1. ஆரிய சக்கரவத்திகளான யாழ்ப்பாண அரசர்களின் வாளைக் குறித்த செய்தி வெளியீடு.-
யாழ்ப்பாணத்து அருங்காட்சியகமானது மிகவும் ஏழ்மையான நிலையில் பல விலை மதிக்கமுடியாத பொருட்கள் யாவும் புறக்கணிக்கப்பட்டு பராமரிப்பின்றி உள்ளது. எவருமே முன்வந்து நமது சரித்திர ஆவணங்களை பாதுகாக்கவோ அவற்றை விலையேறப்பெற்றதாக காண்பிக்கவோ ஆர்வம் காட்டவில்லை. ஆனால் தம்பகொலபட்டுன, நாகதீப விகாரை கந்தரோடை என இத்தகைய இடங்கள் யாவும் பழுதுபார்க்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டு இராணுவங்களினால் பாதுகாக்கப்பட்டும் வருகின்றது.
ஆனால் நம் சரித்திர ஆவணங்களோ மற்றும் இடங்களோ பலர் மத்தியில் புறக்கணிக்கப்பட்டு நம் சரித்திர தடயங்கள் யாவும் வருங்காலங்களில் அழிந்துபோகும் அபாயம் உள்ளது.
பலர் அமைச்சர்களாக பதவிக்கு வருமுன் பல வாக்குறுதிகளை வழங்குவார்கள். பின் பதவிக்கு வந்தவுடன் கொடுத்த வாக்குறுதிகளை பொருட்படுத்தாது விட்டுவிடுவார்கள். பதவியில் இருக்கும் பல தமிழ் அரசியல் அதிகாரிகளும் பல தமிழ் கல்வித்துறைகளில் உள்ள அதிகாரிகளும் இவையாவற்றிலும் எவ்வித ஆர்வமும் காட்டுவதில்லை.
இன்று யாழ்ப்பாண வட்டாரத்து சைவ கோவில்கள் நீதிமன்றத்தில் பல வழக்குகள் சம்பந்தமாக பதிவாகியுள்ளது. இவையாவும் சீக்கிரத்தில் முடிவுக்கு வரவேண்டும் என விரும்புகிறேன். எல்லா சைவ கோவில்களும் தங்கள் பழைய அனுதின நிலைக்கு திரும்பி தமது முக்கிய இடத்தை சிவத்திற்கு கொடுக்க வேண்டும். நீங்கள் யாவரும் யாழ்ப்பாணத்து அரசர் ஆரிய சக்கரவர்த்திகளின் காலங்களில் எவ்வண்ணம் இயங்கி வந்தீர்களோ அவ்வண்ணம் சிவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து உங்கள் பழைய நிலைக்கு வரவேண்டும் என்பதே என் ராஜ உத்தரவு!
நம் தமிழ் வரலாற்று வளத்தைக் குறித்து நான் மிகவும் வருத்தத்துடன் உள்ளேன். யாழ்ப்பாணத்திற்கூட அனேகர் தங்கள் சொந்த வரலாற்றினை அறியாது உள்ளனர். கல்வி சாலைகளிலும் 1948ம் ஆண்டிற்கு பின்னர் நிகழ்ந்தவற்றையே கற்றுக்கொடுக்கின்றனர். அவற்றிற்கு முன் நிகழ்ந்த தமிழ் வரலாற்றுக்களை அவர்கள் கற்றுக்கொடுக்க அலட்சியமாக உள்ளனர்.
அதுமட்டுமல்லாது இன்று வாழும் நம் இளைய சமுதாயத்தினரும் தங்கள் சொந்த வரலாற்றினை அறியாது தங்கள் சொந்த தாய் மொழியையும் பேசாது உள்ளனர். இதற்கு பல வகையில் அவர்களது பெற்றோர்களும் காரணமாக உள்ளனர். ஏனெனில் தங்கள் பிள்ளைகளுக்கு அவர்கள் தமிழ் வரலாற்றில் உள்ள பெருமைகளை சொல்லிக்கொடுக்க தவறிவிட்டார்கள். நாம் இவ்வண்ணம் கவனக் குறைவின்றி இருப்போமேயானால் தமிழ்மொழியும் அதிகம் பேசப்படாது தமிழ்மொழி அமிந்துபோகும் அபாயம் உள்ளது. மேலும் பல மக்கள் சமூச வலைத்தளங்களில் தமிழ் அரசியல்வாதிகளை குறித்து குறைகூறி எழுதுவதும் பதிவதுமாக உள்ளனர். இவ்வாறாக செய்வதைக் காட்டிலும் யாழ்ப்பாணத்தைக் குறித்த வளமான சரித்திரங்களை மற்றும் யாழ்ப்பாணத்து கலாசாரங்களை பண்பாடுகளை என நல்ல அறிவுபூர்வமான தகவல்களை போட்டால் அவை அனேகர்களுக்கு பயனுடையதாக இருக்கும்.
எமது சரித்திர ஆவணங்களை பாதுகாக்க தவறுவோமேயானால் இவையாவும் பிற்காலங்களில் ஆதாரங்கள் இல்லாது இன்றைய நாட்களில் எவ்வண்ணம் பல இடங்களின் பெயர்கள் மாற்றப்பட்டு வருகிறதோ அவ்வண்ணம் யாழ்ப்பாணமும் பெயர் மாற்றப்பட்டு ஒரு சிங்கள பட்டணடமாக மாறுவதற்கு வாய்ப்புண்டு. நாம் எக்காலமும் நடந்த யுத்தத்தை குறித்து இனி பேசாது வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களை ஓர் அழகான சுற்றுலா தளங்களாக மாற்றியமைப்பது நன்மையாக அமையும்.
எம் முன்னோர்களான யாழ்ப்பாணத்து அரசர் ஆரியச் சக்கரவர்த்திகளின் காலத்தில் நாட்டு நட்பை ஆராய்ந்து அறிந்து செயற்படுவதைப் போன்று இம் முறை நான் என் அரச குடும்பத்திலிருத்து எனது பிரதிநிதி இலங்கைக்கு விஜயம் செய்த நாட்களில் யாழ்ப்பாணத்து நடவடிக்கைகள் யாவையும் அவர்கள் பார்வையிட்டு எனக்கு அறிவித்தார்கள். எனவே நான் யாழ்ப்பாணத்து தற்போதைய நிலையைக் குறித்து நன்கு அறிந்திருக்கின்றேன்!
ஆகையால் என் தமிழ் மக்கள் அனைவரிடம் நான் விரும்புவது யாதெனில் தமிழ் மக்களாகிய நாம் அனைவரும் முன்வந்து தங்கள் கரங்களை இணைத்து நமது வளமான பாராம்பரிய ஆவணங்களை பாதுகாக்க முன்வரவேண்டும் என்பதே.
2. ஆரிய சக்கரவத்திகளான யாழ்ப்பாண அரசர்களின் வாளைக் குறித்த செய்தி வெளியீடு.
பண்டைய காலத்தில் ஆளுகைக்கு அடையாளமாக அரச வாள் ஒரு சின்னமாக திகழ்ந்தது. இவ் வாளானது யாழ்ப்பாண இராஜ்ஜியத்தின் முக்கியமான ஓர் வரலாற்று இடத்தையும் கொண்டுள்ளது.
அது பரம்பரை பரம்பரையாக மாபெரும் போர் வீரர்களால் கைக்கொள்ளப்பட்டு நீதியையும் வெற்றியையும் பிரகடணப்படுத்தப்பட்டது.
ஒரு யுத்த வீரனுடைய மரணத்திற்குப் பின்பு அவர் உபயோகித்த வாளானது இனிமேலும் எவ்வித போர்களுக்கும் பயன்படுத்தப்படாது, அது கனத்துக்குறிய கருவியாக மாறுகின்றது. பண்டையகாலங்களில் ஒரு யுத்த வீரனை ஏற்படுத்துவதும், அவ் வீரனுடைய பதவி பிரமாணத்திற்கும் அவ் வாளானது பாதுகாப்பாக மறைத்து வைக்கப்பட்ட இடத்திலிருந்து எடுத்துவரப்பட்டு, இவ்வாறான சம்பிரதாய காரியங்களுக்கு பயன்படுத்தப்பட்டது. குறிப்பாக ஒரு வாளானது காலாகாலமாக மதிப்போடும் கனத்தோடும் பயன்படுத்தவேண்டிய ஒன்றாகும்.
வீரமாகாளி அம்மன் கோவிலானது யாழ்ப்பாண வட்டாரத்தில் பிரசித்திபெற்ற கோவிலாகும். ஆரிய சக்கரவத்திகளான யாழ்ப்பாண அரசர்கள் போர்களுக்கு போகமுன், அக் கோவிலில் அவர்கள் வாளை விரமாகாளி அம்மன் சந்நிதி முன் வைத்து அவர்களுக்காக விஷேட பூஜை செய்யப்பட்டது.
யாழ்ப்பாண அரசர்களான ஆரிய சக்கரவத்திகளின் அரச வாள்களில் ஒன்றான வாளானது வீரமாகாளி அம்மன் கோவிலில் பல வருடங்களாக வைத்து கொள்ளப்பட்டு வந்தது. அவ் வாளானது விலை மதிக்க முடியாத இரத்தினக் கற்களால் பதிக்கப்பட்டிருந்தது. வீரமாகாளி அம்மன் கோவிலில் பாதுகாக்கப்பட்டு வந்த அவ் இரத்தினக் கற்களால் பதிக்கப்பட்டிருந்த வாளானது 15 வருடங்களுக்கு முன் ஒரு கண்காட்சிக்காக கொண்டுசெல்லப்பட்டு, அது மறுபடியும் அக் கோவிலுக்கு வந்தடையவில்லை. பிற்பதாக அக் கோவில் அவ் வாளைப்போன்று ஒரு மாதிரியைச் செய்து வைத்துள்ளது. அது மூன்றரை அடி அளவு கொண்ட வாளாகும்.
இரத்தினக் கற்களால் பதிக்கப்பட்டிருந்த அரச வாள்களில் ஒன்றான அவ் வாள் 2009 ஆம் ஆண்டிலிருந்து காணப்படவில்லை. இவையாவும் வாள் கொடுக்கும் தருணம் சாட்சியாயிருந்து அக்காலத்து வீரமாகாளியம்மன் கோவில் தர்மகர்த்தாவினால் எனக்கு அறிவிக்கப்பட்டது. அரச வால்களுக்கு உரித்தான வீரமாகாளியம்மன் கோவிலிலிருந்த வாளை பாதுகாப்பாகவும் கனத்துடனும் பராமரிக்கவேண்டிய கோவில் குருக்கள் அவ் வாளை கொடுத்தது சரியான காரியம் அல்ல. இப்பேற்பட்ட அசதியான காரியங்களால் யாழ்ப்பாண இராச்சியத்தின் முக்கியமான வரலாற்று ஆவணத்தை இழந்தது மட்டுமல்லாது, நம் பின் சந்ததியார்களுக்கு நம் வரலாற்று சிறப்பினை பாதுகாத்து காண்பிக்கத் தவறிவிட்டோம். இனிவருங்காலங்களில் நம்முடைய வரலாற்று ஆவணங்களை அசதியாய் விட்டுவிடாது அதனை நம் எதிர்கால நோக்கோடு பாதுகாப்போம்.
தகவல்: ராஜநாயகம் (மகாராஜா ராஜா ரெமீஜியஸ் கனகராஜாவின் அந்தரங்கச்செயலாளர் , ராஜதானி நிலையம்ம் நெதர்லாந்து) -
Rajanayagam (PA to HRH Raja of Jaffna)
Rajadhani Nilayam
P.O. Box 32325
2503 AA The Hague
The Netherlands
Fax: +31(0)703934544
Website: http://www.jaffnaroyalfamily.org
Twitter: https://twitter.com/RajaofJaffna
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.