- பதிவுகள் இணைய இதழில் வெளியான 'எழுத்தாளர் மு.தளையசிங்கம் பற்றிய கருத்தரங்கும், மல்லிகை ஆசிரியர் மீதான குற்றச்சாட்டும் பற்றி.. - வ.ந.கிரிதரன் -' என்னும் கட்டுரைக்கான எழுத்தாளர் முருகபூபதியின் எதிர்வினை - பதிவுகள் -
ஒரு நகரத்தில் ஓவியக்கண்காட்சி நடைபெற்றது. சிறந்த ஓவியங்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. ஓவியங்களை பரிசுக்குத் தெரிவுசெய்வதற்காக புள்ளிகள் இடும் நடுவர்களும் அங்கு குழுமியிருந்தார்கள். அந்த நடுவர்களில் நீதிபதிகள், கல்விமான்கள், அறிஞர்கள், ஓவியர்கள், கலைஞர்களும் இடம்பெற்றிருந்தனர். ஒரு அழகிய பெண்ணின் ஓவியம் முதல்பரிசுக்குத் தெரிவாகியிருந்தது. அக்கண்காட்சி நடக்கும் வீதியில் செருப்பு தைக்கும் செங்கோடன் என்பவனும், அதனை பார்த்து ரசிக்க அங்கே வந்தான்.
முதல்பரிசுக்குத் தெரிவான பெண்ணின் ஓவியத்தை கூர்ந்து பார்த்தான். அந்தப்பெண்ணின் பாதத்திற்கு ஏற்ப அணியப்பட்ட செருப்பின் வடிவம் ஓவியத்திற்கு பொருத்தமில்லாமல் இருந்ததை கண்டான். தான் கண்டுபிடித்த தவறை அங்கிருந்த நடுவர்களிடம் சொல்லி, இந்த ஓவியம் பரிசுக்கு தகுதியானது அல்ல என்று சுட்டிக்காண்பித்தான்.
அனைத்து நடுவர்களும் மீண்டும் ஒன்றுகூடி, செருப்புத்தைக்கும் செங்கோடன் சுட்டிக்காண்பித்த தவறை ஏற்றுக்கொண்டு, அந்த ஓவியத்திற்கு முதலில் வழங்கிய புள்ளிகளை குறைத்து, அதனை இரண்டாவது பரிசுக்கு சிபாரிசு செய்தனர். தனது அறிவுரையை அந்த நடுவர்கள் மத்தியிலிருந்த புத்திஜீவிகள் ஏற்றுக்கொண்டதையடுத்து, செங்கோடனுக்கு தலைகால் புரியாத மகிழ்ச்சியும் தற்பெருமையும் வந்துவிட்டது. மீண்டும் அந்த ஓவியத்தை கூர்ந்து பார்த்துவிட்டு, அதில் மேலும் தவறுகள் கண்டான். முதலில் கண்ணில் என்றான், பிறகு உதட்டில், இடுப்பில், காலில்… என்று தனது மேதாவித்தனத்தை காண்பித்தான். அதாவது முட்டையில் மயிர் பிடுங்கும் விதமாக தவறுகளை புதிது புதிதாக கண்டுபிடித்தான். நடுவர்கள் தலையை பிய்த்துக்கொண்டனர். நடுவர்களில் ஒருவர் பொறுமையிழந்தார். செங்கோடா செருப்போடு நில் - என்றார். இந்தக்கதையை இப்போது நான் சொல்ல நேர்ந்தமைக்கு காரணம் இருக்கிறது. சமகாலத்தில் இலக்கிய உலகில் பலர் செங்கோடர்களாகிக்கொண்டிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக இளம் தலைமுறையைச்சேர்ந்த எழுத்தாளர்கள். அவர்களது முதிர்ச்சியற்ற எழுத்துக்களுக்கு முகநூல் களம் அமைக்கிறது, பொறுப்பற்ற பேச்சுக்களுக்கு இணையவழி காணொளி அரங்குகள் சந்தர்ப்பம் வழங்குகின்றன. ஈழத்து இலக்கிய வரலாற்றை சரியாகத் தெரிந்துகொள்ளாமல், மூத்த படைப்பிலக்கிய ஆளுமைகள் கடந்து வந்த பாதைகளை அறியாமல், கேள்விச்செவியன் ஊரைக்கெடுத்தமைபோன்று தங்கள் பொச்சரிப்புகளை எழுதியும் பேசியும் வருகின்றனர்.
தமிழ் மொழிச் செயற்பாட்டகம், இலண்டனில் நடத்திய எழுத்தாளர் மு,தளையசிங்கம் பற்றிய Zoom வழி இணையவெளிக் கருத்தரங்கில் இளம் எழுத்தாளர் அனோஜன் பாலகிருஷ்ணன் கூறிய கருத்தொன்றினைப் பற்றி, கனடா பதிவுகள் இணைய
இதழில் கிரிதரன் சுட்டிக்காண்பித்திருந்தார். அது தொடர்பாகவே மேற்குறிப்பிட்ட செங்கோடா செருப்போடு நில் என்ற கதையை எழுதநேர்ந்தது. மல்லிகை ஆசிரியர் டொமினிக்ஜீவாவை 1971 முதல் நன்கு அறிவேன். அவர்தான் என்னை இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்தியவர். இறுதியாக அவரை கடந்த 2019 ஆம் ஆண்டும் கொழும்பில் சந்தித்தேன். இறுதிவரையில் எனது நெஞ்சத்துக்கு நெருக்கமான மல்லிகை ஜீவா பற்றி பல ஆக்கங்கள் எழுதியிருப்பதுடன், மல்லிகைஜீவா நினைவுகள் என்ற நூலையும் 2001 அக்டோபரில் எழுதி வெளியிட்டுள்ளேன். ஜீவா எவருக்கும் பயந்தவர் அல்ல. அவருடன் நெருங்கிப்பழகி உறவாடிய அனைவருக்கும் தெரியும். தனக்குச்சரியெனப்பட்டதை எந்தவிடத்திலும் துணிந்து சொல்லக்கூடிய மனத்தைரியம் கொண்டவர்.
கொழும்பு விவேகானந்தா வித்தியாலய மண்டபத்தில் பேராசிரியர் கா. சிவத்தம்பியின் தலைமையில் பூரணி காலாண்டிதழின் வெளியீட்டு அரங்கு 1972 ஆம் ஆண்டு நடந்தபோது, அதிலும் கலந்துகொண்டேன். அந்நிகழ்வில்தான் முதல்தடவையாக மு.
தளையசிங்கத்தையும் சந்தித்தேன். இதுபற்றி மு.த. பற்றிய எனது கட்டுரையிலும் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன். அன்றைய பூரணி வெளியீட்டு அரங்கில் மு.த. வின் உரையினால், தர்மாவேசம்கொண்ட ஜீவா, அவர் பேசி முடித்ததும், அவரை ஒரு அறைக்கு அழைத்துவந்து அவரது கருத்து தொடர்பாக காரசாரமாக விவாதித்தார். நானும் எஸ்.பொன்னுத்துரையும் வேறு சில இலக்கியவாதிகளும் அருகில் நின்றோம். மு.த. அமைதியாக செவிமடுத்தார், ஆனால், ஜீவாவின் குரல் நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்த மண்டபம் வரையில் கேட்டது. எஸ்.பொ. கொடுப்புக்குள் சிரித்துக்கொண்டிருந்தார்.
மு.த – ஜீவாவுக்கு இடையில் இலக்கிய – சித்தாந்த ரீதியில் முரண்பாடுகள் இருந்தபோதிலும் ஒருவரை ஒருவர் மதித்தனர். ஜீவா, தளையசிங்கம் மீது அபிமானமும் கொண்டிருந்தார். தளையசிங்கம் 02-4-1973 இல் மறைந்தார்.” என்னால் தாங்கமுடியாத சோகம். அவரது மரணத்தின் பின்னணியை அறிந்தபோதுதான் தளையசிங்கமும் ஓர் Activist Writer என்ற உண்மையும் தெரிந்தது. எமது நீர்கொழும்பு இலக்கிய வட்டத்தினால் அவருக்கு, அவர் மறைந்து இருபது நாட்களிலேயே (22-4-1973) அஞ்சலிக்கூட்டம் நடத்தப்பட்டது. இந்த அமைப்பு நடத்திய முதலாவது நிகழ்ச்சியே தளையசிங்கத்தின் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும் அஞ்சலிக் கூட்டமாக அமைந்தது என்பது குறிப்பிடத் தகுந்தது. இன்றும் என்னிடம் அந்த நிகழ்ச்சியின் அழைப்பிதழ் பத்திரமாக இருக்கிறது. இலங்கையில் மு.த.வுக்காக நடத்தப்பட்ட முதலாவது அஞ்சலிக்கூட்டம் அது. அக்கூட்டத்தில் பூரணி ஆசிரியர் என்.கே. மகாலிங்கம், பூரணி குழுவிலிருந்த இமையவன், தங்கவேல் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
அந்த ஆண்டு மேமாதம் ஜீவா என்னை நீர்கொழும்பு வந்து சந்தித்தபோது, தளையரின் இழப்பினால் மிகவும் வேதனையுற்றிருந்ததையும் அவதானித்தேன். அவர் அவ்வேளையில் மல்லிகையில் தளைகளை அறுக்க முயன்ற தளையர் என்ற கருத்துப்பட அஞ்சலிக்குறிப்பும் எழுதியிருந்தார். புங்குடுதீவில் தளையரின் இறுதி நிகழ்வில் உரையாற்றி ஜீவா, தளையரின் மரணம் இயற்கையானது அல்ல. அது கொலை என்று தர்மாவேசத்துடன் குரல் எழுப்பி பேசியதாகவும் பின்னர் அறிந்தேன். இவ்வளவும் அக்காலப்பகுதியில் நடந்திருக்கிறது. கிரிதரனும் அக்காலப்பகுதியில் வெளியான மல்லிகையில் இடம்பெற்ற மு. புஷ்பராஜன், கே. எஸ். சிவகுமாரன் ஆகியோரின் குறிப்புகளையும் ஆதாரத்துடன் பதிவுகளில் நினைவூட்டியுள்ளார்.
அனோஜன் பாலகிருஷ்ணன் என்பவர் 1992இல் பிறந்தவர் என்று அறியப்படுபவர். இதுவரையில் இவரை நான் சந்திக்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஆனால், வளர்ந்துவரும் ஆற்றல் மிக்க எழுத்தாளர் என்பதை அவரது படைப்புகள் மூலம்
அறிந்து மகிழ்ச்சியடைந்தேன். ஜெயமோகனும் இவர் குறித்து சிறப்பாக நம்பிக்கையோடு எழுதிவருகிறார். அனோஜன் பிறப்பதற்கு இருபது வருடங்களுக்கு முன்னர் தளையசிங்கம் மறைந்துவிட்டார். ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு உரமிட்ட இரண்டு பெரும் ஆளுமைகள் குறித்து கருத்துச்சொல்வதற்கு முன்னர், அவர்கள் கடந்துவந்த பாதையையும் தெரிந்துகொள்ளவேண்டும். இலக்கிய ஆளுமைகளினால் இனம்காணப்பட்டு கவனிக்கப்படுகிறோம், இலக்கிய அங்கீகாரம் கிடைத்துவிட்டது, இனிமேல் நாம் எப்படிவேண்டுமானாலும் எழுதலாம் – பேசலாம் என்ற எண்ணத்தில் பிதற்றக்கூடாது. விதந்துபேசப்படும் இளம் தலைமுறை எழுத்தாளர்கள் ஓவியக்கண்காட்சிக்குச் சென்ற செங்கோடர்களாகிவிடுகிறார்களே என்ற ஆதங்கம்தான் எனக்கு மேலோங்குகிறது. தளையசிங்கம் சாதியொழிப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டதால் தாக்குதலுக்குள்ளாகிய செய்தியை, கைலாசபதி மீதிருந்த அச்சம் காரணமாகவே ஜீவா, மல்லிகை இதழில் வெளியிடவில்லை' - என்று அனோஜன் பாலகிருஷ்ணன் எந்த ஆதாரத்தை வைத்துக்கொண்டு சொல்கிறார். இப்படித்தான், முன்பும் கைலாசபதி பற்றிய ஒரு அவதூறை வெங்கட்சாமிநாதன் பரப்பினார். என்.கே. ரகுநாதனின் நிலவிலே பேசுவோம் கதையில் வரும் ஊர்பிரமுகர் கைலாசபதிதான் என்ற கற்பனையை அவர் அன்று அவிழ்த்துவிட்டார். அனோஜன் தற்போது ஜீவா, கைலாசபதிக்கு பயந்தார் என்று புதிய அவதூறை பரப்புகிறார்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.