சுப்பர் சிங்கர் ஜுனியர் - 4 போட்டி இம்முறை சர்வதேசத் தமிழர்களின் பார்வையை வெகுவாகத் திருப்பியிருக்கின்றது. காரணம் கனடியத் தமிழரான ஜெசிக்கா யூட் அதில் கலந்து கொண்டு சிறந்த பாடகிகளுள் ஒருவராக முன்னணியில் நிற்பதேயாகும். ஏற்கனவே கனடாவில் இருந்து பலர் இப்படியான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார்கள். சண் தொலைக்காட்சியில் எனது தமிழ் வகுப்பில் தமிழ் கற்ற மாணவனான சுபவீன் சென்ற வருடம் முதலிடத்தைப் பெற்று எமக்குப் பெருமை தேடித்தந்தார். யார், எங்கேயிருந்து வந்தார் என்பதைவிட, திறமைக்குச் சண் தொலைக்காட்சி அங்கே முதலிடம் கொடுத்திருந்ததைப் பலரும் பாராட்டியிருந்தார்கள். அது போலவே கனடாவில் இருந்து பாடக, பாடகிகளான எலிசபெத் மாலினி, விஜிதா, மகிஷா, சரிகா, சாயிபிரியன் போன்றவர்களும் சென்ற வருடங்களில் விஜே தொலைக்காட்சி சுப்பர் சிங்கர் போட்டியில் பங்கு பற்றியிருந்தனர். விஜே தொலைக்காட்சி மூலம் தங்கள் திறமையைக் காட்டியிருந்தனர். இம்முறை 14 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான போட்டியில் ஜெசிக்காவிற்கு நல்ல சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது. அதை எந்த அளவிற்கு அவர் பயன் படுத்துவார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இப்படியான நிகழ்ச்சியில் ஒருவர் எப்படித் திட்டமிட்டு ஒதுக்கப்படுவார் என்பதை ஏற்கனவே அங்கு சென்று நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்களிடம் உரையாடியபோது நான் நன்கு அறிந்து கொண்டேன். நீங்கள் பார்க்கும் காட்சிகள் எல்லாம் எடிட் செய்தபின் வரும் காட்சிகள்தான். திரைமறைவில் என்ன நடக்கிறது என்பது அனுபவப் பட்டவர்களுக்கே தெரியும். ஜெசிக்காவின் குடும்பமே இசைக் குடும்பமாகும். நான் கனடாவிற்கு வந்த பொழுது இங்கே உள்ள தமிழ் சிறுவர்களுக்காகத் ‘தமிழ் ஆரம்’ என்ற பெயரில் ஒரு சிறுவர் வீடியோ தயாரித்திருந்தேன். அதில் பல சிறுவர் பாடல்கள் இடம் பெற்றன. அவ்வாறு இடம் பெற்ற பாடல்களில் ‘சின்னச் சின்னப் பூனை’ என்ற சிறுவர் பாடலுக்குக் குரல் கொடுத்தவர் ஜெசிக்காவின் தந்தையின் சகோதரியாவார். அதற்கு ஆர்மோனியம் இசை தந்தவர் அவரது தந்தையாவார். எந்தவொரு தயக்கமும் இன்றி அவர்கள் தமிழ் சிறுவர்களின் எதிர்காலம் கருதி குடும்பமாகவே எங்களுக்கு உதவி செய்தனர். அமரர் அதிபர் கனகசபாபதி அவர்கள்தான் இவர்களை எனக்கு அறிமுகம் செய்திருந்தார். பல சிறுவர் சிறுமிகள் ஆர்வத்தோடு அந்தக் காட்சியில் நடித்திருந்தனர். இன்று புகழ் பெற்ற ஒரு ஒளித்தட்டாகத் ‘தமிழ் ஆரம்’ இருப்பதற்கு அவர் குரல் கொடுத்த அந்தப் பாடலும் ஒரு காரணமாகும். எழுத்தாளர்களான இராமகிஷ்னன், அ. முத்துலிங்கம் போன்றவர்கள் தமிழ் சிறுவர்களுக்கான அந்த ஒளித்தட்டை வெகுவாகப் பாராட்டியிருந்தனர். ஜெசிக்காவின் தந்தையும் சிறந்ததொரு பாடகராவார். பவதாரணியின் பாரதி ஆட்ஸ் இசைக் குழுவில் பங்குபற்றி பல பாடல்களை மேடைகளில் பாடியிருக்கின்றார். நட்சத்திர இரவு போன்ற நிகழ்ச்சிகளில் இவரது பாடல்கள் தனித்துவம் பெற்றிருக்கின்றன.
ஏற்கனவே ஹரிப்பிரியா, பாரத், ஸ்பூர்த்தி ஆகியோர் நேரடியாக நடுவர்களால் தெரிவு செய்யப்பட்டு விட்டார்கள். ஸ்ரீஷா நாலாவதாக வந்ததால் தெரிவு செய்யப்படவில்லை. முதலாவதாகத் தெரிவு செய்யப்பட்ட ஹரிப்பிரியா ஜீவா படத்தில் இடம் பெற்ற ‘எங்கே போனாய் யாரைத்தேடி’ என்ற பாடலைப் பாடியிருந்தார். யூனிவர்சிட்டி என்ற படத்தில் கார்த்திக் பாடிய ‘நெஞ்சே தள்ளிப்போ’ என்ற பாடலை பாரத் பாடியிருந்தார். சலங்கை ஒலி என்ற படத்தில் இடம் பெற்ற நாதவினோதம் என்ற பாடலை ஸ்பூர்த்தி பாடியிருந்தார். மனோ, சித்ரா, சுபா இதற்கு நடுவர்களாக இருந்தார்கள். மிகுதியான இடத்திற்கு ஏஞ்சலின், பிரவஸ்தி, ஸ்ரீஷா, அனுஷ்யா, அனல் ஆகாஷ், ஜெசிகா, ஷிவானி, மோனிகா ஆகியோர் வாக்குகளின் அடிப்படையில் இறுதிப் போட்டிக்குத் தெரிவாக இருக்கின்றார்கள். இந்த வாரம் மனதைத் தொட்ட பாடல்களில் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ ‘இது ஒரு நிலாக்காலம்’ என்ற பாடல்களை ஜெசிகாவும், ‘மலர்ந்தும் மலராத பாதி மலர்போல’ ‘காற்றின் மொழியே’ என்ற பாடல்களை அனல் ஆகாஷ் அவர்களும் பாடியிருந்தனர். அனல் ஆகாசின் முதல் சினிமா பாட்டு தனது இசையமைப்பில்தான் இருக்கும் என்று ஜேம்ஸ் வசந்தன் அவர்கள் மேடையிலேயே அவருக்கு வாக்குக் கொடுத்திருந்தார். ‘உதயா உதயா’ ‘தேசுலாவுதே தேன் மலராலே தென்றலே காதல் கவிபாடவா’ என்ற பாடல்களை அனுஷ்யா பாடியிருந்தார். ஆதிநாரயணராவின் இசையமைப்பில் மணாளனே மங்கையின் பாக்கியம் என்ற படத்தில் ஹம்ஸாநந்தி இராகத்தில் தொடங்கும் இந்தப் பாடல் இடம் பெற்றிருந்தது. இந்தப் பாடல் தெலுங்கில் பிரபலமானதால் தமிழில் மொழி மாற்றம் பெற்றது. ஸ்ரீஷா ‘மன்னவன் வந்தானடி’ ‘கள்வரே கள்வரே’ என்ற பாடல்களைப் பாடியிருந்தார்.
அடுத்ததாகத் தெரிவு செய்வதென்றால் ஸ்ரீஷாவைத்தான் தெரிவு செய்வோம் என்று நடுவர்களும் குறிப்பிட்டிருந்தனர். மூளைச் சுத்திகரிப்பு என்பது இதைத்தான். நடுவர்கள் சொன்னதுபோலவே ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டிருந்த பரத், ஸ்பூர்த்தி, ஹரிப்பிரியாவும் சொன்னார்கள். அனந் வைத்தியநாதன் சொன்தையே இவர்கள் எல்லாம் ஒப்படைக்கிறார்கள் என்று பிரியங்கா தனது ஆற்றாமையை அப்போது வெளிப்படுத்தினார்.
தொடக்கத்தில் இருந்தே இந்த நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஒரு உண்மை புரியம். ஹரிப்பிரியாவுக்குப் போட்டியாக வரக்கூடிய இருவர் இருந்தார்கள். ஒன்று ஸ்ரீஷா மற்றது அனுஷ்யா. அந்தப் போட்டியைத் தவிர்ப்பதற்காகவே முன்பு இருந்த நடுவர்கள் இவர்களை வெளியேற்றி விட்டிருந்தார்கள். மீண்டும் இவர்கள் உள்ளே வந்தால் ஹரிப்பிரியாவின் நிலை கேள்விக்குரியதாகவே இருக்கும். ஆனால் பழையபடி பழைய நடுவர்களே வர இருப்பதால் அவர்கள் தங்களுக்குப் பிடித்தமானவரை எப்படியாவது காப்பாற்றிக் கொள்ளத்தான் செய்வார்கள்.
இங்கே ஒரு விடையத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஹரிப்பிரியாவை நோக்கியே காய்கள் மெல்ல நகர்த்தப்படுகின்றன. அனுதாப வாக்குகளைச் சம்பாதிப்பதற்கு நடுவர்களே துணை போவது மிகவும் ஏமாற்றத்தைத் தருவதாக இருக்கின்றது. போட்டி என்று வந்துவிட்டால், அது போட்டியாகவே இருக்க வேண்டும். போட்டியாளருக்கு அப்பா இல்லை, அம்மா இல்லை என்றெல்லாம் திரும்பத் திரும்பச் சொல்வது ஏனோ நேயர்களுக்கு எரிச்சலூட்டுவதாக இருக்கின்றது. இரக்கத்தினால் ஹரிப்பிரியாவிற்குப் போடப்படும் வாக்குகள் அவரது திறமையை மூழ்கடித்து விடும். கனடாவில் உள்ள பலரிடம் அதைப்பற்றி விசாரித்தபோது அவர்களும் அந்த நிலைப்பாட்டிலேதான் இருக்கின்றார்கள். ஒருவேளை நேயர்களுக்கு எற்படுத்தப்பட்ட இந்த எரிச்சலூட்டல் சம்பந்தமாக ஏற்பட்ட வெறுப்பில் சிலசமயம் ஹரிப்பிரியாவை வாக்களிப்பின் போது பின் தங்கவைத்து விடலாம். ஏதோ கோபத்தை மனதில் வைத்துக் கொண்டு, நடுவர்களில் ஒருவர் அதற்குத் துணை போவதுபோல நடிக்கிறாரோ தெரியவில்லை. ஆனாலும் ரசிகர்களான நாங்கள் நடுவர்கள் மீது குறை சொல்லவும் முடியாது. ஏனெனில் மேலிடத்து உத்தரவுப்படியே நடக்க வேண்டிய நிலையில் அவர்கள் இருப்பது பலருக்குத் தெரியாது.
அடுத்தது வயிட்காட் என்பது தொலைபேசியூடாக, அல்லது இணையத்தின் ஊடாக நீங்கள் வாக்களிப்பது. லட்சக் கணக்கான மக்கள் வாக்களிக்கும் போது கொடுக்கும் கட்டணத்திற்கான அந்தப் பணத்தில் ஒரு பகுதி இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவு வழங்குபவர்களுக்குச் சென்றடைகின்றது. எனவேதான் அவர்கள் வாக்களிக்கும்படி வெளிநாடுகளில் உள்ள புலம் பெயர்ந்த மக்களை ஊக்குவிக்கிறார்கள். இந்த நிகழ்விற்கு ஆனந் வைத்தியநாதன் பயிற்சியாளராக இருக்கின்றார். மாகாபா ஆனந், பிரியங்கா, பவானா, விஷ்னு ஆகியோர் நிகழ்ச்சியைக் கொண்டு நடத்துகின்றார்கள்.
இம்முறை நடுவர்களாக வேறு குழுவினர் இடம் பெற்றிருந்தனர். ரி.எல்.மகாராஜன், சுவேதா, ஜேம்ஸ் வசந்தன், தேவன், ஸ்ரீலேகா பார்த்தசாரதி, விஜே பிரகாஷ் ஆகியோர் இவ்வாரம் கடமையாற்றினார்கள். கனடியரான ஜெசிக்கா ‘நெஞ்சம் மறப்பதில்லை’ ‘இது ஒரு நிலாக்காலம்’ என்ற பாடல்களைத் தெரிந்தெடுத்திருந்தார். இவருக்கு வாக்குகளின் அடிப்படையில் தெரிவாகச் சந்தர்ப்பம் உண்டு. மேலே தெரிவு செய்யப்பட்டவர்களுடன் அனுஷ்யா ஏற்கனவே சென்றிருக்க வேண்டுமே ஏன் அவரை முன்பு நடுவர்களாக இருந்தவர்கள் தெரிவு செய்யவில்லை என்று புதிய நடுவர்கள் தங்கள் ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார்கள். இந்த வாரமும் அனுஷ்யாவின் திறமை நேயர்களுக்குப் புரிய வேண்டும் என்பதற்காக அதையே திரும்பவும் சொன்னார்கள். அனுஷ்யாவையோ அல்லது ஸ்ரீஷாவையோ உள்ளே கொண்டு வந்தால் ஹரிப்பிரியாவிற்குப் போட்டியாக வரலாம் என்ற உண்மையை தெரிந்தோ தெரியாமலோ புதிய நடுவர்கள் சொல்லி விட்டார்கள். ஆனால் இறுதிச் சுற்றில் வரும் நடுவர்கள்தான் முடிவெடுப்பவர்களாக இருப்பார்கள். பழையபடி மனோ, சித்ரா, சுபா தான் வரப்போகிறார்கள். சுபாவிற்கு முடிவெடுக்கும் தைரியம் இல்லை. மனோ வெளிப்படுத்தும் பாராட்டுக்களில் இருந்து யார் இறுதிப் போட்டியில் தெரிவாகப் போகிறார்கள் என்பதை இப்பொழுதே நேயர்கள் தீர்மானித்து விட்டார்கள். போட்டி என்று வந்துவிட்டால்..?
மனம் உடைந்து போகவேண்டாம், மேடையில் பாடுவதைவிட இப்படியான தடைகளை நேர்மையான முறையில் தாண்டிச் செல்வதுதான் போட்டியின் வெற்றி என்பதை மறந்து விடாதீர்கள். துணிந்து செல்லுங்கள், நிச்சயம் வெற்றி கிடைக்கும். வாழ்த்துக்கள்!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.