- அன்புள்ள நண்பர் கிரிதரனுக்கு வணக்கம். நலம்தானே...? உடல் நலத்தில் அவதானமாக இருக்கவும். இங்கு நாம் நலம். தங்கள் பதிவுகளில் தங்களின் வாசிப்பும் யோசிப்பும் பகுதியில் ( 366 ஆவது அங்கம் ) எழுதப்பட்ட குறிப்புகளைப்படித்துவிட்டு, - கடந்த 2019 இல் வெளியான எனது இலங்கையில் பாரதி நூலில் இடம்பெற்ற இரண்டு அங்கங்களை தங்கள் பார்வைக்கு இத்துடன் இணைத்துள்ளேன். நன்றி - அன்புடன் , முருகபூபதி -
இலங்கையில் பாரதி - அங்கம் - 10
ஈழத்து தமிழ் எழுத்தாளர்கள் மத்தியில் இலக்கியப்படைப்பாளிகள், கலைஞர்கள், நடன நர்த்தகிகள், ஊடகவியலாளர்கள், இதழாசிரியர்கள் பாரதியின் தாக்கத்திற்குட்பட்டதனாலேயே பாரதியியலிலும் ஈடுபாடுகொண்டிருந்தனர். ஈழத்தில் பாரதி இயல் என்ற பிரயோகத்தை முதலில் அறிமுகப்படுத்தியவர் பேராசிரியர் க. கைலாசபதி. எமது நாட்டில் இலக்கியச்சிற்றேடுகளில் பாரதி ஏற்படுத்திய பெரிய தாக்கத்தைப்பற்றி எழுதுவதாயின் பல அங்கங்கள் தேவைப்படும். ஏராளமான இலக்கிய சிற்றேடுகள் இலங்கையில் வெளிவந்ததே அதற்கு அடிப்படைக்காரணம். ஈழத்து இலக்கிய வளர்ச்சியின் வரலாற்றை ஆய்வுசெய்ய முன்வந்தால் அதற்கு உரமிட்டவை இலக்கியச்சிற்றேடுகளே என்ற முடிவுக்கும் வரமுடியும். இலங்கையில் பாரதியின் சிந்தனைகள் விகசிக்கத்தொடங்கிய 1922 ஆம் ஆண்டிற்குப்பின்னர், 1940 முதல் வெளிவரத்தொடங்கிய சிற்றிதழ்களின் எண்ணிக்கை நூறுக்கும் அதிகம். தமிழ்த்தேசியப்பத்திரிகையின் வளர்ச்சியில் உதயதாரகை முதல் தற்பொழுது வெளிவரும் காலைக்கதிர் வரையில் கால வரிசைப்படி ஆய்வுசெய்யலாம்.
அதேபோன்று இலக்கியச்சிற்றேடுகளை அவதானித்தால் 1940 இற்குபின்னர் யாழ்ப்பாணத்திலிருந்து மறுமலர்ச்சி, கிழக்கிலங்கை மண்டுரிலிருந்து 'பாரதி' கொழும்பிலிருந்து மற்றும் ஒரு இதழ் 'பாரதி' முதலானவற்றிலிருந்து தற்போது கொழும்பில் வெள்ளவத்தையிலிருந்து ஞானம், யாழ்ப்பாணம் அல்வாயிலிருந்து ஜீவநதி, கிழக்கில் மட்டக்களப்பிலிருந்து ' மகுடம்' அநுராதபுரத்திலிருந்து 'படிகள்' - ஆகியனவற்றின் வளர்ச்சியையும் நாம் கண்டுகொள்ளமுடியும். இவைதவிர கவிதைக்கான இதழ்களும் வருகின்றன.
இவற்றுக்கு இடைப்பட்ட காலத்தில் கலைச்செல்வி, மரகதம், மல்லிகை, புதுமை இலக்கியம், வசந்தம், விவேகி, அஞ்சலி, பூரணி, நதி, களனி, அக்னி, நோக்கு, வாகை, மாருதம், கீற்று, மாற்று, ஊற்று, பாடும்மீன், ரோஜாப்பூ, கதம்பம், பூமாலை, குமரன், தமிழமுதம், தமிழின்பம், மாணிக்கம், அலை, குன்றின் குரல், கொழுந்து, தாரகை, புதுசு, அலை, தீர்த்தக்கரை, பொதுமக்கள் பூமி, சுவர், சமர், சிரித்திரன், வெளிச்சம், களம், சுவைத்திரள், கலகலப்பு, அக்கினிக்குஞ்சு, அமிர்தகங்கை, தாயகம்.... இவ்வாறு எண்ணற்ற இதழ்கள் தோன்றி மறைந்தன. பூரணி என்னும் பெயரிலேயே இரண்டு சிற்றிதழ்கள் வந்திருப்பதும் அக்கினிக்குஞ்சு என்னும் பெயரில் யாழ்ப்பாணத்திலும் அவுஸ்திரேலியா மெல்பனிலிருந்தும் சிற்றிதழ்கள் வெவ்வேறு காலப்பகுதிகளில் வந்துள்ளன.
சந்தாதாரர்களுக்கு இதழ்களை அனுப்புவதற்காக குறைந்த கட்டண வசதியைப்பெற்றுக்கொள்வதற்கு தலைமைத்தபால் கந்தோரில் இதழ்களின் பெயரை பதிவுசெய்த காலமும் முன்பிருந்தது. ஆனால், சட்டபூர்வமாக பதிப்புரிமை பெறும் கலாசாரம் இலங்கையில் உருவாகவில்லை. அதனால் எவரும், ஒரே பெயரில் வேறு வேறு காலப்பகுதியில் இதழ்களை வெளியிட்டுவந்துள்ளனர். 1943 இல் யாழ்ப்பாணத்தில் தோன்றிய எழுத்தாளர் சங்கமே மறுமலர்ச்சி சங்கம் எனப்பெயர்பெற்றது. இந்த அமைப்பின் வெளியீடாக மலர்ந்த மறுமலர்ச்சி இதழுக்கு தி.ச. வரதராசன் (வரதர்) அ.செ. முருகானந்தன் ஆகியோர் இணையாசிரியர்களானார்கள்.
தமிழ்க்கவிஞர், தேசியக்கவிஞர், புரட்சிக்கவிஞர், சர்வதேசியக்கவிஞர், மக்கள் கவிஞர், வேதாந்தக்கவிஞர், ஆன்மீகக்கவிஞர் இவை அனைத்துக்கும் மேலாக "மகாகவி" என்ற அடையாளத்தையே அவருக்குச்சூட்டி கவிஞர் என்ற சிமிழுக்குள் அவர் பார்க்கப்பட்டாலும் பாரதியும் ஒரு பத்திரிகையாளர்தான் என்பதை சுட்டுவதற்கும் ஆராய்வதற்கும் அன்று பெரிதும் ஆர்வம் காண்பிக்கப்படவில்லை.
பாரதியின் கவிதைகளையே மேடைப்பேச்சுக்களுக்கும், ஆய்வுகளுக்கும் நினைவு தினக்கட்டுரைகளுக்கும் அதிகம் பயன்படுத்தினர். ஆனால், பாரதியை ஆழமாகக்கற்றவர்கள் மாக்ஸீயக்கண்ணோட்டத்திலும் சமுதாயக்கண்ணோட்டத்திலும் ஆராய்ந்தவர்கள், பாரதியை மறுவிசாரணைக்கும் உட்படுத்தியிருக்கிறார்கள். இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் பாரதி இன்றும் மறுவாசிப்புக்குட்படுத்தப்படுகிறார்.
"பாரதியைக் காலத்தை விஞ்சிய மகாகவி எனச்சொல்வது வழக்கம். நமக்குக்கிடைக்கும் எல்லா ஆவணங்களையும் தொகுத்துப்பார்க்கும்போது, அவர் காலத்தை விஞ்சியவரல்லர் என்பது விளங்குகிறது. அவர் முழுக்க முழுக்க காலத்தின் விளைபொருளாகவே வாழ்ந்தவர் என்பது விளங்குகிறது. அந்தச்சுபகிருது வருடத்திலே தோன்றிய தேசபக்தி என்னும் நவீன மார்க்கத்தின் புத்திரனே அவர். இப்படிச்சொல்வது அவரது பெருமையை குறைவுபடுத்துவதாகாது." என்று தமிழக இலக்கிய விமர்சகர் அ. மார்க்ஸ் பாரதியை மறுவாசிப்புக்குட்படுத்துகிறார். (ஆதாரம்: பாரதியின் புதுமைப்பெண் ஒரு மறுபார்வை - கட்டுரை - தீராநதி 2005)
இலங்கையிலும் பாரதி - நாவலாசிரியர் செ. கணேசலிங்கனின் குமரன் இதழிலும் கவிஞர் ஈழவாணனின் அக்னி இதழிலும் மறுவாசிப்புக்குட்படுத்தப்பட்டார். அதற்கு முன்னர் 1946 ஜனவரியில் முதலாவது இதழையும் 1948 ஜனவரியில் இறுதி இதழையும் வரவாக்கிய பாரதி இதழ் - " அணுசக்தி யுகத்தின் சிருஷ்டி. விஞ்ஞான முடிவுகளில் புரட்சி ஏற்படுத்திய அணுசக்திபோல் தமிழ்மொழிக்குப் புதுமைப்போக்களித்த மகாகவி பாரதியாரின் பெயர்தாங்கி வருகிறது. அவர் தமிழுக்கு புதுவழி காட்டியதுபோலவே 'பாரதி' யும் கண்டதும் காதல் கதை மலிந்த இன்றைய தமிழிலக்கியப்போக்கிற்கு புதுவழிகாட்டும்" எனக்கட்டியம் கூறிநின்றது.
பாரதி பரம்பரையில் என்ற தலைப்பில் அதன்வருகைக்கான தலையங்கம் தீட்டப்பட்டிருந்தது. நாற்பது பக்கங்களில் வெளியான பாரதி இலக்கியச்சிற்றேட்டின் அன்றைய விலை: அரைரூபாய். இதன் கூட்டாசிரியர்கள் கே. கணேஷ் - கே. ராமநாதன்.
முதல் இதழின் தலையங்கம் மேலும் இவ்வாறு பதிவுசெய்கிறது:
" ஏகாதிபத்தியத்தை அழிக்க கவி பாடிய பாரதியார், முப்பது கோடி ஜனங்களின் சங்க முழுமைக்கும் பொதுவுடடைமையான ஒப்பில்லாத சமுதாயத்தை ஆக்கவும் கவி பாடினார். அவர் காட்டும் அந்தப்பாதையில் 'பாரதி' யாத்திரை தொடங்குகிறது. இப்பணிக்கு வேண்டியது தமிழர் ஆதரவே. காகிதத்தட்டுப்பாடு, அச்சு எழுத்து இறக்குமதிக் கட்டுப்பாடு ஆகியவற்றின் ஊடாக திணறிக் கொண்டு வெளிவரும் பாரதியின் முதல் இதழை எதிர்பார்த்த அளவு சிறப்பாக கொண்டு வரமுடியவில்லை. நேயர்கள் மன்னிக்க. மேல்வரும் இதழ்கள் சீர்திருத்தும்."
பாரதி இதழை வெளியிட முன்வந்தவர்களின் நோக்கமும் எதிர்பார்ப்பும் எத்தகையது என்பதை மேற்கண்ட ஆசிரியத்தலையங்க குறிப்புகள் இனம்காண்பிக்கின்றன.
ஆர்வத்தை மாத்திரம் மூலதனமாக வைத்து வெளியாகும் இலக்கிய ஏடுகள் அற்பாயுளிலேயே மறைந்துவிடும். இந்த கசப்பான உண்மைகளைத்தெரிந்துகொண்டும் பலரும் இலக்கிய இதழ்கள் வெளியிடும் தாகத்தை இற்றைவரையில் தணித்துக்கொள்ளவில்லை.
பாரதியின் முதல் இதழின் முகப்போவியம் கூட பாரதியின் உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் வரிகளுக்கு பொருத்தமாகவே அமைந்திருந்தது. அக்காலப்பகுதியில் பாரதியில் எழுதியவர்கள் பிற்காலத்தில் மிகவும் பிரபலம் பெற்றனர்.
'ஜே.கே' என்ற ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி, அ.ந. கந்தசாமி, நா. சண்முகதாசன், முல்க்ராஜ் ஆனந்த், கே. ராமநாதன் ( கிருபா என்ற புனைபெயரில்) இளங்கீரன், நவாலியூர் சோ. நடராஜன், அ.செ. முருகானந்தன், கே. கணேஷ் ஆகியோர் பாரதியில் எழுதிய குறிப்பிடத்தகுந்தவர்கள்.
தற்காலத்தில் 'எழுத்துக்கு சன்மானம்' தொடர்பாக பேசப்படுகிறது. எழுதுவனவற்றுக்கு சன்மானம் நியாயபூர்வமாக வழங்கப்படல் வேண்டும் என்றும் குரல் எழுகிறது. ஆனால், அதன் தொனியில் சுருதி தாழ்ந்துள்ளது. இலங்கையில் முழுநேர எழுத்தாளர்களாக வாழ்ந்த விரல் விட்டு எண்ணத்தக்க சிலர் வறுமைக்கோட்டில் வாடியதையும் தமது எழுத்துக்களை நூலுருவில் பார்க்க முடியாமல் மறைந்ததையும் அறிவோம்.
வர்த்தகநோக்கில் அல்லாமல் முழுக்க முழுக்க இலக்கியம் வளர்க்கும் எண்ணத்தில் வெளியான பாரதி இதழ் எழுதுபவர்களுக்கு சன்மானமும் வழங்கும் எனவும் அறிவித்திருந்தது. 1946 ஆம் ஆண்டளவில் இப்படியும் அதிசயம் நடந்திருக்கிறது. ஆனால் உண்மை. குறிப்பிட்ட பாரதி இதழின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றி மூத்த படைப்பாளி தெளிவத்தை ஜோசப், 1984 இல் தினகரன் வாரமஞ்சரியில் " ஈழத்து முற்போக்கு இலக்கியப்பரம்பரைக்கு வித்திட்ட ஏடு பாரதி" என்னும் தலைப்பில் தொடர்ச்சியாக சில கட்டுரைகளை விரிவாக பதிவுசெய்துள்ளார். பாரதி இதழின் மறைவுகுறித்து அவர் எழுதும்போது, " சில நேரங்களில் பணத்தால் இலட்சியங்களை உடைக்க முடியும். ஆனால், எல்லா நேரங்களிலுமே இலட்சியங்களால் ' பணத்தை ' உடைக்க முடிவதில்லை. ஆகவே ஏதாவதோர் இலட்சியத்துடன் ஓர் ஏட்டை ஆரம்பிக்கின்றவர்கள் இடையில் குறுக்கிடும் பணத்துடன் மோதிப்பார்த்து முடியாமல் தோற்றுவிடுவதுண்டு. இந்தத்தோல்வியே பெருமைக்குரியதுதான்." எனவும் குறிப்பிடுகின்றார்.
பாரதி புதுவையிலும் சென்னையிலும் பணியாற்றிய ஏடுகளிலிருந்து எத்தகைய சன்மானங்கள் பெற்றார், அவை அன்றைய அடக்குமுறைக்குட்பட்டும் வெளிவருவதற்கு எத்தனை தடைகளை சந்தித்தன என்பதையும் இலங்கையில் வெளியான சிற்றேடுகளின் தோற்றம் - மறைவுகளின் பின்னணி வரலாறுகளிலிருந்தும் அறியமுடிகிறது.
1926 இல் தோன்றிய ஆனந்த விகடன், 1941 இல் மலர்ந்த கல்கி இவை இரண்டுக்குமிடைப்பட்ட காலகட்டத்திலிருந்து வெளியாகும் குமுதமும் இன்றும் வாசகபரப்பில் வாழ்கின்றன. ஆனால், வணிகநோக்கின்றி வெளியான -- பாரதி ஆசிரியராக பணியாற்றிய ஏடுகளுக்கும் இதர இலக்கியச்சிற்றேடுகளுக்கும் என்ன நேர்ந்ததோ அதே கதைதான் இலங்கையில் வெளியான பல சிற்றேடுகளுக்கும் நேர்ந்தன.
கிழக்கிலங்கையில் பாரதி இதழ்
தடுக்கிவிழுந்தாலும் கவிஞர் வீட்டு வாசலில்தான் விழநேரிடும் என்று கிழக்கிலங்கையில் மீன்பாடும் தேன் நாடு என வர்ணிக்கப்படும் மட்டக்களப்பு மற்றும் கல்முனைப்பிரதேசங்களைப்பற்றி வேடிக்கையாக சொல்வார்கள். கல்முனை துறைநீலாவணையிலிருந்து கவிஞர் நீலாவணன் 'பாடும்மீன்' என்ற இதழையும் நடத்தியிருக்கிறார். மரபுவழி கூத்துக்கும் பிரசித்திபெற்ற கிழக்கிலங்கையிலிருந்து ஏராளமான கவிஞர்கள் தோன்றினார்கள். இங்கு மண்டுர் கிராமத்திலிருந்து 1948 ஆம் ஆண்டில் பாரதி என்னும் இலக்கியச்சிற்றேடு வெளியாகி 36 இதழ்களை வரவாக்கியிருக்கும் செய்தியை கீற்று என்னும் மற்றோர் இதழில் படித்து தெரிந்துகொண்டோம். குறிப்பிட்ட மண்டுர் பாரதி பற்றி கடந்த மார்கழியில் வெளியான ஜீவநதியில் அதன் ஆசிரியர் கலாமணி பரணீதரன் விரிவாக எழுதியுள்ளார். மண்டுர் கலை இலக்கிய அவையினரின் பெரு முயற்சியால் பாரதி இதழ்களின் தொகுப்பும் வெளியாகியிருக்கிறது.
அக்காலப்பகுதி மூன்று இளைஞர்களின் கூட்டு முயற்சியினால் மண்டுர் பாரதி இலங்கைக்கு அறிமுகமாகியிருக்கிறது. (அமரர்கள்) பண்டிதர் ம. நாகலிங்கம், கு. தட்சணாமூர்த்தி, இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கும் த. செபரத்தினம் ஆகியோர் இதன் கூட்டாசிரியர்கள் முதலான தகவல்களையும் பரணிதரனின் பதிவிலிருந்து தெரிந்துகொள்கின்றோம். காலம் கடந்தாவது கொழும்பிலிருந்து அக்காலப்பகுதியில் வெளியான பாரதி பற்றி தெளிவத்தை ஜோசப், மண்டுர் பாரதி பற்றி பரணிதரன் ஆகியோர் ஊடாக நாம் தெரிந்துகொண்டோம்.
இலங்கையில் பாரதி நூலில் மற்றும் ஓர் அங்கம்!
யாழ்ப்பாணத்துச்சாமி குறித்து ஈழத்து இலக்கிய உலகின் மூத்த எழுத்தாளர் அ.ந. கந்தசாமி ஆராய்ந்து, அவர் சமாதியான வியாபாரிமூலையில் பெருவிழாவுக்கும் கால்கோள் நாட்டினார். அ.ந. கந்தசாமி இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மூத்த உறுப்பினர். அத்துடன் சங்கத்தின் கீதமும் இயற்றியவர். இவ்வூரைச்சேர்ந்த ந. சோமகாந்தன் ஈழத்தின் மற்றும் ஒரு மூத்த எழுத்தாளர். இவர் முன்னின்று அந்த விழாவை நடத்தியிருக்கிறார். இவ்வாறு பாரதியின் ஞானகுரு ஈழத்து இலக்கிய வரலாற்றில் பல இடங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளார். இத்தகைய வரலாற்றுச்செய்திகளுக்கும் ஒரு வில்லங்கம் பின்னாளில் வந்திருக்கிறது.
" சுவாமிகள் 07.05.1880 இல் பிறந்ததாக கொள்ள முடிகிறது. சுவாமிகளது தாயார் வதிரியை சேர்ந்த இலட்சுமி அம்மாள், தந்தையார் வியாபாரிமூலையை சேர்ந்த சின்னையா. வேலுப்பிள்ளை.
வியாபாரிமூலை யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் சமாதி ஆலயம் புதுப்பிக்கப்பட்டு சுவாமி அருளானந்தா அவர்கள் தலைமையில் 25.11.2004 இல் குடமுழுக்கு செய்யப்பட்டது. அன்று சுவாமி அருளானந்தா எமுதிய “யாழ்ப்பாணத்து மௌன குருவின் சரித சுருக்கம் – மீண்டும் அருள்தர வந்தேன்” என்னும் நூலும் வெளியிடப்பட்டது. திரு.பொ.சபாபதிப்பிள்ளை அவர்கள் குலத்தோன்றல்களான டாக்டர் சதானந்தன், திருவாளர்கள் சி.முத்துக்கிருஷ்ணன், சா.நவரத்தினராசா போன்றவர்கள் சமாதி ஆலயப் புனருத்தாரணப் பணிக்கு பொருளுதவி புரிந்ததோடு நித்திய பூசைகளையும் பொறுப்பேற்றுள்ளனர். இவ்வளவு தகவல்களும் இன்று இணையத்தின் வழி எமக்கு கிடைக்கின்றன.
செங்கை ஆழியானின் நூல் ??? !!!
இவை இவ்விதமிருக்கையில், இலங்கையின் மூத்த எழுத்தாளர் என அறியப்பட்டவரும் சமூக மற்றும் வரலாற்று நாவல்களும் ஆய்வுகளும்- நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளும் பல பாட நூல்களும் எழுதியிருக்கும் பிரபல படைப்பாளி செங்கைஆழியான் கலாநிதி கந்தையா குணராசா ( 1941 -2016) தனது தந்தை வழித்தோன்றல் ஆறுமுகசாமிதான் பாரதியின் ஞானகுரு என்று நிறுவ முயன்றுள்ளார். ஈழத்தின் வரலாற்று தகவல்களை தொடர்ந்து பதிவுசெய்த செங்கைஆழியான், ஏன் இவ்வாறு ஒரு வரலாற்று திரிபுக்கும் வழிவகுத்தார் என்பதுதான் புரியவில்லை.
பாரதி நூற்றாண்டு (1982 - 1983 ) கால கட்டத்தில் அவர் தமது மூதாதையர் ஆறுமுகசாமிதான் பாரதியின் ஞானகுரு என்று ஆதாரங்களுடன் நிரூபித்திருந்தால் அதற்கு எதிர்வினையாற்ற பல பாரதி இயல் ஆய்வாளர்கள் அப்போது இலங்கையில் இருந்தார்கள். முக்கியமாக பேராசிரியர் க. கைலாசபதி.
காலம் கடந்து 2006 ஆம் ஆண்டில் பாரதியின் ஞானகுரு யாழ்ப்பாணத்து ஆறுமுகசாமி என்னும் நூலை வெளியிட்டு சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறார். புனைகதை எழுதுவதில் ஆற்றல் மிக்க செங்கைஆழியான், இந்த ஞானகுரு விவகாரத்திலும் புனைகதை படைத்துவிட்டு விடைபெற்றுவிட்டார். பாரதி வாழ்ந்த அக்காலப்பகுதியில் இலங்கையிலும் இந்தியாவிலும் பல சாமியார்கள் வாழ்ந்திருக்கிறார்கள். இன்றும் பல சாமியார்கள் பணக்கார சாமியார்களாகியிருக்கின்றனர். லீலைகளில் ஈடுபட்டு அம்பலமானவர்கள் பற்றி சொல்லவேண்டியதில்லை. சிவலிங்கம் வாயில் எடுத்து சித்துவிளையாட்டுக்காட்டி, இறுதியில் கொலை உட்பட பாலியல் குற்றங்களும் புரிந்து சிறைசென்ற சாமிகளும் இருக்கிறார்கள்.
பாரதி புதுவையில் சந்தித்த சாமி யாழ்ப்பாணம் அல்வாய் அருளம்பலம் சாமி என்ற வரலாற்று தகவலும், அந்தச்சாமிக்கு வடமராட்சி வியாபாரிமூலையில் ஒரு சமாதியும் கோயிலும் இருக்கையில், செங்கைஆழியான், எதற்காக பாரதியின் ஞானகுரு ஆறுமுகசாமி என்று நிருவ முயன்றார். செங்கை ஆழியானின் குறிப்பிட்ட நூல் 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் கொழும்பில் யூனி ஆர்ட்ஸ் அச்சகத்தில் அச்சசாகி வெளியாகியிருக்கிறது.
செங்கைஆழியான், குறிப்பிடும் ஆறுமுகசாமி, யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை கிழக்கில் கலட்டி அம்மன்கோயிலடியில் வசித்த கதிரவேலு - தையலாச்சி தம்பதியருக்கு 1863 ஆம் ஆண்டு ஒரு மழைக்கால அதிகாலை வேளையில் பிறந்திருக்கிறார்.
தமிழ்நாடு ஶ்ரீவில்லிபுத்தூர் - சாத்தூர் சாலையில் வரும் புளியந்தோப்பு என்னும் இடத்தில் செங்கை ஆழியான் சொல்லும் அந்த ஆறுமுகசாமியின் சமாதிக்கோயில் இருக்கிறது என்பதற்கு ஆதாரமான தகவல்களுடனும் அவர் தனது முந்தாதையர் என்றும் நிரூபித்து, எட்டயபுரத்தில் தமிழ்நாடு கலை இலக்கியப்பெருமன்றம் நடத்திய பாரதி விழாவில் பங்கேற்று பகிரங்கமாக தான்தான் பாரதியின் ஞானகுரு யாழ்ப்பாணம் ஆறுமுகசாமியின் பேரன் எனவும் தெரிவித்திருக்கிறார்.
செங்கைஆழியான், இலங்கையில் 1956 ஆம் ஆண்டில் நாடுதழுவிய ரீதியில் பாரதி நினைவு கூரப்பட்டபோதும், அதன்பின்னர் 1982 - 1983 பாரதி நூற்றாண்டு காலப்பகுதியிலும் இந்தத்தகவல்களை வெளியிடாமலிருந்தமைக்கு காரணம் என்ன..? என்பது தெரியவில்லை.
பேராசிரியர்கள் பொன். பூலோகசிங்கம், கைலாசபதி , சி. தில்லைநாதன், மற்றும் ச. அம்பிகை பாகன், அ.ந.கந்தசாமி, சோமகாந்தன் ஆகியோர் " பாரதியின் ஞானகுரு அல்வாய் அருளம்பலம் சாமியார்தான்" என்று நிரூபித்திருக்கையில் - அவருக்கு வியாபாரிமூலையில் ஒரு சமாதிக்கோயில் இருக்கையில் - செங்கைஆழியான் எதற்காக மற்றும் ஒரு சாமியாரை பாரதியின் ஞானகுருவாக நிரூபிக்க முயன்றார்...? அவர் சொல்வதுபோன்று ஒரு சாமியார் யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையில் அவருடைய வம்சத்தில் தோன்றியிருக்கலாம். அதனை அவர் வரலாற்றின் பதிவாக எழுதுவதிலும் தவறில்லை. ஆனால், ஏன் உண்மைக்குப்புறம்பான ஒரு செய்தியை புனைவாக்கினார்...? புனைகதையாளரின் மற்றும் ஒரு புனைவு என்றே இதுபற்றி இணையத்தில் எழுதப்பட்டிருக்கிறது. ஆதாரத்திற்கு சில இணைப்புகளை இங்கு தருகின்றோம்.
www.ourjaffna.com
www.srinoolakam.blogspot.com
www.noolaham.org
செங்கைஆழியான் நாடறிந்த எழுத்தாளர். அவரை குறைகூறும் எண்ணத்தில் இதனை இங்கு எழுதவில்லை. இலங்கையில் பாரதியின் தாக்கத்தை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளும்பொழுது மேற்குறிப்பிட்ட தகவல்களையும் கடந்து செல்ல முடியவில்லை.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.