'ஆயிரத்தொரு இரவுகள்' என்ற புனைவைப் பற்றி நாம் கேட்டிருப்போம். ஃபிரேம் (Frame) வகையான கதை சொல்லல் முறையில், அதாவது திரைப்படத்திற்கான காட்சிகள் ஒன்று – இரண்டு என எழுதப்படுவதுபோல் கதைக்குள் கதை வைத்துக் (Genre )கதை சொல்லல்.
ஆயிரத்தொரு இரவுகள் அரபிக் கதையல்ல. இந்தியாவிலிருந்து மேற்காக நகர்ந்தது . பஞ்சதந்திரம் மற்றும் ஜாதகக்கதைகள் இப்படியான பிரேம் கதைகளாக உருவாகி பாரசீகத்துடாக அரேபிய வியாபாரிகளால் வியாபாரப் பொதிகளோடு எடுத்துச் செல்லப்பட்டது. இப்படியான கதை சொல்லல் ஐரோப்பாவுக்குச் சென்று அங்குள்ள எழுத்தாளர்கள் மீது தாக்கத்தை உருவாக்கியது . கன்ரபரி கதைகள் (The Canterbury tales) போன்றவை ஆயிரத்தொரு இரவுகளின் தாக்கமே .
மாலையில் கன்னிப்பெண்yணை திருமணம் செய்து, இரவில் புணர்ந்து விட்டு கொலை செய்யும் பக்தாத் அரசனிடமிருந்து ( Caliph of Baghdad- Harin el- Rashid 786-809) ஷரசாட் (Shahrazad) என்ற மந்திரியின் பெண் உயிர் தப்புவதற்காக அரசனின் கட்டிலின் கீழ் உள்ள தங்கைக்குச் சொன்ன கதைகளின் தொகுப்பே ஆயிரத்தொரு இரவுகள் . ஒவ்வொரு இரவிலும் கிளைமாக்ஸில் கதை நிறுத்தப்படும். ஆனால், அதைக் கேட்பதற்காக அரசன் அடுத்த நாள் காத்திருப்பதால் கொலை நடக்காது. இப்படி ஆயிரத்தொரு இரவுகளின் பின்பு அரசன் திருந்தி ஷரசாட்டை மணமுடிக்கிறான்.
அ. முத்துலிங்கத்தின் உண்மை கலந்த நாட்குறிப்புகள் அவரது சுயசரிதை . அந்த சுயசரிதை தமிழகத்தில் மாத சஞ்சிகைகளில் சிறுகதைகளாக வெளிவந்தது. வெவ்வேறு துண்டுகளாக நான் படித்திருந்தேன் . ஒன்றாகவே படிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தபோது, அவரது நினைவுகளைக் கதைகளாக்கி அதற்குள் கதையை வைத்துள்ளது, எனக்கு உயிருக்குப் பயந்து ஷரசாட் சொன்ன கதைகளை நினைவூட்டியது. இதை நான் சொல்லக் காரணம் ஒவ்வொரு பகுதியிலும் சுவை குன்றாது எழுதியிருக்கிறார் . அத்துடன் ஒவ்வொரு கதையிலும் உள்ளே பல உப கதைகளை உள்ளே ( there are frame stories that contain nested narratives.) வைத்திருக்கிறார்.
கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் அவரைச் சுற்றி, யாழ்ப்பாணத்திலும், கொழும்பிலும் பின்பு அவர் வேலை செய்த நாடுகளிலும் நடந்த கதைகள் இதிலுள்ளன. இந்தக் கதைகளில் எதுவித ஹீரோயிசத்தையும் காட்டாது சாதாரணமான யாழ்ப்பாணத்துக் கணக்காளராக தான் வாழ்ந்ததைக் காட்டியிருக்கிறார்.
அவரது நினைவில் தெரிந்த ஒரே கிளைமாக்ஸ் ஆக வருவது அவரது நண்பன் ஒரு பெண்ணை டாவடித்தபோது , அவனுக்கு உதவிசெய்யப் போன இடம் மட்டுமே. அதில்கூட அந்தப் பெண்ணே ஹீரோயினாகிறார். வெளிநாடு சென்று வேலை செய்து , அதன்பின் பிள்ளைகள் பேரக்குழந்தைகள் என்ற சாதாரண வாழ்வை சுவையாக எழுதமுடியும் எனக் காட்டியுள்ளார்.
இதுவரையில் மனிதவாழ்வின் பொதுவற்றவை அசாதாரணங்கள் என்பனவே கதையாகியது. ஆனால் முத்துலிங்கம் மொத்தத்தில் ஒரு சாதாரணமான யாழ்பாணத்தவனது வாழ்வை மிகவும் சுவையாகச் சொல்லியிருக்கிறார். அவரது பாணியில் சொல்வதானால் கொக்குவிலில் சுருட்டை சுத்தி விட்டு அதன் பின்பக்கத்தைக் கத்திரியால் அளவாக நறுக்குவதுபோல் கதைகளைத் தொய்வற்று நறுக்கி பெட்டிக்குள் வைத்திருக்கிறார் .
எழுதிய மொழியில் தனது ஆயுதங்களாக அவர் பாவிப்பது யாழ்ப்பாணத்து வழிவழியாக வந்த நக்கல். அடுத்தது படிமங்கள். மூன்றாவது சிமிலி (Simile )எனப்படும் உதாரணங்கள். கதைகளைச் சுவையோடு வாசிப்பதற்கு அவை உப்பு-புளி -காரமாகின்றன.
உதாரணமாக “ காரிக்குறிச்சி வாசிக்கும்போது அவருடைய கழுத்து படமெடுக்கும் பாம்பினுடையதுபோல உப்பிப் பெருக்கும். ஒரு திகில் நாவல்போல அடுத்து என்ன வரப்போகிறது என்ற எதிர்பார்ப்பு இருக்கும் . “
எழுத்தில் தேவைக்கு அதிகமாகச் சிமிலியிருப்பதுபோல் தோற்றமளிக்கும் . படிமம் இரண்டு வினைச் செயல்களை நம் மனக்கண்ணில் நிறுத்தி செம்புலத்து நீராகத் தெரியும். ஆனால், சிமிலி அதுபோல இது எனச் சொல்லி விட்டுப் போய்விடும், மறைந்து விடும், மணலில் மழைத்துளியாகிவிடும்.
இதற்கப்பால் இன்னொரு விடயம் தென்னிந்தியத் தமிழ்ச்சொற்களை வாசிப்பவர்களுக்காக வலிந்து செலுத்தாது, அதே வேளையில் புதிய தமிழ்ச் சொற்களைப் புகுத்தாது இயல்பாக எழுதியிருப்பது எனக்குப் பிடித்திருந்தது. தமிழ் நாட்டவரை யாழ்ப்பாண சொற்களை வாசிக்க வைத்த நித்திய பெருமை எழுத்தாளர் முத்துலிங்கத்திற்கே உரிய முதிசமானது.
நல்லூர் சப்பரத் திருவிழாவில் அம்மாவிடமிருந்து பிரிந்த சிறுவனாக நினைவுகள் துளிர்விட்டு முதுமையின் எஞ்சிய வாழ்நாளை எண்ணுவதாகக் கதை முடிகிறது என்பதால் இது அவரது வாழ்க்கை சரிதமெனவே சாதாரண மனம் கொண்டவர்களால் எண்ண முடியும்.
இந்த புத்தகத்தை வைத்து எனது சில கேள்விகள் இங்கு உள்ளன. அவை பொதுவானவை. தமிழர்கள் நாவலில் உண்மை வரவேண்டுமென விசித்திரமாக நினைப்பவர்கள். நான் எழுதிய கானல் தேசத்தைப் படித்துவிட்டு அதில் உண்மையில்லை எனக் கூச்சலிட்டவர்கள். அடப்பாவிகளே, இலங்கைப் பத்திரிகைகளில் எழுதும் ஒரு நிருபரையோ பத்திரிகையையோ ஏன் புனைவு வருகிறது என நீங்கள் கேட்டிருந்தால் நமக்கு நல்ல பத்திரிகைகள் கிடைத்திருக்கும். புனைவில் உண்மையையும் பத்திரிகைகளில் பொய்யையும் தேடும் புத்திசாலிகளை கொண்டது நமது சமூகம்.
பொதுவாக நாவல் எனப்படுவது கற்பனையான பாத்திரங்களால், கற்பனையாக எழுதப்படும் நீண்டதோர் எழுத்து வடிவம். ஆனால், அ. முத்துலிங்கத்தின் உண்மை கலந்த நாட்குறிப்புகளில் கதாநாயகன் முத்துலிங்கம் என்பவர் நமக்கு கற்பனை மனிதரல்ல. நமக்கு அறிந்த இரத்தமும் தசையும் கொண்டு வாழ்பவர் என்ற எண்ணத்தினூடே என்னால் படிக்கமுடிந்தது. அந்த எண்ணத்தால் சில கேள்விகள் எழுந்தபோது, புத்தகம் வெளிவந்தபின் புத்தகமும் வாசகர்களுமே எஞ்சியுள்ளார்கள், ஆசிரியரல்ல என்பதால் வாசகர்களிடம் அவற்றை வைக்கிறேன்.
நாவல் என்பதில் பாத்திரங்களின் நடத்தையாலும் மனவோட்டத்தாலும் நெசவாகும் ஒரு வண்ணக் கம்பளம் . அந்தப் பின்னலில் உள்ள ஒவ்வொரு பாவும் அந்த நாவலை முன்னோக்கித் தள்ளும். இழையும் பாவும் வண்ணத்தை உருவாக்குவதுபோல் அங்கே புளட் உருவாக்கப்படும். இது பொதுவானது.
பொது விதிக்கு கட்டுப்படாத நாவல்கள் உள்ளன. ஆனால் அவைகளின் ஒரு பாத்திரத்தின் முக்கியமான இயல்பில் பின்னப்படுகிறது. அப்படியான விசேட பாத்திரமாக இங்கே தெரியவில்லை. புளட் அற்ற பாத்திரத்தின் செய்கைகளால் பின்னப்பட்ட ஒரு நாவலாகத் தமிழில் எனக்கு நினைவுக்கு வருவது சுந்தர ராமசாமியின் ஜே.ஜே சில குறிப்புகள்.
உண்மை கலந்த நாட்குறிப்புகள் போல் கற்பனையற்ற நாவல்கள் (non-fiction novel) உள்ளது அனி பிராங் (Anne Frank ) எழுதிய டயரி ஒவ் ஏ யங்கேர்ள். அதேபோல் ஜோன் கேசி(John Hersey) எழுதிய ஹிரோசிமா( Hiroshima )என்பன முக்கியமானவை.
ஆனால், இவை இரண்டும் முறையே யூத இன ஒழிப்பு அமெரிக்காவின் அணுக்குணடுத் தாக்குதல் என மிகவும் முக்கியமான சம்பவங்களை வைத்துக் கதை பின்னுவதற்காக எழுதப்பட்டது. எதை எழுத்தில் சொல்ல விரும்புகிறோமோ அதுவே நாவலின் அமைப்பை உருவாக்கும்.
எஸ். பொன்னுத்துரை ‘வரலாற்றில் வாழ்தல்’ என்ற சுயசரிதையை தன்னுடைய வாழ்வுக்குறிப்பு என்பதுடன் நில்லாது தான் வாழ்ந்த சமூகத்தின் சரித்திரமாக்கியிருக்கிறார் . அவரது யாழ்ப்பாணத்து நினைவுகளை ‘நனைவிடை தோய்தல் ‘ என்று எழுதினார் . அதேபோன்று ஜெயமோகன் ‘புறப்பாடு’ மூலம் இளமைக்காலத்தை விறுவிறுப்பான கதையாக்கியிருக்கிறார். இவை வாழ்க்கை வரலாற்றை சுவைகுன்றாமல் அபுனைவாக எழுதலாம் என்பதற்கான உதாரணங்கள். உண்மையை எழுதுவதற்கு பல வகையான இலக்கிய வடிவங்கள் தற்போது உள்ளது. நாவலாக எழுதாமல், நினைவுகளில் இல்லாத பகுதியை இட்டு நிரப்பக் கடந்த 70 வருடங்களாக ( creative nonfiction )இலக்கியப்பகுதி( Genre) உள்ளது.
ஏர்னஸ்ட் ஹமிங்வே( Ernest Hemingway) தனது பாரிஸ் வாழ்வை அந்த வடிவத்தில் எழுதியுள்ளார் த வூமன் வாரியர் ( The Woman Warrior) என்ற புத்தகத்தை மக்சீன் கிங்ஸ்ரன்( Maxine Hong Kingston) எழுதியிருக்கிறார்.
உண்மைக்கும் புனைவுக்கு பெரிய இடைவெளி இருக்கிறது . உண்மையைப் புனைவாக எழுதலாம் என்ற வாசகத்தில் உண்மை உள்ளது. எல்லோரும் எழுதுகிறோம். சுயசரிதமெழுத முயற்சித்தபோது நினைவில் இல்லாதவற்றை இட்டு நிரப்பி நாவலாக்கிவிட்டேன் என்ற கூற்று வந்ததால் இவைகளைச் சொன்னேன்.
சுயபுனைவை நாவலாக ஏற்றுக்கொள்ளமுடியாது என்பதல்ல எனது வாதம். நாவலாக ஏற்றுக் கொள்ளுமிடத்தில் சில விடயங்களைக் குறிப்பிடவேண்டும்.
அ. முத்துலிங்கத்தின் உண்மை கலந்த நாட்குறிப்புகளில் கதாசிரியர் இரட்டை வேடமணிகிறார் . தன் முனைப்பான கதை சொல்லும்போது கதை சொல்லியே இங்கு கதாநாயகனாகிறார். நாவலில் அவரது (Subjective narrative) கருத்துகள் மட்டுமே வருகிறது .
இவை வரும்போது அவரது அப்பிராயங்கள், எண்ணங்கள் மற்றும் தீர்ப்புகள் வருகின்றன. அதாவது அவரே பொலிஸ் -வழக்கு தொகுப்பாளர் – நீதிபதியாகிறார்( Police -Prosecutor – judge) . நாங்களும் கதை சொல்லுபவரது தீர்ப்புகளின்படி நடக்கிறோம் .
இந்த நாவலில் கதை சொல்லுபவர் தன் ஆசிரியர் , தந்தை மற்றும் மனைவி என எல்லோர் மீதும் தனது தீர்ப்பை வழங்குகிறார். இப்படியான (Magisterial) தன்மை 19 ஆம் நூற்றாண்டு நாவல்களிலே உள்ளது. நவீன நாவல்களில் இந்தத் தன்மை தவிர்க்கப்படுகிறது. கதாபாத்திரங்கள் வழியாகவே தனிப்பட்டவர்கள் சமூகம் மீதான அபிப்பிராயங்கள் , எண்ணங்கள் செல்லப்படும்.
இங்கு நான் சுட்டிக்காட்டுபவை எதுவும் உண்மை கலந்த நாட்குறிப்புகளுக்கு எதிரானவையல்ல . ஆனால், எனது மனத்தில் ஏற்பட்ட கேள்விகளை வாசிக்கும் இலக்கிய வாசகர்களுக்கும் விமர்சகர்களுக்கும் முன்னே வைப்பதே என்போன்ற சக இலக்கிய பயணியின் கடமையாகும்.
மேலும் அ. முத்துலிங்கம் இலங்கைத் தமிழரில் முதன்மையாளராக கொண்டாடப்படுபவர் . அவரது உண்மை கலந்த நாட்குறிப்புகளில் நான் எழுப்பிய கேள்விகள் சரியா தவறா என அலசப்படுவது தமிழிலக்கியத்தின் தேவையாகும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.