இந்த 2020 ஆண்டு கொரோனோவுடன் பிறந்து எனக்குப்பிரியமான சிலரையும் மரணிக்கச்செய்துவிட்டது. தொடர்ந்து வரும் மரணச்செய்திகள் மனதில் சஞ்சலத்தையும் பதற்றத்தையும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்தி, நானும் மாரடைப்புக்குள்ளாகி, மருத்துவமனை சென்று திரும்பினாலும், துயரச்செய்திகள் அடுத்தடுத்து வந்துகொண்டுதானிருக்கின்றன. இலட்சக்கணக்காக மக்கள், கண்ணுக்குத்தெரியாத எதிரியால் கொல்லப்பட்டுக்கொண்டும் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் காலப்பகுதியில் கடந்த ஜனவரி மாதம் முதல் இந்தப்பதிவினை எழுதும் ஜூலை மாதம் இறுதிவரையில் எனக்குப்பிரியமான சிலரை இழந்துவிட்டேன்.
கலைவளன் சிசு நாகேந்திரன், ஈழத்தின் மூத்த முற்போக்கு எழுத்தாளர் நீர்வை பொன்னையன், பிரான்ஸில் கலைஞர் ஏ. ரகுநாதன், மற்றும் எழுத்தாளர் தமிழ்ப்பிரியா, அவுஸ்திரேலியா மெல்பனில் நாகராஜா மாஸ்டர், 3 CR வானொலி சண்முகம் சபேசன், கலை, இலக்கிய ஆர்வலர் இராஜேந்திரா, இலங்கையில் எழுத்தாளர் பத்மா சோமகாந்தன், தமிழகத்தில் விமர்சகர் கோவைஞானி…. இவ்வாறாக ஒவ்வொருவராக விடைபெற்றபோது, அவர்களை நினைவுகூர்ந்து அஞ்சலிப்பகிர்வுகளை தொடர்ச்சியாக எழுதி எழுதி மனதை தேற்றிக்கொள்ள முடிந்தாலும், இந்தத் தொடர் முற்றுப்பெறாமல் தொடருவதும் விதிப்பயன்தானோ…? என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, நேற்றைய தினம் எனது நீண்டகால நண்பரும் இலங்கையின் மூத்த பத்திரிகையாளருமான காசி. நவரட்ணமும் மறைந்தார் என்ற செய்தி வந்து சேர்ந்துள்ளது.
வீரகேசரியில் நான் பணியாற்றிய காலத்தில், அவர் அதன் யாழ்ப்பாண நிருபராகவிருந்தவர். தினமும் நான் தொலைபேசியில் உரையாடும் பத்திரிகையாளர்களில் அவரும் ஒருவர். மற்றவர்கள் வவுனியா மாணிக்கவாசகர், மட்டக்களப்பு நித்தியானந்தன், திருகோணமலை இரத்தினலிங்கம், கண்டி க.ப. சிவம், மாத்தறை முகம்மத், குண்டசாலை குவால்தீன், புலோலி தில்லைநாதன், யாழ்ப்பாணம் அரசரட்ணம். வடக்கு கிழக்கு போர்க்காலச்செய்திகளே எழுதிஎழுதி களைத்துப்போயிருக்கின்றோம். இரவில் கனவிலும் அந்தச்செய்திகள் வந்து தொல்லை கொடுக்கும். நண்பர் காசி. நவரட்ணம் அச்சுவேலி ஆவரங்காலிருந்து வீரகேசரி யாழ். கிளை அலுவலகத்திற்கு வருவார். அரசரட்ணம் மானிப்பாயிலிருந்து வருவார். அந்தக்கிளை அலுவலகம் அப்போது யாழ்ப்பாணம் ரயில் நிலையத்திற்கு முன்பாக இருந்தது. மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவாவின் வீடும் அந்த அலுலகத்திற்கு எதிர்ப்புறமாக முன்னால் ஒரு திருப்பத்தில் உள்ளே அமைந்திருந்தது. யாழ். செல்லும்போதெல்லாம் எனது பெரும்பாலான பொழுதுகள் அவ்விடத்தில் கரைவதுமுண்டு.
காசி. நவரட்ணம் ஸ்கூட்டரும் வைத்திருந்தார். அவருக்கு முன்னர் யாழ்ப்பாணம் நிருபராக பணியாற்றிய செல்லத்துரையும் நன்கு பிரபலமானவர். அவர் கோப்பாயிலிருந்து வருவார். சுறுசுறுப்பான பத்திரிகையாளர். அவரது மறைவு வீரகேசரிக்கு சாதாரண இழப்பு அல்ல. அவருடைய வெற்றிடத்தை பின்னர், இரண்டு ரட்ணங்களை வைத்துத்தான் வீரகேசரி அக்காலப்பகுதியில் சமாளித்தது. அவர்கள்தான் காசி. நவரட்ணம், க. அரசரட்ணம்.
வீரகேசரி தனது 90 ஆவது அகவையை கொண்டாடவிருக்கும் தருணத்தில், அதன் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் உழைத்த பலர் பற்றி எழுதவிருக்கின்றேன். எமது பத்திரிகையாளர்கள் பலர் இலங்கையில் கொல்லப்பட்டுள்ளனர். சிலர் இயற்கை மரணம் எய்தியுள்ளனர். இந்த அஞ்சலிப்பகிர்வில் நான் குறிப்பிடும் நண்பர் காசி. நவரத்தினமும் நானும் 1986 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் யாழ்ப்பாணத்திலிருந்து வடமராட்சி நோக்கி அவரது ஸ்கூட்டரில் பயணித்து செய்திவேட்டையில் ஈடுபட்ட இக்கதையை எனது சொல்லமறந்த கதைகள் நூலில் (2014 இல் ) ஏற்கனவே எழுதியிருக்கின்றேன். எனக்கு மிகவும் பிரியமான நண்பர் காசி. நவரட்ணம், நான் அவுஸ்திரேலியா வந்தபின்னர், இலங்கை வானொலி செய்திப்பிரிவிலும், தினக்குரல் பத்திரிகையிலும் பணியாற்றியவர். 1984 – 1987 காலப்பகுதியில் தினமும் அவர் என்னுடன் செய்திகளை பரிமாறும்போதும் கேட்டகுரல் இன்னமும் எனது செவியில் எதிரொலிக்கும் உணர்வுடனேயே இந்தப்பதிவை மீளவும் வெளியிடுகின்றேன்.
1983 கலவரத்திற்குப்பின்னர், தமிழகத்திலிருந்த எமது தமிழ்த் தலைவர்களும் இயக்கத்தலைமைகளும் இலங்கையில் அன்றாடம் நடக்கும் சம்பவங்களை தொலைபேசி ஊடாக தினமும் கேட்டறிந்து தமிழக ஊடகங்களுக்கு அறிக்கை விட்டுக்கொண்டிருந்த காலம். மின்னஞ்சல், கைத்தொலைபேசி இல்லாத அக்காலத்தில் தொலைபேசி மாத்திரமே தகவல் பரிமாற்றத்துக்கு பெரிதும் உதவியது. வீரகேசரியையே அவர்கள் இலங்கைச்செய்திகளுக்காக நம்பியிருந்தனர். தினமும் மதியம் சென்னையிலிருந்து யாராவது ஒருவர் தொடர்புகொண்டு தகவல் அறிவார். அவர்களில் மகேஸ்வரி வேலாயுதமும் ஒருவர். ஆனால் அச்சமயம் அவர் வேறு ஒரு பெயரிலேயே தொடர்புகொண்டு தகவல் அறிந்து தமிழ்தகவல் நிலையத்திற்கு தெரியப்படுத்துவார். சில நாட்கள் அமிர்தலிங்கம் தொடர்புகொண்டு கேட்டறிந்து தமிழக அரசியல் கட்சித்தலைவர்களுக்கும் இந்து, இன்டியன் எகஸ்பிரஸ் முதலான ஆங்கில ஊடகங்களுக்கும் தெரியப்படுத்துவார்.
1986 நவம்பர் மாதம் வடமராட்சியில் படையினர் ஹெலியில் சுற்றி சுட்டனர். அதனால் மந்திகை ஆஸ்பத்திரி அதற்கு முன்னால் அமைந்திருந்த நீதிபதி ஆனந்தகுமாரசாமி அவர்களின் வீடு மற்றும் சில குடியிருப்புகளின் கூரைகள் சேதமடைந்தன. சிலர் கொல்லப்பட்டனர். மந்திகை ஆஸ்பத்திரியில் குழந்தைகள் வார்டின் கூரையிலும் வான் தாக்குதலினால் அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தைகள் காயமுற்றனர். இக்காலப்பகுதியில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நடக்கும் போர்க்காலச்செய்திகளை அந்தந்தப்பிரதேச நிருபர்களிடமிருந்தும் நம்பகமானவர்களிடமிருந்தும் சேகரித்து வீரகேசரிக்கும் மித்திரனுக்கும் எழுதுவதுதான் எனது பிரதான கடமை.
மித்திரன் முதலில் அச்சாகும் தினசரி. அதனால் காலை 8.30 மணிக்கே எமது பணி அங்கு ஆரம்பமாகிவிடும். மித்திரனுக்கு முதலில் செய்திகளை சுருக்கமாக எழுதிக்கொடுத்துவிட்டு மதியத்திற்குமேல் மேலதிக தகவல்களுடன் செய்திகளை விரிவாக்கி வீரகேசரிக்கு எழுதிக்கொடுப்பேன். இதுவிடயத்தில் அச்சமயம் வீரகேசரி செய்தி ஆசிரியராக பணியிலிருந்த நடராஜா, மித்திரனில் செய்திகளுக்கு பொறுப்பாக இருந்த அவரது மருமகன் மயில். தவராஜா ஆகியோர் மிகுந்த அர்ப்பணிப்புணர்வுடன் தமிழ் மக்களுக்காக தமது ஊடகப்பணிகளை மேற்கொண்டனர். அலுவலக நிருபர்கள் கனக. அரசரட்ணமும் பயஸ் என அழைக்கப்பட்ட பால விவேகானந்தாவும் போட்டிபோட்டுக்கொண்டு செய்தி வேட்டையில் இறங்குவார்கள்.
அவர்கள் தினமும் தரும் தகவல்கள் மற்றும் பிரதேச நிருபர்களிடமிருந்து பெறப்படும் செய்திகள் என்பவற்றுடன் அரச தகவல் திணைக்களத்தின் அறிக்கை முதலானவற்றையும் உள்ளடக்கி வாசகர்களுக்கு உண்மைச்செய்திகளை வெளியிட்டது வீரகேசரி. ஒரு இடத்தில் தாக்குதல் சம்பவம் நடந்திருந்தால் அதில் கொல்லப்பட்டடவர்களின் பெயர், வயது, எத்தனை பிள்ளைகளின் தாய் அல்லது தந்தை தொழில் முதலன பூரண தகவல்களின் அடிப்படையில் கொல்லப்பட்டவர்கள் அப்பாவிப்பொதுமக்கள்தான் என்ற முடிவுக்கு வாசகர்கள் வந்துவிடுவார்கள். குறிப்பிட்ட செய்தியின் இறுதிப்பந்தி வரிகள் இவ்வாறு அமைந்திருக்கும்.
“…..இதுஇவ்விதமிருக்க இச்சம்பவத்தில் சில தீவிரவாதிகள் (பயங்கரவாதிகள்) கொல்லப்பட்டிருப்பதாக தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.”
“லங்காபுவத், லங்கா பொரு (லங்கா பொய்)” என்று சிங்கள வாசகர்களே எள்ளிநகையாடுவார்கள்.
செய்திகள் மக்களிடம் சரியாகச்சென்றடையவேண்டும் அதே சமயம் ஆட்சியாளர்களையும் திருப்திப்படுத்தவேண்டும். கத்தியின் மேல் நடப்பதற்கு ஒப்பான இந்தச்செயலலைத்தான் இன்றும் ஊடகவியலாளர்கள் மேற்கொண்டுவருகிறார்கள்.
அன்று எனக்கு மறக்கமுடியாத நாள். காலை எட்டு மணிக்கே அலுவலகம் வந்துவிட்டேன். மித்திரனுக்கு செய்தி எழுதிக்கொடுக்கவேண்டும். அக்காலப்பகுதியில் எம்முடன் சிறிது காலம் பணியாற்றியவர் திக்கவயல் தர்மகுலசிங்கம் என்ற இலக்கிய எழுத்தாளர். இவர் கூட்டுறவு தொழில் துறையில் வேலைசெய்து தற்காலிகமாக இடைநிறுத்திவைக்கப்பட்டிருந்தார். வீரகேசரியில் பணியிலிருந்து விட்டு சில மாதங்களில் விலகிச்சென்றுவிட்டார். அவருக்கு தொழில் சார்ந்த விசாரணை ஒன்று கொழும்பில் இருந்தமையால் முதல் நாள் இரவு யாழ்ப்பாணத்திலிருந்து தனியார் பஸ்ஸில் வந்து கொழும்பு ஆமர் வீதியில் இறங்கி கிராண்ட்பாஸ் வீதியில் அமைந்திருக்கும் வீரகேசரி அலுவலகம் வந்து சிரமபரிகாரம் செய்துவிட்டு ஆமர்வீதிச்சந்தியில் அம்பாள் கபேயில் காலை உணவை முடித்துக்கொண்டு என்னை சந்திப்பதற்காக மீண்டும் அலுவலகம் திரும்பி வந்து எனக்காக காத்துக்கொண்டிருந்தார்.
நான் கடமைக்கு வந்ததும் என்னுடன் உரையாடும்போது, “யாழ்ப்பாணத்தில் ஏதும் புதினம் இருக்கிறதா?” – என்று கேட்டேன்.
“ ஆம். வடமராட்சியில் ஒரு தாக்குதல் சம்பவம் நடந்திருக்கிறது. சில அப்பாவிப்பொதுமக்கள் கொல்லப்பட்டுவிட்டனர். மந்திகை ஆஸ்பத்திரியும் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. பொம்பர் தாக்குதல் அல்ல. ஹெலியிலிருந்து சுட்டிருக்கிறார்கள்.”
இவ்வளவும்தான் அவர் எனக்குத்தந்த தகவல். அவர் சில நிமிடங்களில் புறப்பட்டுவிட்டார். நான் துரிதமாக இயங்கினேன். முதலில் யாழ்ப்பாணம் பஸ்நிலையத்தில் அமைந்துள்ள பூபாலசிங்கம் புத்தகசாலைக்குத்தொடர்பு கொண்டு அன்று காலை வெளியான ஈழநாடு பத்திரிகையின் தலைப்புச்செய்திகளை கேட்டுப்பெற்றேன். வடமராட்சி சம்பவத்தில் கொல்லப்பட்ட அப்பாவிகளின் பெயர் விபரங்கள் வெளியாகியிருந்தன. சிலர் காயமுற்று மந்திகை ஆஸ்பத்திரியிலும் யாழ். போதனா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டிருந்தனர். யாழ்ப்பாணம் அரசாங்க அதிபராக அச்சமயம் கடமையிலிருந்த பஞ்சலிங்கம் அவர்களின் வீட்டுக்கும் யாழ். ஆஸ்பத்திரிக்கும் தொடர்புகொண்டு செய்திகளை ஊர்ஜிதப்படுத்திக்கொண்டு மித்திரனுக்கு செய்தி எழுதிக்கொடுத்தேன். யாழ்ப்பாணம் ரயில் நிலையத்திற்கு முன்பாக அமைந்திருந்த வீரகேசரி கிளைக்காரியாலயத்திற்கு யாழ். நிருபர்கள் அரசரட்ணமும் காசி நவரத்தினமும் கடமைக்கு வரும்வரையில் காத்திருக்காமல் யாழ்ப்பாணத்தில் வழக்கமாக செய்திகளுக்காக தொடர்புகொள்பவர்களிடமிருந்து மேலதிக தகவல்களையும் பெற்று விரிவான செய்தியை எழுதிவைத்து செய்தி ஆசிரியரிடம் சமர்ப்பித்தேன்.
பிரதம ஆசிரியர் சிவநேசச்செல்வன் பத்துமணிக்கு பின்னர்தான் கடமைக்கு வருவார். வந்தவுடன் தனது பிரத்தியேக அறைக்கு அழைத்து அன்று கிடைத்த, எழுதிய முக்கிய செய்திகளை கேட்டுப்பெற்று குறிப்பெடுத்துக்கொள்வார். நிருவாக இயக்குநர் அல்லது தூதரகங்கள் உட்பட முக்கிய அரசியல் பிரமுகர்களுக்கு தெரிவிப்பதற்காக அந்தக்குறிப்புகளை பிறகு பயன்படுத்துவார். இது அன்றாடம் நடக்கும் அலுவல்கள். மதியம் தமிழ்நாடு சென்னையிலிருந்து தொலைபேசி அழைப்புகள் வரும். அன்று எனது கஷ்ட காலம். மதியம் உணவுவேளையில் பலரும் வெளியே சென்றுவிட்டனர். நான் வீட்டிலிருந்து எடுத்துவந்த உணவுப்பார்சலை பிரித்து சாப்பிட அமர்ந்தவேளையில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. மறுமுனையில் அமிர்தலிங்கம்.
“ என்ன தம்பி நடக்கிறது?” என்று கேட்டார்.
காலையில் கிடைத்து எழுதிய செய்தியை சுருக்கமாக ஆனால் விபரமாகச்சொன்னேன். அச்சமயம் பெங்களுரில் சார்க் மாநாடு நடந்துகொண்டிருந்தது. சார்க் நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டிருந்தனர். பாரதப்பிரதமர் ரஜீவ் காந்தி, இலங்கையிலிருந்து ஜனாதிபதி ஜே.ஆர்,ஜெயவர்த்தனா, பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலி, வெளிவிவகார அமைச்சர் ஏ.ஸி. எஸ்.ஹமீத் உட்பட இலங்கை அரசின் உயர் அதிகாரிகளும் அச்சமயம் பெங்களுரில் முகாமிட்டிருந்தனர். வீரகேசரியுடன் தொடர்புகொண்டு செய்தி கேட்டறிந்த அமிர்தலிங்கம் உடனடியாகவே சென்னை இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்களுக்கு இச்செய்தியை கொடுத்துவிட்டார். அவரை குறிப்பிட்டு அச்செய்தி மறுநாள் பத்திரிகைகளில் வெளியாகிவிட்டது.
மருத்துவமனைகள் தாக்கப்படுவது என்பது பாரதூரமான செய்தி. ஏற்கனவே ஜே.ஆரின். ஆட்சியில் 1981 இல் உலகப்பிரசித்தி பெற்ற யாழ். பொதுநூலகம் தாக்கி எரிக்கப்பட்டமை அந்த ஆட்சியாளருக்கு மாறாத கறை. அந்தக்கறை மறையுமுன்னர் ஒரு மருத்துவமனையும் தாக்கப்பட்டிருப்பது ரஜீவ் காந்தியின் கவனத்துக்கு சென்னை பத்திரிகைகளின் ஊடாக கிடைத்துவிட்டது. பெங்களுரில் சார்க் மாநாடு நடந்துகொண்டிருக்கிறது. மதிய உணவு இடைவேளையில் இருநாட்டு தலைவர்களும் நேருக்கு நேர் சந்தித்து உரையாடுகின்றனர்.
“ இலங்கையில் எல்லாம் கட்டுப்பாட்டுக்குள்தானே?” என்று ராஜிவ், ஜே. ஆரிடம் கேட்கிறார்.
“ ஆம் எல்லாம் கட்டுப்பாட்டுக்கள்தான். எந்தவிதமான அசம்பாவிதமும் இல்லை.” என்கிறார் ஜே.ஆர்,
“ இல்லை… வடக்கிலே ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. படையினர் ஒரு மருத்துவமனைக்கும் ஹெலியிலிருந்து சுட்டிருக்கிறார்களாம். சில அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டும் காயப்பட்டுமிருக்கிறார்களாம். அமிர்தலிங்கம் இங்குள்ள ஊடகங்களுக்கு சொல்லியிருக்கிறார்.” என்று ராஜீவ் சொன்னதும் தர்மிஸ்டரின் முகம் இருண்டுவிடுகிறது. ஓரக்கண்ணால் லலித் அத்துலத் முதலியை பார்க்கிறார். அந்த பாதுகாப்பு அமைச்சரும் வெளிவிவகார அமைச்சரும் உஷாரடைகின்றனர்.
அவர்களின் அதிகாரிகள் கொழும்பை தொடர்பு கொள்கின்றனர். வீரகேசரியைத்தவிர வேறு எந்தப்பத்திரிகைகளிலும் அச்செய்தி இல்லை. அப்படியாயின் வீரகேசரி வேண்டுமென்றே சார்க் மாநாடு நடந்துகொண்டிருக்கும் தருணத்தில் இலங்கை அரசுக்கு அபகீர்த்தி ஏற்படுத்துவதற்கு அமிர்தலிங்கம் ஊடாக செயல்பட்டிருக்கிறது என்று அரச தலைமை நம்பிவிட்டது.
கொழும்பிலிருந்த அரச ஊடக அதிகாரிகள் குறிப்பிட்ட வடமராட்சி செய்தி வீரகேசரியில் மாத்திரம்தான் வெளியாகியிருப்பதாக மேல்மட்டத்திற்கு தெரியப்படுத்தியதும் வீரகேசரி நிருவாகம் எதிர்பாராத அழுத்தங்களை சந்தித்தது. அப்போதைய இலங்கை அரசுடன் நெருக்கமான உறவை வைத்திருந்த கொழும்பின் மிகப்பெரிய செல்வந்தர் வீரகேசரி நிருவாகத்தின் தலைவர் ஞானம் அவர்களுக்குத்தான் முதலாவது அழுத்தம் வந்திருக்கிறது. பின்னர் அழுத்தம் நிருவாக இயக்குநருக்கும் அவரைத்தொடர்ந்து முகாமையாளருக்கும் பின்னர் பிரதம ஆசிரியருக்கும் பிரயோகிக்கப்பட்ட அந்த அழுத்தம் புதுப்புதுக்கோலம் பூண்டு இறுதியாக எனது தலையில் வந்து விடிந்தது.
வழக்கமாக காலை பத்து மணிக்கு கடமைக்கு வரும் பிரதம ஆசிரியர் சிவநேசச்செல்வன் அன்று காலை 8 மணிக்கே வந்து தனது அறையில் எனது வரவுக்காக காத்திருக்கிறார். என்னைக்கண்டதும் உள்ளே அழைத்து, நேரே பொது முகாமையாளரின் அறைக்குச்செல்லுமாறு பணித்தார். வழக்கமாகத்தாமதித்து கடமைக்கு வரும் உயர் அதிகாரியான பொதுமுகாமையாளர் பாலச்சந்திரன் அன்றையதினம் அப்படி வேளைக்கே பிரசன்னமானது எனக்கு வியப்பாகவிருந்தது.
குறிப்பிட்ட வடமராட்சி சம்பவம் தொடர்பான செய்தி பற்றி செய்தி வெளியான விரகேசரி, மித்திரன் பத்திரிகைகள் இரண்டையும் காண்பித்து விளக்கம் கேட்டார். அந்தச்செய்தியின் பின்னணி குறித்து விளங்கப்படுத்தினேன். அரசமட்டத்தில் நிருவாகம் பாரிய அழுத்தத்தை எதிர்நோக்குவதனால் அன்று இரவு பஸ்ஸில் யாழ்ப்பாணம் சென்று யாழ். அலுவலக நிருபரையும் அழைத்துக்கொண்டு சம்பவங்கள் நடந்த இடங்களுக்கெல்லாம் நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்திக்குமாறும் மந்திகை, யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரிக்கெல்லாம் சென்று காயப்பட்டவர்களி;ன் பெயர் விபரங்களை சேகரிக்குமாறும், இயலுமானால் யாழ்.அரசாங்க அதிபர் உட்பட சம்பவத்தை நன்கு அறிந்த பிரமுகர்களையும் சந்தித்து செய்திகளை ஊர்ஜிதப்படுத்திக்கொண்டு இரண்டு நாட்களில் கொழும்பு திரும்ப வேண்டும் என்றார்.
அலுவலகத்தின் கஷியர் திருநாதனை இன்டகொம்மில் அழைத்து எனக்கு போக்குவரத்து செலவுக்கு ஐநூறு ரூபா கொடுக்குமாறும் சொன்னார். அவர் எனக்கு இரண்டு நிபந்தனைகளையும் விதித்தார். இந்தப்பயணம் அலுவலகத்தில் செய்தி ஆசிரியர், பிரதம ஆசிரியர் தவிர வேறு எவருக்கும் தெரியவும் கூடாது. யாழ்ப்பாணத்தில் நண்பர்களின் வீடுகளில் தங்காமல், சுபாஷ் விடுதியில்தான் தங்கவேண்டும். தப்பித்தவறி யாழ்நகரில் நண்பர்களைச் சந்தித்தால் எதற்காக இந்தத்திடீர் பயணம் என்பதையும் அவர்களுக்கு சொல்லாமல் தவிர்க்கவேண்டும். பொதுமுகாமையாளருக்கு நான் ஒரு பத்திரிகையாளன் என்ற முகம் மட்டுமல்ல ஒரு இலக்கியப்படைப்பாளி என்ற முகம் இருப்பதும் நன்கு தெரிந்தமையால்தான் அந்த நிபந்தனையை விதித்தார்.
வடமராட்சி சம்பவத்திற்கு சில நாட்களுக்கு முன்னர்தான் எமது இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நல்லூர் நாவலர் மண்டபத்தில் நடத்திய இலக்கிய மாநாட்டில் கலந்துகொண்டேன். அதில் புலிகள் இயக்கத்துடன் நெருக்கமாக இருந்த புதுவை இரத்தின துரையும் கவியரங்கில் கலந்துகொண்டார். அச்சமயம் சட்டர்டே ரிவியூ பத்திரிகையில் பணியாற்றிய கவிஞர் சேரனும் மாநாட்டில் பார்வையாளராக கலந்துகொண்டார். இவர்களும் மல்லிகை ஆசிரியர் டொமினிக்ஜீவாவும் எனது நண்பர்கள் என்பது பொதுமுகாமையாளர் பாலச்சந்திரனுக்கு நன்கு தெரியும். வீரகேசரி பிரசுரங்களின் வரிசையில் பல நாவல்களை வெளிட்டவர் அவர். யாழ்ப்பாணம் சென்றால் எனது இலக்கிய நண்பர்களை நான் சந்திக்காமல் திரும்பமாட்டேன். ஆனால் ஒரு பாரதூரமான செய்தியை ஊர்ஜிதப்படுத்தச்செல்லும்போது கடமைதான் முக்கியம் என்பதை அவர் வலியுறுத்தினார்.
எனது குழந்தைகளின் பால்மாவுக்குக்கூட பணம் போதாமல் மித்திரனில் நாளொன்றுக்கு பதினைந்து ரூபா சன்மானம் பெற்றுக்கொள்ளும் விதமாக சில தொடர்கதைகளை எழுதி மேலதிக வருவாய் தேடி வாழ்ந்த எனக்கு, அன்று போக்குவரத்துக்கு கிடைத்த சொற்ப பணத்தை சுபாஷ்விடுதியில் தங்குவதற்கு செலவிட மனமில்லை.
யாழ்ப்பாணம் பஸ்நிலையத்தில் காலை இறங்கியதும் நல்லூரில் இராமலிங்கம் வீதியிலிருந்த குடும்ப நண்பர், பிரபல வயலின் வித்துவான் இல்லம் சென்று சிரமபரிகாரம் செய்துவிட்டு, அவருடைய சைக்கிளையே எடுத்துக்கொண்டு யாழ்.ரயில் நிலையம் முன்பாகவுள்ள வீரகேசரி கிளைக்காரியாலயம் வந்தேன். அச்சுவேலி ஆவரங்காலிருந்து நிருபர் காசி. நவரட்ணம் வரும்வரையில் காத்திருந்து, வந்ததும் அவரது ஸ்கூட்டருக்கு எரிபொருள் நிரப்பிக்கொண்டு வடமராட்சி நோக்கி பறந்தோம். வல்லைவெளியால் செல்லும்போது மேலே ஹெலி சுற்றிக்கொண்டிருந்தது.
அந்த தாக்குதல் சம்பவத்தில் பதிக்கப்பட்ட வீடுகளுக்குச் சென்றோம். மரணச்சடங்கிற்காக வாசலில் கட்டப்பட்டிருந்த குருத்தோலைகள் கழற்றப்படாமல் காய்ந்திருந்தன. அந்த வீடுகளில் இருந்தவர்களின் கன்னங்களும் கண்ணீர் வடிந்து காய்ந்து கிடந்தன. கொல்லப்பட்டவர்களின் பெயர் வயது விபரம் பதிவுசெய்து, மரணவிசாரணை அதிகாரி வழங்கிய சான்றிதழ் பிரதிகளையும் பெற்றுக்கொண்டு மந்திகை ஆஸ்பத்திரிக்குச்சென்று அங்கு பிரதம மருத்துவ அதிகாரி (டீ.எம்.ஓ) மற்றும் காயப்பட்டவர்களை சந்தித்து நடந்த சம்பவத்தை கேட்டுப்பெற்றேன். குழந்தைகள் வார்டில் ஓரு குழந்தைக்காக தாயார் பால் கொண்டுவந்திருந்த தேமஸ் ஃபிளாஸ்க் சூட்டுச்சன்னங்களினால் சேதமடைந்திருந்தது. அதற்கு அருகில் படுத்திருந்த குழந்தை காயங்களுடன் தெய்வாதீனமாக உயிர்பிழைத்திருந்தது. மந்திகை ஆஸ்பத்திரிக்கு முன்பாக இருந்த உயர் நீதிமன்ற நீதியரசர் ஆனந்த குமாரசாமி மற்றும் பருத்தித்துறை மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிவான் ஆகியோரையும் சந்தித்து அவர்களின் வீடுகளுக்கு நேர்ந்த சேதங்களையும் பார்வையிட்டு அவர்களின் தகவல்களையும் பதிவுசெய்தேன். பருத்தித்துறை பஸ்நிலையத்திற்கு வந்தபோது இயக்கத்தின் போராளிகள் சிலர் ஆயுதங்களுடன் வேகமாக விரைந்துகொண்டிருந்தனர். மீண்டும் ஒரு தாக்குதல் அங்கே நடக்கப்போகிறது என்ற பீதியில் வீதி வெறிச்சோடிப்போயிருந்தது.
மின்னல் வேகத்தில் இயங்கி, யாழ்ப்பாணம் திரும்பி யாழ். போதனா வைத்தியசாலையில் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களையும் பார்த்துவிட்டு அரசாங்க அதிபரை அவரது பணிமனையில் சந்தித்தபின்னர், கவிஞர் சேரனை அவருடைய அலுவலகத்தில் சந்தித்தேன். நான் திரட்டி வந்த தகவல்களை அவரும் பிரதி எடுத்துக்கொண்டார்.
இரவு, யாழ். வீரகேசரி கிளைக்காரியாலயத்திலிருந்து தொலைபேசியில் தொடர்புகொண்டு முகாமையாளருக்கு, நான் யாழ், நிருபருடன் இணைந்து சேகரித்த தகவல்களை சொன்னபோது, தொலைபேசியில் பேசுவதை தவிர்த்துக்கொள்ளச்சொன்னார். குறிப்பிட்ட சம்பவம் நடந்தபின்பு யாழ்ப்பாணத்தில் வெளியான ஈழநாடு பிரதிகளை தபாலில் அனுப்பிவிட்டு சேகரித்த செய்திகள், மரணச்சான்றிதழ்களுடன் தாமதமின்றி வந்துசேருமாறும் சொன்னார். மின்னஞ்சலோ, ஸ்கேனிங் தொழில் நுட்பமோ இல்லாத அந்தக்காலத்தில் சேகரிக்கப்பட்ட அந்த உண்மைச்செய்திகளை எவ்வாறு ஆனையிரவு கடந்து கொண்டு வரவேண்டும் என்பதை மட்டும் அவர் சொல்லவில்லை. ஆனால், சேகரித்த அனைத்து உண்மைச்செய்திகள் சான்றிதழ்களையும் என்னுடனேயே எடுத்துவந்தேன். ஆனையிறவு உட்பட பல சோதனைச்சாவடிகளையும் கடந்து வந்து கொழும்பில் வீரகேசரி நிருவாகத்திடம் ஒப்படைத்து, அந்த நிருவாகம் எதிர்கொண்ட நெருக்கடியிலிருந்து மீளுவதற்கு துணைநின்றேன் என்ற மனநிறைவைத்தவிர எனக்கு வேறு ஒன்றும் இல்லை. எவ்வாறு செய்திகளை கொண்டுவந்து சேர்த்தேன் என்பதை ஊடக தர்மத்தின் நிமித்தம் வாசகர்களுக்கு என்னால் சொல்லமுடியாது.
அந்தப்பயணத்தில், எமது தமிழ் மக்கள் பாரிய இழப்புகளை எதிர்கொள்ளப்போகிறார்கள் என்பதற்கான அறிகுறிகளை நான் அன்று வடமராட்சியில் கண்டுகொண்டேன்.
1987 இல் வடமராட்சியில் நடந்த ‘லிபரேஷன் ஒப்பரேஷன்’ தாக்குதலுக்கான ஒத்திகை 1986 இறுதியிலேயே நடந்துவிட்டது.
நெருக்கடி காலத்திலும் துரிதமாக இயங்கிய நண்பர் காசி. நவரட்ணம் போன்ற பத்திரிகையாளர்கள் எம்மத்தியில் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை இன்றைய இளம் பத்திரிகையாளர்களுக்கு தெரிவிக்கவேண்டியது எனது கடமை. நண்பரின் ஆத்மா சாந்தியடையட்டும். அன்னாரின் இழப்பினால் துயருற்றிருக்கும் அவரது குடும்பம் மற்றும் பத்திரிகை உலக நண்பர்களின் துயரத்தில் நானும் பங்குகொள்கின்றேன்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.