நடிகர் விவேக் மாரடைப்பினால் மறைந்து விட்ட செய்தி துயரகரமானது. மாரடைப்பு சிலரைச் சிலரைச் சடுதியாகத் தூக்கிச் சென்று விடுகின்றது. ஏற்கனவே விவேக் இருதய நோயினால் பாதிக்கப்பட்டிருந்தாரா அல்லது இதுதான் முதன் முறையா தெரியவில்லை. விவேக் 59 வயதில் நம்மை விட்டுப்பிரிந்துள்ளார். அவரது மறைவு என் தந்தையாரின் மறைவினை நினைவு படுத்தியது. என் தந்தையார் எம் பதின்ம வயதில் எம்மைவிட்டு , மாரடைப்பினால் சடுதியாகப்பிரிந்தபோது அவருக்கு வயது 58.
மானுடர் வாழ்வு நிரந்தரமானதல்ல. நிச்சயம் முடிவுண்டு. இருக்கும்வரை இன்புற்று இருப்பதுடன், 'எல்லோரும் இன்புற்றிருப்பதன்றி வேறொன்றறியேன் பராபரமே' என்றும் இருப்பது இருப்பது இருப்புக்குப் பயன் தருவது. நடிகர் விவேக் அவர்களின் இருப்பு எமக்கு மகிழ்ச்சியை, சிரிப்பினைத் தந்த அதே சமயம் சிந்திக்கவும் வைத்தது. அதற்காக அவருக்கு எம் நன்றி எப்பொழுதுமிருக்கும். மக்கள் கலைஞர்கள் மடிவதில்லை. அவர்கள்தம் கலைகளினூடு எம்முடன் நிரந்தரமாக நிலைத்து நிற்பார்கள். இன்று வரை அவரைப் பார்த்து இரசித்ததைப்போல் இனியும் பார்த்து இரசிப்போம். மகிழ்வோம்.
அவரது நினைவாக அவர் கவிஞர் வைரமுத்துவைப்போல் நடித்த காணொளியொன்றினை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். கலைஞர்களை அவர்கள் உயிராக நினைத்து வாழ்ந்த அவர்கள்தம் கலையினூடு நினைவு கூர்வதே மிகச்சிறந்ததென்பேன். அவர் கவிஞர் வைரமுத்துவை உள்வாங்கி நடித்த அவரது நடிப்பாற்றல் என்னை மிகவும் கவர்ந்தது. உண்மையில் அவர் திரையுலகுக்கு வருவதற்குக் காரணமே அவரது கவிஞர் வைரமுத்துவைப்போல் நடித்த நடிப்பே என்பதை இக்காணொளியில் அவரே கூறியுள்ளார். அதனைப்பார்த்தபின்னரே இயக்குநர் கே.பாலச்சந்தர் அவரைத் திரையுலகுக்கு அறிமுகப்படுத்தினாராம்.
அதே சமயம் இன்னுமொன்றினையும் இங்கு கூறிட விரும்புகின்றேன். கவிஞர் மனுஷ்யபுத்திரன் அவர்கள் நடிகர் விவேக் பற்றி எழுதிய இரங்கற் கவிதையில் பின்வருமாறு கூறியிருக்கின்றார்:
"தடுப்பூசியால்
இலட்சத்தில் ஒருவருக்கு
இப்படி நடக்கலாம் என்கிறார்கள்
நமக்குத் தெரியாது
என்ன நடந்தது என்று
ஆனால் இலட்சத்தில் ஒருவனுக்கு
அப்படி நடக்கக் கூடாது"
மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமான கவிஞர் இவ்விதம் பொறுப்பற்ற முறையில் கூறியிருக்கத்தேவையில்லை. முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் பொறுப்பற்ற கூற்றுகளை மில்லியன் கணக்கான அமெரிக்கர்கள் இன்னும் உண்மையென நம்புவதைப் பார்க்கின்றோம். இன்று உலகம் முழுவதும் மில்லியன் கணக்கில் கொரொனா என்னும் தொற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்குமிச் சமயத்தில் மக்கள் தடுப்பூசி எடுக்க வேண்டியது சமுதாயக் கடமையென்று நம்புபவன். ஆனால் இன்னும் பலர் தடுப்பூசி எடுப்பதற்குத் தயங்கிக்கொண்டிருக்கின்றார்கள். இச்சூழலில் கவிஞர் மனுஷ்ய புத்திரன் இவ்விதம் எழுதியிருக்கத் தேவையில்லை. 'நமக்குத் தெரியாது என்ன நடந்தது என்று' என அடுத்து வரும் வரிகளில் அவர் கூறியிருந்தாலும், 'தடுப்பூசியால் இலட்சத்தில் ஒருவருக்கு இப்படி நடக்கலாம் என்கிறார்கள்' என்னும் ஆரம்ப வரிகள் பொறுப்பற்றவை. தடுப்பூசி எடுக்கவிருக்கும் மக்களையும் தயங்க வைப்பவை. நடிகர் விவேக்கின் மறைவுக்குக் காரணம் மாரடைப்பு. அது தடுப்பூசியால் வந்ததா என்பது கூட நிரூபிக்கப்படவில்லை. இந்நிலையில் இவ்விதமானதொரு சந்தேகத்தைக் கிளப்பியிருக்கத் தேவையில்லை. சின்னக்கலைவாணரே உயிருடன் இருந்திருந்தால் நிச்சயம் இவ்விதம் கூறியிருக்க மாட்டார்.
உண்மையில் நடிகர் விவேக்கின் மறைவு எதிர்பாராதது. அதிர்ச்சியினைத் தருவது. கலையுலகுக்கு மிகப்பெரிய இழப்பு என்பேன். அவரது மறைவால் வாடும் அனைவருடனும் நானும் கலந்துகொள்கின்றேன். ஆழ்ந்த இரங்கலைத்தெரிவித்துக்கொள்கின்றேன்.
நடிகர் விவேக் கவிஞர் வைரமுத்து போல் நடித்த காணொளி: https://www.youtube.com/watch?v=dyHkJKAKxjg