நெருக்கடியான சூழ் நிலையில்தான் உன்னதமான கலை, இலக்கியங்கள் பிறக்கும்/ என்றான் ஒரு அறிஞன். இன்று நெருக்கடி மிக்க சூழ்நிலையில் தவிக்கின்ற யாழ் மண்ணுக்கு சமீபத்தில் சென்றபோது அந்த அறிஞனின் வார்த்தைகள்தான் எத்துணை அர்த்தம் பொதிந்தது என்பது புலனாகியது. ஷெல்கள் விழுந்தாலும், வானில் பறக்கும் ஹெலிகொப்டர் பறவைகள் "துப்பாக்கிச் சன்ன" எச்சில்களை துப்பினாலும், வரட்சிக்கு வசந்தம் வீசுமாப்போல் இலக்கிய அரங்குகளும், நூல் வெளியீடுகளும், கவியரங்குகளும் குறையேதுமின்றி நடந்து கொண்டிருப்பதை அங்கு காண முடிந்தது. இன்று தமயந்தியின் புகப்படக் கண்காட்சி - யாழ்.பீச் இன் ஹோட்டேலில் என்ற விளம்பரத்தை நாளேடு ஒன்றில் பார்த்ததும் ஆர்வம் மீதுற விரைந்தேன்.
"தமயந்தி": நேரில் சென்று பார்த்த பின்பே என் கணிப்புத் தவறாகியது. அவர் 'இளைஞர்'. ஊர்காவற்றுறை, மெலிஞ்சிமுனையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவரது கரம் 'கமெரா"வை மட்டும் பிடிக்கவில்லை, இவரது பேனாவில் பிறந்த இரண்டு கவிதை நூல்களும் உண்டு. "சாம்பல் பூத்த மேட்டில்", "உரத்த இரவுகள்" ஆகிய இரண்டு தொகுப்புகளின் பிரம்மா இவர்.
கண்காட்சியில் இவர் வெளியிட்ட பிரசுரம் இரத்தினச் சுருக்கமாக புகைப்படக் கலையின் தாற்பரியத்தை விளக்குகிறது. அவர் சொல்கிறார்; "1839இல் புகைப்படம் தோன்றியது. இற்றைவரை காலத்தில் உலகெங்கிலுமான அறிவியற் சாதனைகளினாலும், படைப்புத்திறன் மிக்க கலைஞர்களின் பரிசோதனை முயற்சிகளினாலும் கலை என்ற வகையில் பாரிய வளர்ச்சி நிலைகளை அது எய்தியிருக்கிறது. ஆனால், இன்றும் ஈழத் தமிழர்களிடையில் புகைப்படத்துறை ஒரு கலையாக ஸ்தாபிதம் அடைந்திருக்கிறது எனக் கூற முடியாது. ஸ்ரூடியோக்களுக்குள் முடங்கியுள்ள ஒரு தொழிலாகவும், வெளியில் சில நிகழ்வுகளைப் பதிவு செய்யும் சடங்காகவுமே இது கருதப் படுகிறது. புகைப்படக் கண்காட்சிகளையோ, இத்துறைக் கலைஞர்களாகத் தமது ஆளுமைகளை ஸ்தாபித்துக் கொண்டவர்களையோ இங்கு காண முடியாமலே இருக்கிறது. எமது வெகுஜனத் தொடர்பு சாதனங்களில் இவை பற்றிய செய்திகளோ, கட்டுரைகளோ முக்கிய இடத்தைப் பெறுவதுமில்லை. இந்த நிலைமைகள் தொடர்ந்தும் நீடிப்பது மகிழ்ச்சிக்குரியதல்ல. எமது சமூக, பொருளாதார, அரசியற் கலாசார அம்சங்கள் புகைப்படம் என்ற கலை வடிவத்தினூடாக வெளிப்பாடு காணவேண்டும். ஆளுமை மிக்க கலைஞர்கள் உருவாக வேண்டும்."
கலைஞர் தமயந்தியின் கூற்றுக்களை தவறெனக் கொள்ள முடியாது. பேனை பிடிப்பவர்கள் அனைவருமே எப்படிப் படைப்பாளிகள் ஆகிவிட முடியாதோ, அதுபோலவே "கெமெரா" ஏந்துபவர்கள் அனைவருமே உன்னதமான புகைப்படக் கலைஞர்களாகிவிட முடியாது.
தமயந்தியின் படங்கள் (கறுப்பு வெள்ளை, வர்ணம்) அனைத்துமே ஏதேனும் ஒரு செய்தியை அல்லது சமூக விமர்சனத்தைச் சொல்கின்றன. சமூகப் பிரக்ஞை இவருக்கிருப்பதனால் ஒவ்வொரு படங்களும் கவிதையாகியுள்ளன.
வெறுமனே தான் எடுத்த படங்களை வரிசையாக அடுக்கி வைத்து விடாமல் அவை ஒவ்வொன்றுக்கும் கவிதை வரிகளையும் அழகிய எழுத்துக்களில் எழுதி வைத்துள்ளார். அக் கவிதை வரிகளே படங்களின் விளக்கக் குறிப்புக்களாகியுள்ளன.
நம் நாட்டுக் கலைஞர்கள் முதல் தமிழகக் கலைஞர்கள் ஈறாக சர்வதேச புகழ்பெற்ற கவிஞர்கள் வரையில் இந்தக் கண்காட்சியில் அவர்தம் கவிதைகளின் மூலம் இடம் பெற்றுள்ளனர்.
பாப்லோ நெரூடா, மாய கோவ்ஸ்கி, பாரதி, ஆத்மாநாம், வைத்தீஸ்வரன், ஞானக்கூத்தன், சேரன், யேசுராசா, வ.ஐ.ச.ஜெயபாலன், ஹம்சத்வனி, சண்முகம் சிவலிங்கம், சு.வில்வரெத்தினம், சித்தி விநாயகம்பிள்ளை.... இப்படி பலரை வரிசைக் கிரமமாகச் சொல்லலாம்.
"ரசிக்கவிடு நம் தேச வனப்பை-
நாலு வார்த்தை எழுத விடு- பேச விடு" என்ற வாசகங்கள் கண்காட்சிக்கு வருவோருக்கு நல்வரவு கூறுகின்றன.
"வயல்வெளியில் நாற்று நடும் பெண்கள்" - நாங்கள் சேற்றில் சேற்றில் இறங்குகிறோம் நீங்கள் சோற்றில் கைவைக்க" - என்ற வரிகள்.
ஒரு பட்ட மரத்தின் பின்னணியில் காட்சி தரும் சூரியனுக்கு - "முகம் அழிந்த சூரியன்" - எனப் பெயர் சூட்டியிருக்கிறார்.
ஒரு பெண் குழந்தை தன் புறமுதுகை எமக்குக் காட்டியபடி கடலையே பார்த்துக்கொண்டிருக்கும் மனதைத் தொடும் படத்திற்கு எழுதப்பட்ட வரிகளைப் பாருங்கள்;
"மகளே!
கடல் பெரிது.
வானமும் பெரிது
உன் அப்பனின் படகோ
சிறிது-
ஆயினும் அவன் வலியன்
அலைகளை விலத்தி
மீன்களை நிரப்பி
மீளவும் வருவான்.
பசித்துத் திரியும்
நீலப் பேய்களின்
பற்களிற் சிக்காதவரை" -
வவுனியாவுக்கு அப்பால் ரயில் சென்று எத்தனை நாட்கள் என்று எமக்குத் தெரியாது; வவுனியாவுக்கு அப்பால் உள்ள ரயில் நிலையங்கள் அனைத்தும் வெறிச்சோடிப் போயுள்ள செய்தி மட்டுமே அனைவருக்கும் தெரியும்.
ஒரு ரயில் நிலையத்தையும் அதன் முன்னால் ஓடும் நீண்ட ரயில் பாதையையும் தமயந்தியின் "கெமெரா" சிறைப்படுத்தி இருக்கிறது. அதற்கு இடப்பட்ட கவிதையைப் பாருங்கள்;
"நீட்டி நிமிர்ந்து; மல்லாந்து
நிர்வாணமாய் நீ
துயில்கிறாய்
நீளக்குரலுடன்
தெற்கிலிருந்து வரும்
நின் காதலிக்காய்"
இந்த ரயில் காதலி எப்போது எம்மூருக்கு வருவாள் என்று புகைப்படக் கண்காட்சியை ரசித்துக்கொண்டிருந்த சிலர் சொன்னது காதில் விழுந்தது.
மண்டைதீவுக் கடலில் நிகழ்ந்த கோரம் தெரிந்ததுதான். எமக்கெல்லாம் செய்தியாகக் கிட்டிய அச்சம்பவத்தில் பலியானவர்களின் கோரமான காட்சி பார்ப்போர் மனதை பதைபதைக்க வைக்கிறது. சிலர் தம் கண்ணில் பனிக்கும் நீரை சிரமத்துடன் அடக்குகின்றனர்.
அப்படத்திற்கான கவிதை வரிகளோ ஆழமானவை சோகத்தை ஏற்படுத்துகின்றன;
"அசைந்துவரும் அடுக்கலையில்
பட்டுத்தெறிக்கும்
காற்றோடு
பட்டினி கலைக்க
பட்டை பறியோடு சென்றவரின்
கெட்ட நாற்றங்கள்.
வெட்டுண்டு துண்டாகி
மீன் தின்று மீதமாய்
மனிதப் பிணங்கள்
கரை கரையாய் ஒதுங்கின.
காற்றோடு கதறல்களும்
விண்ணை உலுப்பின
கடலோடு கண்ணீரும்
அலைகள் எழுப்பின"
கலைஞர் தமயந்தியின் இயற்பெயர் விமலறாஜன். ஏன் தமயந்தி என்ற புனை பெயரைச் சூட்டிக் கொண்டார் என்று கேட்பது அவசியமில்லாது போய்விட்டது. இவரது படங்கள் பிரான்ஸில் வெளியாகும் சில சஞ்சிகைகளிலும் இடம் பெற்றுள்ளன. பொழுது போக்குக்காக கெமராவை தூக்கிய இந்த இளைஞர் இன்று - பிரக்ஞாபூர்வமாக இக் கலைக்காக உழைக்கிறார். பொருளாதார ரீதியில் நட்டங்களை அவர் எதிர் நோக்கியபோதும் ரசிகர்கள் தரும் உற்சாகம் இத்துறையில் அவரை மேலும் பிரகாசிக்க வைக்கும் என்பது திண்ணம்.
- இங்கே பதிவாகியுள்ள இரண்டு படங்களின் பிரதிகளை 27வருடங்களாகப் பாதுகாத்துத் தந்துதவிய அண்ணாவி ச. ஜெயராஜா(Bergen, Norway) அவர்களுக்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகள். -
நன்றி: http://www.piraththiyaal.com/2013/02/blog-post_2.html | வீரகேசரி வாரமலர் 07/12/1986 - கலாசார கோலங்கள்