கடலும் கடல் சார்ந்த நிலமும் நெய்தல் என சங்க இலக்கியங்களில் சொல்லப்படுகின்றது. இலங்கையில் மேற்குக்கரையில் இந்து சமுத்திரத்தை அணைத்தவாறு விளங்கும் கடற்கரை நகரம் நீர்கொழும்பு. ஐதீகக்கதைகளும் வரலாற்றுச்சிறப்பும் மிக்க இந்நகரில் வாழ்ந்த மூத்தகுடியினர் தமிழர்கள். அவர்களினால் 1954 இல் விஜயதசமியின்பொழுது 32 குழந்தைகளுடன் தொடங்கப்பட்ட பாடசாலையே இன்று வடமேற்கில் கம்பஹா மாவட்டத்தில் ஒரே ஒரு இந்து தமிழ் மத்திய கல்லூரியாக விளங்கும் விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி. இதன் ஸ்தாபகர் எஸ்.கே. விஜயரத்தினம் நீர்கொழும்பில் நகரபிதாவாக (மேயர்) விருந்த தமிழராவார். தமிழ் மக்களின் பண்பாட்டுக்கோலங்களுடன், வரலாற்றுச்சுவடுகளுடன் வெளிநாட்டு உல்லாசப்பயணிகளையும் கவரும் இந்நகருக்கு அருகாமையிலேயே சர்வதேச விமான நிலையம் கட்டுநாயக்காவில் அமைந்துள்ளது. கல்லூரி 1954 இல் ஆரம்பப் பாடசாலை தரத்திலிருந்தபொழுது முதல் மாணவனாக இணைத்துக்கொள்ளப்பட்டவரும் தற்பொழுது அவுஸ்திரேலியாவில் வதியும் படைப்பிலக்கியவாதியும் ஊடகவியலாளரும் சமூகப்பணியாளருமான லெ. முருகபூபதி விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின் 60 வருட நிறைவு வைரவிழாவை முன்னிட்டு தொகுத்து வெளியிட்டுள்ள நெய்தல் - நீர்கொழும்பு வாழ்வும் வளமும் நூல் நீர்கொழும்பில் அண்மையில் சிறப்பாக வெளியிடப்பட்டது.
வெளிநாடுகளில் வதியும் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகளின் ஆதரவுடன் வெளியாகியிருக்கும் நெய்தல் நூலில், சூரியகுமாரி ஸ்ரீதரன் (துபாய்), தேவா ஹெரால்ட் (ஜெர்மனி) , ஸ்ரீரஞ்சனி , நீர்கொழும்பு தருமலிங்கம், அசலாம்பிகை கல்யாணசுந்தரம் (கனடா), கனகலதா, கவிஞர் காவ்யன் விக்னேஷ்வரன் ( சிங்கப்பூர்), ரவி பிரதீபன், செ. செல்வரத்தினம் ( பிரான்ஸ்) , நூலகர் நடராஜா செல்வராஜா ( இங்கிலாந்து), முருகபூபதி, இராஜரட்ணம் சிவநாதன், மாலதி முருகபூபதி (அவுஸ்திரேலியா) கெங்காதேவி ஸ்ரீமுருகன், முத்துலிங்கம் ஜெயகாந்தன், கலாநெஞ்சன் ஷாஜகான், நித்தியகலா கிருஷ்ணராம், திலகா தில்லைநாதன், பரிமளஜெயந்தி நவரத்தினம், ந. கணேசலிங்கம், ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி, வீ. நடராஜா, கல்லூரி அதிபர் நா.புவனேஸ்வரா ராஜா ( இலங்கை) முதலானோரின் படைப்புகள் வெளியாகியுள்ளன. அத்துடன் நீர்கொழும்பின் மூத்த எழுத்தாளர் அமரர் நீர்கொழும்பூர் முத்துலிங்கம் பற்றிய நினைவுப்பதிவுக்கட்டுரையும் அவரது நினைவாக அவர் முன்னர் எழுதிய சிறுகதையும் இடம்பெற்றுள்ளது. கட்டுரை, சிறுகதை, கவிதை, ஆய்வுகள் மற்றும் நீர்கொழும்பின் வரலாற்றுச்சுவடுகளை சித்திரிக்கும் படங்களும் பதிவுசெய்யப்பட்டிருக்கும் நெய்தல் நூலின் முகப்பை கல்லூரியின் பழைய மாணவர் சுஜித் நிர்மல் காளிதாஸ் வடிவமைத்துள்ளார். கொழும்பு குமரன் அச்சகம் பதிப்பித்துள்ள இந்நூலின் பிரதிகளுக்கு தொடர்புகொள்ளவும்
.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். 00 61 ( 0 ) 4166 25766