சமகாலத்தில் எழுத்தாளர்கள் சந்தித்துக்கொண்டால் பரஸ்பரம் கேட்டுக்கொள்ளும் ஒரு முக்கியமான கேள்வி, " இறுதியாக படித்த நூல் எது...? " சற்று யோசிப்பார்கள். உடனடியாக பதில் வராது. ஆனால், தமது முகநூலில் என்ன வந்திருக்கிறது..? யார்... யாருடன் விவாதித்தோம் முதலான விவகாரங்கள் பற்றி உற்சாகத்துடன் அல்லது சோர்வுடன் சொல்வார்கள். என்னிடத்தில் முகவரிதான் இருக்கிறது. முகநூல் இல்லையென்பதனால், அவ்வாறு முகநூல்காரர்கள் சொல்லும்போது சகிப்புடன் கேட்டுக்கொள்வேன். மாணவர்களையும் இந்த முகநூல் ஆக்கிரமித்துள்ளது. இம்முறை இலங்கைப்பயணத்தின்போது தகைமைசார் பேராசிரியர், எனது நீண்ட கால நண்பர் எம். ஏ. நுஃமான், பேராதனைப்பல்கலைக்கழகத்திற்கு வந்து உரையாற்றுமாறு அழைத்தார். அங்கு தமிழ்த்துறை தலைவராக பணியிலிருக்கும் பேராசிரியர் வ. மகேஸ்வரனும் தொடர்புகொண்டு அழைத்தார். கடந்த 2015 இலும் இவ்வாறு இவர்கள் அழைத்து சென்றிருக்கின்றேன். அந்தப்பயணம் பற்றியும் முன்னர் பதிவுசெய்துள்ளேன்.
" மாணவர்களிடம், அதுவும் பல்கலைக்கழக தமிழ்த்துறை மாணவர்களிடம் என்னதான் பேசுவது...?" என்ற ஆழ்ந்த யோசனையுடன் அன்று பேராதனைக்குப்பயணமாகி, பேராசிரியர்கள் சொன்னவாறு கலகா சந்தியில் இறங்கினேன். மகேஸ்வரன் அங்கு வந்து என்னை அழைத்துச்சென்றார். அங்கு நண்பர்கள் ஶ்ரீபிரசாந்தன், துரைமனோகரன் உட்பட சில விரிவுரையாளர்களுடன் பல்கலைக்கழகத்தின் சிற்றுண்டிச்சாலையிலேயே மதிய உணவை முடித்துக்கொண்டு மாணவர்களை சந்திக்கச்செல்லும்வேளையில் நுஃமானும் வந்து சேர்ந்தார்.
" தொடர்பாடலும் சமகால இலக்கிய அனுபவங்களும்" என்ற தலைப்பில் பேசவேண்டியிருந்தது. தமிழ்த்துறை மாணவர்கள் கணிசமாக வந்திருந்தார்கள். அவர்களிடம் புன்னகையும் ஆழ்ந்த மௌனமும்தான் காணப்பட்டது. அந்த மெளனத்தை கலைப்பதற்கு பெருமுயற்சி மேற்கொள்ளவேண்டியிருந்தது. எனது தலைப்பு அவ்வாறு அமைந்ததுதான் காரணமோ என்றும் யோசித்தேன். எனது வருகையை பற்றி குறிப்பிட்டுப்பேசிய தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் வ. மகேஸ்வரன், " ஏற்கனவே இரண்டு தடவை அங்கு வந்து நான் உரையாற்றியிருப்பதை" நினைவுபடுத்தினார்.
2011 இல் நாம் கொழும்பில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நடத்திவிட்டு பேராதனைப்பல்கலைக்கழக தமிழ்த்துறை மாணவர்களை சந்திக்க வந்திருக்கின்றோம். அந்த நிகழ்ச்சிக்கு இங்கிலாந்திலிருந்து ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியமும் பிரான்ஸிலிருந்து வி.ரி, இளங்கோவனும், ஜெர்மனியிலிருந்து குணசீலனும் உடன் வந்தனர். இலங்கை எழுத்தாளர்கள் அஷ்ரப் சிஹாப்தீன், ஓ.கே. குணநாதன் ஆகியோரும் எம்முடன் இணைந்தனர். அந்த நிகழ்வை பேராசிரியர் துரை மனோகரன் ஏற்பாடு செய்திருந்தார். மீண்டும் 2015 இல் அங்கு வந்து மாணவர்கள் மத்தியில் உரையாற்றியிருக்கின்றேன்.
2011 இல் இருந்த மாணவர்கள் 2015 இல் இருக்கவில்லை. 2015 இல் இருந்த மாணவர்கள் 2017 இல் இருக்கவில்லை. வருடாந்தம் ஒரே பாடத்திட்டத்தை சிறிய சிறிய மாற்றங்களுடன் அறிமுகப்படுத்துவதுபோன்றுதான் எனது உரையும் அமைந்துவிடுமோ என்றும் சங்கடம் வந்தது. அதனால், இம்முறை மாணவர்களுடன் கலந்துரையாடும் எண்ணத்தில்தான் அவர்கள் முன்னால் தோன்றினேன். ஆயினும், அம்மாணவர்கள் கலந்துரையாடலுக்கு தயாரில்லை என்பதை அவர்கள் மத்தியிலிருந்த ஆழ்ந்த மௌனம் சொன்னது.
இறுதியாக படித்த இலக்கியப்படைப்பு...?, இலக்கிய இதழ்...? முதலான எந்தக்கேள்விகளுக்கும் அவர்களிடமிருந்து எந்தப்பதிலும் இல்லை. அப்போது குறுக்கிட்ட பேராசிரியர் நுஃமான் ஒரு தகவலைச்சொன்னார். ரவீந்திரநாத் தாகூர் பற்றிய ஒரு கட்டுரை எழுதுவதற்கு தரவுகளுக்காக பல்கலைக்கழகத்தின் நூலகத்திற்கு வந்தாராம். அங்கு தாகூர் பற்றிய நூல் நிச்சயமாக இருக்கும் என்ற நம்பிக்கையில்தான் வந்திருக்கிறார். குறிப்பிட்ட நூலும் இருந்திருக்கிறது. அந்த நூலை எடுத்துப்பார்த்தபோது சுமார் 25 வருடங்களுக்கு முன்னர் யாரே பெற்றுச்சென்று மீண்டும் ஒப்படைத்திருப்பதற்கான பதிவுத்திகதி அதில் காணப்பட்டதாம். இதிலிருந்து நாம் தெரிந்துகொள்வது என்னவென்றால், கடந்த 25 வருடகாலமாக எவருக்கும் அங்கு தாகூர் தேவைப்பட்டிருக்கவில்லை. இவ்வாறு எவ்வளவு நூல்கள் நூலகங்களில் எவரது கண்களிலும் தென்படாமல் தேங்கிக்கிடக்கின்றன...?
வெளிநாடுகளில் ஒரு நூலகத்தில் நூல்கள் தொடர்ந்தும் நகரவில்லையென்றால், அவற்றை நூலகர்கள் அப்புறப்படுத்திவிடுவார்கள். நான் வசிக்கும் மெல்பனில் பல நூலகங்களில் பழைய நூல்கள் ஐம்பது சதம் ஒரு டொலருக்கும் கிடைக்கும். அவை வாசகர்களினால் ஏற்கனவே படிக்கப்பட்டு, சில வருடகாலமாக நகராமல் இருக்கும் நூல்கள். பேராதனைப்பல்கலைக்கழகத்தில் ரவீந்திரநாத் தாகூர் இன்னமும் நகரவில்லை....!!! மலிவு விலைக்கும்போகவில்லை...!!!
- பேராதனைப் பல்கலைக்கழகத் தோற்றமொன்று.. -
மாணவர்களிடமிருந்து கேள்விகள் வராதமைக்கு என்ன தயக்கம் என்றும் யோசித்துப்பார்த்தேன். தங்கள் விரிவுரையாளர்கள் முன்னிலையில் கேள்வி கேட்கத் தயங்குகிறார்களா...? வந்திருக்கும் பேச்சாளர் என்னவேண்டுமானாலும் பேசிவிட்டுப்போகட்டும், அதிலிருந்து என்னதான் கிடைக்கப்போகிறது...? என்ற அலட்சிய மனோபாவமா...? கடந்த 2015 இல் வந்திருந்தபோதும் மாணவர்களிடத்தில் ஆழ்ந்த மெளனத்தையே சங்கடத்துடன் ரசித்தேன்.
அந்தத்தடவை நிகழ்ச்சி முடிந்ததும் மாணவர்கள் பலரும் என்னைச்சூழ்ந்துகொண்டு படம் எடுத்தார்கள்.
" எதற்கு...? "எனக்கேட்டதற்கு தங்கள் முகநூலில் பதிவேற்றுவதற்கு என்றார்கள். இந்தத் தகவலை புதிய மாணவர்களிடம் இந்தத்தடவை பேசும்போதே சொல்லிவிட்டதனால் எவரும் அவ்வாறு படம் எடுப்பதற்கு தயாராகவில்லை.
பேராதனைப் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறிய இலக்கிய படைப்பாளிகள், ஆற்றலும் ஆளுமையும் மிக்க பேராசிரியர்கள் பற்றிய ஒரு பட்டியலையும் இம்மாணவர்களிடத்தில் விபரித்தேன். அவ்வாறு சமகாலத்தில் எவரும் வருவதாகத்தெரியவில்லை என்ற கவலையையும் சொன்னேன். பேராசிரியர் துரைமனோகரன் மாணவர்களின் மெளனத்தைப்பார்த்துவிட்டு, " முருகபூபதி சிறுகதைகளும் எழுதியிருக்கிறார். சில சிறுகதைத்தொகுதிகளும் வெளியிட்டிருக்கிறார். அதனால், சிறுகதைகள் ஒரு படைப்பாளியிடம் எவ்வாறு கருக்கொள்கின்றன என்பது பற்றியும் மாணவர்கள் கேட்கலாம்" என்று சொன்னதும் சில கணங்களில் ஒரு மாணவர் எழுந்து, நான் இதுவரையில் வெளியிட்டிருக்கும் எனது சிறுகதைத்தொகுதிகளின் பெயர்ப்பட்டியலைச் சொன்னார். சுமையின் பங்காளிகள், சமாந்தரங்கள், வெளிச்சம், எங்கள் தேசம், கங்கை மகள், நினைவுக்கோலங்கள் என்று அவர் வரிசையாக ஒப்புவித்ததும் அசந்துபோனேன்.
அவ்வளவு சீக்கிரத்தில் அந்த மாணவர் எவ்வாறு அப்படிச்சொன்னார்...? என்பது எனக்கு பேராச்சரியமே. கைக்குள் அடக்கமான நவீனசாதனம்தான் அந்தத்தகவல்களை அவருக்கு துல்லியமாகச்சொன்னதோ என்றும் யோசித்தேன். எனினும் அந்த மாணவராவது வாய்திறந்தாரே என்பதில் சற்று ஆறுதல்.
- பேராசிரியர் வ. மகேஸ்வரன் -
முன்னாள் போராளிகளாக இருந்த மாணவர்கள் பற்றி எழுதிய எங்கோ யாரோ யாருக்காகவோ என்ற சிறுகதை, மறைந்த எழுத்தாளர் செ. கதிர்காமநாதனின் கொட்டும்பனி கதைத்தொகுதியின் பிரதிகள் ஒரு சைவஹோட்டலில் கைதுடைப்பதற்கு பாவிக்கப்பட்டதன் பின்னணியில் எழுதப்பட்ட கதைத்தொகுப்பின் கதை என்ற சிறுகதை, வியட்நாம் போர்க்காலத்தில் அமெரிக்க நேபாம் குண்டுத்தாக்குதலில் எரிகாயங்களுக்குள்ளான கிம்புக் என்ற சிறுமியின் கதையின் பின்னணியில் எழுதப்பட்ட புதர்க்காடுகளில் என்ற சிறுகதை, இலங்கைப்போரில் காணாமலாக்கப்பட்ட ஒரு இளம் தமிழ்த் தந்தையின் சிறிய மகனும், தற்கொலைக்குண்டுதாரியின் தாக்குதலில் உடல் சிதறி கொல்லப்பட்ட ஒரு சிங்கள இராணுவ அதிகாரியின் சிறிய மகனும் புகலிட நாட்டில் ஒரு பாடசாலையில் இனிய நண்பர்களாக உறவாடும் கதையைச் சொல்லும் கணங்கள் என்ற சிறுகதை பற்றியும் அவை எழுதப்பட்டதன் நோக்கம் பற்றியும் சொல்லிவிட்டு, " வாழ்வின் தரிசனங்கள்தான் நாம் எழுதும் கதைகள்" என்று கூறி எனது உரையை நிறைவுசெய்தேன்.
பல்கலைக்கழகத்தின் தமிழ்ச்சங்க வெளியீடுகளான தண்பதம் ( 2013 - 2015 ) ( Proceedings of Annual Conference) பிரதிகளை பேராசிரியர் மகேஸ்வரன் எனக்கு வழங்கினார். அதன் ஆலோசனைக்குழுவில் இருப்பவர்கள் அனைவரும் இலக்கியம் சார்ந்த பேராசிரியர்கள்தான். 2013 தன்பதம் மலரின் நூன்முகத்தில் மகேஸ்வரன் இவ்வாறு தெரிவிக்கின்றார்:-
" பேராதனைப்பல்கலைக்கழகத் தமிழ்த்துறை, தமிழியற் கல்விப்புலத்தில் நீண்ட தடங்களைப்பதிந்து வந்துள்ளது. சுவாமி விபுலானந்தர் தொடக்கிவைத்த கற்றல், கற்பித்தல், ஆய்வுசெய்தல் ஆகிய செயற்பாடுகள் வழிவழி வந்தோரால் கையளிக்கப்பட்ட பாரம்பரியத்தையுடையது. அவ்வாறான தொடரோட்டத்தில், அந்தப்பாரம்பரியத்தின் வழிவந்தோர் இணைந்துள்ள முறைமையின் வெளிப்பாடாகவே தமிழ்த்துறை கடந்த வருடம் நிகழ்த்திய ஆய்வரங்கும், அங்கு வாசித்தளிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பான 'தண்பதமும்' இன்று வெளியிடப்படுகிறது. பேராதனை பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் வரலாற்றில் இது ஒரு புது அத்தியாயத்தை ஆரம்பித்து வைத்துள்ளது எனலாம்."
தண்பதம் என்பதன் அர்த்தம் புதுப்புனல் எனவும் சிலப்பதிகாரத்தில் கடலாடு காதையில் சோழமன்னன் புதுப்புனலை (தண்பதம்) அது வரும் முதல் நாளில் வரவேற்றதாக குறிப்பிடப்படுகிறது எனவும் மகேஸ்வரன் விளக்கம் தருகின்றார்.
இரண்டு தொகுப்புகளிலும், பேராசிரியர்கள் நுஃமான், கி. விசாகரூபன், என்.எஸ். எம். அனஸ், செ.யோகராசா, புஷ்பரத்தினம், துரை மனோகரன், கலாநிதிகள் க. நாகேஸ்வரன், ரமீஸ் அப்துல்லா, எஸ். வை. ஶ்ரீதர், சோதிமலர் ரவீந்திரன், ம. நதீரா, ஶ்ரீபிரசாந்தன், மற்றும் றூபி வலன்ரீனா பிரான்சிஸ், க. இரகுபரன், செல்வ அம்பிகை நந்தகுமாரன், ஹறோசனா ஜெயசீலன், வானதி பகீரதன், தயாநிதி, இராசையா மகேஸ்வரன், கந்தையா சண்முகலிங்கம் ஆகியோர் எழுதியிருக்கிறார்கள்.
எனது பயணத்திற்கு துணையாக இந்தத்தொகுப்புகள் இருந்தன. அதேசமயம் இந்த அரிய தொகுப்புகளை சமகால பல்கலைக்கழக மாணவர்களில் எத்தனைபேர் படித்தார்கள் என்ற கேள்வியும் மனதில் எழுந்தது. இவற்றை இம்மாணவர்களிடம் கொடுத்து அவர்களின் வாசிப்பு அனுபவத்தை பகிர்ந்துகொள்வதற்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். அத்துடன் இலங்கையில் காலத்துக்கு காலம் வெளியாகும் இலக்கிய நூல்களை ( கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, விமர்சனம், திறனாய்வு பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை மாணவர்களிடம் அறிமுகப்படுத்தி, அவர்களை அவ்வப்போது அரங்குகளுக்கு அழைத்து அவர்கள் சமீபத்தில் வாசித்த நூல்கள் பற்றிய வாசிப்பு அனுபவப்பகிர்வுகளை நடத்துவதற்கும் அங்குள்ள பேராசிரியர்களும் விரிவுரையாளர்களும் ஆக்கபூர்வமான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். அத்துடன், இலங்கையில் தேசிய கல்வி நிறுவகத்தினால் உருவாக்கப்படும் தமிழ்ப்பாட நூல்களில் புலம்பெயர்ந்தோர் இலக்கியம் ஏதோ தீண்டத்தகாத பண்டமாகப்பார்க்கப்படுகிறது. தேசிய சாகித்திய விருதுகளுக்கான தெரிவுகளில் நந்திகளின் குறுக்கீடு மேலோங்கியிருக்கிறது. விளம்பரங்களினால் அதிக லாபமீட்டும் தமிழ் ஏடுகளில் படைப்பாளிகளுக்கு வழங்கப்படும் சன்மானம் மிகவும் குறைவாகத்தெரிகிறது. இவை பற்றியெல்லாம் யோசிப்பதற்கும் பல்கலைக்கழக தமிழ்த்துறை பேராசிரியர்கள் நேரம் ஒதுக்குவதன் மூலம் ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு மேலும் வளம் சேர்க்கலாம்.
- பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் -
தண்பதம் தொகுப்பிற்கு வழிகாட்டலும் ஆலோசனையும் வழங்கும் பேராசிரியர் வ. மகேஸ்வரனின் " சுவாமி விபுலானந்தர் தொடக்கிவைத்த கற்றல், கற்பித்தல், ஆய்வுசெய்தல் ஆகிய செயற்பாடுகள் வழிவழி வந்தோரால் கையளிக்கப்பட்ட பாரம்பரியத்தையுடையது. " என்ற கருத்து சம்பந்தப்பட்டவர்களின் செவிப்புலனுக்குச்சேர்ந்தால் எதிர்கால ஈழத்து இலக்கிய உலகிற்கு விமோசனம் கிட்டும்.
எழுபத்தியைந்து (1942-2017) வருடப்பூர்த்தியை கொண்டாடும் பேராதனை பல்கலைக்கழகத்திற்கு எமது வாழ்த்துக்கள். பேராதனை தமிழ்த்துறை மாணவர்களுடனான சந்திப்பையடுத்து அன்று இரவு மாத்தளைக்குச்சென்று, மறுநாள் அதிகாலை அங்கிருந்து புறப்பட்டு, அன்றைய தினம் இரவு திருக்கோணமலைக்குப்புறப்பட்டேன்.
(பயணங்கள் தொடரும்)
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.