பதியர் 2001 ஆம் ஆண்டு முதல் தமிழ் எழுத்தாளர் விழாவில் பிரதம அதிதிகளாக கலந்துகொண்டனர். அன்றைய விழாவில் மல்லிகை சிறப்பு மலரை வெளியிட்டுவைத்து உரையாற்றியவர் ஞானசேகரன். அதற்கு முன்னர் 2000 ஆம் ஆண்டே ஞானசேகரன் கண்டியிலிருந்து ஞானம் இதழை வெளியிடத்தொடங்கிவிட்டார். 2004 ஆம் ஆண்டு எமது எழுத்தாளர் விழா கன்பராவில் நடந்தபொழுது அங்கும் வருகை தந்து ஞானம் அவுஸ்திரேலியா சிறப்பிதழை வெளியிட்டார். அவுஸ்திரேலியாவுக்கு அவர் வந்த காலம் தொடக்கம் எமது வருடாந்த எழுத்தாளர் விழாவை வரவேற்று ஞானம் இதழ்களில் ஆசிரிய தலையங்கங்களும் எழுதியிருக்கிறார். மெல்பன், கன்பரா, சிட்னி எழுத்தாளர் விழாக்களில் மாத்திரம் அல்லாது, எஸ்.பொ.வின் மகன் டொக்டர் அநுராவில் ஏற்பாட்டில் 28-08-2004 ஆம் திகதி சிட்னியில் நடந்த கவிஞர் அம்பியின் பவளவிழாவிலும் மித்ர வெளியீடுகளின் அறிமுகநிகழ்விலும் கலந்துகொண்டு உரையாற்றிய ஞானசேகரன், அவுஸ்திரேலியாவில் பரவலான இலக்கிய நண்பர்கள் வட்டத்தை உருவாக்கினார். நண்பர்கள் பிறப்பதில்லை. உருவாக்கப்படுபவர்கள். அத்தகைய நட்புவட்டம் ஆரோக்கியமாக வளர்வதற்கும் சீர்கெட்டுப்போவதற்கும் விதியும் விளையாட்டுக்காண்பிக்கும்.

எமது எழுத்தாளர் விழாக்களின் கருத்தரங்குகள் சிலவற்றுக்கும் ஞானசேகரன் தலைமையேற்றார். அவுஸ்திரேலியா படைப்பாளிகள் எஸ்.பொ, ஆசி. கந்தராஜா, நடேசன், முருகபூபதி, சுதாகரன், ஆவூரான் சந்திரன், அருண். விஜயராணி, பாடும் மீன் சிறிகந்தராசா, கலைவளன் சிசு.நாகேந்திரன் , ஜெயராம சர்மா, நித்தியகீர்த்தி, சாந்தினி புவநேந்திரராஜா நல்லைக்குமரன் குமாரசாமி, எஸ். கிருஷ்ணமூர்த்தி, தேவகி கருணாகரன், கார்த்திகா கணேசர், முதலானோரின் படைப்புகளுக்கும் ஞானம் இதழில் களம் தந்தார். எஸ்.பொ.வின் நீண்ட நேர்காணல் தொடரும் வெளியானது. நித்தியகீர்த்தியின் சிறுகதைக்கு முத்திரைக்கதை அந்தஸ்து கிடைத்தது. எம்மவர் சிலரின் சிறுகதைகள் ஞானம் இதழ் ஊடாக நடத்தப்பட்ட சிறுகதைப்போட்டிகளில் பரிசில் பெற்றன. எஸ்.பொ. , கவிஞர் அம்பி, பாலம் லக்ஷ்மணன், முருகபூபதி, பாடும் மீன் சிறிகந்தராசா, ஓவியர் ஞானம் ஞானசேகரம், ஜெயராமசர்மா, கலைவளன் சிசு.நாகேந்திரன் ஆகியோர் ஞானம் அட்டைப்பட அதிதி அந்தஸ்து பெற்றனர். அவுஸ்திரேலியா கலை, இலக்கிய நிகழ்வுகள் ஞானம் இதழ்களில் பதிவாகின. இத்தகைய நீடித்த தொடர்பாடலின் ஒரு முக்கிய சந்தியாக விளங்கியதுதான் ஞானசேகரனை இணைப்பாளராக்கிய இலங்கையில் 2011 ஜனவரியில் நடத்தப்பட்ட முதலாவது சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு.

இலங்கையின் வடபுலத்தில் புன்னாலைக்கட்டுவன் என்ற அழகிய கிராமத்தில் ஆலயக்குருக்களாக விளங்கிய தியாகராசா அய்யர், பாலாம்பிகை ஆகியோரின் புதல்வனாக 1941 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் 15 ஆம் திகதி பிறந்தவர் ஞானசேகரன். தந்தையோ ஆலயத்தில் குரு. பூட்டனார் கணேசய்யர் தொல்காப்பியத்திற்கு விளக்கவுரை எழுதிய வித்துவ சிரோன்மணி. கதாப்பிரசங்கம் புகழ் மணி அய்யர் சுவாமிநாதத்தம்பிரான் தாய் மாமனார். கணேசய்யர் பற்றி இரசிகமணி கனகசெந்திநாதன் தமது ஈழத்து இலக்கிய வளர்ச்சி நூலில் குறிப்பிட்டுள்ளார். சுவாமிநாத தம்பிரான்தான் இலங்கையில் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் உருவச்சிலைக்கு மொடலாக இருந்தவர். இந்தப்பின்னணியிலிருந்து வருகைதந்த ஞானசேகரன், அந்தப்பரம்பரையின் குலமுறை ஆலயத்தொண்டிற்குச்செல்லாமல், தனது பெயருக்குப் பின்னால் அய்யர் என பதிவுசெய்துகொள்ளாமல், மருத்துவம் பயின்றார். இலக்கியம் படித்தார். படைத்தார். இதழாசிரியரானார். பொதுவாக பிராமணர் சமூகத்திலிருந்து வருபவர்கள் தந்தைக்குப்பின் தனயன் என்பதுபோன்று தர்ப்பையும் மணியுமாக வாழ்ந்து சோதிட நூல்களையே ஆய்வுசெய்வர். ஆனால் , அவர்களின் பரம்பரையிலிருந்து வேறு திசையில் சமூகப்பிரக்ஞையுடன் சாதாரண மக்களுக்காக , அவர்களின் எளிய குரலுக்காக உழைத்தவர்கள் சிலரைப்பற்றி எமது தமிழ் இலக்கியஉலகம் இன்றும் பேசிக்கொண்டிருக்கிறது. அத்தகைய மானுடநேசர்களின் வரிசையில் வந்தவர் மருத்துவர் தி. ஞானசேகரன். இந்திராபார்த்தசாரதி அன்று தஞ்சை கீழ்வெண்மணியில் நிகழ்ந்த படுகொலையை பின்புலமாகக்கொண்டு குருதிப்புனல் எழுதினார். எங்கள் ஞானசேகரன் இலங்கை மலையகத்தில் உரிமைக்குக்குரல் கொடுத்தமைக்காக கொல்லப்பட்ட சிவனு லட்சுமணன் என்ற தொழிலாளியின் சரிதையை குருதிமலையாகத்தந்தார்.

1960 களில் சிற்பி சரவணபவன் நடத்திய கலைச்செல்வி இதழில் தமது முதலாவது சிறுகதையை எழுதுவதற்கு முன்பே தமிழ்நாட்டிலிருந்து வெளியான கண்ணன் சிறுவர் இலக்கிய இதழில் எழுதத்தொடங்கியவர்தான் மாணவப்பராயத்து ஞானசேகரன். இவருடைய முதல் சிறுகதைத்தொகுதி காலதரிசனம் வெளிவந்த 1973 காலத்திற்கு முன்னர் அவ்வப்பொழுது இவரின் படைப்புகளை படித்திருந்தாலும் , நேரில் சந்திக்க எனக்கு சந்தர்ப்பம் கிடைத்திருக்கவில்லை.

இவர் மலையகத்தில் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் மருத்துவசேவை செய்யும் இலக்கியவாதி என்பதைத் தவிர வேறு எதுவும் தெரியாது. இவரை நான் அக்காலப்பகுதியில் மாத்திரமல்ல அவுஸ்திரேலியாவுக்கு நான் வரும்வரையில் கூட நேரில் பார்த்திருக்கவில்லை. காலதரிசனம் சிறுகதைத்தொகுதிக்கு கைலாசபதி முன்னுரை வழங்கியிருந்தார். ஞானசேகரனும் சிறுகதைப்போட்டிகளுக்கு கதை எழுதும் எழுத்தாளராக விளங்கியவர். தொடக்க காலத்திலேயே பல போட்டிகளில் வெள்ளிப்பதக்கம் உட்பட பல பரிசுகளை வென்றவர். தொடர்ந்து சிறுகதைகள் எழுதிய ஞானசேகரன், போட்டிகளுக்கு எழுதிப்பழகிய மனப்பான்மையில் மற்றும் ஒரு போட்டிக்காக எழுதிய நாவல்தான் புதியசுவடுகள். வீரகேசரி பிரசுர நாவல் போட்டிக்குச்சென்று அந்தப்பிரசுர வெளியீடாகவே வந்தது. போட்டியில் பரிசுபெறாத இந்நாவல் 1977 இல் தேசிய சாகித்திய விருதை வென்றது ஒரு வியப்பு. அந்த ஊக்கம் அவரை மற்றும் ஒரு நாவலையும் எழுதத்தூண்டியிருக்கிறது. இலங்கையில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சிக்காலத்தில் மலையகத்தோட்டங்கள் தேசிய உடைமையாக்கப்பட்டபொழுது நடந்த போராட்டத்தில் சிவனு லெட்சுமணன் என்ற தொழிலாளி சுடப்பட்டு இறந்தார். அந்தச்சம்பவத்தின் பின்னணியில் ஞானசேகரன் எழுதிய நவீனம்தான் குருதிமலை. இந்நாவல் ஸ்ரீமாவோ அரசை விமர்சித்து, ஜே.ஆர். அரசின் தேசிய சாகித்திய விருதை 1979 இல் பெற்றுக்கொண்டது மற்றும் ஒரு வியப்பு. அத்துடன் தமிழ்க்கதைஞர் வட்டத்தின் பரிசையும் வரவாக்கிக்கொண்டது.

அதன்பின்னர் வெளியான இவருடைய அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும் என்ற சிறுகதைத்தொகுதி மல்லிகைப்பந்தல் வெளியீடாக 1998 இல் வெளியானது. இதில் என்ன வேடிக்கை என்றால், ஞானசேகரனின் எந்தவொரு சிறுகதையும் மல்லிகையில் வெளிவந்திருக்கவில்லை. அத்தகைய சூழ்நிலையில் இவரின் கதைத்தொகுப்பு மல்லிகைப்பந்தலில் வெளியானது வியப்பே. இத்தொகுப்பு பின்னாளில் இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் ஒரு பாட நூலாக பயன்படுத்தப்படுகிறது. வடபுலத்தின் புன்னாலைக்கட்டுவன் வாசி , மலையகத்திற்கு பணிநிமித்தம் சென்றதனால் அம்மக்களின் வாழ்க்கை முறைகளையும் பண்பாட்டுக்கோலங்களையும் பேச்சுவழக்கையும் கிரகித்துக்கொண்டார். அதன் பயன்தான் இலக்கிய உலகிற்கு கிட்டிய வரவுகள். குருதிமலை (1979) லயத்துச்சிறைகள் ( 1994) கவ்வாத்து ( 1996). குருதிமலை மதுரை அமெரிக்கன் கல்லூரியில் எம். ஏ. பட்டப்படிப்பிற்கு ஒரு பாட நூலாகத்தெரிவாகியிருக்கிறது. இந்நாவல் சிங்கள மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. லயத்துச்சிறைகள் சிறந்த நாவலுக்கான மத்திய மாகாண கலாசார அமைச்சின் சாகித்திய விருதையும் இலங்கை இலக்கியப்பேரவையின் சிறந்த நாவலுக்கான சான்றிதழையும் பெற்றது. கவ்வாத்து இலங்கை தேசிய கலை இலக்கியப்பேரவையும் தமிழ்நாடு சுபமங்களா இதழும் இணைந்து நடத்திய குறுநாவல் போட்டியில் பரிசுபெற்றது. அத்துடன், விபவி கலாசார மையத்தின் தங்கச்சங்கு விருதினையும் வென்று 1997 இல் மத்திய மாகாண சாகித்திய விருதையும் பெற்றுக்கொண்டது.

முதல் நாவல் புதிய சுவடுகள் வடபுலத்தில் நீடித்திருந்த சாதிப்பிரச்சினைகளைப் பேசியது. அதன்பின்னர் மலையகப்பின்னணியில் ஞானசேகரன் எழுதிய நாவல்களும் குறுநாவலும் மலையக மக்களின் துயரத்தை பதிவுசெய்தன. இவருடைய சிறுகதையொன்று தெளிவத்தை ஜோசப் தொகுத்து துரைவி வெளியீடாக வந்த மலையக கதைத்தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. எரிமலை நாவல் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையையும் அதன்விளைவாக எழுந்த பாரிய அரசியல் நெருக்கடிகளையும், தொடரும் இனமுரண்பாட்டையும் பேசுகிறது.

சிறுகதையில் தொடங்கி நாவல்கள், குறுநாவல் எழுதிய ஞானசேகரன், அவுஸ்திரேலிய விஜயத்தை பயண இலக்கியமாக்கியவாறே ஒரு நேர்காணல் தொகுப்பையும் வரவாக்கிவிட்டு, ஞானம் இதழில் தனது முழுநேரத்தையும் அர்ப்பணித்துக்கொண்டார். அதனால் ஞானம் இதழுக்குப்பெருமை. ஞானம் வாசகர்களுக்கு பயன். அதில் எழுதும் படைப்பாளிகளுக்கு களம். ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு மற்றும் ஒரு இலக்கிய இதழ் ஆசிரியர் கிடைத்துள்ளார் என்ற பெருமிதம். ஞானம் ஆசிரியரின் அடுத்த கட்டம் பயண இலக்கியமாகத் தொடர்கிறது. ஞானம் இதழ் இதுவரையில் வரவாக்கிய ஆண்டு மலர்கள், போர்க்கால சிறப்பிதழ், புகலிடச்சிறப்பிதழ் குறித்தெல்லாம் தனியாக ஆராயப்பட்டுள்ளன. கனடாவில் வதியும் எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அவர்களின் படைப்பாளுமையை பதிவேற்றிய சிறப்பிதழும் வெளியிட்ட ஞானசேகரன், இந்த கொரோனோ காலத்தில் மறைந்த மல்லிகை ஜீவாவை நினவுகூர்ந்து நீண்டதோர் ஆசிரியத் தலையங்கம் எழுதி ஞானம் இதழ் ஊடாக அன்னாருக்கு அஞ்சலியும் செலுத்தினார். எமது மூத்த எழுத்தாளர், இலக்கியவாதி, பதிப்பாளர், ஞானம் ஆசிரியர் தி. ஞானசேகரன் அவர்களுக்கு எமது மனமார்ந்த பிறந்த தின வாழ்த்துக்கள்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com