- 'பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். -- ஆசிரியர் -
'பதிவுகள்' ஆகஸ்ட் 2002 இதழ் 32
மறுவரையறை எதற்காக?
செவ்வியல் [classic] என்பது என்ன , செவ்விலக்கியங்கள் எவை என்ற கேள்வி எல்லாக் கலாச்சார சூழலிலும் எப்போதுமே எழுந்தபடியே இருப்பதாகும்.காரணம் ஒரு சமூகம் தன் அடிப்படைகள் என்ன ,அடையவேண்டிய இலக்கு என்ன என்பவற்றை தீர்மானித்துக் கொள்வதற்காகவே இவ்வினாக்களை எழுப்பிக் கொள்கிறது.
ஓவ்வொரு புதிய கலாச்சார இயக்கம் உருவாகும்போதும் அது செவ்வியல் செவ்விலக்கியம் முதலியவற்றை மறு வரையறை செய்ய முயல்வதைக் காணலாம். தமிழ் சூழலில் கடந்த கால உதாரணங்களை எடுத்து பார்த்தால் இது தெளிவாகத் தெரியும் . நூறு வருடம் முன்பு பக்திக் காலகட்டத்தில் புராணங்கள் ,சிற்றிலக்கியங்கள் ,துதிப்பாடல்கள் முதலியவை முறையே முக்கியமான செவ்விலக்கியங்களாக கருதப்பட்டன.அடுத்த மறுமலர்ச்சிக் காலகட்டத்தில் பாரதி ' யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவர் போல் இளங்கோவைப்போல்....' என்று ஒரு தரவரிசையை உருவாக்கி செவ்விலக்கியம் குறித்த பிரக்ஞையை மாற்றியமைத்தார். அதன் பிறகு உருவான திராவிட இயக்கம் இம்மூன்று படைப்புகளில் கம்பராமாயணத்தை வெளியே தள்ள கடுமையாக முயன்றது . வள்ளுவத்தை முதலில் கொண்டு வந்தது. அடுத்த இடத்தில் சங்க இலக்கியத்தைக் நிறுத்தியது .
ஒவ்வொரு சமூக ,அரசியல் மாற்றங்களையும் இவ்வாறு இலக்கிய அடிப்படைகளில் ஏற்பட்ட மாற்றங்களை வைத்தே நாம் தெளிவாக அடையாளம் கண்டுகொள்ள முடியும் என்று தோன்றுகிறது . கம்ப ராமாயணத்தை வைத்து ஒரு பெரும் கலாச்சாரப் போரே தமிழில் நடந்துள்ளது. திராவிட இயக்கம் அதை இரண்டு அடிப்படைகளில் மறுத்தது . ஒன்று: அது மத இலக்கியம் . இரண்டு : அது வடமொழியில் இருந்து வந்தது , ஆகவே ஆரியக் கலாச்சாரத்தில் வேர்கொண்டது . கம்பன் தமிழ் மனத்தில் உருவாக்கிய விழுமியங்களையும் ,கம்பனின் மொழிக்கொடையையும் முக்கியமாகக் கருதிய ஒருசாரார் காரைக்குடி , சா. கணேசன் அவர்களின் தலைமையில் கம்பன் கழகம் அமைத்து கம்பனின் முக்கியத்துவத்தை வலியுறுத்த தலைப்பட்டனர்.திராவிட இயக்கம் கூறிய கருத்தின்படி பார்த்தால் கம்பனுக்காக பரிந்து பேசியிருக்க வேண்டியவர்கள் வைணவர்களும் பிராமணர்களும்தான் .மாறாக சைவர்களும் ,பிராமணரல்லாத தமிழறிஞர்களும்தான் கம்பனுக்காக பேசினார்கள் . முக்கியமான கம்பராமாயண அறிஞர்கள் மு. மு. இஸ்மாயில் , அ. ச. ஞானசம்பந்தன் , கருத்திருமன் ஆகியோர் உதாரணம். இது செவ்விலக்கியத்தின் அடிப்படைகள் குறித்து யோசிக்கும் போது முக்கியமாக கவனிக்கப்படவேண்டிய விஷயம் .
இதே போல சங்க இலக்கியம் குறித்தும் ஒரு விவாதம் ,போதிய அளவு வெளிப்படையாக இல்லாவிட்டாலும் நடந்துள்ளது .திராவிட இயக்கம் சங்க இலக்கியங்களை முன்வைப்பதற்கு காரணம் மதசார்பற்ற இலக்கியத்திற்கான அதன் தேடலே .ஆனால் சங்க இலக்கியத்தில் இருக்கும் உலகியல் பார்வை ஆரம்பம் முதலே கற்பனாவாத /இலட்சியவாத சார்புள்ளவர்களுக்கு உவப்பானதாக இருக்கவில்லை .முக்கியமான உதாரணம் பாரதி . அவரது ரசனைக்குள் சங்க இலக்கியம் வரவில்லை . வேறு கோணத்தில் பாரதியை முழுமையாக மறுக்கும் புதுமைப்பித்தனுக்கும் கூட சங்க இலக்கிய பாடல்கள் வெறும் 'சதையுணர்ச்சிப் பாடல்கள் ' மட்டுமே.அந்த நிராகரிப்பு ஜெயகாந்தனிலும் தொடர்கிறது. சங்க இலக்கியங்களின் விழுமியங்கள் தனக்கு உவப்பானவை அல்ல என்று ஜெயகாந்தன் சொல்கிறார் .[பார்க்க சொல் புதிது 2 பேட்டி ] இலட்சியவாதத்துக்கும் சங்கப்பாடல்களின் உலகியல் பார்வைக்கும் [இன்ப நாட்டம் என்று மேலும் கறாராக சொல்லவேண்டும் ] பொருத்தப்பாடு இல்லாமல் போனதில் ஆச்சரியமில்லை .
ஜனநாயக காலகட்டம் உருவானபிறகு முந்தைய காலகட்டத்தின் பல விஷயங்கள் ஏற்றுக் கொள்ள முடியாமல் போகின்றன என்பதை காணலாம். பரணிகளில் உள்ள மிதமிஞ்சிய போர்வெறியை இன்று நம்மால் ரசிக்க முடியாது. மன்னர்களை புகழ்ந்து எழுதப்பட்ட பாடல்களும் , வெற்றுப் புராணங்களும் நமக்கு அன்னி£யமானவையாக உள்ளன. அடிப்படையான மானுட இயல்பு குறித்து பேசும் படைப்புகள் மட்டுமே கால மாற்றத்தைமீறி வந்து நம்மை தொடுகின்றன.
இத்துடன் இணைத்து யோசிக்கவேண்டிய விஷயம் அழகியல் நோக்குகளில் ஏற்படும் மாற்றம் .கம்ப ராமாயணம் முத்தொள்ளாயிரம் முதலியவற்றை ரசிக்கும் டி. கெ. சிதம்பரநாத முதலியார் இலக்கியத்தை சங்கீதம் போன்ற ஒரு நுண்கலையாக ,சங்கதிகள் பிடிகள் முதலியவற்றைத் தேடிக்கண்டடைந்து ரசிக்கிறார். [ஆகவேதான் அவருக்கு கம்பராமாயணமும் முத்தொள்ளாயிரமும் ஒன்றுபோல முக்கியமான படைப்புகள் ஆக தென்பட்டன] பாரதி அப்படி ரசித்திருக்க மாட்டார் . மு . மு . இஸ்மாயில் அவர்களின் ரசனையும் அப்படிப்பட்டதல்ல . பேராசிரியர் ஜேசுதாசன் , ஹெப்சிபா ஜேசுதாசன் போன்ற பெரும் கம்பராமாயண வாசகர்களுக்கு கம்பனின் இலக்கியச்சுவை முழுக்க முழுக்க அவன் வெளிப்படுத்தும் வாழ்க்கைசார்ந்த நுட்பங்களில்தான் உள்ளது .ஆகவேதான் பேராசிரியர் ஜேசுதாசன் டி .கெ. சிதம்பரநாத முதலியாரின் அணுகுமுறை மேலோட்டமான நயம்பாராட்டல் மட்டும்தான் என்கிறார் [ பார்க்க சொல்புதிது 9 பேராசிரியர் பேட்டி, Countdown from Salamon .Hepsiba Jesuthadan Part 3 ]. இவர்கள் அனைவருமே கம்பனில் சாராம்சமான விழுமியங்களையும் ,அவை வெளிப்படும் நாடகீயத் தருணங்களையும் தான் தேடுகிறார்கள் .
இலக்கியத்தை அணுகும் கோணமே காலமாறுதல்களுக்கேற்ப மாறிவிடுகிறது .அணிகள், சொல்லாட்சிகள் ஆகியவற்றை ரசிப்பவர்கள் முக்கியத்துவப்படுத்தும் படைப்புக்கும் இலக்கியத்தில் விழுமியங்களை தேடுபவர்கள் முக்கியத்துவப்படுத்தும் படைப்புக்கும் முக்கியமான வேறுபாடு உண்டு .இருபதாம் நூற்றாண்டில் இலக்கியத்தை ஒரு நுண்கலையாக மட்டும் பார்க்கும் பார்வை அகன்று விட்டது என்று கூறலாம் . இன்று இலக்கியம் வாழ்க்கையுடன் தொடர்பு படுத்தப்பட்டு மதிப்பிடப்படுகிறது . வாழ்க்கையின் நுடபங்களையும் ஆழங்களையும் குறித்துப் பேசும் ஒரு தளமாகவே அது உருவகம் செய்யப் படுகிறது .இப்படி அழகியலில் மாற்றம் ஏற்படும்போது செவ்விலக்கியங்களின் பட்டியலே மாறிவிடுகிறது . சென்ற காலகட்டத்தில் தமிழில் வியந்து பாராட்டப்பட்ட பல சிற்றிலக்கியங்கள் பின்னுக்கு நகர்ந்தது இப்படித்தான். உதாரணமாக உ வே சாவின் ' என் சரித்திரம் ' நூலில் மரபின் ஆகப்பெரிய வெற்றிகளாக கலம்பகங்களும் பிள்ளைத்தமிழ்களும் புராணங்களும் கொண்டாடப்பட்ட விரிவான சித்திரத்தை அளிக்கிறது .
ஆகவே ஒரு வாழும் சமுகம் செவ்வியல் , செவ்விலக்கியம் முதலியவற்றைப் பற்றிய தன் மதிப்பீட்டை காலந்தோறும் மாற்றியமைத்துக் கொள்கிறது என்று கூறலாம். உண்மையில் செவ்விலக்கியம் குறித்த ஒரு சமூகத்தின் மன உருவகத்தில் ஏற்படும் மாற்றம் அதன் அடிப்படைகளில் ஏற்படும் மாற்றமாகும். இதனால் தான் செவ்வியல் என்றால் என்ன என்ற வரையறையை முற்றுமுடிவாகச் செய்வது சாத்தியமல்லாமல் இருக்கிறது . அது சமூகம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டுமென்று முழுமுற்றக வகுத்துவிட முனைவதற்கு சமம் .அதை அறிவுடையோர் செய்ய மாட்டார்கள் . ஆனால் சமூகம் எப்படி இருக்கவேண்டுமென்ற கனவை நாம் எப்போதுமே கொண்டிருக்கவேண்டும். ஆகவே செவ்வியல் என்றால் என்ன என்று வகுத்துக் கொள்வதும் , செவ்விலக்கியங்களைப் பட்டியல் இடுவதும் மீண்டும் மீண்டும் தேவையாகின்றன. காரணம் இறந்த காலம் குறித்த விமரிசனப் பார்வையில் இருந்தே எதிர்காலம் குறித்த இலக்கு உருவாக முடியும். இறந்த காலம் என நாம் அறிவது கடந்த காலத்தில் இருப்பது அல்ல, நிகழ்காலத்தில் இருந்தபடி நாம் கடந்தகாலமாகப் பார்ப்பது மட்டுமே.அதாவது செவ்விலக்கியம் குறித்த இவ்விவாதம் கடந்தகாலம் குறித்தது அல்ல ,நிகழ்கால இலக்கிய அடிப்படைகள் குறித்தது மட்டுமே.
இன்று செவ்விலக்கியம் என்றால் என்ன?
செவ்விலக்கியம் என்ற சொல் கீழ்க்கண்டவாறு பொதுவாக வரையறை செய்யப்படுகிறது. ஒரு சூழலில் அடிப்படையான முன்னுதாரணமாகவோ அல்லது உச்சக்கட்ட சாதனையாகவோ கருதப்படும் படைப்பு தான் செவ்வியல் படைப்பு .உதாரணமாக ஆங்கிலச் சூழலில் கிரேக்க மற்றும் இலத்தீன் படைப்புகள் அடிப்படையான முன்னுதாரணங்கள். ஷேக்ஸ்பியர் உச்ச கட்ட சாதனை . இன்னும் விரிவான தளத்தில் இலக்கிய அழகியலில் இச்சொல் கையாளப்படுகிறது . செவ்வியல் காலகட்டத்தைச் சேர்ந்த எல்லா படைப்புகளும் செவ்விலக்கியங்கள் என்று சொல்லப்படுவதுண்டு .உதாரணமாக ஆங்கில இலக்கிய விமரிசகர்கள் , குறிப்பாக கூல்ரிட்ஜ் , கிரேக்க இலக்கியங்களின் காலகட்டத்தை மொத்தமாக செவ்விலக்கிய காலகட்டம் என்பதுண்டு. இலக்கிய அழகியல் விவாதங்கள் மேலும் முன்னகர்ந்த போது செவ்வியல் என்பதை ஒரு காலகட்டமாக அணுகாமல் ஒரு குணரூபமாக அணுகும் போக்கு வலுப்பெற்றது .
டி. எஸ். எலியட் ,எஸ்ரா பவுண்ட் இருவரும் செவ்வியல் என்ற குணரூப உருவகத்தை உருவாக்கியவர்களில் முக்கியமானவர்கள். இவர்கள் நவீனத்துவ [modernism] மரபின் மூலவர்கள் என்பது நாமறிந்ததே .நவீனத்துவம் தன்னை 'புதுச் செவ்வியல்வாதம்' என்று அடையாளம் கண்டது.கற்பனாவாத[romanticism] மரபுக்கு எதிரான அழகியலாக அதை முன்வைத்தது . ஆகவே செவ்வியல் குணங்களை வரையறை செய்ய வேண்டிய அவசியம் அவர்களுக்கு ஏற்பட்டது.கிரேக்க லத்தீன் செவ்விலக்கியங்களின் அடிப்படைச் சிறப்பியல்புகளான சுயகட்டுப்பாட்டின் மூலம் உருவாகும் உணர்ச்சிச் சமநிலை ,கட்டுப்பாடான மொழிவெளிப்பாடு ,தருக்க பூர்வமானதும் தத்துவார்த்தமானதுமான ஒட்டுமொத்த வாழ்க்கைப் பார்வை ,முழுமையும் ஒழுங்குமுள்ள வடிவத்திற்கான பிரக்ஞைபூர்வ முயற்சி ஆகியவையே அவை என இவர்கள் வகுத்தனர்.செவ்வியல் மரபு / செவ்வியல்போக்கு [classicsm ] என்ற கருத்து இவ்வாறு இலக்கிய விமரிசனத்தில் முக்கியத்துவம் பெற்றது.
நமது சூழலில் செவ்விலக்கியங்கள் என்ன என்பதை வரையறுக்க முயலும்போது மேற்கண்ட எல்லா கோணங்களையும் கணக்கில் கொள்ள வேண்டியுள்ளது . நமது இலக்கியங்களின் அடிப்படைக் கட்டுமானமாக ,நாற்றங்காலாக விளங்குபவை சங்க இலக்கியங்களே .அவற்றின் காலகட்டத்தை மொத்தமாக செவ்வியல் காலகட்டம் என்றும் அக்காலகட்ட படைப்புகளை எல்லாம் செவ்வியல் படைப்புகள் என்றும் கூறலாம். அதேபோல நமது இலக்கியமரபின் உச்ச கட்ட சாதனைகளான படைப்புகளையும் அவற்றின் காலகட்டத்தின் அடிப்படையில் மதிப்பிட்டு செவ்வியல் படைப்புகளாகக் கூறலாம்.
நமது செவ்விலக்கிய இயல்பு
இங்கு எழும் ஒரு பிரச்சினை முக்கியமானது.புராணங்களிலும் , பக்திப் பாடல்களிலும் , சிற்றிலக்கியங்களிலும், முன்பெ சொன்ன செவ்வியல்பண்பு உள்ளதா என்ற வினா வாசகன் மனத்தில் எழும். மேற்கத்திய குணப்பகுப்பின் அடிப்படையில் பார்த்தால் இவற்றில் உள்ளது கற்பனாவாதப் பண்புதான் . அது செவ்வியல் பண்புக்கு முற்றிலும் எதிரானது .
மோட்டெருமை வாவிபுக முட்டு வரால் கன்றென்று
வீட்டளவும் பால் சொரியும்......
என்ற கம்பராமாயணப்பாடலை எவ்வகையிலும் செவ்வியல் பண்புள்ளதாகக் கொள்ள முடியாது. அதில் உள்ளது உணர்ச்சி செறிவுள்ள மிகைகற்பனை . கம்ப ராமாயணத்தின் கூறுமுறை முழுக்க இவ்வாறுதான் காணப்படுகிறது.அதேசமயம் ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் கம்ப ராமாயணத்தில் முழுமை ,சமநிலை ,வடிவ ஒருமை எனும் செவ்விலக்கியப் பண்புகள் மிகச்சிறப்பாகக் காணப்படுகின்றன .இதையே காளிதாசன் குறித்தும் சொல்லலாம் .இந்திய காவியங்களை செவ்வியல் ,கற்பனாவாதம் என்னும் அழகியல் அளவுகோல்களால் கறாராக வகுத்துவிட முடியாது என்றும் , அவ்வகை பிரிவினைகள் அவை உருவான மேற்கத்தியச் சூழலுக்கே கறாராகப் பொருந்துபவை என்றும் ஏற்கனெவே சொல்லப் பட்டுள்ளது .ஆயினும் நவீன இலக்கியச் சூழலை அடிப்படையாகக் கொண்டு மரபிலக்கியத்தை அணுக இந்த வகைபாடுகள் உதவிகரமானவை என்பதாலேயே இவை பயன்படுத்தப்படுகின்றன.
அதேபோல பக்திக் காலகட்டப்பாடல்களைப் பற்றியும் சொல்லலாம். அவற்றில் வெளிப்படும் உணர்வுகள் கற்பனாவாதத் தன்மை கொண்டவை என்று தோன்றக்கூடும். ஆனால் பக்தி மனநிலைக்கும் கற்பனாவாத மனநிலைக்கும் நுட்பமான ஆனால் அடிப்படையான வித்தியாசம் உண்டு. கற்பனாவாத மனநிலையில் ஒரு புத்தார்வ அம்சம் உண்டு . அதில் உள்ள மனஎழுச்சியானது இலட்சியவாதத் தன்மை கொண்டது. அதனாலேயே ஒருபக்க உண்மைகளை மட்டும் பார்க்கும் சமநிலையின்மை கொண்டது .அதாவது கற்பனாவாத மனநிலையில் முதிர்ச்சியிமைக்கு ஓர் இடம் உண்டு .பக்தி மனநிலை என்பது ஒரு வகை முதிர்ந்த நிலையின் நீட்சியான நெகிழ்வையே வெளிப்படுத்துகிறது என்று நமது பக்தி இலக்கியங்களை வைத்து சொல்ல முடியும். வெளிப்பாட்டின் உத்வேகமே நமக்கு அவற்றை கற்பனாவாதமாகக் காட்டுகிறது. அதன் அடியில் ஆழமான ஒரு சமநிலை உள்ளது.அது செவ்வியல் பண்புதான் .
செவ்வியல் இயல்பு சற்றும் இல்லாத படைப்புகள் என்று நமது சிற்றிலக்கியங்களையும் ,நவீன காலகட்டத்து கற்பனாவாத கவிதைகளையும்தான் சொல்ல முடியும்.சிற்றிலக்கியங்களில் சிறந்த படைப்பை ஒரு காலகட்டத்தின் ,ஒரு வடிவத்தின் , ஓர் அழகியல் போக்கின் பிரதிநிதியாகவே பேரிலக்கியப் பட்டியலில் சேர்க்க முடியும் என்று நான் எண்ணுகிறேன்.
இங்கு நாம் செவ்வியல் பண்பு என்பதை இந்திய/ தமிழ்ச் சூழலுக்கு ஏற்ப மறு வரையறை செய்ய வேண்டியுள்ளது . என் கணிப்பில் கீழ்க்கண்ட அம்சங்களை அடிப்படையாக கருதலாமென எண்ணுகிறேன்.
அ] நமது செவ்விலக்கியம் என்பது நமது கலாச்சாரத்தின் சாரமான வாழ்க்கைத்தரிசனங்களை வெளிப்படுத்துவதாக இருக்கும். அந்த வாழ்க்கைதரிசங்கள் காலத்துக்கேற்ப வளர்வதன் மூலமே நமது பிற்கால இலக்கியங்கள் முழுக்க உருவாகின்றன. ஆகவே அப்படைப்புகளின் வடிவ ரீதியான மறுறாக்கமாக மட்டுமே நம் படைப்புகள் இருக்கும். நவீன காலகட்டத்தில் ஒருவேளை அவை மறுக்க படும்போது செவ்விலக்கியங்களை மறுக்கும் எதிர்வடிவங்கள் உருவாகலாம்.அவையும் உண்மையில் அவற்றின் நீட்சிகளே, எதிர்மறை நீட்சிகள்.
ஆ] நமது பண்டை வாழ்க்கையில் இருந்து , அதாவது நமது பழங்குடி மரபில் இருந்து முளைத்து தொடர்ச்சியான மறுஆக்கம் மூலம் செறிவுபடுத்தப்பட்டவையாக இருக்கும்.ஆகவே அவற்றுக்கு எத்தனை புறப் பாதிப்பு இருந்தாலும் தவிர்க்கவே முடியாத ஒரு சுய அடையாளம் இருக்கும். உதாரணமாக சீவக சிந்தாமணி சமண காவியம் .அதன் கதை பிராகிருத மொழியிலிருந்து பெறப்பட்டது . ஆயினும் முற்றிலிம் தமிழ அகத்துறை மரபின் விரிவான தோற்றத்தையே அதில் நாம் காண்கிறோம்.
இ]செவ்விலக்கியம் என்ற அடையாளம் உடைய படைப்பு மொழியின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தை துல்லியமாக பிரதிநிதித்துவப் படுத்துவதோடு அடுத்த காலகட்டத்துக்கு அது நகர்வதையும் காட்டக் கூடியதாக இருக்கும். இது ஒரு எளிய அளவுகோல். ஏனெனில் செவ்விலக்கியம் கண்டிப்பாக தன் காலகட்டத்து கவிமொழியை முன்னகர்த்தியிருக்கும். சீவக சிந்தாமணி சங்க கால கவிமொழிக்கும் பிற்காலத்தைய இசைத்தன்மை மேலோங்கிய உணர்ச்சிமிகுந்த கவிமொழிக்கும் நடுவே உள்ளது .அதாவது அது கபிலரும் கம்பனுக்கும் நடுவே இடம் பிடிக்கிறது .
ஈ] இன்னொரு நிபந்தனைக்குட்பட்ட அடையாளம் உண்டு. [இது என் ஊகம். இதை விரிவாக விவாதிக்கலாம்.]செவ்விலக்கியம் இரு பெரும் விழுமியங்களுக்கு இடையேயான சமரசமாக இருக்கும். ஒரு புதிய அற உருவகம் ,அல்லது விழுமியம் ஒரு சமூகத்துக்கு வருகையில் ஏற்படும் மோதலில் இருந்து பிறப்பதே செவிலக்கியம் .அந்த புதிய விழுமியத்துக்கும் அதனுடன் முரண்படும் சமூகத்தின் பழைய விழுமியங்களுக்கும் இடையேயான ஒரு சமரச புள்ளியை செவ்விலக்கியம் உருவாக்கி நிலைநிறுத்துகிறது . துறவு அல்லது வீடுபேறு என்ற சமண அறமே சீவக சிந்தாமணியின் சாரமான தரிசனம். ஆனால் தமிழ்மரபோ அகத்துறையில் ஆழ வேரூன்றியது . ஆகவே இரு தரப்புக்கும் இடையேயான ஒருவகை சமநிலையாக அக்காவியம் அமைந்துள்ளது . அது இன்பச்சுவை மிக்க காவியம் ,ஆனால் வீடுபேறை முன்வைப்பது!
தமிழ் செவ்விலக்கியங்களை இந்த அடிப்படைகளைக்கொண்டு வரிசைப்படுத்தி தரப்படுத்த வேண்டிய தேவை இன்றுள்ளது .பலகாலம் நாம் மரபில் இருந்து துண்டித்துக் கொள்ளுவதன் மூலமே அடுத்த கட்டத்தை அடைந்து விடலாம் என்று நம்பியிருந்தோம். அது நம்மை பிற மரபுகளை பிரதியெடுக்கும் நிலைக்கே இட்டுச் செல்லும் என்று இன்று தெளிவாகியுள்ளது.மரபு குறித்த விமரிசனப்பார்வையும் ,ஆழமான அகத்தொடர்ச்சியும் இல்லாமல் நாம் நமது இலக்கியங்களை உருவாக்கி விட முடியாது.
தமிழ் செவ்விலக்கிய மரபின் பொதுச்சித்திரம்
சங்க இலக்கியங்களை செவ்வியல் என்றும் பிற இலக்கியங்களை பேரிலக்கியங்கள் என்றும் கொண்டு இலக்கிய அழகியலை பற்றி பேசலாம் . நமது மரபின் முக்கியமான பேரிலக்கியங்கள் எவை? இக்கணிப்பை செய்வதற்கு முதலில் தமிழ் இலக்கிய மரபினை வெவ்வேறு காலகட்டங்களாகப் பகுத்துக் கொள்ளவேண்டியுள்ளது. இவ்வாறு வகுக்கும்போது சில அடிப்படை வினாக்கள் எழுகின்றன. காலகட்டம் , இலக்கிய அழகியல்பண்புகள் இவற்றில் எதை அளவுகோலாகக் கொள்வது என்பது முதல் வினா .தமிழ் போன்ற பெரிய இலக்கிய மரபு உள்ள மொழியில் இது எளிய பணி அல்ல.காலகட்டத்தை அளவுகோலாகக் கொள்ளலாமெனில் படைப்புகள் எழுதப்பட்ட காலத்துக்கும் தொகுக்கப்பட்ட காலத்துக்கும் உள்ள வித்தியாசம் இன்னமும் இங்கு ஆய்வாளர்களால் தெளிவாக வகுக்கப்படவில்லை என்பது முதல்ச் சிக்கல்.உதாரணமாக திருமுருகாற்றுப் படை சங்க இலக்கிய அட்டவணைக்குள் வருகிறது .பல்யாக சாலை முது குடுமி பெருவழுதியைப்பற்றி நெட்டிமையார் [எங்கோ வாழி புறம் 6] எழுதிய பாடலும் சங்க இலக்கியமே .இரு ஆக்கங்களுக்கும் இடையே குறைந்தது ஐந்து நூற்றாண்டு இடைவெளி இருக்கும் . அதேபோல முக்கியமான இலக்கியப் படைப்புகளின் காலம் குறித்தும் முற்றிலும் மாறுபட்ட கருத்துக்கள் காணப்படுகின்றன. சிலப்பதிகாரத்தை கி .பி . மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி .பன்னிரண்டாம் நூற்றாண்டு வரை எல்லா காலகட்டத்தில்லும் மாற்றி மாற்றிப் பொருத்துகிறார்கள்.
இலக்கிய அழகியல் இயல்புகளை அளவுகோலாகக் கொள்ளலாமெனில் கால எல்லைகளை மீறி படைப்புகள் பரவிக்கிடப்பதைக் காணநேரும் . காப்பியங்களும் நீதிநூல்களும் ஒரே காலகட்டத்தை சேர்ந்தவை , ஆனால் முற்றிலும் மாறுபட்ட அழகியல் உடையவை . முற்றிலும் வெறு வேறான அழகியல் கொண்ட புராணங்களும் பக்தி இலக்கியங்களும்கூட ஒரே காலத்தவையே. பக்தி மரபு பாரதி வரை நீடித்தது . புராண மரபு உ.வே .சாமிநாதய்யரின் ஆசிரியரான மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளைகாலம் வரை தீவிரமாகவே இருந்தது [ பார்க்க உ.வே .சாமிநாதய்யர் . 'எனது குருநாதர்' ] அதேசமயம் காலத்தைத் தவிர்த்துவிட்டால் இலக்கியப் படைப்புகளைச் சமூகச் சூழலுடன் பொருத்துவது சாத்தியமலாமல் ஆகிவிடும். ஆகவே இலக்கிய அழகியல் ,காலம் இரண்டையுமே அளவாகக் கொண்டு படைப்புகளை பல்வேறு காலகட்டங்களாக பிரிக்கவேண்டியுள்ளது.
இவ்வாறு பிரிக்கும்பொது சில படைப்புகள் எந்த அடையாளத்துடனும் பொருந்தாமல் வெளியே நிற்கக்கூடும். சில படைப்புகள் ஓரளவுக்கு மட்டுமே அக்காலகட்டத்தின் இயல்புகளை பிரதிபலிக்கக்கூடும் . அதாவது இது ஒரு தோராயமான பகுப்பாகவே இருக்க முடியும்.வேறு ஆய்வுகளுக்கு வேறு கோணத்தில் இம்மாதிரி வேறுவகை காலகட்டப் பகுப்புகளை செய்வது தான் உசிதமானதாக இருக்கமுடியும் . இவ்வாறு பார்க்கையில் தமிழ்ப் பேரிலக்கிய வரிசைகளை எட்டு பொது காலகட்டங்களாக பகுத்துக் கொள்ளலாம் . இப்பகுப்பை ஏற்கனவே நான் என் 'நவீனத்துவத்திற்கு பின் தமிழ் கவிதை- தேவதேவனை முன்வைத்து ' என்ற நூலில் விரிவாகவே விளக்கியுளேன் .
எட்டுக் காலகட்டங்கள்
தமிழிலக்கிய மரபை எட்டு பெரும் காலகட்டங்களாக பகுக்கலாம் என்பது என் எண்ணம் .அவை:
1] வரலாற்றுக்கு முந்தைய பழங்குடிக் காலம்
இது சங்க காலத்துக்கு முந்தையது . தமிழ்ச்செவ்வியலுக்கு ஆதாரமாக அமைந்த அடிப்படை கவித்துவக் கூறுகள் உருவான காலம் இது.சங்க இலக்கியங்களை பார்க்கும்போது அவற்றுக்கு பின்புலமாக விரிவான ஒரு நாட்டார் மரபு இருந்திருப்பது தெரிய வருகிறது.இயற்கை வருணணைகளுடன் மனஒட்டங்களை இணைப்பது போன்ற சங்க இலக்கியங்களின் அடிப்படையான அழகியல்த் தரிசனங்கள் இக்காலகட்டத்திலிருந்து இயல்பாக உருவாகிவந்தவையே என்று படுகிறது. இக்காலகட்டத்தை இன்று கற்பனையில் மீட்டுருவாக்கம் செய்வது சிரமம் .காரணம் நமக்கு இன்று கிடைக்கும் பிற்கால நாட்டார் மரபு பிற்கால இலக்கியமரபுகளின் மூலம் மறைமுகப் பாதிப்பு அடைந்து பெரிதும் மாறிய நிலையிலேயே காணப்படுகிறது.அதே சமயம் இலக்கிய மரபுகள் ஒரு போதும் கலாச்சாரத்தில் இல்லாமல் ஆவதில்லை.ஆகவே இக்காலகட்டத்தின் கூறுகளை பல்வேறு தளங்களில் அடையாளம் காணலாம்.
தமிழின் தொன்மையான வடிவம் வழங்கிய நிலப்பகுதியாக கேரளம் கருதப்படுகிறது.பி.. கே. பாலகிருஷ்ணன் போன்ற ஆய்வாளர்கள் தமிழுக்கு அடிப்படையாக அமைந்த புராதன உரைவடிவுகள் [dialects] வழங்கிய பகுதியே இது என்கிறார்கள்.இவற்றுடன் சம்ஸ்கிருதம் கொண்ட உறவின் மூலம் உருவானதே மலையாளம். எப்படியானாலும் தமிழ் காலப்போக்கில் அடைந்த வளர்ச்சிகளை அடையாமல் காலத்தால் கைவிடப்பட்டு உறைந்துபோன பல பகுதிகள் இன்றைய கேரளத்துப் பழங்குடி நாட்டார் மரபுகளில் காணப்படுகின்றன. அவற்றில் சங்க காலகட்டத்துக்கு முந்தைய தமிழ் நாட்டார் மரபின் கூறுகள் பல உள்ளன.அவை விரிவான ஆய்வுக்கு உரியவை. ஓர் உதாரணம் கேரள நாட்டார் பாடல் வடிவான படையணிப் பாடல் கலிப்பாவின் சாயல் மிகுந்து இருப்பது.
2] சங்க காலம்
இதுவே தமிழின் செவ்வியல் காலகட்டம்.தமிழிலக்கியத்தின் அடிப்படைகள் அனைத்தும் உருவானது இக்காலகட்டத்தில்தான்.சிறு சித்தரிப்புகளின் காலம் இது.இக்காலகட்டத்தின் முக்கியமான சிறப்பியல்பு இக்காலத்தில் நிகழ்கலைகள் , இசை ,இலக்கியம் மூன்றுமே ஒன்றாகக் கருதப்பட்டன என்பதுதான்.பெரும்பாலான சங்கப் பாடல்கள் விறலியும் பாணனும் ஆடி நடிப்பதன்பொருட்டு யாக்கப்பட்டவை என்று கருத இடமுள்ளது.இவற்றில் பாடல் அமைப்பு ஒன்றுபோலவே உள்ளது .பெரும்பாலான பாடல்கள் கூற்றுகள் தான். பொதுவாக அகப் பாடல்களில் தலைவன் தலைவி தோழி செவிலி பாங்கன் என்று நான்கு முக்கியக் கதாபாத்திரங்கள் மட்டுமே உள்ளன.எவருக்குமே பெயர் ஊர் முதலிய புற அடையாளங்களோ தனியான குணச்சித்திரம் போன்ற அக அடையாளங்களோ இல்லை. பாடல்களின் வரிவடிவம் முழுக்கவே அகவற்பா என்ற தளர்வான யாப்பு முறையில் உள்ளது. இம்மாதிரியான பொது அம்சங்களை கட்டாயமாக ஆக்கியது இவை ஆடப்படவேண்டும் என்ற தேவைதான் போலும்.
சங்கப்பாடல்களின் தனித்தன்மைகளில் அவற்றில் உள்ள யதார்த்தமான உணர்ச்சி சித்தரிப்பு ,இயற்கை எல்லா உணர்ச்சிகளிலும் பங்கு பெறுதல் ஆகியவை சுட்டிக்காட்டப்படுகிறது .அதைவிட முக்கியமானது சங்கப்பாடல்களில் உள்ள தத்துவமற்ற தன்மை. ஊழ் குறித்தும் மறுமை குறித்தும் அவை பேசுகின்றன என்பது உண்மையே. ஆயினும் சங்கப்பாடல்களின் நாட்டம் உலகியல் இன்பமே . பொருண்மொழிக்காஞ்சி என்ற திணை நீதி விளக்கத்திற்காகவே ஒதுக்கப்பட்டுள்ளது எனினும் அந்நீதிகள் கூட உலகியல் சார்ந்தவையே .
சங்க காலப்படைப்புகளில் கவித்துவ உச்சங்கள் முறையே குறுந்தொகை, நற்றிணை , புறநாநூறு ஆகியவற்றில் அதிகம். அகநாநூறு , கலித்தொகை அடுத்த இடத்தில் . மலைபடுகடாம் மதுரைக்காஞ்சி இரண்டும் வேறுவகையான கவித்துவ அழகுள்ளவை என்பதனால் முக்கியமானவை . குறிப்புணர்த்தலை விட்டுவிட்டு சித்தரிப்புக்கு முக்கியத்துவம் அளிப்பவை இவை.
3] காப்பிய காலகட்டம்
தமிழின் பெரும் சித்தரிப்புகளின் காலகட்டம் இது.இக்காலகட்டத்தில் தான் தமிழகத்தின் பொது விழுமியங்கள் தொகுக்கப்பட்டன.பெரும் தரிசனங்களாக அவை நிறுவப்பட்டன.அதற்கான காரணமாக அமைந்தது தமிழகத்துக்கு இக்காலகட்டத்தில் வந்த தத்துவார்த்த மதங்கள்[ Philosophical religions ] என்று சொல்லலாம்.அதற்கு முன்பே தமிழகத்தில் சிவ சக்தி வழிபாடுகள் போன்ற பல சிறுவழிபாட்டுமுறைகள் குலவழிபாட்டு வடிவில் [cults] இருந்திருக்கலாம். நமக்கு கிடைக்கும் முதல்க் கட்ட சங்கப் பாடல்களிலேயே [ உதாரணம் பல்யாக சாலை முதுகுடுமி பெருவழுதி ]தமிழகத்தில் வைதீகம் வேரூன்றியிருந்ததன் தடயங்கள் உள்ளன.ஆனாலும் தமிழகத்தில் ஆழமான தத்துவார்த்த விவாதங்களையும் தரிசன மோதல்களையும் உருவாக்கியது பௌத்த சமண மதங்களின் வருகையே . குலநீதிகள் இம்மதங்களின் அடிப்படைத் தரிசனங்களுடன் இணைந்து தமிழுக்கே உரிய தரிசனங்களை உருவாக்கும் காலகட்டம் இது. உதாரணம் பத்தினி வழிபாடு. இது பேரரசுகளின் காலகட்டமும் கூட. பேரரசு ,பெருந்தரிசனம் ,காவியங்கள் ஆகிய மூன்றும் ஒன்றோடொன்று சார்ந்தவை . தமிழ் மரபில் இருந்த பாடாண் திணையே காப்பியங்களாக ஆயிற்று என்று சொல்லலாம்.
தமிழ்க் காப்பிய காலகட்டத்துக்கு ஒரு சிறப்பு உண்டு .மற்ற மொழிகளில் காவியங்கள் வீரகதைப்பாடல்கள் அல்லது வம்சகதை பாடல்களின் வளர்ச்சி நிலையாகவே உள்ளன. தமிழ் காப்பியங்களில் சீவக சிந்தாமணி மட்டுமே தலைவனை மையம் கொண்டது . மற்ற மூன்றும் சிலப்பதிகாரம் ,குண்டலகேசி, மனிமேகலை தலைவியை மையமாகியவை . அத்துடன் இவை அனைத்துமே ஆன்மீக விடுதலையை பற்றி பேசுகின்றனவே ஒழிய வீர சாகசங்களை பற்றியல்ல.இது மிக முக்கியமான ஒரு தனித்தன்மை . அத்துடன் மிக முக்கியமாக சொல்லப்படவேண்டியது தமிழ் காப்பியங்களில் வம்சகதைப்பாடல்களின் சாயலே இல்லை என்பது [ மகாபாரதம் முதல் ரகுவம்சம் வரை உதாரணமாக ஒப்பிட்டுபார்க்கலாம் ]
வடமொழி மகாகாவிய இலக்கணங்கள் அப்படியே தமிழ்க் காவியங்களுக்குப் பொருந்தாது என்றாலும் அம்மரபு கோடிட்டுக் காட்டிய பல தனித்தன்மைகள் நம் காவியங்களுகு உண்டு . வாழ்வின் அறம் பொருள் இன்பம் வீடு என்ற அடிப்படைகள் குறித்த விவாதம் , ஐவகை நிலக்காட்சிகள் , பிரபஞ்ச தரிசனம்போன்ற பல கூறுகள் இவற்றிலும் உண்டு. காப்பியங்களில் சிலப்பதிகாரம் சிறியதாக இருப்பினும் முற்றிலும் காவிய இலக்கணம் பொருந்தியது இப்பெரும்படைப்பே . சிந்தாமணியும் மணிமேகலையும் முக்கியமான காப்பயங்கள் .
ஐஞ்சிறுகாவியங்களில் இன்று கிடைக்கும் நீலகேசி எவ்வகையிலும் இன்று கவித்துவ முக்கியத்துவம் கொண்டது அல்ல . அதில் உள்ள மதக்கழ்ப்பு கசப்பு தருவது . உதயணகுமார காவியம் [ அல்லது பெருங்கதை ] முழுமையாக கிடைக்காவிடிலும் அதன் மொழியழகு இசைத்தன்மை காரணமாக மிக முக்கியமானது.
4] நீதிநூல் காலகட்டம்
கால அடிப்படையில் இது காப்பிய காலகட்டத்துக்கு இணையானது.தமிழ் தனக்குரிய அறவியலை இலக்கியத்தின் வழியாகக் கண்டடைய ஆரம்பித்தது இக்காலகட்டத்தில்தான்.குல நீதிகள் சமூகப் பொதுவான நீதிகளாக மாற்றப்பட்டு எழுத்தில் தொகுக்கப் பட்டன.அதற்குக் காரணம் பல்வேறு குலங்கள் சேர்ந்து உருவாகும் பெரும் சமூகக் கட்டமைப்பு உருவானதே என்று ஊகிக்கலாம். இன்னொரு கோணத்தில் இலட்சிய வாழ்க்கை இலட்சிய சமூகம் குறித்த கனவுகள் வலுப்பெற்ற காலம் இது என்றும் கருதலாம்.காரணம் நீதிகள் சமூகத்தை நெறிப்படுத்தும் நோக்கத்துடன் கூடவே ஒரு இலட்சிய சமூகம் குறித்த உருவகத்தையும் கொண்டவையாக உள்ளன.
தமிழக நீதிநூல்காலகட்டத்தின் பெரும்படைப்பு குறளே. கவித்துவமும் அறத்தரிசனமும் இந்த அளவு முயங்கிஅ பெரும்படைப்பு உலக மொழியில் எங்கும் இல்லை என கூறப்படுவதுண்டு . நாலடியார் ஆத்திசூடி கொன்றைவேந்தன் முதலியவை குறிப்பிடத்தக்கவை.
5] புராணகாலகட்டம்
காவியங்களின் சாயலில் பலவிதமான புராணங்கள் உருவான காலகட்டம் இது . தத்துவ மதங்களான பௌத்த சமண மதங்கள் பின்வாங்கி , வழிபாட்டு மதங்களான சைவ வைணவ சாக்தேய மதங்கள் வளர்ந்து வலுப்பெற்றன.இன்றைய மத அடிப்படைகள் பலவும் வேரூன்றி நிலைபெற்ற காலகட்டம் இதுவேயாகும்.ஆலயங்கள் கட்டப்பட்டதும் , திருவிழாக்கள் ஒழுங்கு செய்யப்பட்டதும் இக்காலகட்டத்திலேயே.புராணங்கள் காவியங்களின் அழகியல் இயல்புகளையே பின்பற்றுகின்றன .ஆனால் தத்துவார்த்தமான தேடலோ விவாதமோ இவற்றில் இருப்பதில்லை .மையத்தை வலுவாக முன்வைப்பதே இவற்றின் நோக்கம்.புராணங்களின் முக்கியமான இயல்பு இந்தியா முழுக்க ஒன்றுதான் .அதை தொகுப்புத்தன்மை என்று சொல்லலாம். முற்றிலும் மாறுபட்ட பல்வேறு குல வழிபாட்டு மரபுகளையும் , தத்துவ நிலைகளையும் ,கடவுள்களையும் ஒரு மையத்தை சுற்றி [பெரும்பாலும் இம்மையம் சைவ வணைவ சாக்தேய மரபின் ஒரு தெய்வம் தான் ] தொகுத்து அமைப்பதன் பொருட்டு உருவான வடிவம் இது . புராணங்களின் வழியாகசைவ வைணவ மதங்கள் பெருமதங்களாக மாறுவதைகாணலாம்.
அடிப்படையில் கம்பராமாயணம் இக்கால கட்டத்தை சேர்ந்ததேயாகும். ஆனால் அதில் புராண இலக்கணத்தை விட காவிய இலக்கணமே காணப்படுகிறது . இக்காலகட்டத்தின் ஆகச்சிறந்த படைப்பும் , தமிழின் மிகப்பெரிய இலக்கிய வெற்றியும் இதுவே . என் வாசிப்பில் உலக இலக்கியப்படைப்புகளில் மகாபாரதமும் கம்பராமாயணமுமே உச்சமானவை. இதனுடன் ஒப்பிட்டால் இலியட் ஒடிசி அல்லது ஷேக்ஸ் பியர் நாடகங்கள் எல்லாம் சிறிய படைப்புகள்தான் . முழுமுற்றான அறிவார்ந்த தன்மை முழுமுற்றான பித்து முழுமுற்றான விவேகம் மூன்றும் இப்படி பரஸ்பரம் நிராகரிக்காமல் முயங்கும் இத்தகைய மகத்தான படைப்பு மனிதகுலத்துக்கு மிக அபூர்வமாகவே கிடைக்கிறது.
பெரிய புராணம் , சீறா புராணம் இரண்டும் அடுத்தகட்டத்தில் குறிப்பிடத்தக்க முக்கியமான படைப்புகள் . திருவிளையாடல்புராணம், குசேலோபாக்கியானம் ,அரிச்சந்திர புராணம் ஆகியவை கவனத்துக்குரியவை.
6] பக்தி காலகட்டம்
கால அடிப்படையில் இது புராண காலகட்டத்துக்கு சமமானது . தமிழ்க்கலைகள் ,நாட்டார் கலைகள் ஆகியவை இலக்கியத்துடன் நேரடியான உறவு கொண்ட காலகட்டம் இது. இலக்கியம் நிகழ்கலைகளுடன் தன் உறவை புதுப்பித்துக் கொள்ளும்போது சங்க இலக்கியங்களின் பல இயல்புகள் ,குறிப்பாக அகப்பாடல்களின் அம்சங்கள் நுட்பமான முறையில் ,மீண்டுவருவதைக் காணலாம். சங்கப் பாடல்களைபோலவே பக்திகாலகட்டப் பாடல்களும் குறுஞ்சித்தரிப்புகள்தான்.மிகப்பெரும்பாலும் 'கூற்று'களும் கூட.
நம்மாழ்வாரின் பாடல்கள் இக்காலகட்டத்தின் உச்சகட்ட ஆக்கங்கள் என்பது என் கணிப்பு . மனக்கலைவு [Psychedelic ] அம்சமும் முதிர்ந்த அறிவார்த்தமும் அழகாக கூடிவரும் ஆக்கங்கள் இவை . ஆண்டாள் , பெரியாழ்வார் பாடல்கள் தமிழின் சிறந்த கவிதைசெல்வ்ங்கள். சைவ பக்திப்பாடல்களில் திருவாசகத்தின் பாடல்கள் குறிப்பிடத்தக்கவை. ஆயினும் பொதுவாக அவை வைணவப்பாடல்கள் அளவுக்கு கவித்துவம் உடையவை அல்ல.
7] சிற்றிலக்கியங்களின் காலகட்டம்.
சிற்றிலக்கியங்களின் காலகட்டத்தை பக்தி காலகட்டத்தின் நீட்சி என்று ஒருவகையில் சொல்லலாம். தமிழகத்தில் பேரரசுகள் வீழ்ந்து அரசியல் நிலையின்மை ஏற்பட்டதை ஒட்டிசிறுமன்னர்களின் அவைக் கவிஞர்கள் பெரிதும் தொழில்திறமையை மட்டுமே முன்வைத்து ஆக்கங்களை உருவாக்கிய காலகட்டத்தில் சிற்றிலக்கிய வடிவங்கள் பல்கிப் பெருகி நவீன காலகட்டத்தின் தொடக்கம் வரை நீண்டன. மேலோட்டமான பக்தி அல்லது புராண பாவனைகளுக்கு அடியில் காமச் சித்தரிப்புகள்தான் இவற்றின் சிறப்பியல்பு . சிற்றிலக்கியத்துக்கு உரிய சிறப்பியல்புகள் இரண்டு .ஒன்று விழுமியங்களைப்பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளாத மிதப்பான போக மனநிலை.இரண்டு இலக்கியத்தின் செய்திறனையே அதன் அழகாகவும் இலக்காகவும் எண்ணியது.
இக்கால படைப்புகளில் வகைக்கொன்றாக சிலவற்றை மட்டும் குறிப்பிடலாம் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் [ குமர குருபரர் ], நந்திகலம்பகம் , கலிங்கத்துபரணி[ஜெயங்கொண்டார்] குற்றாலக் குறவஞ்சி[திரிகூட ராயப்ப கவிராயர் ]
8 ] நவீனகாலகட்டம்
.
நவீன இலக்கிய காலகட்டம் பாரதியில் தொடங்கியது. இக்காலகட்டத்தின் முக்கியமான சிறப்பியல்பு இலக்கியத்தை வாழ்க்கையின் இன்றியமையாத அம்சமாகக் கண்ட மனநிலையே என்று சொல்லலாம். இலக்கியம் சான்றோரால் பயிலப்படுவதாகவும் ,சபைகளில் ரசிக்கப் படுவதாகவும் இருந்த நிலைமை மாறி அது ஒரு சமூகம் தன்னை கண்டடையக் கூடிய , தனக்குள் உரையாடிக் கொள்ளகூடிய ஊடகமாக அடையாளம் காணப் பட்டது. இலக்கியம் மக்களை நோக்கிச் சென்றது . நாட்டார்கூறுகள் இலக்கியத்தில் நேரடியாக இடம்பெற ஆரம்பித்தன. விளைவாக இயல்பாகவே பக்தி காலகட்ட அழகியல் கூறுகள் கவிதையில் மேலோங்குவதைக் காணலாம்.
இதற்கு அச்சும் , கல்வி பரவலானதும் காரணங்கள் என்றாலும் அவற்றைவிட முக்கியமான காரணம் ஜனநாயகக் கருத்துக்களின் வருகைதான். விளைவாக உரைநடை முக்கியத்துவம் பெற்றது. கவிதையில் இருந்து பல கூறல்முறைகள் பிரிந்து வளர்ந்தன. அவற்றில் மரபின் பல அழகியல் அம்சங்கள் பிரதிபலித்தன. நாவல் , சிறுகதை ,கட்டுரை வடிவங்கள் உருவானபோது அவற்றுக்கேற்ப தனியான அழகியல் சித்தாந்தங்களும் உருவாயின.
'பதிவுகள்' ஆகஸ்ட் 2002 இதழ் 32