" உங்களுடைய கையெழுத்து அழகாக இருக்கிறது” என்றேன். “தலை எழுத்து அப்படி அல்ல” என்றார் கனகராசன். சொல்லும் போது மந்தகாசமான புன்னகை. பல எழுத்தாளர்களின் தலை எழுத்து அவர் சொன்னது போன்று அழகாக அமையவில்லை என்பது என்னவோ உண்மைதான். வேறு எந்தத் தொழிலும் தெரியாமல் எழுத்தை மட்டுமே நம்பிவாழ்வைத் தொடங்கியவர்களின் வரிசையில் இடம் பெற்றவர் மு.கனகராசன். இவர் பணியாற்றிய பத்திரிகைகள் பல. இலக்கியச் சிற்றேடுகள் சிலவற்றுடனும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். நான் அறிந்த வரையில் மு.க. என எம்மால் அழைக்கப்பட்ட மு. கனகராசன், சுதந்திரன் - தேசாபிமானி - புதுயுகம் , தினகரன் முதலான பத்திரிகைககளிலும் சோவியத்நாடு இதழிலும் பணியாற்றியவர். சிற்பி சரவணபவனின் கலைச்செல்வி, செல்வராஜாவின் அஞ்சலி முதலான இலக்கியச் சிற்றேடுகளில் வேலை செய்திருக்கிறார். மல்லிகை ஜீவாவுக்கும் மல்லிகை தொடர்பாக அவ்வப்போது ஆலோசகராக இயங்கினார். மரணப்படுக்கையில் விழுவதற்கு முன்னர் இறுதியாக தினகரனில் வாரமஞ்சரியை கவனித்துக்கொண்டிருந்தார். கவிதை, சிறுகதை , நாடகம், மொழிபெயர்ப்பு, இதழியல் முதலான துறைகளில் ஈடுபாடு கொண்டிருந்த மு.க சிறிது காலம் சோவியத் தூதுவராலயத்தின் தகவல் பிரிவிலும் வேலை செய்தார். எழுத்தாற்றல் மிக்க இவரது படைப்புக்கள் நூலாக வெளிவருவதில்தான் எத்தனை தடைகள், தடங்கல்கள் ஏமாற்றங்கள். ‘கெமுனுவின் காதலி’ என்ற சிறிய நாடக நூலை அச்சுக்கூடத்திலிருந்து பெறுவதற்கு முடியாமல் பொருளாதார நெருக்கடியில் தவித்தார். ‘முட்கள்’ கவிதை நூலிற்கு பேராசிரியர் க.கைலாசபதியின் முன்னுரையைப் பெற்று அச்சடித்து ஒப்புநோக்கப்பட்ட படிகளை மாத்திரம் சுமார் ஒரு வருடகாலம் கொண்டலைந்து இறுதியில் ஒருவாறு அச்சிட்டு வெளியிட்டார். ‘பகவானின் பாதங்கள்’ கதைத் தொகுதியும் பல சிரமங்களுக்கு மத்தியில் வெளியானது. இந்தத்தொகுப்பு சற்று வித்தியாசமானது. இதில் இடம்பெற்ற ஒவ்வொரு சிறுகதை பற்றியும் அதனைப்படித்தவர்கள் எழுதிய நயப்புரையையும் இணைத்து நூலை தொகுத்திருந்தார்.
“சிங்கத் தமிழர் நாமென்றால் சிங்கக் கொடியும் நமதன்றோ” என்று துணிச்சலாக கவிதையும் எழுதிய மு.க.1983 இனவாத வன்செயலின்போது மனைவியுடன் தமிழகம் சென்று – அண்ணா நகரில் சிறிது காலம் குடியிருந்தார்." இவ்வாறு சில வருடங்களுக்கு முன்னர் மறைந்த படைப்பாளி, பத்திரிகையாளர் மு. கனகராசன் பற்றி எனது திரும்பிப்பார்க்கின்றேன் என்ற தொடரில் ஒரு கட்டுரையை தொடங்கி, பின்வருமாறு அதனை நிறைவுசெய்திருந்தேன். " எப்பொழுதும் விரக்தியாகச் சிரிக்கும் இயல்பினைக் கொண்டிருந்த மு.க. அறிவாலும் ஆற்றலினாலும் எங்கோ உயர்ந்திருக்கவேண்டியவர். கரடு முரடான மேடுபள்ளங்கள் நிறைந்த வரட்சியான வாழ்க்கைப்பாதையை அவராகத் தேர்ந்தெடுத்தாரா அல்லது சூழல் அவருக்கு பூரண விடுதலையை கொடுக்கத்தவறியதா...? என்பது அவிழ்க்க முடியாத புதிர் முடிச்சு.
அந்திமகாலத்தில் தனிமையை பெரிதும் விரும்பிய மு.க. மருத்துவமனையில் மரணப்படுக்கையில் இருக்கும் போதும் எனக்கு தகவல் அனுப்புமாறு வாயால் சொல்லாமல் ஒரு காகிதத்தில் பேனாவால் எழுதி மனைவியிடம் கொடுத்திருக்கிறார். மறுநாள் இறந்துவிட்டார். மரணம் நெருங்கும் வேளையிலும் அவர் என்னை நினைத்திருக்கிறார் என்பதனை அறிந்தபோது மனதுக்குள் குமுறினேன். மு.க.வின் அந்திமகாலத்தை புதுமைப்பித்தனது அந்திமகாலத்துடன் ஒப்பிடலாம். மு.க.வுக்கு குழந்தைகள் இல்லை. மனைவியை அவரும் - அவரை மனைவியும் பரஸ்பரம் குழந்தை போன்று நேசித்தனர்.
மு.க. இலக்கியத்தில் நிறைய சாதித்திருக்கக் கூடிய ஆற்றல் நிரம்பப் பெற்றவர். ஆனால், அந்த ஆற்றல் வீண்விரையமானது இலக்கியத்திற்கு நேர்ந்த இழப்பு. ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் சிறந்த கதைகள் குறித்த தேர்வு நடைபெறுமாயின் நிச்சயம் மு.க.வின் கதைகளும் அதில் இடம்பெறும். துன்பியல் நாடகமாகிப்போன அவரது வாழ்விலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டியவையும் இருந்தன. மு.க.வின் கல்லறை இலங்கை வவுனியாவில். அவரைப்பற்றிய நினைவுகள் எனது நெஞ்சறையில்." -- இவ்வாறு எனது வாழ்வில் மறக்கமுடியாத இலக்கிய நண்பர் மு.கனகராசனின் மனைவியைப் பார்ப்பதற்குத்தான் என்னுடன் யாழ்ப்பாணத்திலிருந்து வந்திருந்தவர்களுடன் அந்த அந்திப்பொழுது சாயும் வேளையில் வவுனியாவின் ஒரு எல்லைக்கிராமத்திற்கு சென்றுகொண்டிருந்தேன். அந்தப்பாதையினால் சென்றால் செட்டிகுளம் வரும். அதற்கு முன்னர் அந்தப்பாதையில் நான் சென்றதில்லை. என்னுடன் வந்தவர்களுக்கும் அந்தப்பகுதி புதிது. வீட்டை கண்டுபிடிக்க சற்று தாமதமானது.
இறுதியாக திருமதி அசுந்தா கனகராசன் அவர்களை 2003 இல்தான், கொழும்பின் புறநகர்பகுதியில் பார்த்தேன். கனகராசன் மறைந்த பின்னர், அவர் ஒரு அனாதைச்சிறுவர் இல்லத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தார். குழந்தைகள் இல்லாத அவருக்கு அந்தக்குழந்தைகளைத்தான் விதி வழங்கியிருந்தது. பின்னர் அந்த வேலையும் அவருக்கு நிரந்தரமில்லாமல்போனதும் தனிமரமானார். கனகராசன் முன்னர் உமா மகேஸ்வரனது புளட் இயக்கத்தின் சார்பில், திம்பு பேச்சுவார்த்தைக்கும் அனுப்பிவைக்கப்பட்டவர். அந்தப்பேச்சுவார்த்தை மேசைக்கு இயக்கங்களின் தலைவர்கள் செல்லவில்லை. சென்றது அவர்களின் பிரதிநிதிகள்தான். வவுனியா பிரதேசம் பின்னாளில் புளட் இயக்கத்தின் வசம் இருந்தது. இங்கிருந்த அவர்களின் முகாமில்தான் மாணிக்கதாசன் புலிகளின் தாக்குதலில் கொல்லப்பட்டார். வவுனியாவில் ஏற்கனவே பல புளட் இயக்கத்தினர் புலிகளினால் வேட்டையாடப்பட்டுள்ளனர். அதனால், புளட் இயக்கத்திற்கென வவுனியாவில் ஒரு மயானமும் இருந்தது. அங்குதான், புற்று நோயினால் மறைந்த மு. கனகராசனும் அடக்கம் செய்யப்பட்டார் என்ற தகவலை பின்னர் தெரிந்துகொண்டேன்.
எழுத்தாளர்களுக்கு வாழ்க்கைப்பட்ட பல பெண்களின் நிலை பாரதி காலம் முதல் இற்றை வரையில் சோகரசம் நிரம்பியதுதான். அதனால்தான் மு. கனகராசன் பற்றிய எனது கட்டுரையில் இவரை புதுமைப்பித்தனது வாழ்க்கையுடன் ஒப்பிட்டேன். பல தாய் தந்தையற்ற அனாதைக்குழந்தைகளின் பாராமரிப்பாளராக பணியாற்றிய திருமதி அசுந்தா கனகராசன், யாராவது பராமரிக்கமாட்டார்களா என்ற நிலைக்குத் தற்போது தள்ளப்பட்டுள்ளார். தன்னை எங்காவது ஒரு முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடுமாறு கலங்கியவாறு அவர் அன்று சொன்னபோது ஆடிப்போய்விட்டேன். பல நோய் உபாதைகளுடன் போராடிக்கொண்டிருப்பவருக்கு கண் பார்வையிலும் கோளாறு வந்துள்ளது. என்னால் முடிந்த உதவிகளையும் செய்துகொடுத்துவிட்டு, கிளிநொச்சி, வவுனியா, கல்முனை பிரதேசங்களிலிருக்கும் சில அன்பர்களுடன் தொடர்புகொண்டு அந்தப்பிரதேசங்களிலிருக்கும் ஆதரவற்றோர் இல்லங்கள் பற்றி ஆராய்ந்தேன். நீடித்த போர் பலரையும் ஆதரவற்றவர்களாக்கியிருக்கிறது. அத்துடன் பல எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர் குடும்பங்களிலும் பலர் நிர்க்கதியாகியிருக்கின்றனர். அத்தகையோருக்கும் உதவவேண்டும் என்ற நோக்கத்துடன் ஒரு அறக்கட்டளையை ஆரம்பிக்கவேண்டும் எனJaseentha்ற எண்ணத்தை 2011 ஆம் ஆண்டு நாம் நடத்திய முதலாவது சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாட்டின்போது விதைத்தோம். அவுஸ்திரேலியாவிலிருந்து 1988 ஆம் ஆண்டு முதல் போரில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக ஒரு தன்னார்வத்தொண்டு அமைப்பை தோற்றுவித்தமைபோன்று, 2009 இற்குப்பின்னர், படைப்பிலக்கியம், ஊடகத்துறையில் பணியாற்றி போர் உட்பட பல்வேறு காரணிகளினால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உதவி வழங்குவதற்கும் ஒரு அமைப்பை உருவாக்குவதற்கு ஒரு தீர்மானம் அந்த மாநாட்டில் முன்மொழியப்பட்டிருந்தது. ஆனால், அந்த மாநாட்டை அவதூறு பொழிந்து அசிங்கப்படுத்துவதற்கும் ஒரு புலன்பெயர்ந்த கும்பல் தீவிரமாக இயங்கியது. எதிர்வினை என்ற பெயரில் ஆணவத்தையே அம்பலப்படுத்தி நின்றது. கூட்டாக இணைந்து இயங்கத்தெரியாதவர்களில் முன்னிலை வகிப்பவர்கள் அதிபுத்திசாலிகள். சாதாரண பாமர மக்களிடத்தில் கூட்டுறவு மனப்பான்மையை பார்க்க முடியும். ஆனால், ஒரு இலக்கிய அமைப்பை, ஒரு இலக்கிய சந்திப்பை, ஒரு இலக்கிய இதழை புரிந்துணர்வின் அடிப்படையில் கூட்டாக இணைந்து செய்யத்தெரியாதவர்களிடம் எஞ்சியிருப்பது ஈகோ, எனப்படும் தன்முனைப்பு ஆணவம்தான். ஆனால், சம்பந்தப்பட்டவர்கள் இந்தக்குற்றச்சாட்டை ஏற்கமாட்டார்கள். இன்றும் பல இலக்கியவாதிகள், கலைஞர்கள் ஏழ்மையிலும் நோய் உபாதைளினால் போதிய மருத்துவ வசதிகள் இன்றியும் அல்லல் படுகின்றனர். அவர்களின் மறைவுக்குப்பின்னர் அவர்களின் குடும்பங்கள், குறிப்பாக மனைவிமார் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கின்றனர். எனக்கும் பலரது வேண்டுகோள்கள் வந்திருக்கின்றன. அத்துடன் புலம்பெயர்ந்து வாழும் பல எழுத்தாளர்களுக்கும் கோரிக்கைகள் வருகின்றன. குறிப்பிட்ட சிலர் தம்மால் முடிந்த உதவிகளை சம்பந்தப்பட்டவர்களுக்கு செய்துவருகின்றனர் என்பதும் மறுப்பதற்கில்லை.
எனது இலக்கியச்சகோதரன் மு. கனகராசன் அவர்களின் துணைவியாருக்கு என்னால் முடிந்த உதவிகளையும் வழங்கிவிட்டு, அவரது கணவர் தொடர்போடிருந்த புளட் இயக்கத்தின் சார்பில் தற்சமயம் பாராளுமன்றில் அங்கத்துவம் வகிக்கும் ஒரு எம். பி.யையும் தொலைபேசியில் தொடர்புகொண்டு, " உங்களால் முடிந்த உதவியை அவருக்குச் செய்யுமாறு" வேண்டினேன். புதுமைப்பித்தனின் வாழ்க்கை மட்டுமல்ல இன்னும் பல ஈழத்து எழுத்தாளர்களின் வாழ்க்கையும் எம்மவருக்கு ஒரு எச்சரிக்கைதான். "பல்வேறு குண இயல்புகள் கொண்ட பாத்திரங்களை சிருஷ்டிக்கும் எழுத்தாளர்களே..... உங்களை நம்பியிருக்கும் மனைவி, மக்கள் குறித்த எதிர்காலம் பற்றியும் நீங்கள் சற்று எச்சரிக்கையாக இருங்கள்" என்ற வேண்டுகோளைத்தான் அன்றைய அந்த மாலைநேரத்து சந்திப்பு முன்வைக்கத்தோன்றுகிறது.
அன்று வவுனியாவிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணமானேன். என்னுடன் வந்தவர்கள் யாழ்ப்பாணத்திற்குச் செல்லவேண்டும். அனைவரும் கிளிநொச்சியில் இரவுப்போசனத்தை முடித்துக்கொண்டோம். நண்பர் கருணாகரன் என்னை அழைத்துச்செல்ல வந்திருந்தார். யாழ்ப்பாணம் சிறுவர் அபிவிருத்தி நிலையத்தைச்சேர்ந்தவர்கள் இந்தப்பயணத்தின்போது எனTamilkavi1க்கு வழங்கிய ஆதரவையும் ஒத்துழைப்பையும் மறக்கமுடியாது. அந்த சில நாட்கள் நாம் அனைவரும் ஒரே குடும்பத்தினராக இணைந்திருந்தோம். அவர்களை விட்டுப்பிரிவது மனதிற்கு சங்கடமாக இருந்தது. " மீண்டும் சந்திப்போம். எமது மக்களுக்காக தொடர்ந்தும் இணைந்திருப்போம்" எனச்சொல்லி, அவர்களை அந்த இரவுப்பொழுதில் யாழ்ப்பாணத்திற்கு வழியனுப்பிவைத்துவிட்டு கருணாகரனுடன் அவரது வீட்டிற்குச்சென்றேன்.
கிளிநொச்சிக்கு வரும் எழுத்தாளர்கள் எவரும் கருணாகரன் வீட்டிற்கு செல்லத்தவறுவதில்லை. அங்கு அடிக்கடி சந்திப்புகள் நிகழும். தமிழ் நாட்டிலிருந்தும் ஈழத் தமிழர்கள் புலம்பெயர்ந்த நாடுகளிலிருந்தும் இலங்கை வரும் எழுத்தாளர்கள், கலைஞர்கள் பலரும் கருணாகரனின் கிளிநொச்சி வீட்டை தரிசிக்காமல் செல்ல மாட்டார்கள். இவரது மகிழ் பதிப்பகத்தின் ஊடாக பலரதும், குறிப்பாக புகலிடத்தவர்களின் நூல்கள் வெளியாகிவருகின்றன. உலகெங்கும் வாழும் கலை, இலக்கியவாதிகளை இணைக்கும் பாலமாகவும் விளங்கிவருபவர் நண்பர் கருணாகரன். இவருடை கருத்தாழம் நிரம்பிய அரசியல் பத்திகளை தேனீ வாசகர்கள் அடிக்கடி அல்ல, சில காலப்பகுதியில் தினந்தோறும் படித்திருப்பார்கள்.
"நிலத்துக்கும் ஆகாயத்துக்குமிடையில்
அந்தரவெளியில் நீந்திவரும்
பறவைகளை வரவேற்றுக்கொண்டிருக்கும்
மரங்களுக்குத் தெரியுமா
எந்தப்பறவை
எப்போது வந்து எங்கே அமருமென்று...?" -
என்று ஒரு கவிதையை கருணாகரன் எழுதியிருக்கிறார். இவரது வீட்டுக்கு வந்து அமர்ந்துசெல்லும் எழுத்தாளர்கள், கலைஞர்களையும் அவ்வாறு பறவைகளுடன் ஒப்பிடலாம். முகம் சுழிக்காமல், எப்பொழுதும் புன்முறுவல் பூத்த முகத்துடன் வருபவர்களை வரவேற்று உபசரிப்பவர்கள்தான் கருணாகரனும் அவரது துணைவியாரும். எனக்கு இவர்களுடனான பழக்கம் 2010 இற்குப்பிறகே கிட்டியது. எவர் வந்தாலும் அவர்களுடனான சந்திப்புக்கு நேரமும் இடமும் தெரிவுசெய்து நிகழ்ச்சியையும் பயனுள்ளவாறு நிறைவேற்றுவதிலும் கருணாகரன் சமர்த்தர். கருணாகரனின் வீட்டுக்குவந்து சேர்ந்த அந்த இரவு கனடாவிலிருந்து நண்பர் கவிஞர் சேரனும் தொடர்புகொண்டு உரையாடினார். பிரான்ஸிலிருந்து இலங்கை வந்து திருகோணமலையிலிருந்து தொடர்புகொண்டார் எழுத்தாளர் கோமகன். இவ்வாறு தொலைபேசி ஊடாகவும் நேரிலும் எவராவது தொடர்புகொண்டவாறே இருப்பதனால் கருணாகரனின் வீடு எப்பொழுதும் கலகலப்பாகவே இருக்கும்.
"போருக்குள் மக்களை திணித்தவர்கள் - போரை நீடித்தவர்கள் - விடாக்கண்டர்கள் - கொடாக்கண்டர்கள் - அனைவரதும் மனச்சாட்சியை உலுக்கும் சிறுகதைகளையும் கவிதைகளையும் பத்தி எழுத்துக்களையும் அயற்சியின்றி தொடர்ந்து எழுதிவருபவர் கருணாகரன். இவரது எழுத்துக்கள் என்னைக்கவர்ந்தவை. அதனால், அடிக்கடி இவருடன் தொடர்பாடலை மேற்கொள்கின்றேன்.
மறுநாள் எனக்காக கருணாகரன் சில சந்திப்புகளையும் கிளிநொச்சியில் ஏற்பாடு செய்திருந்தார். கிளிநொச்சி ஊடக அமையத்தினருடனான கலந்துரையாடல், கிளிநொச்சி முன்னாள் எம்.பி.யும், சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பினை உருவாக்கியிருப்பவருமான முருகேசு சந்திரகுமார், ஆசிரியர்கள் பெருமாள் கணேசன், பங்கயற்செல்வன் உட்பட சில அறிவுஜீவிகளுடனான சந்திப்புக்கும் கருணாகரன் ஏற்பாடு செய்திருந்தார். அன்றைய தினம் பகல்பொழுதில் எழுத்தாளரும் சமூகப்பணியாளருமான தமிழ்க்கவி அம்மாவும் என்னைப்பார்க்க வந்திருந்தார்கள். இவர்களுக்கும் இம்மாதம் 19 ஆம் திகதி 70 வயது பிறக்கிறது. தொடர்ந்து எழுதுகிறார். இயங்குகிறார். இவருக்கும் நண்பர் புதுவை இரத்தினதுரைக்கும் எனக்கும் இடையே ஒரு ஒற்றுமை இருப்பதை அன்றைய அவரின் பேச்சில் தெரிந்துகொண்டேன். நாங்கள் மூவரும் ஜூலை மாதத்தில் வெவ்வெறு திகதிகளில் பிறந்திருப்பவர்கள். அன்று தமிழ்க்கவி அம்மா என்னிடம் சொன்ன ஒரு தகவல் ஆச்சரியமானது. போருக்குப்பின்னர் ஒரு புகழ்பெற்ற சிங்களப் புலனாய்வு எழுத்தாளர் இவரைச்சந்தித்து பேசியபொழுது, புதுவை இரத்தினதுரை பற்றி இவர் விசாரித்திருக்கிறார். அந்தப்புலனாய்வாளரோ, புதுவை இரத்தினதுரையின் பிறந்த தினத்தை இவரிடம் கேட்டு உறுதி செய்திருக்கிறார். இருவரும் ஜூலை மாதத்தில் பிறந்திருப்பதை தமிழ்க்கவி அம்மா நினைவூட்டியிருக்கிறார். குறிப்பிட்ட புலனாய்வாளருக்கு புதுவை இரத்தினதுரையின் பிறந்த திகதியும் தெரிந்திருக்கிறது.
போர் முடிவுற்றதும் சரணடைந்தவர்களில் ஒருவர் புதுவை இரத்தினதுரை. வெள்ளைக்கொடியை ஏந்தியவாறு வண.பிதா ஜோசப் அடிகளார் முன்செல்ல புதுவை இரத்தினதுரை, யோகி, லோரன்ஸ் திலகர், இளம்பரிதி, எழிலன், தங்கன், திலக், பேபி சுப்பிரமணியம் உட்பட பலர் இராணுவத்திடம் சரணடைந்தனர் என்பதற்கு ஆதாரம் இருக்கிறது. ஆனால், இன்றுவரையில் இவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது தெரியாது. இது இவ்விதமிருக்க, புதுவை இரத்தினதுரையின் பெயரையும் அவரது பிறந்த திகதியையும் குறிப்பிட்டு அந்த புலனாய்வு எழுத்தாளர் தமிழ்க்கவி அம்மாவிடம் விசாரித்திருப்பது பேராச்சரியம்தான். அப்படியாயின் வெளிநாடொன்றிலிருந்துகொண்டு இயங்கும் அந்தப்புலனாய்வு எழுத்தாளருக்கு பல விடயங்கள் தெரியும் என்பதிலிருக்கும் உண்மைத்தன்மை குறித்து காணாமல் போனவர்களுக்காக அலுவலகம் அமைக்கவிருப்பவர்கள் ஆராயவேண்டும்.
இதுகுறித்து நான் அப்போது ஆழ்ந்து யோசித்தமையினால், தமிழ்க்கவி அம்மாவின் ஊழிக்காலம் நாவல் குறித்தும், மலையக மக்கள் தொடர்பான அவருடைய கட்டுரை எழுப்பியிருந்த சர்ச்சைகள் பற்றியும் மேலும் பேசுவதற்கு தவறிவிட்டேன். அவரும் ஒரு களஆய்வுப்பணிக்கு செல்லும் அவசரத்திலிருந்தார். அவருக்கு விடைகொடுத்தநேரத்தில், எமது கல்வி நிதியத்தினால் பயனடையும் கிளிநொச்சி மாணவி செல்வி ஜசிந்தாவும் தனது தாயாருடன் வந்துவிட்டார். இந்தமாணவி போரிலே ஒரு காலை இழந்தவர். 2010 ஆம் ஆண்டு முதல் எமது கல்வி நிதியத்தின் ஆதரவுடன் படிப்பை தொடருபவர். காலில் அடிக்கடி சிகிச்சை உபாதையையும் தொடருகிறார். யாழ்ப்பாணம் நிகழ்ச்சிக்கும் இம்முறை அவரால் வரமுடியாதுபோய்விட்டது. உயர்தர வகுப்பிலிருக்கும் அவரது கல்வி முன்னேற்றம் எதிர்காலத்திட்டங்கள் பற்றி கேட்டேன். கணினி பயிற்சி வகுப்புக்கு செல்லவிருப்பதாகச் சொன்னார். இந்த சந்திப்புகளை முடித்துக்கொண்டு கிளிநொச்சி ஊடக அமையம் ஒழுங்குசெய்திருந்த கலந்துரையாடலுக்கு புறப்படத்தயாரானேன்.
(பயணங்கள் தொடரும்)