தென்னிந்திய வரலாற்றில் பல்லவர்களின் காலம் புகழ்மிக்கதாகும். களப்பிரர்களின் இருண்ட காலத்திற்குப் பின் பல்லவர்களின் ஆட்சி தோற்றுவிக்கப்பட்டது. காஞ்சிபுரம் பல்லவர்களின் தலைநகரமாக விளங்கியது. பல்லவர்களின் வரலாற்றை அறிய இலக்கியங்கள், பட்டயங்கள், கல்வெட்டுகள், நினைவுச்சின்னங்கள் ஆகியவை சான்றுகளாகப் பெரிதும் உதவுகின்றன. சர்வநந்தியின் ‘லோக விபாகம்’, தண்டியின் ‘அவந்தி சுந்தரி கதை’, மகேந்திரவர்மனின் ‘மத்த விலாச பிரகாசனம்’ போன்ற நூல்களும் திருமுறைகள் எனப்பட்ட தேவாரம், நாலாயிரத்திவ்வியப்பிரபந்தம், நந்திக்கலம்பகம், பாரதவெண்பா, பெரியபுராணம் போன்ற சமய நூல்களும் பல்லவர்களின் சமய, சமுதாய, அரசியல் நிலைமைகளை விளக்கும் ஆதாரங்களாகும். இவைகள் தவிர ஏறக்குறைய 300 பட்டயங்களும் 200 கல்வெட்டுகளும் கிடைத்துள்ளன. அவற்றில் சிவகந்தவர்மனின் ‘மயிதவோலு’, ‘இரசுடகள்ளி’ பட்டயமும் பரமேச்சுவர வர்மனின் கூரம்பட்டயமும் இரண்டாம் நந்திவர்மனின் காசக்குடி, உதயேந்திரச் செப்பேடுகளும் மிகவும் முக்கியமானவை ஆகும். சமுத்திரகுப்தனின் அலகாபாத் கல்வெட்டும் இரண்டாம் புலிகேசியின் அய்கோல் கல்வெட்டும் பல்லவர் வரலாற்றை ஒப்பிட்டறிய உதவும் சமகாலச் சான்றுகளாகும்.
அயல்நாட்டுக் குறிப்புகள்
இரண்டாம் நரசிம்மவர்மன் காலத்தில் இந்தியாவிற்கு வந்த சீனப்பயணி யுவான்சுவாங் விட்டுச் சென்ற பயணக்குறிப்புகள் காஞ்சிப் பல்லவர்களைப் பற்றி அறிய உதவும் அயல்நாட்டுச் சான்றுகளாகும். ‘மகாவம்சம்’ எனும் ஈழ வம்சாவளி நூலும் பல்லவ மன்னர் முதலாம் நரசிம்மவர்மன், ஈழமன்னர் மானவர்மன் ஆகியோரிடையே நிலவிய உறவினைக் குறிப்பிடுகிறது.
பூர்வீகம்
பல்லவர்கள் ‘தொண்டைமண்டலம்’ எனப்பட்ட நிலப்பகுதியை ஆண்டு வந்தனர். வடக்கே நெல்லூருக்கும் தெற்கே காவிரி நதிக்கும் மேற்கே மேற்குத் தொடர்ச்சி மலைக்கும் இடைப்பட்ட பகுதியே தொண்டைமண்டலம் ஆகும். இப்போதுள்ள ஆந்திரப்பிரதேசத்தின் நெல்லூர், சித்தூர் மாவட்டங்களும் தமிழகத்தின் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களும் புதுச்சேரியும் சேர்ந்த பகுதியே தொண்டைமண்டலம் ஆகும். பல்லவர்களின் பூர்வீகம் குறித்து இரண்டு முக்கியக் கருத்துகள் நிலவுகின்றன. ஒன்று, அவர்கள் அயல்நாட்டார் என்பதாகும். பிறிதொன்று அவர்கள் இந்நாட்டுப் பூர்வீகக் குடிகளே என்பதாகும். பல்லவர்கள் தமிழகத்தில் கி.பி.250 முதல் கி.பி.912 வரையில் ஆட்சி செலுத்தினர். பல்லவ அரசர்களைப்பொதுவாக மூன்று வகையினராகக் கூறலாம்.
1. முற்காலப் பல்லவர்கள்: இவர்கள் கி.பி.250 முதல் கி.பி.340 வரையில் பல்லவர் அரசை நிறுவி ஆட்சி செலுத்தியவர்கள்.
2. இடைக்காலப் பல்லவர்கள்: இவர்கள் கி.பி.346 முதல் கி.பி.575 வரையில் ஆட்சி செலுத்தியவர்கள்.
3. பிற்காலப் பல்லவர்கள்: இவர்கள் கி.பி.575 முதல் கி.பி.912 வரையில் பல்லவப் பேரரசை வலிமையுடனும் பெருஞ்சிறப்புடனும் ஆட்சி செலுத்தியவர்கள்.
சரியான வரலாற்றுச் சான்றுகள் கிடைக்காததால் முற்காலப் பல்லவர்கள் குறித்துத் தெளிவாக அறிந்துகொள்ள முடியவில்லை. ‘பப்பதேவன்’ என்பவன்தான் பல்லவர் ஆட்சியைத் தொடங்கியனவாகக் கருதப்படுகிறான். முற்காலப் பல்லவர்களில் சிவசுகந்தவர்மன் (300 – 325) முதல் சிறந்த மன்னர் ஆவார். இவர் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு கிருட்டிணாநதி முதல் தென்பெண்ணை ஆறுவரையுள்ள பகுதிகளை ஆண்டாரெனத் தெரிகிறது. இடைக்காலப் பல்லவர்களில் விஷ்ணுகோபன் (கி.பி.350 - 375) என்பவர் குறிப்பிடத்தக்கவர். சிம்மவிஷ்ணு அரியணை ஏறிய காலம் முதல் பல்லவர் வரலாறு தெளிவாகிறது. சிம்மவிஷ்ணு (கி.பி.570 – 615), முதலாம் மகேந்திரவர்மன் (615 – 630), முதலாம் நரசிம்மவர்மன் (630 – 668), முதலாம் பரமேசுவரவர்மன் (670 – 690), இரண்டாம் நரசிம்மவர்மன் அல்லது இராசசிம்மன் (690 – 728), இரண்டாம் நந்திவர்மன் (731 – 795), தந்திவர்மன் (756 – 846), மூன்றாம் நந்திவர்மன் (847 – 869) ஆகியோர் பிற்காலப் பல்லவ மன்னர்கள் வரிசையில் அடங்குவர். இவர்களின் காலத்தில் கலையும் இலக்கிய வளர்ச்சியும் மிகுந்து காணப்பட்டன. மூன்றாம் நந்திவர்மனுக்கு நிருபதுங்கன், அபராஜிதன், கம்பவர்மன் என்ற மூன்று புதல்வர்கள் இருந்தனர். இவர்களில் நிருபதுங்கனுக்கும் அபராஜிதனுக்கும் அரசியல் காரணங்களினால் மனவேற்றுமை ஏற்பட்டது. அதனால் அவ்விருவரும் வேற்றரசர்களின் உதவியை நாடினர். இவ்விரு தரப்பினரும் ‘திருப்புறம்பியம்’ என்ற இடத்தில் போரிட்டனர். இப்போருக்குப் பின் நிருபதுங்கனைப் பற்றிய செய்தி ஏதுமில்லை. அபராஜிதன் வெற்றி பெற்றாலும் ஆதித்தன் என்னும் சோழக் குறுநில மன்னரால் கொல்லப்பட்டான். இப்போருக்குப் பின்னர்ப் பல்லவர் ஆட்சி முடிவு பெற்றது. பல்லவர்களின் காலத்தில் மக்களின் ஆதரவு பெற்ற சமய மறுமலர்ச்சி இயக்கம் தோன்றியது. இதனால் சைவ சமய இயக்கங்கள், புத்த, சமண சமயங்களின் வீழ்ச்சியைப் பயன்படுத்தி வளரலாயின. பல்லவர்கள் கோயில் வளர்ச்சிக்கும் சிற்பக்கலை வளர்ச்சிக்கும் பெருந்தொண்டாற்றினர். பல்லவர் தலைநகரத்தில் விளங்கிய ‘காஞ்சிக்கடிகை’ புகழ்பெற்ற கல்வி மையமாக விளங்கியது. தமிழக வரலாற்றில் பல்லவர்கள் தனிச்சிறப்புப் பெற்று விளங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
கட்டிடக்கலை வளர்ச்சி
பல்லவர்கள் கோவில்களின் வளர்ச்சிக்கு அருந் தொண்டாற்றியுள்ளனர். இவைகளில் மகேந்திரவர்மனால் குடையப்பட்ட ‘குடைவரைக் கோவில்கள்’ புகழ்மிக்கவைகளாகும். பல்லாவரம், வல்லம், மாமண்டூர், மகேந்திரவாடி, தளவானூர், சீயமங்கலம், மண்டகப்பட்டு, திருச்சிராப்பள்ளி, நாமக்கல் முதலிய இடங்களில் மகேந்திரவர்மனின் கோவில்களும் குடைவரைக் கோயில்களும் காணப்படுகின்றன. கடற்கரை நகரமான மாமல்லபுரம் மகேந்திரவர்மனால் தோற்றுவிக்கப்பட்டது என்று கருதப்படுகிறது. திருவெள்ளறை, குடுமியான்மலை, திருமயம் முதலிய இடங்களில் குடைவரைக் கோயில்கள் நரசிம்மவர்மன் காலத்தில் அமைக்கப்பட்டன. பாண்டவர்களின் ஒற்றைக் கற்கோவில்கள் இவரால் கட்டப்பட்டவைகளாகும். இராசசிம்மன் காலத்தில் காஞ்சி கைலாசநாதர் கோவிலும் மாமல்லபுரக் கடற்கரைக்கோவிலும் கட்டப்பட்டன. இவரைத் தொடர்ந்து வந்த இரண்டாம் நந்திவர்மன் காஞ்சியில் புகழ் வாய்ந்த வைகுந்தப்பெருமாள் கோவிலைக் கட்டினான். பல்லவர்கள் ஆற்றிய கட்டிடக்கலைப் பணிகள் தென்னிந்தியாவின் கட்டிடக்கலை வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தன என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
பல்லவர் நாணயங்கள்
தமிழ்நாட்டை ஆண்ட பல்லவ மன்னர்கள் (கி.பி.7 – 9-ஆம் நூற்றாண்டுகள்) காலத்தில், பல்லவர் நாணயங்கள் அச்சிடப்பெற்றுப் புழக்கத்தில் இருந்தன. அவைகள் வெள்ளி, செம்பு, ஈயம் ஆகிய உலோகங்களால் ஆனவைகளாகும். காஞ்சிபுரப் பகுதிகளில் வெள்ளிக்காசுகளில் முதலாம் மகேந்திரவர்மன், இராசசிம்மன் ஆகியோரின் காசுகள் கிடைத்துள்ளன. மகேந்திரவர்மனின் வெள்ளிக்காசுகளில் நந்தி உருவின் மேல் இலட்சித என்னும் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. மறுபக்கம் உள்ள உருவம் தெளிவாகப் புலப்படவில்லை. இராசசிம்மன் காசுகளின் ஒரு பக்கத்தில் நந்தியும், ‘ஸ்ரீரிபுரா’ என்ற பெயரும் பொறிக்கப்பட்டுள்ளன. அக்காசுகளின் பின்பக்கத்தில் சக்கர உருவம் உள்ளது. செம்புக்காசுகளிலும் மேற்குறித்த வகைகள் உள்ளன. இராசசிம்மன் காசுகள் பலவகைகளில் பொறிக்கப்பட்டுள்ளன. அவ்வகைகளில் முன்பக்கத்தில் நின்று கொண்டிருக்கும் நந்தியின் மேல் ‘ஸ்ரீரீபர’ என்னும் பெயர் அக்காசுகளில் பொறிக்கப்பட்டுள்ளன. பின் பக்கத்தில் பின்வரும் உருவங்களில் ஏதாவது ஒன்றோ சிலவோ உள்ளன: 1) தனி மீன், 2) சக்கரம், 3) குத்து விளக்கும் கத்தியும், 4) வில், 5) பலிபீடம், 6) சாமரங்கள், 7) சைத்தியம். மற்றொரு வகைக் காசுகளில் காளை உருவைச் சுற்றி ‘ஸ்ரீரீநிதி’ என்னும் சொல்லும் பின்பக்கத்தில் மீன், ஆமை, சக்கரம் ஆகிய உருவங்களும் காணப்படுகின்றன. நந்திவர்மன் காசுகளில் காளை உருவைச் சுற்றி ‘மானபர’ என்னும் சொல்லும் பின் புறத்தில் சங்கு ஒன்றும் காணப்படுகின்றன. மற்ற காசுகளில் நின்று கொண்டிருக்கும் நந்தி, சந்திரன், திருமறு (ஸ்ரீரீவத்சம்) ஆகிய உருவங்கள் காணப்படுகின்றன. அக்காசுகளின் மறுபுறத்தில் உயர்ந்த இரண்டு பாய்மரங்களைக் கொண்ட கப்பல்கள் பொறிக்கப்பட்டுள்ளன. பிறிதொரு வகைக்காசுகளில் நின்று கொண்டிருக்கும் காளையுடன் தீபம், கொடி ஆகியன காணப்படுகின்றன. அவைகளில் சுவசுதிக சின்னம் பின்புறம் உள்ளன. மற்றொரு வகைக்காசுகளில் காளை உருவம் முன்புறமும் கலசத்தின் அருகே இரண்டு விளக்குகள் பின்புறமும் பொறிக்கப்பட்டுள்ளன. இவை தவிரப் பொடின் என்னும் ஈயக்கலவை உலோகத்திலும் காசுகள் வெளியிடப்பட்டன. அவைகளில் ஒரு பக்கம் காளையும் மறுபுறம் கலசமுடன் இரண்டு குத்து விளக்குகளும் பொறிக்கப்பட்டுள்ளன. ஈயத்தாலான காசுகள் காஞ்சிபுரத்தில் செய்யப்பெற்ற அகழாய்வுகளில் கிடைத்துள்ளன. அவைகளின் ஒரு பக்கத்தில் நின்றிருக்கும் காளையும் பின்புறத்தில் தாமரையும் காணப்படுகின்றன. அக்காசுகளைத் தவிரக் காணம் என்ற காசுகளைப் பற்றிக் கல்வெட்டுகள் குறிக்கின்றன. அவைகள் பொன், வெள்ளி, செம்பால் ஆன எல்லாக் காசுகளையும் குறிக்கும். பல்லவர் கால நாணயங்களின் மதிப்புப் பற்றிச் சரியாகத் தெரியவில்லை. இருப்பினும் அவைகள் அச்சில் வார்த்து உருவாக்கப்பட்டுள்ளன. இக்காசுகளைச் சரியான எடை அளவில் கொண்ட காசுகளாக வெளியிட்டனரா என்பதையும் இங்கு அறிய இயலவில்லை. இக்காசுகளை வார்க்கும் நாணயச் சாலைகள் பற்றிய தகவல்கள் எதையும் அறிந்துகொள்ள இயலவில்லை (பரிமணம்,2009:173 - 176).
பெண்ணையாறு
பெண்ணையாறு என்பது வடதமிழக மக்களின் வாழ்க்கையிலும் தென்தமிழக மக்களின் வாழ்க்கையிலும் பெரும்வளத்தைக் கொழிக்கும் ஆறாகக் காணப்பட்டுள்ளது. இவ்வாறு பினாகினி ஆறு என்று அழைக்கப்பட்டு வந்துள்ளது. தென்னிந்தியாவிலுள்ள இரண்டு ஆறுகளுக்கு இந்தப் பெயர் உண்டு. ஆந்திரப்பிரதேசத்தில் பாய்கின்ற ஆற்றுக்கு வடபெண்ணை என்றும் தமிழ்நாட்டில் பாய்கின்ற ஆற்றுக்குத் தென்பெண்ணை என்றும் பெயர்கள் வழங்கப்படுகின்றன. மைசூரில் வாழும் மக்கள் இன்றும் இவ்வாற்றைப் பினாகினி என்றே குறிப்பிடுகின்றனர். மக்கள் சிவபெருமானின் கையிலுள்ள வில்லிலிருந்து இப்பெயர் மருவி வந்துள்ளதாகக் கருதுகின்றனர். வடபெண்ணையாறு வடகிழக்கு மைசூரில் கோலார் மாவட்டத்தில் நந்திதுர்க்க மலைக்கு வடமேற்கிலுள்ள சன்னராயன் பெட்டாவில் உற்பத்தியாகி ஆந்திரப் பிரதேசத்தில் அனந்தப்பூர், கடப்பை, நெல்லூர் மாவட்டங்களில் பாய்ந்து நெல்லூர் நகரத்துக்கு 25 கி.மீ. தெற்கே வங்காள விரிகுடாக் கடலில் கலக்கிறது. செயமங்கலி, சித்திராவதி, பாபக்னி ஆகிய கிளைஆறுகள் வடபெண்ணையாற்றில் கலக்கின்றன. இந்த ஆறு 560 கி.மீ. நீளமுள்ளது. தென்பெண்ணையாறு தட்சணப்பினாகினி என்ற பெயராலும் வழங்கப்படுகின்றது. இந்த ஆறும் வடபெண்ணையாறு போல மைசூரிலுள்ள கோலார் மாவட்டத்தில் நந்திதுர்க்கத்துக்கு வடகிழக்கில் சன்னராயன் பெட்டாவில் தோன்றுகின்றது. தென்பெண்ணையாறு பெங்களூர் மாவட்டம் வழியாக ஓடித் தமிழ்நாட்டிற்குள் நுழைகிறது. தருமபுரி, கடலூர் மாவட்டங்களின் வழியாகப் பாய்ந்து கடலூருக்குச் சற்று வடக்கே வங்காளவிரிகுடாவில் கலக்கிறது. இந்த ஆறு 400 கி.மீ. நீளமுள்ளது. பாம்பாறு தருமபுரி மாவட்டத்தில் இதனுடன் கலக்கிறது. இவ்வாற்றில, மழைக்காலத்தில் எதிர்பாரா வகையில் வெள்ளம் பெருக்கெடுத்து வருவதால் ‘வெண்ணெய் உருகுமுன்னே பெண்ணை பெருகும்’ என்ற பழமொழி வழக்கிலிருக்கிறது. தை மாதம் முதல் வாரத்தில் இவ்வாற்றின் கரைகளிலுள்ள ஊர்மக்கள் சிறப்பாக விழாக்கள் எடுத்துக் கொண்டாடுகிறார்கள். இவ்வாற்றங்கரைகளில் திருக்கோவிலூர், திருவெண்ணெய் நல்லூர் போன்ற பழம்பெரும் புண்ணியத் தலங்கள் உள்ளன (பரிமணம்,2009:862 - 863).
பிற்காலச் சென்னை மாநகரம்
சென்னை மாநகரம் தொண்டைநாட்டில் உள்ளது. இந்நகரம் ஏற்பட்டுச் சுமார் 300 ஆண்டுகள் ஆகின்றன. இருபத்து நான்கு கோட்டங்களில் ஒன்றன புலியூர்க்கோட்டத்தில் சென்னை நகரம் அமைந்திருக்கிறது. இந்த நகரத்தைத் தெலுங்கர்களில் சிலர் தங்களுடையது இல்லை என்று வரலாறு உணரமால் விபரம் அறியாமல் கூறுவது பொருத்தமற்ற உண்மைக்கு மாறான செய்தியாகும். விசயநகர அரசு முகம்மதியரால் தோல்வியுற்றுச் சிதைந்து போயிற்று. சிதைந்துபோன விசயநகர அரசன் வழிவந்தவன் சந்திரகிரி அரசன். அக்காலத்தில் (17-ஆம் நூற்றாண்டில்) நாடெங்கும் கொள்ளையும் குழப்பமுமாக இருந்தபடியால் எந்தெந்த நாடு யார்யாருக்குரியதென்று சொல்ல முடியாமல் இருந்தது. அந்தக்காலத்தில் கிழக்கிந்தியக் கம்பெனியைச் சேர்ந்த டே என்னும் ஆங்கிலேயர் 1639-இல் சந்திரகிரி அரசனிடமிருந்து சென்னையில் கோட்டையுள்ள இடத்தை மாத்திரம் வாடகைக்கு வாங்கினார். அக்காலத்தில் சென்னை சந்திரகிரி அரசனுக்குச் சொந்தம் என்றே வைத்துக்கொண்டாலும் பிற்காலத்தில் அது வேற்றரசருக்கு உரியதாயிற்று என்னும் செய்தியை வரலாறு கூறுகிறது. 1646-இல் சந்திரகிரி அரசன் முகம்மதியரால் தாக்கப்பட்டுச் சந்திரகிரியைவிட்டு மைசூருக்கு ஓடி ஒளிந்தான். அவனுடைய அரசும் நாடும் முகம்மதியரால் பிடிக்கப்பட்டு முகம்மதியரின் ஆட்சிக்கு வந்துவிட்டன. அதாவது கோல்கொண்டா அரசன் சந்திரகிரி அரசனைத் துரத்திவிட்டுச் சென்னையுட்பட அந்நாட்டுப்பகுதிகளைப் பிடித்துக் கொண்டான். ஆகவே, 1670-இல் கிழக்கிந்தியக் கம்பெனியார் தங்கள் புனித சார்ச் கோட்டையையும் சென்னை நகரத்தையும் கோல்கொண்டா அரசனிடம் இருந்து மீண்டும் வாடகைக்குப் பெற்றனர். இந்த வாடகை உடன்படிக்கைப்படி கோல்கொண்டா (முகம்மதிய) அரசனுக்குக் கம்பெனி்யார் ஆண்டு ஒன்றுக்கு 1200 வராகன் வாடகை கொடுக்க ஒப்புக்கொண்டனர். இந்த உடன்படிக்கையை முன்னின்று செய்துகொடுத்தவர் நவாப் நெக்நம் கான் (Nabob NeKnam Khan) என்பவர். ஆகவே, வரலாறு அறியாத தெலுங்கரில் சிலர் ‘மதராஸ் நமதே’ என்று கூச்சல் போடுவதில் ஏதேனும் பொருள் இருக்கிறதா? அறிவு இருக்கிறதா? 1692-இல் எழும்பூர், புரசைவாக்கம், தண்டையார்பேட்டைகளை கம்பெனியார் முகம்மதியர் இடத்தில் இருந்து பெற்றுக்கொண்டு சென்னையுடன் சேர்த்தார்கள். அசித் கான் (Assid Khan), நவாப் சுல்பிகார் கான் (Nabob Zulfikar Khan) ஆகிய இருவர்களிடமிருந்து இந்தப் பகுதிகளை வாங்கினார்கள். நவாப்பின் சந்ததியார் இன்றும் (சென்னை நகரத்துக்கும் கர்நாடகத்துக்கும் சொந்தக்காரராக இருந்தபடியால்) பென்ஷன் (ஓய்வூதியம்) பெற்று வருகிறார்கள். உண்மை இப்படியிருக்க சுயநலம் கொண்ட இரண்டொரு ஆந்திரர் தந்நலம் கருதி மதராஸ் நமதே என்று சொல்வது பொருளற்ற கேலிக் கூத்தாகும். இவர்கள் முகம்மதியர்களான கர்நாடக நவாபுகளைத் தெலுங்கர் என்று கருதுகிறார்களா? தெலுங்கரும் முகம்மதியரும் ஓர் இனம்தானா? சந்திரகிரி அரசர் வழிமுறையும் கர்னாடக நவாபு வழிமுறையும் ஒன்றுதான் என்று இவர்கள் ஒப்புக்கொள்வார்களா? அது உண்மையா? ஆசை வெட்கம் அறியாது என்கிற பழமொழிப்படி வரலாற்றைப் புரட்டிப்பாராமல் வீண் புரளி செய்வது அறிவுடைமையாகாது. இராசராசன் போன்ற சோழ அரசர்கள் ஆந்திரம் உட்பட கலிங்கநாட்டை வென்று அரசாண்டார்கள். ஆகையால், இப்போது ஆந்திர நாடும் கலிங்க தேசமும் தமிழர்களுக்குரியன என்று கூறினால், அது எவ்வளவு நகைப்பிற்கிடமாக இருக்குமோ அப்படித்தான் தெலுங்கர் சென்னை தெலுங்கருக்குரியது என்று கூறுவதும் நகைப்பிற்கிடமாயிருக்கிறது (வேங்கடசாமி,2001:56-57).
புதுச்சேரி
புதுச்சேரி எனும் இந்நகரத்தைப் புதுவை என்றும் புதுச்சேரி என்றும் வழங்கப்படுகிறது. இது ஒரு பழமையான துறைமுக நகரமாகும். உரோமானியர்கள் எழுதிவைத்துள்ள குறிப்புகளில் இடம்பெற்றுள்ள பொதுகா என்னும் துறைமுகப் பட்டினம் புதுச்சேரியைக் குறிக்கும் என்று வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். அக்காலத்தில் புதுச்சேரித் துறைமுகப்பட்டினம் உரோமானியர் குடியிருப்பு நகராக விளங்கியது. பண்டை உரோமானியர்களோடு தொடர்புடைய பல பொருட்கள் அரிக்கமேடு எனும் இடத்தில் அகழ்வாராய்ச்சி செய்த பொழுது கிடைத்துள்ளன. புறநானூற்றுப் புலவர் வீரைவெளியனார் (புறம்.320) புதுச்சேரிப் புறநகரில் வாழ்ந்தவராவர். புதுச்சேரிக்கு மிக அருகிலுள்ள வீராம்பட்டினமே புறநானூறு கூறும் வீரை எனும் ஊராகும். உரோமானியர்களின் குடியிருப்புக்கள் இவ்வூரையொட்டியே அமைந்திருந்துள்ளன. சங்க காலத்தை அடுத்து பல்லவர், இராட்டிரகூடர், சோழர், பாண்டியர், விசயநகரமன்னர், செஞ்சிநாயக்கர் ஆகியோரின் ஆளுகைக்குட்பட்ட பகுதியாக இந்நகரம் விளங்கியது. இடைக்காலத்தில் இந்நகரம் வேதபுரி என்றும் வழங்கப்பட்டுள்ளது. சோழர் காலத்தில் எழுப்பப்பட்ட வேதபுரீசுவரர் கோயில் பிரான்சுக்காரர்களின் ஆட்சியில் அழிக்கப்பட்டதை ஆனந்தரங்கம்பிள்ளை நாள்குறிப்புத் தெரிவிக்கிறது. போர்த்துக்கீசியர்களின் வருகையோடு புதுச்சேரியின் வரலாறு தொடங்குகிறது. புதுச்சேரியில் கி.பி.1521–1524-க்கு இடைப்பட்ட காலத்தில் போர்த்துக்கீசியர்கள் ஒரு தொழிலகத்தைத் தொடங்கினர். அவர்கள் இந்நகரைப் ‘புதுசேயிரா’ என்று குறிப்பிட்டுள்ளனர். செஞ்சி மன்னர் முத்துக்கிருட்டிணப்ப நாயக்கர் போர்ச்சுகீசியர்களைப் புதுச்சேரியிலிருந்து வெளியேற்றினார். இழீன் பீபைன் என்னும் பிரான்சு வணிகர் கி.பி.1617-ஆம் ஆண்டில் போர்த்துக்கீசியர் கைவிட்டுச் சென்ற கோட்டையைச் செஞ்சி மன்னரிடம் அனுமதி பெற்றுப் பழுது பார்த்துத் தம் வசம் வைத்துக்கொண்டார். புதுச்சேரியில் குடியேறிய முதல் பிரான்சுக்காரர் இவரே ஆவார். பாரிசில் கி.பி.1664-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கிழக்கிந்தியப் பிரான்சை அரச வணிகக் கழகத்தினர் சேர்கான்லோடியின் அழைப்பினை ஏற்றுப் புதுச்சேரியில் வாணிகம் நடத்தினர். சிறு மீனவர் ஊராக இருந்த புதுச்சேரி குறுகிய காலத்திற்குள் ஒரு சிறந்த வாணிக நகரமாக வளர்ந்தது. பிரான்சுவா மர்த்தேன் கி.பி.1674-ஆம் ஆண்டில் பிரான்சுக் கிழக்கிந்திய வணிகக் கழகத்தின் தலைவராகப் புதுச்சேரிக்கு வந்தார். இவருடைய உழைப்பால் புதுச்சேரி ஒரு முக்கிய நகரமாக வளரத் தொடங்கியது. புகழ்மிக்க சோசப்பு பிரான்சுவா தூப்ளே கி.பி.1742-ஆம் ஆண்டு புதுச்சேரி வணிகக் கழகத்தின் தலைவரானார். இந்தியாவில் ஒரு பிரான்சு அரசை உருவாக்கக் கனவு கண்ட அவருக்குக் கருநாடகப்போர்கள் நல்ல வாய்ப்பை அளித்தன. தென்னாட்டின் தலைவிதியை முடிவு செய்யும் அரசியல் கேந்திரமாகப் புதுச்சேரி தூப்ளே காலத்தில் விளங்கியது. தமிழில் முதல் முதலில் நாள் குறிப்பை எழுதிய ஆனந்தரங்கம்பிள்ளை தூப்ளேயின் நேர்முக உதவியாளர் (துபாசி) ஆவார். பிரான்சுக்காரர்கள் மட்டுமன்றி ஆங்கிலேயர், போர்த்துக்கீசியர், தச்சுக்காரர் ஆகியோர்களும் புதுவையில் அவ்வப்போது ஆண்டுள்ளனர். பிரான்சுக்காரர்களிடமிருந்து பிரான்ஸ் இந்தியப் பகுதிகள் 1954-ஆம் ஆண்டு விடுதலை பெற்றன. புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் என்னும் நான்கும் முன்னாள் பிரான்சு இந்தியப் பகுதிகளாகும். இவைகள் விடுதலைக்குப்பின் மத்திய ஆட்சிக்கு உட்பட்ட யூனியன் பிரதேசம் ஆனது. புதுச்சேரி அதன் தலைநகரமாக விளங்குகிறது(பரிமணம்,2009:731-732).
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
* கட்டுரையாளர்: - முனைவர் சு. அ. அன்னையப்பன், முதுநிலை ஆராய்ச்சியாளர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சாலைப் போக்குவரத்து நிறுவன வளாகம், தரமணி, சென்னை – 600 113. -