மக்களில் இருந்து மக்களே ஒருவரை மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கும் முறையே இந்நாளைய குடியாட்சி ஆகும். இந்த முறை நமக்கு மேலை நாட்டில் இருந்து அறிமுகமானது. இதற்கு முன் நம் நாட்டிலேயே பண்டு குடவோலைத் தேர்தல் முறையில் ஊராட்சிக்கான குடியாட்சி நடைபெற்றது. இதற்கு உத்தரமேரூர் வைகுண்ட பெருமாள் கோவிலின் இரண்டு குடவோலைக் கல்வெட்டுகள் சான்றாக உள்ளன. இதில் சதுர்வேதி மங்கலமான உத்தரமேரூரில் வாழ்ந்த பிராமணர்கள் தம்மூர் வாரியத்திற்காக தம்மில் இருந்து வாரிய உறுப்பினரை தேர்ந்தெடுத்த முறை பற்றி விளக்கப்பட்டு உள்ளது.
இதனை குடியாட்சியே அல்ல அது பிராமண ஊர்ச் சபைக்கான பிராமணக் குடவோலைத் தேர்தல் என்று மறுப்பாரும் உண்டு. மேலும் பொது மக்கள் விரும்பி ஓட்டளிக்க வாய்ப்பு இல்லாத தேர்தல் முறை என்கின்றனர். இவர்கள் கூறும் காரணம் உண்மை தான் என்றாலும் அதுவும் ஒரு வகைக் குடியாட்சி தான். ஏனென்றால் ஒரு ஊரின் வாரியங்களுக்கு அரச அதிகாரி இல்லாமல் அவ்வூரின் குடிகளில் இருந்தே வாரியப் பணியை நிறைவேற்ற பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த வாரிய உறுப்பினருக்கான தகுதியும், கட்டுப்பாடும் வரையறுக்கப்பட்டு வரையறைக்கு தக தகுதி உள்ளவரே வேட்பாளராக குடவோலையில் பெயர் எழுதி இடப்பட்டனர். ஒரு குடத்தில் உள்ள பல பெயரில் ஒருவரது பெயர் மட்டுமே எடுக்கப்பட வேண்டும். குடும்பு என்பது ஒரு சிறு அலகு தான் இதாவது, ஒரு கூட்டுக் குடும்பம் அல்லது குழுவைக் கொண்டது. இதில் ஒன்றுக்கு மேற்பட்டவர் போட்டியிட்டாலும் அந்த குடும்பில் பெயர் எழுதப்படுவோர் அனைவருமே வரையறைப்படி தகுதி பெற்றவர் தான். ஒரு குடும்பின் தகுதி உள்ள, விருப்பம் உள்ள உறுப்பினர்கள் அத்தனை பேர் பெயரும் ஒரே குடத்தில் தான் இடப்படிகின்றன. அதில் ஒருவர் பெயரை மட்டுமே தேர்ந்தெடுக்க குடவோலை தேர்தலே போதுமானது. இதற்கு பெருவாரியான மக்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில்லை. இதில் செலவு குறைவு. எனவே பொது மக்கள் விருப்பப்படி வேட்பாளர் தேர்ந்தெடுக்கவில்லை என்ற கருத்து மதிப்பிழந்து போகின்றது. மக்களில் இருந்து ஒருவர் என்ற முறையில் இது ஒரு குடியாட்சி முறை தான்.
உத்தரமேரூர் இரண்டாம் கல்வெட்டில் குடும்பு என்பது குடத்தில் இருந்து பெயர் ஓலையை எடுக்கும் முறை என்று இன்னொரு பொருளிலும் குறிக்கப்படுகின்றது (கொடு < குடு > குடும்பு). உத்தரமேரூர் போன்ற சதுர்வேதி மங்கலங்களில் சிவன் கோவில், விஷ்ணு கோவில்களைச் சுற்றி மொத்தமே 40 + 40 = 80 பிராமண வீடுகள் தாம் அமைந்திருந்தன. ஏற்கெனவே தேர்ந்தெடுத்த குடும்பில் இருந்து வாரிய உறுப்பினரை மீண்டும் தேர்ந்தெடுக்கக் கூடாது என்ற இரண்டாம் கல்வெட்டின் கட்டுப்பாடு மூலம் ஏற்கெனவே தேர்ந்தெடுத்த குடும்பை தவிர்த்தால் 80 – 30 = 50. எனவே குடும்பு என்பது குடும்பத்தை அல்லது கூட்டுக் கூடும்பத்தை தான் குறிக்கின்றது என்பது தெளிவு. அதே போல் பிடாகைப் பார்ப்பனச் சேரிகளில் மொத்தமே 8-10 வீடுகள் தாம் அமைந்திருக்கும். அங்குள்ள 50 பேரில் இருந்து தான் ஒருவர் வாரியத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இப்படி குடவோலை மூலம் தேர்ந்தெடுக்கப்படுவோர் ஆண்டு வாரியம், தோட்ட வாரியம், ஏரி வாரியம், பொன் வாரியம், பஞ்சவார வாரியம் ஆகிய பல்வேறு வாரியங்களின் உறுப்பினராக பொறுப்பளிக்கப்பட்டனர். இவர்கள் 360 நாள் வாரியப் பொறுப்பாற்றி முடிந்த பின் மீண்டும் இவ்வாரியங்களுக்கு பழையபடியே குடவோலைத் தேர்தல் முறையில் வாரிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். உத்தரமேரூரின் இரண்டாம் கல்வெட்டு குடவோலைத் தேர்தல் பற்றி விரிவாகவும் தெளிவாகவும் பேசுகின்றது. இதில் உள்ள தகுதிகளும் கட்டுப்பாடுகளும் இக்காலக் குடிநாயக ஆட்சிக்கும் பொருத்தமுள்ளவையாய் உள்ளன.
இதே போல் நெல்லை மாவட்டம் மானூரில் உள்ள அம்பலவாணர் கோவிலிலும் மாறன்சடையன் காலத்தில் ஊர்ச்சபை உறுப்பினருக்கு இருக்க வேண்டிய தகுதி கட்டுப்பாடுகளைச் சுட்டும் கல்வெட்டு உள்ளது. அதில் குடும்பு, குடவோலைத் தேர்தல் பற்றி எந்த குறிப்பும் இல்லை. பிற தளங்களில் இம்மூன்று கல்வெட்டுகள் குறித்து விரிவான விளக்கம் இல்லாத குறையைப் போக்க எதிர்கால தமிழ்ச் சமூகத்திற்கு பயனளிக்கும் வகையில் கீழே இம்மூன்று கல்வெட்டுகளின் விரிவான விளக்கம் தரப்பட்டுள்ளது.
செங்கற்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் உத்தரமேரூர் வைகுண்ட பெருமாள் கோவில் மேற்கு சுவரில் உள்ள 12 வரிக் கல்வெட்டு.
1. ஸ்வஸ்திஸ்ரீ மதிரை கொண்ட கோப்பர கேசரிபம்மர்க்கு யாண்டு ப[ன்]னிர[ண்]டு ஆவது உத்திரமேருச் சதுர்வ்வேதி மங்கலத்து ஸபையோம். இவ்வாண்டு முதல் எங்களூர் ஸ்ரீ முகப்படி ஆக்ஞை
2. யினால்த் தத்தநூர் மூவேந்த வேளான் இருந்து வாரியமாக ஆட்டொருக் காலும் ஸம்வத்ஸர வாரியமுந் தோட்ட வாரியமும், ஏரி வாரியமும் இடுவதற்கு வ்யவஸ்தைய் [செய்]
3. த பரிசாவது குடும்பு முப்[பதாய்] முப்பது குடும்பிலும் அவ்வவ் குடும்பிலாரேய் கூடி கா னிலத்துக்கு மேல் இறை நிலம் உடையாரை, தன் மனையிலே அ
4. கம் எடுத்துக் கொண்டு இருப்[பானை], அறுபது [பி]ராயத்துக்கு உள் முப்பது பிராயத்துக்கு மேல்பட்டார் வேத[த்]திலும், ஸாஸ்த்ரத்திலும், கார்யத்திலும் நிபுணரென்னப் பட்டி
5. ருப்பாரை அர்த்த ஸௌஸமும் ஆத்ம ஸௌஸமும் உடையாநய் மூவாட்டின் இப்புறம் வாரியஞ் செய்திலாத்தார் வாரியஞ் செய்தொழிந்த பெருமக்களுக்கு
6. அணிய பந்துக்கள் அல்லாத்தா[ரைக்] குடவோலைக்குப் பேர் தீட்டி சேரி வழியேய் திரட்டி பன்னிரண்டு சேரியிலும் சேரியால் ஒரு பேராமாறு ஏது முருவறியாத்தான் ஒரு
7. பாலனைக் கொண்டு குடவோலை வாங்குவித்துப் பன்னிருவரும் ஸம்வத்ஸர வாரியமாவதாகவும் அதின் மின்பேய் தோட்ட வாரியத்துக்கு மேற்படி குடவோ
8. லை வாங்கிப் பன்னிருவரும் தோட்ட வாரியமாவதாகவும் நின்ற அறு குடவோலையும் ஏரி வாரியமா
9. வதாகவும் முப்பது குடவோலை பறிச்சு வாரியம்(ஞ்) செய்கின்[ற] மூன்று திறத்து வாரியமும், முந்நூற் அறுபது நாளும் நிரம்[ப] வாரியம் ஒழிந்த அனந்தரம் இடும் வாரியங்கள் இவ்வ்யவஸ்தை யோ[லை]ப்படியேய் குடும்புக்குக் குடவோலையிட்டுக் குடவோலை பறிச்சுக் கொண்டேய் வாரியம் இடுவதாகவும் வாரியஞ் செய்தார்[க்]கு பந்துக்களும் சேரிகளில் அன்நோந்யம் _ _ __ அவரு
10. ம் குடவோலையில் பேர் எழுதி இடப் படாதாராகவும் பஞ்சவார வாரியத்துக்கும் பொன் வாரியத்துக்கும் முப்பது குடும்பிலும் முப்ப(த்)து குடவோலை இட்டு சேரியால் ஒருத்தரைக் குடவோலை பறித்து பன்னிருவரிலும் அறுவர் பஞ்ச[வார] வாரியமாவிதாகவும் அறுவர் பொன் வாரியமாவதாகவும் ஸம்வத்ஸர வாரி[ய]ம் அல்லா(த்)த
11. வாரியங்கள் ஒருக்கால் செய்தாரை பின்னை அவ்வாரியத்துக்கு குடவோலை இடப் பெறாத(தி)தாக[வு]ம். இப்பரிசே யிவ்வாண்டு முதல் சந்த்ராதித்தவத் என்றும் குடவோலை வாரியமேய் இடுவதாக தேவேந்த்ரன் சக்ரவத்தி ஸ்ரீ வீரநாராயணன் ஸ்ரீ பராந்தக தேவராகிய பரகேஸரி வம்மர் ஸ்ரீ முகம் அருளிச் செய்து வரக்காட்ட
12. ஸ்ரீ ஆக்ஞையினால் தத்தநூர் மூவேந்த வேளாநுடனிருக்க நம் க்ராமத்து துஷ்டர் கெட்டு ஸிஷ்டர் வர்த்தித்திடுவாராக வ்ய[வ]ஸ்தை செய்தோம் உத்தர மே[ரு]ச் சதுர்வேதி மங்கலத்து ஸபையோம்.
ஸ்ரீ முகம் –அரசர் முதலானோரிடம் இருந்து வரும் செய்தி, அரசாணை; ஆக்ஞை – ஆணை, கட்டளை; விவஸ்தை – தீர்மானம், முடிவு, உடன்பாடு; பரிசு – விவரம், வகை; சேரி – பிடாகையில் உள்ள பார்ப்பனச்சேரி; உருவறி – விவரம் அறி; பறிச்சி – எடுத்து; பஞ்சவார – ஐவர் குழு; வரக்காட்ட – அனுப்ப, உத்தரவு; வர்த்தித்திட - பெருகிவளர
விளக்கம்: மதுரையைக் கைப்பற்றி ஆண்ட பராந்தக சோழனின் 12 –ம் ஆட்சி ஆண்டில் (கி.பி. 917) உத்தரமேரூர்ச் சதுர்வேதி மங்கலத்து ஊர் நிர்வாக சபையினர் தந்த அறிக்கை யாதெனில், “இவ்வாண்டு முதல் எங்களூரில் அரசாணைக் கட்டளையினால் தத்தனூர் மூவேந்த வேளாண் முன்னிலையில் வாரியம் ஏற்படுத்தும் செயலாக ஆண்டுக்கு ஒரு முறை ஆண்டுவாரியம், தோட்ட வாரியம், ஏரிவாரியம் ஏற்படுத்த முடிவு செய்த விவரம் என்வென்றால் குடும்பு முப்பதுக்கு 30 குடும்புகளிலும் அந்தந்த குடும்பைச் சேர்ந்தவரே ஒன்றுகூடி தம் குடும்பில் வரி கட்டும் நிலம் கால் (1/4) அளவிற்கு மேல் உடையவராக இருக்கின்ற தன் சொந்த நிலத்தில் வீடு கட்டிக் குடியிப்பவராக இதாவது, வாடகை வீட்டில் இல்லாதவராக இருக்க வேண்டும். (பிராமணர் பிரம்மதேய இறையிலி நிலம் பெற்று வரி கட்டாமலேயே வாழ்க்கை வாழ்ந்தனர் என்ற பொதுவான கருத்தை தகர்த்து தவிடுபொடி ஆக்குகின்றது மூன்றாம் வரியின் இந்த முதல் அடிப்படை விதி. நிலமும் வீடும் வற்புறுத்தப்படுவது ஏன் என்றால் வாரிய உறுப்பினர் கணக்கில் ஏதேனும் மோசடி செய்தால் இவற்றை ஏலத்தில் விற்று மோசடி பணத்தை ஈடுசெய்வதற்காக இருக்கலாம் என்று தோன்றுகின்றது. இந் நடவடிக்கை ஏற்படுத்தும் அச்சத்தால் மோசடியில் ஈடுபடாமல் இருப்பார்).
60 அகவைக்கு மிகாமல் 30 அகவைக்கு மேல் உள்ளவராக இருப்பதோடு வேதக்கல்வி, சாஸ்திரம், பிறப்பு முதல் இறப்பு வரையான உலகியல் சடங்குகளில் வல்லுனர் என்று சொல்லப்படுபவராய் இருக்க வேண்டும். (4 –ம் வரி மூலம் முதுமையின் தளர்ச்சி, நினைவு மறதி ஆகியவற்றை கருத்தில் கொண்டு வயது உச்ச வரம்பு வைக்கப்பட்டதாக உணர முடிகின்றது. இதே போல இக்காலக் கட்சிப் பதவி, ஆட்சிப் பதவி ஆகியவற்றுக்கும் வயது உச்சவரம்பு தேவை எனத் தோன்றுகின்றது. வேதம் காதால் கேட்டு வாயால் பலுக்கப்படுவது. இந்த வேதக் கல்வியை செவிடர், ஊமையர் பெற்றிருக்க முடியாது. அதோடு குறைக்கல்வி உடைய பிராமண சமையல்காரர் போன்றோரும் வாரிய உறுப்பினர் ஆகமுடியாது என்று தெரிகின்றது. பிராமணப் பெண்கள் வேதம் கற்கத் தடை இருப்பதால் வாரியம், சபை போன்றவற்றில் பெண்கள் உறுப்பினர் ஆகமுடியாது என்று தெரிகின்றது. இவ்வூர் குடவோலைத் தேர்தல் பிராமண ஆண்களுக்கான தேர்தல் மட்டுமே எனக் கொள்ளலாம்).
தூயவழியில் பொருளீட்டி ஆன்மத் தூய்மையும் கொண்டவராய் கடந்த மூவாண்டில் எந்த வாரியத்திலும் உறுப்பினராக இல்லாதவராய் இருக்க வேண்டும். அதோடு கடந்த மூவாண்டில் வாரிய உறுப்பினராய் இருந்தவருக்கு நெருங்கிய சொந்தக்காரர் அல்லாதவராய் இருப்பவரை மட்டும் குடவோலைத் தேர்தலுக்கு ஓலையில் பெயர் எழுதி குடத்தில் இட வேண்டும். (5-6 ம் வரியின் இந்த கட்டுப்பாடு வாரியத்தில் வழி வழியாக ஒரே குடும்ப ஆதிக்கத்தை ஒழிக்க விதிக்கப்பட்டது. இந்நாளைய கட்சி அரசியலுக்கு, குடிநாயகத்தின் ஆரோக்கியத்திற்கு மிகவும் தேவைப்படும் இன்றயமையாத விதி இது).
பிடாகைகளில் அமைந்த பார்ப்பனச்சேரிகளின் வழியாகவும் ஓலையில் பெயர் எழுதி உத்தரமேரூரில் அடங்கிய 12 பிடாகைப் பார்ப்பனச் சேரிகளில் இருந்தும் ஒவ்வொரு சேரிக்கும் ஒருவர் பெயர் என்று ஆகுமாறு செய்து பெயரை எழுதிக் குடத்தில் இட வேண்டும். (இராசராச சோழன் காலத்து ஆதித்த கரிகாலன் கொலைத் தொடர்பான உடையார்குடி ஆனந்தீசுவரர் கோவில் கல்வெட்டை இங்கு இதற்கு சான்றாகக் காட்டலாம் “மலையனூரான் ஆன பார்ப்பனச்சேரி ரேவதாச கிரமவித்தனும், இவன் மகனும், இவன்றாய் பெரிய நங்கைச் சாணியும், இம்மூவரிதும் ஆன நிலம் ஸ்ரீ வீரநாராயண சதுர்வேதி மங்கலத்து மிப் பிடாகை தேவமங்கலம்”. இந்த குடவோலைக் கல்வெட்டின் 6 –ம் வரி மூலம் உத்தரமேரூருக்கு 12 பிடாகைகளில் 12 பார்ப்பனச்சேரிகள் இருந்தன என்பது புலனாகின்றது. சமூகப் பிரிவினைக்கு வித்திடும்படியாக பிராமணர்கள் பிடாகைகளில் வாழ்ந்திருக்காமல் சதுர்வேதிமங்கலத்திலே வாழ்ந்து கொண்டு பிடாகைகளில் பிற சாதிமாரை ஒதுக்கித் தள்ளி தாழ்வு ஏற்படுத்தினர் என்ற பேரா. J.S. கிரேவால், சாந்தினி பீ ஆகியோரது பிழைக் கருத்து மீண்டும் இந்த குடவோலைக் கல்வெட்டால் இலவு தெறித்து பஞ்சாய் பறப்பது போல் பறக்கின்றது. பிராமணர் பிடாகைகளில் வாழ்ந்திராவிட்டால் இந்த உத்தரமேரூர் சதுர்வேதி மங்கலத்திற்கு 12 பார்ப்பனச் சேரிகள் எப்படி அமைந்திருக்க முடியும்? ஆக பிராமணர் பிடாகைப் பார்ப்பனச் சேரியில் வாழ்ந்தனர் என்பது இச் சட்டத்தால் உறுதிப்படுகின்றது).
குடத்தில் இட்ட பெயர் ஓலையை விவரமறியாத ஆண் பிள்ளையின் கையால் வாங்கி 12 பேரை ஆண்டுவாரியத்துக்கு பொறுப்பாக்க வேண்டும். அதற்கு முன்பாக தோட்ட வாரியத்திற்கும் மேற்சொன்னபடியே குடவோலையை எடுக்கவித்து 12 பேரை தோட்ட வாரியத்திற்கு பொறுப்பாக்க வேண்டும். குடவோலையால் தேர்வான எஞ்சிய ஆறு பேரையும் ஏரிவாரியம் ஆகிடச் செய்க. இப்படி 30 குடவோலை எடுத்து வாரியத்திற்கு தேர்வானவர்கள் மூன்று துறை வாரியத்தாராக செயற்பட்டுவரவேண்டும். 360 நாள் கழிந்து வாரியம் இல்லாது போன பின் மீண்டும் அமையும் வாரியங்கள் இதே தீர்மான ஓலைப்படியே ஒவ்வொரு குடும்பிற்கும் பெயர்ஓலை எழுதி குடத்தில் இட்டு பின் குடவோலையை எடுத்து வாரியம் ஏற்படுத்த வேண்டும்.
ஏற்கெனவே வாரிய உறுப்பினராய் இருந்தவரின் உறவினர்கள் அதோடு பார்ப்பனச்சேரிகளில் மக்களிடம் நெருக்கம் (அன்னோன்யம்) இல்லாதவர்கள் பெயரை ஓலையில் எழுதி குடத்தில் இடக்கூடாது. (ஒவ்வொரு பார்ப்பனச்சேரியிலும் ஓரிருவருக்கே குடவோலையில் தேர்வாக வாய்ப்பு உள்ளதால் அவர்கள் மற்றவரிடம் நல்லுறவு பேணுபவராய் இருக்க வேண்டும் என்று கருதுவதில் தவறு இல்லை).
ஆண்டு, தோட்டம், ஏரி வாரியங்கள் போலவே பஞ்சவார வாரியத்திற்கும் பொன் வாரியத்திற்கும் இது போல் தனியாக 30 குடும்பிற்கும் 30 பெயர்ஓலையை குடத்தில் இட்டு அதில் ஒரு ஓலையை எடுக்கச் செய்து தேர்வாக வேண்டும். பார்ப்பனச் சேரிகளில் இருந்து ஒருவரைக் குடவோலை மூலம் தேர்வு செய்து பன்னிரண்டு பேரில் ஆறு பேரை பஞ்சவார வாரியத்துக்கும் மற்ற ஆறு பேரை பொன் வாரியத்துக்கும் ஒதுக்க வேண்டும். (பொன் வாரியத்தார்க்கு பொன்னைப் பற்றி அறிந்த பொற்கொல்லரின் அறிவுரை தேவைப்படும் என்பதை இங்கு உணர முடிகின்றது).
ஆண்டு வாரியம் தவிர்த்து பிற வாரியங்களில் ஏற்கெனவே ஒருபோது உறுப்பினராய் இருந்தவர்களை மீண்டும் அதே வாரியங்களில் உறுப்பினராகதவாறு அவர்களுக்கு பெயர்ஓலை எழுதி குடத்தில் இடக் கூடாது. (இதன் மூலம் ஆண்டு வாரியம் என்பது ஒரு முக்கியத்துவம் இல்லாத வாரியம் என்று தெரிகின்றது).
இந்த வகைப்படி இந்தாண்டு முதல் ஞாயிறும் நிலவும் நிலைக்கும் காலம் வரை எப்போதும் குடவோலை முறைப்படியே வாரியம் ஏற்படுத்துவதாக தேவேந்திரன் சக்கரவத்தி ஸ்ரீ வீரநாராயண ஸ்ரீ பராந்தக தேவராகிய பரகேசரி வர்மர் அரசாணை கொடுத்து அனுப்ப அந்த திருக்கட்டளையால் தத்தனூர் மூவேந்த வேளாண் வந்து உடனிருக்க நம் கிராமத்து வாழ் தீயோர் எல்லாம் ஒழிந்து நல்லோர் பெருகி வளர்வதற்காக வகை செய்தோம் உத்தரமேரூர் சதுர்வேதி மங்கலத்து ஊரவையோம்“ என்று முடிகின்றது.
பராந்தகச் சோழனை தேவர்க்கு தலைவனான இந்திரனை நிகர்த்த சக்கரவர்த்தி என்றும் வீர நாராயணன் என்றும் போற்றிடுவதில் இருந்து இது தேவேந்திர குலத்தாரை குறிக்கவில்லை என்று தெளியலாம். இந்த தேவேந்திர சக்கரவத்தி என்ற புகழுரையே பிற்பாடு வந்த வேந்தர்களை குறிக்க திரிபுவன சக்கரவத்தி, சகலலோக சக்கரவத்தி என்றெல்லாம் பட்டங்கள் உருவானது போலும்.
பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள் - தொகுதி 32, பக் 18-20, இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறை வெளியீடு.
செங்கற்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் உத்தரமேரூர் வைகுண்ட பெருமாள் கோவில் மேற்கு சுவரில் உள்ள 18 வரிக் கல்வெட்டு.
1. ஸ்வஸ்திஸ்ரீ மதிரை கொண்ட கோபர கேஸரி வந்மர்க்கு யாண்டு பதினாலாவது நாள் பதின்ஆறு காலியூர் கோட்டத்து தன் கூற்று உத்தரமேருச் சதுர்வ்வேதி மங்கலத்து ஸபையோம். இவ்வாண்டு முதல் எங்களுக்கு பெருமான் அடிகள் எம்பெருமான் ஸ்ரீ வீர நாராயணந் ஸ்ரீ பராந்தக தேவந் ஸ்ரீ பரகேஸரி வந்மருடைய ஸ்ரீ முகம் வரக்காட்ட ஸ்ரீ முகப்படி ஆ
2. ஞஞையினால் சோழ நாட்டுப் புறங்கரம்பை நாட்டு ஸ்ரீ வங்க நகரக் காஞ்சை கொண்டய க்ரமவித்த பட்டநாகிய சோமாசி பெருமாந் இருந்து வாரியமாக ஆட்டொ ருக்காலும் ஸம்வத்ஸர வாரியமும் தோட்ட வாரியமும் ஏரி வாரியமும் இடுவதற்கு வ்யவஸ்தை செத பரிசாவது குடும்பு முப்பதா[ய்] முப்பது குடும்பிலும் அவ்வவ் குடும்பிலா
3. ரே கூடிக் கா நிலத்துக்கு மேல் இறை நிலமுடையான் தன் மனையிலே அகம்மெடுத்துக் கொண்டிருப்பானை எழுபது பிராயத்தின் கீழ் முப்பத்தைந்து பிராயத்தின் மேற்பட்டார் மந்த்ர ப்ராஹ்மணம் வல்லத் ஓதுவியத்தறியவானைக் குட வோலை இடுவிதாகவும் அரைக்கா நிலமே உடைய நாயிலும் ஒரு வேதம் வல்லதாய் நாலு பாஷ்யத்திலும் ஒரு பா
4. ஷ்யம் வக்காணித்தறிவான் அவனையுங் குட வோலை எழுதிப் புக இடுவதாகவும் அவர்களிலும் கார்யத்தில் நிபுணராய் ஆசாரமு டையரானாரனயேய் கொள்விதாகவும் அர்த்த ஸௌஸமும் ஆன்ம ஸௌசமும் உடையராய் மூவாட்டினிப்புறம் வாரியஞ் செய்திலாத்தாரை கொள்வதாகவும் எப்பேர்ப்பட்ட வாரியங்களும் செது கணக்குக் காட்டாதே இருந்தாரையும் இவர்களுக்குச் சிற்றவைப் பேர் அவை ம
5. க்களையும், இவர்களுக்கு அத்தை மாமன் மக்களையும் இவர்களுக்குத் தாயோடு உடப் பிறந்தானையும் இவர்கள் தமப்பனோடுடப் பிறந்தானையும் தன்னோடுடப் பிறந்தானையும் இவர்களுக்குப் பிள்ளை குடுத்த மாமானையும் இவர்கள் ப்ராஹ்மணியோடப் பிறந்தானையும் தன்னோடுடப் பிறன்தானை வேட்டானையும் உடப் பிறன்தான் மக்களையும் தன் மகளை வேட்ட மருமகனையும் தன் தமப்பனையும்
6. தன் மகனை[யும்] ஆக இச்சுட்ட.....பந்துக்களையும் குடவோலை எழுதிப்புக இடப்பெறாததாராகவும், அகம்யாகமனத்திலும் மகா பாதகங்களில் முன் படைந்த நாலு மஹா பாதகத்திலும் மெழுத்துப் பட்டாரையும் இவர்களுக்கும் முந் சுட்டப்பட்ட இத்தனை பந்துக்களையும் குடவோலை எழுதிப்புக இடப்பெறாதா[ரா]கவும் ஸம்ஸர்க்க[ல]திகரை ப்ராயசித்தஞ் செய்யுமளவும்
7. குடவோலை இடாததாகவும்....தியும் ஸாஹஸிய ராயிருரைப்பாரையும் குடவோலை எழுதிப் புகவிடப் பெறாதாராகவும் பரத்ரவ்யம் அபஹரித் தானையும் குடவோலை எழுதிப் புகவிடப் பெறாதாராகவும் எப்பேற்பட்ட கையூட்டுங் கொண்டான் க்ரத ப்ராயஸ் சித்தஞ் செய்து ஸுத்தரானானையும் அவ்வவர் ப்ராணாந்திகம்
8. வாரியத்துக்கு குடவோலை யெழுதிப் புகவிடப் பெறாததாகவும் .... பாதகம்(ஞ்) செய்து ப்ராயச் சித்தஞ் செய்து ஸுத்தரானானையும் க்ராம கண்டகராய் ப்ராய[ச்சி]த்த(ம்) செய்து ஸுத்தரானாரையும் ஆக அகமியாங்கமஞ் செய்து ப்ராயஸ்சித்தஞ் செய்து சுத்தரானாரையும் ஆக இச்சுட்டப்பட்ட அனைய்வரையும் ப்ராணாந்திகம் வாரியத்துக்குக் குடவோலை எழுதிப்புகவிடப் பெறாததாக
9. வும் ஆக இச்சுட்டப்பட்ட இத்தனைய் பேரையும் நீக்கி இம்முப்பது குடும்பிலும் குடவோலைக்குப் பேர் தீட்டி இப்பன்னிரண்டு சேரியிலுமாக இக்குடும்பும் வெவ்வேறேய் வாயோலை பூட்டி முப்பது குடும்பும் வெவ்வேறே கட்டிக் குடம் புக இடுவதாகவும் குடவோலை பறிக்கும் போது மஹாஸபைத் திருவடியாரை ஸபால விருத்தம் நிரம்பக் கூட்டிக் கொண்டு அன்றுள்ளூரில் இருந்த நம்பிமார் ஒருவரையும் ஒழியா
10. மே மஹா சபையிலே உள்மண்டகத்தி லேய் இருத்திக் கொண்டு அந்நம்பிமார் நடுவேய் அக்குடத்தை நம்பிமாரில் விருத்தராய் இருப்பா (ர்)னொரு நம்பி மேல் நோக்கி எல்லா ஜனமுங் காணுமாற்றா(ல்)லெடுத்துக் கொண்டு நிற்(க்)க பகலேய்ந்த்ரமறியாதா(ன்)னொரு பாலனைக் கொண்டு ஒரு குடும்பு வாங்கி(ய) மற்றொரு குடத்துகேய் புகவிட்டு குலைத்து அக்குடத்தி(ல்)லோரோலை வாங்கி மத்யஸ்தன் கையிலே
11. குடுப்பதாகவும் அக்குடுத்த வோலை மத்தியஸ் வாங்கும் போது அஞ்சு விரலும் அகல வைத்து உள்ளங் கையிலே ஏற்றுக் கொள்வானா கவும் அவ்வெற்று வாங்கின வோலை வாஸிப்பானாகவும் வாஸித்த அவ்வோலை அங்குள்ள மண்டகத்திருந்த நம்பிமார் எல்லாரும் வாசிப்பாராகவும் வாஸித்த அப்பேர் தீட்டுவதாகவும் இப்பரிஸே முப்பது குடும்பிலும் ஒரோ பேர் கொள்வதாகவும் இக்கொண்ட முப்பது பேரிலும் தோட்ட வாரியமும் ஏரி வாரியமும் செய்தாரையும் விஜ்யவ்ரத்தரையும்
12. வயோ வித்தர்களையும் ஸம்வத்ஸர வாரியரையும் கொள்வதாகவும் மிக்கு நின்றாரு(ப்) பன்னிருவரைத் தோட்ட வாரியங் கொள்விதாகவும் நின்ற அறுவரையும்(ம்) ஏரி வாரியமாகக் கொள்வதாகவும். இவ்வாரியம் செய்கின்ற மூன்று திறத்து வாரியப் பெருமக்களும் முன் நூற்று அறுபது நாளும் நிரம்பச் செய்து ஒழிவதாகவும் வாரியஞ் செய்யா நின்றாரை அபராதங்
13. கண்டபோது அவனை யொழித்துவதாகவும். இவ[ர்]கள் ஒழிந்த அனந்தர(ம்)மிடும் வாரியங்களும் ப[ன்னிரண்]டு சேரியிலும் தந்ம க்ருத்தயங் கடைக் காணும் வாரியரே மத்யஸ்தரைக் கொண்டு குறி கூட்டிக் குடுப்பாராகவும் இவ்வியவஸ்தை யோலைப்படியேய்...க்குக் குடவோலைய் பறித்துக் கொண்டே வாரியம் இடுவதாகவும் பஞ்சவார [வாரி]யத்துக்கும் பொன் வாரியத்து.
14. க்கு முப்[ப](த்)துக் குடும்பி(யி)லும் குடவோலைக்கு பேர் தீட்டி முப்பது வா[யோ]லை கட்டும் புக இட்டு முப்பது குடவோலை பறித்து முப்பதிலும் பன்நிரண்டு பேர் பறித்துக் கொள்வதாகவும் பறித்த பன்நிரண்டிலும் பேர் அறுவர் பொன் வாரியம் அறுவர் பஞ்ச வாரியமும் ஆவநவாகவும். பிற்றை ஆண்டும் இவாரியங்கள் குடவோலை பறிக்கும் போது இவ்வாரியங்களுக்கு முன்னம் செ
15. ய்த குடும்பன்றி[க்]கே நின்ற குடும்பிலே கரை பறித்துக் கொளுவதாகவும் கழுதை ஏறினாரையும் கூடலேகை செய்தானையும் குடவோலை எழுதிப்புக இடப் பெறாததாகவும் மத்யஸ்தரும் அர்த்த ஸோஸம் முடையாரே கணக்கெழுது வானாகவும் கணக்கெழுதினான் கணக்குப் பெருங்குறிப் பெருமக்களோடு கூடக் கணக்குக் காட்டி ஸுத்தந் ஆச்சிதின் பின்நன்றி மற்றுக் கண
16. க்குப் புகப் பெறாதானாகவும் தான் எழுதின கணக்குத் தானே காட்டுவானாகவும் மற்றுக் கணக்கர் புக்கு ஒடுக்கப் பெறாதார் ஆகவும் இப்பரிசை இவ்வாண்டு முதல் சந்த்ராதித்தவற் என்றும் குடவோலை வாரியமே இடுவதாக தேவேந்திர சக்ரவர்த்தி, பண்டிதவத்ஸலந், குஞ்சர மல்லன், சூரசூளாமணி, கல்பகஸரிதை ஸ்ரீ பரகேஸரிபந்மர்(க) ஸ்ரீ முகமருளிச் செய்து வரக்காட்ட ஸ்ரீ ஆக்ஞை ஆ
17. ல் சோழ நாட்டுப் புறங்கரம்பை நாட்டு ஸ்ரீ வங்க நகர்க் காஞ்சை கொண்டய க்ரமவித்த பட்ட[ன்]னாகிய சோமாசி பெருமானுடன் இருந்து இப்பரிசு செய்விக்க நம் க்ராமத்துக்கு அப்யதயமாக துஷ்டர் கெட்டு விஸிஷ்டர் வர்த்திப்பதாக வ்யவஸ்தை செய்தோம் உத்தரமேரு சதுர்வ்வேதி மங்கலத்துச் ஸபையோம் இப்பரிசு குறியுள் இருந்து பெருமக்கள் பணிக்கு வ்யவஸ்தை எழுதினேன் மத்யஸ்தந்
18. காட்டிப் போத்தன் சிவக்குறி இராஜமல்ல மங்கலப்பிரியநேன்.
பெருமானடிகள் – வேந்தர்; செது – தொண்டாற்றி, செய்து; பாஷ்யம் – உரை, விளக்கம்; வக்காணித்தல் – விரித்துரைத்தல்; அ(வ்)வை – அம்மை, தாய்; வேட்டான் – மனைவியின் தாய் தந்தைக்கு உடன்பிறந்தார் வழிப் பிள்ளைகள்; இடப்பெறாததார் – பெயர் சேர்க்கக் கூடாதவர்; ப்ராஹ்மணி – பிராமணர் மனைவி; ப்ராணாந்திகம் – இறுதி மூச்சுள்ள வரையும்; கண்டர் – தீமை செய்தவர்,கேடர்; விருத்தர் – மூத்த வயதினர்; குடும்பு வாங்கு – ஓலைஎடுத்துக் கொடுக்க வாங்குதல், picking process; கரைபறி – பங்கெடு; கூடலேகை – பொய்க் கணக்கு; பெருங்குறி பெருமக்கள் – வாரியங்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் உள்ள மேலோர் (lords); மத்யஸ்தன் – நடுநிலையாளன், கிராமத் தலைவன்; ஒடுக்கு – பண்டாரத்தில் சேர்; குஞ்சர மல்லன் – யானைப் படைத் தலைவன்; குறியுள் – கூட்டத்தில்.
விளக்கம்: இது மேற்கண்ட முதற் கல்வெட்டிற்கு இரண்டு ஆண்டுகள் கழித்து சில திருத்தங்களையும் (amendment) கட்டுப்பாடுகளையும் கூடுதலாகக் கொண்டு குழப்பமற தெளிய விளக்கி வெட்டப்பட்ட இருண்டாம் கல்வெட்டாகும்.
(1-3) மதுரையைக் கைப்பற்றி ஆண்ட பராந்தக சோழனின் 14 –ம் ஆட்சி ஆண்டில் (கி.பி. 919) பதினாறாம் நாள் காலியூர் கோட்டத்துப் பிரிவாகிய உத்தரமேரூர் சதுர்வேதி மங்கலத்து ஊரவையோம். இந்த ஆண்டு முதல் எங்களுக்கு வேந்தரான வீர நாராயணன், பராந்தக தேவன், பரகேசரி வர்மருடைய அரசாணை அனுப்பப்பட்டு அந்த அரசாணையின் கட்டளையால் சோழ நாட்டு புறங்கரம்பை நாட்டு ஸ்ரீ வங்கநகர காஞ்சை கொண்டய கிரமவித்த பட்டனாகிய சோமாசி பெருமான் முன்னிலை இருந்து வாரியம் ஏற்படுத்துவதற்கு ஆண்டுக்கு ஒருமுறை ஆண்டு வாரியமும், தோட்ட வாரியமும், ஏரிவாரியமும் ஏற்படுத்த தீர்மானம் செய்த வகை யாதெனில், “குடும்பு முப்பதாக அம்முப்பது குடும்பிலும் அந்தந்த குடும்பினரே ஒன்றுகூடி வரி கட்டும் நிலம் கால் (1/4) அளவிற்கு மேல் உடையவராயும், தன் சொந்த நிலத்தில் வீடுகட்டி வாழ்பவராயும், எழுபது அகவைக்கு மிகாமலும் 30 அகவைக்கு மேலும் உள்ளவராயும், வைதிக மந்திர வினை முறையில் (மந்திர பிராமணம்) வல்ல, வேதம் ஓதுவிக்கத் தெரிந்தவர் பெயர்ஓலையை குடத்தில் இடலாம். (முதற் கல்வெட்டில் 60 வயது என்ற வரம்பை இதில் 70 ஆக உயர்த்தியது ஒரு திருத்தம், சலுகை எனலாம்).
ஒரு வேதத்திலேனும் வல்லவனாய், நான்கு உரையில் (பாஷ்யம்) ஒரு உரையை விரித்து விளக்குபவனாய் இருந்தால் அவனிடம் வரி கட்டும் நிலம் அரைக்கால் (1/8) அளவிற்கு இருந்தாலே போதும் அவன் பெயர் ஓலையை குடத்தில் இடலாம் என்பது சலுகை (exempt). அவருள்ளும் பிறப்பு முதல் இறப்பு வரையான உலகியல் சடங்கில் வல்லுநனாயும், மத ஒழுக்கத்தை கைக்கொள்பவனாயும் இருப்பவனையும் ஏற்கலாம். தூய வழியில் பொருளீட்டி ஆன்மத் தூய்மை உள்ளவனையும் ஏற்கலாம். கடந்த மூன்றாண்டுகளில் வாரிய உறுப்பினனாய் இல்லானையும் ஏற்கலாம்.
முன்பு எந்த வாரியத்தில் தொண்டு செய்திருந்தாலும் கணக்கு காட்டாமல் இருந்தவனையும், இவனுக்கு சின்னம்மை பெரியம்மை பிள்ளைகளையும், அத்தை மாமன் பிள்ளைகளையும், இவன் தாயுடன் பிறந்தானையும், தந்தையுடன் பிறந்தானையும், இவனுடன் பிறந்தானையும், இவனுடைய மாமனார் மைத்துனரையும், தன் உடன்பிறந்தார் மனைவியின் தாய் தந்தைக்கு உடன்பிறந்தார் வழிவந்த பிள்ளைகளையும் (வேட்டான்), இவன் உடன்பிறந்தார் பிள்ளைகளையும், இவன் மகளுடைய கணவனின் தாய் தந்தைக்கு உடன்பிறந்திட்ட பெரியப்பா, சித்தப்பா, அத்தை, மாமா, பெரியம்மா, சின்னம்மா பிள்ளைகளான வேட்ட மருமகன்களையும், இவன் தந்தையையும், இவன் பிள்ளைகளையும் ஆக இங்கு சுட்டப்பட்ட இவனது உறவினர்களின் பெயர்ஓலையை குடத்தில் இடக்கூடாது. (முதற் கல்வெட்டில் உறவினர்கள் இன்னின்னார் என்று இப்படி விரிவாக விளக்கவில்லை).
ஆகமங்களுக்கு முரணானவரையும் பெரும் பாதகங்கள் செய்தவரையும் முன்னர் சொன்னது போன்றே இவர்களது இத்தனை உறவினர் பெயர்ஓலைகளை குடத்தில் இடக்கூடாது. கொள்கையை மீறினவர் அதற்கு கழுவாய் தேடும் வரையும் அவர் பெயர்ஓலையை குடத்தில் இடக் கூடாது. கொலைக் குற்றத்திற்கு தூண்டுபவர், கொலை செய்பவர் பெயர் ஓலையை குடத்தில் இடக் கூடாது. பிறர் பொருளைக் கவர்ந்தவன் பெயர் ஓலையை குடத்தில் இடக் கூடாது. எத்தகைய கையூட்டு பெற்றவரும் அதற்கான கழுவாயைச் செய்து தூயராக ஆன பின்னரும் அத்தகையோர் இறுதி மூச்சுள்ள வரை அவர் பெயர்ஓலையை குடத்தில் இடக்கூடாது என்று வாழ்நாள் தடை போடப்படுகின்றது.
பாதகம் செய்து கழுவாயால் தூயரானவரையும், கிராமத்திற்கு கேடு செய்து கழுவாயால் தூயரானவரையும், கொள்கை முரண்பட்டு கழுவாயால் தூயரானவரையும் ஆக இப்படி சுட்டப்பட்ட அனைவரையும் இறுதி மூச்சுள்ள வரையும் வாரியத்திற்கு உறுப்பினர் ஆகாவண்ணம் குடத்தில் பெயர் ஓலையை இடக் கூடாது. இப்படி மேலே சுட்டப்பட்ட சுற்றாத்தார் இத்தனை பேரையும் நீக்கி இந்த முப்பது குடும்பிலும் குடவோலைக்கு பெயர் எழுதி, இப் பன்னிரண்டு பார்ப்பனச் சேரிக்கும் இக்குடும்பிற்கும் தனித்தனியே வாயோலை கட்டி பெயர்ஓலையை குடத்தில் இட வேண்டும். குடத்தில் உள்ள பெயர்ஓலைகளில் ஒன்றினை மட்டும் எடுக்கும் போது சிறுவர் கூட்டம் நிரம்புமாறு மகாசபைத் திருவடியாரைக் கூட்டிக் கொண்டு வர வேண்டும். அன்று ஊரில் உள்ள பூசக பிராமணரில் ஒருவரையும் விட்டுவிடாது மகாசபையின் உள் மண்டபத்தில் உட்கார வைத்து அப்பூசக பிராமணர் நடுவே அக்குடத்தை அப் பூசக பிராமணரில் வயது முதிர்ந்த ஒருவர் எல்லா மக்களும் காணற் பொருட்டு கையில் ஏந்தி நிற்க விவரமறியாத சிறுவனைக் கொண்டு குடத்தில் இருந்து பெயரோலையை எடுக்கவித்து வாங்கிய பின் இன்னொரு குடத்தில் கையை இட்டு மேலும் கீழுமாய்ப் புரளும்படி கலக்கி அக்குடத்தில் இருந்து ஒரு பெயரோலையை மட்டும் வாங்கி நடுநிலையாளன் கையில் கொடுக்க வேண்டும். நடுநிலையாளன் பெயர்ஓலையை கையில் வாங்கும் போது ஐந்து விரலையும் அகல விரித்து உள்ளங்கையிலே அதை வாங்க வேண்டும். அவ்வாறு வாங்கிய பெயர்ஓலையை படிக்க வேண்டும். படித்த அந்த பெயர்ஓலையை மண்டபத்தில் உள்ள பூசக பிராமணர் அனைவரும் படித்துக் காட்ட வேண்டும். படிக்கப்பட்ட அப்பெயரை தனியே வேறு ஓலையில் எழுதிக் கொள்ள வேண்டும். இந்த ஏற்பாட்டின் படியே முப்பது குடும்பிலும் எடுத்த ஒரேஒரு பெயரை மட்டும் வேறு ஓலையில் எழுதிக் கொள்ள வேண்டும்.
இப்படி பெயர் எழுதப்பட்ட முப்பது பேரில் இருந்து தோட்ட வாரியம், ஏரி வாரியம் செய்ய வேண்டும். விஜயவ்ருத்தரை, அறிவுசால் பெரியோர் (வயோ வ்ருத்தர்) 12 பேரை ஆண்டு வாரியத்துக்கு பொறுப்பாக்க வேண்டும். இன்னும் உள்ள 12 பேரை தோட்ட வாரியத்துக்கு பொறுப்பாக்க வேண்டும். எஞ்சி நின்ற அறுவரை ஏரிவாரியத்துக்கு பொறுப்பாக்க வேண்டும்.
இப்படி வாரியம் செய்கின்ற மூன்று திறத்து வாரியத்தாரும் 360 நாள் தம் பொறுப்பை ஆற்றி நீங்க வேண்டும். வாரியக் கடமைகளை ஆற்றாத குற்றங் காணும் போது அவனை நீங்க வேண்டும். இவர்களைத் தவிர்த்து பின்னர் ஏற்படுத்தப்படும் வாரியங்களுக்கு 12 பார்ப்பனச் சேரிகளிலும் அறச்செயலை (தர்ம க்ருத்ய) கடைபிடிக்கும் வாரியரே நடுநிலையாளரை வைத்து கூட்டம் கூட்ட வேண்டும். இந்த தீர்மான ஓலைப்படியே பார்ப்பனச்சேரிக்கு பெயர்ஓலை எடுத்து வாரியம் ஏற்படுத்த வேண்டும்.
பஞ்சவார வாரியத்துக்கும் பொன் வாரியத்துக்கும் முப்பது குடும்பிலும் மீண்டும் குடவோலைக்குப் பெயர்ஓலை எழுதி குடத்தில் இட்டு முப்பதிலும் பெயர்ஓலை எடுத்து எழுதிக் கொள்ள வேண்டும். முப்பதிலும் வாயோலை கட்டி பெயர்ஓலைகளை இட்டு முப்பது குடவோலைகள் எடுக்க வேண்டும். முப்பதில் பன்னிரண்டு பேரை எடுத்து பன்னிரண்டில் அறுவர் பொன் வாரியராகவும் அறுவர் பஞ்ச வாரியராகவும் ஆகட்டும்.
(14-15 வரி) அடுத்த ஆண்டுகளில் இவ்வாரியங்களுக்காக குடவோலை எடுக்கும் போது இவ்வாரியங்களுக்கு முன்னர் தொண்டாற்றிய குடும்புகளைச் சேர்ந்தோரைத் தவிர்ந்து எஞ்சிய குடும்புகளில் இருந்து பங்கெடுக்கச் செய்யவேண்டும் என்பதால் ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பும் பெயர்ஓலை இட முடியாமல் தடை செய்யப்படுகின்றது.
கழுதை ஏற்ற தண்டனை பெற்றவனும், பொய்க் கணக்கு எழுதியவனும் குடத்தில் பெயர்ஓலை இடப்படாதவர் ஆகின்றனர். நடுநிலையாளர் தூயநெறியில் பொருளீட்டுவாரை மட்டுமே கணக்கு எழுத அமர்த்த வேண்டும். ஏற்கெனவே கணக்கு எழுதியவனாக இருந்தால் கணக்கு சார்ந்த பெருங்குறி பெருமக்களிடம் கணக்கு காட்டி குற்றம் கரையற்றவன் என மெய்ப்பிக்கப்படும் வரை மற்ற கணக்கு எழுதும் வேலையை செய்யக்கூடாது. அவன் தான் எழுதிய கணக்கை தானே காட்ட வேண்டும் வேறு கணக்கன் வந்து பார்த்த பின்பு கருவூலத்தில் பணம் செலுத்துபவனாக இருத்தல் கூடாது.
இந்த ஏற்பாட்டை இந்த ஆண்டு முதல் நிலவும் ஞாயிறும் நிலைக்கும் காலம் வரை என்றென்றைக்கும் குடவோலை வாயிலாகவே வாரியம் ஏற்படுத்த வேண்டும் என்று பராந்தகச் சோழன் அரசாணை இட்டு அனுப்பிய கட்டளையால் சோழ நாட்டுப் புறங்கரம்பை நாட்டு ஸ்ரீ வங்க நகர்க் காஞ்சை கொண்டய கிரமவித்த பட்டனாகிய சோமாசி பெருமான் உடன் இருந்து இத்தீர்மானத்தை செய்விக்க நம் கிராமத்துக்கு நலம் உண்டாக தீயோர் ஒழிந்து சான்றோர் வளர்ந்தோங்கும் வண்ணம் தீர்மானம் செய்துவித்தோம் உத்தரமேரூர் சதுர்வேதி மங்கலத்தின் ஊரவையோம். இந்த ஏற்பாட்டுக் கூட்டத்தில் பங்குபெற்று பெருமக்கள் பணிக்காக இத் தீர்மானத்தை எழுதினேன் நடுநிலையாளனான காட்டிப் போத்தன் சிவக்குறி இராசமல்ல மங்கலப் பிரியனேன்.”
பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள் - தொகுதி 32, பக். 20 - 23, இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறை வெளியீடு.
திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வெலி வட்டம் மானுர் அம்பலவாணர் கோவில் தூண் ஒன்றில் உள்ள 64 வரி வட்டெழுத்துக் கல்வெட்டு.
முதல் பக்கம் (1-21) : ஸ்வஸ்திஸ்ரீ கோ மாறஞ் ச / டையற்க்கு யாண்டு / முப்பத்தஞ்சு / நாள் நான்னூற்றறு பத்து ஒன்பது இ / ந் நாளால் களக்குடி / நாட்டு ப்ரஹ்மதேயம் மான / நிலை நல் ஊர் மஹாஸ / பையோம் பெருங்குறி (சா) / ற்றி ஸ்ரீ கோவர்த்தனத்துக் கூ / டி இருந்து இவ்வூர் ம / ஹா ஸபையோம் குடி மன்றா / டுவதனுக்கு செய்த வ்யவஸ்தை / யாவது இவ்வூர் பங்குடை / யார் மக்கள் ஸபையில் மன் / றாடுகிறது ஒரு தர்மம் உட்ப / ட மந்திர ப்ராஹ்மணம் வல்லார் ஸு / வ்ருத்தராய் இருப்பாரே ஒரு பங் / கினுக்கு ஒருத்தரே ஸபையில் / மன்றாடுவதாகவும் விலையும் / [ப்ரதிக்ரஹ]மும் ஸ்த்ரீதந[மு முடை] /
இரண்டாம் பக்கம் (22-42): யார் ஒரு தன்ம முட்ப / ட மந்திர ப்ராஹ்மணம் / வல்லராய் ஸுவ்ருத்தராய் / இருப்பாரே மன்றாடு / வதாகவும் இதன் மேற் / பட்டது விலையாலு / ம் ப்ரதிக்ரஹத்தாலும் ஸ்த்ரீ / தநத்தாலும் ஸ்ராவணை / புகுவார் முழு சிராவ / ணை அன்றி கால் சிராவ / ணையும் அரைச் சிராவணை / யும் முக்கால் சிராவணையு / ம் புகவும் பணிக்கவு / ம் பெறாதாராகவும் ப / ங்கு விலைக்கு கொள்வ் / வார் ஒரு வேதம் எல்லா / இடமும் ஸ்பரி சிஷ்ட / ம் பரிக்ஷை தந்தார்க்கே / ஸ்ராவணை பணிப்பதா / கவும் இப்பரிசு அன் / றி ஸ்ராவணை புக்காரையும் /
மூன்றாம் பக்கம் (43-64): பின்னையும் இக் கச் / சத்தில் பட்ட பரி / சே மன்றாடுவதாக(வ்) / வும் இப்பரிசினா / ல் முழுச் சிராவணை / இல்லாதாரை எவ்வகை / ப்பட்ட வாரியமு / ம் ஏற்றப் பெறாதாராகவு / ம் இப்பரிசு செய்கின் / றாரும் அன்றென்று குத்து / க்கால் செய்யப்பெறாதா / ராகவும் குத்துக்கால் செய் / வாரையும் குத்துக்கால் செ / ய்வார்க்கு உவோகம் நி / ப்பாரையும் வெவ்வேற்று / வகை ஐய்யஞ்சு காசு தண் / டங் கொண்டு பின்னையும் / இக்கச்சத்தில் பட்ட பரி / சே செய்வ்வதாகவும் இ / ப்பரிசு பணித்து வ்யவ / ஸ்தை செய்தோம் மஹாஸபை / யோம் மஹாஸபையார் ப (கல்வெட்டு விடுபட்டுள்ளது)
பெருங்குறி – பிராமண ஊர் சபைக் கூட்டம்; சாற்றி – அறிவித்து கோவர்த்தனத்து – ஊரில் பால் கரக்க பசு கட்டும் இடமா? ; மன்றாடு – ஊர்ச்சபை நடவடிக்கைகளில் கலந்து கொள்வது; பங்கு உடையார் - நில உரிமை உள்ளவர்; பங்கு – நெல்லையில் பண்டு சீட்டு போட்டு பெற்ற நில ஒதுக்கீடு முறை; சிராவணை – ஆவணம், பங்கு; பணிக்க – சொல் ஏற்பு, கருத்து கூறு; கச்சம் – தீர்மானம்; குத்துக்கால் – தடை; உவோகம் – ஏற்பு, ஆமெனல், ஆதரவு; பணித்து – முன்மொழிந்து, கட்டளையிட்டு.
விளக்கம்: இது 9 –ம் நூற்றாண்டில் பாண்டிய நாட்டை ஆண்ட கோ மாறன் சடையனின் 35 ஆம் ஆட்சி ஆண்டு நாள் 469 இல் வெட்டப்பட்ட கல்வெட்டு. இற்றை நாளில் களக்குடி நாட்டின் பிரம்மதேயமான மானநிலை நல்லூர் பெருஞ் சபையோர் சபைக் கூட்டம் கூடும் என அறிவித்து ஊர்க் கோவர்த்தனத்தில் ஒன்றுகூடி அமர்ந்து இவ்வூர் பெருஞ்சபையோர் ஊர்ச் சபை நடவடிக்கைகளில் பங்கெடுப்பதற்கான தீர்மானம் செய்தது யாதெனில் “இவ்வூரில் பங்கு வழி நில உடைமை உள்ளவர் மக்கள் சபை நடவடிக்கையில் கலந்து கொள்வதற்கு ஒரு தர்மம் (அறம்) உட்பட வைதிக மந்திர வினை முறையில் (மந்திர பிராமணம்) வல்லவராய், நன்னடத்தை உள்ளவராய் இருப்பவர் மட்டுமே அதிலும் ஒரு நில உரிமைப் பங்கிற்கு ஒருத்தர் மட்டுமே சபை நடவடிக்கையில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார். இந்த நில உரிமைப் பங்கை விலைகொடுத்தோ, பரிசாகவோ அல்லது மணவழி சீதனமாகவோ பெற்றிருந்தாலும் ஒரு தர்மம் (அறம்) உட்பட வைதிக மந்திர வினை முறையில் (மந்திர பிராமணம்) வல்லவராய், நன்னடத்தை உள்ளவராய் இருப்பவர் மட்டுமே சபை நடவடிக்கையில் கலந்து கொள்ளலாம். இனிமேலும் எவராவது நில உரிமைப் பங்கை விலை கொடுத்தோ, பரிசாகவோ அல்லது மணவழி சீதனமாகவோ பெற்றிருந்தாலும் அது முழுப் பங்கு உரிமை நிலமாக இருந்தாலன்றி கால் பங்கு, அரைப் பங்கு, முக்காற் பங்கு உரிமைக்கெல்லாம் சபை நடவடிக்கையில் பங்கு பெறவும் முடியாது அதில் கருத்து கூறவும் முடியாது. அப்படி முழு நில உரிமைப் பங்கை விலைக்கு வாங்கியிருந்தாலும் ஒரு வேதத்தையாவது எல்லா இடத்திலும் பிழையற ஓதி தேர்ந்தால் மட்டுமே அவரது நில உரிமைப் பங்கு சபை உறுப்புக்கு செல்லுபடியாகும்.
மேற்கண்ட விவரப்படி அல்லாத நில உரிமைப் பங்கு உள்ளவர் சபை நடவடிக்கையில் கலந்து கொண்ட பின்னாலும் இந்த தீர்மானத்தின் உள்ள விவரப்படியே சபை நடவடிக்கைகளில் கலந்து கொள்ளலாம். இந்த விவரத்தின்படி முழு நில உரிமைப் பங்கு இல்லாதவரை எவ்வகையான வாரியத்திற்கும் உறுப்பினர் ஆக்கக் கூடாது. இந்த விவரத்தை ஏற்கின்றவரும் இது கூடாது என்று சொல்லித் தடை செய்யாதிருக்க வேண்டும். அதோடு இதற்கு தடை ஏற்படுத்துபவரிடம், தடை ஏற்படுத்துபவருக்கு ஊக்கமாய் இருப்பவரிடம் இருந்து 5x5 = 25 காசு தண்டம் (fine) வாங்க வேண்டும். அப்படி தண்டம் கட்டிய பின்னும் அவர்கள் இந்த தீர்மானத்தில் கண்ட விவரப்படியே தான் நடக்க வேண்டும். இந்த விவரத்தை கட்டளையிட்டு தீர்மானம் ஆக்கினோம் ஊர்ப் பெருஞ்சபையோம். _ _ _. “
மேற்கண்ட கல்வெட்டில் குடும்புக் குடவோலை பற்றி குறிப்பு ஏதும் இல்லை. உறுப்பினருக்கான தகுதிகள் மட்டுமே இதில் கூறப்பட்டுள்ளன.
பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள் - தொகுதி 14, பக் 29, இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறை வெளியீடு.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.