கந்தையா நடேசன் என்ற இயற்பெயர்கொண்டவரும், இலக்கிய ஊடகத்துறைகளில் தெணியான் என அழைக்கப்பட்டவருமான ஈழத்தின் மூத்த இலக்கிய ஆளுமையின் பிறந்த தினம் இன்றாகும். வடமராட்சியில் பொலிகண்டியில் கந்தையா - சின்னம்மா தம்பதியருக்கு 06-01-1942 இல் பிறந்த நடேசு, இலக்கியஉலகில் பிரவேசித்ததும் தெணியான் என்ற பெயரில் எழுதத்தொடங்கியவர். தான் கல்வி கற்ற கரவெட்டி தேவரையாளி இந்துக்கல்லூரியிலேயே நீண்டகாலம் ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றுள்ள தெணியானை மற்றும் ஒரு மூத்த எழுத்தாளர் கே. டானியலின் வாரிசு எனவும் வர்ணிக்கப்பட்டவர். நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளும் பல நாவல்களும் சில விமர்சனக் கட்டுரைத்தொகுதிகளையும் தமிழ் இலக்கியத்திற்கு வரவாக்கியிருக்கும் தெணியானின் பாதுகாப்பு என்ற யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் ஜீவநதியில் வெளிவந்தது. இச்சிறுகதை தற்போது இலங்கைப்பாடசாலைகளில் 11 ஆம் ஆண்டு மாணவர்களுக்கான தமிழ் பாட நூலிலும் சேர்த்துக்கொள்ளப்பட்டிருக்கிறது. யாழ்ப்பாணத்திலிருந்து முன்னர் வெளியான விவேகி என்ற இதழில் 1964 இல் தெணியானின் முதல் சிறுகதை பிணைப்பு வெளியாகியது. அதனைத்தொடர்ந்து, மல்லிகை, ஞானம், யாழ். முரசொலி உட்பட பல இதழ்களில் அயராமல் எழுதியிருப்பவர். இவருடைய கழுகுகள் (நாவல்) சொத்து (சிறுகதைத்தொகுதி) என்பன தமிழ்நாட்டில் பிரபல பிரசுர நிறுவனங்களான நர்மதா பதிப்பகம், என்.சி.பி.எச் வெளியீடுகளின் ஊடாக தமிழக வாசகர்களையும் சென்றடைந்துள்ளன.
இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் இயங்கிய காலத்தில் யாழ்ப்பாணக்கிளையின் செயலாளராகவும் இயங்கியிருக்கும் தெணியான், தமது படைப்புகளுக்காக இலங்கை தேசிய சாகித்திய விருது, வடகிழக்கு மகாண அமைச்சுப்பரிசு, யாழ். இலக்கிய வட்டத்தின் பரிசு, இலங்கை தேசிய கலை இலக்கியப்பேரவை - தமிழ்நாடு சுபமங்களா இதழ் ஆகியன இணைந்து வழங்கிய பரிசு, மற்றும் தமிழ்நாடு கு. சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது, கொடகே விருது, கலாபூஷணம் விருது, இலங்கை அரசின் உயர் விருதான சாகித்திய ரத்னா விருதும் பெற்றிருப்பவர்.
இலங்கை வானொலிக்காக முன்னர் பல நாடகங்களும் எழுதியிருக்கும் தெணியான் பேராசிரியர் க. சிவத்தம்பி, மல்லிகை ஜீவா ஆகியோர் பற்றியும் விரிவான நூல்களை வரவாக்கியிருப்பவர். தான் கற்ற, ஆசிரியப்பணியாற்றிய தேவரையாளி இந்துக்கல்லூரியின் இரண்டு வெளியீடுகள் மற்றும், மல்லிகை ஜீவாவின் ஈழத்திலிருந்து ஓர் இலக்கியக்குரல் நூலினதும் தொகுப்பாசிரியருமாவார்.
கனடாவில் வதியும் தெணியானின் தம்பி நடத்திய நான்காவது பரிமாணம் இதழின் சார்பில் வெளியான மரக்கொக்கு நாவல் சிங்களத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 1964 முதல் அரைநூற்றாண்டுக்கும் மேலாக அயராமல் இலக்கியப்பிரதிகளை எழுதிவரும் தெணியானுக்கு கடந்த 2003 ஆம் ஆண்டில் நடந்த மணிவிழாக்காலத்தில், பல இலக்கிய ஆளுமைகள் இவர் பற்றி எழுதியிருக்கும் மணிவிழா சிறப்பு நூலும் வெளிவந்திருக்கிறது. இவரது பல்துறை இலக்கிய ஆற்றல்களை மதிப்பீடு செய்யும் " தெணியானின் படைப்புகள் மீதான பார்வை" - " தெணியானின் ஜீவநதிச்சிறுகதைகள் " ஆகியனவற்றை யாழ். ஜீவநதி கடந்த 2013 இல் இவரது பிறந்த தினத்திலேயே விழா எடுத்து வெளியிட்டமை குறிப்பிடத்தகுந்தது.
இலங்கையில் மல்லிகை, ஞானம், கனடா காலம் முதலான கலை, இலக்கிய இதழ்கள் தெணியானை அட்டைப்பட அதிதியாகவும் பாராட்டி கௌரவித்துள்ளன. இன்று 75 வயதையடைந்து, பவளவிழாவுக்கு தகுதியாகியிருக்கும் எங்கள் மூத்த இலக்கிய சகோதரன் தெணியான் இதுவரையில் எந்த ஒரு வருடத்திலும் தமது பிறந்த நாளைக் கொண்டாடவில்லை என்பதும் ஒரு முக்கிய செய்தி. அதனால் நாம் அவரை நினைத்து அவரது 75 வயது பிறந்த தினத்தை கொண்டாடுவோம். சில வருடங்களுக்கு முன்னர் கனடா காலம் இதழில் தெணியான் பற்றி நான் எழுதிய ஆக்கத்திலிருந்து சில மாற்றங்களுடன் இதனை மீண்டும் வாசகர்களிடம் ( தெணியானின் பவளவிழாவை முன்னிட்டு) தருகின்றேன்.
----------------------
பொற்சிறையில் வாடும் புனிதர்களின் விடிவை நோக்கிக் குரலெழுப்பியவர் தொண்ணூறுகளில் நண்பர் ராஜஸ்ரீகாந்தன், தெணியானின் “பொற்சிறையில் வாடும் புனிதர்கள்’ நாவலின் சில பிரதிகளை அவுஸ்திரேலியாவுக்கு வருகை தந்த ஒரு குடும்ப நண்பரிடம் கொடுத்தனுப்பியிருந்தார். அந்த நண்பரின் குடும்பம் அவுஸ்திரேலியாவில் வசிப்பதற்குக் குடியுரிமை பெற்று வந்தது. கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் அவர்களின் பொதிகள் சோதனையிடப்பட்டன. பாதுகாப்புக் காரணங்களின் நிமித்தம் நடக்கும் வழக்கமான சோதனைதான். அவர்களின் ‘பேக்’கில் தெணியானின் நாவலைப் பார்த்ததும் சோதனையிட்டவர்களுக்கு அதிர்ச்சி வந்துவிட்டது. தமிழ் ஓரளவு வாசிக்கத் தெரிந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நாவலின் பெயரைப் பார்த்துவிட்டு யோசிக்கத் தொடங்கி விட்டனர். அதில் ' சிறை' என்ற சொல்தான் அவர்களை யோசிக்க வைத்துவிட்டது. தேசிய இனப் பிரச்சினையும் தமிழினப் போராட்டமும் முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கும் பொழுது அவுஸ்திரேலியாவுக்குச் செல்லும் ஒரு தமிழ்க் குடும்பத்திடம் ' சிறை' என்ற சொல் இடம்பெற்ற புத்தகமா...? நல்ல காலம். அந்த நாவலின் முகப்பு அட்டை பாரதூரமாக இல்லை எனினும் ' சிறை' உறுத்துகிறது. குறிப்பிட்ட நாவலின் பிரதிகளைப் பறி தல் செய்துவிட்டார்கள். நண்பரும் குடும்பத்தினரும் நலமே வந்து சேர்ந்துவிட்டார்கள். அவர்களின் பிள்ளைகளும் வளர்ந்து திருமணமும் முடித்துவிட்டார்கள். " பொற்சிறையில் வாடும் புனிதர்கள்" நாவலை அந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பின்னர் எழுத்துக் கூட்டி வாசித்தார்களா..? அல்லது ஏதும் ஆவணங்களுடன் வைத்துப் பாதுகாக்கின்றார்களா...? அல்லது எங்காவது எறிந்துவிட்டார்களா...? என்பதும் தேசிய இனப்பிரச்சினைக்கு முடிவு தெரியாதது போன்றே பதில் தெரியாத வினாக்கள்தான். ஆனால், புனிதர்கள் இன்றும் பொற்சிறைகளில் வாடிக்கொண்டு தானிருக்கிறார்கள்.
இலங்கையின் வட புலத்தில் கோயில்களில் பூசை செய்து வரும் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கோயில் நிர்வாகஸ்தர்களினாலும் முதலாளிமாரினாலும் எப்படி பாதிக்கப்படுகிறார்கள்...? என்பதைச் சித்திரித்து அவர்களுக்கு சோஷலிஸ யதார்த்தப் பார்வையில் தெணியான் தந்த தீர்வு குறித்துப் பேசுகிறது அந்த நாவல். தெணியான் யார்...? தனது பூர்வீகத்தின் குறியீடாக அந்தப் பெயரைச் சூட்டிக் கொண்டு இலக்கியத்தில் தடம் பதித்த கந்தையா நடேசன். டானியல், ரகுநாதன், டொமினிக் ஜீவா ஆகியோர்தான் சாதியம் குறித்த அதிக சிறுகதைகளை எழுதியிருக்கிறார்கள் என்றுதான் ஈழத்து இலக்கிய விமர்சகர்கள் நினைக்கக்கூடும். ஆனால், அது தவறு. நூற்றி முப்பதுக்கும் அதிகமான சிறுகதைகளை எழுதியுள்ள தெணியான் தான் சாதியம் குறித்த அதிகப்படியான சிறுகதைகளையும் தந்துள்ளார்.
வடபுலத்தில் அடிநிலையில் வாழ்ந்த மக்களின் வாழ்விலும் போராட்டங்களிலும் கலந்து கொண்டவர், அவர்களின் ஆலயப் பிரவேசப் போராட்டங்களிலும் பங்கேற்ற தெணியான், ஆலயத்துக்குள் எம்மால் பிரவேசிக்க முடியாத ' மூலஸ் தானம்’ வரையும் சென்று பூசை செய்யும் ஐயர்களின் வாழ்வை சித்திரித்ததன் மூலத்தை ரிஷி மூலம், நதிமூலம் போன்று நாம் ஆராயப் புகுந்தபொழுது, எனக்கு தெணியானின் வாக்குமூலத்திலிருந்தே பதில் கிடைக்கிறது. ரத்னசபாபதி ஐயர் என்ற மற்றுமொரு எழுத்தாள நண்பரிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தெணியான், ஈழத்து இலக்கிய வரலாற்றில் முக்கியத்துவம் பெறும் அந்த நாவலை எழுதியிருக்கிறார். (அண்மையில் நண்பர் ரத்னசபாபதி ஐயர் லண்டனிலிருந்து அவுஸ்திரேலியா வந்தசமயம் மெல்பனில் எமது இல்லத்திற்கும் வந்தார். நாமிருவரும் தெணியானுடன் தொலைபேசியில் உறவாடியபோது பொற்சிறையில் வாடும் புனிதர்கள் பற்றிய பேச்சும் எழுந்தது. ) இச்சந்தர்ப்பத்தில் எனக்கு ஒரு சுவாரஸ்யமான தகவல் நெஞ்சில் வந்து ஊஞ்சலாடுகிறது. பல வருடங்களுக்கு முன்னர் இயக்குநர் பாக்கியராஜ் ' இது நம்ம ஆளு' என்றொரு படம் எடுத்திருந்தார். நாவிதர் சமூகத்தைச்சேர்ந்த கதாநாயகன் வேலைதேடி அலைந்து கிடைக்காமல், ஒரு பார்ப்பனரின் சிநேகிதத்தினால் அவரது முறுக்கு வியாபாரத்தில் இணைந்து காலப்போக்கில் பார்ப்பன வேடமே தரித்து ஆஸ்திக பிராமணரின் மகளையே காதலித்து திருமணமும் செய்துவிடுவான். உண்மை அம்பலமானவுடன் மானம் போய்விட்டதென்று ஆஸ்திக பிராமணத் தந்தை தீ மூட்டி அதில் சங்கமமாகி இறந்து விடுவதற்கு தயாராவார். கதாநாயகன் அவரைக் காப்பாற்றி தனது தவறுக்கு மன்னிப்புக்கேட்பான். அவரும் மனந்திருந்தி அவனை ஏற்றுக்கொள்வார். இத்திரைப்படம் வெளியானால் பல விவகாரங்களை உருவாக்கிவிடும் என்று தயங்கிய பாக்கியராஜ் என்ன செய்தார் தெரியுமா...? எழுத்தாளரும் திரைப்பட வசன கர்த்தாவுமான பார்ப்பனிய சமூகத்தைச் சேர்ந்த பாலகுமாரன் அந்தத் திரைப்படத்தின் இயக்குநர் என்று சுவரொட்டிகளை ஒட்டிப் படத்தைத் திரையிட்டார். நல்ல வியாபார தந்திரம் என்று அக்காலத்தில் பேசப்பட்டது.
தெணியான் வெறுமனே சாதிப்பிரச்சினைகளை மாத்திரம் கருப்பொருளாகக் கொண்டு சிறுகதைகளையோ நாவல்களையோ படைக்கவில்லை. சமூகத்தின் பல தளங்களிலும் நிகழும் ஒடுக்கு முறைக்கு எதிராகவே எழுதியவர். அதனால்தான் வடபுலத்தில் ஒடுக்கு முறைக்கு ஆளாகியிருக்கும் மற்றுமொரு சமூகத்தைச் சேர்ந்த கோயில் ஐயர்களின் பிரச்சினையை தனது பேனாவுக்கு எடுத்துள்ளார். குறிப்பிட்ட ' பொற்சிறையில் வாடும் புனிதர்கள் ' இலக்கிய வாசகரிடத்திலும் விமர்சகர்களிடத்திலும் மிகுந்த கவனத்தைப் பெற்றது. லண்டனில் வசிக்கும் தெணியானின் மாணவர் ஒருவர், இந்த நாவலை இயக்குநர் பாரதிராஜாவின் ' வேதம் புதிது' திரைப்படத்துடன் ஒப்பு நோக்க முயற்சிக்கின்றார்.
தெணியானின் 'கழுகுகள் ' நாவல் மருத்துவ பீட பேராசிரியரும் எழுத்தாளருமான டொக்டர் நந்திக்கு அதிர்வை ஏற்படுத்திய படைப்பு. அதனைப் படித்து விட்டு தமது மருத்துவ பீட மாணவர்களுக்கும் படிக்கக் கொடுத்ததுடன், அதில் வரும் பாத்திரமான சேர்ஜன் கருணைநாயகம் போன்று வாழத் தலைப்பட்டு விடாதீர்கள் என்றும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
இந்த விமர்சனரீதியான அபிப்பிராயங்களில் இருந்துதான் தெணியான் ஏனைய பல எழுத்தாளர்களிலிருந்து முற்றிலும் வேறுபடுகிறார். இலங்கையில் கோயில் முதலாளிகள் ஐயரை மாத்திரமல்ல, நாதஸ்வர, தவில் வித்துவான்களையும் எப்படி நடத்தினார்கள் என்பதற்கு பல கதைகள் உண்டு. இலங்கையில் பிராமண சமூகத்தைச் சேர்ந்த பல எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் செய்ய முடியாத அரிய செயலைச் செய்த ஒருவராகவே தெணியானைப் பார்க்கின்றேன். பலரும் தெணியானை டானியலின் வாரிசு என்றும் சொல்லக் கேள்விப்பட்டுள்ளேன். ஆனால், டானியலின் அரசியல் கருத்துக்களில் இருந்தும் வேறுபட்ட தெணியான், பல சந்தர்ப்பங்களில் அவரிடமிருந்தும் வேறுபடுகிறார். டானியலின் மோட்டார் சைக்கிளில் ஏறிச் சென்று பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட இடதுசாரி வேட்பாளர் பொன். கந்தையாவுக்காக மேடையேறி பிரசாரம் செய்த தெணியான்தான் பிறிதொரு சந்தர்ப்பத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளர் இராஜலிங்கத்துக்காக மேடையேறினார். டானியல் வர்க்க முரண்பாடுகள் குறித்த தெளிவுடன்தான் எழுதினாரா...? என்று அவரிடமே நேரில் கேட்டும் விவாதித்துமிருக்கின்றேன். தெணியானின் எழுத்துகளில் அந்தத் தெளிவு இருந்தது. அதனால்தான் அடிநிலை மக்களைப்பற்றி எழுதிய அதேசமயம் ஐயர்களைப் பற்றியும் அவரால் எழுத முடிந்திருக்கிறது. உளவியல்ரீதியாகவும் எழுத முடிந்திருக்கிறது. (உதாரணம்: காத்திருப்பு, கானலில் மான் நாவல்கள்)
1973 ஆம் ஆண்டளவில் நீர்கொழும்பில் எமது இலக்கியவட்டத்தின் சார்பாக தெணியானின் விடிவை நோக்கி நாவலுக்கு (வீரகேசரி பிரசுரம்) அறிமுகவிழா எடுத்த நாள் முதலாக அவர் எனது நெஞ்சத்துக்கு நெருக்கமான இனிய நண்பர். பல ஆண்டுகளையும் கடந்து இந்த இலக்கிய உறவு எந்த விக்கினமும் இல்லாமல் நீடிப்பதிலிருந்து தெணியானின் இலக்கிய தனிமனித குடும்ப ஆசிரிய சமூக அரசியல் வெகு ஜன இயக்கத் தளங்களை என்னால் இனங்கண்டுகொள்ள முடிகிறது. இவற்றினூடாக தெணியான் என்ற சுழலும் சக்கரத்தின் அச்சாணியை அவதானிக்க முடிகிறது.
தான் கற்ற தேவரையாளி இந்துக்கல்லூரியில் மாணவர்களுக்கு ஆசிரியராகவும் ஆசிரியர்களுக்கு மாணவனாகவும் ' மாணவாசிரியர்' நிலையில் வாழ்ந்த தெணியான், தனது சம்பளத்தை தந்தையிடமும் தாயிடமும் பின்னர் சகோதரிகளிடமும் கொடுத்துப்பழகியவர். மனைவி வந்ததும் அவரிடம் கொடுத்து தனது செலவுகளுக்கு வாங்கிக்கொள்ளும் பழக்கத்தை இன்றளவும் ஓய்வூதியம் பெறத் தொடங்கிய பின்பும் நடை முறையில் வைத்திருக்கும் முற்றிலும் வித்தியாசமான மனிதர். இங்குதான் அந்த அச்சாணியின் மகிமை புலனாகிறது. அவர் ஒரு நிறுவனம் என்றும் ஒரு இயக்கம் என்றும் முழுமையில் ஆளுமையுள்ளவராக ஏனைய எழுத் தாளர்களுக்கு முன்னுதாரண புருஷராகவும் காண்பிக்கின்றது.
பொதுவாக எழுத்தாளர்கள் கலைஞர்கள் சிறந்த நிருவாகிகளாக இருக்க மாட்டார்கள் எனச் சொல்லப்படுவ துண்டு. மல்லிகையில் 'பூச்சியம் பூச்சியமல்ல' என்ற வாழ்க்கைச்சரிதத் தொடரை 24 அத்தியாயங்களில் எழுதியிருந்தார். அதனைத் தொடர்ந்து படித்த பொழுதுதான் தெணியான், தனது அன்றாடச் சம்பவங் களையெல்லாம் திகதி குறித்துப் பதிவு செய்திருக்கிறார் என்பது தெரிந்தது. முன் தீர்மானத்துடன் வாழ்ந்திருக்கும் ஒருவரிடம் தான் இத்தகைய விந்தையான இயல்புகள் இருக்கும். இந்த இடத்தில் எனக்கு வட இந்திய எழுத்தாளர் அருண்ஷோரியின் கருத்தொன்று நினைவுக்கு வருகிறது. அவர் சொல்கிறார்: "இயல்புகள்தான் ஒருவரது விதியைத் தீர்மானிக்கும்."
தெணியானின் இயல்புகள் அவரது வாழ்வை குடும்பத்தை இலக்கியத்தை தொழிலை இயக்கத்தை தீர்மானித்திருக்கிறது. அவரது படைப்புலகமும் அவரது ‘இயல்பு அச்சாணி’யிலிருந்தே சக்கரமாக சுழல்கிறது. சிறுகதை, நாவல், குறுநாவல், விமர்சனம், கட்டுரை, கவிதை, பத்தி எழுத்து, நாடகம், தொகுப்புப் பதிவுகள்.. என அவரது உலகம் சுழல்கிறது. இலக்கிய வாதங்களையும் தொடங்கி வைத்தவர். அதன்மூலம் வட இலங்கைக்கு அப்பாலிருக்கும் இலக்கிய வாசகர்களும் அறிந்திராத பல பக்கங்களை தரிசிக்க வைத்தவர். வடமராட்சியின் பொலிகண்டி கிராமத்தில் அந்தப் பனங்கூடல்களுக் கூடாக சைக்கிளிலும் கால்நடையாகவும் உலா வந்து கொண்டிருக்கும் இந்தக் கிராமத்து மனிதனின் வாழ்வும் பணியும், அந்தக் கிராமங்களின் உயிர்ப்பையும் இழந்து பனங்கூடல்களுக்கூடாக பரவும் பருவக் காற்றையும் சுவாசிக்கமுடியாமல் அந்நியதேசங்களில் குளிரிலும் பனியிலும் கோடையிலும் வாடிக்கொண்டிருக்கும் வாசகர்களின் கவனத்தையும் ஈர்த்திருப்பதாகவே கருதுகின்றேன்.
அந்தக் கிராமத்தையும் அந்த மக்ளையும் விட்டு அகலாமல் அவர்கள் சந்தித்த போராட்டங்களையும் பாரிய இடப் பெயர்வுகளையும் அவலங்களையும் ஜீரணித்தவாறு இன்றும் அயர்ந்து போகாமல் இயங்கிக் கொண்டிருக்கும் தெணியானுக்கு கடந்த 01-02-2009 ஆம் திகதியன்று நான் எழுதிய கடிதத்தின் இறுதி வரிகள் இதோ :வடபிரதேச சமூக ஆய்வுகளை தொகுக்கும் பணிகளில் அல்லது வடபிரதேச நாடோடிக் கதைகளை, கிராமியக் கதைகளை, கிராமிய இலக்கியங்களை, போர்க் காலக் கதைகளை தொகுக்கும் பணிகளில் இளம் தலைமுறையினரை உங்களைப் போன்றவர்களின் வழிகாட்டுதலுடன், ஈடுபடச் செய்தால் பயனிருக்கும் என நம்புகிறேன். டானியல் விட்ட சில பணிகள் மீண்டும் தொடரப்படவில்லை என்று கருதுகிறேன். வடமராட்சியில் இன்னும் சில ஆலயங்களில் சிலருக்கு கதவடைப்பு நீடிப்பதாகவும் அறிகின்றேன். வடமராட்சி மக்களின் ஆத்மாவைப் பிரதி பலிக்கும் கிராமியக் கதைகள் முதிய தலைமுறையினர் வாயிலாக பெறப்பட்டு தொகுப்பதற்கு முயலலாம். தமிழ்நாட்டில் கி.ராஜநாராயணன் இது விடயத்தில் கூடுதல் அக்கறைகாட்டியிருக்கிறார். தங்கள் அன்புத் துணைவியாரை அன்புடன் கேட்டதாகச் சொல்லுங்கள். தமது குழந்தைகள் அனைவரையும் திருமணம் செய்துகொடுத்து அனுப்பினாலும் ஒரு குழந்தை மாத்திரம் எங்கும் செல்லாமல், தொடர்ந்தும் அவர்களின் கால்களைத் தான் சுற்றிக் கொண்டு வரும். அந்தக் குழந்தையின் பெயர் தெணியான்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.