- முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை அவரது சமூகப்பின்னணியைக் காரணமாக வைத்து விமர்சிப்பார்கள் அவரது அரசியல் எதிரிகள். ஆனால் அவரது இக்கட்டுரையைப் படித்தபோது உண்மையிலேயே வியந்துதான் போனேன். எவ்வளவு தெளிவாகப் பெரியாரின் சமூக, சீர்திருத்தக் கருத்துகளை அவர் அறிந்து வைத்திருக்கின்றார். பெரியார் மீது எவ்வளவுதூரம் மதிப்பு வைத்திருக்கின்றார். அவரை அவரது சமூகப்பின்னணி பற்றி விமர்சித்த அரசியல் எதிரிகளுக்குக் கூட இவ்வளவு தெளிவு இருந்திருக்குமா என்பது சந்தேகமே. தனது அரசியல் கருத்துகளில் தெளிவாக இருந்ததனால்தான் அவரால் இறுதிவரை மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்காமல் உறுதியாக நிற்க முடிந்திருக்கின்றது. Kollywood Entertainment முகநூலில் பகிர்ந்திருந்த ஜெயலலிதாவின் 'தாய்' சஞ்சிகையில் எழுதிய கட்டுரை. - வ.ந.கி -
ஜெ.ஜெயலலிதா அவர்கள் - தாய் இதழில் எழுதிய தொடரின் ஒரு பகுதி:
1973-ல், நான் கதாநாயகியாக நடித்த ''சூரியகாந்தி" தமிழ்த் திரைப்படத்தின் 100-வது நாள் வெற்றி விழா சென்னை ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. அந்த வெற்றி விழாவுக்குத் தலைமை வகித்து, கலைஞர்களுக்குப் பரிசுகளை வழங்கியவர் தந்தை பெரியார் அவர்கள்.
தந்தை பெரியார் அவர்களை நான் நேரில் சந்தித்தது அதுவே முதன் முறை, திரைப்படங்கள் என்றாலே அவருக்கு அவ்வளவாக விருப்பம் இருக்காது. திரைப்படத் துறை சம்பந்தப்பட்ட விழாக்களிலும் சாதாரணமாக அவர் கலந்து கொள்ள மாட்டார் என்றெல்லாம் கேள்விப்பட்டிருந்தேன். எப்படியோ, அன்றைக்கு அவ்விழாவுக்குத் தலைமை தாங்க தந்தை பெரியார் அவர்கள் சம்மதித்ததே என்னுடைய பேரதிர்ஷ்டம் என்று கருதுகிறேன்.