1.
"கிழக்கு வானில் சூரியன் தங்கப்பாளமாக ஜொலித்தபடி உதயமாகிக்கொண்டிருந்தான். சூரியோதயத்தை நான் முன்னர் கடற்கரையோரங்களில் நின்று பார்த்துக் களித்திருக்கிறேன். ஆனால், உயரத்தில், பறந்துகொண்டிருக்கும் விமானத்திலிருந்து, புதிய கோணத்தில் வெண்பஞ்சுக் கூட்டங்களாக மிதந்துகொண்டிருக்கும் மேகங்களினூடாக அந்த அழகிய காட்சியைப்பார்த்தபோது நான் மெய்மறந்துபோனேன். ஆதவனின் ஒளிப்பிழம்புகள் கணத்துக்குக்கணம் புதிது புதிதாய் கொள்ளை அழகை அள்ளித் தெளித்துக்கொண்டிருந்தன."
இலங்கையிலிருந்து 17 ஆண்டுகளுக்கு முன்னர் வானத்தில் பறந்து வரும்பொழுது Dr.T.Gnanasekaran அவுஸ்திரேலியா சிட்னியில் இறங்கும் தருணத்தில் விமானம் தரைதட்டுவதற்கு முன்னர் அந்த அதிகாலைப்பொழுதின் உள்ளங்கவர் காட்சியை தரிசித்த 58 வயது படைப்பாளி ஞானசேகரனின் அன்றைய வர்ணிப்புத்தான் அந்த சூரிய உதயக்காட்சி. அன்று காலை அவருக்கு அவுஸ்திரேலியாவில் விடிந்தது. அன்றைய அவரது வருகையே பின்னாளில் இலக்கியவானில் ஞானம் கலை, இலக்கிய இதழின் பரிமாணத்துடன் அவருக்கு பேருதயமாகியது என்பதற்கு ஒரு நேரடி சாட்சியாக இருந்துகொண்டு பவளவிழா நாயகன் ஞானம் ஆசிரியர் தி. ஞானசேகரன் அவர்களை வாழ்த்துகின்றேன். இலங்கையில் 1999 வரையில் நான் இவரை சந்தித்திருக்கவில்லை.
1999 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் சிட்னியில் வதியும் தமது புதல்வரிடம் இவர் தமது துணைவியாருடன் புறப்படுவதற்கு முன்னர் மல்லிகை ஜீவாவிடம் எனது தொடர்பிலக்கம் பெற்றுள்ளார். ஒருநாள் சிட்னியிலிருந்து ஞானசேகரன் தொலைபேசியில் அழைத்தபோது, மெல்பனுக்கு அழைத்தேன். எமது இல்லத்தில் ஒரு மாலைவேளையில் இலக்கியச்சந்திப்பும் இரவு இராப்போசன விருந்தும் ஒழுங்குசெய்தபொழுது , மெல்பன் இலக்கிய ஆர்வலர்கள் செல்வத்துரை ரவீந்திரன் , டாக்டர் சத்தியநாதன், நடேசன், புவனா ராஜரட்ணம், அருண். விஜயராணி, பாடும்மீன் சிறிகந்தராசா ஆகியோர் கலந்துகொண்டனர். மெல்பனில் பாலம் லக்ஷ்மணன் அவர்களின் இல்லத்திற்கும் மாவை நித்தியானந்தனின் பாரதி பள்ளிக்கும் வேறு சில இடங்களுக்கும் அழைத்துச்சென்றேன். காரில் அமர்ந்தவாறே குறிப்புகள் எடுத்துக்கொண்டார். பயணக்கதைக்கு அவர் தயாராகிவிட்டார். இலங்கை திரும்பியதும் தினக்குரல் வார இதழில் அவுஸ்திரேலியப்பயணக்கதையை சில வாரங்கள் தொடர்ந்து எழுதி - இறுதியில் அந்தத்தொடரையே நூலாக்கினார். பேராசிரியர் சி. தில்லைநாதனின் அணிந்துரையுடனும் எனது முன்னுரையுடனும் அந்த நூல் வெளியாகியது. அவ்வேளையில் ஞானசேகரன் தமது மருத்துவப்பணி நிமித்தம் கண்டியில் வசித்தார். கண்டி முகவரியிலிருந்து ஞானம் பதிப்பகத்தினால் 1999 மார்கழியில் அந்த நூல் வெளியானது. அவுஸ்திரேலியா வந்தவர், இந்தக்கங்காரு நாட்டைப்பற்றி மாத்திரம் தகவல் சேகரிக்கவில்லை. இங்கிருந்த எஸ்.பொ, மாத்தளை சோமு, முருகபூபதி, அருண் . விஜயராணி முதலான படைப்பாளிகள், நாடகக்கலைஞர் சி. மனோகரன் ஆகியோருடனான நேர்காணலையும் பதிவுசெய்துகொண்டு, சிட்னியில் 24 மணிநேரமும் ஒலிபரப்பாகும் இன்பத்தமிழ் வானொலி இயக்குநர் பாலசிங்கம் பிரபாகரனுக்கும் நேர்காணல் வழங்கிவிட்டு தாயகம் திரும்பினார். ஞானசேகரன் சந்தித்தவர்களுடனான நேர்காணல் தொகுப்பும், வானொலிக்கு அவர் வழங்கிய பேட்டியும் இணைந்த புரிதலும் பகிர்தலும் என்ற நுலையும் அதே 1999 ஆம் ஆண்டு மார்கழியில் வெளியிட்டார்.
மீண்டும் 2000 ஆம் ஆண்டு மெல்பனுக்கு ஞானசேகரன் தம்பதியர் வரும்பொழுது குறிப்பிட்ட இரண்டு நூல்களுடனும் திருமதி ஞானம் ஞானசேகரன் எழுதிய இந்துமதம் என்ன சொல்கிறது ? என்ற நூலுடனும் வந்தனர். மெல்பனில் மாவை நித்தியானந்தன் தலைமையில் அறிமுக நிகழ்வு நடந்தபொழுது, நித்தியகீர்த்தி, சிவசம்பு, பாலம்லக்ஷ்மணன், அருண். விஜயராணி ஆகியோர் உரையாற்றினர். இந்நிகழ்வில் இவர்களுடைய நூல் விற்பனையில் கிடைத்த நிதி யாவற்றையும் எமது இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் வளர்ச்சிக்கே தந்துவிட்டு விடைபெற்றனர். அன்று அந்த நிகழ்ச்சியில் பங்குபற்றிய நித்தியகீர்த்தியும் அருண். விஜயராணியும் இன்று எம்மத்தியில் இல்லை.
அவுஸ்திரேலியாவில் ஞானசேகரனின் வருகை இலக்கியப்புத்துணர்ச்சிக்கும் வழிகோலியது.
1999 இல் முதல் முறை பயணத்தில் விமானத்தில் அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்த ஞானசேகரனுக்கு சூரிய உதயத்தின் ரம்மியத்தை காண்பிக்க தட்டி எழுப்பிய துணைவியார் திருமதி ஞானம் ஞானசேகரன், தொடர்ந்தும் பக்கத்துணையாக இருந்து இன்று ஞானம் என்ற இலக்கிய இதழ் உதயமாகி உலகை வலம்வருவதற்கு உற்றதுணையாக விளங்குகிறார்.
2001 ஆம் ஆண்டு மெல்பனில் ஜனவரி மாதம் முதலாவது அவுஸ்திரேலியா தமிழ் எழுத்தாளர் விழாவை இரண்டு நாட்கள் நாம் நடத்தியபொழுது மல்லிகை அவுஸ்திரேலியா சிறப்பு மலரும் வெளியிட்டோம்.
1999 இல் மல்லிகைஜீவாவிடம் தொடர்பிலக்கம் பெற்று வந்த ஞானசேகரன் தம்பதியர் 2001 ஆம் ஆண்டு முதல் எழுத்தாளர் விழாவில் பிரதம அதிதிகளாக கலந்துகொண்டனர். அன்றைய விழாவில் மல்லிகை சிறப்பு மலரை வெளியிட்டுவைத்து உரையாற்றியவர் ஞானசேகரன்.
அதற்கு முன்னர் 2000 ஆம் ஆண்டே ஞானசேகரன் கண்டியிலிருந்து ஞானம் இதழை வெளியிடத்தொடங்கிவிட்டார். 2004 ஆம் ஆண்டு எமது எழுத்தாளர் விழா கன்பராவில் நடந்தபொழுது ஞானம் அவுஸ்திரேலியா சிறப்பிதழை வெளியிட்டார். அவுஸ்திரேலியாவுக்கு அவர் வந்த காலம் தொடக்கம் எமது வருடாந்த எழுத்தாளர் விழாவை வரவேற்று ஞானம் இதழ்களில் ஆசிரிய தலையங்கங்களும் எழுதியிருக்கிறார்.
மெல்பன், கன்பரா, சிட்னி எழுத்தாளர் விழாக்களில் மாத்திரம் அல்லாது, எஸ்.பொ.வின் மகன் டொக்டர் அநுராவில் ஏற்பாட்டில் 28-08-2004 ஆம் திகதி சிட்னியில் நடந்த கவிஞர் அம்பியின் பவளவிழாவிலும் மித்ர வெளியீடுகளின் அறிமுகநிகழ்விலும் கலந்துகொண்டு உரையாற்றிய ஞானசேகரன், அவுஸ்திரேலியாவில் பரவலான இலக்கிய நண்பர்கள் வட்டத்தை உருவாக்கினார்.
நண்பர்கள் பிறப்பதில்லை. உருவாக்கப்படுபவர்கள். அத்தகைய நட்புவட்டம் ஆரோக்கியமாக வளர்வதற்கும் சீர்கெட்டுப்போவதற்கும் விதியும் விளையாட்டுக்காண்பிக்கும்.
எமது எழுத்தாளர் விழாக்களின் கருத்தரங்குகள் சிலவற்றுக்கும் ஞானசேகரன் தலைமையேற்றார்.
அவுஸ்திரேலியா படைப்பாளிகள் எஸ்.பொ, ஆசி. கந்தராஜா, நடேசன், முருகபூபதி, சுதாகரன், ஆவூரான் சந்திரன், அருண். விஜயராணி, பாடும் மீன் சிறிகந்தராசா, கலைவளன் சிசு.நாகேந்திரன் , ஜெயராம சர்மா, நித்தியகீர்த்தி, சாந்தினி புவநேந்திரராஜா நல்லைக்குமரன் குமாரசாமி, எஸ். கிருஷ்ணமூர்த்தி முதலானோரின் படைப்புகளுக்கும் ஞானம் இதழில் களம் தந்தார்.
எஸ்.பொ.வின் நீண்ட நேர்காணல் தொடரும் வெளியானது.
நித்தியகீர்த்தியின் சிறுகதைக்கு முத்திரைக்கதை அந்தஸ்து கிடைத்தது.
எம்மவர் சிலரின் சிறுகதைகள் ஞானம் இதழ் ஊடாக நடத்தப்பட்ட சிறுகதைப்போட்டிகளில் பரிசில் பெற்றன.
எஸ்.பொ. , கவிஞர் அம்பி, பாலம் லக்ஷ்மணன், முருகபூபதி, பாடும் மீன் சிறிகந்தராசா, ஓவியர் ஞானம் ஞானசேகரம், ஜெயராமசர்மா, கலைவளன் சிசு.நாகேந்திரன் ஆகியோர் ஞானம் அட்டைப்பட அதிதி அந்தஸ்து பெற்றனர். அவுஸ்திரேலியா கலை, இலக்கிய நிகழ்வுகள் ஞானம் இதழ்களில் பதிவாகின.
இத்தகைய நீடித்த தொடர்பாடலின் ஒரு முக்கிய சந்தியாக விளங்கியதுதான் ஞானசேகரனை இணைப்பாளராக்கிய இலங்கையில் 2011 ஜனவரியில் நடத்தப்பட்ட முதலாவது சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு.
இலங்கையின் வடபுலத்தில் புன்னாலைக்கட்டுவன் என்ற அழகிய கிராமத்தில் ஆலயக்குருக்களாக விளங்கிய தியாகராசா அய்யர், பாலாம்பிகை ஆகியோரின் புதல்வனாக 1941 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் 15 ஆம் திகதி பிறந்தவர் ஞானசேகரன். தந்தையோ ஆலயத்தில் குரு. பூட்டனார் கணேசய்யர் தொல்காப்பியத்திற்கு விளக்கவுரை எழுதிய வித்துவ சிரோன்மணி. கதாப்பிரசங்கம் புகழ் மணி அய்யர் சுவாமிநாதத்தம்பிரான் தாய் மாமனார். கணேசய்யர் பற்றி இரசிகமணி கனகசெந்திநாதன் தமது ஈழத்து இலக்கிய வளர்ச்சி நூலில் குறிப்பிட்டுள்ளார்.
சுவாமிநாத தம்பிரான்தான் இலங்கையில் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் உருவச்சிலைக்கு மொடலாக இருந்தவர். இந்தப்பின்னணியிலிருந்து வருகைதந்த ஞானசேகரன், அந்தப்பரம்பரையின் குலமுறை ஆலயத்தொண்டிற்குச்செல்லாமல், தனது பெயருக்குப் பின்னால் அய்யர் என பதிவுசெய்துகொள்ளாமல், மருத்துவம் பயின்றார். இலக்கியம் படித்தார். படைத்தார். இதழாசிரியரானார்.
பொதுவாக பிராமணர் சமூகத்திலிருந்து வருபவர்கள் தந்தைக்குப்பின் தனயன் என்பதுபோன்று தர்ப்பையும் மணியுமாக வாழ்ந்து சோதிட நூல்களையே ஆய்வுசெய்வர். ஆனால் , அவர்களின் பரம்பரையிலிருந்து வேறு திசையில் சமூகப்பிரக்ஞையுடன் சாதாரண மக்களுக்காக , அவர்களின் எளிய குரலுக்காக உழைத்தவர்கள் சிலரைப்பற்றி எமது தமிழ் இலக்கியஉலகம் இன்றும் பேசிக்கொண்டிருக்கிறது. அத்தகைய மானுடநேசர்களின் வரிசையில் வந்தவர் டொக்டர் தி. ஞானசேகரன்.
இந்திராபார்த்தசாரதி அன்று தஞ்சை கீழ்வெண்மணியில் நிகழ்ந்த படுகொலையை பின்புலமாகக்கொண்டு குருதிப்புனல் எழுதினார்.
எங்கள் ஞானசேகரன் இலங்கை மலையகத்தில் உரிமைக்குக்குரல் கொடுத்தமைக்காக கொல்லப்பட்ட சிவனு லட்சுமணன் என்ற தொழிலாளியின் சரிதையை குருதிமலையாகத்தந்தார்.
1960 களில் சிற்பி சரவணபவன் நடத்திய கலைச்செல்வி இதழில் தமது முதலாவது சிறுகதையை எழுதுவதற்கு முன்பே தமிழ்நாட்டிலிருந்து வெளியான கண்ணன் சிறுவர் இலக்கிய இதழில் எழுதத்தொடங்கியவர்தான் மாணவப்பராயத்து ஞானசேகரன்.
இவருடைய முதல் சிறுகதைத்தொகுதி காலதரிசனம் வெளிவந்த 1973 காலத்திற்கு முன்னர் அவ்வப்பொழுது இவரின் படைப்புகளை படித்திருந்தாலும் , நேரில் சந்திக்க எனக்கு சந்தர்ப்பம் கிடைத்திருக்கவில்லை.
இவர் மலையகத்தில் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் மருத்துவசேவை செய்யும் இலக்கியவாதி என்பதைத் தவிர வேறு எதுவும் தெரியாது. இவரை நான் அக்காலப்பகுதியில் மாத்திரமல்ல அவுஸ்திரேலியாவுக்கு நான் வரும்வரையில் கூட நேரில் பார்த்திருக்கவில்லை.
காலதரிசனம் சிறுகதைத்தொகுதிக்கு கைலாசபதி முன்னுரை வழங்கியிருந்தார். ஞானசேகரனும் சிறுகதைப்போட்டிகளுக்கு கதை எழுதும் எழுத்தாளராக விளங்கியவர். தொடக்க காலத்திலேயே பல போட்டிகளில் வெள்ளிப்பதக்கம் உட்பட பல பரிசுகளை வென்றவர். தொடர்ந்து சிறுகதைகள் எழுதிய ஞானசேகரன், போட்டிகளுக்கு எழுதிப்பழகிய மனப்பான்மையில் மற்றும் ஒரு போட்டிக்காக எழுதிய நாவல்தான் புதியசுவடுகள். வீரகேசரி பிரசுர நாவல் போட்டிக்குச்சென்று அந்தப்பிரசுர வெளியீடாகவே வந்தது. போட்டியில் பரிசுபெறாத இந்நாவல் 1977 இல் தேசிய சாகித்திய விருதை வென்றது ஒரு வியப்பு.
அந்த ஊக்கம் அவரை மற்றும் ஒரு நாவலையும் எழுதத்தூண்டியிருக்கிறது. இலங்கையில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சிக்காலத்தில் மலையகத்தோட்டங்கள் தேசிய உடைமையாக்கப்பட்டபொழுது நடந்த போராட்டத்தில் சிவனு லெட்சுமணன் என்ற தொழிலாளி சுடப்பட்டு இறந்தார்.
அந்தச்சம்பவத்தின் பின்னணியில் ஞானசேகரன் எழுதிய நவீனம்தான் குருதிமலை. இந்நாவல் ஸ்ரீமாவோ அரசை விமர்சித்து, ஜே.ஆர். அரசின் தேசிய சாகித்திய விருதை 1979 இல் பெற்றுக்கொண்டது மற்றும் ஒரு வியப்பு. அத்துடன் தமிழ்க்கதைஞர் வட்டத்தின் பரிசையும் வரவாக்கிக்கொண்டது.
அதன்பின்னர் வெளியான இவருடைய அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும் என்ற சிறுகதைத்தொகுதி மல்லிகைப்பந்தல் வெளியீடாக 1998 இல் வெளியானது. இதில் என்ன வேடிக்கை என்றால், ஞானசேகரனின் எந்தவொரு சிறுகதையும் மல்லிகையில் வெளிவந்திருக்கவில்லை. அத்தகைய சூழ்நிலையில் இவரின் கதைத்தொகுப்பு மல்லிகைப்பந்தலில் வெளியானது வியப்பே. இத்தொகுப்பு பின்னாளில் இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் ஒரு பாட நூலாக பயன்படுத்தப்படுகிறது.
வடபுலத்தின் புன்னாலைக்கட்டுவன் வாசி , மலையகத்திற்கு பணிநிமித்தம் சென்றதனால் அம்மக்களின் வாழ்க்கை முறைகளையும் பண்பாட்டுக்கோலங்களையும் பேச்சுவழக்கையும் கிரகித்துக்கொண்டார். அதன் பயன்தான் இலக்கிய உலகிற்கு கிட்டிய வரவுகள். குருதிமலை (1979) லயத்துச்சிறைகள் ( 1994) கவ்வாத்து ( 1996). குருதிமலை மதுரை அமெரிக்கன் கல்லூரியில் எம். ஏ. பட்டப்படிப்பிற்கு ஒரு பாட நூலாகத்தெரிவாகியிருக்கிறது. இந்நாவல் சிங்கள மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. லயத்துச்சிறைகள் சிறந்த நாவலுக்கான மத்திய மாகாண கலாசார அமைச்சின் சாகித்திய விருதையும் இலங்கை இலக்கியப்பேரவையின் சிறந்த நாவலுக்கான சான்றிதழையும் பெற்றது.
கவ்வாத்து இலங்கை தேசிய கலை இலக்கியப்பேரவையும் தமிழ்நாடு சுபமங்களா இதழும் இணைந்து நடத்திய குறுநாவல் போட்டியில் பரிசுபெற்றது.
அத்துடன், விபவி கலாசார மையத்தின் தங்கச்சங்கு விருதினையும் வென்று 1997 இல் மத்திய மாகாண சாகித்திய விருதையும் பெற்றுக்கொண்டது.
முதல் நாவல் புதிய சுவடுகள் வடபுலத்தில் நீடித்திருந்த சாதிப்பிரச்சினைகளைப் பேசியது.
அதன்பின்னர் மலையகப்பின்னணியில் ஞானசேகரன் எழுதிய நாவல்களும் குறுநாவலும் மலையக மக்களின் துயரத்தை பதிவுசெய்தன. இவருடைய சிறுகதையொன்று தெளிவத்தை ஜோசப் தொகுத்து துரைவி வெளியீடாக வந்த மலையக கதைத்தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு சிறுகதையில் தொடங்கி நாவல்கள், குறுநாவல் எழுதிய ஞானசேகரன், அவுஸ்திரேலிய விஜயத்தை பயண இலக்கியமாக்கியவாறே ஒரு நேர்காணல் தொகுப்பையும் வரவாக்கிவிட்டு, ஞானம் இதழில் தனது முழுநேரத்தையும் அர்ப்பணித்துக்கொண்டார்.
அதனால் ஞானம் இதழுக்குப்பெருமை. ஞானம் வாசகர்களுக்கு பயன். அதில் எழுதும் படைப்பாளிகளுக்கு களம். ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு மற்றும் ஒரு இலக்கிய இதழ் ஆசிரியர் கிடைத்துள்ளார் என்ற பெருமிதம்.
ஞானம் ஆசிரியரின் அடுத்த கட்டம் பயண இலக்கியமாகத் தொடர்கிறது.
2.
ஈழகேசரி பொன்னையா, தேசபக்தன் நடேசய்யர், செய்தி நாகலிங்கம், சிரித்திரன் Gnanasekaran Book சிவஞானசுந்தரம், மல்லிகை ஜீவா, குமரன் கணேசலிங்கன், இளம்பிறை ரஃமான், எழுத்து செல்லப்பா, தீபம் பார்த்தசாரதி, சரஸ்வதி விஜயபாஸ்கரன், கலைமகள் ஜகந்நாதன், கல்கி கிருஷ்ணமூர்த்தி, இதயம்பேசுகிறது மணியன் இவ்வாறு இதழ் ஆசிரியர்களின் ஒரு பட்டியலை எழுதினால் -- இவர்களில் சிலர் ஆக்க இலக்கியம் படைத்த படைப்பாளிகள்தான் என்பதையும் நாம் மறந்துவிடுவதற்கில்லை.
அவர்களால் தொடங்கப்பட்ட இதழ்களினால் அவர்கள் அவ்வாறு பிற்காலத்தில் அழைக்கப்பட்டனர். இன்று அவர்களின் வரிசையில் இணைந்துகொண்டார், முன்னர் சிறுகதைகளும் நாவல்களும், குறுநாவலும் எழுதிய ஆக்க இலக்கிய கர்த்தா ஞானசேகரன்.
இங்கு பதிவுசெய்யும் முக்கியமான இரண்டு இலக்கிய ஆளுமைகளுக்கு என்ன நடந்ததோ, அதே தற்பொழுது ஞானசேகரனுக்கும் ஞானம் இதழைத்தொடங்கிய பின்னர் நடந்துள்ளது.
தமிழ்நாட்டில் புதுமைப்பித்தனின் நண்பர் தொ.மு.சி. ரகுநாதன் தொடக்கத்தில் பல சிறுகதைகள் எழுதியவர். சேற்றில் மலர்ந்த செந்தாமரை , க்ஷணப்பித்தம் , சுதர்மம் , ரகுநாதன் கதைகள் முதலான சிறுகதைத்தொகுதிகளையும் சில கவிதைத் தொகுப்புகளையும் புயல், முதலிரவு, பஞ்சும் பசியும் ஆகிய நாவல்களையும் சில நாடக நூல்களையும் எழுதியவர். பின்னாளில் சாந்தி என்ற மாத இதழை தொடக்கினார்.
இதில் ஜெயகாந்தன், சுந்தரராமசாமி முதலானோரும் எழுதினர். பின்னர் நட்டப்பட்டு, சாந்தி இதழை நிறுத்திய ரகுநாதன், பாரதி இயல் ஆய்வாளராகவும் விமர்சகராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் மாறினார். அதன் பின்னர் அவர் சிறுகதைகளோ நாவலோ எழுதவில்லை.
இலங்கையில் டொமினிக்ஜீவா -- தண்ணீரும் கண்ணீரும், பாதுகை சாலையின் திருப்பம் , வாழ்வின் தரிசனங்கள், டொமினிக் ஜீவா சிறுகதைகள் என்பனவற்றுடன் சில கட்டுரைத்தொகுப்புகளும் எழுதினார். அவர் மல்லிகையைத் தொடங்கியதும் படிப்படியாக சிறுகதை எழுதுவதை நிறுத்திவிட்டு, தனது நேரத்தை மல்லிகைக்காகவே அர்ப்பணித்தார்.
எனினும் இவர்கள் இரண்டுபேரிலும் ஒரு விடயத்தை நாம் கவனிக்கவேண்டும். இருவரும் பின்னர் செம்பதிப்பாக முன்னர் வெளிவந்த தமது சிறுகதைகளில் தேர்ந்தெடுத்தவற்றையே மீண்டும் தனித்தொகுப்பாக வெளியிட்டனர்.
ரகுநாதன் கதைகள் -- டொமினிக் ஜீவா சிறுகதைகள்தான் எமக்குக் கிடைத்தன.
இதழியல் வாழ்க்கை இவர்கள் இருவரையும் சிறுகதைப்பக்கமிருந்து அந்நியப்படுத்தியது.
ஞானசேகரனும் இவர்கள் இருவரையும் போன்று தமது தேர்ந்தெடுத்த சிறுகதைகளைத்தொகுத்து செம்பதிப்பாக ஞானசேகரன் கதைகள் நூலை வரவாக்கினார்.
ஞானம் இதழைத் தொடங்கியதும் தமது இதழுக்காக மற்றவர்களின் சிறுகதைகளை தெரிவுசெய்வதிலும் சிறுகதைப்போட்டிகளை காலத்துக்குக்காலம் நடத்துவதிலும் காலத்தை ஒதுக்கினார்.
புதிய நாவல்களும் அவரிடமிருந்து வரவில்லை. ஞானம் அவருடைய நேரத்தை விழுங்கியது. 1999 இல் அவுஸ்திரேலியா பயணக்கதை எழுதியவர், பின்னர், வட இந்திய பயண அனுபங்களை எழுதினார். தற்பொழுது தினக்குரலில் தமது அய்ரோப்பிய பயண அனுபவங்களை எழுதிவருகிறார்.
ஒரு ஆக்க இலக்கியப்படைப்பாளியின் துறை மாறிவிடும் தன்மையை நாம் இதிலிருந்து காணமுடிகிறது.
அதனால் ஞானம் ஆசிரியர் இழந்ததையும் இன்று பெற்றுக்கொண்டிருப்பதையும் காணமுடிகிறது.
ஞானம் இதழுக்கு மாதாந்தம் படைப்புகளை தெரிவுசெய்வது முதல் அச்சிடல், விநியோகம், ஞானம் பதிப்புத்துறை என்று அவருடைய கவனம் முழுமையாக ஞானம் தொடர்பாகவே திசைதிரும்பியிருப்பதை அவர் நிச்சயம் உணர்ந்தே இருப்பார்.
" சிறுகதைகள் எழுதுவதைவிட மற்றவர்களுக்கு களம் அமைத்துக்கொடுப்பதில் அமைதியடைகின்றேன் " என்று இவரும் மல்லிகைஜீவா பாணியில் சொல்லக்கூடும்.
1999 இல் புரிதலும் பகிர்தலும் என்ற தலைப்பில் அவுஸ்திரேலியா வாழ் படைப்பாளிகளின் நேர்காணல் தொகுப்பினை வெளியிட்டவர், அதிலிருந்து பெற்ற ஞானத்தின் விளைவாகவோ என்னவோ, பகிர்தலின் மூலம் விரிவும் ஆழமும் பெறுவது ஞானம் என்ற மகுடத்தில் கடந்த 2000 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் ஞானம் இதழை வெளியிட்டுவருகிறார்.
ஆரம்பத்தில் கண்டியிலிருந்தும் தற்பொழுது கொழும்பு வெள்ளவத்தையிலிருந்தும் ஞானம் வடிவமைப்பில் மெருகேற்றப்பட்டு வெளியாகிறது. இதில் சிறப்பு என்னவென்றால் ஒவ்வொரு மாதமும் முதல் திகதியன்றே ஞானம் இதழ் இணையத்தின் ஊடாக வெளிநாட்டு வாசகர்களை வந்தடைகிறது.
மூத்த இளம் தலைமுறைப்படைப்பாளிகளின் படைப்புகளை ஒரே சமயத்தில் ஞானம் இதழ்களில் காணமுடிகிறது. ஈழத்து இலக்கிய வளர்ச்சியை மறுமலர்ச்சி காலத்திலிருந்து நாம் அவதானிக்கின்றோம். போர்க்கால இலக்கியத்தையடுத்து புலம்பெயர்ந்தோர் இலக்கியம் பற்றி பேசுகின்ற காலத்திற்கு வந்துள்ளோம்.
ஞானம் மறுமலர்ச்சி காலத்து படைப்பாளிகளிலிருந்து இன்றைய பின் நவீனத்துவம் பேசும் படைப்பாளிகள் வரையில் களம் வழங்கியது. அதனால் நாம் சிற்பி சரவணபவனின் எழுத்துக்களையும் முற்போக்கு எழுத்தாளர்களின் படைப்புகளையும் மெய்யுளில் தெளிவைத்தேடிய மு.பொன்னம்பலம், முற்போக்கிலிருந்து வழுவாத நுஃமான் ஆகியோரின் கருத்துக்களையும் சபாஜெயராசா, ந.சுப்பிரமணியன் முதலானோரின் ஆய்வுகளையும் பெண்ணியவாதிகளின் சிந்தனைகளையும் பிரதேச இலக்கிய மண்வாசனை சிறுகதைகள், கவிதைகளையும் புகலிடம் பெற்றவர்களின் அந்நிய வாழ்க்கைக்கோலங்களையும் மொழிபெயர்ப்புகளையும் நாம் ஞானம் இதழ்களில் தொடர்ந்து பார்க்க முடிகிறது.
ஆனால், அதன் ஆசிரியரும் முன்னாள் புனைகதை எழுத்தாளருமான ஞானசேகரனின் புதிய சிறுகதைகளையோ புதிய நாவல்களையோ நாம் காணமுடியாதிருக்கிறது.
இதுவே அவர்மட்டுமல்ல, நாமும் பெற்றதும் இழந்ததுமாகும்.
ஞானம் இதழை இலங்கை, தமிழக பல்கலைக்கழக மாணவர்களும் ஆய்வுசெய்துவருகின்றனர். ஞானம் போர் இலக்கியச்சிறப்பிதழையும் புலம்பெயர்ந்தோர் இலக்கிய சிறப்பிதழையும் நேர்த்தியுடன் வெளியிட்டிருக்கிறது.
உலகச்சிற்றிதழ் சங்கத்தின் தமிழ்த்தாய் அறக்கட்டளை விருதையும், தமிழகத்தின் உயிர்மை இதழும் சுஜாதா அறக்கட்டளையும் இணைந்து வழங்கிய விருதையும் பெற்றுள்ளது.
ஞானம் இதழை வெளியிட்டவாறே பல நூல்களையும் பதிப்பித்துள்ள ஞானசேகரன், சில நூல்கள் , மலர்களுக்கும் தொகுப்பாசிரியராக விளங்கினார்.
2002 ஆம் ஆண்டு கண்டியில் ஞானம் தம்பதியரை சந்திக்கச்சென்றேன். அவ்வேளையில் எனக்கு அவுஸ்திரேலியா தினத்தில் சிறந்த பிரஜைக்கான விருது கிடைத்திருந்ததை முன்னிட்டு ஞானசேகரனும் கண்டி இலக்கிய ஆர்வலர் இராமனும் இணைந்து வரவேற்புக்கூட்டத்தை நடத்தினார்கள். அதற்கு முதல்நாள் இரவு தலாத்து ஓயா கணேஷ் அவர்களின் இல்லத்தில் சந்தித்து உரையாடிய ஞானசேகரன், தமது இதழில் படைப்பாளிகளின் எழுத்துலக அனுபவங்களை பதிவுசெய்யவிருப்பதாகச்சொன்னதுடன், என்னையும் எழுதி மறுநாள் நிகழ்ச்சியின்போது தருமாறு கேட்டிருந்தார்.
எனது எழுத்துலகம் என்ற கட்டுரையை அன்றிரவே எழுதி மறுநாள் எடுத்துச்சென்றேன்.
அன்றைய கூட்டத்தில் துரைமனோகரன், அந்தனி ஜீவா, ரூபராணி ஜோசப் ஆகியோருடன் ஞானசேகரனும் இராமனும் உரையற்றினர்.
எமக்கிடையே அவுஸ்திரேலியாவில் மலர்ந்த இலக்கிய நட்பு பற்றி அவர் விதந்து குறிப்பிட்டதுடன், ஞானம் இதழில் தொடர்ந்து படைப்பாளிகளின் எழுத்துலக அனுபவங்களை பதிவுசெய்துவரும் தகவலையும் வெளியிட்டார்.
பின்னர் இவரும் " எனது இலக்கியத்தடம் - முதலாம் பாகம் " என்ற தொடரை எழுதி நூலாக்கினார்.
எழுத ஆரம்பித்த காலம் முதல் ஞானம் இதழில் பெற்ற அனுபவங்களையும் 2011 இல் இணைப்பாளராக இயங்கி வெற்றிகரமாக நடத்தி முடித்த சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு மற்றும், கொழும்பு தமிழ்ச்சங்கம் நடத்திய உலக இலக்கிய மாநாடு பற்றியும் பதிவுசெய்திருந்தார்.
இம்மாநாடுகளின்போது நடந்த அமளிகள் பற்றி மீண்டும் பதிவுசெய்யவேண்டிய அவசியமில்லை. ஆனால், இம்மாநாடுகளில் உழைத்தவர்கள் குறித்து இன்றும் எங்கிருந்தாவது முகநூல்களிலும் தமது விமர்சனங்களிலும் நேர்காணல்களிலும் சிலர் சGnanamீண்டிப்பார்த்துக்கொண்டுதானிருக்கின்றனர்.
2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் காலை முதல் மாலை வரையில் நடந்த சர்வதேச மாநாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் ஞானசேகரன் அவர்களையே 2011 இல் நடக்கவிருக்கும் மாநாட்டின் இலங்கை இணைப்பாளராக நியமித்தேன்.
தன்னிச்சையான எனது இந்த முடிவு சில முற்போக்காளர்களுக்கு உவப்பானதாக இருக்கவில்லை. ஏற்கனவே இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இணைந்திருந்த நான், எவ்வாறு முற்போக்கு இலக்கிய இயக்கம் சாராத ஒருவரை மாநாட்டின் இணைப்பாளராக்க முடியும் ? என்ற விமர்சனங்களையும் மௌனமாக கசியவிட்டிருந்தனர்.
ஞானசேகரனின் இயக்கமும் ஆளுமையும் நன்கு தெரிந்திருந்தமையாலும் நடைமுறைசாத்தியங்களையும் கருதியே தீர்க்கதரிசனத்துடன் அவரை தெரிவுசெய்திருந்ததை கனடாவிலிருந்த முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செயலாளர் பிரேம்ஜி ஞானசுந்தரனுக்கு தெரிவித்தேன். அவரும் கனடாவிலிருந்து மாநாட்டுக்கு நிதிப்பங்களிப்பு செய்து வாழ்த்தினார்.
இலங்கையில் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் செயல் இழந்திருந்தது.
பிரேம்ஜிக்கும் மாநாடு தொடர்பாக ஒரு கனவு நீண்டகாலம் இருந்தது. ராஜஸ்ரீகாந்தனை சர்வதேசச் செயலாளராகவும் முன்னர் நியமித்திருந்தார்.
அனைவருடனும் இன்முகத்துடன் உறவாடக்கூடிய ராஜஸ்ரீகாந்தனும், மாநாடுகள் பலவற்றில் இயங்கியிருந்த சோமகாந்தனும் மறைந்திருந்த சூழலில், ஈழத்து எழுத்தாளர்கள் புலம்பெயர்ந்த எழுத்தாளர்களுடன் ஆரோக்கியமான உறவுவைத்திருந்த ஒருவராகவும் இரவு பகல் என்றில்லாமல் எந்நேரத்திலும் தொடர்புகொள்ளக்கூடியவராகவும் என்னால் இனம்காணப்பட்டவர் நண்பர் ஞானசேகரன்.
" யார் முன்னின்று செய்தால் என்ன யாவும் எமது இலக்கிய வளர்ச்சிக்குத்தானே !!! " என்ற பெருந்தன்மை பிரேம்ஜியிடம் இருந்தது.
இன்றைய தமிழ் இலக்கிய உலகிற்கும் ஊடகத்துறைக்கும் அவசியம் தேவைப்படுவது பெருந்தன்மையான மனப்பான்மைதான். இந்த முகநூல் கலாசாரமும் மின்னஞ்சல் தொழில்நுட்பமும் இல்லாத அந்நாட்களில் எமது மூத்த இலக்கியவாதிகளிடம் கருத்தியல் சார்ந்த மோதல்கள், இஸங்கள் குறித்த முரண்பாடுகள் யாவும் இருந்தன. ஆனால், பெருந்தன்மை என்பது அன்று ஆரோக்கியமாக அனைவரிடமும் குடியிருந்தது.
கூழ்முட்டை அடித்தவர்களும் அடிவாங்கியவர்களும் பின்னாளில் ஒன்றாக அமர்ந்து கூழ் குடித்தனர்.
காலம் அனைத்தையும் மாற்றிப்போட்டுவிட்டது.
ஞானசேகரன் ஞானம் இதழை தொடங்கிய காலத்திற்கு முன்பே சிரித்திரன் நின்று விட்டது. காலப்போக்கில் மல்லிகையும் தனது ஆயுளை முடித்துக்கொண்டது. யாழ்ப்பாணத்திலிருந்து ஜீவநதியும் மட்டக்களப்பிலிருந்து மகுடம் அநுராதபுரத்திலிருந்து படிகள் மற்றும் மறுபாதி, புதியசொல், பேனா முதலான சில சிற்றிதழ்களும் வருகின்றன.
ஞானம் 2000 ஆம் ஆண்டிலிருந்து தங்கு தடையின்றி தொடர்ச்சியாக 16 ஆண்டுகாலமாக வெளியாகிறது. நிச்சயமாக ஞானம் தொடர்ந்து வெளியாகும் என்ற திடமான நம்பிக்கை இருக்கிறது.
காரணம் : அதன் பின்புலம். எவ்வாறு கல்கி இதழுக்கு அன்று கல்கியின் மகன் கி. ராஜேந்திரன் கிடைத்தாரோ, எவ்வாறு சுந்தரராமசாமி தொடங்கிய காலச்சுவடு இதழுக்கு அவரின் புதல்வன் கண்ணன் வந்துள்ளாரோ அவ்வாறே ஞானம் இதழுக்கு பக்கத்துணையாக ஞானசேகரனின் துணைவியார் திருமதி ஞானலட்சுமி அவர்களும் புதல்வன் பாலச்சந்திரனும் கிடைத்துள்ளார்கள்.
இவர்கள் எழுத்தாளர்களாக இருப்பதும் ஞானம் இதழுக்கு கொடுப்பினைதான்.
எனவே பவளவிழாக்காணும் ஞானசேகரனை வாழ்த்தும் இச்சந்திர்ப்பத்தில் திருமதி ஞானலட்சுமி ஞானசேகரனுக்கும் திரு. ஞானசேகரன் பாலச்சந்திரனுக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றோம்.
மருத்துவம் பயின்று மலையக மக்களுக்கு சேவையாற்றிய ஞானசேகரன், தாம் பிறந்த ஊருக்கும் பெருமைசேர்த்தவர். புன்னாலைக்கட்டுவனில் நலன்புரிச்சங்கம், சனசமூக நிலையம், முன்பள்ளி என இவருடைய இயங்குதளம் விரிவானது. அத்துடன் கொழும்பு தமிழ்ச்சங்கத்திலும் இவருடைய சேவை மகத்தானது. அங்கு நூலகச் செயலாளராகவும் இலக்கியச் செயலாளராகவும் செயல்பட்டார்.
இலக்கியப்பணிகளுக்காக விருதுகளையும் பெற்ற இவர், இலங்கை அரசியல் தலைவர்களான ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா, சௌமியமூர்த்தி தொண்டமான், ரணில் விக்கிரமசிங்கா, செல்லையா இராஜதுரை ஆகியோரிடமும் அரச சார்பு விருதுகளையும் பரிசில்களையும் பெற்றுக்கொண்டவர்.
இலங்கைப்படைப்பாளிகளுக்கு மாத்திரமின்றி புகலிடம் பெற்று அந்நிய நாடுகளுக்குச்சென்ற எழுத்தாளர்களுக்கும் ஞானம் இதழில் களம் வழங்கி அண்மையில் புகலிடச்சிறப்பிதழ் என்ற மகுடத்தில் ஒரு பெரிய ஆவணத்தையே தமிழ் உலகிற்கு வழங்கினார்.
இவர் மொழிக்கும், சமூகத்திற்கும் இலக்கியத்திற்கும் அயராது மேற்கொண்ட சேவை மகத்தானது.
பவளவிழாக்காணும் ஞானசேகரன் நல்லாரோக்கியமுடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகின்றோம்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.