எல்லாமே நேற்று நடந்தது போலிருக்கிறது. காலம் என்னதான் விரைந்து ஓடிMrsKohilamMahendranனாலும், நினைவுச்சிறைக்குள் அடைபட்டுத்தான் வாழ்கிறது. அவ்வப்போது விடுதலையாகி வெளியே வந்தாலும் அந்தக்கூட்டுக்குள் மீண்டு விடுகிறது பறவையைப்போன்று. திசை மாறிய பறவைகள் பற்றி அறிவோம். ஒரு மருத்துவ கலாநிதியாக வந்திருக்கவேண்டியவர், எவ்வாறு திசைமாறி இலக்கிய மருத்துவரானார்....? தெல்லிப்பழை விழிசிட்டி என்ற கிராமத்திலிருந்து கூவத்தொடங்கிய ஒரு விழிசைக்குயில் பற்றியதுதான் இந்தப்பதிவு.
1972 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13 ஆம் திகதியன்று மதியம் எனது வீட்டுக்கு தபாலில் வந்த மல்லிகையின் அந்த மாதத்திற்குரிய இதழை என்னால் மறக்கமுடியாது. அன்றுதான் எனது பிறந்த தினம். அந்த மல்லிகையின் அட்டையை அலங்கரித்தவர் பாவலர் துரையப்பாபிள்ளை. அவர் பற்றி நான் அதிகம் அறிந்திராத காலம். அவர்தான் யாழ்ப்பாணம் தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியின் ஸ்தாபகர் என்ற தகவலையும், தொலைவில் வாழ்ந்த நான் மல்லிகையிலிருந்து தெரிந்துகொண்டேன். அந்த இதழில்தான் எனது முதல் சிறுகதை கனவுகள் ஆயிரம் வெளியாகியிருந்தது. அந்த இதழை தபால் ஊழியர் தரும்பொழுது, " மொக்கத்த பொத்த...?" (" என்ன புத்தகம்...? " ) எனச்சிங்களத்தில் கேட்டார். " மல்லிகை " என்றேன். அவருக்குப்புரியவில்லை. வீட்டின் முற்றத்தில் படர்ந்திருந்த மல்லிகைக் கொடியையும், பூத்திருந்த மல்லிகை மலர்களையும் காண்பித்தேன்.
பின்னர் அந்தத் தபால் ஊழியர் மாதாந்தம் மல்லிகையை கொண்டுவரும்பொழுது, ஒருதடவை அதன் அட்டையில் பதிவாகியிருந்த மூத்த சிங்கள எழுத்தாளர் மார்ட்டின் விக்கிரமசிங்காவின் படத்தையும் காண்பித்தேன்.
அந்த ஊழியர் ஆச்சரியப்பட்டார். அந்த ஆச்சரியத்தின் அர்த்தங்கள் ஆயிரம். ஆனால், சிங்கள மக்களுக்கும் இவ்வாறு ஆச்சரியம் தந்த மல்லிகை இன்று இணையத்தில்தான் (www.noolagam.com) வாழ்கிறது.
மகாஜனா கல்லூரியில் பயின்ற பலர் பின்னாளில் கலைஞர்களாக, படைப்பாளிகளாக, அதிபர், ஆசிரியர்களாக, பத்திரிகையாளர்களாக, இசை, நடனக் கலைஞர்களாக, பாடகர்களாக பிரபல்யம் பெற்றிருக்கிறார்கள்.
அவர்களின் பெயர்ப்பட்டியல் நீளமானது. ஒவ்வொரு கல்லூரியும் ஏதாவதில் பிரபல்யம் பெற்றிருக்கும். விளையாட்டு, கிரிக்கட், கரப்பந்தாட்டம், உதைபந்தாட்டம், சிறந்த பெறுபேறு... போன்று கலை, இலக்கிய, ஊடகத்துறையினர் பலரை உருவாக்கியதில் வடஇலங்கையில் மிகவும் பிரபல்யம் பெற்றது மகாஜனா கல்லூரி.
அவர்களில் பலர் எனது இனிய நண்பர்கள் என்பது எனக்கு என்றைக்கும் பெருமைக்குரியது.ஆனால், 1984 ஆம் ஆண்டுவரையில் நான் அந்தக்கல்லூரிக்கு தரிசனம் செய்திருக்கவில்லை. 1983 வன்செயல் கலவரங்கள் கலையும் மேகங்களாகியதும் சில மாதங்கள் கடந்து, வீரகேசரி அலுவலகத்திற்கு வந்த நண்பர் புலோலியூர் இரத்தினவேலோன், என்னுடன் பணியாற்றிக்கொண்டிருந்த பொன்னரி என்ற புனைபெயர்கொண்ட நண்பர் கனகசிங்கத்திடம் வந்து, கோகிலா மகேந்திரனின் புதிய சிறுகதைத்தொகுதிக்கு அட்டைப்படம் வரைந்து தருமாறு கேட்டுவிட்டு, பெயரையும் சொன்னார்." முரண்பாடுகளின் அறுவடை " வாழ்க்கையே முரண்பாடுகள் நிரம்பியதுதானே...? அதனையும் அறுவடை செய்யப்புறப்பட்ட கோகிலா மகேந்திரனின் எழுத்துக்களைப்படித்திருந்தாலும், வானொலியில் அவர் சம்பந்தப்பட்ட சில நிகழ்ச்சிகளைக் கேட்டிருந்தாலும், அவரை நேரில் பார்த்திருக்கவில்லை. கனகசிங்கம் ஓவியர். ஒப்புநோக்காளர். நீண்டகாலம் வீரகேசரியில் பணியாற்றியவர்.
குறிப்பிட்ட நூல் அச்சாகி வெளியானதும் மீண்டும் ஒருநாள் அலுவலகம் வந்த இரத்தினவேலோன், என்னிடத்தில், " முருகபூபதி நீங்களும் வெளியீட்டு விழாவுக்கு வந்து பேசவேண்டும் " என்று கோகிலா விரும்புகின்றார்." என்றார்.
எனக்கு வியப்பாக இருந்தது.
விழா நடக்கும் இடம் தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி. தலைமை அதிபர் த. சண்முகசுந்தரம். இவரை 1976 இல் தென்னிலங்கையில் சாகித்தியவிழாவில் சந்தித்திருக்கின்றேன். இதர பேச்சாளர்கள் பெயர்களில் எனக்கு ஏற்கனவே அறிமுகமானவர் சித்திரலேகா மௌனகுரு மாத்திரமே.
முன்பின் தெரியாத ஊருக்குச் செல்வதில் எனக்கு அப்பொழுது சற்றுத் தயக்கம். அந்தப் பிரதேசத்தைச்சுற்றி ஆயுதம் ஏந்திய சில இயக்கங்களின் நடமாட்டமும் இருந்த காலம். கோகிலா மகேந்திரன் எனக்கு கடிதமும் எழுதி அழைத்திருந்தார்.MahajanaCollege
குப்பிளானில் எனது உறவினர்கள் இருந்தனர். அங்கு சென்று அவர்களின் வழிகாட்டுதலில் பஸ் ஏறி, மகாஜனா கல்லூரி வாயிலில் இறங்கினேன்.
அந்த வாயிலில் மகாகவி உருத்திரமூர்த்தி விதந்து பாடிய வாணியின் வீணை ஏந்திய சிலை. " வாணி... அது உனது காணி " என்று அந்தப்பாடல் தொடங்கியதாக நினைவு. அந்தக்காணியையும் வாணியையும் ஆளும்வர்க்கம் போர்க்காலத்தில் அபகரித்த செய்தி தனிக்கதை.
அந்த முன்றலில் நடந்து உள்ளே செல்லும்போது அங்கு பயின்று பின்னாளில் பிரபலம் பெற்ற பலர் நினைவுக்கு வந்துகொண்டே இருந்தார்கள். தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி முன்னாள் மாணவர்களுக்கும் முன்னாள் அதிபர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் எனக்கும் இடையே நீடித்திருக்கும் நட்புறவு காவிய நயம் மிக்கது.
அந்த மண்டபத்தில் என்னை வரவேற்று மேடைக்கு அழைத்துச்சென்ற கோகிலா மகேந்திரனை எவரும் எனக்கு அறிமுகப்படுத்தவில்லை. அவராகவே தன்னையும் தாய், தந்தையரையும் கணவரையும் ஏகபுதல்வன் பிரவீணனையும் அறிமுகப்படுத்தினார்.
பிரவீணன் அப்பொழுது சிறு பையன். அன்று தொடங்கிய அவர்களுடனான உறவு, நட்புறவுக்கும் அப்பால் சகோதர வாஞ்சையுடன் எந்தவித விக்கினமுமின்றி தொடருகிறது. அவர்கள் எமது இலக்கிய குடும்பத்தில் மட்டுமன்றி, எனது மனைவி மக்களிடத்திலும் சொந்தமாக உறவாடுபவர்கள். மெல்பனில் எமது இல்லம் அவர்களின் மற்றும் ஒரு இல்லம்தான்.
மருத்துவக்கல்லூரிக்கு தெரிவாகி அங்கு உயிரினங்களை வெட்டிச்சோதித்து படிக்கவேண்டியிருந்தமையால் அந்தத்துறையிலிருந்து நழுவிச்சென்று, வேறு துறைகளில் பிரகாசித்தவர்கள் பற்றி அறிந்திருப்பீர்கள். கோகிலாவும் அவ்வாறே மருத்துவக்கல்விக்கு விடைகொடுத்தவர்தான். ஆனால் விஞ்ஞான ஆசிரியரானார்.
உயிரினங்களை அந்தக்கோலத்தில் தரிசிக்க மனவலிமையற்றிருந்த கோகிலா,Mahajanan பின்னாளில் மனோதத்துவ நிபுணராகி, உளவளச்சிகிச்சை செய்யும் சீரிமியத்தொண்டராகியிருப்பதே ஆச்சிரியமானது. எழுத்தாளர், நாடகக்கலைஞர், விஞ்ஞான ஆசிரியர், பிரதம கல்வி அதிகாரி, சீர்மிய ஆசிரியர், கலை, இலக்கியக்களம் என்ற அமைப்பில் இணைந்திருப்பவர் என்று பன்முகங்கள் கொண்டிருக்கும் இந்த ஆளுமை, வாழ்நாள் முழுவதும் தாவர பட்சணிதான்.
கோகிலாவின் தந்தையார் (அமரர்) செல்லையா சிவசுப்பிரமணியம் சமய இலக்கியங்கள் எழுதியிருப்பவர். சாகித்திய விருதும் பெற்றவர். கோகிலாவின் கணவர் மகேந்திரராஜா கலை, இலக்கிய ஆர்வலர். இறுதியாக அளவெட்டி அருணோதயாக் கல்லுரியின் அதிபராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். மகன் பிரவீணன் 2000 ஆம் ஆண்டில் உயர்தரப் பரீட்சையில் 4 A சித்தி பெற்று அவுஸ்திரேலியாவுக்கு புலமைப்பரிசில் பெற்றுவந்து பொறியியலாளரானவர். இலங்கையில் கட்டுப்பெத்தை பல்கலைக்கழகத்திலும் சிறிதுகாலம் விரிவுரையாளராக இருந்துவிட்டு, தற்பொழுது சிட்னியில் தமது துறையில் பணியாற்றுகிறார். இவரும் படைப்பிலக்கியத்தில் ஈடுபடும் கவிஞர்தான்.
கோகிலா விழிசைக்குயில் என்ற இலக்கியத்தொகுப்பின் ஆசிரியர். இரண்டு தடவைகள் சாகித்திய விருதுகளையும் வட - கிழக்கு மாகாண ஆளுனர் விருதும் பெற்றவர். நாடகத்துறையும் இவருக்குப் பிடித்தமானது. அதில் முறையாக தேர்ச்சிபெற்று பல அரங்காற்றுகைகளை நிகழ்த்திவருகிறார். அத்துடன் அவற்றில் தோன்றி நடிக்கிறார்.
மகாகவி உருத்திரமூர்த்தியின் மீண்டும் தொடங்கும் மிடுக்கு கவிதை நாடகத்தை இயக்கி, அதில் நடித்தவர். சிட்னி, மெல்பனிலும் மேடையேறியது.
இதுவரையில் கோகிலா மகேந்திரன் வரவாக்கியிருக்கும் நூல்களின் விபரம் வருமாறு: முரண்பாடுகளின் அறுவடை, நேர்கொண்ட பார்வை. உள்ளக் கமலம், எங்கே நிம்மதி, கலைப்பேரரசு ஏ.ரி.பி - அரங்கக் கலையில் ஐம்பதாண்டு - கிரேக்கத்தின் தொல்சீர் அரங்கு, குயில்கள், சிறுவர் உளநலம், சின்னச் சின்னப் பிள்ளைகள், தங்கத் தலைவி, துயிலும் ஒருநாள் கலையும், தூவானம் கவனம், பாவலர் துரையப்பா பிள்ளை, பிரசவங்கள், மகிழ்வுடன் வாழ்தல், மல்லாகத்தின் வரலாறும் அதன் அபிவிருத்தியும், மனக்குறை மாற வழி, மனம் எனும் தோணி - மனச்சோர்வு , முகங்களும் மூடிகளும் - முற்றத்தில் சிந்திய முத்துக்கள் , வாழ்வு ஒரு வலைப்பந்தாட்டம், விஞ்ஞானக் கதைகள், விழி முத்து,
கோகிலா - புலோலியூர் இரத்தினவேலோன் சிறுகதைகள் அறிமுகவிழா என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.
அதில் ஒரு சிறுகதையை பரீட்சார்த்தமாக இருவருமே இணைந்து எழுதியுள்ளனர். இவ்வாறு இருவர், நால்வர், பலர் இணைந்து படைப்பிலக்கியம் எழுதும் மரபு இன்றுவரையில் தொடருகிறது.
கோகிலாவின் கதைகள் பெண்ணியம், சமூகம், மனோதத்துவம், போரின் சுவடுகள், வாழ்வாதாரம், சிறுவர் உளவியல் சார்ந்திருப்பவை. பாத்திரங்களை அவற்றின் இயல்புகளுடன் நடமாடவிடுபவர். அந்த இயல்புகளே செய்திகளைத்தரும். தன்னம்பிக்கை ஊட்டும் படைப்புகள் பலவற்றை தந்திருப்பவர். அவருடைய நேரடிப்பேச்சுக்கும், படைப்புக்கும் வேறுபாடு இருக்காது. இவற்றில் தர்க்கமும் இழையோடும்.
பாவலர் துரையப்பாபிள்ளை, தங்கம்மா அப்பாக்குட்டி, ஏ.ரி. பொன்னுத்துரை பற்றியெல்லாம் தனித்தனி நூல் எழுதி அவர்களின் வாழ்வையும் பணிகளையும் எம்மவர்க்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
1972 இல் தனது முதல் சிறுகதையை எழுதியிருக்கும் கோகிலா. அண்மையிலும் ஒரு புதிய நூலை கொழும்பில் வெளியிட்டார்.
இவ்வாறு நான்கு தசாப்த காலமாக எழுத்தூழியத்தை தொடரும் கோகிலா, தான்பெற்ற உளவளப்பயிற்சியை எமது சமூகத்தின் நலன்கருதி தக்கமுறையில் பயன்படுத்தி வருவதும் முன்மாதிரியானது.
2004 ஆம் ஆண்டு இறுதியில் அவர் தமது கணவருடன் மெல்பன் வந்திருந்த காலப்பகுதியில் இலங்கையில் சுநாமி கடற்கோள் அநர்த்தம். நாம் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உடைகள், உலர் உணவுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை சேகரித்து இரண்டு பெரிய கொள்கலனில் ஏற்றியவேளையில், எனது வீடெங்கும் அந்தப்பொருட்கள் நிரம்பின. கோகிலா - மகேந்திரன் தம்பதியரும் புதல்வன் பிரவீணனும் எம்முடன் இணைந்து பொருட்களை தரம்பிரித்து இரவுபகலாக பொதிசெய்தனர்.
சுநாமியில் இறந்தவர்களுக்கான அஞ்சலி நிகழ்விலும் அவர் ஆற்றிய உரை, பதட்டத்தில் இருந்த எம்மை ஆற்றுப்படுத்துவதாகவே அமைந்தது.
சிட்னி, மெல்பன் எழுத்தாளர் விழாக்களிலும் ஜீவநதி அவுஸ்திரேலியா சிறப்பிதழ் அறிமுக நிகழ்விலும் சிட்னியில் பல பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டவர். அவருக்கு அவுஸ்திரேலியாவில் நிரந்தரமாக குடியிருப்பதற்கான அனுமதி கிடைத்திருந்தபோதிலும் - எமது மக்களுக்காக தொண்டு செய்வதற்காகவே தாயகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.
1988 ஆம் ஆண்டு நாம் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தை உருவாக்கியபொழுது, எமது வடபகுதிக்கான தொடர்பாளர்களாக இருந்தவர்கள் இருவர். ஒருவர் கோகிலா, மற்றவர் எழுத்தாளர் தெணியான். இருவரும் வேறு வேறு பாடசாலைகளில் பணியாற்றினர்.
மாணவர்களை கண்காணித்து, அவர்களுடன் நிதியம் தொடர்பாடலை மேற்கொள்வதற்கு அவர்கள் பெரிதும் உதவிய அக்காலம் போர்நெருக்கடியிலிருந்தது.
கடந்த 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் யாழ்ப்பாணத்தில் நாம் நடத்திய மாணவர் ஒன்றுகூடல் - தகவல் அமர்வு - நிதிக்கொடுப்பனவு நிகழ்வுக்கு கோகிலா மகேந்திரனையே பிரதம பேச்சாளராக அழைத்திருந்தோம்.
மகாகவியின் மீண்டும் தொடங்கும் மிடுக்கு என்ற கவிதையுடன்தான் அவர் அன்று தமது உரையை ஆரம்பித்தார். இதுபற்றி எனது பயணியின் பார்வையில் தொடரில் ஏற்கனவே எழுதியிருக்கின்றேன்.