என அபிமான நடிகைகளிலொருவர் நடிகை ஜெயாபாதுரி. சாதாரண அடுத்த வீட்டுப் பெண் போன்ற தோற்றம். மானுட உணர்வுகளை உள்வாங்கி மிகச்சிறப்பாக, இயல்பாக நடிக்கும் திறமை. இவை இவரது நடிப்பின் வலுவான அம்சங்கள். ஹிந்தித் திரைப்படங்களில் நடிக்க வருவதற்கு முன்னரே இவருக்கு நடிப்புத்திறமையில் ஆர்வமிருந்தது. உலகப்புகழ்பெற்ற இயக்குநர் சத்யத் ரேயின் 'மாநகர்' திரைப்படத்தில் இவர் தன் பதின்ம வயதில் நடித்திருக்கின்றார். பின்னர் இவர் நடிப்பு, சினிமா இவற்றில் ஆர்வம் கொண்டு புனாவிலுள்ள திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து தங்கப்பதக்கம் பெற்று தேர்ச்சியடைந்தார். இவரது முதலாவது ஹிந்தித்திரைப்படம் ரிஷிகேஷ் முகர்ஜியின் இயக்கத்தில் வெளியான 'குட்டி'.
இதில் இவர் நடிகர் தர்மேந்திராவின் மேல் அதீத மையல் கொண்ட பாடசாலை மாணவியாக நடித்திருப்பார். திரை நிழலை நிஜமென்று நம்பி வாழும் சிறுமி. நிஜ வாழ்வில் இவர் மேல் தூய காதல் கொண்ட இளைஞனின் அன்பைக் கூடப் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு நடிகர் தர்மேந்திரா மீதான இவரது மையல் இருக்கும். நடிகர் தர்மேந்திராவை அறிந்த இவரது மாமா இவரை அவர் நடிக்கும் திரைப்பட ஸ்டுடியோவுக்கு அழைத்துச் செல்கின்றார். திரைப்படம் எவ்விதம் உருவாகின்றது என்பதையெல்லாம் இவர் அறிந்துகொள்ளச் செய்கின்றார். அவற்றின் மூலம் நிழலை நிஜமென நம்பிய மாணவி நிஜம் வேறு, நிழல் வேறு என்பதை புரிந்துகொள்கின்றாரா என்பதுதான் பிரதான கதையம்சம்.
முதல் படத்திலேயே இவர் பிலிம்ஃபெயர் சஞ்சிகையின் சிறந்த நடிகைக்கான விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்டார். உண்மையில் குட்டி திரைப்படத்தில் இவர் நடிப்பைப் பார்ப்பவர்கள் இவர் ஒரு புதுமுகம் என்பதையே உணர மாட்டார்கள். அவ்வளவுக்குத் தேர்ச்சி பெற்ற நடிகையின் நடிப்பாக இவரது நடிப்பிருக்கும். பின்னர் தன் நடிப்புக்காகப் பல்வகைப்பிரிவுகளில் (மூன்று சிறந்த நடிகைக்காக, மூன்று சிறந்த உப நடிகைக்காக) மொத்தம் ஒன்பது பிலிம்ஃபெயர் விருதுகளைப்பெற்றாரென்பது சரித்திரம்.
தற்போது உத்தரப்பிரதேசப்பிரதேசத்திலிருந்து சமஜ்வாஜிக் கட்சியின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினராகவிருக்கின்றார். நீண்ட நாள்களாக நான் தேடிக்கொண்டிருந்த இவரது முதல் ஹிந்தித்திரைப்படமான 'குட்டி' திரைப்படத்தை அண்மையில் யு டியூப்பில் கண்டு களித்தேன். அக்களிப்பினை உங்களுடன் பகிர்ந்துகொள்வதே இப்பதிவின் பிரதான நோக்கம்.
குட்டி திரைப்படம் (ஹிந்தி) - https://www.youtube.com/watch?v=oTixlSLgC6M