- பதிவுகள் மே 2002 மற்றும் ஜூன் 2002 இதழ்களில் 'காலம் இதழ் 15'இல் வெளியான வேதசகாயகுமாரின் 'ஈழத்துச் சிறுகதைகள்' பற்றிய விமரிசனக் கட்டுரைக்குப் பதிலாக எழுத்தாளர் தேவகாந்தன் 'சம்பூர்ண நிராகரணம்' என்னுமொரு கட்டுரையினை எழுதியிருந்தார். அதற்கு ஜெயமோகன், ஜீவன் கந்தையா, வ.ந.கிரிதரன், டி.செ.தமிழன் ஆகியோர் எதிர்வினையாற்றியிருந்தனர். மேற்படி கட்டுரையும் எதிர்வினைகளும் ஒரு பதிவுக்காக இங்கு மீள்பிரசுரமாகின்றன. - பதிவுகள் -
சம்பூர்ண நிராகரணம்: ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை மதிப்பீடு பற்றிய வேதசகாயகுமாரின் கட்டுரை குறித்தான விசாரணை!
- தேவகாந்தன் -
பகுதி 1:
1) காலம் இதழ் 15இல் வெளியான எம்.வேதசகாயகுமாரின் 'ஈழத் தமிழ்ச் சிறுகதை' பற்றிய கட்டுரை எனக்கு 2001 மார்கழியிலேயே வாசிக்கக் கிடைத்து விட்டது. அதன் மறு வாசிப்பு சிந்தனைகளுக்கும், அவசியமான தொகுப்புகளினதும், விமர்சனக் கட்டுரைகளின் மீள் வாசிப்பு யோசனைகளுக்குமாக இத்தனை கால விரயம் அவசியமாயிற்று. இப்போது ஒட்டு மொத்தமாக எல்லாவற்றையும் ஒருங்கே வைத்துப் பார்க்கிறபோது ஒன்று துலக்கமாகத் தெரிகிறது. கிடைத்த தொகுப்புகளையும், சொல்லப்பட்ட தகவல்களையும் மட்டும் வைத்துக் கொண்டு ஒட்டுமொத்தமான ஈழத் தமிழ்ச் சிறுகதைகள் பற்றிய மதிப்பீட்டுக்கு யாரும் வந்துவிடக் கூடாது என்பதே அது. அது ஈழத் தமிழ்ப் பரப்புக்குச் செய்யும் சகாயமாக நிச்சயமாக இருக்கவே இருக்க முடியாது. முன் முடிவுகளை நோக்கிய வாசிப்பு, ஆய்வுமுறைச் செலுத்துகைகள் அறிவுலகத் துரோகமாகவே கணிக்கப் படும். தான் பயிலாத கவசதாரியான துரியோதனன் யுத்த களத்தில் பட்ட அவஸ்தையும், அவமானமும் பற்றி வியாசர் அழகாக எழுதியிருப்பார். கருத்தளவிலும் கவசதாரிகள் இருக்கிறார்கள். உண்மையான ஈழ நிலமைகளை தெரியாமலும் சொல்லப்பட்ட தகவல்களின் அடிப்படையிலும் முடிவுகளைச் சென்றடைவது ஈழ இலக்கியத்துக்கு அபகாரமே செய்யும். உண்மையில் ஈழத் தமிழ்ச் சிறுகதைகள் பற்றிய இது மாதிரியான ஒரு நீண்ட கட்டுரை, பெரிய உபகாரமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் எம்.வேதசகாயகுமாரின் கட்டுரை அவ்வாறு அமையவில்லையென்பதைக் குறிப்பிட்டேயாக வேண்டியிருக்கிறது. ஓர் இந்தியத் தமிழ் வாசகனின் பார்வையூடாகக் கூடவா ஆய்வு முடிவுகளை வெளியிடக்கூடாதாவென்றால் அப்போதும் ஆம் தான் பதில். அது வாசகன் வேலையல்ல.ஆய்வாளன் வேலை. தகவல்களையெல்லாம் எடுக்கக் கூடிய தளத்திலிருந்துகொண்டு செய்யப் பட வேண்டியது. ஒரு பேச்சுக்காக வாசகனுக்கு அந்த உரிமையை ஒப்புக் கொண்டாலும், அப்போதும் அந்த வாசகனுக்கு ஈழத்து வரலாற்று, சமூக, அரசியல், மரபுப் பின்புலங்களில் போதுமான அறிவை அவசியமாக்குகிற விதி இருக்க வெண்டும்.
2) மார்க்ஸியத்தின் காலம் முடிந்து விட்டது, அதன் சித்தாந்த பலத்தில் வியாப்தி பெற்ற விமர்சன முறைமைகளும் காலாவதியாகிவிட்டன. திருவாளர்கள் கைலாசபதியும் வானமாமலையும் சிதம்பர ரகுநாதனும் கேசவனும் என்று அந்த வட்டத்தைச் சார்ந்த விமர்சகர்களும் ஆய்வாளர்களும் காமாகியும் விட்டார்கள். இனி மார்க்ஸிய இலகியமாவது விமர்சனமுறையாவது என்று வரிந்து கட்டிக் கொண்டு சிலர் வெளிக்கிட்டிருக்கிறார்கள். அவர்களோடு பத்தோடு பதினொன்றாக வேதசகாயகுமாரும் இப்போது. இவர்கள் சொல்வது போலவே கூட இருக்கட்டும். எனக்கொன்றுமில்லை. ஆனால் இந்தத் தளத்தில் வைத்து சில படைப்பாளிகளை ஓரங்கட்டியதைக் கூட இல்லை நிராகரண்யமே செய்து விட்டிருப்பதைத்தான் என்னால் ஒப்புக்கொள்ள முடியாமல் இருக்கிறது. என் அக்கறையுள்ள களம் இது. இது குறித்ததான தம் அதிருபதிகளை கட்டுரை, கடிதம் மூலம் யாரும் இதுவரை பதிவு செய்ததாகவும் தெரியவில்லை. இந்த நிலையில் இங்கே நான் பேசவே வேண்டும்.
3) ஈழத் தமிழ்ச் சிறுகதை மரபு குறித்திந்தியத் தமிழ் வாசகனின் புரிதல் போதாமைகளையும் இடைவெளிகளையும் கொண்டது என்ற ஒப்புமூலத்துடனேயே தன் ஆய்வை வேதசகாயகுமார் தொடக்கியிருந்தாலும் இப்படியான ஆய்வுடான அடைதல்கள் இயல்பிலும் இலகுவிலும் சந்தேகப்படும்படி ஆகி விடுகின்றன. சந்தேகத்தின் பலன் மாற்றணியினருக்கே சாதகமாவதுதான் நியதி. இன்னுமொன்று. வேதசகாயகுமாரின் இந்த நீண்ட கட்டுரை கலாநிதிகள் கைலாசபதி, சிவத்தம்பி ஆகியோரின் விமர்சனமுறைமையிலுள்ள நேரிமைகளைச் சொல்வதை விடவும், ஏதோ சிலருக்குச் சில அநியாயங்கள் விளைந்து விட்டது போன்ற புலம்பலாக வந்திருப்பதுதான் ஆச்சர்யமாக இருக்கின்றது. இம்மாதிரியான விளக்கப் போதாமைகளோடு முன்வைக்கப்படும் முடிவுகள் பர்ந்து பட்ட தமிழ் வாசகனிடத்தில் ஈழத் தமிழ்ச் சிறுகதைகள் பற்றி, பொதுவாக ஈழத் தமிழிலக்கியம்பற்றி, தவறான அபிப்பிராயங்களை உருவாக்கி விடக் கூடாது என்பதற்காக சில விடயங்களை இங்கே விபரிப்பதே எனது நோக்கம். இதன் மூலம் சிலர் சம்பூர்ண நிராகரனம் செய்யப் பட்டிருப்பதையும் நான் மறுக்கிறேன். வரலாறு, சமூகம், அரசியல் பின்புலங்களில் இந்த விசாரிப்பைத் தொடங்கலாமென்பது என் எண்ணம். இது தேசிய இலக்கியம் மண்வாசனை போன்ற பிற கோஷங்களுக்கான பதிலாகவும் அமையும்.
பகுதி 2
4) 1931-40ல் காலகட்டத்திலேயே தேசிய இலக்கியம் அரும்பிவிட்டதென்பார் கனக்.செந்திநாதன் தனது 'ஈழத்து இலக்கிய வளர்ச்சி' என்கிற நூலில். இப்படி தசாப்தங்களாகப் பிரித்துப் பார்ப்பது ஒரு வசதிக்கான முறைமைதானே தவிர வேறில்லை. அதன்படி இந்த நாலாம் தசாப்தத்தில்தான் இலங்கையின் தேசிய இலக்கியம் அரும்பவே தொடங்குகிறது என்றாகிறது. தேசிய அரசியலின் விழிப்புணர்வுடனேயே தேசிய இலக்கிய விழிப்புனர்வும் சாத்தியம். இலங்கை சுதந்திரம் அடைந்திராத அக்காலத்தில் சுதந்திரத்துக்கான ஏக்கமோ போராட்டமோ இல்லாதிருந்த வேளையில் தமிழகம் தாய் நாடாகவும் இலங்கை சேய் நாடாகவுமான பாவனையொன்று படித்தோர் இலக்கியவாதிகள் மத்தியில் கூட ஆழமாக வேரூன்றியிருந்த நிலபரத்தில் தேசிய இலக்கியமென்ற கருத்துருவாக்கம் அரசியற்பாங்கானதுதான் முதலில்.
படைப்பு நிலை எவ்வளவுதான் விடுதலைத் தளத்தில் நிக்ழ்வதாய் இருந்தாலும் தேசிய இலக்கியமென்ற கோஷத்தில் முதலில் இலக்கியம் தானுண்டு. தேசிய ஈழத் தமிழ் இலக்கியமாகவும் அது தமிழிலக்கியமாகவும் பின் அதுவே உலக இலக்கியமாகவும் பரிணாமம் அடைய முடியும்.ஆனாலும்..தேசிய இலக்கியமென்று வந்து விட்டால் அதன் நோக்கே முதலில் அரசியல்தான். இதை விளக்கமாகச் சொன்னால் தேசிய இலக்கியமென்ற அடையாளமுள்ள ஈழத் தமிழிலக்கியம் உருவாவதன் முன்னர் அதற்கும் மூலமான இது ஈழத் தமிழிலக்கியம், இது இந்தியத் தமிழிலக்கியம் என்ற பிரிகோடற்று ஏகத் தமிழ்ப் பரப்பாய் இருந்த சூழ்நிலைமையில் தனித்தனி இலக்கியத்தின் மீது வெளிச்சமே அப்போதுதான் அடிக்க ஆரம்பிக்கின்றது. இந்தச் சூழ்நிலைமையை மிக அழகாகவே சொல்வார் ஏ.ஜே.கனகரட்னா. இங்கிலாந்து இலக்கியத்தையும் அமெரிக்க இலக்கியத்தையும் குறித்து பிலிப் ரார் எழுதிய 'அமெரிக்க இலக்கியம்' என்ற நூல் பற்றிப் பேசும்போது 'அமெரிக்க இலக்கியத்துக்குத் தனித் தன்மைகள் இருப்பது போன்று ஈழத் தமிழ் இலக்கியத்துக்குத் தனித் தன்மைகள் இல்லையென்பதே உண்மை. வருங்காலத்திலே ஈழத் தமிழ் இலக்கியம் தனித் தன்மைகள் வாய்ந்ததாக அமையுமென்பதும் ஐயம்' என்கிறார். ஈழத் தம் இலக்கியம் அப்போதிருந்த நிலைமையை அனுமானிக்க இது போதும். இருந்தாலும் இன்னொரு உதாரணம். ஈழத்திலே தேசிய இலக்கியப் பிரச்னை தோன்றிய போது தேசிய இலக்கியமென்ற ஒன்றே இருக்கவில்லையென சிலர் சொன்ன அபிப்பிராயத்தை அப்படியே ஏற்றுப் பல இடங்களிலும் சொல்லியிருக்கிறார் ஏ.ஜே.க. இவ்வாறிருந்தது அன்றைய ஈழத் தமிழிலக்கியத்தின் நிலைமை.
இந்த நிலை¨மாயைத் தாண்டித்தான் ஈழத் தேசிய இலக்கிய உணர்வு அரும்புகிறது. கனகசெந்திநாதன் குறிப்பிட்டபடி தேசிய இலக்கியத்தின் அரும்பல் 31-40க் காலகட்டம் கடந்து ஏற்பட்டிருக்குமோ என்ற் கூட ஐயுற வேண்டியுள்ளது. அந்த அரும்பல் காலந்தாழ்த்தி ஏற்பட்டிருப்பதும் சாத்தியம்தான்.
அடுத்த காலகட்டம் 41-50. இதை மறுமலர்ச்சிக் காலமென்பார் செந்திநாதன். இதையும் சமூக நிலை சார்ந்த கணிப்பாகவே கொள்ளவேண்டும். இம்மறுமலர்ச்சி கூட தமிழக நிலைமைகளின் பிரதிபலிப்பேயாகும். இக்காலத்தில் இலங்கையர்கோன், சி.வைத்திலிங்கம், சோ.சிவபாதசுந்தரம், சம்பந்தன் போன்றோரின் எழுத்துக்கள் தோன்றுகின்றன. எழுத்திலும் நடையிலும் சில மாற்றங்களை இக்காலகட்டத்திலே அவதானிக்கக் கூடியதாய் இருந்தது. எனினும் ஈழத் தமிழிலக்கியம் இன்னும் தமிழகப் பட்டதாய், பண்டிதர்களின் ஆதிக்கம் சார்ந்ததாயே இருக்கிறதென்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். ஆயினும் எழுத்தாண்மை மிக்க புதுமைப்பித்தனது படைப்புகள் போலுமோ, அதற்கு முந்திய பாரதியின் ஆக்கங்கள் போலுமோ தோன்றவில்லையென்பது முக்கியமாய் கவனிக்கப் படவேண்டியது. கல்கி, குமுதம் வகை எழுத்தினை மோசமாகப் பின்பற்றியவர்களே உருவாகினார்கள்.
உருப்படியான மாற்றமெதுவும் நிகழ்ந்ததெனில் அது அடுத்த பத்தில் தான் நிகழ்ந்தது. அந்தப் பத்தில் புள்ளியாய் விழுந்த வருஷம் 1956. இதுவரை காலத்தில் அரசியல் சமூகத் தளங்களில் மார்க்ஸிய சித்தாந்தத்தின் தாக்கம் பலமாகவே இருந்தது. தென்னிலங்கையில் மற்றுமில்லை. வடவிலங்கையிலும் அது அளப்பரிய வளர்ச்சி அடைந்திருந்தது. இதுகூட தமிழக அல்லது இந்திய சமூக அரசியலின் பாதிப்பில் அதே மாதிரியில் நிகழ்ந்திருந்ததை நாம் கவனிக்க வேண்டும். சுபாஷ் சந்திரபோசும், காந்தியும், நேருவுமே ஈழத் தமிழரின் அரசியற் தலைவர்களாக இருந்த விசித்திரத்தை இது புரிவிக்கும். இந்த நிலைமையில்தான் 1956 வந்தது. தனிச் சிங்களச் சட்டம் நிறைவேற்றப் படுகிறது. வெளிநாட்டு எண்ணெய்க் கொம்பனிகள் , பிரிட்டிஷார் வசமிருந்த திருகோணமலைத் துறைமுகம் யாவும் தேசிய மயமாக்கப் படுகின்றன. அரசியல் சமூகம் யாவும் பெரும் மாற்றத்துக்கு உள்ளாகின்றன. ஒரு பக்கத்தில் ஜன நாயகத்துக்குப் புறம்பாய் தமிழ்ச் தேசிய இனத்தை நசுக்கும் சட்டவாக்கம். மறுபக்கத்தில் ஆதிபத்தியமுள்ள ஒரு சுதந்திர நாடாய் இலங்கையைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகள். தனிச் சிங்கள சட்டத்தால் தமிழினம் நடுங்கிப் போயிற்று. அதன் அடியந்தமான நிலைபேற்றுணர்வு அப்போது கேள்விக்குள்ளானது. தமிழினத்தின் நீடுபெருந்துயில் கலைந்தது. அதை மெளனப்புரட்சியென்பார் செந்தி. -
- பதிவுகள் மே 2002; இதழ் 29
சம்பூர்ண நிராகரணம்: ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை மதிப்பீடு பற்றிய வேதசகாயகுமாரின் கட்டுரை குறித்தான விசாரணை!
- தேவகாந்தன் -
இறுதிப் பகுதி
இந்தக் காலம்வரையும் இலங்கைப் பத்திரிகைகளில் இந்திய எழுத்தாளர்களே எழுதினார்கள். அதுவும் மோசமான எழுத்துக்கு உதாரணமாய்ச் சொல்லப்படக் கூடியவர்கள் எழுதினார்கள். நமது எழுத்தாளர்கள் கூட கல்கி, குமுதம் வகை எழுத்துக்களையே எழுதிவிட்டு பெருமையும் அடைந்து கொண்டார்கள். 1956 வந்ததும் ஏற்பட்ட மாற்றத்தால் ஒரு புதிய வட்டம் எழுத்துத் துறைக்குட் பிரவேசித்தது. அவர்களாலும்தான் இலக்கியரீதியான அடையாளத்தை தாபிக்க முடியவில்லை. காரணம் வெளிப்படையானது. 'கார், பங்களா, உத்தியோகம்' என்று துரைத்தனக் கனவுகளோடு வெளிவந்த பேர்வழிகள்தான் இவர்கள் ('ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி - மு.த.பக்.33).
இந்த அவர்களோடு அ.முத்துலிங்கத்தையும் உள்ளடக்குவார் மு.த. (7) இந்த பொருளாதார , அரசியல் மாற்றங்களின் அடியாக முகிழ்ந்தெடுத்ததுதான் முற்போக்கு இலக்கிய இயக்கம். அதுதான் மண்வாசனை பற்றி பேசியது. அதுதான் தேசிய இலக்கியத்தைப் பேசியது. இது கண்டு யாழ்ப்பாணத்து சைவ வேளாளர் இலக்கிய உலகம் கொதித்தெழுந்தது. மக்களின் பேச்சு மொழியைக் கையாண்டு அவர்களின் வாழ் நிலைமைகளைப் பற்றிப் பேசிய படைப்புகளை இழிசனர் இலக்கியமென்று இகழ்ந்தது. இந்தப் பிற்போக்குப் புலத்தின் பலத்தை உடைக்க தயவு தாட்சண்யமற்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியமாயிற்று.
(8) மார்கஸிய விமர்சகளுடைய பணி அப்போதுதான் ஈழத்தமிழ்த் தேசிய இலக்கியத்துக்குக் கிடைக்கிறது. பேராசிரிய எஸ்.வையாபுரிப்பிள்ளையின் பழந்தமிழிலக்கியங்களின் காலக் கணிப்பு, உணர்வுனிலை ஆய்வாளர் படிப்பாளிகளிடத்திலேற்படுத்திய அத்தனை பாதிப்பு கலாநிதிகள் கைலாசபதி, சிவத்தம்பி மற்றும் ஏ.ஜே.கனகரட்னா ஆகியோரின் கூட்டு தினகரனில் கைலாசபதியின் பிரவேசம் ஆதியாம் காரணங்களினால் தொடர்ந்தது. ஈழத் தமிழ் இலக்கியத்தின் செல்னெறி கண்டடையப் பட்டாயிற்று. ஈழத் தமிழிலக்கியம் தன் தொப்புள்க் கொடித் தொடர்பை முடிவாக அறுத்துக் கொண்டு தனிப்பிறவியாயிற்று. அதைச் சவலைப் பிள்ளையாகிவிடாமல் வலுவூட்டி வளர்த்தவர்கள் மார்க்ஸிய விமர்சகர்களே என்ற மகா உண்மையை எவர் மறந்தாலும் நாம் மறந்துவிட முடியாது. என்னைப் பொறுத்தவரை மார்க்ஸிய விமர்சகர்களின் பங்களிப்பு இதுதான். இவ்வளவுதான்.இதற்கு மேலே-கீழே இல்லை.
பகுதி 3
(9) மார்க்ஸியர்களின் இலக்கிய விமர்சனம் சரியான ஈழ இலக்கியத்தைத் தெரிந்து தமிழ்ப் பரப்புக்கு அறிமுகமாக்கிற்று. எனக்கும் சந்தேகம்தான். இன்மையை ஒரு காரணமாகச் சொல்லலாம். ராஜம் ஐயர் அளவு எழுதியவர்கள்கூட தோன்றவில்லை இக்காலகட்டம் வரையிலும் என்பார் மு.தளையசிங்கம். இந்த நிலையில் தேசிய இலக்கியத்தின் அடையாளமாய் அல்லது மண்வாசனை இலக்கியத்தின் எடுத்துக் காட்டாய் எதைச் சொல்வது? தேசிய நீரோட்டத்தை அதிகரிப்பித்தல் என்ற தளத்தில் சிலரின் சில எழுத்துக்கள் முன்னிலைப் படுத்தப் படுதல் இக்கட்டத்தில் நிகழ்வது தவிர்க்க முடியாதது. முகத்துக்காகச் சில தேர்வுகள் நடந்துள்ளதையும் மறுக்க முடியாது. ஆனால் இதுதான், இழிசனர் இலக்கியமென்ற வாய்ப்பாட்டைச் சுக்கு நூறாய்க் கிழித்தெறிந்தது. ஆனாலும் உண்மையை நாம் மறைக்க வேண்டியதில்லை. சிவத்தம்பி அவர்களால் இது குறித்து ஒப்புமூலம் ஒரு நேர்காணலில் சில காலத்துக்கு முன் கொடுக்கப் பட்டிருக்கிறது.
ஒருவேளை கைலாசபதி ஜீவியவந்தராய் இருந்திருப்பின் அவருமே இன்று இதை கொண்டிருக்கக் கூடும். அத்தகைய நிகழ்வுண்மைகளை வைத்துக் கொண்டுதான் தமது படைப்புக்கள் கண்டு கொள்ளப் படாமல் ஒதுக்கப் பட்டன என்ற கூச்சல் சிலரால் எழுப்பட்டது. தகுதியில்லாதவர்கள் உயர்த்தப் பட்ட நேரத்தில் தகுதியானவர்கள் அவர்களைவிடவும் தாழ நின்றார்கள் என்பது சரிதான். ஆனால் எதோ தம்மையும் தாழ்த்தியே வைத்திருக்க வேண்டும் என்பதற்காகவே, அதுவும் சமூக நிலை காரணமாக என்பதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. இவர்கள் தாம் இருட்டடிப்புச் செய்யப் பட்டதாகக் கூறுவது அப்பட்டமான பொய். அவர்கள், அவர்களது தகுதி அளவுக்கு விமர்சனங்கள் செய்யப் பட்டும், ஈழத் தமிழ் வரலாறுகளில் குறிக்கப் பட்டும் இருக்கிறார்கள். அவர்கல் தரமும அதுதான்.
அதற்கு மேலே - கீழே இல்லை.
(10) ஈழ இலக்கியத்தை உலக இலக்கிய தரத்துக்கு உயர்த்தும் ஒரு மகா படைப்பாளிக்கென்று எம் இலக்கிய மேடையிலே ஒரு விலைமதிப்பற்ற முடி இருக்கிறதுதான். அதைக் குறிவைத்துக்கொண்டு 'அது எனக்குத்தான்' என்றும், 'அதை எனக்குத் தரவில்லை' என்றும் போடும் சன்னதங்களை நாம் பொருள் செய்ய வேண்டியதில்லை. முன்னே பின்னே எழுதியிருந்தாலும் ஐம்பதுகளின் கடைசியிலும் அறுபதுகளிலும் தான் ஸ்தாபனமாகிறார்கள் மு.தளையசிங்கம், எஸ்.பொன்னுத்துரை, டொமினிக் ஜீவா, கே.டானியல், நீர்வை பொன்னையன் போன்றோர். மு.த. அற்புதமான படைப்பாளி. ஆழமான சிந்தனாவாதி. அம்பது ஆண்டுகளுக்குப் பின் வரக்கூடிய ஈழத்து இலக்கியச் செல்னெறியை அன்றே கோடி காட்டியவர். அவரது இள வயது மரணம் ஈழத் தமிழுக்கு, ஏன் மொத்த தமிழுலகுக்குமே பேரிழப்பு எனலாம். மெய்யுள், மரபில் காலுன்றி உயர்ந்து உயர்ந்து உச்சத்தில் வடிவங்களையே விழுங்கி விட்டு நின்று நவீனத்துவம் பேசுவது. மெய்மை சார்ந்தது. ஆன்மீகம், சமூகம், அரசியலெல்லாம் இணைந்து வரும் ஓர் அற்புத சிந்தனைப் பிறவி மெய்யுள். அதன் ஆன்மீக வியாதியே அதன் எமன். ஆன்மீகமென்பது தன்னுணர்ச்சி சார்ந்த ஒரு அகவயம் மட்டுமே. அது எழுதப்படலாம். ஆனால் வாதுக்கும், அமைப்புக்கும் அப்பாற்பட்டது. மெய்யுள் நெறி, மு.த.வின் பின்னால் ஒரு மார்க்கமாகப் படர்ந்ததாய்ச் சொல்ல முடியாது.
எஸ்.பொன்னுத்துரையைப் பொறுத்த வரை அவரது வீச்சான படைப்புக் காலகட்டத்தில் ஈழத் தமிழிலக்கியத்தை ஒரு இஞ்சியாவது உயர்த்திய சில சிறுகதைகளின் படைப்பாளி மட்டுமே. அதற்கும் மேலே-கீழே அவரும் இல்லை. நற்போக்கு இலக்கியம் ஒரு இலக்கிய விதண்டாவாதம். தம் காலத்தில், தம் சமூகம் சார்ந்த பிரச்னை குறித்து ஒரு இம்மியளவும் கூட இவர்கள் எழுதவில்லையென்பது எத்தனை பெரிய புதுமை. தம் சமூக நிலப்பாட்டில் நின்று நீர்வை பொன்னையனும், டொமினி ஜீவாவும், டானியலும் எழுதினார்கள். இன்று தலித் இலக்கிய முன்னோடி நாவல்களாக டானியலில் எழுத்துக்கள் கணிக்கப் படுகின்றன. சிறந்தபடி சமூக ஏற்றத் தாழ்வை வெளிப்படுத்தியவையாக நீர்வை பொன்னையனின் சிறுகதைகள் எடுக்கப் படுகின்றன. இவர்கள் முற்போக்கு அணிக்குள் இருந்து வளர்ந்தவர்கள். தம் சமூகத்துக்கும் ஈழத் தமிழிலக்கியத்தை உரிமையாக்கி வைத்தவர்கள். இவர்கள் கைலாசபதி மரபினைச் சார்ந்தவர்களில்லை. அப்படி ஒரு மரபும் வேதசகாயகுமார் சொல்வது போல் இல்லை. மரபுகள், அபூர்வமான சமூக நிலைமைகளில் தவிர தனி மனிதர்களால் ஆவதில்லை. அது சமூகத்தால் கட்டப் படுவது. அதுபோல் தளையசிங்கம் மரபென்றும் இல்லை. தன் படைப்புத் திறனால் தமிழிலக்கிய உலகில் நிமிர்ந்து நின்றார் என்பதுதான் தளையசிங்கம் குறித்த நிஜம். இதுக்கு மேலே போய் என்ன சொல்ல?
பொன்னுத்துரை தன் தளத்தில் தலித் இலக்கியம் படைத்திருக்க முடியும். ஆனால் அவரோ ஒரு மாய்மாலத்துட் போய் சொற்காமத்தில் விழுந்து கிடந்தார். ஈழத் தமிழிலக்கியத்தின் அடையாளமாக அதீத பாவனைச் சொற்பிரயோகம் இருக்கவே முடியாது. ஆனாலும் இவையெல்லாமே படைப்புக் கதி குறித்த விஷயங்களில்லை என்பதை மானசீகமாக இங்கே முதலில் ஒப்புக் கொள்கிறேன்.
இவையெல்லாம் ஒரு கேள்வி மட்டும்தான். வெறும் பேச்சு என்று உண்டா எங்கேயும்? அது கூட ஒரு அர்த்தம் குறித்ததுதான். இலக்கியம் உடலும் உயிரும் சார்ந்த கூறு. ஒரு தலைமுறை இளையவனான நானும் சில நண்பர்களும் இந்த மாய்மாலத்துள் சிலகாலம் கட்டுண்டு கிடந்தோம். சொற்காமம். ஒரு காலத்துக்கு மேல் அந்த மாயத்திலிருந்து நாம் விடுபட்டோம்.
(12) 'டானியல் கதைகள்' என்கிற கே.டானியலின் சிறுகதைத் தொகுப்பிலிருந்தும், 'மேடும் பள்ளமும்' என்கிற நீர்வை பொன்னையனின் சிறுகதைத் தொகுப்பிலிருந்தும் பல உன்னதமான ஈழத்துச் சிறுகதைகளை ஒருவரால் தேரமுடியும். நாவலாசிரியராவதன் முன் டானியல் எழுதிய கதைகள் மிக முக்கியமானவை. சிறுகதைகளே இலக்கியப் போக்குகளின் சிறந்த வெளிப்பாட்டு வடிவமென்று சொல்லப் படுகிற படிக்கு அவை தரமும், பதிவு, விகாஸமும் கொண்டவை. இவர்களை விடவும் அ.செ.முருகானந்தம், தெணியான்,ரகுநாதன்,வ.அ.இராசரத்தினம் என்ற பரந்துபட்ட எழுத்தாளர்களிடமிருந்து ஒரு பெரும் தொகையைச் சிறந்த சிறுகதைகளாக எடுக்க இடமிருக்கிறது. ஆனாலும் இது நிராகணமானவர்கள் குறித்த விவகாரம். அதனால் அவை இப்போது கரிசனமில்லை.
(13) ஒரு தசாப்த காலத்துக்குச் சற்று மேலாக முற்போக்கு இலக்கியக் கொள்கைகள் ஈழத் தமிழிலக்கியத்தின் முதுகெழும்ப்பாய் இருந்தன என்பது குறைந்த கணிப்பீடு இல்லை. அவற்றுக்கு ஆதாரமாய் இருந்தன மார்க்ஸியப் பார்வையுள்ள எழுத்தாளரின் படைப்புக்கள். இவை, மார்க்ஸியத்தை சமூக அரசியல் இலக்கியச் சிந்தனைக்கான சித்தாந்தமாய் ஏற்றுக் கொண்டவர்களின் படைப்புக் கதி மிகுந்த கணங்களில் பிரசவமானவை என்பதே சரி. அவற்றுக்கு மார்க்ஸிய எழுத்துக்கள் என்று பட்டயம் எழுதித் தொங்கவிடுவதும், பொது இலக்கிய நீரோட்டத்திலிருந்து ஒதுக்குவதும் இலக்கியத்துக்கு செய்யும் அநீதிகள். அபத்தங்கள்.
(14) நிலமற்றவரென்று பெரும்பாலும் எந்தக் குடும்பமும் இலங்கையில் இல்லையென்பது இந்தியத் தமிழனுக்குத் தெரியுமா? 'குண்டிக் குத்த' ஒரு முழம் மண் அங்கே எல்லோருக்கும் இருக்கிறது. ஆனாலும் அவற்றின் வகை தொகை வேறு வேறுதான். அங்குள்ள தண்ணீர்ப் பஞ்சத்தை அற்புதமாய் விளக்குகிற கதைதான் நீர்வை பொன்னையனின் சிறுகதைத் தொகுப்பின் தலைப்புக் கதையான ''மேடும் பள்ளமும்' கதை. அடையமுடியாத ஆழத்தில் நீருற்றுக்கள் உள்ள மேட்டு நிலங்களில் தாழ்த்தப்பட்டோரின் காணிகள். கிணறு வெட்டி நீரைக் காணலாமென்பது அங்கே கனவு. ஆயினும் அந்தக் கனவுதான் அங்கே வாழ்க்கை. கனவுக்கு நம்பிக்கை வேண்டும். நம்பிக்கை அபார முயற்சியைப் பிறப்பிக்கும். அப்படி நீரூற்றுக் காணமுயலும் மலையும் பிளக்கும் ஒரு தாழ்த்தப் பட்ட குடும்பம் தன் நம்பிக்கை சரிவதை அக்கதை எடுத்துக் காட்டும். உணர்வால் மட்டுமன்றி, உருவ நேர்த்தியாலும் சிறந்து நிற்கிற கதை இது. இது போல் டானியல் கதைகளிலும் சில உண்டு. டொமினிக் ஜீவாவிடமும் சில நல்ல கதைகளை நாம் எடுக்க முடியும். இவர்கள் ஓர் அலையின் பிரதிநிதிகள். அந்த அலையைக் கடந்துதான் அடுத்த கட்டத்துள் ஈழ இலக்கியம் பிரவேசித்தது. அந்தக் காலகட்டம் அடுத்த காலகட்டத்தின் உரம்.
அவர்களை ஒட்டு மொத்தமாய் வரட்சியாய் எழுதிய எழுத்தாளர்கள் என்ரு சம்பூர்ண நிராகரணம் பண்ண வேதசகாயகுமாரினால் எப்படி முடிந்தது? இந்த அணுகுமுறை நாளை தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள் மீதும் பாயாது என்பதற்கு என்ன உத்திரவாதம்?
அயோத்தியிலே ஒரு காலத்தில் ராமர் கோவில்தான் இருந்தது. சுமார் 500 வருஷங்களின் பின் பாபர் காலத்தில் அதை இடித்து விட்டுததான் பாபர் மசூதி கட்டினார்கள். பின் ஒரு 500 ஆண்டுகள் கழித்து மசூதியை இடித்து விட்டு கோயில் கட்டுவது சரியென்று சொல்வது மாதிரியான விவாதம் தானே இங்கு வேதசகாயகுமாரினால் முன் வைக்கபட்டிருப்பது? இப்போது முற்போக்கு இலக்கிய இயக்கம் இல்லை. தேவையுமில்லை. ஆனால் அப்படி ஒன்று இருந்ததும், அது சார்ந்த இலக்கியங்களெழுந்ததும், அவற்றிலும் உன்னதங்கள் உள்ளன எனபதும் நிஜங்களல்லவா? எப்படி ஒதுக்க முடியும்? இந்த நிராகரணத்தின் நிலைப்பாட்டை நாம் விளங்கிக் கொள்கிறோம்.
(15) இந்தப் பகுதி முரண்பாடற்றவிதமாக சில விடுபடுதல்களையும் , தவறான பகுப்புக்களையும் சுட்டிக் காட்டுவதோடு அமையும். இந்தக் காகட்டத்தை 1980க்கு மேலானது என்று கொண்டு துவங்குவதும் புரிதலைச் சுலபமாக்கும். இனப் படுகொலைகளும், பரிகாரமான யுத்தமும், புலப்பெயர்வுகளுமென்று அரசியல், சமூகக் களமாய் விரிகிறது இக்காலம்.
உணர்வின் பிரதிபலிப்பாக இலக்கியம் என்ற பொதுத் தன்மையை இலக்கியம் பெற்றது இந்த இரு தசாப்தங்களிலும்தான். இவற்றையும் 1981-90 என்றும் 1991-2000 என்றும் பிரித்துப பார்ப்பது நல்லது. முதலாம் பத்தில் இனக் கொடுமைகளும், வெளிநாடுகளுக்கான புலப் பெயர்வும் இலக்கியத்துக்கான உள்ளடக்கமாய் இருந்தன. சமூகம் குலைய, சிதறிய உதிரி மனிதர்களின் தொகை அதிகமாகி, அதுவே ஒரு
சமூகப் பிரச்னையாக இக்கால கட்டத்தில் உருவானதாகக் கொள்ளலாம். புலம்பெயர்ந்தோர் இலக்கியத்தின் தோற்றப்பாட்டை இக் காலகட்டத்துக்கு உரியதாக்குவதுதான் சரி. அது இலக்கிய நயமற்று வெறும் ஒப்பாரிகளாகவும், புலம்பல்களாகவுமே இருந்தன. அவற்றில் நல்ல சில ஆக்கங்கள் இல்லாமலில்லை. இக்காலகட்டம் ஒருவகையில் சிற்றிதழ்களின் வளர்ச்சிக்கானதாய் இருந்ததென்றும் கொள்ளப்பட முடியும். இரண்டாம் பத்தின் விஷேச அமசம் யுத்த மறுப்பும், தனி மனித சுதந்திரமென்ற கோஷமுமாகும். வெளி நாடுகளில் விளைந்த கலாச்சாரச் சிக்கல் மெல்ல அமைந்து அடங்கி வந்ததாய்த்தான் கொள்ள வேண்டும்.
(16) இந்த முதலாம் பத்துக்குரியவர்களே றஞ்சகுமார்,உமா வரதராசன்,எஸ்.எல்.எம்.ஹனி·பா, சட்டனாதன் போன்றோர். இவர்களில் றஞ்சகுமார், உமா வரதராசன், சட்டனாதன் ஆகியோர் குறித்து வேதசகாயகுமாரின் கட்டுரை சரியானதாகவேதான் சொல்கிறது. ஹனி·பா விடுபடல். இக்காலகட்டத்துப் படைப்பாக்கங்களின் மூலமாய் ஒருவரைத் தேர அல்லது நிராகரிக்க ஒரு ஆய்வாளருக்குள்ள உரிமையை நாம் மதிக்கிறோம். எமக்கு வேறு அபிப்பிராயங்களிருப்பினும், அதை மதிப்பது கருத்துத் தர்மம். எஸ்.எல்.எம்.ஹனிபாவின் 'மக்கத்துச் சால்வை' கிழக்கிழங்கையில் தோன்றிய சிறந்த் ஒரு படைப்பு. இதில் வேதசகாயகுமாரோடு முரண் வேறு வகையானது. கருணகரமூர்த்தியை தளையசிங்கம் மரபில் வந்தவராக அவர் கொள்வார். அதுபோல் கலாமோகனைப் பற்றிக் கூறுகையில் கைலாசபதி மரபென்பார். இந்தப் பகுப்பு பொருத்தமற்றதும், அனாவசியமானதுமாகும். கைலாசபதியின் விமர்சன நோக்கு போக்குகளைவிட்டு ஈழத் தமிழிலக்கியம் வெகுதூரம் வந்து விட்டது. எம்.ஏ.நு·குமான்,, கே.எஸ்.சிவகுமாரன், சி.சிவசேகரம்,ந.ரவீந்திரன் என்று மாறுபட்ட விமர்சன் உலகுள் அது புகுந்து விட்டது. தளையசிங்கத்தின் தொடர்ச்சியிலும் யாரும் இன்று இல்லை. இன்றைய இலக்கியப் போக்கு மேலைனாட்டு இலக்கியப் போக்குகளை அடியொற்றியே செல்வதாகக் கொள்ளவேண்டும். கலாமோகனையும், மு.பொ.வையும் அவ்வாறு கொள்வது பொருந்தும். பொ.கருணாகரமூர்த்தி, சக்கரவர்த்தி ஆகியோர் இன்னும் யதார்த்த உலகை விட்டு பெருமளவு மாறவில்லை. அவர்களின்
நவீனத்துவம் கட்டமைப்பை விடவும் மொழி சார்ந்த கூறுகளிலேயே தங்கியிருக்கிறது. றஷ்மி போன்றவர்கள் இரண்டாம் பத்துக்குரியவர்கள். சில சிறந்த சிறுகதைகளை எழுதிய பலபேர் இக்காலகட்டத்துக்குரியவர்களே. காலகட்டத்துக்கான தொகுப்புக்கள் வெளிவரும்வரை, மேற்தட்டு ஆய்வு மட்டத்தில் உள்ளோரால் இக்காலகட்டங்களைச் சரியாகவே மதிப்பிட்டு விடமுடியாது. தொகுப்புக்கள் வெளிவருவதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்துள்ளன. முன்புதான் மனித சக்தி அச்சாக்கத்தில் பெரும் பங்கு வகித்தது. இந்தியா நூல் வெளியாக்கத்தில் முன்னின்றது. இன்று கணினித் தட்டச்சு முறையும், தொழில்நுட்ப அச்சாக்க வளர்ச்சியும் பதிப்பு நிலைமைகளை தலைகீழாக மாற்றி விட்டன. புதிய பார்வைகளும், விமர்சனமுறையும் கொண்ட படைப்புக்களும், தொகுப்புக்களும் வெளிவரத் தொடங்கி விட்டன. அண்மையில் ஈழகேசரி கதைத் தொகுப்பு வெளிவந்திருப்பது நல்ல ஓர் உதாரணம். முனியப்பதாசன் போன்றோரின் தொகுப்புக்களும் வெளிவரும்போது ஈழத் தமிழிலக்கியத்தின் தரத்தை வெளியுலகம் அறியும்.
எம்.வேதசகாயகுமாரின் முக்கியமான ஒரு கட்டுரை இது. ஈழத் தமிழ்ச் சிறுகதைகள் குறித்து ஈழத்தவராலே கூட இவ்வளவு விரிவாயும், ஆழமாயும் எழுதப்படவில்லையென்பதை நோக்குகின்றபோது இதன் அருமையை ஒருவரால் தெரியமுடியும். ஒரு குறிப்பிட்ட சிந்தனா வட்டத்துள் ஈழத் தமிழ் சிறுகதைகளை அடைத்து ஒரு மதிப்பீட்டை முன்வைத்ததே இதிலுள்ள முரண். மற்றும்படி செய்யப் பட்ட முயற்சி, காட்டப்பட்ட அக்கரைகள் யாவும் பாராட்டப்பட வேண்டியன. ஈழத்தவருக்கே முன்மாதிரியான முயற்சி என்றே இதைச் சொல்லலாம்
பதிவுகள் ஜூன் 2002; இதழ் 30
தெரிவும் நிராகரிப்பும் இல்லாமல் ரசனை இல்லை .....
தேவகாந்தனின் கட்டுரைக்கு எதிர்வினை
- ஜெயமோகன் -
எம். வேதசகாய குமாரின் கட்டுரையைப்பற்றிய தேவகாந்தனின் கட்டுரை பொறுப்பான ஓர் எதிர்வினையாகும். அவர் கூறும் பல கருத்துக்களுடன் நான் உடன் படுகிறேன்.ஆனால் இம்மாதிரிவிவாதங்களில் கருத்தில் கொள்ளவேண்டிய சில முக்கியமான விஷயங்களைப் பற்றி சொல்லவிரும்புகிறேன். நான் முதலில் வேதசகாய குமாரை சந்திக்கும்போதேஅவர் ஈழச்சிறுகதை பற்றி எழுதும் திட்டத்துடன் இருந்தார்.எனக்கும் அந்த எண்ணம் உண்டு .என்னிடம் ஏன் ஈழ இலக்கியம் குறித்து ஒன்றுமே எழுதவில்லை என கேட்டவர்கள் அதிகம்.கோபித்தவர்களும் உண்டு .படைப்புகள் விரிவாக கிடைக்காதநிலையில் விவாதம் அர்த்தமுள்ளதாக அமைய வாய்ப்பு இல்லை என்ற எண்ணம் எனக்கு இருந்தது . வேதசகாய குமாருக்கு அதைவிட தயக்கம் .அவரது மற்ற எழுத்துக்களை கண்டவர்கள் அவர் மூலநூல்களை பார்ப்பதில் எடுத்துக் கொள்ளும் கவனம் என்ன என அறிவார்கள் . கிடைத்த விஷயங்களை வைத்தே எழுதுமாறும் ,பிறகு விவாதத்தை முழுமை செய்யலாம் என்றும் வேதசகாயகுமாரை தூண்டி காலம் இதழுக்காக எழுதவைத்தது நானே. முதலில் ஒரு விவாதம் ஆரம்பிக்கட்டும் ,பிறகு அதன் தவறுகளை பற்றிபேசலாம் என நான் இப்பொது எண்ணுகிறேன்.இல்லையேல் விவாதம் நடக்காமலே போகத்தான் வாய்ப்பு அதிகம். இப்போது தமிழகத்தில் கவனிக்கப்படும் / கவனிக்கப்படவேண்டிய ஈழப் படைப்பாளிகள் யார் என்ற தகவலாவது ஈழ நண்பர்கள் கவனத்துக்கு வருமே.
தமிழில் ஈழ எழுத்துக்களை ஆர்வத்துடன் படிப்பவர்கள் மிகவும் குறைவுதான் . இங்குள்ள பெரும்பாலான அதிதீவிர ஈழ ஆர்வலர்களுக்கு ஈழ இலக்கியம் மற்றும் வாழ்க்கை குறித்து ஒன்றுமே தெரியாது என்பதை எப்போதாவது ஈழத்திலிருந்துவந்து இங்குள்ளவர்களிடம் பேசினால் தெரிந்துகொள்ளலாம். அதற்கு ஒரு காரணம் இங்குள்ள விமரிசகர்கள் ஈழ இலக்கியம் பற்றி அதிகமாக எழுதாததே என்பதும் உண்மையே . அதற்கும் வேதசகாய குமாரின் கட்டுரை ஒரு தொடக்கமாக அமையலாம்.
ஈழச்சூழலுக்கும் வேதசகாயகுமாரின் கட்டுரை மிக உதவிகரமாக அமையக்கூடும் . அங்குள்ள விமரிசனங்களில் 'அண்மை ' ஒரு பெரும் பிரச்சினையாகவே இருக்கும். தனிப்பட்ட முறையில் தெரிந்த எழுத்தாளர்கள் எழுதும் எழுத்த்துக்கள் . தெரிந்த சூழல் சார்ந்த எழுத்துக்கள் . ஏற்கனவே ஈடுபாடு உள்ள விஷயங்கள் குறித்த எழுத்துக்கள். அவை நம்மை அவற்றின் இலக்கிய தரத்தைமீறியே கவரக்கூடும் .இந்த அபாயம் எல்லா விமரிசகருக்கும் உண்டு.வேதசகாய குமாரின் கட்டுரை சேய்மையில் இருந்து எழுதப்படுவது . சேய்மை பலவகையான போதாமைகளையும் விடுபடல்களையும் கண்டிப்பாக உருவாக்கும் . அதேசமயம் அது ஒரு தெளிவான பார்வைக்கும் அடிப்படை வகுக்கும் .படைப்பாளிகள் தங்கள் ஆழத்தால் மட்டுமே அளக்கப்படும் ஒரு சந்தர்ப்பம் அங்கு அமைகிறதல்லவா?
அனைத்தையும் விட ஈழச்சூழலுக்கு வேதசகாயகுமாரின் கட்டுரையின் தேவை என்ன என்பதை தேவகாந்தனின் கட்டுரை உணர்த்துகிறது . நமது சூழல் சார்ந்து நமக்குள்ள வரலாற்று ரீதியான பார்வையானது விமரிசனப்பார்வை உருவாகாமல் நம்மை தடுக்கிறது . கருத்தியல் ரீதியாக இலக்கிய வரலாற்றில் முக்கியமான இடம் வகிக்கும் ஒரு படைப்பளிக்கு இலக்கிய அழகியலில் எந்த பங்களிப்பும் இல்லாமல் இருக்கக் கூடும் . அழகியல் விமரிசனம் ஒரு குறிப்பிட்ட காலம் கழிந்ததும் பல சிறு படைப்பாளிகளை சகஜமாகத் தாண்டி முக்கியப்புள்ளிகளை மட்டும் தொட்டு செல்லக்கூடும் .வரலாற்று வரிசை உருவாக்கும் மனச்சித்திரத்தை தாண்டி அழகியல் ரீதியான மனச்சித்திரத்தை உருவாக்குவது எளிதல்ல .வரலாற்று விமரிசனம் முக்கியமானதுதான் .அது இலக்கியத்தின் கருத்தியல் சார்ந்த வளர்ச்சிப்போக்கையும் ,இலக்கியத்திற்கும் சமூகத்துக்குமான உறவையும் துல்லியமாகப் புரிந்து கொள்ள மிக உதவிகரமானது . ஆனால் அழகியல் ரீதியான விமரிசனமே இலக்கியப்போக்கினை தீர்மானிக்கும் அடிப்படை உந்துதல்களை அடையாளம் காட்டமுடியும் என்பது என் எண்ணம் .
அழகியல்விமரிசனம் என இங்கு நான் சொல்வது தனிப்பட்ட வாசக அனுபவத்தின் அடிப்படையில் , இலக்கிய மரபின் மீதான பயிற்சியின் உதவியுடன் செய்யப்படும் விமரிசனத்தையே . தன் மன ஆழத்துடன் உறவாடும் இலக்கிய ஆழத்தை மட்டுமே இது கருத்தில் கொள்ளும் . அதை விளக்க செவ்விலக்கியங்களை பயின்று பெற்றுக் கொண்ட உபகரணங்களை பயன்படுத்தும் . தனிப்பட்ட வாசக அனுபவம் மிக அகவயமானது என்பதனால் அழகியல் விமரிசனத்தை ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு உள்ளே மட்டுமே விவாதிக்கவும் ,நிர்ணயித்துகொள்ளவும் முடியும் என்பது என் அனுபவம் . அதாவது ஏறத்தாழ அதே அனுபவ அதிர்வுகளை தானும் பெற்றுகொண்ட வாசகர்களை முன்னிலையாகக் கண்டுமட்டுமே அதை நிகழ்த்த முடியும் .அவ்வனுபவ மண்டலத்துக்கு வெளியே உள்ளவர்களிடம் கண்டிப்பாக ஓர் அழகியல் பார்வையை விளக்கிக் காட்டிவிட முடியாது . அழகியல் விமரிசனத்தின் அகவய அணுகுமுறைக்கு மாற்றாக மார்க்ஸியர்கள் சமூகவியல் கருவிகளை பயன்படுத்தினார்கள் .பின்பு உளவியல் அணுகுமுறை யின் அடிப்படையிலான உளப்பகுப்பு , ஆழ்படிம விமரிசனம் முதலியவை .பின்பு இன்றைய மொழியியல், குறியியல் விமரிசனங்களின் காலகட்டம் . இந்த புறவய அணுகுமுறைகள் பல புதிய சாத்தியங்களை உருவாக்கிக் அளித்துள்ளன .எனினும் இலக்கியப்படைப்பின் மீதான அழகியல் விமரிசனத்தின் இடம் அப்படியேதான் உள்ளது . காரணம் இலக்கியப்படைப்புகள் உலகமெங்கும் உருவாக்கும் அனுபவ மண்டலத்துக்கு எப்போதும் ஒரு பொதுத் தளம் இருந்தபடியே இருக்கிறது என்பதுதான்.
வேதசகாயகுமாரின் அழகியல் விமரிசன அணுகுமுறை வரலாற்று ரீதியான அணுகுமுறைக்கு மாற்று , அல்லது மறுபக்கம் . தேவகாந்தன் முன்வைப்பது வரலாற்று ரீதியான அணுகுமுறையையே . அதாவது வேதசகாய குமாரிடம் அவரது கோணத்துக்கு நேர்மாறான ஒன்றை அவர் கோருகிறார் . உதாரணம் சொல்கிறேன். தமிழில் இன்று 'பாரதி ->புதுமைப்பித்தன் ' என்ற கோடு பரவலாக அங்கீகரிக்கப்பட்ட ஒன்று. ஆனால் இதை முதன் முதலில் உருவாக்கியவர்கள் தமிழக விமரிசகர்கள் அல்ல .எண்பதுகளில்கூட அந்தபார்வை இங்கு அதிக வலுவுடன் இல்லை . மு. தளையசிங்கம் தான் அந்த கோடினை போடுகிறார் என வேதசகாயகுமார் சொல்கிறார் . அதன் மூலம் எத்த்னை தூரத்தை மு .தளையசிங்கம் தாண்டிச்செல்கிறார் , எத்தனை பெயர்களை கழித்துக் கட்டுகிறார் என்பதை கவனியுங்கள் . ஒருபக்கம் பாரதிதாசன் மற்றும் அவரது பரம்பரையினரான கம்பதாசன், வேழவேந்தன் , தமிழ் ஒளி என புகழ்பெற்றிருந்த ஒரு நீண்ட வரிசை . மறுபக்கம் மணிக்கொடி படைப்பாளிகளான கு ப ராஜகோபாலன் , பி எஸ் ராமையா, ந.பிச்சமூர்த்தி போன்ற ஒரு மரபு. தமிழிலக்கிய வரலாற்றின் இரு பகுதிகள் அப்படியே உதிர்க்கப்பட்டுவிடுகின்றன.
தளையசிங்கத்துக்கு தமிழகச் சூழலுடன் இருந்த தூரமே அவரை அப்படி சொல்ல வைத்தது என்பதே உண்மை . இங்குள்ளவர்களுக்கு வரலாற்றுப் பார்வையில் இருந்து தப்ப முடியவில்லை .தளைய சிங்கத்தின் கணிப்பு இப்போதுகூட கடுமையான விமரிசனங்களை உருவாக்குவது .ஆனால் அதை முதலில் சுந்தர ராமசாமி ஏற்று வலுவுடன் முன்வைத்தார் . கு .ப. ரா பெயர் விடுபட்ட்து க. நா. சு முதலியோரை பெரிதும் சங்கடப்படுத்தியது .பாரதிதாசன் பெயர் விடுபட்டது ஞானி போன்றோரை . ஆனால் அடுத்த இருபது வருடத்தில் அக்கணிப்பு வலுப்பெற்று பரவியது . ஈழச்சூழலுக்கு வேதசகாய குமார் செய்வதும் அதையே . அவர் தன் தொலைவில் இருந்தபடி ஒரு கணிப்பை முன்வைக்கிறார் .அது கண்டிப்பாக ஏற்கனவே அங்குள்ள அண்மைக் கணிப்புகளுக்கு அதிர்ச்சி தருவதாகவே இருக்கும் .
ஆகவே பெயர்கள் விடுபட்டதை மட்டுமே சொல்லி அவரது கட்டுரையை எதிர்கொள்வது தவறான கோணத்தில் அவரது எழுத்தை ஆராய்வதற்குச் சமமாகும் .நூல்கள் கிடைக்காமல் ,கவனத்துக்கு வராமல் விடுபட்ட பெயர்களை சேர்த்துக் கொள்ளலாம் அவ்வளவுதான்.
விமரிசனபூர்வமாக விடப்பட்ட பெயர்கள் அக்கோணத்தின் இயல்பு மூலம் விடப்பட்டவை . மேலும் இன்னொரு விஷயம் உண்டு . வேதசகாயகுமார் ஈழச் சிறுகதையின் சரித்திரத்தில் யாருக்கு என்ன இடம் என சொல்ல முற்படவில்லை . அப்படி அவர் சொல்லியிருந்தால் மட்டுமே இன்னார் பெயர் எங்கே என்ற கேள்விக்கு பொருள் உள்ளது . அவர் தன்வரை வந்த எழுத்தாளர்களை தன் பார்வையில் மதிப்பிட முயல்கிறார் .அவ்வளவுதான் . அக்கட்டுரையின் முக்கியத்துவம் அவர் ஈழச் சிறுகதையில் உள்ள சில இயல்புகளின் அடிப்படையில் அவற்றை இரு போக்குகளாக அடையாளம் காட்ட முயல்கிறார் என்பதனால்தான். அதை கைலாசபதி மு.தளையசிங்கம் விவாதத்தின் அடிப்படையிலோ, இடது சாரி அரசியலின் அடிப்படையிலோ பார்க்கவேண்டிய அவசியமில்லை . பொதுவாக ஈழ ச்சிறுகதையாசிரியர்களை வகைப்படுத்தும் ஒரு சட்டகத்தி உருவாக்கும் முய்ற்சி இது. இங்கிருந்து பார்க்கையில் கிடைக்கும் சித்திரத்தை அடிப்படையாகக் கொண்டது. இதன் பின் ஒவ்வொரு படைப்பாளியையும் இச்சட்டகத்தில் பொருத்தும் போது அவனது இயைபு அவனது மீறல் இரண்டுமே ஆராயப்படலாம் . அவனை மதிப்பிட ஒரு கருவியாக இது அமைகிறது .எந்தபடைப்பாளியும் எந்த சட்டகத்திற்குள்ளும் முழுக்க பொருந்திப்போகமாட்டான் . இது ஒரு விமரிசன உத்தி மட்டுமே.
இங்கு எதிர்தரப்பாக முன்வைக்கப்பட சாத்தியமானது பெயர்கள் விடுபட்டிருப்பதோ , வரலாற்றின் சித்திரமோ அல்ல. இத்தகைய சட்டகத்தில் உருவாக கூடிய இடர்கள் ,இச்சட்டகத்தில் முற்றிலும் பொருந்திவராத படைப்பாளிகள் , இச்சட்டகத்தின் மூலம் அளக்க முடியாத போக்குகள் ஆகியவற்றை அடையாளம் காட்டுதலேயாகும் . இக்கட்டுரைக்கு எதிர்வினையாக நான் எழுதகாரணம் எனக்கும் இதே சட்டகம்தான் அளவுகோலாக உள்ளது என்பதே .ஈழ எழுத்தில் கைலாசபதியின் பார்வையும் அழகியலும்தான் இன்றும் பரவலாக காணக்கிடைக்கிறது . அதைப்ப்பற்றி விரிவாகவே பேச வேண்டும் . ஒரு கருத்தில் இருந்து கதையின் வடிவத்தை உருவாக்குதல் , மொழியை கூறுவதற்கு மட்டுமே உபயோகித்தல் , படைப்பில் அறிவார்ந்த தளம் மட்டுமெ செயல்படுதல் என கைலாசபதி பாணியை அடையாளப்படுத்தலாம். கைலாசபதி பாணி எழுத்தில் சகஜமனநிலையில் நாம் அறிபவற்றுக்கு அப்பால் ,படைப்பூக்கமனநிலைக்குமட்டுமே உரிய அறிதலாக ஏதும் இருப்பதில்லை . ஆகவே நான் ஒரு படைப்பாளியை கைலாசபதி பாணியை சேர்ந்தவர் என்றேன் என்றால் அவர் என் பார்வையில் இலக்கியவாதியே அல்ல என்றுதான் பொருள் . இலக்கியப்படைப்பு கருத்துக்களை உருவாக்கலாம் . அதில் அறிவார்ந்த தளம் இருக்கலாம். ஆனால் கலைப்படைப்புகள் எப்போதுமே ஆழ்மனமும் மொழியும் இணையும் தருணத்தின் சிருஷ்டிகள் .
தேவகாந்தன் வேதசகாயகுமார் பழைய முற்போக்கு இலக்கிய மரபை முற்றிலும் புறக்கணிக்கமுயல்வதாகவும் , அம்முகாமின் ஆக்கங்களை நிராகரிப்பதாகவும் புரிந்து கொள்கிறார் . இது வேதசகாயகுமாரின் கட்டுரையை மிகத்தவறாக திருகுவதாகும் . தன் கட்டுரையில் குமார் திரும்பதிரும்ப கைலாசபதி 'தெளிவான' அரசியல் ,சமூகவியல் பிரக்ஞைக்கு ஏற்ப 'உருவாக்கப்படும்' படைப்புகளுக்காக எப்படி வாதாடினார் என்பதை விளக்குகிறார்.அதை தன்னால் கலை சார்ந்த கோணமாக ஏற்கமுடியாது என தெளிவுபடுத்தி ,அப்போக்கை மேற்கொண்டு எழுதப்பட்ட படைப்புகளை நிராகரிக்கிறார் . இதில் கைலாசபதியை அவர் ஒரு முக்கியமான கருத்துத் தரப்பாகவே கருதுகிறார் .அவர் நிராகரிப்பது அந்த அழகியல் கோணத்தையே , அந்த அரசியல் கருத்தியல் தரப்பை அல்ல .மேலும் ஒரு செய்தி வேதசகாயகும'ரும் கைலாசபதி போல ஒரு இடதுசாரி தொழிற்சங்கவாதிதான்.
ஈழச்சிறுகதைகளில் கருத்தியலும் பேசுபொருளும் மாறினாலும் இப்போதும் கைலாசபதியின் பாணியே ஓங்கியுள்ளது . அது ஒரு அடிப்படை பயிற்சியாகவே உள்ளது போலும் .இன்று நான் ஒரு படைப்பாளியை மதிப்பிடும் முதல் அளவுகோலே எந்த அளவுக்கு அவர் கைலாசபதி பாணியில் இருந்து வெளியே வந்துள்ளார் என்பதுதான் .அதாவது எந்த அளவுக்கு தன் ஆழ்மனவெளிப்பாட்டை நம்புகிறார்,
எந்த அளவுக்கு தன் பிரக்ஞை நிலபாடுகளை கலையில் ஊடுருவவிட மறுக்கிறார் என்றுதான் .வேதசகாய குமாரின் அளவுகோல் முழுமுற்றானதோ எப்போதைக்கும் உரியதோ அல்ல .ஆனால் இன்று ஈழச் சிறுகதைகளை மதிப்பிட இயல்பான மிக வசதியான அளவுகோல் அதுவேயாகும் . அவ்வகையிலேயே வேதசகாயகுமாரின் கட்டுரையை முக்கியமாக கருதுகிறேன்.
பதிவுகள் ஜூன் 2002; இதழ் 30
ஈழத்துத் தமிழ் இலக்கியம்: அ.ந.க; ஏனிந்த இருட்டடிப்பு?
- வ.ந.கிரிதரன் -
ஈழத்துத் தமிழ் இலக்கியம் பற்றிய தேவசகாய குமாரின் 'காலம்' சஞ்சிகை கட்டுரை சம்பந்தமாக தேவகாந்தனின் கட்டுரையும் அதற்குஎதிர்வினையாக ஜெயமோகனின் கட்டுரையும் பதிவுகளில் வெளிவந்துள்ளன. ஈழத்துத் தமிழ் இலக்கியம் பற்றிய கட்டுரைகள் பலவற்றில் காணப்படும் குறைபாடுகள் மேற்படி கட்டுரைகளிலும் காணக் கிடைப்பதையே என்னால் அவதானிக்க முடிகின்றது. பொதுவாகவே ஈழத்துத் தமிழ் இலக்கியம் பற்றிய போதுமான ஆய்வுகள் பாரப்டசமற்ற முறையில் செய்யப் படவில்லை. இந்நிலையில் வெளிவரும் கட்டுரைகளிலும் ஆளிற்காள் பெயருக்கு நாலு பெயர்களைக் குறிப்பிட்டுச் சென்று விடுவார்கள். குறிப்பாகத் தமிழக எழுத்தாளர்களின் கட்டுரைகளை எடுத்தால் சு.ரா ஒரு பட்டியல் வைத்திருப்பார். சாரு நிவேதிதா இன்னுமொரு பட்டியல் வைத்திருப்பார். ஜெயமோகன் இன்னுமொரு கோணத்தில் வேறுவகையான பட்டியல் வைத்திருப்பார். தேவசகாயகுமார் இன்னுமொரு பட்டியல் வைத்திருப்பார்.
இவ்வகையில் ஈழத்து இலக்கியம் பற்றி அவ்வப்போது குறிப்பிடும் ஈழத்து எழுத்தாளர்களும் , எஸ்.பொ.,பேராசிரியர் கா.சிவத்தம்பி, சித்திரலேகா மெளனகுரு, எம்.ஏ.நு·மான், தேவகாந்தனுட்படப் பலரும் தமக்கேற்ற வகையில் ஒரு பட்டியல் வைத்திருப்பார்கள் போல் தெரிகின்றது.ஈழத்து இலக்கியம் பற்றி நன்கு அறிந்த பேராசிரியர் சிவத்தம்பி போன்றவர்கள் திட்டமிட்டே சிலரை இருட்டடிப்பும் செய்து வருகின்றார்கள். குறிப்பாக அறிஞர் அ.ந.கந்தசாமியை இவர்கள் இருட்டடிப்பு செய்வதைத்தான் என்னால் இதுவரையில் ஏனென்று விளங்கிக் கொள்ள முடியவில்லை. திண்ணையில் அண்மையில் அ.ந.க பற்றி நிகழ்ந்த கருத்துப் பரிமாறல்களில் நண்பர் மைக்கல் கூறியது போல் அ.ந.க இருக்கும் வரை அவர் பெயர் சொல்லிக் குளிர்காய்ந்தவர்கள் கூட அவரை இருட்டடிப்பு செய்திருக்கின்றார்கள்.
அ.ந.க.வின் வாழ்க்கை குறுகியதாக இருந்த போதும் அந்தக் குறுகிய காலத்தினுள் இலக்கியத்தின் சகல துறைகளிலும், சிறுகதை, கவிதை, நாடகம், மொழிபெயர்ப்பு, உளவியல், சிறுவர் இலக்கியம்,விமர்சனம்,தமிழ் இலக்கியம் எனப் பலமாகக் கால் பதித்தவர் அ.ந.க. அத்துடன் அ.ந.க ஒரு செயல் வீரர் கூட. நா.சுப்ரமணியன் போன்றவர்கள் கூட யாழ் பலகலைக்க் கழகத்தில் தமது பட்டப் படிப்பு மாணவர்களை அ.ந.க. போன்ற ஈழத்து இலக்கிய உலகில் கால் பதித்தவர்களைப் பற்றி ஆய்வுகள் செய்யத் தூண்டியிருக்கின்றார்கள். அவர்களே கூட ஈழத்து இலக்கியம் பற்றிக் கருத்துகள் உதிர்க்கும் போது கவனமாக அ.ந.க போன்றவர்களை ஒதுக்கி விட்டே செல்வதைத் தான் அவதானிக்க முடிகிறது.
ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாறு எந்தவித காழ்ப்புணர்ச்சியுமற்று நடுநிலையாக முறையாக ஆய்வு செய்யப்பட்டு இன்னும் எழுதப் படவில்லை. ஆனால் இத்துறையில் குறிப்பிடத்தக்க முதனூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றில் சிட்டி சோ.சிவபாதசுந்தரம், சித்திரலேகா மெளனகுரு/நு·மான் போன்றோர் எழுதிய நூல்களைக் குறிப்பிடலாம்.ஜெயமோகன் கைலாசபதியின் பாதிப்பை மீறியவர்களை இனங்காண்பதன் மூலம் ஈழத்துத் தமிழ் இலக்கியத்தை அறிய முயல்வதைப் போல் நானும் இன்னுமொரு அளவு கோல் வைத்திருக்கின்றேன். ஈழத்து முற்போக்கிலக்கியத்தின் முன்னோடிகளில் முக்கியமானவரான அறிஞர் அ.ந.கந்தசாமியின் பெயர் அதற்குரிய முக்கியத்துவத்துடன் குறிப்பிடப்படாத எந்தவொரு ஈழத்துத் தமிழ் இலக்கிய ஆய்வும் பூரணமானதல்ல. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் கவிதை, நாடகம், சிறுகதை, விமர்சனம்,இலக்கியம், உளவியல், ஆய்வு, மொழிபெயர்ப்பு, நாவல் என இலக்கியத்தின் பல்வேறு கூறுகளிலும் மிகவும் காத்திரமான பங்களிப்பினைத் தனது குறுகிய கால வாழ்வினுள் செய்து முடித்துச் சென்றவர் அ.ந.க. புதுமைப்பித்தனை விட்டு இந்தியத் தமிழ் இலக்கியத்தைக் குறிப்பிடுவது எவ்வளவு முட்டாள்தனமோ அவ்வளவு முட்டாள்தனமானது அ.ந.க வைப்பற்றிய முறையான விபரங்களற்ற ஈழத்துத் தமிழ் இலக்கியம் பற்றிய ஆய்வுகளும் விமரிசனங்களும். கவிதைகளை எடுத்துக் கொண்டால் அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன்', 'வில்லூன்றி மயானம்' போன்றவை மிகவும் முக்கியமானவை. நான் அறிந்த வரையில் அ.ந.க. ஒரு செயல் வீரரும் கூட. எமிலி சோலாவின் 'நானா' நாவலை மொழிபெயர்த்துத் தான் ஆசிரியராகவிருந்த சுதந்திரனில் தொடராக வெளியிட்டவர். பெட்ராண்ட் ரசலின் எழுத்துகளை மொழி பெயர்த்து 'இன்சான்'னில் வெளியிட்டவர். தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத்திலும் எழுதும் பேசும் வல்லமை மிக்கவர் அ.ந.க. இருந்தும் அ.ந.க பற்றிக் குறிப்பிடுவதில் இவர்களுக்கெல்லாம் (?) ஏனிந்த தயக்கம். ஒன்று ஈழத்திலக்கியம் பற்றி அடிக்கடி ஆய்வுக் கட்டுரைகள் விமர்சனக் கட்டுரைகள் என்று எழுதுபவர்கள் பலருக்கு அ.ந.கவின் முழு விசுவரூபம் பற்றிய போதிய தகவல்கள் கிடைக்காமல் இருக்கலாம். அல்லது வேண்டுமென்றே அவரை இருட்டடிப்புச் செய்யலாம். கலாநிதி சிவத்தம்பி எழுதும் கட்டுரையொன்றில் அ.ந.க விடுபடலென்பது நிச்சயமாக ஓர் இருட்டடிப்பு. ஏனெனில் அ.ந.க.வால் கட்டியெழுப்பப்பட்ட ஈழத்து முற்போக்கிலக்கியக் கூடாரத்திலிருந்து பின்னர் வந்தவர்கள் தான் சிவத்தம்பி போன்றவர்கள். அ.ந.கவின் ஆக்கங்கள் நூல்களாக வெளிவராமலிருப்பதும் இன்றைய தலைமுறை அவரைப் பற்றி முழுமையாக முறையாக அறியமுடியாமலிருப்பதற்குக் காரணம். ஜெயமோகனோ அல்லது தேவகாந்தனோ மற்றும் ஈழத்துத் தமிழ் இலக்கியம் பற்றி எழுதும் அனைவரிடமும் நான் கேட்க விரும்புவது இதனைத் தான். நீங்களெல்லாரும் அ.ந.க பற்றி இருட்டடிப்புச் செய்வது எதனாலோ? தெரியாமல் இருட்டடிப்பு செய்கின்றீர்களா? அல்லது தெரிந்து கொண்டே செய்கின்றீர்களா? இந்நிலையில் அந்தனி ஜீவாவைப் பாராட்டத் தான் வேண்டும். அவ்வப்போது அ.ந.க பற்றி நினைவு கூர்ந்து கட்டுரைகள், தொடர்கட்டுரைகள் படைத்துள்ளார். மறைந்த அகஸ்தியரும் அ.ந.க பற்றி கட்டுரைகள் எழுதியுள்ளார். டொமினிக் ஜீவாவும் மல்லிகையில் அ.ந.க வை அட்டைப் படமாகப் போட்டு நினைவு கூர்ந்திருக்கின்றார். இளங்கீரன் தமிழகத்தில் தொகுத்து வெளியிட்ட தேசிய இலக்கியம் பற்றிய கட்டுரைகளில் அ.ந.கவின் கட்டுரைகளும் அடங்கியுள்ளன. இருந்தும் ஈழத்துத் தமிழ் இலக்கியம் பற்றி எழுதுபவர்கள் தொடர்ந்தும் தத்தமது நிலைகளிற்கேற்ப பட்டியல்கள் இட்டபடியே இருப்பதும் தொடரத் தான் செய்கின்றது. இவ்விதமே ஆளிற்காள் பட்டியல்கள் இடுவதால் நிச்சயம் ஈழத்துத் தமிழ் இலக்கியமோ அல்லது புலம்பெயர்ந்த/புகலிடத் தமிழ் இலக்கியமோ வளர்ந்து விடப் போவதில்லை.
ஈழத்துத் தமிழ் இலக்கியத்தைப் பின்வரும் காலகட்டங்களாகப் பிரித்து ஆராய்வது பயன் தருமென்பது எனது கருத்து.
1. 1940 வரையிலான காலகட்டம்.
2. 1940-1956 வரையிலான காலகட்டம்.
3. 1956-1983 வரையிலான காலகட்டம்.
4.1983-இன்றுவரையிலான காலகட்டம்.
1983ற்குப் பிற்பட்ட காலகட்டத்தை மேலும் பல உபபிரிவுகளாகப் பிரித்து ஆராய்வதும் அவசியமானது. உதாரணமாகப் புகலிடத் தமிழ்இலக்கியம், ஈழத்துத் தமிழ் இலக்கியம் எனப் பிரித்தும் ஆராய வேண்டும். மேலும் ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் ஈழத்து மலையகத் தமிழ் மக்களால் படைக்கப் பட்ட படைப்புகள் விரிவாக அதே சமயம் தனியாக ஆராயப் பட வேண்டும்
பதிவுகள் ஜூன் 2002; இதழ் 30
தொப்பூழ்க்கொடியின் ஞாபகமே இல்லாத விமர்சனம்!
- ஜீவன்.கந்தையா -
மனச்சாய்வு இல்லாத ஓர் விமர்சகனை தமிழிலக்கியத்தில் காண்பது அபூர்வம். இது அபிலாசையாகிப் போய்விடக்கூடியதாகத்தான் ரசனை வேறுபாடுகள் மனித இயல்பாக இருக்கிறது. இலக்கிய ஆய்வாளன் என்பவன் முடிவுகளை நோக்கி நகர்பவன்தான். வாசிப்பினு¡டாக கொள்முதல் செய்த முடிவுகளுக்கான சான்றாதாரக்குறிப்புக்கள், அடிக்கோடுகளுக்காக அலையும் ஒருவனைத்தான் இலக்கிய ஆய்வாளனாக இதுவரை நான் கண்டுவருகிறேன். ஆக, வாசக சாத்தியத்தில் இருந்துதான் ரசனையின் பாற்பட்ட தேடல், விமர்சக கருத்துக்களை பதிவுசெய்தலாக மாறும். ஒரு வாசகன் - அவனை தமிழக, ஈழ பாகுபாடற்றுப் பார்த்தாலும் - தான் கற்று, உள்வாங்கிய படைப்புக்களின் பொதுப்போக்கு, எதிர்ப்போக்கு பற்றிய தெளிவுகளை வெளியிட முழுஉரிமை உடையவன் ஆகிறான். வாசகன் என்ற சக்கரத்தில்தானே படைப்புக்கள் பயணிக்க முடியும்.
வேதசகாயகுமாருடைய கட்டுரைக்கு பல ஆண்டுகள் முன்பாகவே ஈழத்துத் தமிழிலக்கியம் குறித்து டாக்டர். மு.வரதராசன் எழுதியிருக்கிறார். அப்போதும் வாதப்பிரதிவாதங்கள் நடந்திருக்க வாய்ப்புண்டு. மு.வரதராசனின் கட்டுரையில் செ.கணேசலிங்கன் உச்சமாகப் பதிவு பெற்றிருக்கிறார். வேதசகாயகுமாரின் கணிப்பு வலயத்திற்குள் செ.கணேசலிங்கனே இல்லை. இது நியாயமேயாயினும் அவரவர் மனச்சாய்வும், வாசிப்பு விசாலமும்தான் காரணம் என்பது சொல்லாமலே புரியும்.
யாழ்ப்பாணத்துக் குடும்ப உறவுகள், வாழ்வியல் நெறிமுறைகளில் நேரடிப் பரிச்சயம் உள்ள ஒரு ஈழவாசகனுக்கு சாதாரணமான கதையாகத் தோன்றக்கூடிய மு.தளையசிங்கத்தின் கோட்டை சிறுகதை, வேதசகாயகுமாருக்கு அசாதாரண உச்சமாக தோற்றி ஈழச் சிறுகதை வரலாற்றுப் போக்குக்கு பிரிகோடாக வைக்கப்படுகிறது. இதே புதுயுகம் பிறக்கிறது சிறுகதைத்தொகுதியில் உள்ள பிறத்தியாள், தேடல் போன்ற சிறுகதைகள் ஈழவாசகனுக்கு முக்கியமானதாகத் தோன்ற வல்லிய காரணங்கள் சாத்தியமாக இருக்கின்றன.(மேற்படி புதுயுகம் பிறக்கிறது தொகுதியை 17 ஆண்டுகளுக்கு முன் படித்த ஞாபக பலத்தில்தான் இதைக் கூறுகிறேன்.) கோட்டை கதையின் சிறப்புக்கு அக்கதை நாயகன் தியாகு விளாடிமிர் நபக்கோவின் லொலிடா நாவலைப் படிப்பதும், ஆன்ம விடுதலை பற்றி சிந்திப்பதும் வேதசகாயகுமாரின் கவனிப்புக்கு காரணமாக இருந்திருக்க வேண்டும் எனவும் நினைக்கத்தோன்றுகிறது. ஏனெனில் கோட்டை சிறுகதைக்கு இணையாகவோ, மேலாகவோ கு.ப.ராவின் சில சிறுகதைகளை எம்மால் நினைவுகூர முடியுமல்லவா?.
தமிழிலக்கிய விமர்சனமென்பதை பெயர்ப்பட்டியல் வாயிலாக பயின்றுவரும் மந்தைத்தனத்திற்கும் நாம் ஆட்பட்டிருக்கிறோம். இத்தொண்டூழியத்தை தொடங்கிவைத்த உழவாரப்படையாளி யார் என்று நானறியேன்! பெயர் விடுபடல் அல்லது நிராகரிப்பு என்ற கோபாவேசத்தில் இருந்து எதிர்வினைகள் சரமாகக் கிளம்புகின்றன. இந்த சரமழைக்குள் இலக்கியக்கருத்துக்கள் அடியுண்டு ஓரம்போய்விடுகின்றன. இவ்வகை (அ)தர்மயுத்தத்திலும் வாசகனுக்கு நன்மைகள் கிடைக்கவே செய்கின்றன. அவன் படிக்கவேண்டிய பட்டியல் மேலும் விரிகிறது.
வேதசகாயகுமாரின் ஈழத்தமிழ்ச் சிறுகதை தொடர்பாக எழுதப்பட்ட எதிர்வினைகளைப் படித்தபோது எனக்கு எழுந்த சந்தேகம் ஒன்றை இங்கு பதிவு செய்யவிரும்புகிறேன். மேற்குறிப்பிட்ட கட்டுரை ஒரு இந்தியத்தமிழ் வாசகனின் பார்வையில் பதிவுசெய்யப்படுவதாக கட்டுரையாசிரியர் பாதுகாப்புவலயத்தை சிருஸ்டித்துவிட்டார் எனினும் கட்டுரைப்போக்கில் அவர் சிறந்த தேடலுள்ள வாசகனெனற பாதையில் தவறவிடப்பட்ட ஈழ, புகலிட பெண்படைப்பாளிகளைப் பற்றி தேவகாந்தன், வ.ந.கிரிதரன் கூட கவனிப்புச் செய்யவில்லை.
குறமகள், யோகா பாலச்சந்திரன், கோகிலா மகேந்திரன், பவானி ஆழ்வாப்பிள்ளை, ரா§ஐஸ்வரி பாலசுப்பிரமணியம், இன்றைய தலைமுறையில் ஈழத்திலும் புகலிடத்திலும் சிறுகதைகள் எழுதும் பல முக்கியமான படைப்பாளிகள் என தவறவிடப்பட்டுள்ளவர்களதுசிறுகதைகள் விமர்சக கருத்துருவங்களை ஏற்படுத்தக்கூடிய படைப்பாளிகளேயாகும். இவர்களை கருத்தில் எடுக்காமல் ஈழச்சிறுகதைகள் பற்றி விமர்சிக்க முடியாது என்பதே எனது திண்ணம்.
பதிவுகள் ஜூன் 2002; இதழ் 30
இலங்கை சிறுகதைகள் குறித்து மீண்டும்......
- ஜெயமோகன் -
இன்று வந்த கடிதத்தில் தேவகாந்தன் 'பதிவுகளி'ல் என்னுடைய எதிர்வினை தன் பார்வைக்குக் சரியானதாகவே படுகிறது என்று எழுதியிருந்தார் . ஆயினும் வரலாற்று ரீதியான கணிப்பு இன்றியமையாதது என்று படுகிறது என்றும் சொல்லியிருந்தார். என் கணிப்பும் அதுவே. வரலாற்று ரீதியான அணுகுமுறை இல்லாமல் ஓர் இலக்கியச்சூழலை புரிந்துகொள்ளமுடியாது .ஆனால் அதுமட்டுமே ஒரே இலக்கிய மதிப்பீடு / தொகுப்புமுறை என எண்ணுவது தவறு எனவே நான் குறிப்பிட்டிருந்தேன். வ. ந. கிரிதரன் , ஜீவன் கந்தையா இருவருமே மீண்டும் வரலாற்று ரீதியான விமரிசனம் தவிர மீதியெல்லாமே பாரபட்சமானவை , குரோதத்தின் பிரதிபலிப்புகள் என சொல்லியிருந்தது வியப்பு அளித்தது .ஈழத்தில் விமரிசன அணுகுமுறை உருவாக போக வேண்டிய தூரம் மிக அதிகம் என்று சொன்னால் கடும் கோபங்கள் கிளம்பும் ,ஆனால் அது உண்மை.
'பாரபட்சமற்ற விமரிசனம் ' என்ற சொல்லாட்சி வரலாற்று ரீதியான விமரிசனத்துக்குமட்டுமே செல்லுபடியாகக் கூடியது .அழகியல் விமரிசனம் என்பதே 'பாரபட்சங்களை ' உருவாக்கும் முயற்சிதான்.அதில் கண்டிப்பாக பட்டியல்கள் மாறுபடும் . இலக்கியத்தின் பணி சமூகத்தின் [கலாச்சாரத்தின் ] ஆழ்மனதில் இறங்கிச் சென்று அதன் போக்குகளை அறிவதும் அந்த சாராம்சத்திலிருந்து அறவியலையும் இலட்சியக்கனவுகளையும் உருவாக்குவதும் தான் என நான் நம்புகிறேன். இலக்கியம் செய்யவேண்டியது சமூகத்தின் பொதுப் போக்குகளையும் நம்பிக்கைகளையும் முடிந்தவரை எதிர்ப்பது மட்டுமே என்று சாரு நிவேதிதா நம்புகிறார் . அளவுகோல்கள் மாறுபடும்போது பட்டியல்களும் மாறுபடும் .அதில் தவறுமில்லை .
மாறுபட்ட அழகியல் கோணங்கள் ,அதன் விளைவான மாறுபட்ட பட்டியல்கள் எப்போதுமே தமிழக இலக்கியச்சூழலில் உண்டு .அவற்றுக்கிடையேயான விவாதங்கள் வழியாகத்தான் அழகியல் விமரிசனம் முன்னகர்கிறது. [அவ்விவாதங்கள் தமிழகத்தின் 'குடும்ப ' சூழலில் தனிப்பட்ட கோபதாபங்களாக மாறுவதையும் மறுக்கவில்லை] படைப்புகள் குறித்த இங்குள்ள சூழலின் பொதுமதிப்பீடு எப்போதுமே அலையில் மிதக்கும் புள்ளிபோல உள்ளது . ஒட்டு மொத்தமாக ஏற்கப்பட்ட படைப்பாளி எவருமேயில்லை . எத்தனையோ உதாரணங்களை காட்டலாம் . முன்னோடிகளைப் பற்றியேகூட! பாரதியை ஒரு கவிஞராக ஏற்காமல் அவரது உரைநடையை மட்டுமே அங்கீகரித்த படைப்பாளிகள் இங்குண்டு . புதுமைப்பித்தனை அசோகமித்திரனும் ,சா. கந்தசாமியும் , நகுலனும், என் சிவராமனும் , சமயவேலும், இன்னும் எத்தனையோ முக்கிய படைப்பாளிகளும் விமரிசகர்களும் முதன்மையான படைப்பாளியாக ஏற்றுக் கொள்ளவில்லை . மௌனியை அழகிரிசாமி ஒரு படைப்பாளியாகவே கருதவில்லை . ஞானியும் , க .பூரணசந்திரனும் எம் டி முத்துக்குமாரசாமி இன்னும் பல படைப்பாளிகளும் மௌனியை நிராகரிப்பவர்கள் . என் பார்வையிலும் மௌனி மிக குறுகிய வட்டத்தில் அதிகபட்சம் ஐந்து நல்லகதைகளை மட்டும் ஆக்கிய ஓர் எளிய படைப்பாளி மட்டுமே .சுந்தர ராமசாமியைப் பற்றியும் அசோகமித்திரனைப்பற்றியும் வெங்கட் சாமிநாதனுக்கு உயர்வான அபிப்பிராயம் இல்லை . சுந்தர ராமசாமிக்கு வெ. சாமிநாதனால் மிக முக்கியமான படைப்பாளியாக கருதப்படும் தி. ஜானகிராமன் கனவு செய்யும் கலைஞர் மட்டுமே .
இத்தகைய மாறுபட்ட கோணங்கள் மலையாளத்திலும் உண்டு . இது ஒரு இலக்கியச்சூழல் நான்கு திசையிலும் விரிந்துபரவுவதை , அதன் தேடல்களில் உள்ள திசைக்கோணங்களை ருசிகளில் உள்ள நிறபேதங்களை காட்டுவதாகும். இந்த பேதங்களைமீறித்தான் முக்கியப்படைப்பாளிகள் தங்கள் இடத்தை அடைகிறார்கள்
தி .ஜானகிராமனுக்கும், லா. ச ராமாமிருதத்துக்கும் வெங்கட் சாமிநாதன் கோலோச்சியகாலத்தில் இருந்த இலக்கிய முக்கியத்துவம் இன்று இல்லை . இவர்கள் எனக்கு முக்கிய படைப்பாளிகளுமல்ல. ஆனால் யார் என்ன சொன்னாலும் இவர்கள் இடம் ஒரு எல்லக்கு கீழே வருவதும் இல்லை . இன்று ப .சிங்காரம் மறுகண்டுபிடிப்புக்கு ஆளாகி பரவலாக பேசப்படுகிறார் [அதற்கு தமிழினியின் மறுபதிப்பும் எனது கட்டுரையும் வேதசகாயகுமாரின் கட்டுரையும் காரணம் என சொல்லமுடியும் ] ஆனால் அவரது இடம் ஒரு எல்லைக்குமேல் போகவும் போகாது . மேலும் கீழுமுள்ள இவ்விரு எல்லைக்கோடுக்குள் எல்லைக்குள் தொடர்ந்து மாறியபடியே இருக்கிறது இலக்கியவாதிகளின் இடம் . உலகில் எங்குமே ஆரோக்கியமான இலக்கியச்சூழல் இப்படித்தான் உள்ளது என இலக்கியவிமரிசன அறிமுகம் உள்ளவர்கள் அறிவார்கள் . இதை ஒற்றுமையின்மை என்று புரிந்துகொள்ளுவது ஒரு வகை அப்பாவித்தனம் மட்டும்தான்.
ஈழப்படைப்பாளிகளைப்பற்றி இப்படி மாறுபட்ட கருத்துக்களும் விவாதங்களும் நடந்துள்ளனவா என தயவு செய்து அங்குள்ளவர்கள் எண்ணிபார்க்க வேண்டும். ஈழச்சூழல் குறித்து இப்படிப்பட்ட மாறுபட்ட பற்பல கோணங்களில் அணுகுமுறைகள் உள்ளனவா? அதற்கு காரணம் வரலாற்று கணக்கெடுப்பு மட்டுமே விமரிசனம் என்ற பார்வைதான் என்று சொல்லமுடியும் . 'பதிவுகளில்' காணக்கிடைப்பதும் இதுவே.அத்துடன் விமரிசனம் என்பது ஒரு சதியின் பாற்பட்டது என்ற நம்பிக்கை அங்கு வேரோடியுள்ளது என்பதையும் காணமுடிகிறது . அது மார்க்ஸிய விமரிசனத்திலிருந்து கிடைக்கப் பெற்ற மனச்சித்திரம் .அவர்களுக்கு அரசியல் நடவடிக்கையின் [அதில் சதிக்கு அனுமதி உண்டு ] ஒரு பகுதிமட்டும் தான் இலக்கியம் .அதேபிம்பத்தை அவர்கள் மற்றவர்கள் மீதும் சுமத்துகிறார்கள். விமரிசனத்தை இப்படி பார்ப்பதன் மூலமாக உண்மையான விமரிசனத்தை தடுக்கும் மனநிலையை உருவாக்குகிறார்கள் . பிறகு எல்லாருக்கும் ஏதோ ஒரு நாற்காலியை போட்டுவிடும் வழ வழா விமரிசனம் உருவாகிவருகிறது.
ஈழ விமரிசனத்தின் வழவழப்புக்கு எனக்கு கா.சிவத்தம்பி முக்கிய உதாரணம் . தமிழ்நாட்டில் அவருக்கு சமானமான உதாரணம் 'தபால்கார்டு தாத்தா ' வல்லிக்கண்ணன் மட்டுமே . 'எரிமலை' இதழில் என் 'விஷ்ணுபுரம்' நாவலை பாராட்டி ஓரிரு வரி எழுதிய சிவத்தம்பி சில மாதம் கழித்து இந்தியா வந்து 'தாமரை '[இந்தியகம்யூனிஸ்ட் கட்சி ] இதழில் அது ஒரு பிற்போக்கு படைப்பு என்று சாடிவிட்டு , சூட்டோடு 'ஓம் சக்தி' இதழுக்கு அதை அவர் படிக்கவில்லை ,படிப்பதற்கு சிரமமாக இருப்பதனால் அது ஒன்றும் முக்கியபடைப்பு அல்ல என்று எழுதியிருந்தார் . [இதழ்களின் உள்ளக்கிடக்கையை புரிந்து கொள்வது எத்தனைபெரிய கலை] மூன்று இதழ்களும் எனக்கு ஒரே சமயம் கிடைத்தன . நண்பர்களுக்கு பிரதியெடுத்து கூட அனுப்பியிருந்தேன். ஒரேமாதம்'செம்மலர்' இதழுக்கு திராவிட இயக்கம் தமிழை சீரழித்தது அண்ணாதுரை ஆபாசப்பேச்சாளர் என்றும் , 'சாரதா' இத்ழுக்கு திராவிட இயக்கத்தின் தமிழ்ச் சேவை முக்கியமானது என்றும் பேட்டியளித்த வல்லிக்கண்ணனை இவ்வாறு சிவத்தம்பி வென்றதை நாங்கள் கொண்டாடியது நினைவுள்ளது.
கறாரான விமரிசனம் மூலமே இலக்கியத்தின் தரம் முன்னேற முடியும் . தமிழக இலக்கியச்சூழலில் எப்போதுமே ஒரு முன்னகர்வு இருந்துள்ளது .அதற்கு காரணம் இங்குள்ள 'இரக்கமற்ற' விமரிசனங்களே . உண்மையில் வரலாற்று விமரிசனம் செய்யவேண்டியவர்கள் இலக்கியவாதிகளே அல்ல , கல்லூரி பேராசிரியர்கள்தான் . ஈழத்தின் துரதிருஷ்டம் அங்கு கல்வித்துறையினரே முக்கிய விமரிசகர்களாகவும் இருந்தது தான். விமரிசனங்களை கண்டு அச்சம் கொள்ளமல் , அவற்றுக்கு உள்நோக்கம் கற்பித்து நிராகரிக்க முயலாமல், அவற்றுக்கு பின்னால் உள்ள அளவுகோல்களையும் அழகியல் கொள்கைகளையும் பரிசீலிக்க முயல்வது ஈழ இலக்கிய சூழலுக்கு நல்லது.
பட்டியல்கள் குறித்து ஒன்று சொல்ல வேண்டும் . பட்டியல்கள் பற்றி அபத்தமாக ஒரு விமரிசனம் சிலரால் தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது . இவர்கள் வேறு எங்காவது இலக்கியம் என ஏதாவது படிக்கிறார்களா என்ற ஐயமே ஏற்படுகிறது . எனக்குத் தெரிந்து பட்டியல்கள் வராத இலக்கியசூழல் உலகில் எங்கும் இதுவரை இல்லை. ஒவ்வொரு வருடமும் 'டைம்' போன்ற இதழ்களின் பட்டியல் முதல் உள்ளூர் 'ஜென்டில்மேன்' இதழின் பட்டியல் வரை நான் ஐம்பது இலக்கியப்பட்டியல்களை ஆங்கிலத்தில் சேகரிப்பது உண்டு . மலையாளத்திலும் கன்னடத்திலும் ஓணம் பூஜா சிறப்பிதழ்களிலும் வருட முடிவுகளிலும் இலக்கியப்பட்டியல்கள் வெளிவரும் .அவை இல்லாமல் எவருமே இலக்கியம் படிக்க முடியாது . 'பதிவுகளி'ல் கட்டுரை எழுதிய இருவருமே கூட பட்டியல்தான் தருகிறார்கள் .ஆனால் பொறுப்பற்ற அரைகுறையான பட்டியல் .வெறும் நினைவுக்கூர்தல் .ஆனால் க. நா. சுவின் பட்டியல் மிக திட்டவட்டமான அழகியல் அளவுகோலின் விளைவு. ஆகவேதான் முப்பது வருடம் தாண்டியும் இரு விமரிசன அலைகள் அடித்து ஓய்ந்த பிறகும் அவரது முடிவுகளுக்கு முக்கியத்துவம் மாறவில்லை.
விரிவான விமரிசன விவாதங்கள் நடக்க இதழ்களில்லாத தமிழில்[ பல படைப்பாளிகள் குறித்து ஒரு கட்டுரைகூட தமிழில் வந்தது இல்லை . 'ப சிங்காரம் ', 'ஆ.மாதவன்' போன்ற பலர் குறித்து முதல் ஆய்வு கட்டுரையை நான்தான் எழுதியுள்ளேன்] பட்டியல்களே இலக்கிய படைப்புகளைத் தொடர்ந்து புதிய தலைமுறை வாசகர்களுக்கு நினைவூட்டி அவற்றை நிலைநிறுத்தின என்பது மிகையல்ல.'க நா.சு' , 'வெ சாமிநாதன்' ,'சுந்தர ராமசாமி' எல்ல்லாருமே பட்டியல்கள் அளித்திருக்கிறார்கள் .அது இனியும் தொடரும் . பட்டியலில் முக்கியத்துவமென்ன என்று இப்போது இந்த விவாதத்தை வைத்தே சொல்லலாம் . அழகியல் ரீதியாக சுயமான அளகோல்களை உருவாக்கிக் கொண்டு அவற்றின் அடிப்படியில் துணிவுடன் தனக்கு முக்கியமாக பட்ட படைப்பாளிகளின் பட்டியலை முன்வைக்கும் திராணி உள்ள விமரிசகர்கள் இல்லாமையே இந்த பிரச்சினை ஈழத்தில் எழக் காரணம் . பட்டியல்கள் வெளிவந்து அவற்றிற்கு மாற்றுத்தரப்புகள் முன்வைக்கப்பட்டு விவாதங்கள் நடைபெற்றிருந்தால் எந்த பெயரும் விடுபட்டிருக்காது . எந்த கருத்தை யார் முன்வைத்தாலும் ''புங்குடுதீவுக்கும் அங்குடு தீவிலே இருந்த கந்தையா வாத்தியார் என்பவரை கணக்கில் கொள்ளாமல் எந்தக் கருத்தும் செல்லுபடியாகாது '' போன்ற எதிர் விமரிசனங்கள் எழ வாய்ப்பிருக்காது .
பின் குறிப்புகள்
1] வ. ந .கிரிதரன் அவர்கள் கவனத்துக்கு அவர் குறிப்பிடும் அ .ந. கந்தசாமி அவர்களை அங்கு முக்கியமானவராக ஏராளமானோர் கருதி பேசியிருந்து வேதசகாயகுமார் அவரை தவிர்த்திருந்தால் அது முக்கியமான கேள்விதான் . அங்கேயே அவர் பேசப்படவில்லை எனும்போது பிரச்சினை அங்குள்ள இலக்கியவிமரிசனம் சார்ந்தது மட்டுமே . இப்படித்தான் சாவகச்சேரி சுப்பிரமணிய பிள்ளையைப்பற்றி வல்வெட்டித்துறை ஞானப்பிரகாசத்துக்கும் ஒரு கருத்து இருக்கிறது .அதை அவர்தான் நிலைநாட்ட வேண்டும் . விமரிசகன் என்ன செய்யமுடியும்?
2] வேதசகாய குமாரை இனியேனும் ஆய்வாளர்கள் தேவசகாய குமார் என்று சொல்லாமலிருக்க வேண்டுகிறேன் .[ தேவசகாயகுமாரில் இரண்டாவது மூன்றாவது எழுத்துக்களான 'வ'வும் 'த'வும் தட்டச்சு செய்யும் போது ஏற்பட்ட தவறினால் இடம் மாறிவிட்டதைச் சுட்டிக் காட்டியதற்கு நன்றிகள். ஆனால் அவ்விதம் இடம்மாறியபோதும் கூட வேதத்திற்கும் தேவனுக்கும் இருக்கும் சம்பந்தம் காரணாமாக பொருளில் அவ்வளவு மாற்றம் ஏற்படாததைக் கவனித்தீர்களா? இருந்தாலும் தவறினைச் சுட்டி காட்டியதற்கு நன்றி.- ஆசிரியர் - ]
பதிவுகள் ஜூன் 2002; இதழ் 30
ஓரு வாசகனின் சில உளறல்கள்!
- டிசே தமிழன் -
ஜெயமோகன் அழகியல் விமர்சனம் என்பதே பாரபட்சங்களை உருவாக்குவதே என்று வாதிடுகிறார், அதனைப்போன்றே பாரபட்சங்களை குறைந்தளவு உருவாக்காத வரலாற்று விமர்சனத்தை வ.ந.கியும், ஜீவன் கந்தையா அவாவுவதில் என்ன தப்பு உள்ளது? அவ்வாறான அழகியல் விமர்சனத்தால் உண்மையான ஈடுபாட்டுடன் இலக்கிய ஊழியம் செய்தவனை இலகுவாய் புறந்தள்ள முடியுமல்லவா? அவ்வாறெனில் அழகியல் விமர்சனத்தில் ஒரு குரூரம் இழையோடுகிறதல்லவா? இலக்கியத்தின் பணி ஆழ்மனதில் இறங்கிச்சென்று, அதன் போக்குகளை அறிவது என ஜெயமோகனிற்கு இருந்தால், போரின் அவலம் நம்மில் புதைய நாம் வேறொரு வடிவமாய் இலக்கியத்தை கொண்டு அதன் வழியே நமக்கான விமர்சனத்தையோ, அல்லது வேறு வடிவங்களைத் தேடலோ இயல்பானதே. புங்குடுதீவுக்கும் .. என்று எதுகைமோனை நமக்கு பொருத்தமாயிருப்பின், வசதியாயிருப்பின், ஜெயமோகனிற்கு அழகியல் இழையோட எழுதும் அண்ணாமலைகள் தவிர வேறோருவரும் இலக்கியம் படைத்தவனில்லை. என்ன ஈழத்து விமர்சகர்கள் தமக்கு விரும்பாத பெயர்களை தவிர்க்கிறார்கள் என்றால், ஜெயமோகன் பெயர்களைக் குறிப்பிட்டு நிராகரிக்கிறார். அவ்வளவுதான் வித்தியாசம். ஜெயமோகனின் பட்டியல்களும், நிராகரிப்புக்களும் எவ்வாறு குரூரமானவை என்று நாங்களும் இலகுவாய் சொல்லமுடியுமல்லவா?
அண்மையில் அவரது நாவல்கள் குறித்த நூலை வாசித்ததும், அதில் எவருமே தமிழில் நாவல் எழுதவில்லை என்று வரையறை செய்கிறார். (விரிவான கட்டுரை சு.வெங்கடேசனின் திண்ணை கட்டுரை பார்க்க). எல்லா நதிகளும் கடலில் பாய்வதுபோல எல்லா ஆயத்தங்களும் ஜெயமோகனிற்கு தனது நாவல்களை நிலைநிறுத்த உதவுகிறது. அதிலும் விஷ்ணுபரத்தின் இரண்டாம் பதிப்பில், தனதுநாவல் உலகதரத்திற்கு நிகரானது என்கின்ற அலட்டல்கள் அல்லது ஆன்மீக எதிர்வுகூறல்கள். வாசகனிற்கான வெளிகளை அகலத்திறப்பதாய் தானே இன்றைய இலக்கியங்கள் இருக்கின்றெனில், இந்த அலட்டல்களைப் பார்க்கும் ஒரு பாமர வாசகன் எங்கே கருத்துக்களை உதிர்க்க போகின்றான்? நான் ஒரு உலக இலக்கியம் படைத்திருக்கின்றேன், அற்ப மானிடா உனது வார்த்தைகள் என்னிடம் செல்லுபடியாகாது என்ற அறிவின் அகங்காரங்கமாகவே அதனை நான் எடுத்துக்கொள்கின்றேன்.
அண்மையில் ஜெயமோகன், 'திண்ணை'யில் சிறுபான்மை இலக்கியமென ஒரு கட்டுரையை மீள்பிரசுரம் செய்திருந்தார். நான் முதலிலேயே இந்த சிறுபான்மை இலக்கியம் என்று வரையறை செய்யப்படுவரை முற்றிலுமாய் நிராகரிக்கின்றேன். என்னதான் ஆயிரம் காரணங்கள் கூறப்பட்டாலும் அக மனதில் ஆழங்களைத் தேடிப்போகின்றவருக்கு, அங்கேயும் குருதியின் நிறம் சிறுபான்மை, பெரும்பான்மை என்று இருப்பதாய் நாம் அடையாளங்கொள்ளலாம் தானே?
பாருங்கள் அந்த இலக்கியப்பட்டியலில் பல நிராகரிப்புகள். நான் மிகவும் நேசிக்கும் மனிதர், பிறகு கவிஞர் இன்குலாப் பற்றிய எந்தக்குறிப்பும் இல்லை. இன்குலாப்பும் தன்னை இப்படி சிறுவட்டத்திற்குள் அடக்க விரும்பமாட்டார் என்று தெரிந்தாலும் பெயர் எங்கே இல்லாமற்போனது? எல்லா சனாதனிகளும் வாய்மூடி மெளனமாய் இருக்க, ஹெச்.ஜி.ரசூலுக்கு ஆதரவாய் காரசாரமாய் ஒரு கடிதம் எழுதியவர் என்பது கூட ஜெயமோகனின் ஆழ்மனதில் சலனம் செய்யாதது வியப்பு. (அழகியல் எழுதாமல் பிரச்சாரம் செய்தார் என்று ஒரு காரணம் ஜெயமோகன் சொல்லலாம்). அங்கே பகுப்புமறை அழகியல், அழகியலற்றது என்று இல்லை என நான் நம்புகின்றேன்.
இறுதியாய் சின்ன வேண்டுகோள் (இந்த விவாத்திற்கு வெளியில் என்றாலும்) மாற்றுக்கருத்துக்களை கலந்துரையாடல்களில் செவிகொடுத்து கேட்கமுடியாது என்கின்ற இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் போன்றவர்களுக்கு எல்லாம் ஆராய்ந்து அலசி ஐம்பது பக்கக்கடிதங்கள் எழுதும் தாங்கள் தயவுசெய்து உங்களின் அகண்டபாரதத்தில் இருக்கும் குஐராத்தில் முஸ்லிம்கள் மீது நடக்கும் வன்முறைகுறித்தும், ஆர்.ஆர்.எஸ், பா.ஐ.க வக்கிரங்கள் குறித்து ஆகக்குறைந்த ஒரு பக்க கட்டுரை எழுதினாலே நம்மைப் போன்றவர்களுக்கு நிம்மதியாக இருக்கும். அரசியல் எனது களமல்ல என்று தயவுசெய்து கூறாதீர்கள். அரசியல் மூலமே சமூகமாற்றம் என்ற பெரியாரையே (அறுவைச் சிகிச்சை கடப்பாரை: ஈ.வெ.ராவின் அணுகுமுறை) ஒரு பிடி பிடித்தவரல்லவா?
பதிவுகள் ஜூன் 2002; இதழ் 30
விவாதம் தொடர்கின்றது.....
- வ.ந.கிரிதரன் -
ஜெயமோகனின் கருத்துகள் எனக்கு வியப்பினை அளிக்கின்றன. முதலாவதாக நான் எனது கருத்தில் வரலாற்று ரீதியிலான விமர்சனம் தான் சரி. அழகியல் ரீதியிலான விமர்சனம் பிழை என்று எந்த இடத்திலும் வலியுறுத்தவில்லை. வலியுறுத்தியதாக எண்ணி ஜெயமோகன் அதற்கொரு விளக்கம் அளித்திருப்பது ஆச்சரியகரமானது. படைப்பாளிகளைப் பற்றிய பட்டியல் பல்வேறு வகைகளில் இருப்பது தவிர்க்க முடியாததுதான். அது இயல்பானதும்தான். ஆனால் தமிழ் இலக்கிய வரலாற்றை ஆய்வு செய்யும் ஒருவர் இலக்கியத்தின் பல்வேறு போக்குகளிலும் எழுதும் எழுதிய படைப்பாளிகளைப் பற்றிய தகவல்களைத் தந்திருக்க வேண்டியது மிகவும் அவசியம். ஆய்வு நூல்களில் சகல பிரிவினரும் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் விமர்சகர்களின் பார்வைகளிற்கேற்ப பட்டியல் மாறுபடுவதும் தவிர்க்க முடியாததே. ஆனால் ஆய்வாளர்கள் பாரபட்சமாகப் பட்டியலிடுவது தவறானது. ஜெயமோகனே குறிப்பிட்டது போல் புதுமைப் பித்தனை ஏற்காதவர்கள் பாரதியை ஏற்காதவர்கள் தி.ஜானகிராமனை அங்கீகரிக்காதவர்களென..இலக்கியச் சூழல் காணப்பட்டாலும் இவர்களெல்லாரும் மீண்டும் சிலரின் முயற்சிகளினால் இனங்காணப்பட்டு வெளிக்காட்டப் பட்டவர்களென்பதையும் மறப்பதற்கில்லை. ஜெயமோகனே ப.சிங்காரம் போன்றவர்கள்பால் கவனம் திரும்புவதற்கு காரணமானவர்களில் ஒருவர். எனவே ஒரு சிலரால் திட்டமிட்ட முறையில் இருட்டடிப்புச் செய்யப் படும் முக்கியமான படைப்பாளிகளை இனங்காட்டுவதென்பது சில நேரங்களில் வரலாற்றினொரு முக்கியமானதொரு தேவையாகவும் இருந்து விடுகிறது. அதற்காக அத்தகைய முயற்சிகளை வரலாற்றுப் பார்வையை வலியுறுத்துவதாகக் கருதிக் கொண்டு தர்க்கிப்பது சரியானதொரு போக்கல்ல.
மேலும் ஈழப் படைப்புகளைப் பற்றி மாறுபட்ட விவாதங்கள் நடந்துள்ளனவா என ஜெயமோகன் கேட்பதும் ஜெயமோகன் எவ்வளவுதூரம் ஈழத்துப் படைப்புகள் பற்றி அறிந்திருக்கின்றாரென்னும் சந்தேகத்தை எழுப்புகின்றன. அதே சமயம் இன்னுமொரு கேள்வியினையும் எழுப்புகின்றது. ஜெயமோகன் ஈழத்துப் படைப்புகள் பற்றிப் போதிய அளவில் அறிந்திராத பட்சத்தில் எவ்விதம் அவை பற்றிச் சரியாகக் கருத்துகள் கூற முடியுமென்றொரு கேள்விதான் அது. ஈழத்து இலக்கியச் சூழல் பற்றி அறியாதவர்கள் பட்டியலிடும் அபாயத்தைத் தான் என் முன்னைய கட்டுரை எழுப்புகின்றது. இதனை ஜெயமோகன் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் ஈழத்திலும் பல்வேறு சமயங்களில் மாறுபட்ட விவாதங்கள் பல நடந்துள்ளன. 'முற்போக்கு', 'நற்போக்கு', மு.த.வின் இலக்கியப் போக்கு (''ஏழாவதாண்டு இலக்கிய வளர்ச்சி) என பல விவாதங்கள் அங்கு நடக்கத் தான் செய்தன. ஜேசுராசாவின் 'அலை'யிலும் கைலாசபதிக்கெதிராக மாற்றுக் கருத்துகள் பல முன் வைக்கப் பட்டதாக ஞாபகம். ஆனால் அண்மைக் காலமாக குறிப்பிடத்தக்க வகையில் நடந்ததாகத் தெரியவில்லை. ஆளுக்காள் முதுகு சொரிவதில் தான் காலத்தைக் கடத்திக் கொண்டுள்ளார்கள். கொண்டிருக்கின்றார்கள். ஆனால் என்னைப் போல் கேள்வி கேட்க முயன்றாலோ , மாறுபட்ட விவாதங்களை நடத்த முனைந்தாலோ அதனை 'வரலாற்றுப் பார்வை' என மறுத்துக் கொண்டே 'ஈழத்தில் மாறுபட்ட விவாதங்கள்' நடந்துள்ளனவா எனக் கேள்விகள் கேட்கின்றீர்கள்.
மேலும் ஒரு விடயத்தைப் பற்றிப் போதிய அறிவின்றிப் பட்டியலிடுவது ஏற்றுக் கொள்வதற்கில்லை. ஏனெனில் அது தவறான நிலையினைப் படம் பிடித்துக் காட்டி விட வாய்ப்பாகவிருந்து விடுகின்றது. ஒரு படைப்பாளியின் படைப்புகளை வாசித்திருக்காத ஒருவர் அப்படைப்பாளியை நிராகரிப்பது சரியானதல்ல. ஆனால் வாசித்து விவாதங்களினூடு நிராகரித்தால் அதனை அங்கீகரிக்கலாம். ஆனால் நிச்சயமாக அப்படைப்பாளியின் பார்வை எதுவாக இருந்த போதிலும், காத்திரமாக, பாதிப்பினை ஏற்படுத்தும் வகையில் இருந்திருந்தால் அவரது பெயர் குறிப்பிடப் படவேண்டுமென நினப்பதிலென்ன தவறு?
இந்நிலையில் ஜெயமொகன் 'வ. ந .கிரிதரன் அவர்கள் கவனத்துக்கு அவர் குறிப்பிடும் அ .ந. கந்தசாமி அவர்களை அங்கு முக்கியமானவராக ஏராளமானோர் கருதி பேசியிருந்து வேதசகாயகுமார் அவரை தவிர்த்திருந்தால் அது முக்கியமான கேள்விதான் . அங்கேயே அவர் பேசப்படவில்லை எனும்போது பிரச்சினை அங்குள்ள இலக்கியவிமரிசனம் சார்ந்தது மட்டுமே ' என்று கூறுவது என் வியப்பினை மேலும் அதிகரிக்கவே செய்கின்றது. நான் ஜெயமோகனைப் பார்த்து 'ஜெயமோகன் கூறுவது போல் அவர் குறிப்பிடும் புதுமைப் பித்தன்..' என்று கூறுவது புதுமைப்பித்தனைப் பற்றி நான் எவ்வளவு ஞானசூன்யமாக இருக்கின்றேனென்பதைப் புலப்படுத்தும். அதே சமயம் புதுமைப் பித்தனைப் பற்றி நன்கு அறிந்திருந்து நான் அவ்விதம் கூறியிருந்தால் அது புதுமைப்பித்தனை நான் எவ்வளவுதூரம் இகழ்கின்றேனென்பதை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கும். ஜெயமோகனைப் பொறுத்த அளவில் அவர் அ.ந.க. விடயத்தில் ஞானசூன்யமாகவிருக்கின்றாரெனப் புரிந்து கொள்ள முடிகின்றது. மிகவும் ஆச்சர்யம். எதையும் ஒருவிதத் தீவிரத்துடன் வாசித்து மிக நீண்ட கட்டுரைகளை வழங்கும் ஜெயமோகன் ஈழத்தின் முக்கிய படைப்பாளிகளில் ஒருவரான அ.ந.க. பற்றி அறிந்திராதது ஆச்சர்யம் தான். தமிழகத்தில் அ.ந.க.வின் படைப்புகள் பல வெளிவந்து அவர் சரியாக முறையாக இனங்காணப்படும் பொழுது ஜெயமோகன் நிச்சயமாக உணர்ந்து கொள்வார். ஆனால் அதுவரையில் அ.ந.க பற்றிப் பல படைப்பாளிகள் கூறியிருக்கும் கூற்றுக்களிலிருந்து ஜெயமோகன் அ.ந.க. பற்றி அறிந்து கொள்வதைத் தவிர வேறு வழியேதுமிருப்பதாகத் தெரியவில்லை. அதற்காகத் தான் என் கட்டுரையில் அ.ந.க. பற்றிய படைப்புகள், ஏனைய முக்கியமான படைப்பாளிகளின் கட்டுரைகள் பற்றியெல்லாம் குறிப்பிட்டிருந்தேன். ஆக ஈழத்தில் அ.ந.க பற்றி மிக முக்கியமாகப் பலரால் குறிப்பிடப் பட்டிருக்கின்றதென்பதைத் தான் அ.ந.க பற்றிய எனது தகவல்கள் எடுத்துரைக்கின்றன. இந்நிலையில் ஜெயமோகனின் கூற்றுப் படி இவ்விதமாகப் பலரால் பேசப்பட்ட ஒருவரான அ.ந.க பற்றி வேதசகாய குமார் தவிர்த்திருப்பதாகத் தெரிவதால் ஜெயமோகனே கூறுவது போல் வேதசகாயகுமாரின் கட்டுரை பற்றிய முக்கியமான கேள்வியொன்றினை எழுப்பத் தான் செய்கின்றது. மேலும் அ.ந.க பற்றிக் கதைக்கப்பட்ட அல்லது எழுதப்பட்டதில் சிறு துளிதானும் எழுதப் படாதவர்களைப் பற்றியெல்லாம் வேதசகாயகுமார் நிறைய எழுதியிருப்பதால் (ஜெயமோகனின் அர்த்தத்தில்) அது பற்றியும் இன்னுமொரு கோணத்தில் இன்னுமொரு முக்கியமான கேள்வியொன்றினையும் எழுப்பத் தான் செய்கின்றது.
மேலும் புலப்பெயர்ந்த இலக்கியச் சூழல் நன்கு வளர்ந்து வருகின்றதென்பது என் கருத்து. ஆனால் பிரச்சினை என்னவென்றால்... இங்குள்ள படைப்பாளிகளில் பலர் தமிழகப் படைப்பாளிகள் (உங்களையும் சேர்த்துத் தான்) பலரின் கால் கை பிடித்து விடுவதன் மூலம் தங்களை இனங்காட்ட முனைந்து நிற்கின்றார்கள். அதனால் தான் தொடர்ந்தும் உண்மையினை உணராத நிலையில் தொடர்ந்தும் பட்டியலிடுகின்றீர்கள். அதனால் தான் தொடர்ந்தும் சேரனையும் ஜெயபாலனையும் தவிர உங்களுக்கெல்லாம் வேறு ஈழத்துக் கவிஞர்களையெல்லாம் தெரியாமலிருக்கும் போக்கு தென்படுகின்றது. இதனால் தான் எண்பதுகளின் இறுதியில் பேராசிரியர் சிவத்தம்பியால் அறிமுகப் படுத்தப் பட்ட றஞ்சகுமாரைப் போன்ற ஒரு சிலர் தவிர பலரை உங்களுக்கெல்லாம் தெரியாமலிருக்கின்றது. அதனைத் தான் தவறென்கின்றேன். அந்தத் தவறினைத் தான் இருட்டடிப்பு என்கின்றேன். அதனை வரலாற்றுப் பார்வை தான் சரியென நான் நியாயப் படுத்துவதாகக் கொச்சைப் படுத்துவது நியாயமானது தானா?
பதிவுகள் ஜூன் 2002; இதழ் 30
விவாதத்துக்கு வெளியே போகும் ஐயங்கள்
- ஜெயமோகன் -
வ.ந.கிரிதரன் அவர்களுடைய கருத்துக்களில் மேற்கொண்டு ஏதும் சொல்வதற்கு இல்லை . இந்தப்பதிலில் கூட அவர் ஈழச்சிறுகதைகளைப்பற்றிய வரலாற்றுப்பதிவை பற்றியே பேசுகிறார் . சில விஷயங்களை தெளிவு படுத்த மட்டும் விரும்புகிறேன். ஈழ இலக்கியம் குறித்த எந்தக்கருத்தும் இங்கு வந்து சேர்ந்த படைப்புகளை வைத்தே முன்வைக்க முடியும் ,அதுவே சாத்தியம் என்பதே என் தரப்பு. அங்கு பேசப்படும் படைப்பாளி மட்டும் தான் இங்கு வந்துசேர்கிறான். அங்கு பேசப்படுதல் என்பது கூட அப்படைப்பாளியின் ஒரு தகுதிதான். ரஞ்சகுமாரும் சட்டநாதனும் அப்படிப் பேசப்பட்டதனால்தான் இங்கு வந்து சேர்ந்தனர் .பேசப்படாதவர்களை இங்குள்ள வாசகர்கள் கவனிக்கவில்லை என்றால் அது இங்குள்ளவர்களுடைய தவறல்ல .
உதாரணமாக ஈழத்தில் இருந்து தமிழக இலக்கியம் பற்றிபேசிய எவருமே புலம்பெயர்தல் போன்ற முக்கியமான அனுபவங்களை எழுதிவராக இருந்தபோதிலும்கூட ப. சிங்காரத்தைப்பற்றி பேசியதில்லை . அதை ஒரு குறையாக நான் சொல்லமாட்டேன்.சிங்காரம் இப்போதுதான் இங்கு பரவலான கவனிப்பை பெறுகிறார் . வேதசகாயகுமார் ஈழ இலக்கியம் பற்றி எழுதியதுபோலவே அதைவிட தீவிரமாக கருத்துக்களையும் மதிப்பீடுகளையும் முன்வைத்து தளையசிங்கம் பேசியிருக்கிறார் . ஆனால் ஜெயகாந்தனைப்பற்றி விரிவாகப் பேசும் அவரது கண்ணுக்கு அசோகமித்திரனோ சுந்தர ராமசாமியோ , கி . ராஜ நாராயணனோ படவேயில்லை ! இத்தனைக்கும் அவர்கள் இங்கு பிரபலமாகவே இருந்தார்கள். மூவருமே வணிக இதழ்களிலும் எழுதினார்கள். அவர்களைப்பற்றி விமர்சகர்கள்பேசியுமிருக்கிறார்கள் .
ஜெயகாந்தனுக்கு எதிராக க நா சு முன்வைத்த விரிவான விமரிசனப்போர் இங்கு அந்த அளவுக்கு பிரபலமாக இருந்தும் கூட அது தளையசிங்கத்துக்கு தெரிந்திருப்பதன் தடையங்களேதும் அவர் எழுத்துக்களில் இல்லை . இதைவைத்து தளையசிங்கத்தின் கருத்துக்களை முற்றாக நிராகரிக்க நான் முயல மாட்டேன் .தமிழகத்தில் எவருமே முயலவில்லை .தளையசிங்கத்தின் 'கண்ணுக்கு படாத' சுந்தர ராமசாமிகூட அதை செய்யத்துணியவில்லை . சேய்மை தளைய சிங்கத்துக்கு அளித்த வசதி மூலம் அவர் கண்டவை என்ன என்று பார்க்கவே நான் முயல்வேன். ஆனால் ஒப்பு நோக்கும்போது சிறிய விடுதல்களின் பேரில் வேத சகாய குமாரின் கட்டுரையைமுற்றாக தவிர்க்க முயல்வதன் அபத்தத்தையே நான் சுட்டிக்காட்டினேன்.
என் வாசிப்புகுறித்து சொல்லியிருந்தீர்கள் . என் வாசிப்பு பற்றிய அவநம்பிக்கை எனக்கு எப்போதுமே உண்டு ,முழுமையான கருத்தை முன்வைக்க தயங்கும் அளவுக்கு. ஆனால் கணிசமான ஈழ படைப்பாளிகளைவிடவும் அவ்வாசிப்பு அதிகம் என இப்போது இணைய விவாதங்களை பார்க்கும்போது படுகிறது .இலங்கையின் முக்கியபடைப்பாளிகளின் படைப்புகள் எல்லாவற்றையுமே படித்துள்ளேன். அவர்களில் சிலருடன் நேர் தொடர்பும் உண்டு. தளைய சிங்கத்தின் விமரிசனம் குறித்து நீங்கள் உட்பட பலர் கூறும் கருத்துக்களில் இருந்து உங்கள் எல்லை தெரியும் போது தன்னம்பிக்கையும் ஏற்படுகிறது . மு தளையசிங்கத்தின் ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி , அலை கட்டுரைகள் , பிறகு மல்லிகையில் வெளிவந்த கட்டுரைகள்போன்றவை எல்லாமே பொதுவான கருத்தியல் மற்றும் அழகியல் போக்குகள் குறித்தவை என்பதை கவனத்தில் கொண்டுவர விரும்புகிறேன் . அ ந கந்தசாமியின் இரண்டு கதைகளை தொகைநூல்களில் படித்தபோது அவை மிகச்சாதாரணமானவையாக எனக்கு பட்டன. அவரை மேற்கொண்டு கவனிக்க தூண்டல் ஏற்படவும் இல்லை . உங்கள் முயற்சி அவ்வகையில் முக்கியமானதே .அவரை இனி கவனித்து படிப்பேன் . இங்குள்ள விமரிசகர்களின் நட்பை பெற்று சாதகமான அபிப்பிராயத்தை சிலர் உருவாக்கிக் கொள்வது குறித்த கருத்து துரதிர்ஷ்டவசமானது . கிரிதரனின் கருத்துக்களை கூர்ந்து கவனித்து வருகிறேன் . பொறுப்பாகவும் நிதானமாகவும் கருத்துக்களை சொல்லும் அவர் இப்படி சொல்லியிருப்பது வருத்தம் தருகிறது . இது அங்குள்ள படைப்பாளிகளைவிட இங்குள்ள விமரிசகர்களின் நேர்மையை சந்தேகத்துக்கு உள்ளாக்குவதாகும் .இங்கு கருத்துக்களை உருவாக்கும் மையமாக உள்ள எந்த விமரிசகரும் அப்படி தனிப்பட்ட நட்பை விமரிசனத்துடன் கலக்கமாட்டார்கள் என்றே இதுவரை நான் புரிந்துகொண்டிருக்கிறேன். உதாரணமாக அ.மார்க்ஸின் எல்லா கருத்துக்களுடனும் நான் முரண்படுகிறேன் .ஆனால் அவரது விசுவாசம் அவரது நம்பிக்கைகள் மற்றும் கருத்தியல் மீதுதான் என்பதில் எனக்கு ஐயமே இல்லை .இடத்துக்கு ஒருவிதமாக பேசும் சாரு நிவேதிதா போன்றவர்களைக் கண்டு இதை கிரிதரன் சொல்கிறார் என்றால் சாரு நிவேதிதாவின் சொற்களுக்கு ஒரு நாலாந்தர பட்டிமன்றப் பேச்சளரின் நகைச்சுவைக்கு இருக்கும் மரியாதையே இங்கு உள்ளது என்று அறிவது நல்லது . எந்த ஈழ படைப்பாளி அப்படி தகுதிக்குமீறிய அங்கீகாரத்தை இங்கு பெற்றுள்ளார் ? சேரனுக்கு அங்கீகாரம் உள்ளதென்றால் அவரது அவருக்கு உகந்த அங்கீகாரம்தான் என்றே நான் நினைக்கிறேன் . இன்னும் சொல்லப்போனால் அவரது கவிதைகளின் நுட்பமான பலபகுதிகள் இங்கு இன்னும் கவனிக்கப்படவில்லை , அவர் பெற்ற அங்கீகாரம் போதாது , அவரைப்பற்றி ,குறிப்பாக அவரது கவிதைகளில் உள்ளமெல்லிய உணர்வுகளைப்பற்றி , மேலும் எழுதவேண்டும் என்றே எண்ணுகிறேன். ஜெயபாலன் இங்கு அறியப்படுகிறாரே ஒழிய 'நமக்கென்றொரு புல்வெளிக்கு ' பிறகு எந்த தொகுதியும் இங்கு அங்கீகாரத்தை பெறவில்லை . கெ. டானியல், எஸ். பொன்னுதுரை , சு .வில்வரத்னம் , அ.முத்துலிங்கம், சோலைக்கிளி , கி .பி. அரவிந்தன், உமா வரதராஜன், மு. புஷ்பராஜன், ரஞ்சகுமார், சட்டநாதன், பொ. கருணாகரமூர்த்தி, திருமா வளவன், நட்சத்திரன் செவ்விந்தியன் என இங்கு பலவகைகளில் கவனம் பெற்ற படைப்பாளிகள் பலர் உண்டு .இவர்களில் டானியல் தமிழ் தலித் இலக்கியத்தின் முன்மாதிரியாக விமரிசகர்களால் முன்வைக்கப்பட்டார் . மற்ற அனைவரிலும் அவர்கள் பெற்ற அங்கீகாரத்திற்கான வலுவான காரணங்கள் உள்ளன. முதன்மையானது ஈழ சூழலுக்குள் மட்டுமே அர்த்தப்படும் குறுகலான சித்தரிப்புத்தளத்தை விட்டு மேலே சென்று பொதுவான மானுட தளத்தை தொட்டு பேசும் படைப்புகளை இவர்கள் உருவாக்கினார்கள் என்பதும் திறமையான கூறல்முறைகள் மூலம் நுட்பமாகவும் கூர்மையாகவும் தங்களை வெளிப்படுத்திக் கொண்டார்கள் என்பதும்தான் . சாரு நிவேதிதாவும் அ மார்க்ஸ¤ம் மீண்டும் மீண்டும் பேசினாலும் கூட ஷோபா சக்தி , சுகன் போன்ற எவருக்குமே எந்த இடமும் உருவாகவில்லை . ஆனால் கொரில்லா வந்ததுமே ஷோபா சக்தி முக்கியமான படைப்பாளியாக பரவலாக பேசப்படுகிறார் . ஒற்றை வாக்கியத்தில் மேற்கண்ட எல்லா படைப்பாளிகளையும் அவமானப்படுத்துவது சரியல்ல .
இங்கு விமரிசனக்கருத்துக்களில் எப்போதுமே ஒருமூர்க்கம் உள்ளது. இது சிறிய சூழலாக இருப்பதனால் அது பலசமயம் கோபதாபமாக மாறவும் செய்கிறது . அதேபோல சமான கருத்து உள்ளவர்கள் நேரில் சந்தித்து நண்பர்களாவதும் சாதாரணம் .இது நட்பும் பகையுமே எல்லாவற்றையும் தீர்மானிப்பதான தோற்றத்தை ஏற்படுத்துகிறது .ஆயினும் இங்கு முதன்மையான அர்ப்பணிப்பு இலக்கியத்துகே உள்ளது . உதாரணமாக மு. தளைய சிங்கத்தின் மீதான விவாதக்கூட்டம் ஊட்டியில் நாங்கள் ஏற்பாடு செய்ததன் பதிவுகளை திண்ணையில் வெளியிடவுள்ளோம் ,பார்க்கவும் .அவரதுமுக்கியத்துவத்தை ஒப்புக் கொள்ளும் கூட்டம்தான் அது.ஆனால் எத்தனை எத்தனை கோணங்களில் இருந்தெல்லாம் கடுமையான விமரிசனங்கள் கிளம்பி வருகின்றன என்று பார்க்கவும் . தளைய சிங்கத்தின் ஒரே தமிழக நண்பரான வெங்கட் சாமிநாதன்தான் மிகக் கடுமையான விமரிசனத்தை முன்வைத்தார் . தெரிவு என்பது எப்போதுமே ஒரு விமரிசன உத்திதான். அலசல்களில் நம்பிக்கை இல்லாமல் வெறுமே தெரிவுகளைமட்டுமே முன்வைத்த விமரிசகர்களும் படைப்பாளிகளும் உலகம் முழுக்கவே உண்டு .
என் பதினைந்து வருட இலக்கிய வாழ்வில் நட்பும் நெருக்கமும் விமரிசனங்களுக்கு தடையாக அமைவதையோ கோபதாபங்கள் தூண்டுதலாக அமைவதையோ அனுமதித்தது இல்லை என உறுதியாக கூற முடியும் . உதாரணமாக சுந்தர ராமசாமியுடன் என் நெருக்கம் உச்சத்தில் இருந்த 92 ல் தான் அவரை மிக கடுமையாக விமரிசனம் செய்யும் என் கட்டுரை கனவில் வெளியாயிற்று . ஒருபொதும் சாரு நிவேதிதா என் மதிப்பை பெற்றதில்லை . ஆனால் அவரது சீரோ டிகிரி ஒரு நல்ல படைப்பு என்று சொல்ல எனக்கு தயக்கமேயில்லை . ஆனால் பிறர் என்ன நினைப்பார்கள் என்று எண்ணி சங்கடப்பட்டு அதற்கேற்ப விமரிசனங்களை அமைப்பதில் எனக்கு சற்றும் நம்பிக்கை இல்லை . நான் அறிந்தவரை வேத சகாய குமார் விமரிசனங்களில் மூர்க்கமான நேர்மையும் பிடிவாதமும் உடையவர் . விமரிசனங்களை எதிர் கொள்ள முடியாதபோது விமரிசகர்களை சிறுமைப்படுத்த முயலவேண்டாம் .அதன் மூலம் இந்த சிறு சூழலில் ஓரளவாவது செயல்படும் விழுமியங்களைத் தான் கொச்சைப்படுத்துகிறீர்கள்.
பதிவுகள் ஜூன் 2002; இதழ் 30
சம்பூர்ண வியாகரணம்: (அதுவும் ஏழுகடல் தாண்டி) அசாத்தியம்.
- ஜீவன்.கந்தையா -
எனது முன்னைய அபிப்பிராயம் தொடர்பாக ஜெயமோகன் எழுதியுள்ள கடிதம் முதல் வாசிப்பிற்கு எரிச்சலை ஏற்படுத்தினாலும் விடயம் வாஸ்தவமானது. ஈழத்து விமர்சனத்துறை இன்னும் விரிவடையவில்லை. பேரா. கைலாசபதி கோட்பாட்டுச் சட்டகத்திற்குள் இருந்துகொண்டுதான் படைப்புக்களை அளவிட்டார். அவரது ரசனையின் உண்மைகள் வேறாக இருந்ததற்கு ஒரு உதாரணங் குறிப்பிடுவார்கள். அவரது சகவகுப்பு நண்பனான யு.ஆர். அனந்தமூர்த்தியின் சமஸ்காரா நாவலை வெகுவாகப் புகழ்ந்து நண்பர்கட்குக் கூறிய கைலாசபதி, அந்நாவல் பற்றி எழுத்தில் எங்கணும் ஒரு வரி எழுதவே இல்லை. காரணம், அந்நாவல் வர்க்கம், மார்க்சிசம் பற்றி எதுவுமே பேசவில்லை என்பதுதான். இவ்வாறாக இலக்கியம் ஏற்படுத்தும் உள்மன விகாசங்களை அறுத்து, இயந்திரத்தனமாக விமர்சனத்தைக் கையாண்டவர் கைலாசபதி. கா.சிவத்தம்பியோ வேறொரு கோணம். அவர் இலக்கியப் படைப்புக்களை தான் கற்ற சமூகவியல் தத்துவத்துடன் உரசி கோட்பாடுகளாகக் குறுக்கினார். உயிரற்ற வரைவிலக்கணங்களைத் தேடி படைப்புக்களைப் பார்த்தார். சிவசேகரம் தானொரு கவிஞராக இருந்தும் பிற இலக்கியப் படைப்புக்குள் அறிவித்தல்களையும், கோசங்களையும் தேடுவதில் கண்ணைக் குத்தி, அது இல்லாதபோது நக்கலையும், கேலியையும் பெய்து விமர்சனங்களை வக்கிரப்படுத்தினார். இவர்களெல்லோரிடமிருந்தும் புறந்து நிற்பவர் எம்.ஏ. நு·மான் ஒருவர்தான். அவர்தான் நம்பிக்கைக் குரியவர். ஆரம்பத்தில் கைலாசபதியின் அடியாகக் கிளம்பி இன்று தனக்கேயுரித்தான விமரிசனப்பார்வையை வகுத்துக் கொண்டுள்ளார். ஈழத்து விமர்சனத்துறைக்குள் புதிதாக வந்த செல்வி திருச்சந்திரன் போன்றோரை நான் இன்னும் படிக்கவில்லை. படிக்காதவரை கருத்து இல்லைத்தானே.
ஜெயமோகனோடு உடன்படமுடியாத விசயமென்னவென்றால் வெறும் அழகியல்ரீதியான விமர்சனமொன்று இருப்பதாக அவர் வாதிடுவதுதான். ஒரு இலக்கியப் படைப்பை முற்கூட்டிய திட்டங்கள், கோட்பாடுகள், கத்தி, கடப்பாரை அலவாங்குகள் போன்ற ஆயுதங்களுடன் அணுகுவதை சிறந்த படைப்பாளியாகிய ஜெயமோகனே அங்கீகரிக்கமாட்டார் என நினைக்கிறேன். குறித்த படைப்பின் மீதான அழகியல் அம்சங்களை காரணக்கூறுகளுடன் எடுத்தாயும்போது ஏலவே அம்மொழிக்குரித்தான படைப்புக்களின் விழுமியங்களையும் மனது கோர்த்துக்கொள்ளும். ஆகவே அது ஒரு வரலாற்றுரீதியான கணிப்புக்கு அண்மித்ததாக அமையும். ஆக, வரலாற்றுரீதியான தரஅடுக்குகளை கணித்துத்தான் அழகியல்ரீதியான விமரிசனமே உருவாகிறது என்று நினைக்கிறேன். இதற்கு நேர்மாறான விதத்தில் மு.தளையசிங்கம் வரலாற்றுரீதியான பார்வையோடு தனது ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி(தலைப்பே சான்று) என்ற நீண்ட கட்டுரையை எழுதியிருக்கிறார். மு.தளையசிங்கத்தின் படைப்பு மனம் அழகியலுக்கு அதிக அக்கறையைக் கொடுத்ததன் விளைவு, வரலாற்றுரீதியான விமர்சனத்தின் புதிய வார்ப்பாக அவரது பார்வை நிலைத்தது. (இக்கருத்தை மறுப்பவர்கள் தயவுசெய்து மு.தவின் மேற்படி நூலைப் படித்தபின் விவாதித்தல் சாலும்) மு.தவின் ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி கட்டுரை கணிப்புக்கெடுக்கும் காலத்தில்தான் தேவகாந்தன் குறிப்பிட்டதுபோல ஈழத்து இலக்கியத்தில் சொற்காமத்தின் புயல் அடித்தது. யோ.பெனடிக்ற்பாலன், செ.யோகநாதன், எஸ்.பொ. (எஸ்.பொ.வில் மு.தவிற்கு மனச்சாய்வு உண்டு) ஈறாக சொல்வித்தையே இலக்கியவித்தையாக மயங்கியபோது மு.தளையசிங்கம் வாழ்க்கை தொடர்பான தேடலும், அழகிய நகலெடுப்புமான படைப்புக்களின் தேவை குறித்து வினவினார்.
மற்றும், வேதசகாயகுமாரின் ஈழத்துச்சிறுகதை விமர்சனக் கட்டுரை தொடர்பாக நான் எழுதிய கடிதம், மறுத்தல் ஒன்றையே குறியாகக் கொண்டபோன்ற பாவனையை ஜெயமோகனின் கடிதம் சுட்டுகிறது. உண்மையில் கரிசனவயப்பட்டு, போதாமைகளைக் குறிப்பிடுவது ஒரு வாசகனின் கடமையல்லாது வேறென்னவாம். சும்மா வாசித்து சமன் சற்றுங் குலையாமல் தேமேயன்று இருப்பது எவ்வகை வாசகத்தரம் என்றும் எனக்கு விளங்கவில்லை.
வேதசகாயகுமார் ஈழத்துச் சிறுகதையின் போக்கைக் கணிப்பதற்கு தனது மனவிருப்பமான இலக்கியப் படைப்புக்களையே சான்றாக எடுத்துள்ளார். இது ஒரு நல்ல ஆய்வுக்கான போக்காக எனக்குத் தோன்றவில்லை. ஒரு எடுகோளைத் தரலாம் என நினைக்கிறேன்.
போரெதிர்ப்பு மட்டுமே கருவாகத் தெரிவுசெய்து வட்டார வழக்கில் கதைகளை எழுதும் சக்கரவர்த்தியின் படைப்புக்களை விமர்சனத்திற்கு எடுத்துள்ள வேதசகாயகுமார் தேசியவிடுதலையின்(?) இன்றியமையாத தேவை, அதற்குள் ஆலோல்படும் இடர்கள் குறித்து எழுதப்பட்ட போராதரவாளர்களான படைப்பாளர்களின் படைப்புக்களைக் கணிப்புக்கெடுக்க முயன்றதாகத் தெரியவில்லை. இதே போலத்தான் ஈழத்து பெண் படைப்பாளிகளும் விடுபட்டுள்ளனர். அவர்களது கவனிப்பும், தேவைகளும், சிந்தனைகளும் வேறாக இருக்கும். சிலவேளை பெண்படைப்பாளர்களிடம் ஆன்மீக உச்சமும், தேடலும் இல்லாமல் இருக்கலாம் ஏனெனில் அவர்கள்தானே நிஐவாழ்க்கையை முதலில் எதிர்கொள்பவர்கள்? விடுபடலைக் குறிப்பிடுவது பிழையாகக் கணிக்கப்படலாகாது என்று மீண்டும் ஒரு தடவை ஜெயமோகனுக்குக் கூறிக் கொள்கிறேன்.
கடைசியாக பட்டியல் தாத்தா க.நா.சு அவர்கள் ஒரு நல்ல இலக்கிய விமரிசகனுக்கு இருக்கவேண்டிய நற்குணங்கள் என்ன என்று எழுதியுள்ளதை கீழே தருகிறேன்:
இலக்கிய விமரிசகனுக்கு நான் சொல்லக்கூடியதெல்லாம் இதுதான்: பற்றுக்களை வளர்த்துக்கொள், ஒன்றல்ல, நு¡றல்ல, ஆயிரமல்ல, பத்தாயிரம், லட்சம் என்று பற்றுக்களை வளர்த்துக்கொள். பார்ப்பானுடைய நோக்கையும், அதற்கெதிர்மாறானதாக இன்று கருதப்படும் பார்ப்பானல்லாதவனுடைய நோக்கையும் புரிந்து செரித்துக்கொள்ளக் கற்றுக்கொள். அதேபோல பண்டைநோக்கையும், இன்றைய நோக்கையும், கம்யூனிஸ்டை எதிர்ப்பவனுடைய நோக்கையும் அறிந்துகொள்ள நிதானம் தவறாமல் அநுபவிக்கப் புரிந்துகொள். இப்படிப் பற்றுக்களை வளர்ப்பதே இலக்கிய விமரிசகனின் தகுதியை வளர்க்கும். இலக்கியத்துக்கும், வாழ்க்கைக்கும் சாட்சிபூர்வமாக நிற்பதைத்தான் தன் இலக்கிய விமரிசனத்திற்கு தாரமாகக் கொள்ளவேண்டும் இலக்கிய விமரிசகன். பற்றறுத்துக்கொள்வது சாத்தியமல்ல- பற்றை வளர்த்துக்கொண்டு, இலக்கியத்தை ஆயிரம் கோணங்களிலிருந்து ஒருங்கே பார்த்து அநுபவிக்கத் தெரிந்தவன்தான் நல்ல இலக்கிய விமரிசகன்.
ஜூன் 2002; இதழ் 30
ஜீவன் கருத்து பற்றி...
- ஜெயமோகன் -
திரு ஜீவன் அவர்களை என் கருத்துக்கள் தனிப்பட்டமுறையில் புண்படுத்தியிருந்தால் அதற்காக வருந்துகிறேன்.அது என் நோக்கமல்ல. இலக்கிய விவாதங்களில் வேகமாக ஈடுபடும்போது எரிச்சலும் கோபமும் ஏற்படுவதுண்டு . அதற்கு அவசியமில்லை என நானே பலமுறை சொல்லிக் கொள்வதுமுண்டு .எனினும் அது சாத்தியமாவது இல்லை . ஏற்ற தரப்புக்காக கோபப்படுவதும் அதன் பின் சிறிது காலம் கழித்து அந்த வேகம் பற்றி வெட்கப்படுவதுமே வாடிக்கையாக உள்ளது .ஒன்று சொல்ல முடியும் இது ஒரு விளயாட்டு . விளையாட்டின்போது கோபவேகம் இருந்தாக வேண்டும் .களத்துக்கு வெளியே அதற்கு எந்தப்பொருளும் இல்லை . நமது நம்பிக்கைகள் கொள்கைகள் அனைத்தையும் காலம் ஒரு சிறு புரளல் மூலம் அர்த்தமற்றதாக ஆக்கிவிடக்கூடும் . பழைய உரை ஒன்றில் ஜெயகாந்தன் எத்தனை தீவிரமாக ·பிராய்டுக்காக பேசுகிறார் என்று பார்த்தேன் ,இப்போது · ப்ராய்டே வெள்ளத்தில் போய்விட்டார் . திரு ஜீவன் சொன்னதே என் கருத்தும் ஒருபோதும் வேதசகாய குமாரின் கருத்து ஈழ இலக்கியம் பற்றிய முழுமையான மதிப்பீடு ஆகாது. இங்கு சொல்லப்பட்ட எல்லா எழுத்தாளர்களையும் அவர் கருத்தில் கொண்டால்கூட .அது இடைவெளிகளை மட்டுமே நிரப்பும் . புதிய கோணத்தை காட்டும் . புதிய ஐயங்களை உருவாக்கும். அவ்வளவுதான். தமிழ் இலக்கியம் பற்றி கமில் சுவலபிள் செய்த விமரிசனத்திற்கெல்லாம் இந்த மதிப்பு மட்டுமே உள்ளது . யாழ்ப்பாண வாழ்வில் அர்த்தப்படும் பாடைப்பு வேறு வேத சகாய குமார் வாசிப்பது வேறு .சொல்லப்போனால் படைப்பின் மானுடப்பொதுவான தளம் பற்றி மட்டுமே அவர் கருத்தில் கொள்ள முடியும் . படைப்பு அப்படிப்பட்டது அல்ல. மானுடப்பொதுவாக இயங்கும் போதே அது உள்ளூர் குரலும் கூட அழகியல் விமரிசனம் என்பது விழுமியங்களை கருத்தில் கொள்ளாத வடிவ / உத்தி விமரிசனம் அல்ல . விழுமியங்கள் இல்லாமல் கலை இல்லை என்பதே என் நம்பிக்கை . ஆனால் அழகியல் விமரிசனம் வெளிபாட்டின் நுட்பங்களை மட்டுமே முதன்மையாக கணக்கில் கொள்கிறது . விழுமியங்கள் கருத்தியல் போன்றவற்றை 'நிலைத்த' அம்சங்களாக கருதுகிறது . விரிவாக விமரிசன பாணிகளை பற்றி எழுதும்போது ஏற்கனவே எழுதியுள்ளேன் ,அக்கட்டுரையை பிறகு பிரசுரிக்கிறேன்
ஜூன் 2002; இதழ் 30