நவீனகவிதைகளில் பயணித்துக்கொண்டிருக்கும் கவிஞர்.கோ.நாதனின் மூன்றாவது கவிதைத்தொகுப்பாக வெளிவந்திருக்கிறது 'அரவம் புணர்ந்த அடவி'. பிரான்சை வதிவிடமாகக்கொண்ட கவிஞரின் இத்தொகுப்பு கோமகன் அவர்களை ஆசிரியராகக்கொண்டு பாரிசிலிருந்து வெளிவந்துகொண்டிருக்கும் மாதாந்த கலைஇலக்கிய இணையசஞ்சிகையான நடு வின் வெளியீடு. இலங்கை, தமிழக, அய்ரோப்பிய இணைய அச்சு ஊடகங்களில் தீவிரமாக கவிதை, விமர்சனம் என எழுத்தியக்கத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் நாதனின் இத்தொகுப்பு நவீனகவிதை வரவுகளில் கவனிப்பிற்குட்படும் தொகுப்பாக அமைந்திருக்கின்றது.
செயற்கைத்தனமான புகலிட வாழ்வியற்சூழலில், கனவிற்கும் வாழ்விற்குமிடைப்பட்ட யதார்த்த வெளியினுள் அலைந்துழன்று தன்னிருப்பை தயாரித்துக்கொண்டிருக்கும் ஒருஅகதி ஆத்மாவின் அவலமே கவிகளாகியிருக்கின்றன. வதிவிடத்தோடு ஒட்டமுடியாத மனஅவதியோடும் ஒட்டிக்கொள்ள வேண்டிய நிற்பந்த நியதிகளோடும் பட்டுணர்ந்து அநுபவிக்கின்ற அவதியே இத்தொகுப்பின் உள்ளீடு. ஒவ்வாச்சூழலுக்குள்ளான அக, புற உணர்ற்சிகளின் உணர்வு, தாயக ஏக்கம், தவிப்பு, காதல், காமம் யாவும் குறியீடுகளாகவும் படிமங்களாகவும் அடவியை நிறைத்திருக்கின்றன.இலக்கிய பரப்பினுள் பாம்பு புணர்ந்த காடு வளமிக்கதாகவேயிருக்கின்றது. வார்த்தைகளை உடைத்து கருத்துகளை கருக்குகளாக்கி காட்டின் சூலகத்தை கருக்கொள்ள வைத்திருக்கின்றார் கவிஞர்.புதியவடிவங்களாக்கி ஈன்று புறந்ததிருக்கின்ற தொகுப்பிது.
தீவிரவாசிப்பினூடாக வாசகனை குழப்பி குழம்பி காலஅவகாசமெடுத்து விளங்கிக்கொள்ளும் கவிதைகள். உணர்வுத்தூண்டலினூடே வாசகனும் நுழைந்து மூழ்கி சுழியோடி கருத்தறியும் பண்பு கவிதைக்கிருக்க வேண்டிய இலட்சணமெனக்கொள்ளலாம்.இளமை, தனிமை, தாகம், பசி, வெறுமை ஆகியவற்றினால் சூழப்பட்டு கவிஞர் அனுபவிக்கும் வேதனையை வாசகனுக்குணர்த்தி ஊட்டிவிடுகின்ற பாங்கால் அடவிநிறைந்திருக்கின்றது.
பின்வருமொரு கவிதையில் :
« எதுவும் யாருக்கும் சொந்தமில்லை எதுவும் யார்மீதும் வந்துபோகும் எதுவும் யாருக்கும் உரிமையில்லை எதுவும் யார்மீதும் வராமல்போகும். »
நிட்சயமற்ற எதிர்காலத்தினதும் நிம்மதியற்ற நிகழ்காலத்தினதும் நிகழ்ச்சி நிரலுக்குள் நின்று கேள்வியும் பதிலுமற்ற வருந்துங்குரலாக கேட்கிறது.
« எந்தமரத்தின் கிளைகள் நானமர நிழல்தந்திருந்ததோ அந்தமரத்தின் பலகைத்துண்டுகள்தாம் எனக்கான சவப்பெட்டியை தயாரித்திருக்கிறது ».
மனிதர்களிடையேயான நம்பகத்தன்மை ; நேசிப்பின்மை ; புலத்திலும் புகலிடத்திலும் வேறுபாடின்றி எல்லாயினமக்களிடையாயும் காணப்படுகின்ற பொதுப்பண்பு சுட்டிக்காட்டப்பட்டிருப்பது அடவிக்கு அழகு.பலகவிதைகள் படிமங்களூடாக வாசகனுடன் பேசி பேசவும் வைக்கிறன்றன.
« வற்றிக்கொண்டிருக்கும் நதியின் கடைசிச்சொட்டு நீரில் குதிக்கும் மீனை கால்களில் கவ்விக்கொள்ளும் பறவைநான். »
ஓருயிர் இன்னோர் உயிருக்கு இரையாவதுதான் வாழ்க்கைச்சங்கிலி. ஓருயிரின் சாவைத்தீர்மானிப்பது யார் ? எப்போது ? இயற்கையுடனான அன்றைய வாழ்விற்கும் இன்றைய நவீனயுகத்திற்கும் உலகமயமாகி பொருந்திவருகிறது. உலக அரசியல் சூட்சும்மாக வார்த்தையில் வந்துதமர்ந்திருக்கின்றது.
« மின்னொளியில் ஒளிரும் நகரம் இருளை மரங்கள் மறைத்துவைத்திருக்கின்றன பொழுதுகளை மரங்கள் மட்டுமே இரசிக்கின்றன »
நகரத்தினிரவை எளிதில் மனதில் காட்சிப்படுத்திவிடுகிறது.
நாம்கண்டுணர்ந்து அநுபவிக்கின்ற வாழ்வை, வெவ்வேறு உலகை , கவிஞர்தன் மாற்றுப்பார்வையால் நம்கண்முன்னே கொணர்ந்து நிறுத்துகிறார். இயல்பிற்கு மாறான சிறைப்பட்ட மனிதவாழ்வை அக புறவய ஆழ்உணர்வின் அங்கலாய்ப்பின் வெளிப்பாடே அரவம் புணர்ந்தஅடவி. கவிதைகளில் ஆங்காங்கு கொலைநிலத்து இரத்தவாடை சோகக்காற்றில் கலந்துவீசி வாசகமனம் புகுவது தவிர்க்கவியலாத்தாகிவிடுகிறது. தொகுப்பை வாசித்துமுடிக்கையில் உள்ளடக்கங்களினால் ஒருதொடர் உணர்ற்சியின் உரையாடலாகி காட்சிப்படலத்தை மனமேடையில் நிகழ்த்திவிடுகிறது. நூலின்இறுதியில் முன், பின்னுரையாகவும் இணைந்திருக்கும் கவிஞர் றியாச்குறியானா நீண்டபதிவும் நேர்மையான பார்வை.சரியான அளவுகோல்.
சமீபகாலஎமது இலக்கிய வெளியிடை பலநவீன கவிதைத்தொகுப்புகள் வெளிவந்திருந்தன வெளிவந்துகொண்டுமிருக்கின்றன. அந்தவரிசையில்அரவம் புணர்ந்த அடவிசேர்ந்திருப்பதில் இலக்கியகாடு மேலும் வனப்புற்றிருக்கின்றது.
புதியவாழ்வநுபவங்களூடே காணும் புதியவைகொண்டு புதிதாய் சிந்திக்க புதியதைக்கண்டடைவோமாக.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.