அப்பொழுது எனக்கு ஐந்து வயதிருக்கும். 1956 ஆம் ஆண்டு. எனது பெயரில் " முருகன் லொட்ஜ்" என்ற சைவஹோட்டலை நீர்கொழும்பு பிரதான ( பஸாரில்) வீதியில் நடத்திக்கொண்டிருந்த அப்பா லெட்சுமணன், பரோபகரா இயல்புகளினாலும் எவரையும் முன்யோசனையின்றி நம்பிவிடுவதனாலும், இரக்கசிந்தனையினாலும் , பொறுப்புணர்ச்சி குறைந்தைமையாலும் நட்டப்பட்டு, அம்மாவுக்குத் தெரியாமல் வீட்டின் உறுதியை வைத்து கடன் பெற்று, அதனையும் மீட்க வழிதெரியாது, கொழும்பிலிருந்த ஒரு கம்பனியில் வெளியூர் விற்பனைப் பிரதிநிதியாகி மலையகப்பக்கத்திற்கு கம்பனி வாகனத்தில் சென்றிருந்தார்.
ஒரு நாள் இரவு யாரோ சிலர் காரில் வந்து இறங்கினார்கள். அப்பாவுக்கு கடன் கொடுத்தவர்கள்தான் வந்துவிட்டார்கள் என நினைத்து அம்மா கலங்கிவிட்டார்கள்.
வந்தவர் பெயர் ரகுநாதன் என்றும் அவர், தமிழ்நாட்டிலிருந்து அப்பாவைத்தேடி வந்துள்ளார் என்பதையும் பின்னர்தான் தெரிந்துகொண்டேன். வந்தவர் வீட்டின் சுவரில் மாட்டப்பட்டிருந்த அப்பா - அம்மா திருமணமான புதிதில் எடுத்துக்கொண்ட படத்தைப்பார்த்துவிட்டு, " இவரைப்பார்த்து எத்தனை வருஷமாச்சு. இலங்கை வருவதை உறவினர்களிடம் சொன்னதும், இந்த ஊருக்குப்போய் இவரையும் பார்த்துவிட்டு வரச்சொன்னார்கள். அதுதான் வந்தேன்." என்றார்.
அம்மா, " நீங்கள் யார்? அவர் வெளியூர் போயிருக்கார். எப்போ வருவார் என்பது தெரியாது." என்றார்.
" எனது பெயர் ரகுநாதன். சிதம்பர ரகுநாதன் என்று சொன்னால் அவருக்குத் தெரியும். தமிழ்நாடு திருநெல்வேலியிலிருந்து வந்ததாகச் சொல்லுங்கள். " எனச்சொல்லிவிட்டு, கையில் வைத்திருந்த ஒரு சுவீட் பொட்டலத்தை என்னிடம் நீட்டினார்.
அவர் திடுதிப்பென வந்துவிட்டதால் எவ்வாறு உபசரிப்பது என்பதும் தெரியாமல் அம்மா பதட்டத்துடன் நின்றார். அவருடன் வந்தவர்களில் ஒருவர், ஒரு துண்டில் ஏதோ எழுதி, " அவர் வந்தால் இதனைக்கொடுங்கள். இன்னும் சில நாட்களில் இவர் ஊர் திரும்பிவிடுவார் . முடிந்தால் கொழும்பு வந்து இந்த முகவரியில் சந்திக்கச்சொல்லுங்கள்." என்றார்.
சில நிமிடங்களில் அவர்கள் திரும்பிச்சென்றனர். நானும் அக்காவும் தங்கை தம்பியும் அந்த சுவீட் பொட்டலத்தை பிரித்துச் சாப்பிட்டோம். நல்ல சுவையாக இருந்தது.
இச்சம்பவம் நடந்து நான்கு வருடங்களின் பின்னர் 1960 ஆம் ஆண்டு ஒருநாள், மதியம் நானும் அக்கா தம்பி, தங்கையும் பாடசாலை விட்டு வந்து உணவருந்திக்கொண்டிருந்தோம்.
வெளியூருக்கு வியாபாரத்திற்குச்சென்றிருந்த அப்பா, திடுதிப்பென வாகனத்தில் வந்திறங்கினார். அவரது கையில் அன்றைய வீரகேசரி பத்திரிகை. அவருடைய உதவியாளர் பெரிய பெரிய பைகளில் மரக்கறிவகைகள், பழங்கள் யாவும் எடுத்துவந்தார். பத்திரிகையைக்காட்டி, " பபா ( அம்மாவுக்கு பபா என்றும் ஒரு பெயர்) எங்கட மாமா கொழும்புக்கு வந்திருக்கிறார். இன்று காலையில் கண்டியில் நிற்கும்போதுதான் பேப்பர் படித்தேன். அவர் ஒரு கலெக்டர். பெரிய எழுத்தாளர். இன்றைக்கு கொழும்பு விவேகானந்தா மண்டபத்தில் பேசப்போகிறார். நான் போய் இரவுச்சாப்பாட்டுக்கு அழைத்துவரப்போகின்றேன். எங்கள் ஸ்கூல் பண்டிதர் மற்றும் ஆசிரியர்களையும் விருந்துக்கு அழைக்கப்போகின்றேன்" என்று வேகமாக சொல்லிக்கொண்டிருந்தார்.
அம்மாவுக்கு சிரிப்பு வந்தது. " உங்கட மாமா கலெக்டரா? எழுத்தாளரா? யாருக்குச்சொல்றீங்க இந்த பொய்களை!?" எனச்சொன்ன அம்மாவை கோபத்துடன் கடிந்துகொண்ட அப்பா, " உனக்கென்ன தெரியும். நீ பொலிஸ்காரன் மகள். பொலிஸ் புத்திதான் இருக்கும். அவர் என்னுடைய தாய் மாமா. அவர் பெயர் பாஸ்கரத் தொண்டமான். அன்றைக்கு வந்தாரே, சிதம்பர ரகுநாதன். அவருடைய அண்ணன்தான் இவர். தமிழ்நாட்டில் எங்கள் ஊருக்குப்பெயர் என்ன? தெரியும்தானே? பாளையங்கோட்டை. அங்கதான் மாமா கலெக்டராக இருக்கார். இப்ப இங்கே வந்திருக்கார். படித்த மனுஷர். அதனால் அவருடன் இருந்து விருந்து சாப்பிட படிச்ச மனுஷர்களையும் அழைக்கப்போகின்றேன்" எனச்சொன்ன அப்பா, மதிய வேளைச்சாப்பாட்டையும் அம்மாவிடம் வாங்கி உண்ணாமல் வந்தவேகத்திலேயே திரும்பிச்சென்றார்.
எனது அப்பாவின் பூர்வீகம் தமிழ்நாட்டில் திருநெல்வேலிக்குப்பக்கத்தில் பாளையங்கோட்டை. 1940 களில் சில நண்பர்களுடன் சேர்ந்து ஒரு படகிலே புறப்பட்டு புத்தளத்திற்கு சமீபமாக கற்பிட்டி கடலில் ஒதுங்கியிருக்கிறார். அங்கு புத்தளம் கச்சேரிக்கு முன்பாக இருந்த ஒரு சைவஹோட்டலில் அப்பா கெஷியராக வேலைபார்த்தார். அந்தக்கச்சேரியில் சிற்றூழியராக பணியாற்றிய எனது அம்மாவின் ஒன்றுவிட்ட சகோதரியின் கணவர்தான் திருமண சம்பந்தம் பேசி வந்து அம்மாவுக்கு அவரைத் திருமணம் செய்துவைத்தார்.
அவரது பெயர் முருகேசு. அவர் மனைவி - எங்கள் பெரியம்மாவின் பெயர் பூரணம். இருவரதும் பெயரை இணைத்து எனக்கு முருகபூபதி என்ற பெயரை அப்பா சூட்டியதாக பின்னாளில் அம்மா சொல்லியிருக்கிறார்.
அப்பாவின் அண்ணன் சுப்பையா தொண்டமான் திருச்செந்தூர் தேவஸ்தானத்தில் கணக்காளராக பணியாற்றியவர். அவரது மனைவி, அதாவது அப்பாவின் அண்ணி, குழப்படிகாரனாக வாலிப வயதில் விளையாடித்திரிந்த அப்பாவை கண்டித்திருக்கிறார். அவரது கண்டிப்பு பொறுக்கமுடியாமல்தான் அப்பா எவருக்கும் தெரியாமல் இலங்கைக்கு ஓடி வந்திருக்கிறார் என்று பின்னாளில் அம்மா சொல்லித்தான் தெரியும். அந்த அண்ணி நல்லவரா - கண்டிப்பானவரா என்பது எமக்குத் தெரியாது.
அப்பாவும் ரகுநாதனும் மாத்திரமே தொண்டமான் என்ற சாதிப்பெயரை தங்களுடன் இணைத்திருக்கவில்லை. இவர்கள் வீரபாண்டிய கட்டபொம்மன் காலத்து விஜயரகுநாத தொண்டமான் என்ற சிற்றசன் பரம்பரையில் வந்தவர்கள். அந்தப்பரம்பரையைச் சேர்ந்தவர்தான் இலங்கையில் முன்னர் அமைச்சராக இருந்த சௌமியமூர்த்தி தொண்டமான்.
ரகுநாதன் இடதுசாரி, தீவிரவாதி. சுதந்திர போராட்டத்தில் சிறை சென்றவர். அவரது அண்ணன் பாஸ்கரத்தொண்டமான் மிதவாதி. காங்கிரஸ் அபிமானி. காந்தீயவாதி. கல்கி கிருஷ்ணமூர்த்தியின் நண்பர். கல்கியில் பல தொடர்கள் எழுதியவர். பாஸ்கரத்தொண்டமானின் பெயரில் திருநெல்வேலியில் ஒரு வீதியும் இருக்கிறது. இவர் இலங்கை வந்தசமயம் வடக்கிற்கும் சென்று காரைநகர் சிவன்கோயிலை தரிசித்து, அதன் வரலாறு அறிந்து அதற்கு ஈழத்துச்சிதம்பரம் என்ற பெயரைச்சூட்டியதாக பின்னாளில் அவ்வூர் அன்பர்கள் சொல்லித்தான் எனக்குத் தெரியும்.
ரகுநாதன், புதுமைப்பித்தனின் நண்பர். புதுமைப்பித்தன் வாழ்க்கை வரலாறு மற்றும் பஞ்சும் பசியும் நாவல் உட்பட பாரதி தொடர்பாக பல ஆய்வுகளும் எழுதியவர். இவரது பாரதி : காலமும் கருத்தும் நூல் இந்திய சாகித்திய அகடமி விருதும் பெற்றது. மக்ஸிம் கோர்க்கியின் தாய் நாவல் உட்பட பல சோவியத் இலக்கியங்களை தமிழுக்குத்தந்தவர். சாந்தி என்னும் இலக்கிய இதழை நடத்தியவர். ஜெயகாந்தன், சுந்தரராமசாமி ஆகியோரின் ஆரம்பகால எழுத்துக்கள் சாந்தியில் வெளிவந்துள்ளன.
எனது அப்பா லெட்சுமணன் சொன்னதை சாதிக்கும் இயல்புகொண்டவர். அன்று 1960 ஆம் ஆண்டில் பல நிகழ்ச்சிகளுடன் இலங்கை வந்திருந்த தனது மாமனார் பாஸ்கரத்தொண்டமான் அவர்களை, தில்லானா மோகனாம்பாள் படத்தில் வரும் எலுமிச்சம் பழத்தைக்கொடுத்தே காரியம் சாதிக்கும் தரகர் வைத்தி ( நடிகர் நாகேஷ்) போன்று விவேகானந்த சபை மண்டபத்தில், பாஸ்கரத்தொண்டமான் பேசி முடித்ததும், ஓடிச்சென்று எலுமிச்சம் பழம்கொடுத்து, காலில் விழுந்து நமஸ்கரித்து அழைத்துவந்துவிட்டார்.
இலங்கையில் அவ்வாறு எலுமிச்சம் பழம்கொடுத்து கௌரவிப்பது அபூர்வம். அன்று பாஸ்கரத்தொண்டமான் தாத்தா என்னை அவர் மடியில் அமர்த்தி கதை கேட்டார். பின்னாளில் அவர் தம்பி ரகுநாதனிடம் என்னை எழுத்தாளனாக அறிமுகப்படுத்திக்கொண்டு, பல கதைகளை நான் அவரிடம் கேட்டுள்ளேன். 1956 இல் நான் சிறுவனாக இருந்தபோது சுவீட் பொட்டலம் தந்த ரகுநாதன், மீண்டும் 1983 இல் இலங்கை வந்தபோது அவரை அழைக்கும் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பாரதி நூற்றாண்டு விழாக்குழுவில் இருந்தேன். அச்சமயம் ரகுநாதன் எனக்கு தான் எழுதியிருந்த புதுமைப்பித்தன் வாழ்க்கை வரலாறு நூலை தனது கையொப்பத்துடன் தந்தார். 1956 இலும் முற்போக்கு எழுத்தாளர் சங்கம்தான் அவரை இலங்கை பாரதி விழாக்களுக்காக அழைத்திருந்தது என்பதை பின்னர் தெரிந்துகொண்டேன்.
2002 இல் நான் எழுதிய பறவைகள் நாவலை அவருக்குத்தான் சமர்ப்பித்தேன். அதற்கு இலங்கையில் 2003 இல் சாகித்திய விருது கிடைத்தது. ஆனால், அந்தக்காட்சிகளை காண்பதற்கு எனது அப்பாவோ ரகுநாதனோ, பாஸ்கரத்தொண்டமானோ இருக்கவில்லை.
பொதுவாக எந்தவொரு பெற்றோரும் தனது பிள்ளை என்னவாக வரவேண்டும் என்று எண்ணத்தில் பல கனவுகளில் மூழ்கியிருப்பர். எனது அம்மாவுக்கும் கனவுகள் இருந்தன.
ஆனால், அப்பா மாத்திரம் " நீ எப்படி வேண்டுமானாலும் வா. உன் விதி உனது கையில் " என்று எனது சுதந்திரத்தை மதித்தார். பின்னாளில் அவர் நீர்கொழும்பில் கணேசன் கபே என்ற சைவஹோட்டலில் கெஷியராக பணியாற்றியவேளையில், வீரகேசரி ஏஜண்டாகவும் அந்த ஹோட்டல் இருந்தது. அப்பொழுது நான் வீரகேசரியின் நீர்கொழும்பு பிரதேச நிருபர். இலக்கியப்பிரதிகளும் எழுதத்தொடங்கியிருந்தேன்.
அப்பா எனக்கு வீரகேசரி பிரசுரங்கள் பலவற்றை வாசிக்கத்தந்தார். வீரகேசரியில் வரும் எனது கட்டுரைகளின் நறுக்குகளை பத்திரப்படுத்தித்தந்தார். நான் ஒழுங்கு செய்த இலக்கியக்கூட்டங்களுக்கு வந்தார். அவருக்கு எனது இலக்கிய நண்பர்கள் பலரையும் தெரிந்திருந்தது.
கைலாசபதி, மல்லிகை ஜீவா, சில்லையூர் செல்வராசன், மு. கனகராஜன் உட்பட சில எழுத்தாளர்கள் நீர்கொழும்பு வந்தசமயங்களில் அவர்களின் உரைகளை கேட்டிருக்கிறார். 1974 இல் நடந்த முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தேசிய ஒருமைப்பாடு மாநாடு, 1983 இல் நடந்த பாரதி நூற்றாண்டு விழாவுக்கெல்லாம் வந்தார். 1975 இல் எனது முதலாவது புத்தகம் சுமையின் பங்காளிகள் வெளியானபோது அதற்கு மூலதனமாக சிறிய தொகையும் தந்தார்.
1960 இல் தனது மாமனார் பாஸ்கரத்தொண்டமானை நீர்கொழும்புக்கு அழைத்துவந்து பண்டிதர் மயில்வாகனன் மற்றும் வில்லிசைக்கலைஞர் உடப்பூர் பெரி. சோமஸ்கந்தர் ஆகியோருடன் சந்திப்புக்கும் ஏற்பாடு செய்தார்.
1983 இல் ரகுநாதனை நீர்கொழும்புக்கு அழைத்துவந்து ஒரு கூட்டத்தை நடத்தியபோது அதிலும் அப்பா கலந்துகொண்டார். அப்பா சொந்தமாக ஒரு சைவஹோட்டல் நடத்தி நட்டப்பட்டவர். ஆனால், சில தனியார் கம்பனிகளில் வெளியூர் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி அந்தக்கம்பனிகளை வளர்த்தார்.
மற்றவர்களை வசீகரிக்கும் பேச்சாற்றல் அவரிடம் இருந்தது. பாடசாலை விடுமுறை காலங்களில் வெளியூர் வர்த்தகத்திற்கு செல்லும்போது என்னையும் அழைத்துச்செல்வார். ஊர் சுற்றும் அப்பா இருந்தமையால்தான் நான் மலையகத்தின் அனைத்துப்பிரதேங்களும் பார்த்தேன். கண்டி தலதா மாளிகை, பேராதனை பூங்கா, நுவரேலியா ஹக்கல ரோசாத் தோட்டம் யாவும் அப்பா அழைத்துச்சென்று காண்பித்த இடங்கள்தான்.
எனக்கும் எனது மாமா மகன் முருகானந்தனுக்கும் ஆறாம்தர புலமைப்பரிசிலுடன் , யாழ். ஸ்ரான்லிக்கல்லூரியில் அனுமதி கிடைத்தபோது அப்பாதான் தனது கம்பனி வாகனத்தில் எம்மை யாழ்ப்பாணம் அழைத்துச்சென்றார். நாம் கற்பக தருவை பார்த்ததும் அப்போதுதான்.
மென்மையான இயல்புகள் கொண்டிருக்கும் அப்பா, அன்று என்னை கல்லூரி ஆண்கள் விடுதியில் விட்டுவிட்டு புறப்படும்போது விம்மி விம்மி அழுதார். வியாபாரம் நிமித்தம் வடபகுதி வரும்போதெல்லாம் வந்து பார்ப்பார். தவணை விடுமுறையின்போதும் வந்து அழைத்துச்செல்வார். திரும்பும் வழியில் அநுராதபுரத்தில் மன்னர்கள் ஆண்டதற்கான அடையாளம் கூறும் வரலாற்றுச்சின்னங்களை காண்பிப்பார்.
அவர் தனது தொழில் சார்ந்த சொந்த அனுபவத்தில் அன்று சொன்ன வார்த்தைகள் எவருக்கும் பொருந்தும்.
"தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டான்! தெரியாத தொழிலைத் தொட்டவனும் கெட்டான்!"
1983 கலவரம் அவரை மிகவும் பாதித்தது. அவரது பல மலையக தமிழ் வர்த்தக நண்பர்கள் கொல்லப்பட்டனர். மரண அறிவித்தல்களை வானொலியில் கேட்டு அதிர்ச்சியில் மூழ்கியிருந்தார். அப்பா, விற்பனைப் பிரதிநிதியாக ஏறி இறங்கிய பல தமிழர்களின் கடைகள் எரிக்கப்பட்டன. அவ்வேளையில் அன்றைய ஜே.ஆர். அரசு, இடது சாரி இயக்கங்களை தடைசெய்தது. அந்தக்கலவரத்தை நடத்தியது இடதுசாரிகள்தான் என்று உலகை நம்பவைப்பதற்கு ஜே.ஆர். தீட்டிய சதிதான் அது.
எனது இடதுசாரித்தோழர்கள் பலர் தலைமறைவானார்கள். வீட்டிலிருந்த எனது பல இடதுசாரி இயக்க நூல்களை மறைத்துவைப்பதற்கு அப்பா படாத பாடு பட்டார். அயலிலிருந்த கடற்றொழிலாளர் வீடுகளில் அவற்றை மறைத்து வைத்தார். என்னையும் குடும்பத்தினரையும் யாழ்ப்பாணம் சென்று சிறிதுகாலம் இருக்குமாறு அனுப்பினார்.
1958, 1977, 1981 கலவரங்களை பார்த்திருந்த அப்பாவுக்கு 1983 கலவரம் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. " அனைவரும் தமிழகத்திற்கு செல்வோம் " என்று சொல்லிக்கொண்டிருந்தார். தனது பூர்வீக வீடு பாளையங்கோட்டையில் இருப்பதாகவும் அங்கேயே சென்றுவிடுவோம் என்று புலம்பியவாறு இருந்தார்.
பேரக்குழந்தைகளிடத்தில் மிகவும் பிரியமாக இருந்தவர். அக்கா, தங்கை குடும்பத்தினர் வவுனியாவிலிருந்தனர். கலவரம் முற்றும் வரையில் நானும் எனது குடும்பம் - குழந்தைகள் அவருடன்தான் இருந்தோம். எம்மை தப்பிச்செல்லுமாறு அனுப்பிவிட்டு, அவர் அம்மா தம்பியுடன் இருந்தார்.
யாழ்ப்பாணம் அரியாலையில் எனது குடும்பத்தினரை தங்க வைத்திருந்தேன். அன்று 1983 செப்டெம்பர் 07 ஆம் திகதி. யாழ்ப்பாணம் மல்லிகை ஜீவாவைப்பார்த்துவிட்டு திரும்பியிருந்தேன். அந்த அரியாலை வீட்டு வாசலில் நின்று எனது மூத்த குழந்தை பாரதி அழுதுகொண்டிருந்தாள். " என்னம்மா எனக்கேட்டேன்."
" தாத்தா வந்து கூப்பிடுறார். கேட்டடியில் நிற்கிறார் " என்று புலம்பி விம்மி விம்மி அழுதாள். அவளுக்கு தாத்தாவை விட்டுவந்த ஏக்கமாக இருக்கும் என எண்ணி அவளைத்தேற்றிக்கொண்டிருந்தேன்.
சில நிமிடங்களில் எனது யாழ். நண்பர்கள் சிலர் தத்தம் சைக்கிள்களில் வந்து தமக்கு கிடைத்த தொலைபேசி தகவலை தயக்கத்துடன் சொன்னார்கள்.
"அப்பா இறந்துவிட்டார்!"
நான் எனது குழந்தை பாரதியை பார்த்தேன். அவள் அந்த வீட்டின் முற்றத்து கேட்டைக் காண்பித்து அழுதுகொண்டேயிருந்தாள். நீர்கொழும்பில் அன்று காலை அவருக்கு மாரடைப்பு வந்திருக்கிறது. எனது சின்னத்தம்பி ஶ்ரீதரன் மடியில் அவரது உயிர் பிரிந்திருக்கிறது. அச்சமயம் உடனிருந்தது அம்மா மாத்திரமே. மகளின் அன்றைய கண்ணீருக்கு இற்றைவரையில் எனக்கு விடைதெரியவில்லை!
அன்று ஊருக்குப்புறப்பட்டோம். எனது குழந்தை அப்பாவைப்பார்த்து " தாத்தா தூக்கம் " என்றாள். அம்மா பேத்தியை வாரி அணைத்து கதறினார்கள்.
கொழும்பு முகத்துவாரம் கடலில் அப்பாவின் அஸ்தியை கரைத்தபோது, இந்தக்கடலைத்தாண்டித்தானே அப்பா இந்தியாவிலிருந்து வந்து, அம்மாவை வாழ்க்கைத் துணையாக்கி எம்மையெல்லாம் பெற்றெடுத்து வாழவைத்தார் என்ற எண்ணமெல்லாம் வந்துசென்றது.
தனது மாமனார்கள் போன்று தெரிந்த தொழிலை மாத்திரமே தனது மகனும் செய்வான் என்ற நம்பிக்கை அப்பாவிடம் இறுதிவரையில் இருந்தது.
எனது மின்னஞ்சல் அப்பாவின் பெயரில்தான் இருக்கிறது. எனது இலக்கியமடல் நூலை அப்பாவுக்குத்தான் சமர்ப்பணம் செய்துள்ளேன்.
எனதும் சகோதர - சகோதரிகளினதும் வீடுகளில் அப்பாவும் அம்மாவும் சுவர்களில் படங்களாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களின் தினங்களில் மட்டுமல்ல, தினம் தினம் அவர்களுடைய நினைவுகளில் வாழ்கின்றோம்.
( பிற்குறிப்பு: கனடா நண்பர் 'பதிவுகள்' கிரிதரனின் அப்பாவின் நினைவுகள் குறித்த வாசிப்பு அனுபவம் தந்த சிந்தனையில் எழுதப்பட்டது. கிரிதரனுக்கு மனமார்ந்த நன்றி)
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.