" தமிழ்மக்களுக்குப் பல குறைகள் உண்டு என்பதனை பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்த சகல அரசியல் தலைவர்களும் ( கட்சிகளும் இயக்கங்களும்) ஏற்றுக்கொண்டு நீண்டகாலமாகிட்டது. அதனால் பல ஒப்பந்தங்கள் தயாரிக்கப்பட்டன. மாநாடுகள் கூட்டப்பட்டன என்பது கண்கூடு. ஆனால், ஒரு பெரும்பான்மை மொழி மற்றுமொரு சிறுபான்மை மொழியினை ஆக்கிரமித்து, அமிழ்த்தி சாகடித்துவிட்டு, தான் மட்டும் மேலெழும்பி உலகைப்பார்ப்பதானது நியாயமற்ற செயல் என்பது இங்கு கவனிக்கப்படுவதில்லை. படிப்படியாக வாழை மரத்தில் ஊசி ஏற்றுமாப்போல் அக்கைங்கரியம் நடைபெற்று வந்துள்ளது. அரச திணைக்களங்கள் கூட்டுத்தாபனங்கள் அவற்றின் வெளியீட்டு பிரசுரங்கள் அரசுக்கு நிதி தேடித்தரும் அதிர்ஷ்ட லாபச்சீட்டுக்கள் என்பவற்றில் எல்லாம் அக்கைங்கரியம் சாதுரியமாகவே மேற்கொள்ளப்படுவது குறித்து பொதுவாக எவரும் சிரத்தைகொள்ளாமல் இருப்பதுதான் கவலைக்குரியது"
இந்த வரிகள் அடங்கிய ஒரு நீண்ட கட்டுரையை சுமார் 32 வருடங்களுக்கு முன்னரே (27-04-1985) வீரகேசரியில் ரிஷ்யசிருங்கர் என்ற புனைபெயரில் எழுதியிருக்கின்றேன். எனக்கு இந்தப்புனைபெயரைச்சூட்டியவர் அச்சமயம் வீரகேசரி பிரதம ஆசிரியராகவிருந்த ஆ. சிவநேசச்செல்வன். மூன்று தசாப்தங்கள் கடந்துவிட்டன!!?? இலங்கையில் தமிழ்மொழி அமுலாக்கலுக்கென அமைச்சும் இயங்குகின்றது. 1977 இற்குப்பின்னர் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் செல்லையா இராசதுரை, தாம் அங்கம் வகித்த தமிழரசுக்கட்சிக்கு "கையசைத்துவிட்டு" , அன்றைய ஜே. ஆரின். ஐ.தே.க. அரசுடன் "கைகுலுக்க" வந்தபோது அவருக்காக உருவாக்கப்பட்டது தமிழ் மொழி அமுலாக்கல், இந்துகலாசார பிரதேச அபிவிருத்தி அமைச்சு. அதன்பின்னர் இந்த அமைச்சு, பதவிக்கு வரும் ஒவ்வொரு அரசுகளினாலும் யாராவது ஒரு தமிழருக்கு - (அவ்வேளையில் ) அரசு ஆதரவாளருக்கு தரப்படும். இது தொடர்கதை. ஆனால், தமிழ் மொழி அமுலாக்கலிலும் இதுதான் தொடர்கதை!?
எனது கட்டுரையில் வீதிகள், ஒழுங்கைகள், தெருக்கள் யாவும் " மாவத்தைகளா"கிவிட்டதையும், கிராம எழுச்சி, கிராமோதயவாகிவிட்டிருப்பதையும், கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம் சதொசவாகிவிட்டதையும், கிராம எழுச்சிச்சபை, "கிராமோதய மண்டலய" என மாறியிருப்பதையும் இவ்வாறு மொழிக்கபளீகரம் செய்யப்பட்ட இதர தமிழ் வார்த்தைகளையும் சுட்டிக்காட்டி எழுதியிருந்தேன். இன்றும் இலங்கையில் நிலைமை அப்படியேதான் இருக்கிறது!!! அரசின் அதிர்ஷ்ட லாபச்சீட்டுக்களின் பெயர்களைப்பாருங்கள்: ஜாதிக சம்பத, சம்பத்ரேகா, செவன, கொவிசெத, அத கோடிபதி, நியத்த ஜய, கோடிபதி சனிதா, சுபிரி தெலக்ஷபதி. இலங்கையில் மூவின மக்களும் ( இதில் இரண்டு தமிழ்ப்பேசும் சிறுபான்மை இனத்தவர்கள்) இந்த அதிர்ஷ்டத்திற்காக பணம் கொடுத்துவருகிறார்கள். இலங்கை நாளிதழ்களிலும் தினமும் வரும் அதிர்ஷ்ட லாப விளம்பரங்களில் தமிழைத்தேடவேண்டும். சில மாதங்களுக்கு முன்னர் 5 ஆம் தர புலமைப்பரிசில் பெறும் மாணவர்களுக்கு இலங்கை வங்கியின் கௌரவிப்பு விளம்பரத்திற்கும் "ரண் கெகுளு" என பெயர் சூட்டப்பட்டிருந்ததை அவதானிக்கமுடிந்தது. இந்தப்பின்னணிகளுடன் மட்டக்களப்பில் வதியும் எழுத்தாளரும் சமூக ஆய்வாளரும் மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வி கதிர்காமன் தங்கேஸ்வரி அவர்கள் நாம் 2011 ஆம் ஆண்டு கொழும்பில் நடத்திய மாநாட்டில் வெளியிட்ட கட்டுரைக்கோவையில் எழுதியிருக்கும், " கிழக்கிலங்கையில் தொலையும் தொன்மைகளும் தொன்மைக்கிராமங்களும்" என்ற ஆய்வை பார்க்கலாம். அதிலிருந்து ஒரு பந்தி:
'எமது பண்டைய " வன்னிமைகள்" சிங்களத்தில் "ரட்ட" எனவாகிவிட்டன. குளம் " வெவ" எனவும் - உதாரணம்: கலாவெவ. மாதுறை என்பது" மாத்தற" ,தேவேந்திரமுனை என்பது "தெவினுவர",மாயவனாறு என்பது, "தெதுறு ஓயா", காளி தேசம் என்பது " காலி", கடம்ப நதி என்பது " மல்வத்து ஓயா", பட்டிப்பளையாறு என்பது "கல்லோயா", முதலிக்குளம் என்பது "மொரவெவ" , மணலாறு என்பது " வெலிஓயா", பார்வதி கிராமம் என்பது " பதவியா", திருகோணமலை என்பது "திருக்கிணாமலை", அரிப்புச்சந்தி என்பது " அலியொலுவ" , யாழ்ப்பாணம் என்பது " யாப்பனே" , எனவும் நாடுமுழுவதுமே தமிழ்ப்பெயர்கள் மாற்றப்பட்டுவருகின்றன. (மூத்த எழுத்தாளர் எஸ்.பொன்னுத்துரை - எஸ்.பொ - இன்றைய பதவியா முன்னர் வண்ணாத்திக்குளம் என அழைக்கப்பட்டதாக சொல்லியிருக்கிறார்.)'
"இப்படி தொலைந்துபோகும் தொன்மையையும் தொலைந்துபோன கிராமங்களைத் தேடுவதும் தமது கட்டுரையின் நோக்கமாகும்"- என்று பதிவுசெய்துள்ள தங்கேஸ்வரி, விரிவஞ்சி, கிழக்கே மாத்திரம் நிகழ்ந்துள்ள அதிர்ச்சிகரமான மாற்றங்களை அந்த ஆய்வில் விரிவாக எழுதியிருந்தார். இன்றும் இலங்கையில் பிரதேசம் பறிபோவது பற்றி யாராவது எழுதிக்கொண்டும் பேசிக்கொண்டும்தான் இருக்கிறார்கள். இந்நிலையை மாற்றுவதற்கான செயல்தான் இல்லை.
" நாட்டை விட்டே ஓடிவிட்டீர்கள், நிலம் பறிபோவது பற்றி நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்?, ஊரின் பெயர் தொலைந்துவிட்டதே என்று ஏன் கலங்குகிறீர்கள்?" என்று இந்தப்பதிவைப்பார்க்கும் எவரும் எனக்கு எதிர்வினையாற்றலாம்!!! எங்கிருந்தாலும் எங்கள் தாயகம் என்ற உணர்வுடன் வாழ்வதனால், எமது தேசத்தின் கோலம் பற்றி அங்கிருந்தே ஆய்வுசெய்தவர் பற்றி நான் எழுதிவரும் " பெண்ணிய ஆளுமைகள்" தொடரில் இங்கு எழுதவிரும்புகின்றேன். சின்னத்தம்பி கதிராமன் - திருவஞ்சனம் தம்பதியரின் மகளாக 1952 இல் பிறந்திருக்கும் செல்வி தங்கேஸ்வரி, தனது ஆரம்பக்கல்வியை கன்னன்குடா மகா வித்தியாலயத்திலும் இடைநிலைக்கல்வியை மட்டக்களப்பு ஆனைப்பந்தி ரோமன் கத்தோலிக்க மகளிர் பாடசாலையிலும் உயர்நிலைக்கல்வியை வின்ட்சன் மகளிர் கல்லூரியிலும் பெற்றவர். களனி பல்கலைக்கழகத்தில் தொல்லியலில் சிறப்புப்பட்டமும் பெற்றுள்ளார். தொல்பொருளியல் வரலாற்று ஆய்வுகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டிருக்கும் தங்கேஸ்வரியின் தொடக்கால எழுத்துக்கள் 1972 இல் வீரகேசரியிலிருந்து ஆரம்பித்திருக்கிறது. நாட்டுப்புற கதைகளும் எழுதியவர். விபுலானந்தர் தொல்லியல், குளக்கோட்டன் தரிசனம், மாகோன் வரலாறு, மட்டக்களப்பு கலைவளம், கிழக்கிலங்கை வரலாற்றுப் பாரம்பரியங்கள், கிழக்கிலங்கை பூர்வீக வரலாறு முதலான ஆய்வு நூல்களை வரவாக்கியிருப்பவர். பிரதேச அமைச்சின் கீழ் இயங்கிய மட்டக்களப்பு மாவட்ட கலாசார திணைக்களத்தின் செயலாளராகவும் கிழக்கு பல்கலைக்கழகத்தின் நுண்கலைப்பிரிவில் பகுதிநேர விரிவுரையாளராகவும் பணியாற்றியிருப்பவர். 2004 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்றமும் சென்றவர். தமது ஊரில் பல சமூக அமைப்புகளிலும் அங்கம் வகித்து இயங்கியிருக்கும் தங்கேஸ்வரி சமீபகாலமாக உடல்நலம் குன்றியிருப்பதாக அறிந்து, சிகிச்சைக்காக அவர் கொழும்பு வந்திருந்தபோது தொடர்புகொண்டு உரையாற்றினேன். அதற்கு முன்னர் 2015 இல் மட்டக்களப்பிற்கு நான் சென்றிருந்த வேளையிலும் தமது இல்லத்திற்கு அழைத்து உபசரித்தார். தங்கேஸ்வரி உடல்நலக்குறைபாட்டினால் கடந்த சில வருடங்களாக எழுதவில்லை. எனினும் அவருடைய ஆய்வுகள் எமது சமூகம் சார்ந்திருப்பதனால், தமிழ் அரசியல் தலைவர்களின் கண்களுக்கும் அவை எட்டவேண்டும். இவர் தமது ஆய்வுகளுக்காக வடக்கு - கிழக்கு அமைப்புகளின் பாராட்டு விருதுகளையும், கனடா தமிழ் சமூக கலாசார சம்மேளனத்தின் விருதும் பெற்றிருப்பவர். மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தினால் பாராட்டி கெளரவிக்கப்பட்டவர். கலை, இலக்கிய ஆர்வலர். படைப்பிலக்கியத்துறையில் ஈடுபடாவிட்டாலும் சமூக ஆய்வுகளே இவரது எழுத்தூழியம். அதனால் இவரது ஆய்வுக்கட்டுரைகள் எமது ஈழத்தமிழர்களுக்கும் உலகடங்கிலும் வாழும் தமிழர்களுக்கும் ஆவணங்களாகத்திகழுகின்றன. தமிழ் ஆராய்ச்சியாளர்களுக்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் உசாத்துணையாகவும் விளங்குகின்றன.
கிழக்கிலங்கையில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் பல ஊர்களும் குளங்களும் எவ்வாறு பெயர்மாற்றம் பெற்றிருக்கின்றன என்பதையும் தங்கேஸ்வரி விளக்கியிருக்கிறார். இலங்கைகுறித்தும் இங்கு பூர்வீக குடிகளாக வாழ்ந்த தமிழ் மக்கள் பற்றியும் றொபர்ட் நொக்ஸ், அட்சியன் ரேலண்ட், கிறிஸ்தோபர் சுவைட்சர், பேராசிரியர் கிளைக்கோன் ஆகியோர் தரும் ஆதாரங்களையும் முன்வைத்து, சமகாலத்தில் பறிபோகும் ஊர்கள் பற்றியும் ஊர்களின் பெயர்கள் தொடர்பாகவும் விரிவாக பதிவுசெய்துள்ளார். இந்த ஆய்வுக்கட்டுரை வெளியான சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் ( 2011) கட்டுரைக்கோவையின் பிரதிகள் மாநாட்டின் இலங்கை இணைப்பாளர் ஞானம் ஆசிரியர் தி. ஞானசேகரனை தொடர்புகொண்டால் பெற்றுக்கொள்ளலாம். தற்பொழுது, இலங்கை அரசில் தமிழ்மொழி விவகாரம் தொடர்பான அமைச்சராகவிருக்கும் திரு. மனோ. கணேசன் அவர்களின் பார்வைக்கும் தங்கேஸ்வரியின் ஆய்வு பதிவாகியிருக்கும் குறிப்பிட்ட கட்டுரைக்கோவை செல்லவேண்டும். கலிங்க நாட்டிலிருந்து கி.பி. 1215 இல் இலங்கைக்கு படையெடுத்து வந்து ஆட்சிசெய்த மாகோன் பற்றி ஆய்வுசெய்திருக்கும் தங்கேஸ்வரி, இந்தத் தமிழ்மன்னன், இரண்டாம் பராக்கிரமபாகுவின் காலத்தில் பொலன்னறுவையை தலைநகராகக்கொண்டு ஆட்சி செலுத்தியதாகவும் பகைவர்கள் நெருங்கவே முடியாத வகையில் அரண்கள் அமைத்திருந்ததாகவும் இவை தொடர்பான விபரங்கள் தம்பதெனிய வம்சம் பற்றிய ஆய்வுகளில் சொல்லப்பட்டிருப்பதாகவும் விளக்கியிருக்கிறார்.
"சிங்கள வரலாற்று நூல்களில் மாகோன் வரலாறு உரிய முக்கியத்துவம் பெறவில்லை என்பதும் மகாவம்சம், சூளவம்சம் முதலிய ஆவணங்களைத்தொகுத்தவர்கள் பௌத்த பிக்குகள் என்பதால், அந்த ஆவணங்களில் அவன் புகழை மறைக்கும் வகையிலேயே பல செய்திகள் பதிவாகியுள்ளன என்பதும் இங்கு மனங்கொள்ளத்தக்கது" எனக்கூறும் தங்கேஸ்வரி உண்மையைத்தேடி உழைத்திருக்கிறார். ஒவ்வொரு தேசத்தினதும் வரலாற்றுக்கு முந்திய காலத்து நிகழ்வுகளை விஞ்ஞான ரீதியில் ஆய்வுக்குட்படுத்துவதே தொல்லியல் ஆய்வுகள் எனக்கூறும் தங்கேஸ்வரி, அதற்கு உசாத்துணையாக பின்வருவன அவசியம் எனவும் வலியுறுத்துகிறார்: புவிச்சரிதவியல் ( Geology) , மானிடவியல் (Anthropology) , சாசனவியல் (Zithology) , நாணயங்கள் (Coins) , இலக்கியங்கள் (Literature) , ஓலைச்சுவடிகள் (Manuscripts), கர்ண பரம்பரைக்கதைகள் (Mythology), இவற்றோடு மேலாய்வு (Exploration), அகழ்வாராய்ச்சி (Excavation).
இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்பிருந்த நிலை இன்றில்லை. அரசியல் பாராளுமன்ற பாதையில் செல்லும்போது ஆட்சி அதிகாரத்திற்கு வருபவர்களுக்கு ஏதோ வகையில் துணைபோகும் தேசிய சிறுபான்மை இனங்களின் பிரதிநிதிகளாக தெரிவாகும் தலைவர்கள்தான் நில ஆக்கிரமிப்பு, மொழி ஆக்கிரமிப்பு குறித்து குரல் எழுப்பவேண்டும். இலங்கையில் தமிழ்ப்பிரதேசங்கள் படிப்படியாக எவ்வாறு சிங்களமொழியில் அழைக்கப்பட்டு வருகின்றன என்பதையும் அரச திணைக்களங்களின் பிரசுரங்களிலும் சாதுரியமாக நிகழும் மொழிமாற்றங்களையும் தெரிந்துகொள்வதற்கு தங்கேஸ்வரியின் ஆய்வுகள் குறிப்பிட்ட சிறுபான்மைத்தமிழ் முஸ்லிம் தலைவர்களுக்கு உதவியாக இருக்கும். நேற்றைய செய்திதான் நாளைய வரலாறு! எனவே செய்திகளை தரும் ஊடகவியலாளருக்கும் பொறுப்புணர்வு அவசியமானது. 1985 ஆம் ஆண்டு வீரகேசரியில் " ஒரு மொழியை பிறிதொரு மொழி சாதுரியமாக ஆக்கிரமிப்பது உகந்ததா?" என்ற கேள்வியை எழுப்பி எழுதியிருந்த எனது கட்டுரையின் இறுதியில், " ஆங்கிலம் சர்வதேச மொழியாகவும் அதேசமயம் விஞ்ஞான கண்டுபிடிப்புகளுக்கு சிறந்த உசாத்துணையாகவும் ஊடகமாகவும் திகழ்ந்தது. அதனால் எழக்கூடிய குறைகளைக்கூட மன்னித்துவிட முடியும். அதேசமயம் ஒரு விடயத்திற்கு தமிழ்ப்பதம் இருக்கும்பொழுது அதனை பிரயோகிக்காமல் அரசகரும மொழியையே பயன்படுத்த முனைவதுதான் விந்தையானது வேதனையானது. அவ்விதம் மாற்றீடு செய்யப்பட்ட சொற்பிரயோகங்கள் பலவற்றை இங்கே பட்டியல்போட்டு விவரித்துக்கொண்டு போகலாம். ஆனால், விரிவஞ்சி அதனைத்தவிர்க்கிறோம்.சகல இனத்தவர்களையும் சமத்துவமாக நடத்த முனைவதாகக் கூறும் அரச பீடத்தினர், இதுவிடயத்திலும் கருத்தூன்றிச் சிந்திக்கவேண்டும் என்பதற்காகவே இங்கு இதுபற்றிச்சுட்டிக்காட்டப்பட்டது.மொழிகள் வளர்ச்சியடையவேண்டுமே தவிரசிதைந்து சின்னாபின்னமாகிவிடக்கூடாது.அதுஎந்தமொழியானாலும் சரி!"
செல்வி தங்கேஸ்வரி, கிழக்கிலங்கையில் தமிழ்ப்பெயர்கள் மாறியிருக்கும் கோலத்தை விரிவாகச்சுட்டிக்காண்பித்துள்ளார். அவற்றில் சில: குடும்பிமலை (தொப்பிகல)-முதலிக்குளம் (மொரவெவ) -பெரியகுளம் (நாமல்வந்த)-பெரியவிளாங்குளம் (மகாதிவுள்வெவ)-தீகவாபி(திகாமடுள்ள) -பனிக்கட்டி முறிப்பு (பனிக்கட்டியாவ)-குமரேசன் கடவை( கோமரன் கடவ)- வெல்வேரி (வில்கம)-வெண்டரசன் குளம் (வெண்டபுர)-கல்மட்டியான் குளம்( கல்மட்யாவ) -வானுர் (வான்வெவ)- புடவைக்கட்டு (சாகரபுர)-தம்பலகாமம் (தம்பலகமுவ)- வைரியூற்று (சுதேங்கபுர)- அரிப்புச்சந்தி(அலியொலுவ)-கல்லாறு - (சோமபுர)-நிலாப்பனை (நீலபேவ)- ஆண்டான்குளம் (ஆனந்தகம)-பருத்தித்தளவாய்(பதியந்தலாவ)
நடக்கவிருக்கும் உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் கிழக்கிலங்கையில் எதிரும் புதிருமாக சவால்விட்டுக்கொண்டிருக்கும் தமிழ் - முஸ்லிம் கட்சிகளின் கவனத்திற்கு இந்தச்செய்திகளையும் சமர்ப்பிக்கின்றோம்.இப்படியே சென்றால் புதிய அரசியலமைப்பு மட்டுமல்ல இலங்கைக்கென புதிய வரைபடமும் தோன்றிவிடும்!!! அதில்தமிழைத்தேடுவோம்!தமிழ் ,முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளுக்கு இந்தப்பதிவை சமர்ப்பிக்கின்றோம்.இலங்கையின் வரலாற்றில் மறைந்துகொண்டிருக்கும் உண்மைகளை தனது தீவிர ஆராய்ச்சிகளினால் வெளிப்படுத்தியிருக்கும் எங்கள் இலக்கியக்குடும்பத்தின் சகோதரி செல்வி தங்கேஸ்வரி பூரண சுகம்பெற்று, மீண்டும் எழுத்தூழியத்தில் ஈடுபடவேண்டும் என வாழ்த்துகின்றோம்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.