கடந்த சில மாதங்களாக முற்போக்கு இலக்கிய முகாமிலிருந்து அடுத்தடுத்து எனது இனிய நண்பர்களை நான் இழந்து கொண்டிருக்கின்றேன். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முன்னாள் செயலாளர் நண்பர் பிரேம்ஜி ஞானசுந்தரன் அவர்களின் மறைவின் துயரத்தின் சுவடு மறையும் முன்னர் தமிழ் நாட்டில் மூத்த படைப்பாளி இலக்கிய விமர்சகர் தி.க.சிவசங்கரன் மறைந்தார். அவருக்கும் இரங்கல் எழுதி எனது நினைவுகளுக்கு அவரை மீண்டும் அழைத்து மனதிற்குள் உரையாடிக்கொண்டிருந்தவேளையில் --- இதோ நானும் வருகிறேன் என்னையும் அழைத்துக்கொள்ளும் என்று நெஞ்சத்தினுள் பிரவேசித்துவிட்டார் இனிய நண்பர் சமீம் அவர்கள். அவரது மறைவுச்செய்தியை அறிந்தவுடன் கடந்த காலங்கள்தான் ஓடிவருகின்றன. நான் இலக்கிய உலகில் பிரவேசித்த காலப்பகுதியில் அதாவது 1972 ஆம் ஆண்டு காலப்பகுதியில்தான் சமீம் எனக்கு அறிமுகமானார். அவர் கம்பளை சாகிராக்கல்லூரி அதிபராகவும் பின்னர் கிழக்குப்பிராந்திய கல்வி பணிப்பாளராகவும் பணியாற்றிய காலகட்டத்தில் எமது இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பணிகளிலும் தீவிரமாக இணைந்து இயங்கினார்.
ஆறுமுகநாவலருக்கு 150 ஜனன தினம் நாடு பூராவும் கொண்டாடப்பட்டது. அவரை சமயம் சார்ந்த குருபூசை நிகழ்வு சிமிழுக்குள் அடைப்பதற்கு முயன்ற காலப்பகுதியில் அவரது சமுதாயப்பணிகளிலிருந்த மனிதநேய முற்போக்கு செயற்பாடுகளை வெளியுலகிற்கு தெரியப்படுத்தியவர்களில் சமீம் அவர்கள் முக்கியமானவர். போர்த்துக்கீசரும் அவர்களைத்தொடர்ந்து ஒல்லாந்தரும் அதன் பின்னர் பிரிட்டிஷாரும் இலங்கையை சூறையாடிக்கொண்டிருந்த வரலாற்றுப்பின்னணியில் இலங்கையின் வடபுலத்தில் கொடிய பஞ்சம் நிலவியபொழுது ஏழைமக்களின் பசிபோக்குவதற்காக தெருத்தெருவாக கஞ்சித்தொட்டி இயக்கத்தை தொடக்கியவர் ஆறுமுகநாவலர் என்ற உண்மைத்தகவலை ஆய்வுக்கண்ணோட்டத்துடன் அன்று தெரியவைத்தவர் சமீம். எல்லாம் நேற்றுப்போல இருக்கிறது. 1972 காலப்பகுதியில் ஆறுமுகநாவலர் 150 ஆவது ஜனன தின ஆய்வரங்கினை இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் வெள்ளவத்தை இராமகிருஷ்ண மண்டபத்தில் நடத்தியது. ஆறுமுகநாவலர் வாழ்ந்த காலத்தில் ஏற்பட்ட பஞ்சத்தின்போது பட்டினியால் மடிந்த ஒரு மனிதனின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்த பொழுது அவனது வயிற்றிலே மாடுகள் மேய்ந்துண்ணும் புற்கள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாக ஒரு பிரிட்டிஷ் ஆய்வாளர் பதிவுசெய்திருந்த அதிர்ச்சியான தகவலை சமீம் தனது உரையில் குறிப்பிட்டார். இயல்பிலேயே தேடல் மனப்பான்மையுடன் இயங்கிய சமீம் அதுபோன்று பல ஆய்வுகளையும் இலக்கிய உலகிற்கும் குறிப்பாக தமிழ் அறிவுலகத்திற்கு வழங்கியிருப்பவர்.
இலங்கையில் பல ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த முஸ்லிம் - சிங்கள மக்களிடையே ஏற்பட்ட கலவரத்தின்பொழுது பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்காக சேர். பொன் . இராமநாதன் குரல் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு முஸ்லிம் மக்கள் மத்தியில் நீடிக்கிறது. அவர் சிங்கள மக்களின் பக்கம் நின்று வாதிட்டுவிட்டு நாடு திரும்பினார். அவரை சிங்கள மக்கள் பல்லக்கில் வைத்து கொண்டாடி ஊர்வலமாக அழைத்து வந்தார்கள் என்ற வரலாறு இருக்கிறது. இந்தப்பக்கச்சார்பு நடவடிக்கையை சமீம் பல்வேறு ஆதாரங்களுடன் ஆய்வு செய்து பதிவுசெய்துள்ளார். அவர் தமிழ் மொழிக்கும் குறிப்பாக இலங்கையில் முஸ்லிம் சமுதாயத்திற்கும் தனது ஆய்வுப்பணி மற்றும் கல்விப்பணி ஊடாக மேற்கொண்டுள்ள சேவை வரலாற்றில் பதிவு செய்யப்படவேண்டியது. மல்லிகையில் அதன் ஆசிரியர் டொமினிக்ஜீவா காலத்தால் மறையாத ஈழத்து இலக்கிய வரலாற்றில் நிரந்தரமாக பதிவுசெய்யப்பட்ட சிறந்த சேவையொன்றை மல்லிகையை ஆரம்பித்த காலம் முதலே செய்துவந்துள்ளார்.
தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிக்கு பல்வேறு வழிகளிலும் ஆக்கபூர்வமான சேவையாற்றிய ஆளுமைகளின் படத்தை மல்லிகையின் முகப்பில் பிரசுரித்து அவர்களைப்பற்றிய கட்டுரைகளை அல்லது நேர்காணல்களை வெளியிட்டுள்ளார். அந்தவகையில் 1972 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளியான மல்லிகையின் அட்டையை அலங்கரித்தவர் முகம்மது சமீம். நான் 1971 முதல் மல்லிகையின் வாசகனானேன். அக்காலப்பகுதியில் மாதாந்தம் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு வரும் மல்லிகை ஜீவாவுடன் அம்மாதத்திற்குரிய மல்லிகையும் வந்துவிடும். ஜீவா - நீர்கொழும்பிலிருக்கும் தமது உறவினர்களை பார்க்கவும் அங்கிருக்கும் இலக்கிய நண்பர்களை சந்திக்கவும் வருவார். எனக்கு இன்னமும் நல்ல நினைவிருக்கிறது. 1972 ஜூன் மாத இதழின் முகப்பினை அலங்கரித்தவர் முகம்மது சமீம். அடுத்த மாதம் ( 1972 ஜூலை ) இதழை அலங்கரித்தவர் யாழ். மகாஜனாக்கல்லூரியின் ஸ்தாபகர் பாவலர் துரையப்பா பிள்ளை.
அந்த இதழில்தான் எனது முதலாவது சிறுகதை கனவுகள் ஆயிரம் வெளியானது. மல்லிகையின் 1972 ஜூன் இதழும் ஜூலை இதழும் கல்விக்காக தொண்டாற்றிய இரண்டு பெரிய மனிதர்களைப்பற்றிய பதிவினை மல்லிகை ஈழத்து இலக்கிய உலகிற்கு வழங்கியிருந்தது.நல்லை அமிழ்தன் என்பவர்தான் சமீம் அவர்களைப்பற்றிய கட்டுரையை எழுதியிருந்தார். அக்காலப்பகுதியில் சமீம் கிழக்கிலங்கை கல்விப்பிராந்தியத்தின் பணிப்பாளராக பதவியுயர்வு பெற்று சேவையாற்றிக்கொண்டிருந்தார். அங்கு இலிகிதராகப்பணியாற்றிய நல்லை அமிழ்தன் - சமீம் பற்றிய பல தகவல்களை மல்லிகையில் குறிப்பிட்டிருந்தார். இவர்கள் இருவரையும் காலப்போக்கில்தான் நேருக்கு நேர் சந்தித்தேன்.நல்லை அமிழ்தன் சீனச்சார்பு கம்யூனிஸ்ட் கட்சியுடன் பிற்காலத்தில் நெருக்கமாகவிருந்தபொழுது நண்பர் டானியலுடன் அவரது ஸ்டார் கராஜில் சந்தித்து இலக்கிய நண்பனானேன்.
அவரும் நண்பர் புதுவை ரத்தினதுரை போன்று விடுதலைப்புலிகளின் ஆதரவாளராக பின்னர் மாறியிருந்தார். இறுதியாக நல்லை அமிழ்தனை 1986 இறுதியில்தான் யாழ்ப்பாணத்தில் சந்தித்தேன். அதன் பிறகு சந்திக்கக்கிடைக்கவில்லை. முகம்மது சமீம் முற்போக்கு இலக்கியக்கோட்பாடுகளை வரித்துக்கொண்டு எழுதியபோதிலும் நான் அறிந்த வரையில் எந்தவொரு இடதுசாரி அரசியல் இயக்கங்களுடனும் அவருக்கு தொடர்புகள் இருக்கவில்லை.
அவர் ஆசிரியராக அதிபராக பின்னாளில் கல்விப்பணிப்பாளராக அரச சேவையிலிருந்தமையினாலோ என்னவோ அவர் மாஸ்கோ சார்பாளராகவோ சீனச்சார்பாளராகவோ தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளாமல் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பணிகளில் இணைந்திருந்தார். இவருக்கும் எச். எம். எம்.பி மொஹிதீனுக்கும் இடையில் குறிப்பிடத்தகுந்த நட்புறவு இருக்கவில்லை என்பதையும் அக்காலப்பகுதியில் என்னால் அவதானிக்க முடிந்தது. எனினும் இவர்கள் இருவரும் இறுதிவரையில் எனது இனிய நண்பர்களாகவே விளங்கினர். முற்போக்கு எழுத்தாளர் சங்கம் இயங்கமுடியாமல் ஸ்தம்பித நிலையடைந்தமைக்கு பலரும் பல்வேறு காரணங்களைக்கூறியபொழுதும் - அதன் நீண்டகால ( ஆயுள்கால செயலாளர் என்றும் சொல்லலாம்) செயலாளர் பிரேம்ஜி ஞானசுந்தரன் கனடாவுக்கு புலம்பெயர்ந்து சென்றதுதான் மிகவும் முக்கிய காரணம்.
ராஜஸ்ரீகாந்தனின் மறைவு அதனையடுத்து சோமகாந்தனின் மறைவு சிவத்தம்பி அவர்களின் சுகவீனம் முதலான காரணங்கள் அடுத்தடுத்து வந்தவை. எனினும் - பிரேம்ஜி மீண்டும் வந்து கொழும்பில் சங்கத்தை புனரமைத்து திக்குவல்லை கமாலை செயலாளராகத் தெரிவு செய்துவிட்டபோதும் சங்கம் நகராமல் அதே இடத்தில் நின்றது. நீர்வை பொன்னையன் மற்றும் சமீம் முதலானோர் நீண்ட காலம் அந்த இயக்கத்திலிருந்தவர்கள். மல்லிகை ஆசிரியர் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கூட்டங்களை தவிர்த்தார் என்ற காரணத்தை முன்வைத்துக்கொண்டு புதிய அமைப்பாக முற்போக்கு கலை இலக்கியப்பேரவையை நீர்வை பொன்னையனும் சமீமும் தொடக்கியதுதான் எனக்குப் புதிரானது. எவ்வாறு இடதுசாரிகள் கருத்தியல் ரீதியாக முரண்பட்டும் பின்னர் தனிப்பட்ட பகையுணர்வுடன் பிளவுபட்டும் குழுமனப்பான்மையுடன் இயங்கினார்களோ அதே மனப்பான்மை முற்போக்கு இலக்கிய முகாமுக்கும் பிற்காலத்தில் நேர்ந்தது.இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் டானியல் - ரகுநாதன் - பெனடிக்ற் பாலன் - நீர்வை பொன்னையன் - எச்.எம்.பி. மொஹிதீன் - இளங்கீரன் - கைலாசபதி - நுஃமான் முதலானோர் மாஸ்கோ சார்பு அரசியலை சார்ந்து நிற்கவில்லை. ஆனால் பீக்கிங் சார்பு நிலை எடுத்தனர்.
பிரேம்ஜி - டொமினிக் ஜீவா - சிவத்தம்பி - அகஸ்தியர் - தெணியான் முதலானோர் பீக்கிங் சார்பு நிலை எடுக்கவில்லை. இதன் மூலம் யார் யார் எந்த எந்த அணிகளுக்குப்பின்னால் சென்றார்கள் என்பது புலனாகும். எனினும் அனைவரையும் அணைத்துச்செல்லும் ஆளுமைப்பண்பு பிரேம்ஜியிடம் இருந்தமையால் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் பிளவுபடவில்லை.
எனினும் - தேசிய ஒருமைப்பாட்டு மாநாட்டிற்கான பூர்வாங்க வேலைகள் 1975 இல் தொடங்கப்பட்டபொழுது டானியல் - சில்லையூர் - ரகுநாதன் - புதுவை ரத்தினதுரை முதலானோர் திருகோணமலையில் பிரத்தியேகமாக ஒரு மாநாட்டை நடத்தினார்கள். ஆனால் - நீர்வைபொன்னையன் - இளங்கீரன் - மொஹிதீன், கைலாசபதி - முதலானோர் கொழும்பில் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தேசிய ஒருமைப்பாட்டு மாநாட்டிலேயே இணைந்திருந்தனர். ஆனால் - முகம்மது சமீம் அச்சந்தர்ப்பத்திலும் அதற்கு முன்னர் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் நாவலர் 150 ஆவது ஜனன தின கருத்தரங்கு உட்பட பல நிகழ்வுகளிலும் சங்கத்துடனேயே இணைந்திருந்தார். ஆனால் - 1972 இல் சமீம் அவர்களை விதந்து மல்லிகையில் எழுதிய நல்லை அமிழ்தன் - டானியலுடன் இணைந்து முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கருத்தியலை எதிர்த்தார்.
ஒரு அமைப்பினை கட்டி எழுப்பி வளர்க்கும் பொழுது மூத்தவர்களின் கைகளிலேயே நிருவாகம் இருக்கும் பட்சத்தில் வளர்ச்சி தேங்கி விடுவதும் இயல்பானது. நானும் சாந்தனும் திக்குவல்லை கமாலும் மேமன் கவியும் ராஜஸ்ரீகாந்தனும் 1970 இற்கு பின்னரே சங்கத்தில் உள்வாங்கப்பட்டோம். இறுதிவரையில் சங்கத்தின் பணிகளில் இணைந்திருந்தோம். முதலில் நானும் பின்னர் பிரேம்ஜியும் வெளியே புலம்பெயர்ந்து சென்ற பின்னர் இலங்கையிலிருந்த முற்போக்கு எழுத்தாளர்களை குறைந்தபட்ச புரிந்துணர்வுடன் இணைக்க முடியாதிருந்தமைக்கு உள்நாட்டு அரசியல் நெருக்கடிகளும் இயல்பாகவே எழுத்தாளர்களிடமிருந்த ஈகோ மனப்பான்மையும்தான் காரணம்.
நானறிந்த வரையில் மல்லிகை ஜீவாவுடன் இலக்கிய கோட்பாட்டு ரீதியிலும் அரசியல் ரீதியிலும் முரண்பட்டிருந்தவர்களின் படம் கூட மல்லிகையின் முகப்பில் பிரசுரமாகி அவர்கள் மல்லிகையால் கௌரவிக்கப்பட்டிருக்கிறார்கள். ஜீவாவுடன் பெரும்பாலும் பலதளங்களில் முரண்பட்டிருந்த எஸ். பொன்னுத்துரைக்கும் மல்லிகையில அட்டைப்பட அதிதி சிறப்பு கிடைத்தது. ஆனால் - ஜீவா சார்ந்து நின்ற முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடன் இணைந்திருந்த நீர்வைபொன்னையனின் படைப்புகளோ அட்டைப்படமோ மல்லிகையில் வெளிவரவேயில்லை. இப்படி இரண்டு பெரிய இலக்கிய ஆளுமைகள் இணையாமல் எப்படி முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை இலங்கையில் முன்னெடுப்பது? அதனால் உருவாகியிருக்கிறது. முற்போக்கு கலை இலக்கிய மன்றம்.
சமீம் மறைந்த பின்னர் நீர்வைபொன்னையன் எழுதியிருந்த கட்டுரையில் (தினக்குரல்) பல எழுத்தாளர்களை அவர் புறக்கணித்திருக்கிறார் என்று எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. புறக்கணிப்புகளை பற்றி அலட்டிக்கொள்ளாமல் ஒவ்வொருவரும் தத்தம் ஆளுமைப்பண்புகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று பதில் வழங்கினேன். காலம் மாறிக்கொண்டிருக்கிறது. எல்லோருக்கும் வயது போகிறது. புதிதாக எழுத வருபவர்களுக்கு மூத்தவர்கள் நம்பிக்கை அளிக்கவேண்டும்.
2004 ஆம் ஆண்டு டிசம்பரில் இலங்கையை பாதித்த சுனாமி கடற்கோள் அனர்த்தத்தினையடுத்து அவுஸ்திரேலியா அன்பர்களின் ஆதரவுடன் இரண்டு கொள்கலன்களில் உடுபுடவைகள் மற்றும் பாய்கள் உலர் உணவுவகைகளை கப்பல் மார்க்கமாக அனுப்பிவிட்டு அவற்றை வன்னியிலும் கிழக்கிலங்கையிலும் விநியோகிப்பதற்காக கொழும்பிற்கு சென்றிருந்தேன். அச்சமயம் - ஒரு நாள் துரைவி பதிப்பகத்தின் சார்பாக நண்பர் மேமன் கவியின் உனக்கு எதிரான வன்முறை கவிதை நூல் வெளியீடு வெள்ளவத்தை இராமகிருஷ்ண சிறிய மண்டபத்தில் நடந்தது. அன்று இரவு நான் மட்டக்களப்பிற்கு பயணமாகவேண்டியிருந்தது.
மேமன்கவி தனது நூல் வெளியீட்டிற்கு வந்து பேசிவிட்டு செல்லுமாறு அன்புக்கட்டளை விடுத்தார். சமீம் அவர்களும் அந்தக்கூட்டத்திற்கு வந்திருந்தார். நீண்ட இடைவெளிக்குப்பின்னர் அவருடன் உரையாடினேன். அப்பொழுதே அவர் சில நோய் உபாதைகளுக்கு இலக்காகியிருந்தார். அவருக்கும் மாரடைப்பு வந்து சத்திரசிகிச்சை செய்ததாகச் சொன்னார். அன்று அவர் எனக்கு அவரது வலது காலைக்காண்பித்தார். நான் எனது இடது கரத்தைக் காண்பித்தேன். இருவருமே இருதய சத்திரசிகிச்சையின்பொழுது இரத்த நாடிகளை இருதயத்தின் பைபாஸ் பாதைக்காக கொடுத்திருப்பதை பரஸ்பரம் சொல்லி சிரித்துக்கொண்டோம்.
அந்த இராமகிருஷ்ண சிறிய மண்டபத்தில்தான் 1972 இல் ஆறுமுகநாவலர் 150 ஆவது ஜனன விழாவை முன்னிட்டு பயனுள்ள கருத்தரங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் கவிஞர் முருகையன் தலைமையில் நடத்தியது. நாவலரின் அடிச்சுவட்டில் தேசிய ம் - இலக்கியம் - கல்வி - பண்பாடு என்ற தலைப்புகளில் நான்கு ஆளுமைகள் உரையாற்றினர். அவர்கள்:- பேராசிரியர்கள் தில்லைநாதன் - சிவத்தம்பி - கைலாசபதி - சமீம். சமீம் நாவலரின் அடிச்சுவட்டில் கல்வி என்ற தலைப்பில் உரையாற்றினார். இந்த ஆக்கத்தின் மேலே குறிப்பிட்ட யாழ்ப்பாணத்தில் நாவலர் காலத்தில் தலைவிரித்தாடிய பஞ்சம் பற்றி சமீம்சொன்ன தகவல்களை அன்று நினைவுபடுத்தினேன். முருகபூபதி - நீங்கள் நல்ல நினைவுடன் அந்தக்காலத்தை ஞாபகப்படுத்துகிறீர்கள். உண்மையிலேயே அந்தக்கருத்தரங்கு சிறப்பானதுதான். புதுமை இலக்கியம் குறிப்பிட்ட கருத்தரங்கு கட்டுரைகளுடன் ஒரு சிறப்பிதழை வெளியிட்டதையும் அவருக்கு நினைவுகூர்ந்தேன். அதுபோன்ற கருத்தரங்குகள் தற்காலத்தில் நடப்பது அரிதாகிவிட்டது என்றும் ஆய்வுக் கட்டுரைகளுக்காக பல நாட்கள் கடுமையாக உழைக்கவேண்டும் எனவும் - ஆனால் இந்த அவசர யுகத்தில் நிதானமாக இருந்து ஆய்வுசெய்து கட்டுரைகளை சமர்ப்பிப்பவர்கள் குறைந்துகொண்டிருக்கிறார்கள் என்றும் கவலை தெரிவித்தார்.
அன்றைய நாவலர் கருத்தரங்கு பற்றிய செய்திக்கட்டுரையை மல்லிகையில் நான் எழுதியிருந்தமையினாலும் எனக்கு அந்த நிகழ்வு நினைவில் தங்கியிருக்கிறது என்றேன். மேமன்கவியின் நூல் வெளியீட்டு நிகழ்வு தொடங்கியதும் எனது உரையில் நீண்ட இடைவெளிக்குப்பின்னர் நண்பர் சமீம் அவர்களை சந்தித்துப்பேசியதும் மனநிறைவானது எனச்சொன்னேன். இரவு 8 மணியாகிவிட்டது. இனி நான் கொழும்பு புறக்கோட்டை சென்று அங்கிருந்து இரவு பஸ்ஸில் கிழக்கிலங்கை பல்கலைக்கழகம் செல்லவேண்டும். என்னை அழைத்துச்செல்ல விரிவுரையாளர் வாசுகி வந்திருந்தார். சமீமிடம் சொல்லிவிட்டு விடைபெற்றேன். மண்டபத்தின் வாசல் வரையில் வந்து வழியனுப்பினார். இறுதியாக 2011 ஆம் ஆண்டில் நாம் இலங்கையில் முதலாவது சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நடத்தியபொழுது நானும் மாநாட்டு அமைப்புக்குழுவின் நிதிச்செயலாளர் பூபாலசிங்கம் ஸ்ரீதரசிங்கும் - சமீம் அவர்களை நேரில் சந்தித்து அழைப்பிதழை வழங்குவதற்கு கல்கிஸையிலிருந்த அவரது இல்லத்துக்குச் சென்றோம்.
அச்சமயம் சமீம் உடல் நலக்குறைவுடன் இருந்து - எமது பணிக்கு ஆசிவழங்கினார். இலங்கையில் இலக்கியப்பணியும் கல்விப்பணியும் மரதன் ஓட்டம் போன்றது. ஒரு காலத்தில் மூத்த தலைமுறையினரால் இயங்கச்செய்யப்பட்ட இலக்கிய இயக்கம் இன்றைய தலைமுறையினரால் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று வாழ்த்தினார். சமீம் மறைந்த செய்தி அறிந்தவுடன் மிகுந்த கவலையுடன் நான் பாதுகாத்து வைத்திருக்கும் எனது பழைய கோவைகளை எடுத்துப்பார்த்தேன். சுமார் 42 வருடங்களுக்கு முன்னர் நான் மல்லிகையில் எழுதியிருந்த நாவலர் 150 ஆவது ஜனன தின கருத்தரங்கு செய்திக்கட்டுரை கிடைத்தது.
நாவலரின் அடிச்சுவட்டில் கல்வி வளர்ச்சி என்ற தலைப்பில் பேசியிருந்த சமீம் - அன்று குறிப்பிட்ட கருத்துக்கள் சிலவற்றை அவரது நினைவாக இங்கு இன்றைய வாசகர்களுக்கு பதிவுசெய்கின்றேன். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் இவ்விருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் இயங்கிய சமய மறுமலர்ச்சி காலத்தில்தான் நாவலரை நோக்கவேண்டும். என்றைக்கோ வாழ்ந்த ஒருவரை - அவர் வாழ்ந்த பிறகு வாழும் மக்கள் - அவர் என்ன செய்தார்? என்று அவரது கருத்தை தம் காலக் கருத்தோடு வைத்து ஆராய்வது தவறாகும். அன்று நடந்ததை அன்றைய பின்னணியில்தான் நோக்கி ஆராயவேண்டும்.
நாவலர் குருகுல கல்வி முறையில் வந்தவர். சிலகாலம் அம்முறையை விரும்பிய அவர் புதிய தேவைக்கு அம்முறை ஈடுகொடுக்காது என்று அறிந்ததும் கல்வி அமைப்பை விரிவுபடுத்த முன்வந்து உழைத்தார். குருகுல கல்வி முறை ஒரு வட்டத்திற்குள்ளேதான் நிற்கமுடியும் என்பதால் சகல மக்களும் கல்வி பெறத்தக்கதாக அந்த அமைப்பை விரிவாக்கினார்.
சமுதாயத்திற்குத் தேவையானவர்கள் - சிந்தனையாளர்கள். அச்சிந்தனையாளர்களை பரந்துபட்ட கல்வி மூலம்தான் உருவாக்க முடியும் என்பதை உணர்ந்த நாவலர் - அதற்காக செயல்பட்டார். கல்வி மூலம்தான் சமுதாயத்தை பாதுகாக்கவேண்டும். இல்லையேல் இதயமற்ற மனிதர்களைத்தான் பார்க்க நேரிடும் என்று சொன்னவர் நாவலர்.
இவ்வாறு நாவலரின் தீர்க்கதரிசமான சிந்தனைகளை அன்று வெளியிட்ட சமீம் மும்மொழியிலும் சரளமாகப்பேச வல்லவர். முற்போக்கான சிந்தனைகளுடன் வாழ்நாள் பூராவும் ஆய்வுத்துறையில் ஈடுபட்டு இயங்கிக்கொண்டிருந்த சமீம் போன்றவர்கள் அவர்கள் வாழும் காலத்திலேயே பாராட்டி கொண்டாடப்பட்டிருக்கவேண்டியவர்கள். எனினும் கொழும்பில் முற்போக்கு இலக்கிய கலை மன்றம் சார்பில் இலக்கியவாதி லெனின் மதிவானம் நீர்வை பொன்னையன் முதலானவர்களின் முயற்சியினால் அவர் பாராட்டி கௌரவிக்கப்பட்டார் என்பது ஆறுதலான செய்தி.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.