[ இச்செய்திகளைத் தொகுத்து வழங்கியவர் பேராசிரியர் முனைவர் சா. குருமூர்த்தி, பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை, சென்னைப் பல்கலைக் கழகம் (ஓய்வு). தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடான 'அருங்கலைச் சொல் அகரமுதலி' உதவியுடன் இதைத் தமிழாக்கி தட்டச்சு செய்தவர் சேசாத்திரி ]
சென்னைப் பல்கலைக்கழகத்தின் பண்டை வரலாறு மற்றும் தொல்லியல் துறை 1970 முதல் 1976 வரை பற்பல பருவங்களில் காஞ்சிபுரத்தில் தொல்லியல் அகழாய்வை மேற்கொண்டது. காஞ்சிபுரத்துடனான பல்லவர் கூட்டு என்பதில் கவனம் குவிக்கும் நோக்கில் பேராசிரியர் முனைவர் டி. வி. மகாலிங்கம் தலைமையில், பேராசிரியர் முனைவர் சா. குருமூர்த்தியும் இணைந்து, தொல்லியலாளரும், தொழினுட்பரும் (technicians) கொண்ட ஒரு அணி இந்த அகழாய்வை மேற்கொண்டது. காஞ்சிபுரத்தில் உள்ள முதுபழமை வாய்ந்த சங்கர மடமும் காஞ்சிபுரத்துடனான தன் கூட்டு அதன் தொடக்கம் முதலே இருந்தது என்ற கோருரிமைகளைக் (claims) கொண்டிருந்தது.
இதற்காக நான்கு வெவ்வேறான பரப்பிடங்கள் அகழி (trench) அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்டன. இப்பரப்பிடங்களில் பின் வரும் இடங்கள் அடங்கும்:
1. காமாட்சி அம்மன் கோவிலுக்கு முன் உள்ள வளாகம்.
2. காமாட்சி கோவிலுக்குப் பின்புறம் உள்ள காளி கோவில் வளாகம்.
3. வரதராச பொருமாள் கோவிலுக்குள் உள்ள வளாகம்.
4. ஏகாம்பரேசுவரர் கோவிலுக்கு நெருக்கமான வளாகம்.
இந்த அகழாய்வு, கட்டமைப்பு மீதிமிச்சங்களுக்கு நடுவே காஞ்சிபுரத்தின் தொடக்க வரலாறு மற்றும் பண்பாடு குறித்து மதிப்புள்ள செய்திகளை எறிந்துள்ள பெரும் அளவிலான பல்வேறு வகைப்பட்ட தொல்பொருள்களை ஈட்டித் தந்தது (yielded). கட்டமைப்பு மீதிமிச்சங்களில் அடங்குவனவற்றுள் காமாட்சி அம்மன் கோவில் அருகே அமைத்த அகழியில் தரையில் இருந்து 18 அடி ஆழத்திற்கு கீழே ஒரு குவிமாடம் போன்ற கட்டமைப்பு, அதன் மேடை ஆகியன கண்டறியப்பட்டதும் சேரும். இதுவே காஞ்சிபுரத்தின் முதல் பௌத்த மீதிமிச்சம். ஒரு எழுத்து பொறிக்கப்பட்ட பானைஓடு கூட குவிமாட மீதிமிச்சத்திற்கு அருகே சிவப்புநிற மட்கலத்தில் பிராகிருத மொழியில் பிராமி எழுத்தில் கண்டறியப்பட்டது. அது பூ-த-ல-சி- த எனப் படித்து அறியப்படட்து. அது ஒரு பௌத்த துறவாளரின் பெயராகலாம். மற்றோர் இடத்தில் கி.பி. 10 ஆம் நூற்றாண்டின் அமர்ந்த நிலை புத்தர் சிலை காணக் கிடைத்தாலும், இதுவே 7 ஆம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்திற்கு வருகை தந்த சீனப் பயணி (செலவர்) யுவான் சுவாங்கால் சான்றுரைக்கப்பட்ட காஞ்சிபுரத்திற்கான பௌத்தத் தொடர்புகளை நிறுவும் ஒரு திகைப்பூட்டும் கண்டுபிடிப்பு. இந்த அகழாய்வில் கண்டறியப்பட்ட குவிமாடத்தின் (Stupa) மீதிமிச்சங்களே காஞ்சிபுரத்துடனான பௌத்த சமய கூட்டிற்கான நினைவுச் சான்று.
ஏகாம்பரேசுவரர் கோவிலுக்கு அருகே செய்யப்பட்ட அகழாய்வு, ஒன்றன் கீழ் ஒன்றாக அகழியின் குறுக்கே இரு வரிசைகளில் ஒழுங்குபட அடுக்கப்பட்டிருந்த உரோம மதுக்குட சாடிகளை (amphora jars) பெரும் எண்ணிக்கையில் ஈட்டித் தந்தது. இந்த சாடிகள் கூம்புவடிவினவாக அளவில் மூன்றடி நீளமுள்ளனவாக ஒன்பது விரற்கடை அகலம் கொண்ட வாயை உடையனவாக உள்ளன. அதில் மூடியும் உள்ளது. இந்த சாடிகள் மதுவை சேமிக்கும் நோக்கில் அமைந்தவை. அவை மூலவடிவு உரோம மதுக்குடம் போல் செய்யப்பட்டவை. இங்கு மதுக்குட சாடிகளைக் கண்டறிந்திருப்பது கிறித்து ஊழிக்கு முன்னும் பின்னுமாக சில நூற்றாண்டுகள் தமிழ்நாட்டிற்கும் உரோமத்திற்கும் வணிக, பண்பாட்டுத் தொடர்புகள் நிலைப்பட்டு இருந்ததைகச் சுட்டுகின்றது. அக்காலத்தே உரோம வணிகர் வணிக நோக்கங்களுக்காக தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர். அவர்கள் மணிவகைகளை செய்யும் நோக்கங்களுக்காக படிகப்பச்சைக் கல் (Beryl stone) போன்ற அரை மணிக்கற்களை வாங்கி உள்ளனர். உரோம அரசிகள் இம்மணிகளை அணிவதில் விருப்பம் கொண்டிருந்தனர். உரோம வணிகர்கள் அக்காலத்தில் தமிழ்நாட்டின் அகநாட்டிலும் கடற்கரையிலும் கூட குடியேறி இருந்தனர். அவர்தம் குடியேற்றங்களுள் ஒன்று புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரிக்கமேட்டில் அகழாய்வு செய்யப்பட்டது. பெரும் எண்ணிக்கையில் உரோம காசுகள், உரோம மட்கலங்கள் ஆகியன இந்த அகழாய்வுகளில் முனைவர் மார்டிமர் வீலரால் இத்தளத்தில் 1941 - 1942 ஆம் ஆண்டுகளில் கண்டறியப்பட்டன. சங்க இலக்கியங்கள் பல இடங்களில் குறிக்கும் யவனர்கள் உரோமர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதைமுன்னிட்டு, தமிழ்நாட்டில் உரோமருடைய தொடர்பு சங்க இலக்கியத்தின் அடிப்படையில் மட்டும் நிறுவப்பட்டிருக்கவில்லை, ஆனால் அரிக்மேடு, காஞ்சிபுரம், துறையூர், கொற்கை, கரூர், அழகன் குளம் முதலாய தளங்களின் தொல்லியல் அகழாய்வுகளாலும் கூட நிறுவப்பட்டுவிட்டன.
இந்த அகழாய்வுகள் சுடுமண் காசு வார்ப்புக் கூடுகளை பெரும் எண்ணிக்கையில் காஞ்சிபுரம் தளத்தில் ஈட்டித் தந்தன. அவை இத்ததளத்தில் முத்திரைக் காசுகளையும், சாதவாகனர் காசுகளையும் வார்க்கப் பயன்படுத்தப்பட்டன. இதற்கு முந்தைய ஆகழாய்விலும் கூட சாதவாகனர் காசுகள் இவ்விடத்தில் இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறையோரால் (ASI) சங்கர மடச் சுற்றுப்புறத்தில் கண்டறியப்பட்டன. சாதவாகனர் காசுகள் கண்டறியப்பட்டிருப்பது காஞ்சியில் பல்லவர் எழுச்சிக்கு முன்னீடாக கி.பி.1 ஆம் மற்றும் 2 ஆம் நூற்றாண்டுகளில் காஞ்சிபுரத்தில் சாதவாகனரின் அரசியல் தாக்குரவின் தாக்கத்திற்கும் தொடர்பிற்கும் சான்றுரைக்கின்றன.
பெரும் எண்ணிக்கையில் கருப்பு - சிவப்புநிற மட்கலங்கள், சிவப்புநிற மட்கலங்கள், கருப்புநிற மட்கலங்கள், செம்மஞ்சள்நிற மட்கலங்கள் சாம்பல்நிற மட்கலங்கள் முதலாய மட்கலத் தொழில்கள் இத்தளத்தில் காணப்பட்டன. இங்கத்து பானைஓடுகள் பலதிறப்பட்ட கீறல்குறியீட்டுக் (graffiti) குறிகளைப் பெற்றுள்ளன. ஏற்கெனவே சுட்டியது போல பானைஓட்டின் மேல் பிராமி எழுத்துப் பொறிப்பு பெற்ற ஒரு சாம்பல்நிறப் பானைஓடு இந்த அகழாய்வில் இருந்து திரட்டப்பட்டது. பிராமி பொறிப்புள்ள பானைஓடுகள் தமிழ்நாட்டில் அரிக்கமேடு, உறையூர், அழகன் குளம், கொற்கை, ஆதிச்சநல்லூர் முதலாய பல தளங்களில் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. இந்த பிராமிப் பொறிப்பு பானைஓடுகள், பிராமி எழுத்து கிறித்து ஊழிக்கு முன்பும் பின்புமாக முதல் சில நூற்றாண்டுகள் தமிழ்நாட்டில் பரவலாக வழங்கி வந்தது என்ற உண்மைக்கு சான்று ஏந்துகின்றன. இங்கு இதன் மொழி தமிழாக இருந்தபோதும் இதே எழுத்தின் மொழி இந்தியாவின் பிற பகுதிகளில் பிராகிருதமாக இருந்தது. மிகத் தொடக்ககால பிராமி எழுத்து கி.மு, 3 ஆம் நூற்றாண்டினதாக நாட்குறிக்கத்தக்க அசோகனின் கல்வெட்டுகளில் காணப்பட்டு உள்ளது இது அசோகன் பிராமி என்று கூறப்படுகின்றது, அதேநேரம் தமிழ்நாடடில் காணப்படும் பிராமி தமிழ் பிராமி என்று அறியப்படுகின்றது.
பல்வேறு பொருள்களால்ஆன மணிகளும் வளையல்களும், மாந்தர்,மற்றும் விலங்குகளின் வடிவுகளை நிகர்த்த சுடுமண் பொருள்கள் முதலாய சிறு தொல்பொருள்களும் பெரும் எண்ணிக்கையில் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. சங்க இலக்கியங்களில் மிகப்பல இடங்களில் குறிப்பிடக் காணப்படும் இந்த வளையல்களும் மணிகளும் பெரும்பாலும் சங்கினால் ஆனவை. சங்க இலக்கிய ஆக்கங்களின்படி தமிழ்ப் பெண்டிர் இந்த சங்கு வளையல்களை பெரிதும் விரும்பினர். மட்கலங்களோடு சேர்த்து சிறு தொல்பொருள்களும், கட்டமைப்பு மீதிமிச்சங்களும் அக்கால காஞ்சிபுரத்து மக்களின் அன்றாட வாழ்க்கையை மீட்டமைப்பதில் மிகவும் பயனார்ந்தவையாய் இருக்கும்
காஞ்சிபுரம் ஒரு மிகத் தொன்மையான நகரம், அதோடு கி.மு. 5 ஆம் நூற்றாண்டினரான பதஞ்சலி என்னும் ஒரு சமற்கிருத அறிஞரால் அது ஒரு அருந்திரு நகரம் என்று குறிப்பிட்டு அழைக்கப்படுகின்றது. தொடக்கத்தில் சொன்னாற் போல காஞ்சிபுரம் சீனப்பயணி யுவான் சுவாங்கால் வருகைதரப்பட்டது, அதை அவர் கடற்கரையில் இடங்கொண்ட நகரம் எனக் குறிப்பிடுகின்றார் ஆனால் இப்போதைய காஞ்சிபுரம் இந்நகரின் குறுக்கே ஒரு சிற்றோடை போல் பாய்ந்தோடும் வேகவதி ஆற்றின் கரைமேல் அமையப் பெற்றுள்ளது. ஆதலால் பல்லவர்களின் கோவில்கள் இப்போதைய காஞ்சிபுரத்தில் இடம் கொண்டுள்ளன. இத்தளத்தில் நிகழ்த்திய அகழாய்வுகள் பல்லவரின் அரண்மனை மீதிமிச்சங்கள் எதனையும் ஈட்டித் தரவில்லை. ஆந்திர பிரதேசத்தில், கடற்கரையின் மேல் காஞ்சிபுரம் என்று ஒரு நகர் அமைந்துள்ளது. அதைமுன்னிட்டு, யுவான் சுவாங்கால் குறிப்பிடப்பட்ட காஞ்சி ஒன்றுடன் இப்போதைய காஞ்சிபுரத்தை அடையாளப்படுத்துவதில் ஏதோ குழப்பம் நிலவியது. இத்தளத்தில் பற்பல பருவங்களில் பல்வேறு அமைப்புகளால் நடாத்தப்பட்ட அகழாய்வின் செல்வழியில் பல்லவர்தம் புதைந்த அரண்மனையின் அல்லது ஏதேனும் கட்டமைப்பு மீதிமிச்சங்களின் சுவடு கூட தென்படவில்லை.
மட்கல ஆய்வின் அடிப்படையில் இத்தளத்தின் கரிமம் 14 காலக் கணக்கீட்டை கி.மு.1ஆம் ஆயிரஆண்டுகள் (millenium) தொட்டு கி.பி. 3 ஆம் நூற்றாண்டு வரை என்று பொருத்தலாம். ஆயினும், இத் தளத்திற்கு கிட்டும் கரிமம் 14 காலக் கணக்கீடு கி.மு 5 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திறகு இதாவது, 480BCE பின்னே செல்கிறது. இவ் அகழாய்வின் அகழிகளில் மிகக் கீழ்மட்ட அளவான சற்றொப்ப 18 அடிகளுக்கு கீழே திரட்டிய கருகிய மீதிமிச்சங்கள் காலத்தைத் தீர்மானிப்பதற்காக மும்பையின் டாடா நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டன. இந்தக் கருகிய மீதிமிச்சங்கள் கரிக்கட்டையாகவோ அல்லது எலும்பு, உமி, பருத்தி முதலாய வேறு ஏதேனும் பொருளாகவோ இருக்கலாம்.
அனுப்பியவர்: சேசாத்திரி இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.