- 'பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில்  வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். -- ஆசிரியர்  -


பதிவுகள் மார்ச் 2002  இதழ் 51
[திண்ணை இணைய இதழின் விருந்தினர் பகுதியில் இடம்பெற்ற விவாதத்திலிருந்து சில பகுதிகள். பதிவுகளில் ஏற்கனவே வெளியான பகுதி. பதிவுகளின் வாசகர்களுக்காக மீண்டுமொருமுறை இங்கு பிரசுரிக்கின்றோம். இவ்விவாதத்தில் தொடர்ந்தும் பங்கு பற்ற விரும்பினால் எமக்கொன்றும் ஆட்சேபனையில்லை.]

நரேஷ்:
ஜெயமோகன் - மாலன் கட்டுரைகள் தொடர்ந்து கலாச்சாரம் பற்றிய விவாதங்களைப் படித்து வருகிறேன். உண்மையில் எனக்கு மட்டும் தான் புரியவில்லையா , அல்லது எல்லோருக்குமே இதே கதியா என்று தெரியவில்லை. மாலன் தமிழ்க்கலாச்சாரம் என்பதனை ஆடியன்ஸ் என்ற பொருளில் பயன்படுத்துகிறார் போலத்தோன்றுகிறது. ஜெயமோகன் தமிழ்க்கலாச்சாரம் என்பதனை, ஜெயமோகன் தான் எந்த நோக்கில், அல்லது உருவாக்கப்பட வேண்டிய ஐடியல் என்ற நோக்கில் புரிந்து எழுதுவது போலத் தோன்றுகிறது. இருவருக்கும் மனப்பகையால் ஒருவர் எழுதுவதை மற்றொருவர் புரிந்து கொள்ளாமல், அல்லது புரிந்து கொள்ள முடியாமல் வார்த்தைகளில் சிக்கிக்கொண்டுவிட்டார்களா, அல்லது எனக்குத்தான் பத்தவில்லையா என்று புரியவில்லை. இருவரும் என்ன பேசுகிறார்கள் என்பதை யாரேனும் சுருங்கச் சொல்லி விளங்க வைக்க முடியுமா? மிகுந்த நன்றி உடையவனாக இருப்பேன்.

ஜெயமோகன்:
அன்புள்ள நண்பருருக்கு, தங்கள் குழப்பம் சற்று அதிகமானதே. மாலன் கலாச்சாரம் என்றால் நெறிகள், அறங்கள், ஒழுக்கங்கள், விதிகள், நம்பிக்கைகள்  ஆகியவற்றி¢ன் தொகுப்பாக மட்டும் பார்க்கிறார் [அதாவது ஒட்டு மொத்தமாக  விழுமியங்கள்]அவை சமூகத்தின் பொருளாதாரக் கட்டுமானத்தால் ,அதை  நிலைநிறுத்திக் கொள்ளும் பொருட்டு ,உருவாக்கப்படுபவை என்கிறார் .இது ஒரு மரபான பொருளாதார அடிப்படைவாத பார்வை. பொதுவாக பலராலும் நம்பப்படும் தளம் இது. இவர்கள் இலக்கியமென்றாலே உயரிய கருத்து மட்டுமே என்று எப்போதும் சொல்வதை பார்க்கலாம்.இலக்கியம் என்றால் கருத்து மட்டுமல்ல அக்கருத்துக்களை உண்டு பண்ணும் அகம் குறித்த புரிதலுக்கான முயற்சி அது என்ற எண்ணம் தேர்ந்த  வாசகனுக்கே ஏற்படுகிறது. இலக்கியம் குறியீட்டு இயக்கமான மனத்தை  அக்குறியீட்டு   வடிவிலேயே போய் அறிந்து கொள்வதற்கான முயற்சி என்று  சொல்லிப்பர்க்கலாம் இந்த  முரண்பாட்டின் தொடர்ச்சியே இந்த விவாதம்.  நான் கலாசாரம் என்பது விழுமியங்கள் மட்டுமல்ல என்கிறேன். எந்தெந்த  விஷயங்களை ஒரு சமூகம்  தொடர்ந்து தலைமுறைமுறையாக பேணுகிறதோ அவையெல்லாம் கலாசாரத்தின் கூறுகளே என்று  சொல்கிறேன்.அவை வெறுமே பொருளாதார காரணங்களால் மட்டும்  உருவாக்கப்பட்டு நிலை  நிறு¢த்தப்படுபவை அல்ல . சமூகத்தின் எதிர் காலக்கனவுகள் , இறந்த கால நினைவுகள் என எண்ணற்ற கூறுகளால் ஆனவை அவை. தனிமனத்திலும் ,சமூக மனத்திலும்  உள்ள குறியீட்டு  ரீதியான இயக்கங்களை அவை தீர்மானிக்கின்றன.விழுமியங்களும்  அவற்றின் விளைவுகளே .அந்த செயல்பாடுகளுடன் எல்லாம் தொடர்பு படுத்தி மட்டுமே கலாச்சாரம்  என்றால் என்ன என்று  தீர்மானிக்க முடியும். கலாச்சாரம் என்பது மிக வும் சிக்கலான ஓர் கூட்டு அகவய இயக்கம்  என்ற புரிதலே அச்செயல்பாடுகளை புரிந்து கொள்ள உதவிகரமானது . ஒரு இடத்தில் அதை நாம்  நெறிகளாக அறிகிறோம்.இன்னொரு இடத்தில் அதை அடையாளங்களாக. இன்னொரு இடத்தில் பழக்கவழக்கமாக. இவை அனைத்தையும் இணைத்தே யோசிக்கவேண்டும் என்கிறேன் , இவ்வளவுதான் ஆகவே விழுமியங்களை பிரச்சாரம் செய்வது மட்டுமல்ல கலாசார  செயல்பாடு. அடையாளங்களை  மீட்பது ,நிலைநிறுத்துவது,தகர்ப்பது ,மேலும்  நுட்பமாக்குவது,பழக்கங்களின் உள்ளர்த்தங்களை  அறிவது எல்லாமே கலாச்சார இயக்கங்களே . ஈவேராவின் சீர்திருத்த குரல்போலவே ஆபிரகாம்  பண்டிதரின் இசை நுட்ப ஆராய்ச்சியும் கலாச்சார  செயல்பாடேயாகும். தமிழுக்கு பாரதி அளித்த கொடை உலக இலக்கியத்துக்கும் உலக கலாசாரத்துக்கும் உரியதேயாகும். பிறிதொரு தருணத்தில் இதை மேலும் விரிவாக விவாதிக்கலாம். ஒன்றுண்டு ,  விவாதங்களே நம்மை  தெளிவாக சிந்திக்க வைக்கும். ஒரு அசலான கருத்தை உருவாக்கியெடுத்து ஒரளவு தெளிவுடன் முன்வைப்பது எளிய விஷயமல்ல .நான் எந்த விவாதத்திலும் எப்போதும் தயங்காமல் கலந்து கொள்பவனாகவே இருந்திருக்கிறேன். அதற்கு காரணம் என் சிந்தனையை அவ்விவாதங்களே ஒழுங்கு படுத்துகின்றன ,தெளிவாக்குகின்றன என்பதே. மாலனுடனான விவாதமும் அப்படித்தான்.ஆனால் அதில் விவாதத்துக்கு அப்பால் சில சிறு கோபங்களும் உருவாகிவிட்டன என்பதை மறுக்க முடியாதுதான்.அதை தவிர்க்க முடிவது இல்லை .

வ.ந.கிரிதரன்:

கலாச்சாரம் என்பது சமூகத்தின் பொருளாதாரக் கட்டுமானத்தால் அதை நிலை நிறுத்திக் கொள்ளும் பொருட்டு உருவாக்கப் படுபவை என மாலன் கூறுகின்றார் என ஜெயமோகன் கூறுகின்றார். அவ்வாறாயின் மாலன் சரியானதைத் தான் கூறுகின்றார் என்று அர்த்தம். எந்தெந்த விஷயங்களை ஒருசமூகம் தொடர்ந்து தலைமுறைமுறையாகப் பேணுகின்றதோ அவையெல்லாம் கலாச்சாரத்தின் கூறுகளே என்கின்றார் ஜெயமோகன்.அந்தச் சமூகம் எதனால் அவ்விஷயங்களைத் தலைமுறை தலைமுறையாகப்பேணுகின்றது என்ற கேள்வியைச் சிறிது எழுப்புவாராயின் அதற்குக் காரணம் அந்தச் சமூகத்தில் நிலவும் உற்பத்திச் சாதனங்களுக்கும் அதன் உடமையாளர்களுக்கும் இடையில் நிலவும் தொடர்பே என்பது ஜெயமோகனுக்கு விளங்கியிருக்கலாம். ஆக அடிப்படையில் ஒரு சமூகத்தின் கலாச்சாரக் கூறுகளை நிர்ணயிப்பவை அந்தச் சமூகத்தின் பொருளாதாரக் கட்டுமானங்களே என்பதே சரியாகப் படுகின்றது. நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் நிலவும் கலாச்சாரக் கூறுகளுக்கும் முதலாளித்துவ சமுதாயத்தில் நிலவும் கலாச்சாரக் கூறுகளுக்கும் வித்தியாசங்கள் பலவுண்டு. உதாரணமாகப் பெண்களின் நிலையினை ஒப்பிட்டுப் பார்த்தாலே இது இலகுவாக விளங்கி விடும். ஒரே கலாச்சாரமாகக் கருதப் படும் கலாச்சாரத்திலேயே காலத்திற்குக் காலம் பெண்களின் நிலை அக்காலகட்டங்களில் நிலவிய நிலவுகின்ற பொருளாதார அமைப்பு காரணமாக மாறிவிட்டிருப்பதை இலகுவாகவே அறிந்து கொள்ளலாம். தற்போது கூட ஒரே நாட்டிலேயே பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களின் கலாச்சாரக் கூறுகளை நிர்ணையிப்பவையாக இருப்பவை அங்கு நிலவுகின்ற பொருளாதார அமைப்பே. கலாச்சாரக் கூறுகளை நிர்ணயிப்பவை பொருளாதாரக் கட்டுமானங்களே. ஆதியில் மனிதர் குழுக்களாக வாழ்ந்தபொழுது அவர்களிடையே நிலவிய சமுதாய அமைப்பினை கலாச்சாரக் கூறுகளை நிர்ணையித்தவை எவை? பின்னர் தனியுடமை சமுதாய அமைப்பின் பல்வேறு கூறுகளாகச் சமுதாயம் பல்வேறு பரிமாணங்களை தனது வளர்ச்சிப் படிக்கட்டுகளாகக் கண்டபோது அப்போது நிலவிய கலாச்சாரக் கூறுகளை நிர்ணயித்தவை எவை? அப்பொழுது மனிதர்கள் எதிர்கால இறந்தகாலக் கனவுகளைக் காணத்தான் செய்தார்கள். இப்பொழுதும் கண்டுகொண்டுதானிருக்கின்றார்கள். இனியும் காணத்தான்செய்வார்கள். எததகைய சமுதாய அமைப்புகளில் இருந்தாலும் கனவுகள் காண்பது மனிதர்களின் இயல்பே. ஆதியில் மனிதர்கள் ஒருவிதமான பொதுவுடமை சமுதாய அமைப்பினில் இருந்தார்கள். ஆனால் அவர்களிடையே நிலவிய அறியாமை, அறிவியல் வளர்ச்சியின்மை காரணமாக சிறு சிறு குழுக்களாகப் பிரிந்திருந்த நிலையில் அகவிடுதலை பற்றியோ புறவிடுதலை பற்றியோ சரியாகப் புரிந்து கொள்ளக் கூடிய நிலை அங்கிருக்கவில்லை. அறிவு வளர வளர மனிதர்கள் தனிமனிதர்களாகத் தனியுடமைச் சமுதாய அமைப்பில் சுருங்கியபொழுது ஏற்படுத்திய  பிரச்சினைகளைத் தீர்ப்பதிலேயே இன்றைய மனிதரின் பெரும்பாலான பொழுதுகள் போய்க் கொண்டிருக்கின்றன. மனிதர் தம் பிறப்பின் பயனை, காரணத்தை விளங்க, அறிந்து கொள்ளச் சிந்திக்க, அகவிடுதலையினை அடைய முடியாதபடி புறச்சுழல் நிலவுகின்றது. மார்க்ஸ், லெனின் போன்றவ்ர்கள் அகவிடுதலை பற்றியெல்லாம் விரிவாகவே சிந்தித்திருக்கின்றார்கள். ஆனால் மனிதர்கள் ஏற்றத்தாழ்வுகளால் பிரிந்து கிடக்கின்றார்கள். அதனால் பல்வேறுபட்ட பொருளியல், அறிவியற் சூழல்களில் சிக்கியிருக்கின்றார்கள். வயிற்றுப் பசியினைத் தீர்க்காமல் அகவிடுதலையினைப் பற்றி எல்லோராலும் சிந்திக்க முடியாது. அதனால் தான் மனித குலத்தின் அகவிடுதலையென்பது புறவிடுதலையிலேயே தங்கியுள்ளதென அவர்கள் கருதினார்கள். இன்றைய உலகில் நிலவும் சூழல்களைப் பார்க்கும் போது அது எவ்வளவு உண்மையென்பது விளங்கும்.

பிரியதர்ஷன்:
அம்பி கிரி, கலாச்சாரம் என்பது சமுகத்தின் பொருளாதார ஏற்றத்தாழ்வுகட்கு ஏற்ப அமையும் என்ற சிந்தனை காலவதியாகிவிட்டதே. மனம், மொழி, இவை இயங்கும் தளம் மார்ர்க்சிசத்தால் கணிக்கமுடியாமல் போன காரணத்தால்தான் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம், தேசியங்களின் வரையறைகள் எல்லாம் பிழையாகக் கையாளப்பட்டன. ஒரு உதாரணத்திற்கு:- இவ்வாரம் சின்னக்கருப்பன் எழுதியுள்ள கட்டுரை மிக முக்கியமான விடயம். இந்து, இஸ்லாமிய திருமணச்சட்டங்கள், இலங்கையில் தேசவழமைச்சட்டங்களின் புனர்நிர்மாணம் இவையெல்லாம் ஒரு வகைப் பார்வையில் மிக ஒவ்வாத சட்டங்கள். ஆனால் மறுபக்கம், இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற வளர்ந்தநாடுகளில் இருக்கும் common law couple மாதிரியான விவாக பந்தங்கள் இந்தியாவில் பக்கவிளைவுகளைத் தந்துவிடுகின்றன. இவையெல்லாம் கலாச்சாரத்திற்குள் அடக்கம். அதேநேரம், பொருளாதார ஸ்திரத்திற்கும் இவைக்கும் ஏது சம்மந்தம்?

வ.ந.கிரிதரன்:
ஆழ்வார்ப்பிரியர் கூறிய Common Law நடைமுறைகள் உருவாகக் காரணமென்ன? மேற்கு நாடுகளில் நிலப்பிரபுத்துவ நடைமுறை இருந்த காலகட்டங்களில் இவை ஏன் சாத்தியமாகவில்லை? இன்றைய சமுதாய அமைப்பில் பெண்கள் ஆண்களிற்கு நிகராக வாழ வழியிருப்பதால் தானே இது சாத்தியமாக முடிந்தது. பெண்கள் ஆண்களில் தங்கியிருக்க நிர்ப்பந்திக்கப்படுமொரு சமுதாய அமைப்பில் இது சாத்தியமா?

ஜெயமோகன்:
அன்புள்ள வி என் ஜி  விவாதங்களில் தாங்கள் உண்மையான தீவிரத்துடன் ஈடுபடும் விதம் எனக்கு மகிழ்ச்சி தருகிறது . மார்க்ஸியம் ஒவ்வொரு விஷயத்திலுமுள்ள பொருளாதார உள்ளுறையை கண்டறிது சொன்ன தரிசனம். அதை முரணியக்க இயங்கியல் மூலம் விளக்கிய தத்துவம். அப்பாடங்களை அரசியல் சமூகவியல் தளங்களில்பொருத்திக் காட்டிய சமூக /அரசியல் சித்தாந்தம் .இதில் ஐயமில்லை .இன்று பொருளாதார உட்கிடக்கை இல்லாத எவ்விஷயமும் நம் வாழ்வில் இல்லை என்பது எவருடைய விவாதத்துக்கும் உரிய கருத்தல்ல. அப்படி விவாதிப்பவர்கள் இக்கால அறிவியக்கத்துடன் தொடர்பற்றவர்கள் .ஆகவே அது ஒரு புதிய கருத்துமல்ல.அதை அனைவருமறிந்த அடிப்படை உண்மையாக எடுத்துக் கொண்ட பிறகே நாம் மேலே பேச முற்படுகிறோம்.

ஜெயமோகன்:

பொருளியல் அடிப்படைவாதம் என்பது என்ன ? பொருளியல் அடிப்படையை மட்டுமே கருத்தில் கொள்வது, முதன்மையாக்குவது அது. அப்போக்கு வரலாற்றில் பல அழிவுகளுக்கு காரணமாக அமைந்தது .ஸ்டாலின் மாவோ மட்டுமல்ல போல்பாட் கூட பொருளியல் அடிப்படைவாதிதான். பொருளின் மதிப்பு பற்றி மார்க்ஸ் ' முதல் ' நூலில் கூறுமிடத்தில் அதன் நுகர்வு மதிப்பு ,மாற்று மதிப்பு குறித்து மட்டுமே பேசுகிறார் . பொருளின் குறியீட்டு மதிப்பு மிகவும் முக்கியமானது ,தவிர்க்க இயலாதது . மேலும் மார்க்ஸிய அடிப்படைவாத நம்பிக்கைக்கு நேர் எதிராக குறியீடு மற்ற மதிப்புகளுடன் தொடர்பின்றி தனித்தும் செயல்படக்கூடியது . இந்த அடிப்படை விவாதத்திலிருந்தே நாம் பேசும் இந்த விவாத தளம் முழுக்க உருவாகி வந்தது .

இந்நூற்றாண்டின் முக்கிய விவாதங்களில் இது ஒன்று .கலாச்சாரத்தின்  இயக்கத்தில் பொருளியல் அடிப்படைகளுக்கு உரிய இடமென்ன? ஒருவர் பொதுவாக இது குறித்து பேசும் போது இது வரை முன்வைக்கப்பட்ட மாற்று கருத்துக்களை பற்றி அறிந்திருக்க வேண்டும். இது ஒரு குறைந்த பட்ச எதிர்பார்ப்பு. இல்லாவிட்டால் அவரது தரப்பு மிக பலவீனமானதாக இருக்கும். ஆனால் ஒருவர் தன் தனிப்பட்ட வாழ்க்கை சார்ந்து ஒரு முடிவுக்கு வருவதோ அதை முன்வைப்பதோ ஒரு தவறுமல்ல . ஆனால் மாலன் தன் விவாதத்தில் அவரது தயாரிப்பின்மை பற்றிய அறிதல் இல்லாமலிருப்பதோடு அதற்கு அப்பாற்பட்ட விஷயங்களை பம்மாத்து போன்ற சொற்களா பயன்படுத்தி அவமதிக்கவும் செய்கிறார் .அங்குதான் கடுமையாக அவர் அறிந்தவற்றின் எல்லை என்ன என்று சொல்லவேண்டிய கசப்பான வேலை ஏற்பட்டது. கலாச்சாரத்தின் அகவய இயக்கத்தை பொருளியல் மூலம் அளவிட முடியாதுஎன்றே நான் எண்ணுகிறேன் . ஆனால் இது குறித்து இதுவரை நடந்த விவாதங்களை ஓரளவேனும் நாம் தொட்டுக் கொள்ள வேண்டும் .

கலாச்சார  இயக்கத்தில் குறியீட்டு இயக்கத்துக்கு உள்ள முக்கியத்துவத்தை சுட்டி காட்டியவர்கள் மொழியியலாளர்கள் .குறிப்பாக பிராக் வட்டத்து அறிஞர்கள். அவர்கள் நாடு கடத்தப்பட்டனர். வேறு ஒரு தளத்தில் கிராம்ஷி கலாச்சாரஈயக்கத்தின் தனித்தபோக்கு பற்றி பேசியிருந்தார். இவ்விரு தரப்புகளும் இரு சிந்ஹனைப்போக்குகளாக வளர்ந்தன.முன்னது அமைப்பியல் பிறகு பின் அமைப்பியல் படிப்படியாக பின் நவீனத்துவ கொள்கைகள் என வளர்ந்தது.இரண்டாவது போக்கு பிராங்க் பர்ட் மார்க்ஸியம் பிறகு நவீன ஐரோப்பிய மார்க்ஸியக் கொள்கைகள் என வளார்ந்தது இவர்களில் இரு தரப்பினர் அமைப்பியலுடன் நேரடி உறவும் கொண்டனர். இரு போக்குமே
செவ்வியல் மார்க்ஸியத்தின் பொருளியல் குறுக்கல் வாத்த்தை எதிர்த்தவையே இவற்றை ஒட்டி கலாச்சார விமரிசனத்தில் பெரிய மாற்றங்கள் நடந்தன.
இன்றைய கலாச்சார விவாதங்களில் இத்தரப்புகளை முற்றிலும் தவிர்த்துவிட்டு பேச முடியா

வ.ந.கிரிதரன்:
நண்பர் ஜெயமோகனுக்கு, "மார்க்ஸியம் ஒவ்வொரு விஷயத்திலுமுள்ள பொருளாதார உள்ளுறையை கண்டறிது சொன்ன தரிசனம். அதை முரணியக்க இயங்கியல் மூலம் விளக்கிய தத்துவம். அப்பாடங்களை அரசியல் சமூகவியல் தளங்களில் பாருத்திக் காட்டிய சமூக /அரசியல் சித்தாந்தம் .இதில் ஐயமில்லை . இன்று பொருளாதார உட்கிடக்கை இல்லாத எவ்விஷயமும் நம் வாழ்வில் இல்லை என்பது எவருடைய விவாதத்துக்கும் உரிய கருத்தல்ல. அப்படி விவாதிப்பவர்கள் இக்கால அறிவியக்கத்துடன் தொடர்பற்றவர்கள் ஆகவே அது ஒரு புதிய கருத்துமல்ல. அதை அனைவருமறிந்த அடிப்படை உண்மையாக எடுத்துக் கொண்ட பிறகே நாம் மேலே பேச முற்படுகிறோம் ." இவ்விதம் கூறுகின்றீர்கள். அவ்வாறாயின் மார்க்ஸியம் கூறுவது போல் எல்லாமே பொருளாதார அடிப்படையில் நிர்ணயிக்கப் படுபவை தானெனக் கூறுகின்றீர்களா? அதே சமயம் " கலாச்சாரத்தின் அகவய இயக்கத்தை பொருளியல் மூலம் அளவிட முடியாது என்றே நான் எண்ணுகிறேன்." என்றும் கூறுகின்றீர்கள். பொருளியல் மூலம் அளவிட முடியாது என்கின்றீர்களா? அவ்விதம் கூறுவதானால் தாங்கள் மேலே குறிப்பிட்டதற்கும் இதற்குமிடையில் ஒரு வித முரண்பாடல்லவா
தென்படுகிறது. அல்லது பொருளியல் முலம் மட்டும் அளவிட முடியாதென்று கருகின்றீர்களா?

"கலாச்சாரத்தின் இயக்கத்தில் பொருளியல் அடிப்படைகளுக்கு உரிய இடமென்ன? ஒருவர் பொதுவாக இது குறித்து பேசும் போது இது வரை முன்வைக்கப்பட்ட மாற்று கருத்துக்களை பற்றி அறிந்திருக்க வேண்டும்"  என்றும் கூறுகின்றீர்கள். பின் நவீனத்துவக் கோட்பாடுகள் பொதுவாக மதம், தத்துவம், மார்க்ஸியம் போன்றவற்றை ஏற்றுக் கொள்ளவில்லை. எந்தவித சூத்திரங்களைத் தீர்வாகத் தரும் எவற்றையும் அவை ஏற்றுக் கொள்வதில்லை. இந்நிலையில் மார்க்ஸியத்தைப் பற்றிய
பின்நவீனத்துவ பார்வை எத்தகையதெனத் தாங்கள் கருதுகின்றீர்கள்? மார்க்ஸியத்தைப் பின்நவினத்துவப் பார்வையினூடு அணுகுவதென்பது
சரியான செயலெனத் தாங்கள் கருதுகின்றீர்களா? மார்க்ஸியம் இதுவரை காலம் இருந்த இருக்கப் போகின்ற சமுதாய அமைப்புகளை , ஆதிச் சமூக அமைப்பு, அடிமைச் சமுதாய அமைப்பு, நிலப்பிரபுத்துவ சமுதாய அமைப்பு, முதலாளித்துவ சமுதாய அமைப்பு, சோஸலிச சமுதாய அமைப்பு என விஞ்ஞான பூர்வமாகவே ஆராய்ந்து எதிர்வு
கூறுகிறது? இவற்றை ஏனைய நவீன கோட்பாடுகள் தர்க்க ரீதியாகவே சரியாக எதிர்த்து மாற்று வழிகளைத் தீர்வாகச் சொல்கின்றனவா அல்லது
தீர்வு சொல்வது தங்களது வேலையல்ல எனக் கருதுகின்றனவா?

ஜேர்மன் தத்துவியலாளர்கள், மற்றும் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளூடு இயக்கவியல் பொருள்முதல்வாதத்தினைத் தந்த மார்கஸ் சமுதாயப் பரிணாம
வளர்ச்சிப் போக்குகளுக்கும் அவற்றைப் பிரயோகித்து அவர்றிற்கிடையிலும் ஒருவித விதிகளைக் கண்டு வழங்கிய வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தின்
அடிப்படையில் எந்தவொரு சமுதாய அமைப்பின் அடித்தளமுமே இத்தகையதொரு உற்பத்தி வழிமுறைகளுக்கும் உற்பத்தியாளர்/உற்பத்தி
செய்வோர் ஆகியோருக்கிடையில் நிலவும் தொடர்புகளால் தான் கட்டப்பெடுகிறதென்றும் அதன் மேற்கட்டுமானத்தை ஆக்குபவைத்தான்
அச்சமூகக் கூட்டங்களிற்கிடையில் நிலவும் மொழி, கலை கலாச்சாரம் எல்லாமே என்று மார்கஸியவாதிகள் கருதுவதை ஏனையவர்கள் முற்றாகவே
ஒதுக்கி விடுகின்றார்களா? அல்லது மார்க்ஸியவாதிகளின் பொருளியலை முதன்மைப்படுத்துவதை மட்டும் தான் எதிர்க்கின்றார்களா? அல்லது
பொருளை முதன்மைப் படுத்தாத மார்கஸியம் சரியென்று ஒத்துக் கொள்கின்றார்களா? இது பற்றிய தங்களது விரிவான கருத்துகளை அறிய
ஆவலாயிருக்கின்றேன். விவாதத்தைப் பயனுள்ளதாகத் தொடர்வதற்கு அவை பயனாகவிருக்குமெனக் கருதுகின்றேன்.

ஜெயமோகன்:
அன்புள்ள வி என் ஜி, தங்கள் வினாக்கள் பலவகையிலும் முக்கியமானவை  பின் நவீனத்துவத்தை நாம் தமிழ் எழுத்தாளர்களை வைத்து புரிந்து கொள்ள
முயன்றோமென்றால் பலவகையான சிக்கல்களை சென்றடைவோம். உதாரணமாக சாரு நிவேதிதா அதை ஒரு அடாவடி  கலக முறை என்று புரிந்து கொண்டு செய்ய முயற்சி செய்து வருகிறார் .அது பழைய தாதாயிசம் ,சர்ரியலிசம் சார்ந்த மனோபாவமே ஒழிய பின் நவீனத்துவமல்ல .அ.மார்க்ஸ் முதலியோர் அதை அரசியல் ரீதியான எதிர்ப்பியக்கம் என்று எண்ணுகிறார்கள் பின் நவீனத்துவத்தில் சுய  நிலைபாடு என்பது உறுதியான ஒன்றாக கருதப்படுவதில்லை. இப்போது பார்க்கும்போது  நாகார்ச்சுனன் மட்டுமே பின் நவீனத்துவ மனநிலையில் செயல்பட்டதாக தெரிகிறது. ஆனால் அவர் பேசியது எவருக்கும் புரியவில்லை.அவரது மொழி ஒரு முக்கியமான காரணம். பின் நவீனத்துவத்தை மடன் சருப் முதலியோரின் அறிமுக நூல்களிலிருந்து முதலில் படித்துவிட்டு பிறகு  அதன் தொடர்ச்சியாக ·பூக்கோ ,தெரிதா முதலியோரின் தொகை நூல்களை படித்து விரிவாக்குவது  நல்லது . அதன் பின் அவர்கள் குறிப்பிடும் நீட்சே /ஹெகல் முதலியோரின் சம்பந்தப்பட்ட  கொள்கைகளை மட்டும் படிக்கலாம் .அதாவது எவ்வளவு தூரம் படிப்பது என்று முன்னராகவே  தீர்மானித்து விட்டு சிறந்த தொகுப்பாளர்களால் தொகுக்கப்பட்ட தொகை நூல்களை மட்டும் படிப்பது மட்டுமே சாத்தியமான வழி .இல்லாவிட்டால் முடிவற்ற வேலை , முடியாத குழப்பம்  மிஞ்சும் . இது நான் கடைப்பிடித்த வழி.

அத்துடன் ஒரு நாளைக்கு 15 பக்கத்துக்கு மேல் படிக்காமலிருப்பதும் அவசியம். மூல நூல்களில் இந்தியமனம் எளிதில் போய் நுழைந்து விட முடியாது  என்று நான் எண்ணுகிறேன். மூலங்களை கரைத்து குடித்தவர்கள் போல பலர் இங்கு சொல்லிக்  கொள்கிறார்கள் .அது அத்தனை நம்பும்படியாக இல்லை.மேற்கத்திய தத்துவ அறிஞர்கள் அக்கால  விவாத சூழலில் பலவேறு விவாதங்களின் பகுதியாக எழுதி   குவித்திருக்கிறார்கள். நித்ய  சைதன்ய யதி மேற்கத்திய பல்கலைகளில்கூட அப்படி அசல் நூல்களை யாரும் படிப்பதில்லை  ,தொகைநூல்களே படிக்கப்படுகின்றன என்றார் .எனக்கு ஹெகல் நீட்சே   எவரின் அசல் எழுத்துக்களும் உள்ளே போகும்படி இல்லை .பின் நவீனத்துவத்துக்கு வருவோம். சில அடிப்படைப் புரிதல்களை சொல்கிறேன் அது ஒரு கொள்கையோ/கோட்பாடோ /தத்துவப்பார்வையோ/ஆய்வு அணுகுமுறையோ அல்ல அதற்கு திட்டவட்டமான தரப்பு என ஏதுமில்லை .அது ஒரு பாதிப்பு போக்கு .trend அவ்வளவுதான். முதலில் கட்டடக் கலையில்  அடையாளம்காணப்பட்டது.பிறகு மொழியியல் சார்ந்த தளங்களில் இன்னமும் அதன் அறிவியல் தள பாதிப்பு அடையாளம்காணப்படவில்¨.

2] நவீனத்துவம் [modernism ] என்றால் நவீனமயமாதல் [modernity ]முதிர்ந்து அதன் விளைவாக உருவான கொள்கைகள் மற்றும் எண்ணப்போக்குகளின் தொகை எனலாம் . அதற்கு அடுத்த தளம் பின்  நவீன சூழல் எனப்படுகிறது. அதன் கருத்தியல் பிரதிபலிப்பு பின் நவீனத்துவம். நவீனத்துவம் அ] தர்க்க பூர்வமானதும் புறவயமானதுமான அறிதல் முறை. அல்லது அறிவியல்  அல்லது பகுத்தறிவு நோக்கு அல்லது நிரூபணவாதம் empiricism ] ]அதை உருவாக்கிக் கொள்ளும்  தனிமனித பிரக்ஞை தனிமனிதனின் சுய அடையாளம் [அதாவது free will ] உலகளாவிய /அனைத்தும் தழுவிய முறையில்  கருத்துக்களை பொதுமைப்படுத்தி பார்த்தல் ஈ] முரணியக்க அணுகுமுறை [Dialectics ]அதன் அடிப்படையாக அமைந்த இரட்டை பிரிவு பார்வை [Dichotomy ] உ] கருத்துக்களை  எப்போதைக்குமாக கறாரா¡க வகுத்துக் கொள்ளுதல் அதன் விளைவாக உருவாகும் எதிரெதிர்  வகுப்பு முறை [Binary opposition ] முதலியவற்றில் நம்பிக்கை உடையதாக இருந்தது. 5]ஆகவே பின் நவீனத்துவம் இவ்வடிப்படைகளை மறுக்கும் போக்கு கொண்டதாக உள்ளது .பின் நவீனத்துவ சிந்தனையாளார்கள் பலர் தங்களை பின் நவீனத்துவர் என சொல்ல  விரும்பாதவர்கள் . மேற்கண்ட இயல்புகளின் அடிப்படையில் அவர்களின் பின் நவீனத்துவக் கூறுகள் அடையாளம் காணப்படுகின்றன அவ்வளவுதான். மார்க்ஸியத்துக்கும் பின் நவீனத்துவத்துக்கும் இடையே மோதல் எங்கு வருகின்றது என்று  இப்போது தெளிவாகியிருக்கும் என்று எண்ணுகிறேன். மார்க்ஸியத்துடன் பின்நவீனத்துவர்  மோதுமிடங்களை இவ்வாறு வகைப்படுத்தலாம் அ] மார்க்ஸியத்தின் தர்க்கமுறை உண்மையில் இல்லாத ஒரு புறவயத்தன்மையை உருவகித்து அதன்  அடிப்படையில் அமைந்துள்ளது .முதல் [capital ] உபரி[surplus ]முதலியவை எல்லாமே அகவய கருதுகோள்கள் மட்டுமே தரவுகள் [data] கூட அந்த அகவய பார்வையின் அடிப்படையில்  திரட்டப்பட்ட அகவய உருவகங்கள் மட்டுமே. அதன் தருக்கம் கருத்தியல் அதிகாரத்தை மட்டுமே  உருவாக்குகிறது . அது நேரடி அதிகாரத்தை உருவாக்கும் . எல்லா  கருத்துக்களும் அகவயமானவை அவை  தருக்கம் மூலம் புறவயமாக்கப்படும்போது அதிக்காரம் பிறக்கிறது. தருக்கம் என்பது என்பது ஒரு  குறிப்பிட்டவகை எடுத்துரைப்பு அல்லது புனைவு மட்டுமே [narration] .மார்க்ஸியம் என்பது ஒரு பெரும்  புனைவு [grand narration] .பெரும் புனைவுகள் தங்கள் தர்க்கம் மூலம் பற்பல சிறு புனைவுகளை அழித்து விட்டுத்தான் உருவாக்கப்படுகின்றன. ஆகவே அவை அழிவையே உருவாக்கும் .] தனிமனிதன் தனிமனம் அகம் சுயம் என்பதெல்லாம் தத்துவத்தால் கட்டப்பட்ட புனைவுகளே .எவரிலும் அப்படி மாறாத சுயம் /அகம் இல்லை .எவருக்கும் நிரந்தர அடையாளம் இருக்க இயலாது .சுயம் என நாம் பார்ப்பது சந்தர்ப்ப சூழலுக்கான ஒரு எதிர்வினையை மட்டுமே ஆகவே புரட்சிகர பாட்டாளி [Proletarian ] முதலாளி [Bourgeois] முதலிய குணநிலைகள் ஏதுமில்லை.ஒட்டுமொத்தமாக உலகளாவிய தளத்தில் எந்த கருத்தையும் வகுக்க முடியாது.எந்த வகைபாடும்  கருத்துருவும் சூழல் மற்றும் தருணம் சார்ந்து மட்டுமே பொருள்பட முடியும்.  ஈ] முரணியக்க பார்வையானது இயங்கியலின் எளிமைப்படுத்தப்பட்ட சித்திரத்தை அளிக்கிறது .உண்மையில் ஒவ்வொரு இயக்கமும் எண்ணற்ற உட்கூறுகளின் மோதல் / முயக்கம் மூலம் உருவாகக்  கூடியவை . ஆக மார்க்ஸியத்தின் மீதான பின் நவீனத்துவத்தின் விமரிசனம் அதன் தத்துவ அடிப்படையின் மீதான தக்குதல் கும்.மார்க்ஸி£யம் 19 ம் நூற்றாண்டுவரை தொடர்ந்து வந்த ஐரோப்பிய  அறிவொளி மரபின் நீட்சி ,உச்சம் . பின் நவீனத்துவம் அந்த மொத்த அறிவொளி மரபையே சாராம்சத்தில் நிராகரிக்கிறது. மார்க்ஸியம் பின் நவீனத்துவத்தை எப்படி எதிர்கொண்டது என சுருக்கமாக சொல்கிறேன்

1] உங்கள் மெய்காண்முறை என்ன ,அது அறிவியங்கியல் அல்ல என்றால்  வேறு என்ன என்று அது  திட்டவட்டமாக கேட்டது. சோக்கல் என்பவர் ஒரு போலி கட்டுரை எழுதி அதை பின் நவீனத்துவ இதழ் ஒன்றிற்கு அனுப்பி பிரசுரிக்க செய்து பின்பு அதை வௌ¤யிட்டு நவீனத்துவர்களுக்கு மெய் காண்முறையே இல்லை என்று நிரூபித்தார் .மெய்காண்முறைஇல்லாத ஒரு  தரப்பு எவ்வகையிலும் பயனுள்ளதல்ல.

2] உலகம் முழுக்க  இயற்கையும் மனிதனும் ஒன்றுதான். அவர்கள் உறவும் ஒன்றாகவே உள்ளது. ஆகவே அடிப்படையான மானுட அனுபவங்கள் ஒன்றாகவே இருக்கும்.  உலகளாவிய பார்வை  என்பது இந்த அடிப்படையிலேயே சாத்தியமாகிறது. உதாரணமாக பின் நவீனத்துவம் கூட ஒரு  உலகளாவிய பார்வையாக 20 வருடங்களில் மாறியது .

3] இயங்கியல் அணுகுமுறையை தத்துவார்த்தமாக சிற்றலகுகளுக்கு [micro unit] மாற்றுவதை மட்டுமே பின் நவீனத்துவம் செய்கிறது .அதை நிராகரிக்கவில்லை.

4] தனிமனித ஆளுமை என்பது வெறும் சூழல் சார்ந்த உருவகமே என்பதை நவீன நரம்பியல்  திட்டவட்டமாக மறுத்து விட்டது.

5] ஒரு சிந்தனை முறை செயலுக்கு அடிப்படை அமைத்து தரவேண்டும்.வழிகாட்டவேண்டும் .பயனே சிந்தனையை அளக்க முக்கியமான அளவுகோல்.ளுமை ,அமைப்பு ,தருக்கம்,திட்டம் கியவற்றை மறுக்கும் பி நவீனத்துவம் எதிர்மறையானது மட்டுமே.ஒரு விமரிசனம் என்பதற்கு மேலாக  அதற்கு மதிப்பு இல்லை.  இந்திய சூழலில் பின் நவீனத்துவத்தின் எந்த அடிப்படைகள் முக்கியம் எவை முக்கியமில்லை என விரிவாகவே எழுதவேண்டும்.   இரண்டு குழப்பங்கள் தமிழில் அடிக்கடி செய்யப்படுகின்றன .அவை

1] பின் நவீனத்துவம் ஹெகல் நீட்சே போன்ற ஐரோப்பிய சிந்தனையளர்களை ஏற்பதில்லை .நீட்சேயின் அதிகாரம் குறித்த கருத்துக்கள் ,ஹெகலின் அடிமை உடைமை உறவு குறித்த கருத்துக்கள் , காண்டின் உன்னதமாக்கம்[sublime] குறித்த கருத்துக்கள் ஆகியவை அதன் சிந்தனையாளர்களால் விரிவுபடுத்தப்படுவது உண்மையே ஆனால் அவர்களின் தொடர்ச்சியாக  அல்ல . அவர்களின் தத்துவ கருத்து நிலைகள் வெறுமே குறியீடுகளாக [symbol] படிமங்களாக  [images ] மட்டுமே பின் நவீனத்துவர்களால் கருத்தில் கொள்ளப்படுகின்றன.

2] பின் நவீனத்துவத்தை அவ நம்பிக்கைவாதமாக [Skepticism] அல்லது அனைத்து மறுப்புவாதமாக [Nihilism ] தமிழ்நாட்டில் சிலர் புரிந்துகொண்டிருக்கிறார்கள் .அது மிக பிழியானது. அவற்றுக்கு அவநம்பிக்கை ,அனைத்து மறுப்பு என்ற 'நிலைப்பாடு' உண்டு.பின் நவீனத்துவம் சொற்களன்களுக்கு இடையே நீண்டு போகும் ஒரு பொது தர்க்க சரடை ஏற்பதில்லை . அதாவது  அதற்கு நிலைபாடுஇல்லை .முன்னவை தத்துவ தரப்புகள்.பின் நவீனத்துவம் அப்படி அல்ல.

திகம்பரன்:
அன்பின் திண்ணை நண்பர்களே!  இந்திய, ஈழ அரசியல்,இலக்கிய, சமுகசேவை, முனைப்பாளர்களில் மார்ர்க்சிசத் தாக்கம் உள்ளவர்களே பெரும்பான்மையானவர்கள் என நினைக்கிறேன். இந்திய சுதந்திரப்போராட்டத்தோடு வளர்ந்து, சமுக சிந்தனைவயப்பட்டவர்களில் காந்தியவாதிகள் உண்டென்றாலும், நவ சிந்தனையாளர்களில் இத்தாக்கம் அருகிப்போய்விட்டது. அது அந்தத் தலைமுறையுடன் நசிந்துபோய்விட்டது போலும். மார்க்சிசம் தவறாக நடைமுறைப்படுத்தப்பட்டு சில நாடுகளில்
தோல்வி கண்டதன் தாக்கம்; நவமார்க்சிசம், கீழை மார்க்சிசம்,இருத்தலியல், மற்றும் பல கோட்பாடுகளாக மார்க்சிசத்தை புனரமைத்து, நவீனமாக்குவதற்கு முயற்சிக்கப்படுகின்றன. பெரியாரியம் கூட, இந்தியத்தனமான மார்க்சிசப்பார்வையுடன் புனர்கருத்து ஊட்டப்பட்டு வருகிறது. ஆனால் காந்தியின் சமூக அக்கறைகளான, சாத்வீகம், ஒத்துழையாமை, பரந்த மனிதாபிமானம் போன்றவற்றில் நவசிந்தனையாளார்கள் எவரும் கவனம் ஊன்றுவதாக தெரியவில்லை.  வன்முறையின் இன்றைய பரிமாணம் வெறும் ஆயுதம் சார்ந்ததாகமும் இல்லை. அமெரிக்கா போன்ற  வல்ஏகாதிபத்திய நாடு, தன் பொருளாதார உறவின் மூலமே வன்முறையை மறைமுகமாக கையாள முடிகிறது. அத்துடன் அமெரிக்கா போன்ற பாரிய ஆயுதபலம் மிக்க நாட்டுடன் எதிர்வன்முறையை பிரயோகிப்பது என்பது மலையுடன் முட்டுவது போன்றது. ஆகவேதான் இன்றைய சூழலில் காந்தியத்தின் நல்ல அம்சங்களை மறுபரிசீலனை செய்யவேண்டுமென நினைக்கிறேன். காந்தியைப் பற்றி எவர் பேச்செடுத்தாலும் உடனுக்குடன் மறுதலிப்பவர்கள் காந்தியாரின் அரசியலை  உதாரணமாக காட்டுவார்கள். அதுகூட பகத்சிங்கிற்கு தூக்குத்தண்டனைக்கு நாட்குறிக்க உதவியது,  பிர்லா மாளிகையில் தங்கியது, லண்டனில் ஆட்டுப்பாலுக்காக செலவுசெய்தது போன்ற எளிதில் நிராகரிக்கக்கூடிய வாதங்களாக இருக்கும்.நான் உங்களிடம் கூறவிரும்புவது என்னவெனில் மாபெரும் மனிதாபிமான தத்துவமான மார்க்சிசம் ஒரு எளிய மனிதனின் மன ஓட்டங்களை காணத்தவறியுள்ளது. மார்க்சிசம் தவறிய இப்பகுதிகளை காந்தியத்தின் சில நடைமுறைகளால் ஈடுசெய்துவிடமுடியும். காந்திக்கு ஒரு இந்திய மனிதனின்மனவார்ப்பை ஊடறுக்கக்கூடிய மேதைமை இருந்திருக்கிறது. இதை அவர் அரசியலில் நடைமுறைப்படுத்தியபோது (அவரளவில் வெற்றியடைந்து) ஜன பாதகம் செய்திருக்கிறார். ஆனால் இவற்றை இன்றைய உண்மையான சமூக அக்கறையுள்ள கோட்பாட்டாளர்கள் கவனத்தில் எடுப்பார்களாயின் நன்றாகஇருக்கும்.  இந்தியக்கலாச்சாரம் பற்றியும், மார்க்சிசம் பற்றியும் இப்போது திண்ணையில் நண்பர்கள் விசாரம் செய்கிறார்கள். அவர்கள் காந்திய சாதகங்களைப்பற்றியும் எடுத்து ஆராய வேண்டும் என்பது எனது அவா.இந்தியக் கலாச்சாரம் பற்றி நன்றாக அறிந்தவர்கள் மூன்றே மூன்று பேர்கள் என நினைக்கிறேன். புஷ்யமித்திரன், சாணக்கியன், காந்தி. முதலிருவரையும் நாம் ஆய்வுக்கு எடுக்க தேவையில்லை. காந்தியைப் பற்றி நண்பர்கள் ஆராயவேண்டும் என நட்புடன் கேட்டுக்கொள்கிறேன். ஒரு மேலோட்டமான பார்வைக்கு நான் பைத்தியக்காரத்தனமான கேள்வியை முன் வைப்பதாகத் தோன்றலாம். மார்க்சிசநெறியுடன் நீண்டகால பிணைப்பும், செயற்பாடும் கொண்டிருந்த பலர் பிற்காலத்தில் வன்முறயின் மீது எதிரான கருத்தை (காந்தியத்தை அல்ல) பேட்டிகளில் சொன்னபோது "ரத்தம் செத்துவிட்டது", அல்லது திரிபுவாதம், திருத்தல்வாதம், போன்ற மறுத்தல் அடிகளை மற்றவர்கள் கொடுப்பதைக் காண்கிறேன். இம்மாதிரியான அனுபவப்பாடுகள் எல்லாம் காந்தியத்தை மறுபரிசீலனை செய்யவேண்டியுள்ளதாகவே எனக்குப் படுகிறது. உங்கள் மேலான கருத்துக்களை அறிய வலாயுள்ளேன்......!

வ.ந.கிரிதரன்:
ஜெயமோகனுக்கு: தாங்கள் "பின் நவீனத்துவத்துக்கு வருவோம். சில அடிப்படைப் புரிதல்களை சொல்கிறேன் 1] அது ஒரு கொள்கையோ/கோட்பாடோ /தத்துவப்பார்வையோ/ய்வு அணுகுமுறையோ அல்ல.அதற்கு  திட்டவட்டமான தரப்பு என ஏதுமில்லை . 2] அது ஒரு பாதிப்பு போக்கு .trend அவ்வளவுதான். முதலில் கட்டடக் கலையில்  அடையாளம்காணப்பட்டது. பிறகு மொழியியல் சார்ந்த தளங்களில் இன்னமும் அதன் அறிவியல் தள பாதிப்பு அடையாளம்காணப்படவில்லை . " என்று கூறுவது சரிதான். பின் நவீனத்துவம் என்பது ஒரு கொள்கையோ கோட்பாடோ அல்ல தான். ஆனால் மார்க்ஸியம் என்பது ஒரு தத்துவம்.  கோட்பாடு. கோட்பாடல்லாததொன்றால் கோட்பாடொன்றினை எவ்விதம் அணுகுவது? அவ்விதம் அணுகுவதில் அர்த்தமேதுமுண்டா? பின் நவீனத்துவமென்பது ஒரு பாதிப்பு ஒரு காலகட்டத்தில் நிலவிய/நிலவும்(?) எண்ணப் போக்குகளின் தொகுப்பு எனக் கருதுவோமென்றால் பின் நவீனத்துவக் கருதுகோள்கள் எத்தகையவை? உதாரணமாகப் பின் நவீனத்துவ கால கட்டத்தில் பல்வேறுவகையான கருதுகோள்கள் நவீனத்திற்குச் சார்பான/சார்பில்லாதா, மார்க்ஸியத்திற்ச் சார்பான/சார்பில்லாத..வ்விதமான பலவகையான சிந்தனைப் போக்குகள் காணப்படுகின்றன.  அவ்வாறானால் பின் நவீனத்துவக் கருதுகோள்களென்று கருதக் கூடியவை எவை? 'நவீனத்திற்கு எதிரான' (Anti Modernist) கருதுகோள்களைச் சிலர் தவறாகப் பின் நவீனத்துவமெனக் கருதிக் கொள்வது தவறானதென்றும் இது தவறான பின்நவீனத்துவமென்றும் (False PostMoernism) ஒரு கருத்து நிலவுகின்றது. இது போல 'பாப் இசையை ரசித்துக் கொண்டும், வெஸ்டர்ன் திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டும், மக்டானல்டைச் சுவைத்துக் கொண்டும், இந்தியாவில் பாரிஸில் உருவாக்கிய  வாசனைத் திரவியத்தைப் பூசிக்கொண்டும்,.. கிடைக்கும் பலவேறு பொருட்களில் பிடித்ததைத் தேர்வு செய்து உபயோகித்து வாழுமிருத்தலைச் சித்திரிப்பதும் ஒருவகையான பின் நவீனத்துவமென்றும் (Eclectic Post Modernism) சிலர் கருதிக் கொண்டார்களென்றும் அறியக் கிடக்கின்றது. இதனை J.H.lyoard போன்றவர்கள் அறிந்து வெளிப்படுத்தினார்கள். இவையெல்லாம் தவறான பின்நவீனத்துவமென்பது (False PostModernism ) அவர்களது கருத்து. விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள், ஆய்வுகள் எல்லாம் நவீனத்துவத்திற்கு வழிகோலினவென்றால்,  பின்நவீனத்துவத்தை நவீனத்துவத்தின் எதிர்ப்புக் கருத்தாகக் கருதியவ்ர்கள் அத்தகைய ஆய்வுகள்/கண்டுபிடிப்புகளின் முடிவே (End oF Experimentation) பின்நவீனத்துவமென்று கூக்குரலெழுப்பியதாகவும் அறியக் கிடக்கின்றது. இவற்றின் விளைவாகச் சரியான பின்நவீனத்துவமென்றாலென்ன என்பதை அறிவதற்குப் புரிவதற்கும் முயற்சிகள் நடந்தன. அதன் விளைவாகச் சரியான பின்நவீனத்துவத்தின் மூன்று முக்கிய கூறுகளாகப் பின்வருவனவற்றை அடையாளம் கண்டார்கள்:

1. மீளுற்பத்தி ( Reproductibility). பெருமளவில் நுகர்ச்சியுள்ள காலகட்டத்தில் அதனைத் தீர்ப்பதற்கு முக்கியமானதிது.

2. விம்ப நுகர்ச்சி ( Image Consumarism):இது உண்மையை மாற்றீடு (Replace) செய்கிறது. டாவின்சியின் உண்மையான மோனலிசா ஓவியத்திற்குப் பதில் அதன் நகல் பெருமளவில்மீலுற்பத்தி செய்ய்யப் படுகின்றது. அதற்குக் காரணம் அதிகரித்த நுகர்வு தான்.இவ்விதம் உண்மையை (reality) 'உயர் உண்மை' (Hyper Reality) மாற்றீடு செய்வதை காணலாம். இதனால் அசலின் விலையும் அதிகளவில் அதிகரித்து விடுகின்றது.

3. சட்டப் படுத்தல்/ நியாயப் படுத்தல் (Legitimization): சுதந்திரச் சந்தைப் பொருளாதாரச் (Free Market economy) சுழலில் கலையின் பல்வேறு கூறுகள் கூட வர்த்தகமாகக் கொடிகட்டிப் பறக்கும் சூழலில் தரமான உண்மையான கலை வடிவங்கள் தப்பிப் பிழைத்து வருவதோடு அவற்றின் பெறுமதியும் அதிகரித்துத் தானிருக்கின்றது. இதனால் தான் பலருக்குப் புரியாவிட்டாலும் பலரின் புகழ் பெற்ற ஓவியங்களை வாங்குவதற்கு ஒரு கூட்டம் எப்பொழுதுமே இருக்கின்றது. இவற்றின்தரத்தை நிர்ணயிப்பவை எவை? அப்படைப்புகளா? அல்லது சமூகத்தில் நிலவும் அதிகாரம் கொண்ட பெரும் நிறுவனங்களா? ஆக நவீனத்துவம் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளின் விளைவாக நாம் வாழும் சமுதாயத்தில் ஏற்பட்ட விளைவாக உருவான போக்குகளின் தொகுப்பென்றால் பின்நவீனத்துவமானது நவீனத்துவத்தின் அடுத்தக்கட்டத்தில் நிலவும் போக்குகளின் தொகுப்பென்று கூறலாம். அதே சமயம் நவீனத்துவத்தின் அடுத்த கட்டம் நவீனத்துவம் கொண்டு வந்த மாற்றங்களை அடிப்படைகளாக உள்வாங்கிக் கொண்டே வளர்ந்து செல்கின்றது. ஆக பின்நவீனத்துவமென்பது நவீனத்துவத்தை உள்வாங்கிக் கொண்டே மேன்மேலும் அதன் விளைவாக உருவான போக்குகளை
உள்வாங்கிக் கொண்டு மாறி செல்லுமொர் போக்கென்று கருதலாம். அதனால் தான் நவீனத்துவத்தை எதிர்ப்பதைச் சிலர் பின்நவீனத்துவமாகக் கருதுவதைத் தவறான பின்நவீனத்துவமென்று கருதும் போக்கும் நிலவுகின்றது. மேலும் "நவீனத்துவம் அ] தர்க்க பூர்வமானதும் புறவயமானதுமான அறிதல் முறை" என்று கூறுவது சரியானது தானா? உதாரணமாகப் புகைப்படக் கருவியின் கண்டு பிடிப்பு உண்மையை அவ்விதமே வெளிப்படுத்தும் யதார்த்தவகையிலான ஓவியத்தின் முக்கியத்துவத்தைக் குறைத்து விட்டது. இதன்  விளைவாக ஒவியர்கள் யதார்த்தத்தை நோக்கும் பார்வையினை மாற்றியதால் உருவான விளைவுகளல்லவா நவீனத்துவத்தில் காணப்படும் 'கியூபிசம்' போன்ற போக்குகள். இங்கு ஓவியர்கள் யதார்த்தத்தை அகரீதியாக உணரும் தன்மையினையும் வெளிப்படுத்தும் வகையிலல்லவா படைப்புகளைத் தந்தார்கள். இங்கு எவ்விதம் நவீனத்துவம் தர்க்க பூர்வமானதும் புறவயமானதுமான அறிதல் முறையாக இருக்கின்றது?

சதுக்கபூதம்:

கேள்வி:

பின்நவீனத்துவர் அடிக்கடி "கட்டுடைத்தல்" என்ற ஒரு கலைச்சொல்லை பாவிக்கிறார்களே,  கட்டுடைத்தல், விறகுடைத்தல், பல்லுடைத்தல் என்பதெல்லாம் ஒத்த கருத்துள்ள சொற்களா?

ஐயம்:
"பெருங்கதையாடலு"க்கும் கதகளி, குச்சுப்பிடி போன்ற  ஆடல்வகைகளுக்கும் சம்பந்தம் உண்டா?

தெளிவு:
பின்நவீனத்துவம் எனக்கு சோறுபோடாது..!

வ.ந.கிரிதரன்:
நண்பர் சதுக்க பூதம் கட்டுடைத்தல் பற்றியொரு கேள்வி கேட்டிருந்தார். பின்நவீனத்துவச் சிந்தனையின் படி சிறுகதையோ நாவலோ அல்லது உரை நடை எதுவுமே (மார்க்ஸின் மூலதனம், கம்யூனிஸ்ட்டுக் கட்சியின் அறிக்கையுட்படத்தான்) பிரதிகள்தாம். படைப்புகள் அல்ல. புத்தகம் அல்லது பிரதியென்பது புதிதாகக் கட்டப் படுகிறதேயொழிய படைக்கப் படுவதில்லை. மொழியென்னும் பொருளிலிருந்து படைக்கப் படுகிறது. ஏற்கனவே இருப்பவற்றின் பிரதிகளே புத்தகங்கள். மொழி கொண்டு கட்டப் படும் பிரதிகளே இவையெல்லாம். கட்டப் படுவதால் இவையெல்லாம் கட்டுக் கதைகள் ஆகின்றன. தமிழில் ஏற்கனவே கட்டுக் கதை என்றொரு பதம் இருப்பதால் அதில் பின்நவீனத்துவச் சாயல் இருப்பதாகவும் சிலர் கருதுவர். அத்துடன் பின்நவீனத்துவச் சிந்தனையின் படி ஒரு பிரதி கட்டப் பட்டவுடன் அதை கட்டியவர் மட்டுமல்ல அப்பிரதியும் இறந்து விடுகின்றது. இறந்த பிரதியை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்துப் போட்டு அதன்இறப்பிற்குரிய காரணங்களை அறிந்து 'மரண அறிக்கை' ( Post Mortem) செய்வது தான் பின்நவீனத்துவம் ( post modernism) என்றொரு கருத்தும் நிலவுகின்றது. இதனைத் தான் கட்டுடைத்தல் , பிரதியைக் கட்டுடைத்தல் என்று கூறுவர். நடைமுறையில் உள்ள எல்லாவற்றையும் அறிந்து கொண்டு அதன் பின் தமது சிந்தனைத் தெளிவிற்கேற்ப புரிந்ததை அறிந்ததைத் தெரிவு செய்வதில் தவறில்லை. ஆனால் பலருக்குக் கற்றலென்பது கசக்க அல்லவா செய்கிறது. ஒரு விடயம் புரியவில்லையென்றால் அதை அறிந்து நிராகரிப்பதற்குப் பதில் நிராகரிப்பதோடு மட்டுமல்ல அவதூறுகளையும் அல்லவா அள்ளித் தெளிக்கின்றார்கள். விவாதமொன்றில் ஆரோக்கியமாகக் கலந்து கொள்வதென்பதே பலருக்குப் புரிவதில்லை.

சதுக்கபூதம்:
நண்பரே! குதர்க்கத்திற்காக கேட்கவில்லை. ஒரு உளவியல் அறிக்கை(சிகிச்சை விபர அறிக்கை:Case history),கணித விஞ்ஞானச் சூத்திர வரைவிலக்கணங்கள், 'நிலா நிலா வா வா, நில்லாமல் ஓடி வா,  மலைமீது ஏறிவா, மல்லிகைப்பு கொண்டுவா' என்ற குழந்தைப்பாடல், "இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்" என்ற குறள், "என் ஆருயிர்க் கண்ணாளுக்கு, இந்தக்கடுதாசிவந்து சேருமுன் உனக்கு ருபா 10/- தந்தியில் கிடைத்திருக்கும். இந்த மாதத்துடன் நம்முடையகஸ்டங்கள் எல்லாம் தீர்ந்துவிடும். பயப்படாதே. மலைக்காதே. கண்ணா! குஞ்சுவுக்கு எப்படி  இருக்கிறது.? ராஜாத்தி! குஞ்சுவின் கவலையில் உன் உடம்பைக் கவனிக்காமல் விட்டுவிடாதே. குஞ்சு என் உயிர். நீ என் உடம்பு." என்ற புதுமைப்பித்தனின் கடிதம், என்பவற்றைப் பிரதிகளாகக் கொண்டு, கட்டுடைத்தல் சாத்தியமா? இவற்றின் ஒவ்வொரு உதிரிப்பாகங்களையும் அக்குவேறு ஆணிவேறாகக் கழற்றிப் பிரித்தால், பின்னர் திரும்பப் பூட்டும்போது பல ஆணிகள், நட்டுக்கள், வாசர்கள் மீதியாக இருக்குமல்லவா? வறுமையின் பிராண்டலுக்குள் தன் மனைவிக்கு ஜில்மால் விடும் புதுமைப்பித்தனின் ஜீவியக் கடிதம் ஒற்றை யதார்த்தப் பிரதியல்லாமல் வேறென்ன? உண்மையாகவே இந்தியப் புலத்திற்கு பின்நவீனமும், மேஜிக்கலும் தேவைதானா? சராசரி  கிராமவாசி "வயிறு பசியில் எரிகிறது"(பட கினி) என்று சொல்வதைக்கூட கட்டுடைக்கலாமா? ஒண்டுமே புரியலையே????

வ.ந.கிரிதரன்:
நண்பர் சதுக்க பூதத்தின் கவலை எனக்குப் புரிகிறது. முரண்பாடுகள் என்பவை எப்பொழுதுமே இருக்கத் தான் செய்யும். ஒரு விடயத்தைப் பற்றிப் பல்வேறு வகையான பார்வைகள் இருக்கத் தான் செய்யும். அவற்றை ஏற்பதும் ஏற்காமல் விடுவதும் அவரவர் பார்வையைப் பொறுத்தது. அதற்காக வரிந்து கட்டிக் கொண்டு சண்டை பிடிப்பதால் மாற்றுக் கருத்தென்பது இல்லாமல் போய் விடப் போவதில்லை. இருக்கத் தான் போகின்றது. உதாரணமாக இங்கு ஒரு படைப்பைப் பற்றி உங்களது கருத்துகளை உங்களது பார்வையில் அலசுவதும் ஒருவகையில் கட்டுடைத்தல் தான். ஆனால்  ஆத்திரமடையாமல் ஆறுதலாக பின்நவீனத்துவப் பார்வையின் கூறுகளை எடுத்து தர்க்க ரீதியாக  உங்களது பார்வையினை நிறுவுவதில் தவறொன்றுமில்லையே. பலர் என்ன செய்கிறார்களென்றால் ஆத்திரத்தில் மிகவும் கொச்சைத்தனமாக வார்த்தைகளைக் கொட்டி விதண்டாவாதம் செய்யும் போது அவர்களது சரியான கருத்துகளைக் கூட யாருமே பொருட்படுத்தாமல் இருந்து விடும் அபாயம்  இருக்கிறதே. எந்த எளிமையான விடயத்தையுமே கட்டுடைக்கலாம். ஆனால் இவையெல்லாம் தேவைதானா என்பது அவரவர் பார்வையினைப் பொறுத்தது. பல்வேறுவகையான தத்துவங்களையும் கருதுகோள்களையும் அறிந்து கொள்வதற்காகவாவது அறிந்து கொள்ளத் தான் வேண்டும். இல்லாவிட்டால் அது பற்றி வாதிப்பது கூட முடியாது போய்விடும். எதற்காக லெனின் மார்கஸ் போன்றவர்கள் பல்வேறு வகையான முரண்பட்ட விடயங்களையும் விவாதத்திற்கு எடுத்துக் கொண்டு விவாதித்தார்கள். அவையெல்லாம் தேவையில்லையென்று விட்டு விட்டுப் போயிருக்கலாமே.  அவர்கள் அவ்விதம் செய்யவில்லையே. ஏனென்றால் தங்களது பக்க நியாயத்தை நிலை நிறுத்துவதற்காக அவர்கள் சகல விதமான மாற்றுக் கருத்தோட்டங்களையும் அறிய வேண்டியிருந்தது.  அதற்காகவாவது முரணான விடயங்களையும் அறியத்தான் வேண்டியிருக்கின்றது எனக் கருதுகின்றேன். மேலும் லெனின் போன்றவர்கள் கற்ற நூல்கள், தத்துவங்கள் எல்லாம் அவர்கள் யாருக்காகப் போராடினார்களோ அந்த வறிய தொழிலாள மக்களில் பலர் வாசித்திருக்கவே மாட்டார்கள். அதற்காக அவர் ஏனைய கருதுகோள்களெல்லாம் தேவைதானா என்று ஒதுங்கி இருந்து விடவில்லையே. இந்தியாவுட்பட பல்வேறு நாடுகளில் வாழும் மக்கள் எல்லோரும் பல்வேறு அடக்கு முறைகளிற்குள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஆனால் அவர்களுக்காகப் போராடுபவர்கள் சகலவிதமான மாற்றுக் கருத்துகளையும் கற்று, அறிந்து புரிந்து தெளிவுடனிருப்பது மிகவும் அவசியம். அதே சமயம் தர்க்கம் புரியும் போது கூட எதிராளியின் கருத்துகளை மறுதலிக்கும் போது  கூட ஒருவித பண்புடன் நடந்து கொள்வது அவசியமென்றும் கருதுகின்றேன்.

வ.ந.கிரிதரன்:
நண்பர் சதுக்கபூதத்திற்கு. ஏற்கனவே ஜெயமோகன் தனது கடிதத்தில் 'பின் நவீனத்துவத்தை நாம் தமிழ் எழுத்தாளர்களை வைத்து புரிந்து கொள்ள முயன்றோமென்றால் பலவகையான சிக்கல்களை சென்றடைவோம்.' என்று கூறியுள்ளதை கவனிக்கவும். தமிழ் எழுத்தாளர்களின் பின்நவீனத்துவப் புரிதல்களையிட்டு முதலில் கவனம் செலுத்துவதை ஆரம்பப் படியாகக் கொண்டு பின்நவீனத்துவச் சிந்தனையாளர்களின் மூலப் பிரதிகளை அறியமுற்படுவதை அடுத்த படியாகக் கொள்வதே நன்று என்று படுகிறது. மேலும் சிவானந்தன் போன்றவர்களின் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை.  உதாரணமாக ஒரு போரினால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தையின் நிலையினை ஓவியமாக வரைவோமென்றால் அதனை யதார்த்தப்பாணியில் வரையலாம். அதனை கியூபிஸப் பாணியில் வரையலாம். எந்தப் பாணியில் வரைந்தாலும் அது அந்தக் குழந்தையின் நிலையினைத் தானே சித்திரிக்கிறது. இவ்வித வெளிப்பாடு கலையின் எந்தவடிவமாகவுமிருக்கலாம். ஓவியமாகத் தானிருக்கவேண்டுமென்பதில்லை. ஒரு புதிய சிந்தனைப் போக்கு சில கருத்துகளை ஏற்கவில்லையென்பதற்காக அதனை ஒதுக்க வேண்டுமென்பதில்லை. அதிலுள்ள நல்ல அம்சங்களை எடுத்துக் கொள்ளலாம். பிறவற்றை விட்டு விடலாம். ஆனால் இது கூட ஓவ்வொருவரின் அணுகுமுறையினையும் பொறுத்துத் தானிருக்கும். ஒருவருக்கு நல்ல அம்சமாக இருப்பது   இன்னொருவருக்கு தீய அம்சமாக இருக்கலாம். என்னைப் பொறுத்த வரையில் ஒரு சிந்தனைப்  போக்கின் சமுதாயப் பயன்பாடுள்ள அம்சங்களை ஏற்றுக் கொள்ளவேண்டும். கலையில் கலைத்துவம்  இருக்க வேண்டும். அதே சமயம் சமுதாயப் பயன்பாடு உள்ளதாகவுமிருக்க வேண்டும். பின்நவீனத்துவச் சிந்தனையின் நல்ல அமசங்களாக நான் காணுவதென்னவென்றால்...இதுவரை காலமும் நாம் ஒரு படைப்பை அல்லது எழுத்தை அணுகி வந்த முறையினையே தலைகீழாக மாற்றி விடுகிறது. படைப்பை படைப்பாகவே அது காண்பதில்லை. எனவே இத்தகைய அணுகுமுறை சரியா தவறா என்பதல்ல பிரச்சினை. இது எம்மை இன்னொரு கோணத்தில் சிந்திக்க வைக்கின்றது. ஆராய வைக்கின்றது.விவாதிக்க வைத்து விடுகின்றது. அதே சமயம் தத்துவங்கள் கோட்பாடுகள் ஆகியவற்றை மறுப்பதை படைப்பை வெறும் பிரதியாக ஒதுக்கி விடுவதை அதன் முக்கியத்துவத்தை இல்லாமல் செய்து விடுவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. அதற்காக மாறுபட்ட சிந்தனையொன்றை அறியும் என் ஆர்வத்தை என்னால் தடுக்க முடியாது. பின்நவீனத்துவச்சிந்தனைக்கு எதிரானதொரு சிந்தனை வரினும் அதனை நான் அறியத்தான் விளைவேன். ஒதுக்கி விடமாட்டேன். ஆனால் எனக்குச் சரியென்று பட்டதைத் தான் அப்பொழுதும் ஏற்றுக் கொள்வேன். எனவே சதுக்கபூதத்தின் கருத்துகளை அதிகமாக அறிய விரும்புகின்றேன். ஏனென்றால் சதுக்க பூதம் அதிகம் படிப்பவரென்பது எனக்குத் தெரியும். இது ஒரு விவாத அரங்கு. இங்கு கருத்துகளை எந்தவிதத் தயக்கமுமின்றி அறிவதற்காகவும் புரிவதற்காகவும் பரிமாறிக்கொள்ள வேண்டும்.  இல்லாவ்விட்டால் இதனை உரிய முறையில் பயன்படுத்தும் வாய்ப்பினை இழந்து விடுவோம்.

செங்கள்ளுச்சித்தன்:
பின் நவீனத்துவப் பாணியில் எடுக்கப்பட்ட திரைப்படம் "மொலென் ரூஸ்" (Moulin Rouge).பின் நவீனத்துவக் கலை வெளிப்பாடுகளில் ஆர்வமுடையவர்கள் வசதிப்படின் இத் திரைப்படத்தை  பார்த்து மகிழலாம். நடிகை Nicole Kidman அவர்களின் நடிப்பு இத் திரைபடத்தில் அபாரம்.

ஜெயமோகன்:
அன்புள்ள வி என் ஜி மற்றும் சதுக்கப்பூதம் அவர்களுக்கு ,ஏற்கனவே மாரப்பன் என்பவர் சதுக்கப்பூதம் என்ற பெயரில் எழுதி ஒரு சிற்றிதழும் நடத்தி வருகிறார் .டிக்கன்ஸின் பரம ரசிகர். கேட்டால் முதல் பின் நவீனத்துவரும் அவரே என்பார்.மனைவி விடுமுறை நாட்களில் வீட்டைசுத்தம் செய்ய சொல்லிவிட்டதனால் பின் நவனத்துவம் பற்றி விரிவாக எழுத முடியவில்லை.மன்னிக்கவும். தமிழ் எழுத்தாளர்களின் எழுத்தை நம்பி நாம் பின் நவீனத்துவத்துக்குள் போனால் ஏற்படும் பிரச்சினை என்ன?மேற்கத்திய ஆய்வாளர்கள் சிலரை நான் நித்ய சைதன்ய யதியின் குருகுலத்தில் சந்தித்தது உண்டு. அவர்களுக்கு ஐரோப்பிய தத்துவ மரபில் பயிற்சி உள்ளது.பிளேட்டோ முதல்மார்க்ஸ் வரையிலான அதன் பரிணாம படிநிலைகள் பற்றிய ஒரு மனப்பிம்பம் அவர்களிடம் தவறாமலரிருக்கிறது. அத்துடன் அம்மரபுக்கு எதிரான கிறிஸ்தவ இறையியல் மரபின் ஒரு சரடும் அவர்களிடம் உள்ளது. ஆகவே ஒரு முரணியக்க  இயங்கியல் [டைலக்டிக்ஸ்] அவர்கள் சிந்தனையை  இயக்கியபடி உள்ளது . மாறாக நமது உள்ளூர் ஆய்வாளர்களின் பின்னணி வெளிறியுள்ளது .அவர்களுக்கு இந்திய சிந்தனை மரபு எதிலுமே சற்றும் பயிற்சி இருப்பதில்லை.தமிழில் அதிகமாக எழுதும் அனேகமாக எல்லா எழுத்தாளர்களும் இந்திய சிந்தனைமரபு குறித்து மிக எள்மைப்படுத்தப்பட்ட ,பிழையான சிந்தனைகளையே முன்வைத்திருக்கிறார்கள் .அவர்களுக்கு அதில் ஆர்வமில்லை என்று சொல்ல அவர்கள் தயங்கியதுமில்லை . அதேபோல மேற்கத்திய மரபை அவர்கள் விரிவாக அசலாக அறிந்ததுமில்லை .அப்படிப்பட்ட படிப்புப் பின்புலம் உள்ளவர்கள் நானறிந்து பிரேம் மட்டுமே .

என்ன நடக்கிறது என்றால் ஒரு குறிப்பிட்டெ வயதில் இங்குள்ளவர்களுக்கு மார்க்ஸியம் அல்லது மேற்கத்திய பகுத்தறிவு வாதம் அல்லது நவனத்துவம் போல ஏதாவது ஒரு சிந்தனைப் போக்கு அறிமுகமாகிறது . அவர்கள் அறியும் முதல் சிந்தனை மரபு என்பதனால் அவர்களுக்கு விமரிசனமில்லாத நம்பிக்கை மட்டுமே உருவாகிறது . இச்சிந்தனை மரபின் பின் புலமாக அவர்கள் சிறிது மேற்கத்திய மரபை அறியக்கூடும் .அத்துடன் சரி. ஆகவே அவர்கள் தத்துவ ஆர்வம் நம்பிக்கை வடிவில் உள்ளது. மோதலும் முரண்பாடும் இல்லை. ஆகவே  இயக்கமும் இல்லை டெல்லிக்கு வந்த  தெரிதா அங்குள்ள புது சிந்தனையாளார்கள் இந்திய மரபு பற்றி ஒன்றும் தெரியாமல் , கவலைப்படாமல் இருப்பதைக்கணடு கண்டித்தாராம். ஐரோப்பிய மரபு குறித்த ஆழமான அறிவு அவருக்கு உண்டு அதை விமரிசிக்க  இந்திய மரபில் ஆழமான அறிவு உள்ள ஒருவரால் மட்டுமே முடியும். அதாவது ராமானுஜனை , மெய்கண்டாரை ,சங்கரனை அறியாத சிந்தனையாளன் தெரிதாவையும் அறியப்போவது இல்லை .அவன் மேற்கோளையே அளிக்க முடியும். கோசாம்பி ,கெ தாமோதரன் , ஈ எம் எஸ் ,நடராஜ குரு ,நித்ய சைதன்ய யதி , டாக்டர் டிர் நாகராஜ் . அசிஷ் நந்தி என யாருக்கு இந்திய மரபில் பயிற்சி உள்ளதோ யாருக்குள் அதுவும் புது மேற்கத்திய சிந்தனைகளும் முரண்படுகின்றனவோ அவர்களே இங்கு புதிதாக சிந்தித்திருக்கிறார்கள்
.
நமது எழுத்தாளர்களில் என்ன நடக்கிறது என்றால் மேற்கோள்களை காட்ட மட்டுமே முடிகிறது.அவர்கள் சிந்தனையில் நகர்வே இல்லை .அவர்கள் அறிந்ததை வாழ்க்கையுடன் ஒப்பீட்டு அறிய முயல்வது இல்லை .அதற்கான சிந்தனை உபகரணாங்கள் இல்லை . அதை நம் கல்வி முறைகற்றுத்தரவுமில்லை .நமக்கு எடுத்து எழுதவும் மனப்பாடம் செய்யவும் மட்டுமே கற்றுத்தரப்படுகிறது.

நான் ஏற்கன்வே சொன்னது போல பின் நவீனத்துவ சிந்தனையாளர்களை மேற்கோள் காட்டினால் தவறாக முடியும்.காரணம் அவர்கள் சொற்களன் சார்ந்து செயல்படுபவர்கள் மட்டுமே . பின் நவீனத்துவ போக்கில் அசலான ஆய்வுகள் ஏதும் தமிழில் செய்யப்பட்டது இல்லை .விதி விலக்குபிரேம் சொல் புதிதில் எழுதிய மணிமேகலை சிலப்பதிகாரம் பெண்மையின் நாடகம் என்ற விரிவான ஆய்வுக்கட்டுரை. சதுக்கப்பூதம் மேற்கோள் காட்டும் பக்கங்களில் சொல்லப்பட்டுள்ள மேற்கோள்களை சொன்ன மேற்கத்திய சிந்தனையாளர்கள் அப்படி சொல்லவில்லை என அவர்களுடைய பிற வரிகளை மற்கோள் காட்டிமறுக்கலாம்.அதாவது பின் நவீனத்துவ சிந்தனை என்பது அடிப்படையில் ஒரு கொள்கை அல்ல .ஒரு நிலைபாடுமல்ல.ஒரு விவாதக்களம் மட்டுமே .இம்மாதிரி நுட்பமான விஷயங்கள நாம் தமிழ் விமரிசகர்களை நம்பி படித்தால் தவறவிட்டு விடுவோ.அப்படி தவறவீட்டு வழிதவறி அலைந்தனுபவத்தில் சொல்கிறேன்.மேற்கத்திய அறிமுக நூல்கள் மிக எளிமையானவை

நன்றி : பதிவுகள் மார்ச் 2002  இதழ் 51


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள் இணைய இதழின்  முக்கிய நோக்கம் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை  பலவேறு நாடுகளிலும் வாழும் தமிழர்களுடன் பகிர்ந்துகொள்வதாகும். படைப்புகளை அனுப்பும் எழுத்தாளர்கள் புகைப்படங்களை அல்லது ஓவியங்களை அனுப்பும்போது அவற்றுக்கான காப்புரிமைக்கு உரிமை உள்ளவர்களாக இருந்தால் மட்டுமே அவற்றை அனுப்பவும். தமிழ் மொழியை இணையத்தில் பரப்புவதும் இவ்விணைய இதழின் முக்கிய நோக்கமாகும். படைப்புகளை ngiri2704@rogers.com , editor@pathivukal.com ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

Pathivugal Online Magazine''s  main aim is to share the creative works of Tamil writers with Tamils living in various countries. When writers submit their works—such as photographs or paintings—please send them only if you hold the copyright for those items. Spreading the Tamil language on the Internet is also a key objective of this online magazine. Please send your submissions to ngiri2704@rogers.com and editor@pathivukal.com.

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும்.  நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 
பதிவுகள் விளம்பரம்