உலகில் எங்கெங்கு அடக்கப்பட்ட இனக்குழுமங்கள் தொடர்ந்தும் துன்பத்தை அனுபவித்து வருகின்றனவோ அங்கெல்லாம் ‘அதிகாரம்’ தன் கரங்களை அகல விரித்து வைத்திருக்கின்றது. இந்தத் தொடர் ஓட்டத்தில்தான் அகதிவாழ்வும் அடையாளஅழிப்பும் இந்த நூற்றாண்டிலும் பேசப்படும் சொற்றொடர்கள் ஆகியிருக்கின்றன. இனம், மொழி, பண்பாடுகளுக்கு அப்பால் ஓரினம் சந்திக்கின்ற அதே பேரழிவை இன்று தமிழினமும் சந்தித்திருக்கிறது. அதன் அடிப்படையில் எழுந்துள்ள கவிதைகளாகவே தீபச்செல்வனின் ‘கூடாரநிழல்’ கவிதைகளைக் கருதமுடிகிறது. மக்களை எவ்வளவு தூரம் விளிம்புநிலைக்குக் கொண்டு வந்து விடமுடியுமோ அந்த வேலையை யுத்தம் செய்து முடித்திருக்கிறது. கொளுத்தும் வெய்யிலிலும் கொட்டும் மழையிலும் வாட்டும் நோயிலும் பசியும் தாகமும் உந்தித்தள்ள நேரத்திற்கு நேரம் கையேந்தி வாழவேண்டிய அவலநிலையை அது உண்டாக்கியிருக்கிறது. தொடர்ச்சியான அகதிவாழ்வும் அவலங்களும் அடையாள அழிப்பும் இரக்கமில்லாதவர்களிடம் இரக்க வைத்திருக்கிறது. பேதலித்த மனங்கள் ஒருபுறமும் இழந்துவிட்ட உறவுகள் மறுபுறமும் இருப்பவர்களையும் காப்பாற்ற வழியில்லாது தவிக்கும் இரண்டகநிலை இன்னொருபுறமுமாக எல்லாம் சேர்ந்த குழப்பநிலையில் வாழ்ந்த மக்களின் கண்ணீர்க் கதைகள் தான் இந்தக் கவிதைகள்.
தீபச்செல்வன் ஏற்கெனவே நான்கு தொகுப்புக்களைத் தந்திருக்கிறார். அந்தக் கவிதைகளில் சொல்லப்பட்ட மக்களின் அலைச்சலும் இழப்பும் இவற்றில் உச்சம் பெற்றுள்ளன. அந்த உச்சமே உயிரைக் காத்துக்கொள்வதற்காகக் கையேந்தி வாழவேண்டிய அகதி வாழ்வாக விரிகின்றது. இது பொதுவான உலகப் பிரச்சினையாகவும் தோற்றம் கொள்கிறது.
அ.முத்துலிங்கத்தின் ‘நாளை’ என்றொரு சிறுகதை. அதில் போரின் காரணமாக அகதிவாழ்வு வாழும் இரண்டு சிறுவர்கள் பற்றிய சித்திரம் வருகிறது. கதையில் தனக்குக் கிடைத்த றொட்டியை மூத்தவன் தன் சட்டைப்பையில் இரண்டு பகுதிகளாக்கி ஒன்றை வைத்துக்கொண்டு மற்றையதைப் பங்கிட்டுக் கொடுக்கிறான். இரவில் சிறியவன் எழுந்து ‘அண்ணா பசிக்குது’ என்றழுதபோது மிகுதிப் பாதியை எடுத்துக் கொடுக்கிறான். எங்கள் வாழ்வில்கூட இதுபோல பெற்றோரையிழந்த சிறுவர்களே மிஞ்சிப்போகிறார்கள். குடும்ப அமைப்பு சிதறடிக்கப்படுகிறது. ஒன்றின்பின் ஒன்றாய் தொடர் துயரக்கதைகள் தொடர்கின்றன.
இத்தொகுப்பிலும் தாய், சிறுவர்கள், குழந்தைகள் பற்றிய சித்திரம் ஒரு தொடராக வருகிறது.
‘எலும்பும் தோலுமாக
தூரத்தில் முட்கம்பி ஒன்றில்
அம்மா கொழுவப்பட்டிருந்தாள்’
என்று அம்மா பற்றி வரும் படிமம் அதிர்ச்சிதரக்கூடியது. முட்கம்பி அதிகாரத்தின் குறியீடாகத் தொடர்கிறது. தெளிவற்ற, பிரகாசமற்ற, நீதியும் ஒழுங்குமற்ற ஒரு வாழ்வு காலங்காலமாக மக்களைத் தொடர்ந்தவண்ணம் இருக்கிறது.
தொகுப்பின் கவிதைகள் அதிகமும் உண்மைச்சம்பவங்களின் அடியாகவே பிறந்திருக்கின்றன. அவை எதிர்பார்க்கக்கூடிய அந்த வாழ்வுச் சூழலுக்குள் இருந்துதான் வந்திருக்கின்றன. உணர்வு கொப்பளிக்கும் வார்த்;தைகள் அவை.
பொதுவாக, கவிதைகளின் வர்ணிப்புக் கோலத்தில் மூன்று நிலைகளைக் குறிப்பிடுவார்கள். ஓன்று: உணர்வினைத் தொற்ற வைக்கும் தனிநிலைக்கவிதைகள். இரண்டாவது: அந்த உணர்வினைப் பல நிலைகளில் வர்ணிப்பது. மூன்றாவது: அதற்கூடாகவே கதை சொல்லுவது. இங்கு ‘கதை சொல்வது’ என்ற அம்சம் எமது பழந்தமிழ் இலக்கியத்திற்குரியது. காவியத்திற்கானது. இதனைக் கதைக்கவிதை என்றழைப்பார்கள் விமர்சகர்கள். தீபச்செல்வனிடமும் அது நிகழ்ந்திருக்கிறது. இவரது ‘பதுங்குகுழியில் பிறந்த குழந்தை’ தொகுப்பு உணர்வின் நுட்பமான செறிவான அம்சங்களைக் கொண்ட கவிதைகளென்றால் ‘கூடாரநிழல்’ அதன் தொடர் வடிவங்களாகின்றன. இன்றுவரையும் நவீன கவிதைகள் இதனையும் பேசிக்கொண்டுதான் இருக்கின்றன.
இந்தக்கூறு தொகுப்பில் எவ்வாறு வருகிறதென்றால் கால் இழந்துபோன பெண் ஒருத்தி எந்நேரமும் யாரையாவது எதற்கும் எதிர்பார்த்திருக்கும் நேரமாக இருக்கட்டும், ஒலிபெருக்கியில் இருந்து வரும் செய்திகளைக் கவனமாகக் கேட்கும் தருணங்களாக இருக்கட்டும், முகாமில் இருந்து சொந்த ஊர்களுக்கு எப்போ ஏற்றப்போகிறார்கள் என்ற தவிப்பும் எதிர்பார்ப்புமாக இருக்கட்டும், எல்லாமே சம்பவங்கள்தான்.
உணவுக்கும் நீருக்கும் மலத்தின் மணத்திற்கு மத்தியிலும் மழைக்கு மத்தியிலும் வரிசையாக நிற்கும் தருணங்கள் என்று இக்கவிதைகள் விரிகின்றன. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் இதற்குள் ஒரு தொடரோட்டம் இருக்கிறது. கதை இருக்கிறது. அதனால்த்தான் இவை கதைக்கவிதைகளாக (Fictional Poetry) விரிகின்றன. இதற்குக்காரணம் கதைகளாகவே எழுதவேண்டிவை இங்கு கவிதைகளாக வந்திருக்கின்றன. எல்லாவற்றையும் சொல்லியே ஆகவேண்டும் என்ற மனஆவேசம், அதற்கான ஒரு சமூகத்தேவை தீபச்செல்வனை உந்தித் தள்ளியிருக்கிறது.
இத்தொகுப்பில் இருக்கும் மற்றொரு அம்சம் கவிதைகள் அதிகமும் ‘புறநிலையாகவே’ அமைந்திருத்தல். மஹாகவியின் ‘தேரும் திங்களும்’ போலிருக்கிறது. தீபச்செல்வனின் முன்னைய தொகுப்புக்களில் ‘அகம்’ மிகத்தூலமாக உணர்வுடன் பேசப்பட்டது. இங்கு கவிஞருக்கு என்ன நிகழ்ந்தது என்ற வினா எழுகின்றது. இத்தொகுப்பின் கவிதைகள் அதிகமும் உணர்வை சொற்செட்டுடன் எடுத்துக் கூறாமல் சிதறுகின்றன. நிகழ்வுகள் ஒன்றுடன் ஒன்று இயைபுபடுகின்றன. ஒலிபெருக்கிச் சத்தமும் இராணுவஅதிகாரியின் சட்டையில் இருக்கும் சின்னமும் குழந்தையின் ஆரவாரமும் ஒன்றுபடுகின்றன. ஆனால் இதுவே இங்கு சொல்லப்பட்ட வாழ்வின் அகம் சார்ந்த கவிதைகள் பற்றிச் சிந்திப்பதற்கும் இடங்கொடுக்கிறது. அதனை நாம் எதிர்பார்க்கவும் முடியாது. இன்னும் பேசப்படாத பக்கங்கள் நிரம்ப உள்ளன.
இந்நிலையில்தான் சமகால கவிதைகள் பற்றியும் பார்க்கவேண்டி இருக்கிறது. அந்தக் கூடார வாழ்வு பற்றி வெளியே இருந்து எழுதப்பட்ட ஏனைய கவிஞர்களின் கவிதைகளையும் இவற்றுடன் ஒன்றுபடுத்திப் பார்க்கவேண்டிய தருணங்களை இத்தொகுப்பு வேண்டி நிற்கிறது. அவை தேர்ந்தெடுத்துத் தொகுப்பாக்கும்போது மீளவும் ஒரு ‘மரணத்துள் வாழ்வோம்’ வருவதற்குக்கூட இடமிருக்கிறது.
அகதிவாழ்வு, இடம்பெயர்வாழ்வு, முகாம் வாழ்வு எமக்கு ஏற்கெனவே பழக்கப்பட்டவைதான். ஆனால் இது ஒரு துயரத்தின் பின்னரான காலம் இரண்டாம் உலகப்போரில் பின்னர் மக்களின் சிதைவு எப்படி இருந்ததோ அதேபோன்ற ஒரு சிதைவு. தீபச்செல்வனின் கவிதைகளில் பேசப்படும் பக்கங்கள் இவ்வளவுதானா? என்ற கேள்வியும் மறுபுறம் இருக்கிறது. இழப்பு, துயரம், பசி, துக்கம், விரக்தி, ஏமாற்றம், தன்னை இழத்தல், பெண் சார்ந்த பதிவுகளும் இங்கு முக்கியமானவை.
“யாரிடமும் கருணையில்லை”
“உலகத்தில் எங்களைப் போன்ற
சனங்களுக்காகவே
கூடாரங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன”
“நாங்கள் ஆதியிலேயே தோற்றுப்போயிருந்தோம்”
இதுபோன்ற வரிகள் முக்கியமானவை.
சாதாரண பேச்சுவழக்குச் சொற்கள் மிக இயல்பாக கவிதைகளில் வெளிப்படுவது கவனிக்கத் தக்கது. தொகுப்பை ஒட்டுமொத்தமாகப் படித்து முடிக்கையில் மேற்சொன்ன அகதிவாழ்வு பற்றிய உணர்வு தெரிய வருகிறது. ஈழத்திலக்கிய வரலாற்றில் கட்டங்கட்டமாக இந்த வாழ்வு குறித்து ஏற்கனவே பல படைப்புக்கள் பேசியிருக்கின்றன.
ஓவியர் சனாதனனின் நிலம் மற்றும் பெயர்வு குறித்த ஓவியங்கள், செங்கைஆழியானின் ‘இரவுநேரப் பயணிகள்’ என்ற இடம்பெயர் வாழ்வு குறித்த சிறுகதைகள், அருளரின் ‘லங்காராணி’ (முதற்பெயர்வும் விடுதலைப் போராட்டத்துக்கான எழுச்சி குறித்த ஆரம்ப பதிவுகளும் கொண்ட நாவல்) மற்றும் தாமரைச்செல்வியின் வன்னிப்பிரதேசம் குறித்த வாழ்வைப்பேசும் படைப்புக்கள் என எங்கள் மக்களின் பெயர்வும் அலைச்சலும் இழப்பும் குறித்த படைப்புக்கள் பல உள்ளன. இறுதியாக, புகலிடப்படைப்பாளிகள் அங்கிருந்து பேசினார்கள். இத்தொகுப்பில் இந்த ‘அலைவு குறித்த அகதி வாழ்வின் உச்சம்’ மிகத் தெளிவாகத் தெரிகிறது.
இக்காலகட்டத்தில் கவிதை எழுதிவருகின்ற இளம் கவிஞர்களில் தீபச்செல்வனின் கவிதைகள் முக்கியமானவை. நிலம் குறித்தும் அந்த நிலத்தில் வாழ்கின்ற மக்கள் குறித்தும் அந்த மக்களின் இன்றைய வாழ்நிலை குறித்தும் தொடர்ந்து எழுதி வரும் தீபச்செல்வன், இன்று கவிதை எழுதிவரும் ஈழத்துக் கவிகளில் முக்கியமானவராய்த் தெரிகிறார். பேரின் வடுவைச் சுமந்து வாழ்ந்து வரும் மக்களில் ஒருவராக நின்று இந்தக் காலத்தைப் பதிவு செய்கிறார். இந்தவகையில் காலமும் வாழ்வும் குறித்த கவிதைகளில் பேசப்படும் தொகுப்புக்களில் ஒன்றாக ‘கூடாரநிழல்’ கவிதைகளும் அமையும் என எண்ணுகிறேன்.
(உயிர்மை பதிப்பகம் வெளியிட்ட தீபச்செல்வனின் “கூடாரநிழல்” கவிதைத் தொகுப்புக்கு எழுதிய முன்னுரை)
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.