'தலைமுறை தாண்டிய பயணம்: பத்மநாப ஐயர் - 80!' என்னும் மெய்நிகர் நிகழ்வில் (வணக்கம் லண்டன் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட நிகழ்வு) உரையாற்றிய கலை, இலக்கிய விமர்சகர் மு.நித்தியானந்தன் அவர்கள் கூறிய வரலாற்றுத் தகவலொன்று என் கவனத்தை ஈர்த்தது. அது முனைவர் பொ.ரகுபதியின் Early Settlements in Jaffnaஅ நூல் பற்றியது.
இந்நூல் பற்றிக் குறிப்பிடுகையில் மு.நித்தியானந்தன் அவர்கள் கூறிய விபரங்கள் வருமாறு:
யுத்தச் சூழலில், கடற்படையினரின் ஆதிக்கம் நிலவியதொரு சூழலில் பத்மநாப அய்யர் அவர்கள் இயக்கமொன்றின் படகொன்றில் மேற்படி நூற் பிரதியுடன் (தட்டச்சுப் பிரதியாகவிருக்க வேண்டும்) இந்தியா சென்று க்ரியா நிறுவனத்துடன் கடன் அடிப்படையில் நூலைப் பதிப்பிக்க ஒப்பந்தம் செய்ததாகவும், அவ்வேலை அக்காலகட்டத்தில் பாரிசிலிருந்த ரிஷியகுமாரின் பண உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டதாகவும் நித்தியானந்தன் தனதுரையில் குறிப்பிட்டிருந்தார். அதற்கான மொத்தச்செலவு ரூபா 55,000 என்றும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் அவர் நூலாசிரியரே பெரும் முயற்சி எடுக்காததொரு சூழலில் பெரு முயற்சியெடுத்தவர் பத்மநாப அய்யர் என்றும் குறிப்பிட்டார். ஆனால் நூல் வெளியானபோது அந்நூலில் பத்மநாப அய்யரின் பெயர் எங்குமே இடம் பெற்றிருக்கவில்லையென்றும் நித்தியானந்தன் சுட்டிக்காட்டினார். மேலும் பத்மநாப அய்யர் வெளியிட்ட தொகுப்பு நூல்கள் பலவற்றில் பலரின் பெயர்கள் இருந்தாலும் , அவை பத்மநாப அய்யரின் முயற்சியால் மட்டுமே வெளியானவையே என்றும் சுட்டிக்காட்டினார் நித்தியானந்தன்.
நித்தியானந்தன் அவர்கள் குறிப்பிட்ட Early Settlements in Jaffna நூல் நூலகத்திலுள்ளது. அதில் நூலை வெளியிட்டவர் தில்லைமலர் ரகுபதி என்றும் , நூல் வெளிவர உதவியவர்கள் என்று சிலரின் பெயர்கள் குறிப்பிட்டிருந்தன. அவற்றில் நித்தியானந்தன் குறிப்பிட்ட ரிஷ்யகுமாரின் உதவி குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. பத்மநாபா அய்யர் பற்றியும் குறிப்புகள் எவையுமில்லை.
Early Settlements in Jaffna: https://noolaham.net/project/18/1733/1733.pdf
மு.நித்தியானந்தனின் உரையுள்ள காணொளி: https://www.youtube.com/watch?v=zrrDpglRhgE
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.