கவிஞர் புலமைப்பித்தனின் மறைவு துயரைத்தந்தாலும், அவர் ஒரு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்துவிட்டுத்தான் சென்றிருக்கின்றார். கலைஞர்களுக்கு என்றுமே அழிவில்லை. இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்த பின்னும் வள்ளுவர் இன்னும் இலக்கிய உலகில் வாழ்ந்துகொண்டிருக்கின்றார். சிலப்பதிகாரம் தந்த இளங்கோவடிகள், மணிமேகலையை வழங்கிய சீத்தலைச் சாத்தனாரென்று தமிழின் தலை சிறந்த இலக்கியப்படைப்பாளிகள் இன்றும் தம் படைப்புகளூடு வாழ்ந்துகொண்டுதானிருக்கின்றார்கள். மகாகவி பாரதி மறைந்து பல தசாப்தங்கள் கடந்து விட்டன. இன்றும் அவரது படைப்புகளூடு வாழ்ந்து கொண்டிருதானிருக்கின்றார். கவிஞர் புலமைப்பித்தனின் மறைவும் இத்தகையதுதான். இனியும் அவர் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழ் இலக்கியத்தில் வாழ்ந்துகொண்டிருதானிருப்பார்.
இன்று தமிழ்த்திரைப்படப் பாடல்களையும் தமிழ் இலக்கியத்தின் அங்கமாகப் பார்க்கும் நிலை உருவாகிவிட்டது. உதாரணத்துக்கு முனைவர் கெளசல்யா சுப்பிரமணியத்தின் இசை பற்றிய ஆய்வுக்கட்டுரைகளில் இத்தகைய போக்கினைக் காணலாம். சங்கப்பாடல்கள் எவ்விதம் இன்று வரை நிலைத்து நிற்கின்றனவோ அவ்விதமே சிறந்த தமிழ்த்திரைப்படப்பாடல்களை வழங்கிய கவிஞர் கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கவிஞர் அ.மருதகாசி, கவிஞர் வாலி, கவிஞர் புலமைப்பித்தன், கவிஞர் உடுமலை நாராயண கவி, கவிஞர் வைரமுத்து எனப் பலரின் திரைப்படப்பாடல்கள் தமிழ் இலக்கிய உலகில் நிலைத்து நிற்கும்.
கவிஞர் புலமைப்பித்தனின் பல பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்தவை. குறிப்பாக 'ஆயிரம் நிலவே வா', 'ஓடி ஓடி உழைக்கணும்', 'எங்கே அவள்', 'பாடும்போது நான் தென்றல் காற்று', 'நீங்க நல்லாயிருக்கணும்' பாடலில் வரும் கருத்தாழம் மிக்க வரிகள், 'சிரித்து வாழ வேண்டும்', 'நான் யார் நான் யார்' இவ்விதம் கூறிக்கொண்டே போகலாம்.
எம்ஜிஆரின் அபிமானத்துக்குரிய கவிஞர்களில் கவிஞர் வாலி, கவிஞர் புலமைப்பித்தன் ஆகியோர் முக்கியமானவர்கள். இவர் எம்ஜிஆரின் நெருங்கிய நண்பர்களிலொருவரும் கூட. கவிஞர் புலமைப்பித்தன் தமிழகத்தின் அரசவைக் கவிஞராக விளங்கியவரும் கூட.
கலைஞனொருவருக்கு நாம் செய்யக்கூடிய சிறப்பான அஞ்சலி அக்கலைஞரின் படைப்புகளூடு அவரை நினைவு கூர்வதுதான். அவ்வகையில் அவர் இழப்பால் துயரில் வாடும் அனைவர்தம் துயரில் பங்குகொள்வதோடு , அவர் நினைவாக எனக்கு மிகவும் பிடித்த வரிகளை உள்ளடக்கிய 'நேற்று இன்று நாளை' திரைப்படத்தில் இடம் பெறும் 'பாடும் போது நான் தென்றற் காற்று' பாடலையும் இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.
இப்பாடலுக்கு இசையமைத்தவர் எம்.எஸ்.வி. பாடியவர் எஸ்.பி.பி. நடிப்பு எம்ஜிஆர் & ராஜஶ்ரீ. பாடல் வரிகள்: கவிஞர் புலமைப்பித்தன். இவர்களில் ராஜஶ்ரீ தவிர அனைவரும் இன்றில்லை. கவிஞர் புலமைப்ப்பித்தனுடன் , மறைந்த ஏனையவர்களையும் இத்தருணத்தில் நினைவு கூர்வோம்.
இப்பாடல் எனக்கு மிகவும் பிடித்த வரிகள்:
"எல்லைகள் இல்லா உலகம் -
என் இதயமும் அதுபோல் நிலவும்
புதுமை உலகம் மலரும் -
நல்ல பொழுதாய் யாருக்கும் புலரும்
யாரும் வாழ பாடும் காற்றும்
நானும் ஒன்றுதானே -
இன்ப நாளும் இன்று தானே" -
பாடும் போது நான் தென்றற் காற்று: https://www.youtube.com/watch?v=7BgW1q-JTzU