எதிர்வினை 4: எளிய ஆராய்ச்சியாளன் சொன்ன எளிய கதை - யமுனா ராஜேந்திரன் -
1.
ஆதவன் தீட்சண்யாவின் குறிப்புக்கள் குறித்த ராஜநாயஹத்தின் எதிர்வினை நல்லெண்ணத்தின் அடிப்படையிலும் உணர்ச்சிவசமான நம்பிக்கையின் அடிப்படையிலும். இருக்கிறது. ஒரு படைப்பாளி கண்ணியமானவராகவும் நேரில் பழகுவதற்கு இனியவராக இருப்பதும் அவரது படைப்பு சார்ந்த மதிப்பீடுகளுக்குத் தடையாக இருக்க முடியாது. படைப்பாளி வரலாற்றுப் பிரக்ஞை கொண்டவராகவும் இருக்க வேண்டும். வளர்ந்தவர்கள் குழந்தைகளை பாலியல் வேட்கைக்கு உட்படுத்துவது என்பது சர்வதேசியச் சட்டங்களின் அடிப்படையில் கொடுங்குற்றமாகக் கருதப்படுகிறது. அமெரிக்க வாழ்க்கை முறை குறித்த பாரிய அனுபவம் கொண்ட சு.ரா. இதனை வெகு நன்கு அறியமுடியும். உன்னத சங்கீதம் என 13 வயதுப் பெண்குழந்தையோடு பாலுறவு கொள்ளும் 50 வயது மத்தியதர வயது ஆணை மனிதாயப்படுத்தி எற்கனவே சாருநிவேதிதா எழுதியிருக்கிறார். சு.ரா இதே அதிர்ச்சி மதிப்போடு எதிர்முனையில் விவகாரத்திற்குரிய பிள்ளை கெடு;த்தாள் விளையை எழுதியிருக்கிறார். பிள்ளை கெடுத்தாள் விளை என ஊருக்குப் பெயரிட்டதன் வழி இந்தப் புனைவுக்கு ஒரு வரலாற்று மதிப்பையும் அவர் ஏற்றியிருக்கிறார். ஆனால் பாலியல் வல்லுறவும் சுரண்டலும் இந்திய வரலாறு முழுக்க எவருக்கு எதிராக, எவரது வாழ்வில் அன்றாட நிகழ்வாக இருக்கிறது? இந்தக் கேள்வி சார்ந்த உணர்வைத்தான்; வரலாற்றுப் பிரக்ஞை என்கிறோம்.
கதையின் விபரீத சஞ்சாரம் குறித்த தலித் எழுத்தாளர்களின் கோபம் மிக நியாயமானது. சு.ராவின் இந்தக் கதையை அசோகமித்திரனின் யூதர்கள் தொடர்பான ஆதங்கத்துடன் சேர்த்து வாசிப்பது தவிர்க்கவியலாதது. அசோகமித்திரன் தமது சமூகம் சாரந்தவர்களை யூதர்களுடன் ஒப்பிடுவது வெறுமனே யதேச்சையானது அல்ல. இந்துத்துவச் சார்பு ஆங்கில இணைய தளங்கள் அனைத்திலும் மேற்கொள்ளப்படும் ஒப்பீடு அதுதான். அரவிந்தன் நீலகண்டன் போன்ற அறிவித்துக்கொண்ட ஆர்.எஸ்.எஸ்.காரரின்; கட்டுரைகளில் தமது சமூகத்தை யூதர்களோடு ஒப்பிட்ட பாங்கை¨யும் பாலஸ்தீனர்களை பயங்கரவாதிகள் என அவர் சொல்வதையும் வெகு சாதாரணமாக நாம் காணலாம். அசோகமித்திரன் ஒரு தேர்ந்த இலக்கியவாதி என்பதால் தன் மொழியில் அவர் பேசுகிறார். வு¢த்தியாசம் வேறில்லை. இச்சூழலில் சு.ராவின் விமர்சனமற்ற அபிமானிகள் புரிந்துகொள்வது மாதிரியே பிற மனிதர்களும் இக்கதையைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பது அவசியமில்லை. இத்தருணத்தில் இப்படியான கதையை எழுதுவதற்கு சு.ராவை உந்திய பொறிக்கும் அல்லது இத்தருணத்தில் தமது சமூகத்தின்; புனிதம் மற்றும் வீழ்ச்சி குறித்து ஆதங்கப்பட வேண்டிய நிலைமை அசோகமித்திரனுக்கு வந்ததற்கும் வெறுமனே கலைப் பிரக்ஞைதான் காரணம் என அனைவரும் நம்ப வேண்டிய அவசியமேயில்லை.
2.
தத்துவம், அழகியல், அமைப்பியல் சார்ந்து குறிப்பிட்ட கதை பார்க்கப்படுகிறது. சமகால விவாதங்கள் நடைமுறைகள் சார்ந்து கதை பார்க்கப்படாமல் தவிர்க்கப்படுகிறது. ஆதவன் தீட்சண்யா தெளிவாகவும் தன் விவாதத்தின் மையமாகவும் முன்வைத்துக் குறிப்பிட்டிருக்கும் கதைநிகழ்வின் காலக்குழப்பமும் குளறுபடியும் குறித்துக் கதையின் ஆதரவாளர்கள் எந்தவிதமான விளக்கங்களையும் முன்வைக்க முடியவில்லை. அமைப்பியல் சார்ந்து கதையின் இயக்கத்தை விவரிக்கும் ரவிக்குமார் இலக்கிய அழகியல் தெரியாதவர்களாக நீங்கள் புரிந்துகொள்ளப்படுவீர்கள் என தலித்துக்களையும் விளிம்பு நிலையாளர்களையும் அச்சுறுத்துகிறார்.
தாயம்மாவின் மரணம், முதல் தேர்தல் என கதை நிகழும் காலம், கிராமத்தின் பெயர் மாற்றம் என கடந்த காலத் தன்மையைக் கதைக்கு சு.ரா வழங்கினாலும், ஆதவன் தீட்சண்யா குறிப்பிடுகிற காலக்குழப்பத்தை சு.ரா. கடந்து போகமுடியவில்லை. கதையின் அழகியல் தொடர்பானது மட்டுமல்ல இக்கேள்வி, கதையின் வரலாற்றுப் பிரக்ஞையின் மீதான கேள்வியாகுமிது. கதையின் காலம் 2005 ஆம் வருட வாக்கிலான நிகழ்காலம்தான். நிகழ்காலத்தின் சிக்கலான உரையாடல் ஒன்றை மையமாகக் கொண்டுதான் கதை விவாதிக்கப்படுகிறது. அந்தச் சிக்கலான பிரச்சினை குழந்தைகளின் மீதான பாலியல் வன்முறை -child abuse- தொடர்பானது.
கதையில் தாயம்மா பாலியல் பலாத்காரம் புரிந்ததாகச் சொல்லபடுவதனை ஸ்தாபிக்கும் எந்தத் தடயமும் கதையின் மொழியில் இல்லை என்பதனை ஆதரவாளர்கள் சுட்டிக்காட்;டுகிறார்கள். அதன் மீதான நிச்சயமின்மையையே கதை கொண்டிருக்கிறது எனவும் அவர்கள் நிச்சயமாகச் சொல்கிறார்கள். கதைசொல்லி தாயம்மாவின் மீது உருவாக்கும் அனுதாபமும், தங்கக்கண் சொன்ன கதையின் இறுதியில் தாயம்மாவின் மீது கேட்பவர்கள் செலுத்தும் அனுதாபத்தையும் முன்வைத்து இப்படியான முடிவுக்கு வருவதாகவும் அவர்களது விவாத நிலைபாடு இருக்கிறது.
கதை கேட்பவர்களின் அனுதாபத்தை ஊர்கூடி தாயம்மாவின் மீது செலுத்தும் வன்முறைக்கு எதிரான அனுதாபமாகப் புரிந்து கொள்வதா அல்லது மிகக் கடினமான அனுபவங்களின் பின் வாழ்க்கையில் முன்னேறிய அந்தப் பெண்ணின் பாலியல் வேட்கையின் ததும்பல் எனப் புரிந்து கொண்ட அனுதாபம் என விளங்கிக் கொள்வதா அல்லது குழந்தைகளின் மீதான பாலியல் வன்முறை குறித்து கதை கேட்பவர்களுக்கு அசிரத்தையான மனப்பான்மையே இருக்கிறது என விளங்கிக் கொள்வதா?
அனைத்துக்கும் முன்னதாக சமகாலத்தின் மிகக் கேவலமானதும் வக்கிரமானதுமாகக் கருதப்படும் ஒரு குற்றச் செயல் - child abuse- புரிந்ததின் மீதான சம்சயத்தின் -suspicion or obscurity- அடிப்படையில் இப்படியான கதையை எழுத வேண்டிய தனது கருத்தேர்வுக்கான உந்துதலை சுந்தரராமசாமிக்கு வழங்கிய அகப் பொறி அல்லது சமூக நெருக்கடிதான் என்ன?
தத்துவவாதியானாலும் அரசியல் நடவடிக்கையாளன் ஆனாலும் இலக்கியவாதியானாலும் கடந்த காலத்தை நிகழ்கால நெருக்கடிகளின்ன் அடிப்படையில்தான் வாசிக்கத் தொடங்குகிறான். தலித் அரசியலாளர்களின் மீதும், தலித்துக்கள் மனிதர்கள் எனும் அளவிலும் ஒரு விதமான சமூகவியல் அணுகல் தலித் அல்லாதவர்கள் மத்தியில் இருக்கிறது. சு.ரா.வும் சமூகஜீவியாக இதற்கு விதிவிலக்கு அல்ல. தலித்துகளுக்கு அதிகாரமும் வசதியும் சொத்தும் சேரும் போது ( தாயம்மாவின் தகப்பன் ரகசியமாக நிலம் வாங்குகிறார் எனக் குறிப்பிடுகிறது கதை) பிற சமூகப் புகுதியினரைப் போலவே அவர்கள் குற்றச்செயல்களிலும் அதிகாரம் செலுத்துவதிலும் ஈடுபடுவார்கள் எனக் கருதுவதுதான் அந்த நிலைபாடு. இந்த நிலைபாட்டிலிருந்து கதையை வாசிக்கிற போது கதையின் பல குழப்பங்கள் நமக்குத் தெளிவுபடுகின்றன.
கதையில் மூன்று இணையான - three parellel texts- பிரதிகள் ஊடறுத்துச் செல்கின்றன. (அ) ஒரு கீழ்சாதிப் பெண்ணாக தாயம்மாவின் நோவுகளும் பாடுகளும் சமூக நிலை எய்துதலும் அவள் மீதான வன்முறையும் முதலானது எனக் கொள்ளலாம். (ஆ) தாயம்மாவைச் சுற்றிய அரசியல் மாற்றங்கள், அது சார்ந்த மனிதர்களின் எதிர்விணைகள் இரண்டாவது எனக் கொள்ளலாம். (இ) மூன்றாவதானதும் பிரதானமானதுமான பிரதி தாயம்மாவின் பாலியல் வேட்கை மற்றும் அவளது உடலின் ததும்பல்கள் தொடர்பானது. கதையின் பிரச்சினைக்குரிய பகுதியும் இதுதான். இது குறித்து கொஞ்சம் பொய்யும் கலந்து சொல்லும் தங்கக்கண்ணின் வழியிலும், தங்கக் கண்ணின் பொய்யை வடிகட்டிய நிலையில் திட்டவட்டமான வாரத்தைகளில் நமக்கு விளக்கும் நேரடிக் கதைசொல்லியான டெய்லர் செல்லத் துரையின் வார்த்தைகளிலும் நம்மை வந்து அடையும் சித்திரம், பேசப்படும் பாலியல் குற்றம் குறித்து அவ்வளவு கூடார்த்தமாகவும், நிச்சயப்படுத்திக் கொள்ள முடியாததாகவுமா இருக்கிறது?
அப்படி இல்லை என்பதை கதையின் பாலுறவு வேட்கை தொடர்பான திட்டமான இணைப் பிரதி நமக்குச்; சொல்கிறது. வண்டல் திரண்டது போல் உடம்பு கொண்ட(பக்கம்:14) தாயம்மாவுக்கு கல்யாணம் ஆகவில்லை (பக்கம்:13). மணிகண்டன் மாடக்குழியில் ஹைஸ்கூலில் நாலாவது வகுப்பில் படித்துக் கொண்டிருந்தான். என்ன அழகு! (பக்கம்:15) மணிகண்டன் தன் தாயா¡¢டம் சொன்ன விசயம் மாடக் குழி முழுக்க ஒரே நொடியில் பரவிற்று என்ற்¡ல் அதில்; மிகையில்லை (பக்கம்15) தாங்கள் அரும்பாடுபட்டுக் கட்டி வளர்த்த பள்ளியைக் காப்பாற்ற அந்தத் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்று அவுர்களுக்குத்; தோன்றிவிட்டது.(பக்கம்:15).தாயம்மா அழவில்லை. கத்தவில்லை.ஒரு சொல் சொல்லவில்லை (பக்கம்:16) குழந்தைகள் அவள் பக்கம் போகக் கூடாது (பக்கம்: 16).
ரவிக்குமார் சொல்கிற மொழி என்பது குறியீடு - language as sign - என்பதனை மேலே குறிப்பிட்ட இணைப்பிரதியுடன் வைத்துப் பார்க்க நமக்குக் கிடைக்கிற சித்திரம் வேறு. மணிகண்டன் தன் தாயிடம் என்ன சொன்னான் என்பது தெரியவில்லை என ஒரு இடத்தில் விவரிக்கிற தங்கக்கண்தான் பிறிதொரு இடத்தில் மணிகண்டன் தன் தாயிடம் சொன்ன விசயம்தான் மாடக்குழி முழுக்கப் பரவியது என்கிறான். மாடக்குழி முழுக்கப் பரவிய விடயம் தாயம்மாவின் பாலியல் பலாத்காரம்தான் என்பதை கதை தெளிவாகச் சொல்கிறது. அதன் அடிப்படையில்தான் பள்ளிக் கூட நிர்;வாகிகளின் நடவடிக்கை அமைகிறது என்பதனையும் தங்கக்கண் தெளிவாகச் சொல்கிறான். புள்ளிக் கூட நிர்வாகிகள் தாயம்மாவுக்கு எதிரான வில்லன்களாக இருந்தார்கள் என்பதற்கான தடயங்கள் எதுவும் கதையின் பிற இடங்களில் எங்கும் இல்லை.
காலமே, உன் கூத்து என்ற வாக்கியம் கதையில் திருப்பங்கள் நேரும் போதெல்லாம் திரும்பத் திரும்ப வருகிறது. இதற்கு என்;னதான் அர்த்தம்? வலிகளும் வாதைகளும் பெற்று வளர்ந்த ஒரு பெண், தனது ஒடுக்கப்பட்ட பாலுறவு ஆசைகளின் பொருட்டு தனது சொந்த உடல்சார்ந்த வேட்கைக்காக இப்படிச் செய்துவிட்டாளே, இது தவறா எனக் கேட்கிறதா இச்சொற்றொடர்கள்? அல்லது தமது ஊரின் பள்ளித் தலைமயாசியையாக அப்பெண்ணை ஆக்கி, ஊரின் பெருமித்தை அப்பெண்ணைக் கொண்டு நிலைநாட்டி அவளைக் கொணடாடிய ஊரே, இந்தக் குற்றத்திற்காக அவளுக்குத் தண்டனை தர வேண்டிய நிலைமை வந்துற்றதே என அங்கலாய்க்கும் சொற்றொடர்களா இவை?
கதை முழுக்கவும் தாயம்மாவின் மீது காட்டப்படும் பச்சாதாபம், அவரது கல்வி கற்றல் தொடர்பான துயர் தோய்ந்த வாழ்க்கைப் பயணத்தினத்தினை உணர்வதாலும்;, அவள் மீதான காட்டுமிராண்டித் தனமான வன்முறையின்; மீதான கோபத்தினாலும், விசாரணையின்றி அவள் தண்டிக்கப்பட்டதினாலும்; நேரும் தாராளவாதத்தின் பச்சாதாபம் தானேயொழிய, அவள் பாலியல் பலாத்காரம் பரிந்தாளா இல்லையா என அறிந்து கொண்ட நிலையில் நேரும் பரிவுணர்வு அல்ல. மேலாக இவ்வாறு பாலுறவு கொண்டவர்களையும் பரிவுணர்வடன் பார்க்க வேண்டும் என்று பேசுகிற எழுத்தாளர்களும் உண்டு.
சுரா தாயம்மாவுக்கு வயது எண்பதுக்கு மேல் என்று சொன்னாலும், கதை நிகழ்காலத்திலிருந்துதான் தொடங்குகிறது. தங்கக்கண்ணுக்கு சு.ரா.வினால் வழங்கப்படும் புராதனம் இட்டுக்கட்டப்பட்டது. கதையின் பிரச்சினையாக இருக்கும் குழந்தைகளின் மீதான பாலுறவு வன்முறை அதி முக்கியமான பிரச்சினையாக ஆகியிருக்கிற காலமும் இதுதான். இந்தப் பிரச்சினையின் குரூரம் எத்தகையது என்பதனை அமெரிக்காவில் வாழும் சுரா மிக நன்கு அறிவார். இத்தகையதொரு சூழ்நிலையில் பிரச்சினை திட்டவட்டமான மொழியில் எழுதப்படாமல் கூடார்த்தமான மொழியில் எழுதப்பட்டதில் கலாச்சார அரசியல் இல்லை என்று நம்புவதற்கான இடம் இல்லை.
அய்யா, நான் ஒரு எளிய ஆராய்சியாளன். என் ஆராய்ச்சி என்னைப் படுகுழிக்கு இழுத்துக்கிட்டுப் போகுதே, நான் என்ன செய்வேன் என்று கதையின் ஒரு இடத்தில் புலம்புகிறான் தங்கக்கண். இந்த ஆராய்ச்சிக்கு இப்போ என்ன தேவை வந்தது என்றுதான் தங்கக்கண்ணைக் கேட்கத் தோன்றுகிறது.
3.
குறிப்பிட்ட எழுத்தாளர்களின் மீதான அபிமானம் என்பது தமிழகத்தில் நிகழ்ந்து வரும் குழு சார்ந்த இலக்கிய அரசியலைப் பாரக்கவியலாது செய்துவிடக்கூடாது. நாச்சார்; மடம் கதை விவகாரம் பிரச்சினைக்குரியதாகப் பார்க்கப்பட முடியுமானானல், ஏன் ஜீவா, நெருதா போன்றவர்கள் குறித்த காலச்சுவடு: சு.ரா : ரவிக்குமார் விவாதங்கள் பிரச்சினைக்குரியதாக ஆகமுடியாது? ரவிக்குமாரின் பெரும்பாலுமான கட்டுரைகள் ( குறிப்பாக தெரிதா, நெருதா குறித்த அவரது கட்டுரைகள்) மிக மேம்;போக்கான நுனிப்புல் மேய்ந்த கட்டுரைகள். காயத்ரி ஸ்பீவக்கின் முறையியலோடு தெரிதாவின் எழத்துக்களை ஒப்பிடுவதே அபத்தம். ரவிக்குமார் செய்கிறார். காயத்ரி ஸ்பீவக் மிக நீண்ட காலத்திற்கு முன்பாகவே தெரிதாவைக் கடந்து சென்று விட்டவர். அவர் ஒரு நடவடிக்கையாளர் எனும் நிலைபாட்டிலிருந்தே பன்முக மார்க்ஸ் குறித்த தெரிதாவின் கருத்துக்களைப் பார்க்கிறார். மேலாக கட்டுடைப்பு வழிபாடு ஆக்கப்பட்டிருப்பதை நிராகரிப்பவர் ஸ்பீவக்.
இன்றைய தலித் பிரக்ஞையுடன் நெருதாவின் இலங்கை பாலுறுவு நிகழ்வை மீளப்பார்ப்பது படு அபத்தம். நெருதா குறித்த ரவிக்குமார் நா.சுகுமாரன் போன்ற தமிழக எழுத்தாளர்களின் அவதூறுகளுக்கு எதிர்வினையாக மிக விரிவான கட்டுரையொன்றை நெருதா குறித்த சர்வதேசிய விவாதங்களின் பின்புலத்தில் (பாப்லோ நெருதாவின் துரோகம் : உயிர்மை : பிப்ரவரி; 2005) நான் எழுதியிருக்கிறேன். நெருதா குறித்த இவர்கள் இருவரதும் கருத்துக்கள் சுயம்புவாக உதித்தவை அல்ல. ரவிக்குமார் பேசிய விடயங்களை காலச்சுவடுக் கட்;டுரைதான் தான் கண்டுபிடித்தது என்றும் இல்லை. இந்தக் கொச்சை வாந்திகளை சர்வதேச வெளியில் தொகை தொகையாக அமெரிக்க விமர்சகர்கள் எழுதி வருகிறார்கள். ரவு¢க்குமார் செய்ததெல்லாம் அதனைத் தமிழுக்கு இறக்குமதி செய்ததுதான்.
மேலாக ரவிக்குமாருக்கு பல சித்தாந்த முகங்கள் உண்டு. ஹிமாச்சல் எனும் இதழில் அவர் விடுதலைப் புலிகளின் அமைப்பில் சாதியம் பற்றி ( மொழியாக்க உபயம் அழகரசன்) ஆங்கிலக் கட்டுரை எழுதுவார். வு¢டுதலைப் புலிகளின் நேரடியான தமிழக ஆதரவாளரான திருமாவளவனுக்கு அரசியல் ஆலோசகராகவும் ரவிக்குமார் இருப்பார். தமிழகத்தில்; மார்க்சியம் கடந்த நிலை தனது அரசியல் என்று பேசுவார். அவுட்லுக் ஆனந்த்தோடு சேர்ந்து பின்நவீனத்துவத்திற்கு எதிரான மார்க்சிஸ்ட்டான மீரா நந்தாவின் புத்தகங்களும்; போடுவார். முன்னாள் ஆர்.எஸ்.எஸ்.காரருடன் அருகிருந்து கொண்டு பெரியாரிய எதிர்ப்பு அரசியலும் பேசுவார். ரவிக்குமாரின் தலித்தியம், பின்-சோவியத் விமர்சன வகை careerism தவிர வேறில்லை.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
நன்றி: பதிவுகள் மே 2005; இதழ் 65!