இருபத்தைந்து வருடத்தில் இரண்டே முக்கால் கதைகளேயே எழுதிய நான் இப்படியொரு தலைப்பில் தைரியமாக எழுத வரக்கூடாதுதான் , அதுவும் தமிழ்ச் சூழலில். எது சிறந்ததென்று எழுந்து 'லிஸ்டிக்க' நான் எந்த மலையுச்சியிலும் உட்கார்ந்திருக்கவில்லை. ஆனால் ஒரு பிய்ந்த விசிறியைக் கூட பிடிக்கா இயலா ஓரிரண்டு விசிறிகள் கிடைத்த 'தனுவு'-ல் எழுதுகிறேன். எல்லா உயிர்களுக்கும் பிடித்த மாதிரி இந்த 'இபுலீஸ்' எழுதுவதில்லையென்று இங்கிலிபீஷில் பொளந்து கட்டும் இளையவர்களுக்காகவும் எழுத நேர்ந்து விட்டது. மாப் கீஜியே பாய்...பக்தி இருப்பினும் பழசுக்கெல்லாம் போகவில்லை. 'சீறா' வின் சிறப்பைச் சொல்ல நேரமும் தகுதியும் எனக்குப் போறா. இதனாற்றான் யான் குணங்குடியப்பா , குலாம்காதரப்பா, சித்தி லெவ்வை , சித்தி ஜூனைதாவை எடுக்காதது. கடந்த கால் நூற்றாண்டாக வெளிவந்த நவீன இஸ்லாமியப் படைப்புகளை அவ்வப்போது படித்தும் வந்ததால் கொஞ்சம் சொல்லத் தோன்றிற்று.
நவீன இலக்கியத்தில் இஸ்லாமியக் கவிஞர்களுக்கு பஞ்சமில்லை. 'ஹக்'ஐ விரும்பும் ஹபீபுர் ரஹ்மான் , 'நூதனமா' எழுதுகிற நுட்பபுத்திரன், 'பதுவுஸா' குண்டு போடும் பரக்கத்பாய், சத்தமாக சந்தம் விடும் சஹாரி , 'எல்லா தெரிதல்களுடனும்' சாத்திரமுடைக்கும் சலீமா என்று எத்தனை பேர்! பெரிதும் மதம் சார்ந்து எழுதினாலும் மனதைக் கவரும் ஓரிரு கட்டுரையாளர்களும் உளர். கம்பனுக்கே நயம் கூறும் ஒரு நீதியரசர் உதாரணம். கதை சொல்லிகளைத்தான் காணோம். நன்றாக எழுதும் இருவரில் ஜனாப்.ஜதீத்மரைக்காயர் இருநூறு வருடம் சொன்னாலும் குறையாத தன் சமூகத்து கதைகளைத் தூக்கிப் போட்டுவிட்டு தத்து(வப்)பித்தென்று 'தலித்கதை' எழுத புறப்பட்டு விட்டார். ஜனாப்.தாஜாலெப்பையோ இந்தியா ஒளிர்கிற இருட்டு கிராமமொன்றில் சகல சௌபாக்கியங்களோடும் உட்கார்ந்து கொண்டு சிலோன்அமைதி பற்றி சிந்தித்துக் கொண்டு ('இப்ப புக் வந்தா சரியா போவாதே...') இருக்கிறார் . எத்தனை நாளைக்கு 'மக்கத்து சால்வை'யையே போர்த்திக் கொண்டிருப்பது? அல்லது பக்கத்து 'பஷீர்'-ன் சாதனையை பார்த்துக் கொண்டிருப்பது? அம்பலவாணனின் 'ஐஸாபீவி' ஒரு அற்புதம்தான். ஆனால் 'இஷானுல்லா' என்று பெயர்/பாத்திரம் இருப்பதாலேயே ஒன்று இஸ்லாமியக் கதையாகிவிடாது. இதனை மாற்ற வீறுகொண்டு புறப்பட்ட நான் (இதில் ஒரு கை உடைந்து விட்டது) சிறிதும் பெரிதுமாக குறிப்புகள் எழுதிவைத்தேன். எனக்கு மட்டுமல்ல எழுத முனையும் சகோதர சமயத்து புதியவர்களுக்கும் இது உதவலாம். இலக்கியத்திற்கும் மதப்பற்றுக்கும் (இந்த வார்த்தையில் கூட ஒரு குறிப்பு இருக்கிறது) இடைவெளி அவசியமென்று புரிந்து வைத்திருக்கிற மண்ணைச் சேர்ந்தவர்களுக்கு இது தேவைப்படாது. மற்றவர்கள் அமெரிக்க இசைக் கலைஞர்களுடன் ஈராக் இசைக்கலைஞர்கள் 'ஒற்றுமையாக' வாஷிங்டனில் வாசித்த 'Sweet Sweet Sound'ஐ கேட்டு மகிழ்ந்து கொண்டிருக்கட்டுமாக, ஆமீன்!
தலைப்பை, 'முஸ்லீம் கதையெழுத..' என்று வைத்திருந்தேன் முதலில். அதற்கு 'முப்பது குறிப்புகள்' என்று முடிக்காவிட்டால் 'ரைமோடு எழுதுடா மரைக்கான்..' என்ற 'சலாங்பலாங்' வாத்தியார் கோபித்துக் கொள்வார். மஹா கொச்சையாக 'துலுக்கன் கதையெழுத' என்றாலோ குறிப்புகள் தொன்னூறாகும். 'பாய் கதையெழுத பத்து குறிப்புகள்' என்றால் பையனைச் சொல்கிறாயா படுக்கிற பாயைச் சொல்கிறாயா என்று 'பாய்'வார்கள். 'நொண்டியா இருக்கலாம் ஆனா ஒண்டியா இருக்கக் கூடாது' என்று நாகேஷ் சொல்வது மாதிரி பாயாக இருக்கலாம் ஆனா பேயாக இருக்கக் கூடாது. என்ன செய்வது? கைவசமிருக்கிற எண்ணிக்கைக்கு தலைப்பு இப்படித்தான் வைக்க முடிந்தது. சில உபகுறிப்புகளும் தானாகவே - இறைவனருளால் - சேர்ந்து கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல. அல்லது எல்லா குறிப்புகளும் ஒரே குறிப்புதான் என்று உங்களுக்குத் தோன்றினால் அதற்கும் நான் பொறுப்பல்ல.
இஸ்லாமியக் கதையெழுதுவதற்குள்ள தகுதி இஸ்லாம் பற்றி தெரியாமல் இருப்பதுதான் என்று என் பத்திரிக்கை நண்பர் திரு. அறப்ரியன் எழுதியிருந்தார். அறவே சரியில்லையென்று வன்மையாக மறுக்கிறேன் இதை. எது பற்றியும் தெரியக் கூடாது! சாட்டையை எடுக்காதீர் சகோதரர்களே.. 'அல்லாஹ் ஜல்ல ஜலாலஹ¥த்தஆலாவைத் தவிர' என்று அர்த்தம். எதுவுமே தெரியாத...? இதற்கு என்னை விட்டால் ஆளில்லை! உண்மை போதும். இனி குறிப்புகள்:
1. தலைப்பு , 'கபர்ஸ்தான்', 'மக்ரிப்', 'கல்லி வல்லி' என்று ஒரு உருது/அரபிக் டச்சோடு இருந்தால் நல்லது. ஆனால் புத்தகமாகப் போடும்போது புரியா பதிப்பகம் இடைஞ்சல் கொடுக்கும். எனவே புரிவதுபோல வைக்கலாம். அதற்காக 'சீனி முகமது பற்றி சீனி முகமது' எழுதியவர் சீனி முகமது ' என்றிருந்தால் அதை சீனி முகமது மட்டுமே கசந்து போய் படிக்க வேண்டியிருக்கும் - சீனி முகமது வெளியிட்டால்!. ஆனால் கண்டிப்பாக நான் வைத்த மாதிரி மட்டும் வைக்க வேண்டாம். என்னுடைய முதல் சிறுகதையின் தலைப்பு 'வாழைப்பழம்'!. கையில் விழுந்த உடனேயே அடுத்த நொடியில் விமர்சக நண்பர் சிரமராஜன் கேட்ட கேள்வி :'இது உம்ம வாழைப்பழமா?'. ருசித்த இன்னொரு எழுத்தாள நண்பன் சற்று மேலே போனான். 'உனது வாழைப்பழத்தின் நீளம் அதிகம்!'. அடப் பாவிகளா! 'திராவியா' முடிந்து 'தப்ருக்'ஆக கொடுக்கப்படும் ஒரு வாழைப்பழம் கிடைக்காமல் போனதால் என் குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு ஹாஜியார்கள் அடித்துக் கொண்டு பதினாலு வருட காலம் பகையாளிகளாப் போனதை உருக்கமாக நான் எழுதினால் அதற்கு இப்படி ஒரு நிலையா? வெளியிட்ட சிறுபத்திரிக்கையும் தன் பங்குக்கு , இன்னாருடைய வாழைப்பழம் என்று தலைப்பை வைத்துத் தொலைய , பார்த்த என் மனைவி 'ஹதாப்புலெ!' என்று பதறினாள் ·போனில். கிண்டலடிக்கலாம் என்று பார்த்தால் என் மகள் கேட்டதைச் சொன்னாள் : 'வாப்பா ஏம்மா இப்படிலாம் அசிங்கமா எழுதுறாஹா?'. செருப்பால் அடித்த மாதிரி இருந்தது. அதற்கப்புறம் 'உங்க வாலப்பலம் பாத்தேன்' என்று யாராவது சொல்லி நமுட்டுச் சிரிப்பு சிரிக்கும் போதெல்லாம் பற்றிக்கொண்டுதான் வரும். இப்போதெல்லாம் எந்த விஷயத்தையும் நேராகத்தான் பார்க்கிறேனாக்கும்!
2. சில சொல்லுக்கு அதன் விளக்கம் அடைப்புக்குறிக்குள் இருக்க வேண்டும். உதாரணமாக அல்லாஹ்க்கு 'ஜல்', ரசூலுக்கு 'ஸல்'. ' அப்ப..கா·பிர்(கொல்)-ஆ? - ஒரு வாசகர். ரப்பில் ஆலமீனாய தம்புரானே... கூடாது. 4:89 , 9:5 , 47 :4 வசனங்களெல்லாம் போர்க்காலத்திற்காக. 'நகர்ந்து கொள் பையா; நாட்டைப் பிடிக்கப் போகிறேன்' என்று எந்தப் படையாவது சொல்லுமா? அரைகுறை 'அன்வர் ஷேக்' ஐப் படித்துவிட்டு அநியாயமாக பேசக் கூடாது. இண்டு இடுக்கெல்லாம் தோண்டும் 'இப்னு வரகா'வின் இழிமனதையும் புரிந்து கொள்வராக. கா·பிர் (கிள்). சரியா?. இதேபோல் அல்லாஹ்வுக்கும் ரசூலுக்கும் உவப்பான சஹாபாக்களுக்கு 'ரளி'. அவுலியாக்களுக்கு 'வலி'. மாற்றிப் போட்டால் மனசுக்கு பிடிக்கும் கிலி. அல்லது 'உம்மத்'ஆல் சிறகுகள் இழக்கும் உங்கள் 'கிளி'.
3. கதையை விட அருஞ்சொற்பொருள் பெரிதாக இருக்க வேண்டும். சபராளிகள் , அவர்கள் போன இடமெல்லாம் கடன்வாங்கிக் கலந்த 'தமிழுர்தரபிலாயார்ஸி' என்ற வினோத பாஷையில் பெருசாத்தான் வரும். கவலை வேண்டாம். இந்த 'ஹராம் = தடுக்கப்பட்டது' மட்டும் வேண்டாம். அது தெரியாத மனிதர்களே இல்லை. தெரிந்தும் செய்யாத மனிதர்களும் இல்லை. பொருளுக்கு பொழிப்புரை எழுதினால் அதுவும் ஒரு கதையாகிவிடும் என்பது கூடுதல் வசதி. நமது படைப்பு நம்மையறியாமலேயே உருவாகிறது என்பது இதைத்தான். 'கதை நாலு பக்கம் மட்டுமே இருக்க வேண்டும்' என்று ஒரு நாத்தம் புடிச்ச ·பார்முலா சொல்வார்கள் பத்திரிக்கைக்காரர்கள் . கேட்காதீர்கள். நாலே வரி! இதைவிட சிறப்பாக ஒரே வார்த்தையிலும் எழுதலாம். முற்றும்!
4. 'நூறு மஸ்லா' தேவையில்லை. ஏழெட்டு மசாலாவே போதும். துஆ, நிக்காஹ், ஈமான், சுன்னத், பாங்கு, ஹஜ், ரமலான், பிறை, தலாக்....அங்கங்கே 'படைச்சவனே...யா ரஹ்மானே...யா ரப்பே...யா காதர்வலி...யா ஜீலானி..' போன்ற முந்திரிப் பருப்பையும் தூவி சீசன் நேரத்தில் ஆயிரமாயிரம் கதைகள் சமைத்து , வணிகப் பத்திரிக்கைகளின் பசிக்கு கொடுத்து விடலாம். பிரசுரமாக, கோடீஸ்வர கோமாளிகளின் காலடியை நக்கி 'சரியான பதார்த்தம்' என்ற சர்டி·பிகேட் வாங்கத் தெரிய வேண்டும்.
புலவர் ஆபிதீன்காக்கா பற்றி 'கபர்' ஒன்று சொன்னார் கவிஞர் ஜபருல்லா.
'அல்லா பத்தி ஒரு பாட்டு எழுதுங்க பாய்' என்றாராம் ஒரு பணக்காரர். ஒரு ரூபாயும் கொடுத்திருக்கிறார். பணக்காரர்தான்.
'இருக்காண்டு எழுதுனுமா , இல்லைண்டா?' - புலவர்
'என்னாங்க இது !?'
'இல்லை....இது ஒங்க காசு. அது எதை சொல்லுதோ அதை எழுதுறதுதானெ மரியாதை!'
நீதி : எங்கே , யாருக்கு என்று தெரிந்து படைப்பதும் புத்திசாலித்தனம். சரியாகப் படைத்தால் பசி தீர்க்க இரண்டு ரூபாய் வெகுமதி உண்டு. இதை வாங்க புதுக் கைலியோடும் தொப்பியோடும் - 250 ரூபாய் செலவு செய்து - போவது அவசியம்.
5. எல்லா சமயத்தவருக்கும் பிடித்த , தொந்தரவில்லாத தளம் : a. ஐந்து தூண்கள் தாங்கும் வானம் (magical realism); b. கைக்கூலி ஒழிக! (வீடொன்று வேண்டும்); c. ஓ..மனித நேயமே..( உடுத்து ak47கைலி) .; d. 'ஜின்' கொண்டுவந்த bun (சிறுவர் இலக்கியம்) ; e. துன்பத்தை சகித்தால் இறைவன் உதவுவான் ; f. மௌத்துக்குப் பிறகு etc... கடைசி இரண்டு ப்ளாட்கள் நம் கதை வெளியானபிறகு உள்ள நம் நிலைமையைச் சொல்வதால் 'சுயகிண்டல்' என்ற வகையில் பாராட்டப்படும்.
6. மரியாதை என்று நினைத்துக் கொண்டு 'அல்லாஹ் சொன்னார்' என்றெல்லாம் எழுதக் கூடாது . என் நண்பர் ஒருவர் அவர் மச்சானை மச்சார் என்றுதான் சொல்வார். மரியாதையாம்!. 'ஹ, இறைவனா?!' என்று ஏளனம் செய்கிற 'விஞ்ஞான வெட்டியான்கள்' கொஞ்சம் நகருங்கள். 'அறிவிலிருந்து ஒரு சிறு பகுதிதான் (மனிதர்களுக்கு) கொடுக்கப்பட்டிருக்கிறது' என்ற ஆயத்-ஐ (இறை வசனம்) கவனிக்கச் சொல்கிறது 'இல்ஜாமுல் அவாம் அன் இல்மில்கலாம்'. அண்டத்தின் கணித ஒழுங்கை வியக்கும் ஐன்ஸ்டீனே ஆன்மீகத்திற்கு முக்கியம் கொடுக்கவில்லையா? அந்த மர்மத்தை விடுவோம். 'இல்லாதிருந்து இயங்கும்' ஏக இறைவனுக்கும் நமக்குமிடையே உள்ள தோழமையின் நெருக்கம் காட்ட 'அவன்' போடுவதுதான் அழகு. அதற்காக அல்லாஹ் தந்த அருமை ரசூலை 'அவன்' என்று சொல்வது அழுக்கு. 'நித்தந் திக்கை வணங்குந் துருக்கர்' என்று என் பாரதி முரசு கொட்டியதும் அழுக்குதான். நல்லவேளையாக 'யமபயங் கெடச் செய்பவன்' என்று 'அல்லா'வின் சரணத்தில் தப்பித்தது அவன் மீசை.
7. முஸ்லிம் பாஷை சொல்கிறோமென்று 'நம்பள்கி', 'நிம்பள்கி' என்றெல்லாம் பேச வைப்பதோ 'பாலிருக்கி..பழமிருக்கி' என்று பாடவைப்பதோ கதைக்-கி உதவாது. இதற்கு பாங்கு சொல்லிக் கொண்டிருக்கும்போதே தொழுவதை காட்டும் தமிழ்ப் படங்கள் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். முஸ்லீம் என்றாலே மூன்றடி துருக்கிக் குள்ளாயைத் தலையில் கவிழ்த்தும் முட்டாள் இயக்குனர்களின் பேட்டியையும்தான். குல்லாவுக்கு குஞ்சம் கிடைக்கவில்லையென்று குதிரையின் வாலை வைத்தான் ஒரு இயக்குனன்! இப்போதான் 'நதிக் கரையினிலே' என்று பொன்வண்ணனால் பொழுது விடிந்திருக்கிறது. சாரா அபூபக்கரின் அந்தக் கதையையும் சாக்கிரதையாக விமர்சிக்கிறது ( 'கத்தி மேல் நடக்கிறது..!') ஒரு பத்திரிக்கை. இன்னொருவன் 'தலாக்' செய்த பெண்ணை மறு கல்யாணம் செய்ய முடிவெடுத்த கிழவனைப் பார்த்து சாகக் கிடக்கும் அவன் மனைவி (No.1?) பார்க்கும் அந்த பார்வை...அடடா!.
பாஷை, இலக்கியத்தின் உயிர் நரம்பான வட்டார வழக்கில் இருப்பது கதைக்கு உயிர் தரும். 'யூனிவர்ஸல் எழுத்து'தான் உயர்வென்று ஓடாதீர்கள். மரைக்கானும் ராவுத்தனும் தக்னி(பட்டானி)யும் இந்த பிரபஞ்சத்தில் வசிக்கவில்லையா அல்லது வசிக்கக் கூடாதவர்களா ? கருமஞ்சாமியும் கருப்பாயியும் யூனிவர்ஸலாகும்போது கப்ப மரைக்கானும் கஜ்ஜாநாச்சியாவும் ஆக மாட்டார்களா என்ன? 'அவாள்' தமிழாகும்போது 'அஹ'வும் தமிழாக வேண்டும். இந்த காரணத்தினால் நான் என் கதைகளில் எங்கள் புலவர்கோட்டை (ரெட்டைக் கொம்பு 'க'!) பாஷையை தைரியமாக உபயோகப்படுத்துவேன். வாசகனை கஷ்டப்படுத்துவது சீரியஸான கதையின் லட்சணமுமாயிற்றே! '§க்ஷமம்' 'ராஹத்' ஆகும். 'இருக்கேன்' 'இக்கிரேன்'ஆகும். சமயத்தில் புலவர் கோட்டை புலவர்களுக்கே இவைகள் தெரியாமல் இருப்பதுதான் தமாஷ்!. அதனாலென்ன? ஊர் பெயரையெல்லாம் பார்க்காமல், ' பொட்டி ஒங்கடையா?' என்ற குரல் கேட்டதுமே 'பேஷ்! கோட்டை வந்துஹ்டுத்து...' என்று சரியாக எங்கள் ஊரில் இறங்கி விடுவார்கள் பக்தர்கள். பள்ளனுக்கும் பார்ப்பனுக்கும் பேதமேதும் பார்க்காத பாவாவின் ஊருக்கொரு பாஷை உண்டு. சமயத்தை , அதன் சங்கடங்கள் தாண்டி புரிந்து கொண்டால் விளங்கும் அது.
8. கதை, அவுலியா (இறைநேசர்)வின் கருணையைச் சொல்வதாக இருந்தால் 'சூ·பிஸம்' அல்லது 'இருபதிஸம்' பேசும் இதழ்களுக்கு அனுப்புக. 'மன் அற·ப ந·ப்ஸஹ¥, ·பக்கத் அற·ப றப்பஹ¥' என்று ஆரம்பிக்க வேண்டும். 'வசியத்து மாலை', 'முனாஜாத்து மாலை'யில் உள்ளவைகளையும் இடையில் கோர்க்கலாம். 'அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் திட்டினால் அவர்கள் அல்லாஹ்வை திட்டுவார்கள்' என்று 6:108 சொல்வதைக் கேட்காமல், கப்ர் (சமாதி) வணக்கத்தையும் 'காவிப்படை'யை கண்டனம் செய்வதாக இருந்தால் 'வஹாபிஸம்' அல்லது 'எட்டிஸம்' பேசும் இதழ்களுக்கு அனுப்ப வேண்டும் - 'யா அல்லாஹ்! எனது மண்ணறையை வணங்கப்படும் சிலைகள் போன்றதாக ஆக்கிவிடாதே' என்ற ரசூலின் பிரார்த்தனையுடன். 'அதெப்படி எல்லா மதமும் சமமாக முடியும்? 2+2 மட்டுமே 4 எனும் 'எட்டு'க்கு 1+3வும் 4ஆக முடியும் என்று விளக்க வேண்டாம். கணினிக்கே கண்முழி பிதுங்கிவிடும். 'எட்டு'க்கும் இலக்கியத்திற்கும் ஏணிவைத்தாலும் எட்டாதென்றாலும் சிந்திப்பவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களாதாலால் என்றாவது எட்டும் என்று நம்பலாம். இருபது ? அது 'ஒரு கடலோர கிராமத்தின் கதை' என்ற குண்டுமணி தன்னிடமிருந்துதான் கிடைத்தென்று பெருமை கூட பேசாதிரு(ப்)பது. வீரம் விளைவித்த 'மஹ்ஜபீன்'ஐ மறந்திருப்பது. கொதிக்க வைத்த குஜராத் கொடுமைக்குக் கூட குறட்டையொன்றையே கொடுத்தது.
நட்போடு இஸ்லாமிய மலர்கள் வெளியிடும் வேறு சமயத்தைச் சார்ந்த பத்திரிக்கைகளுக்கு கதை அனுப்புவதாக இருந்தால் நகம் வளர்ந்(த்)த அரசியலை நக்கல் செய்யாமல் 'புதுமையாக' எழுதவும். கதைச்சுருக்கம் (உதா.): மாடுகள் ஒற்றுமையாகத் திரிந்தபோது அந்த சிங்கத்தால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அல்லது ஒன்றுமே எழுதாமல் ஒரு வெள்ளைத் தாள். வெகுமதியுண்டு. எந்த வகை மலருக்கும் சமத்துவக் கதைகள் அனுப்புவதற்கென்றேயுள்ள சமர்த்துகளிடம் ஆலோசனையும் பெறலாம்.
9. ஏன் விமர்சிக்கிறீர்கள்? 'அப்டியே சாப்டுவோம்' மாதிரி 'அப்டியே நம்பு' என்று ஆண்டவன் சொல்லியிருக்கிறான். ஆதம் அலைஹிவஸ்ஸலாத்தின் வரலாற்றைக் கூட (carbon dating என்றால் என்ன?) நம்பி விடலாம் போலிருக்கிறது , ஒரு அ.இ.மு.வி.க தமிழரின் அதிசயக் 'கண்டுபிடிப்பு'! ஆதம் (அலை) பேசிய மொழி தமிழாம்! நரகம் பற்றிய பயமே இல்லையா இந்த பாய்க்கு? இந்த உலகத்தை விடவா நரகம் மோசமாக இருந்து விடப் போகிறது என்று நினைத்திருப்பார் போலிருக்கிறது. சரிதான்.. நரகமும் நாயன் படைத்ததுதானே..! தயைகூர்ந்து விமர்சனம் வைக்க வேண்டாம். 'தஸ்லிமா..' என்று லேசாக இழுத்தாலே 'நீ முஸ்லிமா?' என்று முதல் தாக்கு! அட விமர்சனம் கூட அல்ல, 'ருஷ்டி வேறு நல்ல கட்டுரைகளும் எழுதியிருக்கிறான்..' என்று ஒரு காம்பூர் ஜட்ஜ் சாதாரணமாக சொல்லப் போய் ஜட்ஜின் சொந்த ஊரான புலவர்கோட்டைக்கே நீதி சொல்ல விட்டான் ஒரு காம்பூரான். கையிலோ ஒரு கடப்பாறை. வேடிக்கை என்னவென்றால் ஜட்ஜ் அப்போது காம்பூரில் இருந்ததுதான்! கவிஞன் 'H.G.ர·பீக்'ஐயும் ('எச்சி.ர·பீக்'ண்டு போடு - ஏக இறைவனின் எழில் தொண்டர்) ஊர் விலக்கம் செய்தார்கள். ஏனோ தலையைப் புதைத்து கல்லால் அடிக்கவில்லை. எனவே , ஏழாவது நரகத்தின் வாசலில் நபி (ஸல்)ஐ அவன் அழவைத்தது போதனைகளை பொருட்படுத்தாமல் வாழ்ந்து நரகம் போன 'உம்மத்'துகளுக்காக என்று மறந்தும் வாதிட வேண்டாம். 'ஏனய்யா விமர்சிக்க மாட்டேன்கிறீர்கள்?' என்று பகுத்தறிந்த பாலகர்கள் கேட்பதற்கு (பிறை பார்ப்பதில் அடித்துக் கொள்வது தெரிந்திருக்குமோ?) பதிலும் சொல்லாதீர். பெரிது பெரிது உயிர் பெரிது. இதைக் காப்பாற்ற நாம் ஓடும் ஓட்டத்தில் பின் தங்கும் வாழ்வு சிறிது.
10. காட்சி சித்தரிப்பில் கூடுதல் துல்லியம் தேவை. உதாரணமாக கந்தூரியின் போது 'கூடு' வருகிறதென்றால் தேர், சப்பரம் போல இல்லாமல் இடையில் சுற்றும் அடுக்குகள் கொண்ட கூட்டின் அமைப்பு தாயிப் முற்றுகையின் போது உபயோகப்படுத்தப்பட்ட 'தப்பாபா'வின் மாதிரியென்று வாசகருக்கு அறிவூட்ட வேண்டும். கொடி வரும் கூட்டில் தடியும் குடிருக்குமா என்று வியப்பார் அவர். தடியில்லாமல் கொடியேது ஓய்!. 'தப்பாபா' , 10X10 சதுரங்கப் பலகையில் (Shatranj Al-Husun - Citadel Chess ) இருக்கும் போர் இயந்திரமென்று கூடுதலாகவும் சொல்வது கூடு விட்டு கூடு பாய்ந்து குமுறுபவர்களுக்கு குளிர்ச்சியும் தரும். அதற்காக ஒவ்வொரு கதையிலும் கந்தூரியைக் கொண்டாடவும் கூடாது. வேண்டுமானால் கந்தூரியின் பெயரை மாற்றிக் கொள்ளவும். பெரிய ஆண்டவர் கந்தூரிக்கு பதிலாக சின்ன ஆண்டவர் கந்தூரி. இரண்டும் சொல்லிவிட்டால் பக்கத்து ஊர் அவுலியாக்கள். இவர்கள் அடங்கிய ஊரில் ஏன் மதக் கலவரங்கள் அவ்வளவாக நடப்பதில்லை என்று கேள்வி எழுப்ப வேண்டும். இங்கே சூ·பிகளின் சிறப்பு அல்லது அவுலியாவின் 'காரணம் விளங்குறது'. அவுலியா, ஒரு வெற்றிலையை எடுத்துக் குதப்பி மலடிக்கு கொடுத்தார்; 'புதிய சத்திய சரித்திர வித்து ஒன்று சுத்த பத்திய கன்னி நிலத்தில் நித்திய ஜீவவேர் பாய்ச்சத் துவங்கிற்று'... அத்தோடு முடித்துக் கொள்ள வேண்டும். அவுலியா ஏன் தன்னைவைத்துப் பிழைக்கிற ஒரு வியாபாரக் கூட்டத்தை சந்ததியாக உண்டு பண்ணினார் என்று கேட்க வேண்டாம். வருகிற பதிலில் நாம் அவுலியாகி விடுவோம் அப்புறம்.
11. அரபுநாட்டுக்கு போன அப்துல் காதர்கள் , அரபிகள் அநியாயங்கள் செய்வதாக அளந்து விடுகிறார்கள் - 'கப்பலுக்குப் போகாத மச்சான்' கதையளப்பதைப்போல. இதைத் தவிர்க்க வேண்டும். 'எதுவும் நிரந்தரமல்ல' என்ற குவைத் பாடத்தை அரபிகள் இத்தனை சீக்கிரம் மறந்து செல்வத்தில் திளைக்கிறார்கள் திமிரோடு என்றால் திரியட்டுமே கொஞ்ச நாள். உலகின் எந்த இனமும் இவர்களைப் போல கொடூரமான சீதோஷ்ணமுள்ள நாட்டில் இருந்ததுண்டா?. அரபிகள் பட்ட சிரமத்திற்கு ஆண்டவன் கொடுத்த பரிசென்று எடுத்துக் கொள்ள வேண்டியதுதான். ஆனால் நிஜ அரபிகள் என்பவர்கள் உண்மையில் யார்? 'யஹ¥தி'கள் கூட அந்தப் போர்வையில் உலா வருகிறார்கள்...' என்று பாலைவனத்தில் முணுமுணுக்கும் பாவப்பட்ட 'பது'க்களின் சார்பாக அந்தக் கேள்வியை பதிவு செய்துவிட்டு, 'அரபி எந்த விலையுயர்ந்த பொருளானாலும் சரி, ஒருமுறை உபயோகித்து விட்டு தூக்கி வீசி எறிந்து விடுகிறானெ'ன்ற குற்றச்சாட்டையும் மறுக்கவும். அப்போதுதான் ஒரு விஷயத்தின் பல பக்கங்களையும் பார்க்கிறீர்கள் என்று அர்த்தம். மறுபக்கம்: அது அந்தக் காலம். அது தின்பண்டமானாலும் சரி பின் பண்டமானாலும் சரி அத்தனையும் ஆயிலையும் ஆயுளையும் வாங்க வந்த அமெரிக்க பிரிட்டிஸ் தந்திரம். அவர்களைபார்த்து அப்படியே காப்பி அடிக்கும் அரபிகளைப் புரிந்து விளையாடும் விளையாட்டு. ஒன்றைத் தூக்கி எறிய வைத்து நூறைக் கொட்டி உறிஞ்சும் கொடுமை. இதையெல்லாம் நாசூக்காக உங்கள் கதைகள் சுட்ட வேண்டும். சும்மாக்காச்சுக்கும் இங்கிருந்து அங்கும் அங்கிருந்து அங்கும் 'புர்ர்..' 'புர்ர்..'ரென்று ராணுவ வண்டிகள் ஓட்டும் அரபு வீராதி வீரர்களுக்கு , 100 கிராம் சோற்றுக்கு 200 கிராம் முந்திரி போடச் சொல்வது வீரத்தை வளர்க்கவா? இந்த இக்கனூண்டு ராணுவத்திற்கு தேவைப்படும் ஒரு Tankகிற்கு நூறு Tank அனுப்பி அதையும் அடுத்த வருடம் Scrap கம்பெனிகளுக்கு ஏலம் விட்டு இடம்பெயர்க்கும்போது ரொம்பப் படித்த அரபிகள் 'சுக்ரன் வ ஜஜீலன்' சொல்வதற்கல்லவா? அய்வா...! புது விதமாக பார்க்கிறீர்கள்; வல்லரசுகளையும் விளாசுகிறீர்கள்! 'ஹ¥க்கூமத்'-ன் 'ஹிக்மத்'ஐ சொல்லும்போதே 'ஈச்சை மரத்து இன்பச் சோலை'யில் சட்டி கழுவுவதற்காக சட்டியின் உள்ளே இறக்கப்பட்டவனையும் சொல்லுங்கள். நாலுமாதமாக சம்பளம் கொடுக்காத அரபி அவனை வெளியிலேயே எடுக்கவில்லையாமே.... அப்படியே தீ வைத்து விட்டானா? விசாரியுங்கள். 'தண்ணீரில் மீன் அழுதால் கண்ணீரை யார் அறிவார்?' என்று கதறுவார் ஒரு பாகவி. பிரச்சனையின் கொடூரம் சொல்லி உயிரை அறுக்கும் 'Garshom' போன்ற படங்களையும் (கதை, இயக்கம்: P.T.குஞ்சுமுஹம்மது) பார்க்கவும். அரபு நாட்டிலிருந்து ஒரேயடியாகத் திரும்பும் சபராளிக்கு ஆறுதலாக இருக்கும் தாயார், மனைவி, பிள்ளைகள் பாத்திரங்களைப் படைப்பதற்கு மட்டும் யோசனை செய்யுங்கள். உண்மையா அது?
12. நவீன இலக்கியத்தில் சமையல் குறிப்பும் இடம் பெற வேண்டியது அவசியமாதலால், ஒரு இஸ்லாமிய பதார்த்தம் செய்வது எப்படி என்பதை விளக்கலாம். இங்கே உதாரணத்திற்கு வட்டலப்பம். 16 முட்டையை உடைத்து கலக்கி ஒரு பாத்திரத்தில் ஊற்றி , சீனி 400 கிராம் + ஒரு சிட்டிகை உப்பு சேர்க்க. இத்துடன் பிஸ்தா 100 கிராம் ,முந்திரி 100 கிராம் ( கெட்டியாக வேண்டுமானால் தோலெடுத்த பாதம் 100 கிராம் சேர்த்துக் கொள்ளலாம்) மாவு போல - தண்ணீர் சேர்த்து - அரைத்து இத்துடன் இடைச்சி மார்க் (condensed sweet milk) பாலையும் சேர்த்து எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு கலக்கவும். வாசத்திற்கு வெண்ணிலா essense (முட்டை கவுச்சியை நீக்குவதற்காக) சேர்க்கலாம் . இதைஅலுமினிய ·பாயில்-ல் மூடிய சட்டியில் வைத்து - இட்லியை வேக வைப்பது போல - steam செய்யவும். 20-25 நிமிடம் வரை போதும். வட்டலப்பம் ரெடி. என்ன ருசி! அடுத்த கதைக்கான வேறு பதார்த்தம் (போனவம், ஓட்டுமாவு etc) தெரியவில்லையென்றால் இதே வட்டலப்பத்தையே முட்டைகளின் எண்ணிக்கையை மாற்றிக் கொண்டு சொல்ல வேண்டும்.
13. பொருத்தமான இடத்தில் அண்ணல் நபியின் அமுதமொழிகளை இணைக்கவும். 'இரு தாடைகளுக்கும் தொடைகளுக்கும் இடையில் உள்ளதை பேணிக் கொள்ளுங்கள்' என்ற ஹதீஸ்-ஐ , உணர்ச்சிகள் நம் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்று சொல்ல வேண்டிய இடத்தில் சொல்ல வேண்டும். உலகின் பிரச்சனைகள் அனைத்துமே கட்டுமீறுவதால்தானே வருகிறது. ஆனால் அந்த ஹதீஸை வட்டி வாங்குவது பற்றி நாம் வாங்குவாங்கென்று வாங்கும் இடத்தில் சேர்த்தால்! ஷைத்தானின் தூண்டுதல்தான் இதற்கு காரணம். ஷைத்தான் இவ்வளவு தூரம் வெற்றி பெறுவதற்கு உதவுகிற இறைவனை விமர்சிக்க வேண்டாம். குறிப்பு எண் 9 இடிக்கும். பிரச்சனைக்கு காரணமாக நாவை சொன்ன நபிகளார் போலவே நடிகனும் சொன்னான் ஒரு படத்தில் : 'நா·ப்ஸே ஊப்பர் நா·ப்ஸே நீச்சே!'. தொப்புளுக்கு மேலும் கீழும் உள்ளதால்தான் தொந்தரவாம். அண்ணலா அவன்? இல்லை. அஜ்னபி. 'அஜ்னபி 'க்கு என்னா அர்த்தம்?' என்று ஒரு ஆச்சிமாவை கேட்டேன். 'அஹ ஒரு நபி வாப்பா!' என்று அவர்கள் அற்புதமாக விளக்கம் கொடுத்தார்கள்!
14. கஜல் & கவாலிகளை இடையே சேர்க்கலாம் - மொழிபெயர்க்காமல் (பெயர்த்தால் வியர்த்து விடுமே!). இயன்றால் தப்லா அல்லது கைத்தட்டுடன்.
'பலட் பலட் பலட் தேரா த்யான் கிதர் ஹை
ஸோச் தேரா அஸ்லி மகான் கிதர் ஹை..!'
இது ஒரு 'effect' கொடுக்கும்! . இம்மைதாசனின் 'இசையும் இறைவனும்' கட்டுரை படித்தும்கூட 'இசைக்கு இசையுமா இஸ்லாம்?' என்று தாடியை தடவிக்கொண்டிருந்தால் இந்த ஜென்மத்தில் இலக்கியம் படைக்க முடியாது. அரேபிய சேனல்களில் வராத ஆட்டம் பாட்டமா? 'ஆத்மசுகம் தரும் அற்புத இசையே ஆண்டவன்தான்' என்ற வரியை சேர்த்துக் கொள்ளவும். கு·ப்ர்? 'இந்த இறை வசனத்திற்கு இது மட்டுமே அர்த்தமென்று அறுதியிட்டு உறுதியாகச் சொல்வது மட்டும் 'கு·ப்ர்' இல்லையா? இறைவனுக்கும் எனக்கும் இடையில் இவர்கள் யார்?' என்று தைரியமாக எழுதுங்கள். அப்புறம் ஜமாஅத்-ன் காலில் விழுந்து வாபஸ் பெற்றுக் கொள்ளலாம். மனதுக்கு கஷ்டம்தான்...குலாம் அலியை குர்பானி போட்டுவிட்டு பிஸ்மில்லாகானை 'பிஸ்மி' சொல்லி அறுத்து விட்டு உள்ளமுருக வைக்கும் 'Oud'ஐ உடைத்துப் போட்டுவிட்டு பிரமாதமாக சுவனத்துப் பூங்காவில் என்ன சாதித்து விடப் போகிறோம்? பெருநாள் போன்ற விஷேச தினங்களில் குறைவான வாத்தியம் கொண்டு இசைத்ததை நாயகமே தடுத்ததில்லை. கவிதை பற்றி கருத்து சொல்லும்போது , 'மூ·மினாவன் தன் நாவைக்கொண்டும் போரிடுகிறான்' என்று அவர்கள் சொல்லியிருப்பதை இசைக்கும் எடுத்துக் கொள்ளலாம். கலாச்சாரங்களை இணைக்கும் பாலமாக இசை இருக்கும் என்று நாம் நினைத்தால் கழுத்து நரம்பு அறுபடுவது போல காசூர் கலி·புல்லா பாடுவது அதற்கல்லவாம்!
'நாயனிடம் கையேந்துங்கள் - அவன்
'நஹீ' என்று சொல்லுவதில்லை!'
15. நகைச்சுவை! இது இல்லாமல் தமிழ் இலக்கிய நிலமே பாளம் பாளமாய் வெடித்துபோய் கிடக்கிறது. மழை மனது வைத்தாலல்லவா சேமிப்புத் தொட்டிகள் சிறக்கும்? நல்லா நல்லா சொன்ன முல்லாவை படைத்த வானத்திலோ துளியூண்டு கூட அதன் அறிகுறிகளே இல்லை. முஸ்லீம்கள் முசுடுகளா?! இஸ்லாமியக் கலைக் களஞ்சியம் நீங்கள் பார்க்கவில்லை போலும். செவியின்பத்தை சேதப்படுத்தவே பிறப்பெடுத்த செல்ல முஅத்தின் , சொல்லத் தெரியாமல் பாங்கு சொன்னதைக் கேட்டு , மதம் மாற வந்த கிருத்துவர் ஓடியே போய் விடுவார் அதில் - ஜென்மத்துக்கும் இந்த கொடுமை வேண்டாமென்று! உண்மையை தமாஷாக சொல்ல முடியுமென்றாலும் தமாஷ¥க்கு சொல்வதெல்லாம் உண்மையாகி விடாது. பாங்கோசை கேட்ட சிலிர்ப்பில் 'அபூர்வ மன எழுச்சியடைந்து' மதம் மாறியவர்கள் இல்லையா, என்ன? அப்போதுள்ள பெரியவர்கள், பலவீனனன்தானே பயப்படுவானென்று சாதாரணமாகவே எடுத்துக் கொண்டார்கள். 'தாப்பா திறக்கிற பாப்பா'வை உற்சாகப்படுத்தவும் செய்தார்கள். இப்போது அப்படியெல்லாம் முடியாது. எண்ணிவிடுவார்கள் எலும்பை. இதையும் மீறி 'முட்டியாப்பா' குறுநாவலில் 'பலூன்' காட்டி சிரிக்க வைத்தார் பாக்கர் சாபு . ஆனால் நகைச்சுவை, நாசூக்காக இருக்க வேண்டும். உதாரணமாக என் உம்மாவுக்கு மிகவும் பிடிக்குமென்று விலை உயர்ந்த முந்திரி பகோடா வாங்கி வந்தேன் நாசப்பட்டினத்திலிருந்து. சுமா செட்டியார் கடை ரொம்ப ·பேமஸ். முழுசு முழுசாக முந்திரிப் பருப்பு... பாக்கெட்டைப் பிரித்துப் பார்த்தால் பகோடாவில் முந்திரிப் பருப்பையே காணோம். 'நாசமத்துபோவான்... அரைச்சிப் போட்டுட்டான் போலக்கிது!' என்றார்கள் உம்மா. 'நாசமத்து போவான்..!' என்ற திட்டே சிரிப்புதான். 'நாசமுற்று' என்று நினைத்துக்கொண்டு சொல்கிறார்கள். ஆனால் நாசம் அற்று விடுகிறது! என்னை உம்மா இப்படி திட்டும்போதெல்லாம் 'இன்னும் திட்டுமா..!' என்று நான் சொல்வது வழக்கம். அப்போது மட்டும் உம்மா 'கிருத்துவம் புடிச்ச மூதேவி' என்று சரியாக என்னைத் திட்டுவார்கள். 'மூதேவி' எந்த மதத்தைச் சார்ந்தவன் என்பது இருக்கட்டும், 'கிருத்துவம்' என்றால் இவர்களுக்கு 'பேய் பிடித்த' என்று அர்த்தம். கவனமான மொழிபெயர்ப்பு. அப்போ கிருத்துவர்கள் எப்படி திட்டுவார்கள்? 'முஸ்லீம் புடிச்சவன்' என்றா? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று பிடிக்கிறது...
16. மேற்சொன்ன குறிப்புகள் படி எழுதுவது சிரமமாக இருந்தால் எழுதி வைத்திருக்கிற உயிர் நண்பனிடமிருந்து அவன் அனுமதியில்லாமல் எடுத்து உங்கள் பெயரைப் போட்டு பிரபல பத்திரிக்கைக்கு அனுப்பவும். பரிசும் , உணர்வுபூர்வமான ஒற்றுமையுடன் சமரசம் விரும்பும் இஸ்லாமிய இதழ்களில் பேட்டியும் நிச்சயம். போஸ்ட்மாடர்னிஸ்டாக பூவுலகில் வலம் வரலாம்.
வாழ்த்துக்கள்!
அருஞ்சொற்பொருள்
இபுலீஸ் - ஷைத்தான்
தனுவு (dhanuvu) - வலிமை
ஹக் (haq) - பேருண்மை , சத்தியம்
நூதனமா - புதுமையாக
பதுவுஸா - மென்மையாக
'ஹதாப்புலெ' - 'ஆ!' என்று அதிர்ச்சியாக சொல்வது (அதாபு - தொந்தரவு)
திராவியா - நோன்பு கால விசேஷ தொழுகை
தப்ருக் - பிரார்த்தனைக்குப் பின் பகிர்ந்தளிக்கப்படும் இனிப்பு
உம்மத் - 'உம்மி நபி'யைப் பின்பற்றுவோர் . உம்மி நபி - எழுதப் படிக்கத் தெரியாத நபி (ஸல்)
சபராளி - சம்பாதிக்க வெளிநாடு செல்பவர் (ச·பர் - பிரயாணம்)
கபர் - செய்தி
'இல்ஜாமுல் அவாம் அன் இல்மில்கலாம்' - இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்களின் நூல்களில் ஒன்று
'மன் அற·ப ந·ப்ஸஹ¥, ·பக்கத் அற·ப றப்பஹ¥' - தன்னை அறிந்தவன் இறைவனை அறிவான்
வசியத்து மாலை, முனாஜாத்து மாலை - தமிழ் றாத்திபுகள் [றாத்திபு : கூட்டாக 'திக்ர்' செய்தல் (திக்ர் - இறை நாமங்களை ஜெபித்தல்)]
நூறு மஸ்லா - இஸ்லாமியக் கதை வடிவங்களுள் ஒன்று
'எட்டு' - திராவியா தொழுகை, 8 'ரக்-அத்'தாகத்தான் இருக்க வேண்டுமென்று சொல்லும் (நஜாத்) பிரிவினர்
ராஹத் - நிம்மதி , நலம்
ஆதம் (அலை) - (இஸ்லாமிய நம்பிக்கைப் படி) உலகின் முதல் மனிதர்/நபி
'காரணம் விளங்குறது' - கராமத் (அற்புதம்) வெளிப்படல்
யஹ¥தி - யூதர்
பது (badhu) - பூர்வீக அரபிக்குடி
'சுக்ரன் வ ஜஜீலன்' - மிகவும் நன்றி
'அய்வா' - வியப்பாக, பாராட்டாக 'ஆஹா..அதேதான்!' என்று சொல்வது
'ஹ¥க்கூமத்'-ன் 'ஹிக்மத்' - அரசாங்கத்தின் தில்லுமுல்லுகள்
நாயகம் - முஹம்மது நபி (ஸல்)
அஜ்னபி - (ஊருக்குப்) புதியவர்
கு·ப்ர் - ஓரிறையை மறுத்தல்
மூ·மின் - இறை நம்பிக்கை கொண்டவன்
- பதிவுகள் ஜனவரி 2004
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
http://abedheen.blogspot.ca/