அன்புள்ள நண்பர் கிரிதரனுக்கு வணக்கம். இலக்கிய நண்பர் மல்லிகை ஜீவா அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு, நீங்கள் எழுதியிருந்த குறிப்புகளைப்படித்தேன். அவர் பற்றி ஏற்கனவே நிறைய எழுதியிருக்கின்றேன். மல்லிகை ஜீவா நினைவுகள் என்ற நூலையும் 2001 ஆம் ஆண்டு எழுதி வௌியிட்டு, அந்த நூலை அவரது துணைவியாருக்கும் மூன்று பிள்ளைகளுக்கும்தான் சமர்ப்பணம் செய்துள்ளேன்.
உங்கள் பதிவுகள் இணைய இதழிலும் முருகபூபதி பக்கத்தில் நீங்கள் பதிவிட்டுள்ள எனது சில ஆக்கங்களிலும் ஜீவா பற்றி நான் எழுதியிருப்பவை, இன்னமும் வாசகரின் பார்வைக்காக வாழ்ந்துகொண்டிருக்கிறது.
மல்லிகை ஜீவாவின் பிறந்த தினம் வரும் நாட்களிலெல்லாம் முகநூல் எழுத்தாளர்கள் பலர் அவர்பற்றிய தமது நினைவுகளை பகிரவும் மறக்கமாட்டார்கள்.
ஆனால், வெளியுலகில் – இணைய உலகில் என்ன நடக்கிறது…? என்பது தெரியாமலேயே அவர், கொழும்பின் புறநகரில் மட்டக்குளி பிரதேசத்தில் ஏக புதல்வன் திலீபனின் இல்லத்தில் அஞ்ஞாதாவாசத்தில் சுவர்களுடன் பேசிக்கொண்டிருக்கிறார்.
கடந்த ஆண்டும் அவரைச்சென்று பார்த்துவிட்டுத்திரும்பி எழுதியிருந்தேன்.
மல்லிகை என்று பெயரில் ஒரு இலக்கிய இதழையே அவர்தான் நாற்பது வருடங்களுக்கு மேலாக நடத்தினார் என்பதையோ, யாழ். பல்கலைக்கழகத்தை முன்வைத்து அதனோடு ஜீவாவின் அளப்பரிய தொடர்பணிகளையும் ஒப்பீடு நீங்கள் செய்திருப்பதை இன்று அவரிடத்தில் எவரேனும் சொன்னால், “ அப்படியா…? . “ என்று அப்பாவித்தனமாகத்தான் அவர் திருப்பிக்கேட்பார்.
காலம் இவ்வாறுதான் அவரை வஞ்சித்துள்ளது என்பதை கண்ணீருக்கு மத்தியில் சொல்கின்றேன். மேற்கிலங்கையில் எங்கோ ஒரு மூலையில் கடற்கரைக்காற்றை சுவாசித்துக்கொண்டிருந்த என்னை, அவர்தான் இலக்கிய உலகிற்கு 1970 களில் முதல் முதலில் அறிமுகப்படுத்தியவர்.
அவரால் எனக்குக்கிடைத்த இலக்கிய நண்பர்கள் ஏராளம். அவர்கள் பற்றியெல்லாம் ஏற்கனவே எழுதியிருக்கின்றேன். நீங்களும் பார்த்திருப்பீர்கள்.
இனி, உங்கள் கேள்விகளுக்கு வருகின்றேன்.
யாழ்ப்பாணத்தில் தமிழ்ப் பல்கலைக் கழகமொன்றுள்ளது. இங்கு தமிழ்ப்பேராசிரியர்கள் பலர் இது ஆரம்பித்த நாளிலிருந்து பணி புரிந்து வந்துள்ளார்கள். இவர்கள் இதுவரையில் இலங்கைத்தமிழ் இலக்கியத்தை வெளிப்படுத்தும் வகையில் இதுவரையில் கீழுள்ளவற்றில் எத்தனை விடயங்களைச் செய்துள்ளார்கள் என்பதை அறிந்தவர்கள் அறியத்தரவும்?
உங்கள் கேள்விக்கொத்தில் நியாயங்கள் பல இருக்கின்றன. கேட்கப்படவேண்டிய கேள்விகள் அவை. யாழ்.பல்லைக்கழக வளாகம் ஆரம்பிக்கப்பட்டபோது அதன் முதல் தலைவராக நியமனமானவர் பேராசிரியர் க. கைலாசபதி.
அவர் இலக்கிய உலகில் பேராளுமை. ஏற்கனவே ஏரிக்கரை தினகரன் பத்திரிகையில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் மிக்கவர். எப்பொழுதும் மற்றவர்களை ஊக்குவித்து வளர்த்துவிடும் இயல்பும் கொண்டிருந்தவர்.
அவரது அந்தத் தலைவர் பதவி நியமனத்தைக்கூட தமிழரசுக்கட்சியினரும் சுதந்திரன் ஆசிரியராகவிருந்த கோவை மகேசனும் கடுமையாக விமர்சித்தனர்.
அந்த நியமனம் கிடைப்பதற்கு முன்னர் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினால் கொழும்பில் நடத்தப்பட்ட தேசிய ஒருமைப்பாடு மாநாடு தொடர்பான பிரசாரக்கூட்டத்தை, எமது நீர்கொழும்பூரில் நான் நடத்தியபோது கைலாசபதியும் தற்போது லண்டனில் வதியும், அவரது மாணாக்கர் மு. நித்தியானந்தனும் சிங்கள எழுத்தாளர் குணசேனவித்தானவும் வருகை தந்து உரையாற்றினர்.
கைலாஸ் பேசிக்கொண்டிருந்த போது அந்த மண்டபத்தின் கூரையை கற்கள் பதம் பார்த்தன. எறிந்தவர்கள் தமிழ் உணர்ச்சியால் உந்தப்பட்ட கொழுந்துகள்.
எனினும், கைலாஸ் அக்கூட்டத்தில் முழுமையாகப் பேசி முடித்தபின்னரும் அந்த இரவில் பஸ்நிலையத்திற்கு நடந்தே வந்து புறப்பட்டு கொழும்பு சென்றார். இதற்கு பலர் கண்கண்ட சாட்சிகள்.
மறுநாள் வீரகேசரி – தினகரன் பத்திரிகையின் தலைப்புச்செய்தியில் கைலாசபதி யாழ். பல்கலைக்கழக வளாகத்தின் தலைவராக நியமனம் என்ற வரிகள் பெரிய எழுத்தில் பதிவாகியிருந்தது. அச்செய்தி அச்சாகும்போது அவர் எங்கள் ஊரில் முதல்நாள் இரவு பேசிக்கொண்டிருந்தார்.
பின்னாளில் மல்லிகை ஆண்டு மலர் வெளியீட்டு விழாவை நீர்கொழும்பில், கைலாஸ் பேசிய அதே மண்டபத்தில் நான் ஒழுங்கு செய்தபோது , அங்கு வந்து உரையாற்றிய மல்லிகை ஜீவா, கைலாஸ் குறித்துப்பேசும்போது எங்கள் ஊரையும் பெருமைப்படுத்திச்சொன்னார்.
கைலாசபதி எப்பொழுதும் தன்னைச்சுற்றி ஆளுமைகளைத்தான் வைத்திருப்பதற்கு விரும்புபவர். அவர் யாழ்.பல்கலைக்கழகத்தில் பதவி ஏற்றதும் அங்கு பணியாற்ற அவர் அழைத்திருப்பவர்களின் பெயர்களைப்பாருங்கள்:
பேராசிரியர் கா. சிவத்தம்பி, நுஃமான், மௌனகுரு, சித்திரலேகா மௌனகுரு. மு. நித்தியானந்தன், நிர்மலா, அ. சண்முகதாஸ், ஏ.ஜே. கனகரட்ணா, ஆ. சிவநேசச்செல்வன், சோ. கிருஷ்ணராஜா. தற்போது எனது நினைவிலிருப்பவர்கள் இவர்கள்.
1976 ஆம் ஆண்டு தமிழ் நாவல் நூற்றாண்டு வருகிறது என்பதை முதல் முதலில் தமிழ் உலகிற்கு சொன்னவர்தான் கைலாசபதி. இதனை பின்னாளில் தமிழக மூத்த எழுத்தாளர் சிட்டி பெ. கோ. சுந்தரராஜனும் பகிரங்கமாக ஒப்புக்கொண்டார்.
அக்காலப்பகுதியில் கைலாஸ் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் வாராந்தம் தமிழ் நாவல் இலக்கியம் தொடர்பாக தொடர் கருத்தரங்குகளை நடத்தினார்.
பின்னாளில் அக்கருத்தரங்கு கட்டுரைகள் யாவும் நூலுருப்பெற்றது. அதில் பல பல்கலைக்கழக விரிவுரையாளர்களது கட்டுரைகள் இடம்பெற்றிருந்தன. அதனைத்தொடர்ந்து, கைலாஸ் நாவல் நூற்றாண்டு ஆய்வரங்கை அடுத்தடுத்து இரண்டு நாட்கள் பல்கலைக்கழகத்தில் நடத்தினார்.
அதற்கு தமிழகத்திலிருந்து எழுத்தாளர் அசோகமித்திரனையும் அழைத்திருந்தார். பேராசிரியர் தோதாத்திரியும் வரவிருந்தார். எனினும் அவர் வருகை தரமுடியாமல், அவரது ஆய்வுக்கட்டுரை அரங்கத்தில் வாசிக்கப்பட்டது.
இலக்கிய ரீதியில் விமர்சன முறைமையில் கைலாசபதியுடன் முரண்பட்டிருந்த குரும்பசிட்டியில் அச்சமயம் நீரிழிவு உபாதையுடன் நடக்கவும் முடியாமல் முடங்கியிருந்த இரசிகமணி கனகசெந்திநாதன் பற்றி அசோகமித்திரனிடம் விபரித்ததுடன், நுஃமானையும் தனது கார் சாரதியையும் அழைத்து காரையும் ஒப்படைத்து, அசோகமித்திரனை குரும்பசிட்டிக்கு அனுப்பிவைத்தார்.
மாற்றுக் கருத்துக்கொண்டவர்கள் குறித்தும் கைலாஸ் எவ்வாறு நடந்துகொண்டார் என்பதற்கு இது ஒரு முக்கிய உதாரணம். கைலாஸ் தலைவராக இருந்த அக்காலம் பொற்காலம்தான்.
அக்காலப்பகுதியில் அங்கு மாணவர்களாக இருந்தவர்கள்தான் கவிஞர்கள் சேரனும், வ. ஐ.ச.ஜெயபாலனும்.
மாணவர்கள் மத்தியில் வாசிக்கும் பழக்கத்தை வளர்த்தவர்கள்தான் பேராசிரியர்கள் கைலாசபதியும் சிவத்தம்பியும்.
யாழ்ப்பாணத்தில் எங்காவது புத்தக வெளியீடுகள் நடைபெற்றால், தங்களுக்கு செல்லமுடியாதுபோனாலும் தமது மாணவர்களுக்கு நினைவூட்டி அனுப்பிவைப்பார்கள். அத்துடன் நிற்கமாட்டார்கள். மறுநாள் விரிவுரையின்போது முதல் நாள் கூட்டத்தில் யார்…? என்ன பேசினார்கள்..? எனக்கேட்டு அம்மாணவர்களிடத்தில் இலக்கியப்பிரக்ஞையை வளர்த்தார்கள்.
1975 ஆம் ஆண்டு வெளிவந்த எனது சுமையின் பங்காளிகள் நூல் அறிமுக நிகழ்வு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் மல்லிகை ஜீவா ஒழுங்குசெய்திருந்தபோது, “ பிரதேச இலக்கியத்தை பிரதிபலிக்கும் நூல் அறிமுகம் நடக்கிறது சென்றுவாருங்கள் “ என்று தமது மாணவர்களை கைலாஸ் அனுப்பிவைத்தார். அவ்வாறு வந்த மாணவர்கள் சிலர் என்னுடன் உரையாடியபோதுதான் கைலாஸின் இயல்புகளை தெரிந்துகொண்டேன்.
யாழ். பல்கலைக்கழகம் , அது உருவான காலத்திலும் அதன்பின்னரும் இலக்கியத்திற்காக மேற்கொண்ட ஆக்கபூர்வமான பணிகள் நிறையவுண்டு. அங்கு அக்காலப்பகுதியில் பணியாற்றியவர்கள், கற்ற மாணவர்களிடம் எனக்குத் தெரியாத பல செய்திகள் இருக்கலாம்.
ஆனால், அதே பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டபொழுது கண்டித்து கோஷம் எழுப்பிய உணர்ச்சிக்கொழுந்துகளின் வாரிசுகள் தற்போது அங்கிருந்து, பொங்கு தமிழ் – எழுக தமிழ் என்று ஏதோவெல்லாம் நடத்திக்கொண்டிருக்கின்றன.
ஈழத்து இலக்கியத்திற்காக ஆக்கபூர்வமாக இயங்கவேண்டிய மாணவர் பரம்பரைக்கு கொம்பு சீவிவிடுவதற்கு வெளிச்சக்திகள் தொடர்ச்சியாக இயங்கிவருகின்றன.
இந்நிலையில் அங்குள்ள பேராசிரியர்களும் விரிவுரையாளர்களும் சூழ்நிலையின் கைதிகளாக கள்ளமெளனம் அனுட்டிக்கின்றனர்.
ஒரு செய்தியுடன் எனது இந்த எதிர்வினையை முடிக்கின்றேன்.
ஒரு மாணவர் தாம் சமர்ப்பித்த ஆய்வேட்டில், “தற்காலத்தில் டென்மார்க்கிலிருந்தும் சீனாவிலிருந்தும் தமிழ் இலக்கியம் படைக்கிறார்கள் என்று எழுதிவிட்டு உதாரணமாக இரண்டுபேரின் பெயர்களை குறிப்பிட்டிருந்தார்.
இதனையும் ஒரு பேராசிரியர் பார்த்து புள்ளிபோடுகிறார்.
யாழ். பல்கலைக்கழகம் அன்று அப்படித்தான் இருந்தது.!!! இன்று இப்படித்தான் இருக்கிறது. ?????
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.