தமிழாராய்ச்சிக்கென உலகப்பொது நிறுவனம் அமைத்தவர் அமரர் தனிநாயகம் அடிகளார் எனச்சொல்வோம். இன்னலுற்ற தமிழ் சமூகத்திற்காக அயராது பாடுபட்டவர்கள் வரிசையில் குறிப்பிடத்தகுந்த ஒருவர் எனச்சொன்னால் அது அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் அவர்களையே குறிக்கும். கடந்த 11 ஆம் திகதி மாலை கொழும்பில் மறைந்தார் என்ற துயரச்செய்தி வந்தது. இலங்கை வடபுலத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் நீண்ட நெடுங்காலமாக பங்குத்தந்தையாக ஆன்மீக பணிகளை முன்னெடுத்துவந்தவர். அதேசமயம், தான் வாழ்ந்த பிரதேசத்து மக்களின் நலன்கள் குறித்து அக்கறையோடு செயற்பட்டவர். இலங்கையில் தமிழ் சமூகத்திற்கும் தமிழர்தம் உரிமைக்கும் பாதிக்கப்பட்ட தமிழ் அகதிகளின் வாழ்வாதாரத்திற்கும் சமூக நீதிக்கும் இனங்களின் நல்லிணக்கத்திற்கும் அயராமல் பாடுபட்டவர்களின் வரிசையில் பல கத்தோலிக்க அருட்தந்தைகளை நாம் காணமுடியும். தவத்திரு தனிநாயகம், மேரி பஸ்டியன், ஆபரணம் சிங்கராயர், அன்டனி ஜோன் அழகரசன், சந்திரா பெர்ணான்டோ உட்பட பலரை நாம் இனம்காண்பிக்கமுடியும். எனினும் இவர்களைப்பற்றி இதுவரையில் முழுமையாக எவரும் ஆவணப்படுத்தவில்லை. தனிநாயகம் அடிகளார் குறித்து பல நூல்களும் ஆவணப்படங்களும் வெளியாகியுள்ளன. இலங்கையில் மக்கள் சேவையே மகேசன் சேவையென வாழ்ந்தவர்களில் குறிப்பிடத்தகுந்த ஒருவர் அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர். இவர் குருத்துவப்பட்டம் பெற்று 49 ஆண்டுகளாகின்றன. பொன்விழா ஆண்டை நெருங்கும் வேளையில் விடைபெற்றுவிட்டார்.
போர் உக்கிரமடைந்திருந்த காலப்பகுதியில் 2009 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் முல்லைத்தீவு வலைஞர்மடம் கத்தோலிக்க தேவாலயம் மீது படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் படுகாயமடைந்தவர்களில் பங்குத்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் அடிகளாரும் ஒருவர். அம்பலவன்பொக்கணை, வலைஞர் மடம் பகுதிகளில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதரின் உடன்பிறந்த சகோதர சகோதரிகள் மற்றும் உறவினர்கள் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து உட்பட பல நாடுகளில் புகலிடம் பெற்று வசிக்கின்றனர். அவர் நினைத்திருந்தால், அந்த போர் நெருக்குவாரத்திலிருந்து விடுபட்டு, தமது உறவுகள் வாழும் தேசங்களிற்கு வந்து இங்கிருக்கும் தேவாலயங்களில் ஆன்மீகப்பணியை தொடர்ந்திருக்கமுடியும். அவர் தமிழர் புகலிட நாடுகளுக்கு வந்தார். ஆனால், நிரந்தரமாக தங்குவதற்கு வரவில்லை. அவர் மெல்பனுக்கு வரும் சந்தர்ப்பங்களில் மக்களை சந்தித்து, தனது பிரதேசத்தில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான வாழ்வாதார உதவிகளையே சேகரித்து எடுத்துச்சென்று வழங்கினார்.
2004 ஆம் ஆண்டு இறுதியில் சுனாமி கடற்கோள் அநர்த்தத்தின்போது, முல்லைத்தீவு மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் அவர்கள் ஊடாகவே நிவாரணப் பொருட்களை அனுப்பிவைத்தோம். அவர் மெல்பன் வந்த சந்தர்ப்பங்களிலும் சுனாமி வந்த காலத்தில் கொழும்பில் அவர் தங்கியிருந்த குருமனையிலும் சந்தித்து பேசியிருக்கின்றேன். மக்களின் பிரச்சினைகளே அவரது பேசுபொருளாகவிருக்கும். அவர் புனித இறைபணிக்கு அப்பால் தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட மக்களின் நலன்கள் குறித்தே சிந்தித்தார்.
இவரது தங்கை ஜெஸியை மணந்தவரான மெல்பனில் வதியும் சட்டத்தரணி செல்வத்துரை ரவீந்திரன், அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் குறித்த நினைவுகளை எம்முடன் பகிர்ந்துகொண்டார்.
“ அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர், குருத்துவ பட்டம் பெற்றதும் சிறிது காலம் யாழ்ப்பாணத்தில் இறைபணியில் ஈடுபட்டார். அதன்பின்னர், செட்டிகுளம் பங்குத்தந்தையாக 1976 – 1977 காலப்பகுதியில் ஆன்மீகப்பணியாற்ற வந்தார். இயல்பிலேயே மனிதநேயம் மிக்கவர். அவரது தங்கையை மணந்தபின்னரே உறவினராகவும் நேசத்திற்குரிய நண்பராகவும் விளங்கினார். அவரது பெற்றோர்கள் தந்தை செல்வநாயகம் அவர்களின் உறவினர். அதனால் தந்தை செல்வா, உடுவில் பகுதிக்கு தனிப்பட்ட , அல்லது அரசியல் காரணங்களுக்காக வந்தாலும் ஜேம்ஸ் பத்திநாதர் இல்லத்திற்கு வராமல் திரும்பமாட்டார். அதனால் அக்காலப்பகுதியில் அந்த இல்லம் தமிழரசுக்கட்சியின் கிளை அலுவலகமாகவும் இயங்கியிருக்கிறது. ஜேம்ஸ் பத்திநாதரின் தாயும் தந்தையும் ஆசிரியர்களாக பணியாற்றியவர்கள். அதனால் பெற்றோர்களும் தமிழரசுக்கட்சியின் வளர்ச்சிக்கு அப்பிரதேசத்தில் உழைத்தனர். பெற்றோரினால் அவருக்கும் அரசியல் ஈடுபாடு வந்தது. அவர் குருவானவரானதன் பின்னரும் எம்முடனான தொடர்புகளை பேணியே வந்தார்.
1977 ஆம் ஆண்டு கலவரத்தினால் பாதிக்கப்பட்டு கொழும்பிலிருந்து இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்காக தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக்கழகம் ( T.R.R.O) உருவானபோது, அகதிகளை குடியேற்றும் புனர்வாழ்வுப்பணிகளில் எம்முடன் இணைந்து செயற்பட்டார். அக்காலப்பகுதியில் நாடாளுமன்ற பிரதிநிதிகளிடமிருந்தோ அல்லது சகோதர இனத்தலைவர்களிடமிருந்தோ எமக்கு ஆதரவு கிடைக்கவில்லை. அவர் எமது உறவினராகவும் மனிதநேயப்பணிகளில் அக்கறை கொண்டவராகவும் இருந்தமையால் எமது தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக்கழகத்தில் அவரை இணைத்தோம்.
அவர் மூலமாக பல கத்தோலிக்க மதகுருமார்களையும் அருட்சகோதரிகளையும் புனர்வாழ்வுப்பணிகளில் இணைக்க முடிந்தது. வவுனியா காந்தீயம் இயக்கத்திலும் அவர் இணைந்து ஆக்கபூர்வமாக இயங்கியிருப்பவர். செட்டிகுளம் பங்கு தேவாலயத்தில் அவரையும் என்னையும் கொலைசெய்வதற்கும் சில தீய சக்திகள் முயன்றன. அவ்வேளையில் யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்ட ரயில் வவுனியாவுக்கு தாமதமாக வந்ததாலும், நான் அவருக்கு அனுப்பிய தந்தி கிடைக்காதமையினாலும், அச்சதி முழுமையடையவில்லை. அதனால் நாம் அன்று உயிர் தப்பினோம்.
அக்காலகட்டத்தில், அவர் படையினரிடையேயும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றவாசிகளிடத்திலும் , “சண்டிக்கட்டு ஃபாதர் “ என்ற புனைபெயரையும் பெற்றார். எப்பொழுதும் ஆபத்தை எதிர்நோக்கியவாறே பயணங்களை மேற்கொண்டார். ஆயுதம் ஏந்திய இயக்கங்களின் செயற்பாடுகளினாலும், தமிழ் மக்களின் மீள்குடியேற்றப்பணிகளினாலும் இவரும் தேடப்பட்டவர்கள் பட்டியலில் இருந்தார். வண.பிதா சிங்கராயர், மருத்துவர் காந்தீயம் இராஜசுந்தரம் ஆகியோருடன் இணைந்து உமா மகேஸ்வரனையும் வேலுப்பிள்ளை பிரபாகரனையும் ஒன்று சேர்ப்பதற்கு இரகசிய கூட்டங்கள் நடத்தினார் என்ற சந்தேகமே அதற்கு பிரதான காரணம். அதனால் அவருடன் நானும் நாட்டைவிட்டுத் தப்பி இந்தியா ஊடாக லண்டனுக்கு செல்லவேண்டியதாயிற்று.
லண்டனில் சட்டத்தரணி கே. கந்தசாமி உட்பட மேலும் சிலருடன் இணைந்து இலங்கையில் தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் மீள் குடியேற்றப்பணிகளுக்காக நிதி சேகரிக்கும் இயக்கத்தில் முனைந்தோம். அங்கு உருவாக்கப்பட்ட தமிழ் தகவல் நிலையத்திலும் ஜேம்ஸ் பத்திநாதர் பணியாற்றி இலங்கைத்தமிழரின் பிரச்சினைகளை சர்வதேச மட்டத்திற்கு எடுத்துச்சென்றார். 1987 இல் இலங்கை – இந்திய ஒப்பந்தம் உருவானதன் பின்னர் அங்கு கெடுபிடிகள் இருக்காது எனக்கருதி, தாயகம் திரும்பினார். அதன்பின்னர், மக்கள் சேவையிலேயே தீவிரமாக இறங்கினார். முல்லைத்தீவு பங்குத்தந்தையாக பொறுப்பேற்று , போர்க்காலத்திலும் சுநாமி வந்தபோதும் மக்களோடு மக்களாக நந்திக்கடல் வரையில் அலைந்துழன்றார். மடுத்திருப்பதியில் ஆயுதப்படையினர் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட நூறுக்கும் மேற்பட்ட பொது மக்களின் உடல்களை இவரும் இன்னும் சிலரும் சுமந்தும் எடுத்துச்சென்றும் அடக்கம் செய்தனர். அந்தக்காட்சிகளின் நேரடிச்சாட்சியாக இருந்தவருக்கு அதனால் மாரடைப்பு வந்தது. பதட்டமான சூழ்நிலையில் கொழும்புக்கு அழைத்துவரப்பட்டார். சிகிச்சைக்குட்படுத்துவதற்கு முன்னர், இதயத்தில் இரத்தக்குழாய் அடைப்புகளை கண்டுபிடிப்பதற்காக நடத்தப்பட்ட Angiogram பரிசோதனையின்போது மீண்டும் அவருக்கு மாரடைப்பு வந்தது. தாமதமின்றி அவர் பைபாஸ் சத்திரசிகிச்சைக்குட்படுத்தப்பட்டு காப்பாற்றப்பட்டவர். இத்தகைய உடல் உபாதைகளுடன்தான் அவர் சுநாமி வந்த காலத்திலும் - போர் உக்கிரமடைந்த காலத்திலும் மக்களுடன் வாழ்ந்து சேவையாற்றினார்.
சட்டத்தரணி ரவீந்திரன், அருட்திரு. ஜேம்ஸ் பத்திநாதர் பற்றிச்சொல்லும் மற்றும் ஒரு கதை சற்று வித்தியாசமானது. 1979 ஆம் ஆண்டில், செவிடன் குளம் என்ற கிராமத்தில் மக்களை குடியமர்த்தி, அவ்விடத்தில் ஒரு சிறிய பிள்ளையார் கோயிலை அமைத்தோம். அதனை மக்கள் வழிபாட்டிற்காக திறந்தபோது ஜேம்ஸ் பத்திநாதர்தான் கொடியேற்றிவைத்தார் எனச்சொன்னால் எவரும் நம்பமாட்டார்கள். அந்தப்பிரதேசம்தான் பின்னாளில் கணேசபுரம் என்ற பெயரைப்பெற்றது. அத்துடன் முல்லைத்தீவு பிள்ளையார் ஆலயத்தின் குருக்களுடனும் நல்லறவைப்பேணியவர்தான் ஜேம்ஸ் பத்திநாதர். அந்த ஆலயக்குருக்களுக்கு இவர் போத்தலில் அடைக்கப்பட்ட குளிர்பானம்தான் கொடுக்கவேண்டும். ஆனால், இவரோ குருக்கள் கிண்ணத்தில் தரும் தேநீரை அருந்துவார். சுனாமி கடற்கோளின்போது அந்தக்குருக்களின் குடும்பமும் உயிரிழந்தபோது அவர்களின் சடலங்களையும் பொறுப்பேற்று இறுதிக்கிரியைகளை நடத்தினார். மெல்பனில் நான் எனது சட்டத்தொழிலுக்காக ஒரு அலுவலகத்தை பதிவுசெய்தபோது, RAVI என்ற பெயரில் மாத்திரம் அனுமதிக்க முடியாது என்று சட்ட அதிகாரிகள் மறுத்தபோது, ஜேம்ஸ் பத்திநாதரிடத்தில் கொண்டிருந்த அன்பினாலும் அபிமானத்தினாலும் அவருடைய பெயரையும் இணைத்துக்கொண்டு Ravi James Lawyers என்ற சட்ட ஆலோசனை நிறுவனத்தை மெல்பனில் நீண்ட காலமாக நடத்திவருகிறேன். “ என்று சட்டத்தரணி தனது நினைவுகளை எம்முடன் பகிர்ந்துகொண்டார்.
2009 இறுதிப்போரின்போது மறைந்த அருட்திரு. சறத்ஜீவன் அடிகளாரைப்போன்று இவரும் மக்களை விட்டு அகலவேயில்லை. அருட்தந்தை சறத்ஜீவன் அடிகளாரின் ஞாபகார்த்தமாக, 2010 ஆம் ஆண்டு மாங்குளத்தில் அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதரின் ஏற்பாட்டில் ஒரு முன்பள்ளியும் தொடங்கப்பட்டது. போர்க்காலத்தில் போராளிகளுக்கும் படையினருக்கும் இடையில் மக்கள் சிக்குண்டிருந்தனர். அவ்வேளையில் அங்கு இறைபணியுடன் சமூகப்பணியும் மேற்கொள்வதானது கூரிய கத்தியின் மேல் நடக்கும் செயலுக்கு ஒப்பானது. எனினும் துணிச்சலுடன் அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் தனக்குச் சரியெனப்பட்டதை துணிந்து பேசினார், செய்தார். மக்களின் பிரச்சினைகளை ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளிடம் எடுத்துரைத்தார். மக்கள் நடத்திய ஊர்வலங்களில் பங்கேற்று உரையாற்றினார்.
அருட்திரு ஜேம்ஸ் பத்திநாதர் மெல்பனுக்கு வருகை தந்த சந்தர்ப்பங்கள் சிலவற்றின்போது அவரை சந்தித்து உரையாடியிருப்பதனால் அவரது நல்லியல்புகளையும் மனிதநேய சிந்தனை செயற்பாடுகளையும் அறிந்திருக்கின்றேன். தனக்கு அந்திமகாலம் நெருங்கிவிட்டது என்ற உள்ளுணர்வின் தாக்கத்தினால், அவுஸ்திரேலியாவிலிருக்கும் உறவினர்கள் நண்பர்களை பார்த்துவிட்டு, மீண்டும் தாயகம் திரும்புவதற்கு உத்தேசித்திருந்தார். எனினும் அவரது எண்ணம் சாத்தியமாவதற்குள் அவரது உடல் உபாதை கடுமையாகி கடந்த 11 ஆம் திகதி கொழும்பில் மறைந்தார். இறைபணியுடன் பாதிக்கப்பட்ட மக்கள் பணியிலும் ஈடுபட்ட அருட் தந்தை ஜேம்ஸ் பத்திநாதரின் ஆத்மா சாந்தியடையும். “ என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத்தமிழ் செய்யுமாறே “ என்ற தனிநாயகம் அடிகளாரின் வாசகம் தமிழ் உலகில் பிரபலமானது. அதுபோன்று “என்னை இறைவன் படைத்தனன் தன்னை நன்றாக மக்கள் பணிசெய்யுமாறே “ என்ற வாசகத்தை அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதருக்கு சூட்டி அன்னாரின் ஆத்மாவுக்கு அஞ்சலி செலுத்துவோம்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.