எமது நீர்கொழும்பூரில் கலை, இலக்கியவாதிகள் இணைந்து இலக்கிய வட்டம் என்ற அமைப்பை 1975 களில் தொடங்கினோம். அதன் தலைவராக இயங்கியவர் எழுத்தாளர் மு. பஷீர். இந்த அமைப்புக்கு முன்னோடியாக எமது இல்லத்தில் வளர்மதி நூலகம் என்ற நூல் நிலையத்தையும் தொடக்கியிருந்தேன். வளர்மதி நூலகம் 1971 இல் மக்கள் விடுதலை முன்னணியின் கிளர்ச்சி தொடங்கப்பட்ட காலத்தில் உருவானது. மாலையானதும் ஊரடங்கு உத்தரவு அமுலாகிவிடும். வெளியே செல்லமுடியாது. அக்காலத்தில் தொலைக்காட்சியும் இல்லை.
இலக்கிய நண்பர்கள் மத்தியில் நூல்களை பரிமாரிக்கொள்வதற்காகவே வளர்மதி இயங்கியது. வளர்மதி கையெழுத்து சஞ்சிகையும் நடத்தினோம். இக்காலப்பகுதியில் மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவாவும் எங்கள் ஊருக்குவந்து அறிமுகமானார்.மல்லிகை நீர்கொழும்பு சிறப்பிதழும் வெளியிட்டோம். அதற்கு முன்னர் எமது மாமா முறையானவரான அ. மயில்வாகனன் தனது சாந்தி அச்சகத்திலிருந்து அண்ணி என்ற மாத இதழை சில மாதங்கள் நடத்தினார். அதன் முதல் இதழின் வெளியீட்டு விழாவுக்கு மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த செல்லையா இராசதுரை தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியின்போதுதான் பஷீர் எனக்கு அறிமுகமானார். எனினும் அப்போது நான் இலக்கியப்பிரவேசம் செய்திருக்கவில்லை. பழைய பஸ்நிலையத்திற்கு அருகாமையில் அமைந்திருந்த மாநகர சபையின் பொது நூலகத்தில் பஷீரை அவ்வப்போது சந்திப்பேன். அவருக்குத் தெரிந்த தொழில் பீடி சுற்றுவது. அவரது வாப்பா கேரளத்திலிருந்து வந்தவர்.
கேரளத்தில் மிகவும் புகழ்பெற்ற தொழில்தான் பீடி வர்த்தகம். இலங்கையில் அக்காலப்பகுதியில் ராஜா பீடி, யானை பீடி, கல்கி பீடி, பவுண் பீடி என்பன பிரபல்யம் பெற்றிருந்தன. ராஜா பீடி தொழிற்சாலையை கேரளத்திலிருந்து வந்தவர்கள் தொடங்கியிருந்தாலும், நீதிராஜா - யானை , சின்னத்துரை - கல்கி , வடிவேல் - பவுண் என்பன இலங்கைத் தமிழர்களினால் தொடங்கப்பட்டவை. இவர்களில் நீதிராஜா யூ. என்.பி.யின் கொழும்பு மாநகர சபை உறுப்பினராகவும் செனட்டராகவும் இருந்தவர். இவரது யானை பீடித்தொழிற்சாலைக்கு நீர்கொழும்பிலும் கிளை இருந்தது. அதனை நடத்தியவர்தான் பஷீரின் வாப்பா. பஷீருக்கு கேரளத்தொடர்புகள் இருந்தமையால், கேரள இலக்கியங்களில் பரிச்சியம் மிக்கவர். இவர்தான் எனக்கு வைக்கம் முகம்மது பஷீர், தகழி சிவசங்கரன் பிள்ளை, பொற்றேகாட், கேசவதேவ் முதலான கேரள இலக்கியவாதிகளின் படைப்புகளை அறிமுகப்படுத்தியவர்.
அத்துடன் நான் சிறுகதைகள் எழுதத்தொடங்கியதும், அதன் மூலப் பிரதியை படிப்பவரும் இவர்தான். நீர்கொழும்பு பிரதேச கடற்றொழிலாளர்களின் பேச்சுவழக்கில் எழுதப்பட்ட எனது ஆரம்ப காலக்கதைகளை படித்து, தொடர்ந்தும் அவ்வாறு எழுதுமாறு ஊக்கமும் தந்தவர். பிரதேச மொழிவழக்கு – மண்வாசனை முதலான புரிதல்களை எனக்குள் விதைத்தவரும் பஷீர்தான். அவருக்குப்பின்னர் நான் எழுதத்தொடங்கியிருந்தாலும், எனது முதல் தொகுதி சுமையின் பங்காளிகள் நூலுக்கு பதிப்புரையும் தந்து நீர்கொழும்பு இலக்கியவட்டத்தினால் வெளியிடச்செய்ததுடன், வெளியீட்டுவிழாவிலும் உரையாற்றி வாழ்த்தியவர்.
இவ்வாறு 1970 ஆம் ஆண்டு காலப்பகுதி முதல் இற்றைவரையில் எந்தவொரு விக்கினமும் இல்லாமல் எமக்கிடையே இலக்கிய நட்புணர்வு கடந்த ஐந்து தசாப்த காலமாகத் தொடருகின்றது.
நீர்கொழும்பு, மினுவாங்கொடை, புத்தளம், குருநாகல் என அவருடன் பல இலக்கிய நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று பயணித்திருக்கின்றேன். அவரை நேரில் பார்ப்பதற்குச்சென்றால், அவரது மடியில் பீடி இலைகளும் அதற்குள் இடப்படும் தூளும் பரவியிருக்கும் ஒரு வட்டிலும் அமர்ந்திருக்கும். அவரது கைவிரல்களிலிருந்து இயந்திர கதியில் பீடிகள் பிறந்து கொண்டிருக்கும். அந்தக் கலையழகை ரசித்துக்கொண்டே அவரிடமிருந்து உதிரும் இலக்கியப்புதினங்களை சலிக்காமல் கேட்டுக்கொண்டிருக்கலாம். பஷீர் ஒரு சிறந்த பீடிக்கைத்தொழில் நிபுணராக இருந்தபோதிலும், அவரது உதடுகளில் பீடி அமர்ந்து நான் பார்த்திருக்கவில்லை. அவருக்கு சிகரட் புகைக்கும் பழக்கம்தான் இருந்தது. பின்னாளில் அந்தப்பழகத்தை விட்டுவிட்டார். அவருக்கு சைக்கிள் ஓடவும் தெரியாது. நீர்கொழும்பில் நான் இருந்தபோது அவரை எனது சைக்கிளில் ஏற்றிச்செல்வதுமுண்டு. அவருக்கு இலக்கியம் மாத்திரம்தான் தெரியும் என்பதற்கில்லை. அரசியலும் பேசுவார். சிறந்த பேச்சாளர். அவருடைய பேச்சுவன்மையால் கவரப்பட்ட எங்கள் பிரதேச ஐக்கிய தேசியக்கட்சி பிரமுகர்கள், அவரை தங்கள் மேடைகளுக்கும் அழைத்துக்கொள்வதுண்டு. நான் அவருக்கு நேர் எதிராக இடதுசாரிகளின் மேடைகளில் பேசிக்கொண்டு திரிந்தேன்.
எனினும் நாமிருவரும் சந்திக்கும்போது இலக்கியம்தான் பேசுவோம். அதனால் எந்தவொரு முரண்பாடும் எமக்கிடையே தோன்றவில்லை. அவர் மினுவாங்கொடையில் நிரந்தரமாகியபோது, அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸில் இணைந்துகொண்டார். அதனால், அந்தக்கட்சியின் பிரசார பீரங்கியானார். அஷ்ரப், ரவூப் ஹக்கீம் ஆகியோரின் நம்பிக்கைக்குரியவரானார். பஷீரின் சிறுகதைத்தொகுதிகளின் வெளியீட்டு நிகழ்வுகளில் இவர்களும் பேசுவார்கள்.
மீறல்கள் (1996) தலைமுறை இடைவெளி (2003) நிஜங்களின் வலி (2005) இது நித்தியம் ( 2013) ஆகிய சிறுகதைத்தொகுதிகளை வரவாக்கியிருக்கும் பஷீர், ஈழத்து இலக்கியவாதிகளினால் மிகவும் நேசிக்கப்பட்டவர். மதிக்கப்பட்டவர். தலைமுறை இடைவெளி தொகுதியை எமது முகுந்தன் பதிப்பகத்தினால் அவருக்கு வெளியிட்டுக்கொடுத்தேன். சென்னையில் இலக்கிய நண்பர் செ.கணேசலிங்கன் அதனை அச்சிட்டுத்தந்தார். அதன் முன்னுரையில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தேன்:
“ இக்கதைகளில் பஷீர் என்ற மனிதநேயவாதி தென்படுகிறார். சில கதைகளில் அவர்தான் பிரதான பாத்திரமோ என்று நினைக்குமளவுக்கு சஞ்சரித்துள்ளார். இவரது கதாபாத்திரங்கள் மனிதர்கள் மாத்திரமல்ல. பிராணிகளும்தான். நாய் – பூனை – பாம்பு – இவைகளும் எம்மை சிலிர்க்கச்செய்கின்றன. பஷீரின் கதைகள் யதார்த்தப்பண்பு கொண்டவை. தான் வாழும் சூழலை அநாயசமாக இயல்போடு சித்திரிக்கின்றார். அதனால், நாமும் கதைகளினூடே அழைத்துச்செல்லப்படுகிறோம். ஒரு எழுத்தாளனின் திறமை வாசகனின் சிந்தனையில் ஊடுருவுவதில்தான் பெரிதும் தங்கியிருக்கிறது. பஷீரின் கதைகள் – கதா மாந்தர் வாசகரிடம் பதிவாகின்றமையால், அவரது படைப்பு ஆளுமைத்திறன் துல்லியமாக துலங்குகின்றது. ஒரு படைப்பாளி தனது ஆக்க இலக்கியப்படைப்பில் தன்னை முதனிலைப்படுத்திவிடல் தகாது எனக்கூறும் விமர்சனனங்களை படித்திருக்கின்றேன். அந்த விமர்சனங்களை மாத்திரம் வைத்துக்கொண்டு பஷீரின் கதைகளை எடைபோடமுடியாது. அளவுகோல்களுடன் இந்தக்கதைகளை அண்டவும் முடியாது. மனிதநேயம் கூட ஒருவகையில் போர்க்குணம்தான். அந்தக்குணாம்சத்தை பஷீரின் ஒவ்வொரு கதையிலும் காணமுடிகிறது. “
இந்தத் தொகுதியை அவர், சியோனிஸக் கொலைவெறிக்கெதிராய் இன்னுயிர் துறக்கும் பலஸ்தீனப் போராளிகளுக்கு சமர்ப்பணம் செய்துள்ளார்.
பஷீரின் சிறுகதைகள் பற்றி பேராசிரியர் எம்.எஸ்.எம் அனஸ் , அஷ்ரப், ரவூப் ஹக்கீம், மேமன்கவி, நிலாம், திக்குவல்லை கமால், மருதூர் ஏ. மஜீத், கே. எஸ். சிவகுமாரன், அஷ்ரப் சிஹாப்தீன், இளங்கீரன், எம். எச். எம்.ஷம்ஸ், பவுஸர், ஜவாத் மரைக்கார் முதலானோர் சிலாகித்து விமர்சித்துள்ளனர்.
1968 ஆம் ஆண்டு பஷீரின் முதல் சிறுகதை வீரகேசரி வாரவெளியீட்டில் வெளியானது. தனது கதைகளுக்கு தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் பரிசில்களும், இலங்கை அரசின் கலாபூஷணம் விருதும் பெற்றவர். இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் வாழும் கதைகள் என்ற நிகழ்ச்சியை சில ஆண்டுகள் தொடர்ந்து நடத்தியிருப்பவர். மல்லிகை அட்டைப்பட அதிதியாகவும் கௌரவிக்கப்பட்டவர். இலங்கைசெல்லும் சந்தர்ப்பங்களிலெல்லாம் இவரையும் பார்த்துவிடுவேன். அவ்வேளைகளில் கடந்த காலங்கள் இருவரதும் நெஞ்சிலும் அலைமோதிக்கொண்டிருக்கும். மல்லிகை ஜீவா, நீர்கொழும்பூர் முத்துலிங்கம், தருமலிங்கன், செல்வரத்தினம், சந்திரமோகன், பவானிராஜா, நிலாம், வண. ரத்தனவன்ஸ தேரோ, தேவா ஆகியோர் நீர்கொழும்பு இலக்கியச்சந்திப்புகளில் கலந்துகொண்ட சம்பவங்களையெல்லாம் நினைவுபடுத்திப் பேசிக் கொண்டிருப்பார். தற்போது செல்வரத்தினம் பிரான்ஸிலும் தருமலிங்கன் கனடாவிலும் தேவா ஜேர்மனியிலும் நான் அவுஸ்திரேலியாவிலும் வசிக்கின்றோம்.
சில வருடங்களுக்கு முன்னர் பார்க்கச்சென்றவேளையில் கையில் ஊன்றுகோலுடன் என்னுடன் நடைப்பயணம் வந்தார். எப்பொழுதும் இலக்கியம்பேசும் பஷீர், அவ்வேளையிலும் தனது ஊன்றுகோலைப் பற்றியவாறு, தமிழக கவிஞர் வைதீஸ்வரனின் கவிதையொன்றை நினைவுபடுத்தினார்.
"நிலத்தில் ஒரு தடி விதியென நகருகிறது,
முதுமையை வீடுவரை இழுத்துக்கொண்டு"
இதுபற்றி கவிஞர் வைதீஸ்வரனை சிட்னியில் சந்தித்தபோது சொன்னேன். தானே மறந்துவிட்ட அக்கவிதையை உங்கள் ஈழத்து படைப்பாளி நினைவில் வைத்திருக்கிறாரே என்று வியப்படைந்தார் வைதீஸ்வரன்.
பஷீர், கடும் சுகவீனமுற்றிருப்பதாக அறிந்து, கடந்த அக்டோபர் மாதம் இலங்கைசென்றபோது, மீண்டும் பார்க்கச்சென்றேன். அப்போது கடும் மழைக்காலம். அதனால், அவருடன் முன்புபோன்று நடைப்பயணம் சாத்தியமில்லை என்பதை தெரிந்து கொண்டே ஒரு மாலைப்பொழுதில் மினுவாங்கொடை கள்ளொளுவை கிராமத்தில் அவரது வீட்டைத் தேடிக்கொண்டு சென்றேன். பஷீர், ஒரு சாய்வு நாற்காலியில் அமர்ந்தவாறு, என்னைக்கண்டதும் எழுந்திருக்கச்சிரமப்பட்டார். அவரை அணைத்து மகிழ்ந்து, அவர் அருகிலேயே அமர்ந்துகொண்டேன். எத்தனையோ கதா மாந்தர்களை உயிரும் சதையும் உணர்வுமாக சித்திரித்து நடமாடவிட்டிருக்கும் இந்த எழுத்துக்கலைஞர், ஒரு கதா மாந்தனாகவே அந்த சாய்வுநாற்காலியில் சாய்ந்திருந்து தனது உடல் உபாதைகள் பற்றி சொல்லத்தொடங்கினார்.
அவரது அருமை மனைவியும் பிள்ளைகளும் மருமக்களும் பேரப்பிள்ளைகளும் அவரை நன்கு பராமரிக்கின்றனர். வாழ்க்கைப் பயணத்தில் படுக்கையே நிரந்தரமாகிவிடுபவர்களுக்கு சொந்தமாக இருப்பது அந்தப் படுக்கையும் சாய்வு நாற்காலியும்தான்.
முன்னர் சந்தித்தவேளைகளில் இலக்கியமே பேசிக்கொண்டிருந்தவர், அன்று தனது நோய் உபாதைகள் பற்றியும், தன்னை வந்து பார்த்தவர்கள் பற்றியும்தான் அரற்றிக்கொண்டிருந்தார். அவரது மனைவி அருகிலிருந்து அவரது தேவைகளை கவனிக்கிறார். எனக்கு கண்ணதாசனின் பாடல் வரிகள் நினைவுக்கு வந்தன.
“ஆலம் விழுதுகள் போல் உறவு ஆயிரம் வந்துமென்ன..?
வேர் என நீ இருந்தாய் அதில் நான் வீழ்ந்துவிடாதிருந்தேன்“
அங்கு மற்றும் ஒரு அதிசயத்தையும் கவனித்தேன். அவருடை மகளின் கணவரான மருமகன், ஒரு தந்தையை பராமரிப்பது போன்று உடனிருந்து பணிவிடைகள் செய்கிறார். விடைபெறும்போது, “ பஷீர் நானா ( நாம் அவரை அவ்வாறுதான் அழைப்போம் ) நீங்கள் கொடுத்துவைத்தவர். தைரியமாக இருங்கள் “ எனச்சொல்லி அவர் கைபற்றி அணைத்துவிட்டு விடைபெற்றேன். ஊன்றுகோலுடன் நடமாடியவர், சாய்வுநாற்காலியில் தஞ்சமடைந்துவிட்டார். தோப்பில் முகம்மது மீரானின் சாய்வு நாற்காலி நாவலில் வரும் சாய்வுநாற்காலியும் ஒரு முக்கிய பாத்திரம்தான். இன்று, மினுவாங்கொடை கள்ளொளுவை கிராமத்தில் இரண்டு கதா பாத்திரங்கள் அவரது வாழ்விலும் எழுதப்படுகிறது.