கைக்கோளர் என்போர் இந்நாளில் செங்குந்த முதலியார் என அறியப்படுகின்றனர். அண்மைக் காலம் வரை தறி நெசவு இவர்க்கு தொழிலாய் இருந்துள்ளது. ஆனால் பல்லவர் ஏற்படுத்திய இந்த சாதிமார் ஒரு படைக்குடி ஆவர். கல்வெட்டில் இவர்கள் பட்டடைக்குடி என தெளிவாக குறிக்கப்பட்டுள்ளது. ‘குந்தம்’ என்பதற்கு வேல் என்ற பொருளே இதற்கு சான்று. கள்ளர் படை, மறவர் படை என்பது போல 12 ஆம் நூற்றாண்டு வரை கைக்கோளப் படை என்று தனியாகவே இருந்துள்ளது. இப்படி போர்க்குடிகளாக இருந்த இவர்கள் சைவ சமய எழுச்சியின் காரணமாக அதன்பால் மிக்க ஈடுபாடு கொண்டதனாலும், இவர்கள் நம்பி இருந்த பல்லவர்கள் வேந்தர் என்ற நிலையும் மன்னவர் என்ற நிலையும் இழந்து அரையர்களாக, கிழார்களாக சிதறுண்டு போனதன் காரணமாகவும் போர்த் தொழிலை விட்டு வணிகத்தைப் பிழைப்பாக மேற்கொண்டனர். இதாவது, நெய்த ஆடைகளை விற்பதைத் தொழிலாக மேற்கொண்டனர். ஆனாலும் கைக்கோளர் சிலர் மட்டும் பல்வேறு ஆட்சியாளரிடம் படைத்தலைவர்களாகவும் படைஆள்களாகவும் தொடர்ந்து வேலை செய்தனர். இப்படி தொழில் மாறி பிழைப்பு மேற்கொண்டாலும் அதிக வரி, பிற மொழித் துணி வணிகரின், சிறப்பாக சௌராட்டிரர், பத்மசாலி ஆகியோரின் தொழிற் போட்டி ஆகியன இவர்களை வறுமையின் பிடிக்கு தள்ளியது. இவற்றுக்கும் சான்று கல்வெட்டுகள் உண்டு. கைக்கோளரைப் போலவே சேனைக்கடையார், செட்டியார், வாணியர் போன்ற போர்க்குடிகளும் போர்த் தொழிலை விட்டுவிட்டு வணிகத்தை மேற்கொண்டனர். கைக்கோளர் படைத்தொழிலை விட்டதுமுதல் பல்லவர் ஆட்சி போலவே சோழர் ஆட்சியும் விரைந்து சரிந்தது. அதன் பின் வடக்கே இருந்து இசுலாமியப் படையெடுப்பு, விசயநகர படையெடுப்பு ஆகியவற்றால் தமிழராட்சி அறவே தொலைந்து போனது. அரையர்கள் பலரும் பல்லவர் வழிவந்தவர் என்ற வகையில் கூட்டரசை (confederacy) அமைத்திருக்க முடியும். ஆனால் படைஆளுக்கு எங்கே போவது? பட்டடைக்குடி சாதிகள் படைத்தொழிலை விட்டதனால் அதற்கும் வழி இல்லாமல் போனது. உண்மையில், வட தமிழ்நாட்டில் தமிழர் படை சுருங்கிப் போயிருந்தது. சம்புவராயர் ஆட்சியும் குறுகிய காலத்தில் வீழ்ந்ததற்கு தம் படையை மேலும் பெருக்க முடியாமல் போனதே முதற் காரணம் ஆகும்.
ஒரு தொழிலை செய்யும் ஒரு கூட்டத்து மக்கள் அத்தொழிலை விடுத்தால் மாற்று ஏற்பாடாக வேறு ஒரு கூட்டத்தாரை அத் தொழிலில் ஈடுபடுத்தி சமூகத்தில் தொழில் சம நிலையை பேண வேண்டும். ஒரே தொழிலில் அதிகம் பேர் ஈடுபட்டாலோ அல்லது ஒரு தொழிலில் தேவைப்படும் பணிஆள்களில் பற்றாக்குறை ஏற்பட்டாலோ தொழிற் சமநிலை இழப்பு ஏற்படும். அதனால் தான் பண்டு ஒரு தொழில் செய்தவர் மாற்று தொழில் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டதில்லை. அதனால் தொழில் அடிப்படையில் சாதிகள் உண்டாயின என்பதுஉண்மை தான். வேந்தர் அனுமதித்தால் சில தனிஆள்கள் மட்டும் தொழில் மாறலாம் மற்றபடி அது பொதுவான வழக்கம் அல்ல. கைக்கோளரை தொழில் மாறவிட்டதன் விளைவாக தமிழக வரலாற்றில் பிற மொழியாளருக்கு அடிமைப்படும் அளவிற்கு தன்னாட்சியை மாபெரும் விலையாகத் தமிழகம் கொடுத்தது ஒருவரலாற்றுப் பிழையே. அந்த மாபெரும் பிழையால் தமிழகம் வந்து புகுந்த அயலவர் பொன்னான வாழ்வு பெற்றுவிட்டார்கள். இந்த வரலாற்று உண்மைகளை தெளிவுபடுத்தவே கீழ்காணும் கல்வெட்டுகளின் விளக்கம்.
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் வட்டம், திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில் கருவறை தென் சுவரில் பொறித்த 7 வரிக் கல்வெட்டு.
ஸ்வஸ்தி ஸ்ரீ கோப்பர / கேசரி பந்மற்கு யா / ண்டு 2 ஆவது சிங்க / ளாந்தக தெரிந்த கைய் / கோளரிற் முத்தி திருநா / [ரணன்] குடு[த்]த வாள் ஸ்ரீ க / ண்டம் கோத்த செ[ம்]முனை வாள் 1.
தெரிந்த கைக்கோளர் – திறவாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட கைக்கோளர், chosen or selected as skillful; ஸ்ரீகந்தம் – சந்தனம்; கோத்த – பதித்த; செம்முனை –செங்குறுதி தோய்ந்த முனை.
விளக்கம்: முதற் பராந்தகன் மகன் அரிஞ்சயனின் 2 ஆம் ஆட்சி ஆண்டினதாக கருதப்படும் இக்கல்வெட்டில் பராந்தகனின் பெயரான சிங்களாந்தகன் என்ற பெயரினைத் தாங்கிய தேர்ந்தெடுத்த கைக்கோளப்படையைச் சேர்ந்த முத்தி திருநாரணன் என்பவன் சந்தனக் கைப்பிடியில் பதித்த குறுதிக்கறை படிந்த முனை உள்ள வாள் ஒன்றினை இறைவனுக்கு கொடுத்தார்.
சோழர்கள் முற்று முழுதாக கைக்கோளரை மட்டுமே கொண்ட திறவாளராக பார்த்துத் தேர்வு செய்யப்பட்ட கைக்கோளப் படை ஒன்றை பேணினர் என்று இதனால் தெரிகின்றது.
பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள், தொகுதி 19, பக். 3. A.R.No 244 of 1907.
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் வட்டம், திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில் கருவறை தென் சுவரில் பொறித்த 6 வரிக் கல்வெட்டு.
1. ஸ்வஸ்தி ஸ்ரீ கோப்பர கேசரி பந்மற்கு யாண்டு 2 ஆவது திருவிடை மருதில்
2. ஸ்ரீமூலஸ்தாநத்தில் பெருமான்அடிகள் கோவிலில் பெரியமண்டபத்தில் முன்
3. பில் திருப்பலகணியும் திருக்கதவும் நிலையும் படியும் கைக்கோளப் பெரும்படை
4. யோமினால் சமைப்பித்து எங்கள் ஆச்சமார் திகைஆயிரத்தைஞ்ஞூற்றுவர் தம்
5. பேர் சாத்தினமையில் இந்த தர்மம் திகைஆயிரத்துஅஞ்ஞூற்றுவர் ரக்ஷை.
6. இந்த தர்மத்தினை ரக்ஷித்தார் ஸ்ரீ பாதம் எங்கள் ஸிரத்தின்.
பெருமானடிகள் – வேந்தர், இறைவன்; பலகணி - சன்னல்; சமைப்பித்து – உருவாக்கி; ஆச்சமார் – ஆசான்கள், ஆசிரியர்கள்; சாத்தின - சூட்டிய
விளக்கம்: முதலாம் இராசேந்திரச் சோழனின் 2 ஆம் ஆட்சி ஆண்டில் (பொ.ஊ. 1014) திருவிடைமருதூர் மூலவர் அமைந்த கருவறைப் பெரியமண்டபத்தின் முன்புறத்தில் சன்னலும், கதவும், வாயில் நிலையும், படியும் கைக்கோளப் படையினர் ஏற்படுத்தி அதற்கு தமது சண்டைப் பயிற்சி ஆசான்களான திசைஆயிரத்துஐநூற்றுவர் பெயரை வைத்து கொடுத்தனர். இதனால் இத்தருமத்தை திசை ஆயிரத்து ஐநூற்றுவர் தான் காத்திடவேண்டும். இத்தருமத்தை காத்தவர் பாதம் எங்கள் தலைமேல் படுவதாக என்று கல்வெட்டி உள்ளனர் கைக்கோளர்.
திசைஆயிரத்து ஐநூற்றுவ வணிகர் தம் பாதுகாப்பிற்கென்று தனிப் படை வைத்திருந்தனர் போலும். அதில் இருந்த திறம்மிக்க பயிற்சியாளர்கள் இக் கைக்கோளப் படைக்கும் பயிற்சி தந்துள்ளனர் என்று தெரிகின்றது. ஆச்சமார் பன்மைச் சொல் என்பதை நோக்கி இப்படித் தான் பொருள் கொள்ள வேண்டும்.
பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள், தொகுதி 19, பக். 3. A.R.No 253 of 1907.
வடஆர்க்காடு மாவட்டம், வேலூர் வட்டம், அகரம் கிராமம் பெருமாள் கோவில் 14 வரிக் கல்வெட்டு.
சுபமஸ்த்து சுவஸ்த்தி ஸ்ரீ மனு மகாமண்டலேசுவரனு ஹரிராய விபாடன் பாசைக்குத் தப்புவராயர் கண்டன் மூவராய கண்டன் கண்டநாடு கொண்டு கொண்டநாடு குடாதன் பூர்வ்வ தட்சிண பச்சிம உத்திர ஸமுத்திராபதி கஜவேட்டை கண்டருளிய மல்லிகார்சுன மஹாராயர் பிரித்திவிராச்சயம் பண்ணி அருளா நின்ற சகாப்தம் 1391 –ல் மேல் செல்லா நின்ற விரோதி வருஷம் மகரநாயற்று பூர்வ்வபச்சத்து பஞ்சமியும் சனிவாரமும் பெற்ற திருவோனத்து நாள்
ஜெயங்கொண்ட சோழமண்டலத்து பளுவூர்கோட்டத்து கரைவழி ஐம்புழுநாட்டு ஆழ்மை ஊரிலும் வந்து பாலிநாட்டு அகரத்திலிருக்கும் கைக்கோளரில் சோழகோன் தீத்தமுடையான் மகன் பெரியராகுத்தனும் இவன் தம்பி சங்கேதி இராகுத்தனும் நல்லானும் நாங்கள் மூவரும் எங்கள் தங்கை கங்கையும் இவள் மகள் திருமலைச்சியும் வீரனும், திம்மனும் பெரிய இராகுத்தன் மகள் பெரிய வெங்காத்தாளையும் சிறிய வெங்காத்தாளையும் முதலியையும் இலக்குமனையும் சாந்தியும் பெண்கள் அஞ்சுபேரையும் இவன் மகன்
கொழுந்தனையும் ஆக எங்கள் பதின்மூன்று பேரையும் கொத்து அடிமை ஆக எம்பெருமான் திருக்கோயிலுக்குக் கொள்வாருளரோ என்று முற்கூறி. இம்மொழி கேட்டு எதிர்மொழி கொடுத்தான் அகரம் பெருமாள் ஆனைகாத்த அப்பன் சீகாரியம் பாற்கும் வன்னிய திம்மயநாயக்கர் நாயக்கன் முற்கூடியபடி உங்கள் மூவரையும் உங்கள் பெண்கள் ஏழுபேரையும் பிள்ளைகள் மூவரையும் ஆக பதின்மூன்று பேரையும் விலைக்குத்தரில் ஆனைக்காத்த அப்பன் அருளிச் செயல்படிக்கு விலைதந்து கொள்வான்
என்று பிற்கூறி முற்கூறிய இராகுத்தன் உள்ளிட்டாரும் பிற்கூறிய சமைய குமாரர் வன்னிய திம்மய நாயக்கரும் இந்த பதின்மூன்று பேற்கும் எம்மில் இசைந்த விலைப் பொருள் வாசிப்படா நற்பணம் 2380. இப்பணம் இரண்டாயிரத்து முன்னூற்று எண்பதுமே எங்கள் பதின்மூன்று பேற்கும் விலை ஆவது ஆகவும் நாங்கள் மூவரும் எங்கள் பெண்கள் ஏழுபேரும் பிள்ளைகள் மூவரும் ஆக பதின்மூன்று பேற்கும் விலைப்படி பணம் இரண்டாயிரத்து முன்னூற்று எண்பதும் சமயகுமாரர் வன்னியத் திம்முநாயக்கர் பண்டாரத்திலே பற்றிகொண்டு
எங்களை நாங்களே ஆனைகாத்த அப்பன் திருக்கோயிலுக்கு கொத்து அடிமை ஆக விலைபிரமாணம் பண்ணிக்குடுத்தமைக்கு
நாங்கள் மூவரும் பிள்ளைகள் மூவரும் சிரிபாதம் தாங்கவும் திருமேனிக் காவலுக்கும் திருக்கைக்கோளருக்கும் உண்டான அடிமைத்
தொழிலுக்கும் எங்கள் பெண்கள் ஏழுபேரும் ஆடிபாட எம்பெருமான் அடியாற்கு உண்டான அடிமைத் தொழில்களுக்கும்
உரித்தாகக் கடவோம் ஆகவும் கொத்தடிமை ஆக ஆனைக்காத்த அப்பன் திருக்கோயிலுக்கு பிரமாணம் பண்ணிக்குடுத்தமைக்கு
எங்கள் வழிவழி பரிபாலனம் உள்ளது. ஆண்பிள்ளை உள்ளது சிரிபாதம் தாங்கவும் திருமேனிகாவலுக்கு உரித்தாகவும். பெண் உள்ளது எம்பெருமான் அடிமைக்கும் உரித்தாகக் கடவராகவும்
இப்படி சம்மதித்து பிரமாணம் பண்ணிக் குடுத்தோம் ஆனைகாத்த அப்பன் திருக்கோயில் சிரிகாரியம் பாற்கும் சமையகுமாரர் வன்னியத் திம்முநாயக்கற்கு சோழகோன் தீத்தமுடையார் மகன் ராகுத்தனும்
சிறு இராகுத்தனும் நல்லானும் கங்கையும் உள்ளிட்ட பதின்மூன்று பேரும் பெரிய இராகுத்தன் சிறு ராகுத்தன் கெங்கை உள்ளிட்டார் எழுத்து. இந்த சாதனமும் தொண்டைமண்டலம் பிரமராயர்
ஆனைகாத்த பெருமாள் அருளியச் செயல்படிக்கு பட்டர் வாரியன் அப்பிளை. இந்த எழுத்து எல்லாம் எழுதினான் இந்தக் கல்வெட்டு விரற்கு மிண்ட ஆசாரி நம்பாண்டை வெட்டினான்
இந்த சாதனங்களுக்கு அறிவுக்கு எழுத்திட்ட பேர் வன்னிய நாட்டுநாயகஞ் செய்வார் சந்திரநாயனார் மேற்படி மாரிக்கூத்தர் தொரபள்ளி கொண்ட பெருமாள் கோயில் தானத்தார். இப்படி அறிவேன் பட்டாசாரியர் ஆனைக்காத்த _ _ _ _. இப்படி அறிவேன் கேசவபட்டர். இப்படி அறிவேன் தேஸப்பட்டர். இப்படி அறிவேன் வாதுள பட்டர்
கீழைவீதி தொண்டைமானார் சேதிராயர் காவனூர் தென்னவராயர் இரிஞ்சிபுரம் சமயமுதலியார் பெரியநாட்டு நம்பிமார் மாதவராமன்.
இராகுத்தன் – குதிரை வீரன்; கொத்து அடிமை – வழிவழி பரம்பரை அடிமை; முற்கூறி – முன்னறிவிப்பு, முதலில் சொல்லிய, pre announcement, formerly quoted; எதிர்மொழி – மறுமொழி, reply, revert; ஸ்ரீ காரியம் பார்க்கும் – இறைப்பணி செய்யும்; பிற்கூறிய - பின்னர் சொல்லிய, later quoted; சாதனம் – சாஸனம், ஆவணம்; அறிவுக்கு - acknowledge
விளக்கம்: விசயநகர வேந்தர் மல்லிகார்சுனர் ஆட்சியில் விரோதி ஆண்டு 1469-ல் மகர ராசி ஞாயிற்றுக் கிழமையும் வளர்பிறை ஐந்தில் சனிக் கிழமையில் நிகழும் திருவோன நட்சத்திரத்திரத்து நாளில் இக் கல்வெட்டு வெட்டப்ப்பட்டது.
இக்கால வேலூரின் அக்கால பளுவூர் கோட்டத்தின் பாலிநாட்டு அகரத்தில் வாழும் கைக்கோளர்களில் சோழகோன் தீத்தமுடையான் மகன்கள் பெரியஇராகுத்தன், சங்கேதி இராகுத்தன், நல்லான் ஆகிய மூன்று உடன்பிறந்தார், தங்கை கங்கை இவள் மகள் திருமலைச்சி, மகன்கள் வீரன், திம்மன் இவர்களோடு பெரிய இராகுத்தன் மகள்கள் ஐவரான பெரியவெங்காத்தாள், சிறிய வெங்காத்தாள், முதலி, இலக்குமனை, சாந்தி ஆகியோரும் இவன் மகன் கொழுந்தன் என மூன்று பெரிய ஆடவர், 7 பெண்கள், மூன்று ஆண்பிள்ளைகள் என 13 பேரையும் விலைகொடுத்து கொத்தடிமையாக ஆனைக்காத்த (கஜேந்திர) பெருமாள் கோவிலுக்கு ஆக்கிட முன்னறிவிப்பு செய்யப்பட்டது. இந்த அறிவிப்பை கேட்டு அகரம் கிராமத்தின் ஆனைக்காத்த அப்பன் பெருமாள் கோவிலின் இறைப்பணியாளர் வன்னிய திம்மய்யநாயக்கர் முன்னே சொன்னபடி 13 பேரையும் விலைக்கு வாங்கினார். இதற்கு விலையாக 2380 பணம் திம்முநாயக்கர் கொடுத்தார். இதைப் பெற்றுக் கொண்ட ஆடவக் பெரியோர் மூவரும் பிள்ளைகள் மூவரும் இறைவனை எழுந்தருளச் செய்த வாகனங்களை தூக்கவும் திருமேனிகளுக்கு காவல் புரியவும் திருக்கைக்கோளருக்கு அடிமை செய்யவும் ஒப்புக்கொண்டனர். அதே நேரம் ஏழு பெண்களும் கோவிலில் பெருமாளுக்கு ஆடிப்பாடவும் பக்தர்களுக்கு அடிமைத் தொழில் செய்யவும் ஒப்புக் கொண்டு உறுதிமொழி ஆவணம் செய்துகொடுத்தனர் இந்த 13 பேர். இந்த ஆவணத்திற்கு தொண்டை மண்டல பிரமராயர் சார்பில் கோவில் பட்டர்களின் வாரியத்தை சேர்ந்த அப்பிள்ளை கையெழுத்திட்டான். அரையர்கள் சிலரும் கையெழுத்திட்டனர்.
குதிரைவீரர்களான இராகுத்தர்கள் வேலை இழந்ததாலோ அல்லது கடன் தொல்லையாலோ தம்மை இப்படி கோவிலுக்கு கொத்தடிமையாக விற்க நேர்ந்துவிட்டது போலும். என்றாலும் கோவில் பணி என்பதால் இவர்களுக்கும் மற்றவரைப்போல வீடு, நிலம், சோறு கிட்டுவதால் அதை இவர்கள் விரும்பி தேர்ந்தெடுத்துள்ளது விளங்குகின்றது.
பார்வை நூல்: தமிழ் கல்வெட்டுகள் வெளிச்சமிடுகிற அரிய உண்மைகள், பக். 306 – 307, ஆசிரியர் முனைவர் வஞ்சியூர் க. பன்னீர்செல்வம்
புதுச்சேரி மாநிலம், திருப்புவனை திருவாண்டார் கோவில் 3 வரிக் கல்வெட்டு.
சுவஸ்தி ஸ்ரீ மன் மகாமண்டலேசுவரன் மேதினிமீஸ்வர கண்டகட்டாரி சாளுவ நரசிங்க தேவ மகாராயர் பிரிதிவிராச்சியம் பண்ணி அருளா நின்ற சகாப்தம் 1425 – ல் மேல் செல்லா நின்ற உரோத்திரதாரி வருஷம் அற்பசி மாதம் 15-தேதி நரசநாயக்கர் காரியத்துக்குக் கடவ அம்பிகாமக் கிழவர்
அறம்வளர்த்த நாயனார் திருபுவனை மாதேவிப்பற்று நடுவுக்கரைப்பற்று நென்மலியப்ப னாயக்கர் கைகோளற்கு பெண்ணைக்கரை யிராச்சியத்தில் உண்டான கைக்கோளர்க்கு நன்மைத் தீமைக்கு தண்டு சங்குந் பந்தப்பட்ட ஆலே தங்களுக்கும் தண்டும் சங்கும் தந்தோம் கைக்கோளர்களுக்கு நன்மை தீமைக்கு சந்திராதித்தர்
வரையும் தண்டும் சங்கும் நடத்த கடவதாகவும். இதுக்கு சபையாரும் மழவராயர் நீலகங்கரையரும் இருந்து பண்ணி நின்ரயந்து யாதொருத்தர் அயிதஞ் சொன்னால் செழியங்கநல்லூரில் கல்வெட்டியபடி ஆகக்கடவதாகவும். இவை அறம்வளர்த்த நயினார் எழுத்து. இவை திருபுவனை மாதேவி சபையார் சொற்படிக்கு சேரமாண்டார் எழுத்து. மழவராயர் எழுத்து. நீலகங்கரையர் எழுத்து.
காரியத்துக்கு கடவ- செயல் பொறுப்பாளர்; தண்டு - ; சபையார் – கருவறை பிராமணர்.
விளக்கம்: விசயநகர வேந்தர் சாளுவ நரசிங்கர் ஆட்சியில் உரோத்திரதாரி ஆண்டு (பொ.ஊ.1503) ல் ஐப்பசி மாதம் 15-ம்தேதி நரசநாயக்கருக்கு செயல் பொறுப்பாளரான அம்பிகாமக் கிழவர் அறம்வளர்ந்த நாயனார் திருப்புவனை மாதேவிப்பற்று, நடுவுக்கரைப்பற்று ஆகிய இடங்களில் வாழும் நென்மலியப்ப நாயக்கரின் கைக்கோளற்கும், பெண்ணைக்கரை இராச்சியத்தில் வாழும் கைக்கோளர்க்கும் வீட்டின் நன்மை, தீமை நிகழ்வுகளுக்கு தண்டும் சங்கும் முழங்க உரிமை தந்தார். இந்த உரிமை நிலவும் ஞாயிறும் நிலைக்கும் காலம் வரை செல்லவதற்கு கோவில் கருவறை பிராமணரும், மழவராயர் நீலகங்கரையர் ஆகிய அரயரும் இதற்கு துணையாக இருந்து யாரொருவரும் தடங்கல் செய்யாமல் செழியங்கநல்லூர் கல்வெட்டில் உள்ளபடி நடந்தேற வேண்டும் என்று ஆணை இடப்பட்டுள்ளது.
மிச்சம் மீதி இருக்கின்ற கைக்கோளர் படைத்தொழிலை விட்டு அகலாமல் இருக்கவே இந்த மரியாதை மதிப்புகள் கைக்கோளருக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளன. விசயநகர ஆட்சி வரையில் மழவராயர், நீலகங்கரையர் ஆகிய அரையர்கள் ஆட்சியில் அரையர்களாக தொடர்ந்தனர் என்பது இக்கல்வெட்டால் தெரிகின்றது.
பார்வை நூல்: தமிழ் கல்வெட்டுகள் வெளிச்சமிடுகிற அரிய உண்மைகள், பக். 307, ஆசிரியர் முனைவர் வஞ்சியூர் க. பன்னீர்செல்வம்
https://groups.google.com/d/msg/vallamai/T2f6jaDgP1A/Xz6AaOauGQAJ
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.